Wednesday 4 July 2018

NENJIL KODI MINNAL - EPISODE 1


நெஞ்சில் கோடி மின்னல்
தெரு அடைத்து போடப்பட்ட பந்தலும், வாயிலடைத்து போடப்பட்ட கோலமும் திருமண வீடு என கட்டியம் கூறின.
அந்த கிராமமே குதூகலத்துடன் கல்யாண வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சுழன்றது.
ஆம், அவர்களின் ராஜகுமாரியின் திருமணம் அல்லவா...

அந்த கிராமம் மட்டுமின்றி, அதை அடுத்திருந்த பல சிறிய கிராமங்களுக்கும் சொந்தக்காரர் பெருந்தனக்காரர், ராஜலிங்கம் ஐயா, அவர்களின் ஒரே செல்வ செல்ல மகள் ராஜராஜேஸ்வரியின் திருமணம்.
“என்ன முனியா, மாப்பிள்ளய அழைக்க கார் தயாரா, லே கந்தா, அங்க வாழ மரம் சாயுது... நேரா கட்டச் சொல்லு.... இந்தாங்க பெண்டுகளா, விருசா காரியத்த பாருங்க.... ராஜி தயராயிடுச்சா?” என ஆணைகள் பிறப்பித்தபடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார் ராஜலிங்கம்.

தாயில்லா தன் ஒரே மகளின் திருமணத்தில் எந்தக் குறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக பார்த்து பார்த்து செய்தார்.
அதற்கேற்றபடிதான் காரியங்களும் நடந்தேறின.
கோவிலை ஒட்டி இருந்த மண்டபத்தில் வைத்து தாலி கட்டும் முகூர்த்தம். ஊரையே அழைத்து, தன் பண்ணையை ஒட்டி போடப்பட்டிருந்த பந்தலில் விருந்து என ஏற்பாடாகி இருந்தது.

அங்கே, உள்ளே, அவரது செல்வ சீமாட்டி தயாராகிக் கொண்டிருந்தாள்.
“போதுங்க்கா, இன்னும் எவ்வளோ நகைய சுமக்கறது?” என செல்லமாக சிணுங்கினாள். அவளுக்கு எப்போதுமே பட்டும் பகட்டும் பிடிக்காது. எளிமையாக இருக்கவே பிரியப்படுவாள்.

“சரியாபோச்சு போ கண்ணு, நீ கல்யாணப்பொண்ணு. இன்னிக்கி கூட இந்த வைரமும் மாணிக்கமும் மரகதமும் போடலனா பின்னே எதுக்கு உங்க அப்பாரு இம்புட்டு வாங்கி வந்து குவிச்சிருக்காரு.... நல்ல பிள்ள இல்ல... இன்னிக்கி மட்டும் நாங்க சொன்னபடி கேட்டுக்க கண்ணு” என முகவாய் பிடித்து கொஞ்சினார் அந்த முதிர்ந்த உறவுக்கார பெண்.

அரக்கு வண்ண பட்டுடுத்தி, கழுத்திலிருந்து வயிறுவரை நகை அணிந்து, நீண்ட பின்னலினை பூ ஜடையில் தைத்து, மருதாணியில் சிவந்த கைகளுமாய் அவள் நடந்து வர, ஊரே கை எடுத்து கும்பிட்டது. அது அவளது அழகுக்கும் பணத்துக்கும் தரும் மரியாதை அல்ல. ராஜலிங்கத்தின் மகளாக அவளுக்கு தரப்பட்ட மரியாதை அல்ல. அவள் தன் அன்பான குணத்தினாலும் பண்பான பழக்கத்தினாலும் மரியாதை கொடுத்து வாங்கியதன் பேரால் அவளுக்கு கிடைத்த நற்பெயர், அன்பு, பாசம்.
மாப்பிள்ளையை அழைக்க ராஜலிங்கம் காரில் ஏறினார்.

“தம்பி கதிரு” என குரல் கொடுக்க, “வந்துட்டேன் ஐயா” என அவனும் ஓடி போய் முன் சீட்டில் அமர்ந்தான்.
“அண்ணே” என, பெரியவர் முருகானந்தமும் போய் அமர்ந்தார்.
“முருகா, நீ பின்னாடியே அலங்கரிக்கப்பட்ட நம்ம பென்ஜு கார ஓட்டிகிட்டு வந்துடு” என உத்தரவுகள் பிறப்பித்தார்.
“வண்டிய எடு கந்தா, விருசா விடு” என்றார்.
“ஆகட்டும் ஐயா” என, வரிசையாக நாலு கார்கள்பறந்தன.

மாப்பிள்ளை தெரிந்த குடும்பத்தவன். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவன். தூரத்து சொந்தமும் கூட. அவனுக்கென பெற்றோர் உற்றோர் என இல்லாதவன். ஆள் கட்டுமஸ்தானாக முறுக்கு மீசையும் கட்டான உடலும் என இருப்பான்.
வீட்டோடு மாப்பிள்ளை அமைந்தால், தன் பெண்ணை பிரியவும் வேண்டாம். அவளையும், கணக்கிலடங்கா சொத்துக்களையும் பாதுகாக்க இது ஏதுவாகும் என வலை போட்டு தேடினார் ராஜலிங்கம். வீட்டு மாப்பிள்ளையாக இருப்பதில் பலருக்கும் எதிர்ப்பிருந்தது. மற்றது அமைந்தால் மாப்பிள்ளை சரியாக அமையவில்லை.

பார்த்து சலித்து ஓய்ந்த நேரத்தில், சில உற்றார் உறவினர் மூலம் மாப்பிள்ளை கனகராஜின் பேர் அடிபட்டது.
“என்ன இருந்தாலும், உமக்கு ஒண்ணு விட்ட சகோதரி மகன்தானே பெரிசு... முடிச்சு போட்டுட்டா, விழுன்னா விழுந்து கிடக்க போறான்.... அவன கெடுக்க பிக்க பிடுங்க, ஆயப்பன் கூட இல்லியே பெரிசு....” என ஏற்றிவிட, அவருக்கும் சபலம் ஏற்பட்டது.
விசாரித்ததில் வேலை என எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.
இருந்த கொஞ்சம் நஞ்சையை குத்தகைக்கு விட்டு சம்பாதித்தான் என கேள்விப்பட்டார். படிப்பும் பள்ளி இறுதிதான். ‘எப்புடி, இப்படிப் பட்டவன பட்டதாரியான தம் மகளுக்கு....’ என குழம்பினார்.
ஏற்றிவிட என இருந்த அவரது சோற்றுப்பட்டாளம், “அதனால என்ன பெரிசு, நம்மகிட்ட இல்லாத சொத்தா வசதியா... கைக்கடக்கமா இருப்பானில்ல, சொன்ன பேச்சை கேப்பான்.... நம்ம பொண்ணு படிச்சிருக்குதில்ல, அப்புறமென்ன... அதெல்லாம் நம்ம ராஜி கண்ணு சமாளிச்சுக்கும். கண் எதிர்ல இருப்பாங்க இல்ல.... கொஞ்சம் அப்டி இப்படின்னு கேள்விப்பட்டா, வால ஓட்ட நறுக்கிப்பிடலாம் பாருங்க” என தூபம் போட்டனர்.
சரியென பட்டது. ராஜியிடம் வந்தார்.

அவள் எப்போதோ எங்கோ வைத்து அவனை ஓரிரு முறை கண்டதுண்டு.
“என்னம்மா சொல்றே... பலதும் யோசிச்சுதான் இந்த முடிவ எடுத்தேன்.... பெரிசா ஒண்ணும் குறையில்ல.... சொத்திருக்கு, பணமிருக்கு கொஞ்சம்.... உக்கார்ந்து சாப்பிடறான்..... இங்க வந்தா, பொறுப்பு தானா வந்துடப்போவுது.
நீ என் கண்ணு முன்னாடியே இருப்பே இல்ல தாயி, அதுக்குதான் எனக்கு மனசு கிடந்து தவிக்குது” என்றார்.
அவரின் இறைஞ்சலை அவளால் காண சகிக்கவில்லை.

‘அவளை பிரிந்து அவரால் ஒரு க்ஷணமும் வாழ முடியாது. அவருக்கும் வயசும் ஏறி வருகிறது. எத்தனை நாள்தான் தனியாக இந்த சாம்ராஜ்யத்தை கட்டி ஆள முடியும்.
இவன் வந்தால் பொறுப்பெடுத்து செய்வானோ என்னமோ.
அப்பாவும் மற்ற உறவுக்கார பெரியோர்களும் பார்த்து, எனக்காக என ஒன்று செய்தால், அது என் நன்மைக்காகத்தான் இருக்கும்.... அதற்கு மேல் என் அன்னை மீனாக்ஷி இருக்கிறாள், என்னை துணை நின்று காக்க....’ என துணிந்தாள்.
“சரிங்கப்பா, உங்க இஷ்டம்” என்றாள்.

“ரொம்ப சந்தோஷம் தாயி.... நான் அந்த பயகிட்ட பேசீட்டு முடிவு செய்யறேன் கண்ணு” என வாயெல்லாம் பல்லாக வெளியேறினார்.
மெல்ல பொடி நடையாக நடந்து தங்களது இன்னொரு சிறிய வீடான நந்தவனத்திற்கு வந்தாள். அவள்தான் அதற்கு அந்தப் பெயரை இட்டது. ராஜிக்கு துயரம் வந்தாலும் சந்தோஷம் வந்தாலும் அவள் கால்கள் தாமாக அங்கே கொண்டு சென்றுவிடும். நந்தவனம் என்ற பெயருக்கேற்ப சிறு வயது முதலே, அவளே, தன் கையால் அந்த வீட்டினை நந்தவனமாக செய்திருந்தாள்.

அழகிய சிறு வீடு. ஓடு வேய்ந்து மூன்று கட்டுகள் கொண்டு, கொஞ்சம் உள்ளடக்கி கட்டப்பட்டிருந்தது. தான் வளரும் வரை அன்னை அதை பராமரித்திருந்தாள். இவளுக்கு பத்து வயது கூட ஆகும் முன்னரே இவள் அந்த இடத்துக்கு எழுதாத ராணியானாள். அந்த இடம் அவளுக்கு செல்லத் தோழியானது.
அங்கே இருக்கும் ஒவ்வொரு செடி கொடி மலர் காய்கனிகள் அவளோடு உறவாடும். தென்றல் தழுவிச் செல்லும். பூக்கள் அவளோடு கொஞ்சும். அணில்குஞ்சுகளும் புறாக்களும் அவளோடு கதைபேசும். மல்லிகைப் பந்தல் அவளோடு ஒட்டி உறவாடும். தினம்தோறும் காலையில் மொத்த தோட்டத்துக்கும் பணியாள் வந்து நீர் பாய்ச்சினாலும் காலையிலாவது மாலையிலாவது ஒரு முறை அங்கே வந்து அனைத்தையும் தொட்டுத் தழுவி கொடுத்துவிட்டு சிறிது நேரம் இருந்துவிட்டுத்தான் செல்வாள் ராஜி.
ராஜியை வீட்டில் காணவில்லை என்றால் இங்கே பார்த்துக்கொள்ளலாம் என அர்த்தம்.

இப்போதும் கூட ராஜி தன் உற்ற தோழியுடன் கலந்தாலோசிக்கவே வந்திருந்தாள்.
மல்லிகைகளை பறித்தபடி “அவுக நல்லவைகளா கேட்டவகளா... எல்லாம் நல்லபடியா நடக்குமா? என மெல்ல பேசினாள்.

மல்லிப்பந்தல் மெல்ல காற்றில் அசைந்தாடி அவளுக்கு உற்சாகமும் தைரியமும் ஊட்டியது. தனக்குத்தானே தைர்யம் கூறிக்கொண்டாள்.
தன் கணவனாக வரப்போகிறவன் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்கவேண்டும் என பெரிய கனவுகள் அவளிடத்தில் இல்லை.

தன் திருமணம் அப்பாவின் முடிவாகத்தான் இருக்கும் என சிறுவயது முதலே தெரிந்த ஒன்று. அதனால், அவள் தன் மனதை என்றுமே அக்கம் பக்கம் என அலையவிட்டதில்லை. கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்டவள்.
சமீபத்தில் தான் அவள் தாய் இறந்து போயிருந்தாள். அதுவரை அவளுக்கு சகலமும் தன் அன்னை விசாலாக்ஷிதான். இவளது பன்னிரெண்டாம் வகுப்பு முடிய அன்னையும் மறைந்தாள். அந்த துக்கத்திலிருந்து ஒருவரை ஒருவர் தேற்றி மெல்ல கரை சேர்ந்தனர் தந்தையும் மகளும்.

பொன்னி, தாயாகத் தாங்கி நிற்கும் தமக்கை போன்றவள். பார்த்தால் பணிப்பெண்.... ஆனால் சிறுவயது முதலே அந்த வீட்டில் வேலை செய்பவள். ராஜிக்கும் அவளுக்கு மூன்று வயதுதான் வித்யாசம்.... ஒரு தாய் மக்கள் போல திரிந்து விளையாடியதுண்டு.

ஐந்து வருடம் முன், ராஜலிங்கம் தான் அவளுக்கு மணமுடித்து வைத்தார். தன் பண்ணையில் வேலை செய்யும் முனியனை அவளுக்கு பக்குவமாக மணமுடித்தார். பொன்னிக்கு இப்போது மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை.
மடி நிறைய மல்லி முல்லைகளை பரித்துப்போட்டுக்கொண்டு அங்கேயே வளைய வந்தாள். மனம் லேசாகியது. 

அவளைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள் பொன்னி, அவள் விசனப்பட்டு அமர்ந்திருக்க, “இங்கனதான் இருக்கீகளா எப்பவும் போல, உங்கள எங்கெல்லாம் தேடறது... எந்த கப்பல் மூழ்கிடுச்சு கண்ணு? என எப்போதும் போல வாய்கொள்ளா சிரிப்புடன் உள்ளே வந்தாள் பொன்னி.

“இல்ல, ஒண்ணுமில்லக்கா” என கண்களை ஒற்றி எடுத்தாள். கண்ணீர் முத்துக்களை அவ்வளவு சீக்கிரம் வெளியே உதிர்ப்பவள் அல்ல ராஜி.
 “அப்பா எனக்கு மாப்பிள்ள பார்த்திருக்காங்களாம்” என்றாள்.
“ப்ஹூ, இது நல்ல சமாச்சாரந்தானே... இதுக்கு எதுக்கு கலங்குவானே.... அடி சக்க, யாரு மாப்ள?” என்றாள்.
“வந்து, நம்ம தூரத்து சொந்தமாம்” என்றாள் திக்கி திணறி.
“அட, பார்ரா... சொந்தமாக்கும்.... நல்லது. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியே நடக்கும் கண்ணு. கவலைப்படாதே, நீ வா... பொழுது சாயுது, வூட்டுக்கு போவலாம் என இழுத்து வந்தாள்.

“மாப்பிள்ளையாக வீட்டுக்கு வருகிறாயா?” என சில பெரியோருடன் நேரில் போய் சம்பந்தம் பேசினார் ராஜலிங்கம்.
‘எல்லாம் கிடக்க இவனுக்கு வந்த வாழ்வ பாருய்யா’ என ஊரே மூக்கில் விரல் வைத்தனர். சிலர் வயிறு எறிந்தனர்.
‘ஹ்ம்ம் குரங்கு கையில பூமாலை’ என்றனர் சிலர்.
எல்லாமும் இருவர் காதிலும் விழுந்தன தான்.

அவனோ, வீடு ஏறி வந்து, ராஜலிங்கம் தன்னை வீங்குவதை ரசித்தான், கெத்தாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
“அதில பாருங்க பெரிசு, ராஜி நல்ல பொண்ணுதேன், அழகு குணம் பண்பு எல்லாமும்தான், ஆனா பாருங்க, ரெண்டு விஷயம்” என்று பல் குடைந்தான்.
“என்ன?” என விழித்தார்

“இல்ல, ராஜி என்ன விட அதிகம் படிச்சிருக்கு... நாளக்கி படிச்ச மமதையில, என்ன நாலு பேர் முன்னாடி மதிக்காம நடந்துகிட்டா நான் என்ன பண்ணுவேன் சொல்லுங்க...”
“திட்டவா முடியும் அடிக்கவா முடியும், பெரிய பண்ண பொண்ணாச்சுதே” என்றான் விகாரமாக இளித்தபடி.
“நாலும் இப்போவே பேசிடணும் பெரிசு” என்றான். “என்ன நான் சொல்றது?” என்றான் மற்றோரை பார்த்து.
“அதோட வீட்டோட மாப்ளையா வரச்சொல்றீக....
“எனக்குன்னு இங்க யாருமில்லதான், ஆனாலும், எனக்குன்னு ஒரு கவுரத இருக்குதே பெரிசு... அப்படி உங்க வீட்டோட வந்துட்டா என் செல்வாக்குக்கு ஏதானும் பங்கம் வந்திச்சுன்னா...?” என்றான்.

“அதெல்லாம் அப்படி வரவிட்டுடுவோமா கனகு, அதெல்லாம் ராஜி பக்குவமா அடக்கமா நடந்துக்கிடுவா. அவளப்பத்தி உனக்குத் தெரியாதா....”
“என் பண்ணையில, என் மருமவன ஒருத்தன் ஒண்ணு சொல்றதா, மதிக்காம போறதா.... வகுந்துருவேன் இல்ல.....”
“அந்த யோசனை எல்லாம் உனக்கு வேண்டாமப்பா... நீ தைர்யமா ஒத்துக்க” என்றனர் அவரும் கூட வந்த பெரிசுகளும்.

ராஜியின் கொள்ளை அழகும், ஏராளமான சொத்துக்களும் தனக்குத் தானாக சொந்தமாவதை நினைத்து தன் அதிருஷ்டத்தை, அவனே, உள்ளே மெச்சிக்கொண்டாலும், வெளியே கெத்தாக அவர்களுக்காக விட்டுக் கொடுப்பது போல நடந்துகொண்டு பிகு செய்தபடி ஒப்புக்கொண்டான்.
அவர்களும் “சரி பாக்கு வெத்தல மாத்திக்க நாள் பார்த்துட்டு வரோம்” என விடை பெற்றனர்.
அன்றிரவே தன் சகாக்களுடன் கூடி, குடித்து கும்மாளமிட்டான். கொக்கரித்தான் சாதித்துவிட்டதாக.

திருமண வேலைகள் விரைவாக நடந்து இதோ திருமண நாளும் வந்தே விட்டது.
மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு வண்டிகள் கோயிலை நோக்கி வர, அங்கே பெரிதாக போடப்பட்டிருந்த மணமேடையில் ராஜியை எதிர்கொண்டு அழைத்து வந்தனர். அதற்கு சற்று முன்பே, ராஜி, கோயிலை அடைந்தவள், நேரே தன் அன்னை பராசக்தியை சென்று தஞ்சம் அடைந்தாள்.

“அம்மா, என் தாயும் நீயும் லோகமாதாவும் நீயே.... எதை நினைச்சு நீ எனக்கு இந்த வரன முடிச்சியோ, அதை நான் அறியேன். ஆனா, இந்த திருமணத்தினால் நல்லது நடக்கலைன்னாலும் பரவாயில்லை கெட்டது எதுவும் நடக்காம எங்க குடும்ப மானம் மரியாதை காப்பாற்றப்படணும்.”

“உன்னை மட்டுமே நம்பி நான் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டிருக்கேன் தாயே.... என்னென்னிக்கும் கைவிட்டுடாதேமா” என மனமுருகி வேண்டினாள்.
மண மேடையில் இருவரும் அமர, கோயில் பூசாரி தாலியை அம்மன் மடியில் வைத்து எடுத்து வந்து கனகராஜின் கையில் கொடுத்தார்.

ராஜியினைப் பார்த்து ஜொள்ளு விட்டபடியே அவன் தாலியை கட்டி முடித்தான்.
ராஜி ஓரக்கண்ணால் கனகராசைப் பார்த்தாள். பார்க்க சுமாராக இருந்தான். கொஞ்சம் முரட்டு தோற்றமாக தென்பட்டான். கொஞ்சம் அச்சமாக இருந்தது அவளுக்கு உள்ளுக்குள். மேலும் ஏறெடுத்து பார்க்கவும் பயந்து தலையை குனிந்து கொண்டாள்.
ஒவ்வொருவர் ஒவ்வொரு மன நிலையில் புதிய தம்பதிகளை ஆசீர்வதித்தனர். ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவர்களை ஆசீர்வதித்தோரில், மண மேடையின் மூலையில், கண் கலங்க நின்ற கதிர்வேலனும் ஒருவன்.

7 comments: