Friday, 6 July 2018

NENJIL KODI MINNAL - 3

கண் ராமாயணத்தில் லயித்தாலும், ‘இவுக எங்க போனாகளோ, இன்னும் காணலியே, அப்பா கண்டுபிடிச்சு கேட்டா என்ன சொல்றது...? என உள்ளே குடைந்தது.

இவளின் மனக் கலவரம் இவள் முகத்தில் தெரிய, பொன்னி அருகே வந்து “என்ன கண்ணு, என்னமோ போல... என்று இழுத்தாள். ராஜி கூறினாள்.

‘ஓ, அப்படியா சங்கதி.... கூட்டாளிகளோட கும்மாளம் போட போயாச்சா அதுவும் கல்யாணத்தன்னிக்கே.... கருமம் டா சாமி... என மனதினுள் வைது தீர்த்தாள்.

ராஜிக்கு இவனை பார்த்திருக்கிறது என பொன்னி முனியனிடம் சொன்னதுதான் தாமதம் அவன் எகிறி குதித்தான்.
“ஏண்டீ, இந்த பெரிசுக்கு புத்தி இப்படி போச்சுது, கிளிய வளத்து பூனை கையில குடுத்துனு சொல்வாக, இது குரங்குடீ..... அவன் கையில போய் ஏண்டீ...?” என குமைந்தான் அவள் கணவன் முனியன்.

“ஏம் மாமா, அவுக நல்லவாக இல்லியா? என்றாள் பேதையாக.
“நல்லவனா அவனா, முரட்டாடு டீ, ஒரு நல்ல பழக்கம் கிடையாதே...
என்றான். “குடி கூத்து கூத்தியா சூது எல்லாம் உண்டு என தலையில் அடித்துக்கொண்டான்.
“அடக் கண்றாவியே, இதை எல்லாம் பெரியய்யாவுக்கு தெரியாமலா இந்த முடிவெடுத்தாங்க... என்ன இது அதிசயாம இருக்குதே? என மோவாயில் கையை வைத்தாள்.

“ஐயோ, எம்பூட்டு நல்ல பொண்ணுக்கு இப்படி மாப்பிள பார்த்துட்டாகளே... என கலங்கினாள். தாங்கள் விசனப்பட்டு ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை அதலால் மனதை தேற்றிக்கொண்டு,
“சரி மாமா... நாம எல்லாரும் இல்ல, இங்கன தானே வந்து குடித்தனம் பண்ணி ஆவணும், வால நீட்டினா தேங்கா உரிக்கற சாண கத்தியால வகுந்துரமாட்டேனா” என சூளுரைத்தாள்.

முதல் நாளே அவன் சுயரூபம் துவங்கிவிட்டது எனக் கேட்டதும் பொன்னிக்கு ஆத்திரம் மாளவில்லை. ‘மஞ்சக்கயிறு ஈரம் கூட இன்னும் கையால, அதுக்குள்ள கொட்டமடிக்க போயாச்சுது என பொரிந்தாள் உள்ளுக்குள்ளே.
“சரி சரி விடு, எல்லாம் தானே வருவாக. அப்பா கேட்டா உண்மையவே சொல்லு.... சகாக்களோட போயிருக்காவன்னு.... நீ கூத்த ரசி கண்ணு என தேற்றினாள்.
கூத்து முடிந்து ராஜி கையால் அவர்களுக்கு பரிசும் பணமுடிப்பும் பலகாரமும் குடுத்து அனுப்பிய நேரத்தில் ராஜலிங்கத்திற்கு கனகராஜ் இல்லாதது பாதித்தது.
“என்னம்மா மாப்ளைய காணும்? என்றார்.

“அது வந்து பா, அவரு.... எனத் தயங்கி பொன்னியை பார்க்க, அவள், “அது ஒண்ணுமில்லை எஜமான், சகாக்கள்ளாம் தொந்தரவு செய்தாகன்னு, ஒரெட்டு பார்த்துட்டு வர போயிருக்காராமா... சின்னம்மா கிட்ட சொல்லீட்டுதான் போயிருக்காப்ல என்றாள்.

“ஓ அப்படியா, சீக்கிரமா வந்துட்டா செரிதேன்.... ராவைக்கு சடங்கு இருக்கில்ல... என்றார் வேறெங்கோ பார்த்து.
“என்ன, புள்ள பொன்னி, அதுக்கு வேணுங்கறதெல்லாம்....? என முடிக்காமல் இழுத்தார்.

ராஜிக்கு மனதினுள் படபடப்பு துவங்கியது. உள்ளங்கை வேர்த்தது. பொன்னியின் கைகளை பிடித்துக் கொண்டாள்.
அவள் மெல்ல தட்டி கொடுத்தாள். ‘பேசாம இரு என கண் அமர்த்தினாள்.

“அதெல்லாம் ஏற்பாடாகி போச்சுதுங்கைய்யா... என சொல்லி வைத்தாள்.
பின்னோடு கூட்டமும் கலைந்து இவர்களும் வீடு வந்து சேர்ந்தனர்.
கனகின் அரவமே இல்லை.   
                      
பொன்னி, ராஜியினை உள்ளே அழைத்துச் சென்று இன்னம் சில உறவு பெண்களுமாக மிதமாக அலங்கரித்தாள்.

பாலும் பழமும் பலகாரமும் தயாராகின..... பூக்களும் ஊதுபத்தியும் மணத்தன.... படுக்கையில், பட்டு மெத்தையும் தலையணையும் ஒன்றை ஒன்று பார்த்து கொஞ்சின.

“இன்னும் காணலியே, டேய், கந்தா முனியா... என குரல் கொடுத்தார்.
ராஜி உடனே அவரை தடுத்து, “அப்பா, என்னப்பா இது, அவுகள காணும்னு மொத நாளைக்கே வேலைக்காரங்க முதக்கொண்டு தெரியணுமா, தானா வரட்டும்பா.... இவங்க தேடப் போய், அது ஊர் மொத்தமும் பறவீடாதா...? என்றாள் மென்மையான குரலில்.

ராஜலிங்கத்துக்கு, அப்போது தான், செய்யவிருந்த தவறு உணர்ந்தது.
“ஆமா தாயி, நான் யோசிக்கல.... டேய், நீங்க போய் படுங்க..... கல்யாண வேலை களப்பு உங்களுக்கும் இருக்கும் என அனுப்பினார்.

“அப்பா, உங்களுக்கு மட்டும் களப்பில்லையா என்ன.... நீங்களும் போய் உறங்குங்க பா.... வந்துடுவாக என்றாள் ராஜி.
“இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்மா என்றார்.
“அப்பா... எனக் கெஞ்சினாள்.

“சரி மா... சரிமா... என அவள் மனதை நோக அடிக்க விரும்பாமல் உள்ளே சென்றார்.
பொட்டு தூக்கம் கண்களை தீண்டவில்லை என்றபோதும் நீட்டி படுத்து கிடந்தார்.
உள்ளே பிசைந்தது. ‘தப்பு பண்ணீட்டனா..... ஊரே சொல்லிச்சே, நான் ஏமாந்துட்டனா..... மத்தவக பேச்ச நம்பி, வீட்டோடு மாப்ள கிடைக்கறான்னு என் தங்கத்துக்கு நானே மோசம் பண்ணீட்டனா...? என குமைந்தார்.

ராஜி தன் அறை ஜன்னல் பிரைமேல் அமர்ந்தாள். கண்கள் ஒரு பக்கம் களைப்பில் சொக்கினாலும் மனம் மட்டும் விழித்துக்கொண்டே தான் இருந்தன.
வாசப்பக்கம் எந்த அரவம் கேட்டினும் அவனோ என உள்ளே படபடத்தது.
நள்ளிரவு தாண்டிய பின் வாயிலில் நிழலாடியது.

அவுகதானே என எட்டிப் பார்த்தாள். இரு சகாக்களின் கைப்பிடியில் தள்ளாடியபடி வீடு அந்து சேர்ந்தான் கனகு.
அதைக்கண்டு பதறி வாசலுக்கு ஓடினாள்.

அவன் சகாக்களின் முன் செல்ல கொஞ்சம் யோசனையான போதும், அவனைப் பிடித்து உள்ளே அழைத்து வரவேண்டுமே என வாசலை அடைந்தாள்.
சகாக்களின் பிடி இவளைக் கண்டதும் நழுவியது. வேட்டி ஒரு பக்கம் நழுவ, பிடிவிட்டதனால் இவன் மற்றொருபக்கம் சாய, இவள் சென்று அவனை விழாமல் தாங்கினாள்.

நாற்றம் குடலை பிடுங்கியது.
“ஐயோ இவுக குடிப்பாகளா, இந்தப் பழக்கம் இருக்குன்னு அப்பாவுக்கு தெரியாதா? என அதிர்ந்து போனாள்.

மெல்ல அவனை நாலு படிகளிலும் ஏற்றி உள்ளே கூட்டி வர அவளுக்கு சிரமமாக இருந்தது. அதற்குள் வாசத்திண்ணையில் எப்போதும் படுக்கும் முருகானந்தம் விழித்துவிட்டார்.
“பெரியப்பா என்றாள் அதிர்ந்து.

“இருக்கட்டும் மா.... பயப்படாத..... இந்த நிலைமையில, இவன, உங்கப்பன் பார்த்திடக் கூடாதும்மா தாயி..... இதயம் வெடிச்சு செத்திடுவான்....
“டேய் முருகா, கந்தா என வீட்டோடு இருந்த வேலையாட்களை அழைத்தார். அவர்கள் முதல் குரலுக்கே ஓடி வந்தனர்.

“பிடிங்கடா.... அந்தக் காமிரா உள்ள கொண்டு சோபா மேல கிடத்துங்க.... கதவ வெளியே எப்போதும் போல தாழ் போடுங்க... மிச்சம் பொழுது விடியட்டும்... என்றார். அவர்கள் சொன்னபடி செய்ய, “பெரியப்பா... என்றாள் ராஜி.
“நீ போய் உன் அறையில தூங்கு தாயி..... இந்த நிலையில இவன் அந்த உள்ள வர வேணாம்.... நாளக்கே இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டிப்பிடுவேன். பயப்படாம கலங்காம தூங்கு ராஜாத்தி என்றார்.

அவருக்கே அவளை பார்க்க துக்கம் தொண்டையை அடைத்தது. சரி என தலையாட்டியவள், மனம் கேட்காமல் ஒரு க்ளாசில் பாலும் சில பழங்களும் கொண்டு காமிரா அறையில் வைத்து, அவனுக்கு தலையணையும் போர்வையும் வைத்தாள். வெளியே வந்து கதவை தாளிட்டு தன் அறைக்குச் சென்றாள்.

அதுவரை களைப்பினால் கண்ணை சுழற்றிய தூக்கம் காற்றில் பறந்தே போனது.
பட்டு மஞ்சத்தில் படுக்க பிடிக்காமல் அவளது அறை சோபாவில் ஒரு போர்வையுடன் முடங்கினாள்.
விடிய விடிய கண் கொட்டாமல் யோசனைகள் அவளை வாட்டின. 

‘எப்படி சமாளிப்போம், இவுக, இப்படி இருந்தா, அப்பா என்ன செய்வாரு.... அவரது உடம்பு என்னாகும்... மனநில என்னாகும்?
என பயந்தாள்.
‘சரி, கல்யாணம் நண்பர்கள்ன்னு ஒண்ணா கூடி இருந்தாங்க, அதனால, ஒரு நாள் கூத்தாகவும் இருக்கலாம்தானே, தான் இப்போதே ஏன் இப்படி பதறி அஞ்ச வேண்டும்... என மனதைத் தேற்றிக்கொண்டு உறங்க முயன்றாள்.

எரிந்து தீய்ந்த கண்கள் விடியற் காலையில் எப்போதோ தாமாக தன்னையும் அறியாமல் மூடின. காலை ஆறு மணிக்கு, பொன்னி மெல்ல கதவை திறந்து எட்டி பார்த்தாள். இவளை அந்த நிலையில் கண்டு அவளுக்கு நெஞ்சு வெடித்தது.... கண்ணீராக பெருகியது. ‘மோசம் போயிட்டோமே என பதறினாள்.

தன்னை சமாளித்து அருகே வந்து காபியுடன் அவளை எழுப்பினாள்.
தூக்கி வாரி போட்டு சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.
“பொன்னிக்கா, அவுக... அப்பா... என குழறினாள்.

“ம்ம்ம் ம்ம், எல்லாம் தெரியும்.... கந்தனும் முருகனும் மெல்ல என்கிட்டே வந்து சொல்லிப்பிட்டானுங்க..... கவலைப்படாத, வேற யாருக்கும் மூச்சு காட்டப்டாதுன்னு கண்டிச்சு வெச்சிருக்கேன்.

“அப்பாரு இன்னும் எந்திரிக்கல.... அதுக்குள்ள காதும் காதும் வெச்சாப்பல சிலது செய்யோணம்.... நீ இந்தக் காப்பிய குடி கண்ணு..... முகம் அலம்பிக்கிட்டு வா.... நான் சொல்றேன் என்றாள்.
சரி என அடி பணிந்தாள் ராஜி.

அவள் முகம் கழுவி வர, கந்தனும் முருகனும் காமிரா அறையைத் திறந்து, பூமியோ கைலாசமோ என காலொரு பக்கம் கையொரு பக்கமாக விரித்தபடி கிடந்த கனகராஜினை அள்ளிக்கொண்டு வந்தனர். இவளது அறையில் கட்டிலில் கிடத்தினர்.
அவளை அவனருகே கூட அண்டவிடாமல் பொன்னி அவர்களைக் கொண்டே அனைத்தையும் செய்ய வைத்தாள்.

போர்வையை மேலே போற்றிவிட்டு அவர்கள் வெளியேற, “நீ வா என ராஜியினை கைப்பிடித்திழுத்து வெளியே வந்தாள்.

“பெரியய்யா  எழுந்தா, ஒண்ணுமே தெரியாத புதுப் பொண்ணு போல சந்தோஷமா முகத்த வெச்சுக்கணும் கண்ணு..... அவர் தாங்க மாட்டாரு கண்ணு என்றாள் இவள் மொவையை பிடித்து.
‘ஆம் என தலையாட்டினாள். கண் நிறையட்டுமா என்றது. அப்படியே வெளியேற்றாமல் உள்ளிழுத்தாள்.

“நீ மாடில விருந்தாளீக அறையில போய் குளிச்சு ரெடியாகி வந்துபுடு.... நான் அங்கைக்கே உன் துணிமணி எல்லாம் எடுத்தாந்து தாரேன், என்ன... என்றாள்.
ராஜி சொன்னபடியே செய்து சாமியறைக்குச் சென்று விளக்கேற்றினாள்.

‘அம்மா, முதல் நாளே இப்படியா.... மிச்சம் நாளெல்லாம.... வாழ் நாளெல்லாம் எப்படியம்மா....? என மனம் கதறியது.
‘நான் என்னவும் தாங்கிப்பேன் தாயே, ஆனா, அப்பா.... என திணறினாள். அன்னை புன்னகை முகத்துடன் பிரகாசித்தாள். அது கொஞ்சம் தெம்பூட்டியது.

பின்னோடு ராஜலிங்கம் எழுந்து வந்தார்.
“என்னம்மா மாப்ள வந்தாரா.... கொஞ்சம் கண் அசந்துட்டேன் போல, எழுப்பி இருக்கக் கூடாது என்றார் பதற்றத்துடன்.
“நீங்க உள்ளே போய் உறங்கவும், அவுக வரவும் சரியா இருந்துச்சுப்பா.... உங்களை எழுப்பறேன்னு சொன்னேன்.... அவுகதான், வேண்டாம், கல்யாண வேலை களைப்பில அசதியா இருப்பீக.... உறங்கட்டும்னு சொல்லீட்டாக என்றாள் தரையை பார்த்தபடி உண்மைபோல.

“ஓஹோ அப்படியா, நல்லது, நல்ல பிள்ளதான்... எங்கே காணும்? என்றார் வீட்டை துழாவி.
“இன்னும் எந்திரிக்கலைங்கய்யா என்றாள் பொன்னி முந்திக்கொண்டு.
“ஓஹோ உறங்கட்டும்
என்றார் பேப்பரும் காபியுமாக வாசப்பக்கம் போனபடி.
ஹப்பா என்றானது இருவருக்கும்.

ஒன்பது மணி வாக்கில், பொன்னி மெல்ல அவளது அறையினுள் எட்டி பார்க்க, அவன் புரண்டபடி கிடப்பதை கண்டாள்.
“எந்திரிக்றாப்ல, நீ போய் காபி குடுக்கறியா, இல்ல, நானே போய் அந்தாளு மூஞ்சிமேல ஊத்தட்டுமா? என்றாள் பொன்னி.
ராஜியினையும் மீறி சிரிப்பு தோன்றாமல் இல்லை. ஆனாலும், மனைவியின் மனம் பதறியது, “என்னக்கா...? என்றாள்.

“சரி சரி, சொல்லு? என்றாள். “வந்து, வந்து... நானா...? என்றாள் தயங்கி.
“அதுக்குதான் சொன்னேன்.... நேரங்கெட்ட நேரத்தில, அந்தாளு எதாச்சும்... வேண்டாம், நீ இப்போதைக்கு அவுக கண்ணுல படாத.... நானே போறேன் என காபியுடன் மெல்ல உள்ளே சென்றாள். பக்கத்து மேஜையில் காபியை வைத்துவிட்டு, எட்ட நின்று, “இந்தாங்க மாப்பிள்ளை ஐய்யா, காபி என்று உரக்க குரல் கொடுத்தாள்.
“ராஜி, ராஜியா...? என்று அரைக் கண்ணை திறந்தான்.

“ஆமா, உம்முகரகட்டைக்கு எங்க சின்ன ராணி காபி கொண்டு நீட்டணுமோ.... குடிகார பயபுள்ள என தனக்குள் வைது தீர்த்தாள்.
“சின்னம்மா பூஜையில இருக்காவ..... நீங்க எந்திரிச்சு முகம் கழுவி காப்பிய குடிச்சுட்டு கீழ வாங்க.... ஐய முழிச்சுட்டாக, உங்கள கேக்குராக என்றதும் அவனுக்கு கொஞ்சம் ஆடிப் போனது.

‘ஐயையோ பெரிசு எந்திரிச்சுடுச்சாமில்ல..... நம்மள இப்படி பார்த்தா, அசலுக்கே மோசமாகிடுமே... என சட்டென எழுந்தான்.
அவன் இருந்த நிலை எப்படியோ என,  பொன்னி வெளியேறிவிட்டாள்.
எழுந்து முகம் கழுவி காபி குடித்து அவன் மெல்ல கீழே இறங்கினான்.
ராஜி பூஜை அறையிலிருந்து வருபவள் போல வந்தாள்.

“என்ன ராஜி, பூஜையா? என்றான் அசிங்கமாக இளித்தபடி.
“ம்ம்
என்றாள் அவனை ஏறிடாமல்.
‘அப்பா, ராங்கிதான்... என்று நினைத்துக்கொண்டான்.

மெல்ல அவளருகே சென்று, “அது, ராஜி, என்னவாச்சுன்னா, என் சகாக்கள் எல்லாம், “டேய் கல்யாணங்கட்டி இருக்கே, பார்ட்டி குடுன்னு பிடுங்கி எடுத்துப்பிட்டானுங்க..... அதான் அவனுகளுக்கெல்லாம் புட்டி வாங்கி குடுக்க வேண்டியதாப்போச்சு..... நான் ஒண்ணும் அதிகமா சாப்பிடல பாத்துக்க....  ஒரு ரவுண்டுதான் அடிச்சேன், அதுக்கே, பித்த உடம்பாச்சா தூக்கிடுச்சு என இளித்தான்.

‘ஒரு ரவுண்டுக்கா அந்த தள்ளாட்டம் தடுமாற்றம்? என நினைத்துக்கொண்டாள் ராஜி.
‘விளக்குமாறு பிஞ்சுரும் ஒரு நாளைக்கு, மவனே
என உள்ளே பொன்னி குமைந்தாள்.

1 comment:

  1. Kathai nandraga selgirathu... It is true that first night is not a happy occasion for all. There will be a lot of problems . Super

    ReplyDelete