Saturday, 7 July 2018

NENJIL KODI MINNAL - 4

“வணக்கம்ங்க மாமா என்றான் வாசப்பக்கம் சென்று.
“அட, மாப்ள எந்திருச்சுட்டீங்களா..... ராத்திரிக்கு உங்கள வேளயோட காணாம நாங்க எல்லாம் தவிச்சு போயிட்டோமில்ல... என்றார்.

“மன்னிக்கணும் மாமா, இனி இப்படி நடக்காது..... நான் எவ்வளவோ சொன்னேனுங்க, ஆனா பாருங்க, வெளியூரிலேர்ந்தெல்லாம் என் தோஸ்துங்க சில பேர் வந்திருந்தானுங்க.... பயபுள்ளைக என்ன விடவே மாட்டேன்னுட்டாக.... பழைய கதையெல்லாம் பேசி பேசி நேரமாகி போச்சுதுங்க.... பாவம் நீங்க களைப்பில உறங்கீட்டீங்க என்றான் நல்லவன்போல.

பெரியவர் முருகானந்தம் அங்கே வந்தார்.
“ஆமா மாப்ள, பெரிசு உறங்கீட்டாப்ல்..... நானும் ராஜியும் முழிச்சிருந்தமே உங்களை வரவேற்க அப்புறமென்ன... ? என்றார் நக்கலாக.

‘ஐயோ, இந்த பெரிசு, என்னை அப்படி பார்த்திருச்சா, எதையானும் அந்த பெரிசுகிட்ட வத்தி வைக்காம இருக்கணுமே.....
‘இந்த பெரிச எதுக்கு, சோத்துக்கு தண்டமா வீட்டோட வெச்சிருக்காங்க.... தூரத்து சொந்தம்னா ஏதோ கொஞ்சம் பணத்த குடுத்து பைசல் பண்ணாம.... இனி இதெல்லாத்துக்கும் நாமதான் ஒரு முடிவு எடுக்கோணும். இந்த எக்ஸ்ட்ரா டிக்கெட்டை எல்லாம் ஒழிச்சாத்தான் நாம இங்கே நிம்மதியா அள்ள முடியும்....
‘அப்பனையும் பொண்ணையும் சமாளிக்கறதே நமக்கு கஷ்டம், இதிலே, இது வேற ஒண்ணு பெரிய பெரிசு... என உள்ளே எறிந்தான்.

“சீக்கிரமா குளிச்சு கிளம்புங்க மாப்ள, கோயிலுக்கு போவணும்... பொங்க வைக்க ராஜி கண்ணு ரெடியாகிடுச்சு என்றார் ராஜலிங்கம்.
“ஓ, நான் நொடில ரெடி ஆவேனுங்க என உள்ளே சென்றான்.

அவன் பெட்டி அவளது அறையில்தான் இருந்தது எனக் கண்டான். அங்கே செல்ல, கதவு உள்ளே பூட்டி இருந்தது. ஒருவேளை அவள் தயாராகிறாளோ எனக் கதவை தட்டினான்.
“வரேன், துணி மாத்தறேன் என குரல் கொடுத்தாள்.

“வேற யாருமில்ல, நாந்தேன் எனக் குரல் கொடுத்தான். அவன்தானே என அவள் கதவை திறந்துவிடுவாள், ராத்திரி நடத்த முடியாத கச்சேரியை இப்போது அரங்கேற்றி விடலாம் என்ற ஒரு சிறிய நப்பாசை குள்ளநரிக்கு நாவில் நீர் ஊறியது.
ஆனால், ராஜியோ, அசராமல், உடுத்தி முடித்து வெளியே வந்து அவனுக்குண்டான பெட்டியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“அடுத்த அறையில கொண்டு வெச்சுக்குங்க..... அங்கேயே குளியலறை இருக்கு.... குளிச்சு ரெடியாகி கீழ வாங்க, கோயிலுக்கு போவணும் என்றாள் தலை குனிந்தபடியே.
“நான் இங்கியே குளிச்சுக்கறேன் ராஜி கண்ணு, நீ பாட்டுக்கு ரெடியாகிக்க என்றான் இளித்தபடி.

“இல்ல, நீங்க அங்க போங்க என்றாள் துடைத்த முகத்துடன்.
“என்னடி, முத நாளே மூஞ்சியால அடிக்கறவ, என்னையத் தெரியுமில்ல...? என்றான் அருகே சென்று அவள் முகவாயை பிடிக்க போய். அவள் சட்டென பின்னே நகர்ந்தாள்.

“ஓஹோ, இதுதான் இவுகளின் சுயரூபமா... இப்போதிலிருந்தே இவற்றை மாற்ற வேண்டுமே, எட்ட வைக்க வேண்டும், கொஞ்சம் இளகி பேசினாலும் முதலுக்கே மோசமாக்கும் ரகம் போல தெரிகிறாகளே... என சட்டென சுதாரித்துக்கொண்டாள்.
அவனை எரிப்பதைப் போல பார்த்துவிட்டு அவன் முகத்தின் மீதே படாரென கதவை சாத்திக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

கனகுக்கு எரிந்தது. ‘இன்னா திமிரு, இன்னா கொழுப்பு, எல்லாம் அவ அப்பன் குடுக்கற செல்லம் சொகுசு, பணத்திமிரு.
‘இருடீ, இந்த பணம்தானே உங்கள ஆடச்சொல்லுது, எல்லாத்தையும் என் வசமாக்கிகிட்டு உன்னையும் பெட்டிப் பாம்பா ஆக்கி, நான் ஆளல..... ராவும் பகலும் உன்னை சீரழிக்கல, நான் கனகராஜ் இல்லடீ என கருவினான்.

உள்ளே அடைத்த கதவின் பின்னே சாய்ந்து நின்று தன்னை நிதானப்படுத்திக்கொண்டாள் ராஜி.
‘அம்மா தாயே என பெரும் மூச்சிழுத்துவிட்டாள்.
பின் பின்னலிட்டு பூச்சூடி வெளியே வந்தாள்.

அவனுக்கும் பெரியப்பாவிற்கும் தந்தைக்குமாக பலகாரம் எடுத்து வைத்தாள்.
வெட்கத்துடன் கூடிய புது மங்கை போல தரை பார்த்து குனிந்த முகத்துடன் அவர்களுக்கு பரிமாறினாள்.

இரவில், முட்ட குடித்து, ஒன்றும் பசியாறாமல் இருந்தவன் ஆகையால், காணாததைக் கண்டவன் போல விழுங்கினான்.
தட்டு நிறைய பலகாரத்தை இட்டு, அதன் மீது சாம்பாரை ஊற்றி பிசைந்து, அவன் வாரி உண்ணுவதைப் பார்த்து அவளுக்கு குமட்டியது.
பெரியவர் தலையில் அடிக்காதக் குறையாக வெளியேறினார்.

“மெல்ல, மெல்ல சாப்பிடுங்க மாப்ள, ராவைக்கு ஒண்ணும் உங்கலை.... அதான் மாப்ளக்கு பசி.... என சிரித்துக்கொண்டார் ராஜலிங்கம்.
‘கருமம் எனத் தலையில் அடித்துக்கொண்டாள் பொன்னி.

அங்கே மேற்கொண்டு நிற்க பிடிக்காமல், உள்ளே சென்றாள் ராஜி. அவளை அங்கேயே நிறுத்தி பிடித்து, தட்டில் கொஞ்சம் பலகாரத்தை வைத்து கட்டாயப்படுத்தி உண்ண வைத்தாள் பொன்னி.
“வேண்டாங்க்கா, கோவில்ல பொங்க வைக்கணும், வெறும் வயித்தோட செஞ்சு முடிச்சுடறேன் என மறுத்தாள்.

“எந்த சாமியும் பட்டினியா தனக்கு வந்து பூஜை செய்யுன்னு சொல்லல கண்ணு.... கொஞ்சம் முழுங்கு..... தெம்பு வேண்டாம்? என மிரட்டி உண்ணவைத்தாள்
பின்னோடு, பொன்னியுமாக, கோவிலுக்குச் சென்று, புடவை கொசுவத்தை தூக்கிச் சொருகி, பொங்கல் வைப்பதில் முனைந்தாள் ராஜி.
பொங்கலிட்டு, அம்மனுக்கு பூஜை செய்து, வீடு வந்து சேர்ந்தனர்.

கதிர் வந்திருந்தான். ‘எப்படி இருக்கிறாளோ என அவனுக்கு உள்ளே பதற்றம். நேரே சமையல் அறைக்கே சென்றான். அவனுக்குத் தெரியுமே, எங்கிருந்து உண்மையான தகவல் கிடைக்குமென.

“என்ன பொன்னிக்கா? என்றான்.
அவள், “தம்பி கதிரு, என அழமாட்டாத குறையாக அவனிடம் மெல்லிய குரலில் கொட்டி தீர்த்தாள். கதிருக்கு சர்வாங்கமும் கோபத்தால் ஆடியது.
“என்னக்கா, முத நாளே இப்படி...?
என விசனப்பட்டான்.

“என்னத்த பண்றது, எல்லாம் தலை எழுத்து தம்பி. பெரியய்யா இப்படி பண்ணீட்டாரே கதிரு? என முந்தானையை வாயில் வைத்துக்கொண்டு அழுகையை தடுத்தாள்.
“சரீங்கக்கா, இருங்க பாப்போம்... நாமெல்லாம் இல்ல...? என்றான். 

“எப்படி தாங்கிகிட்டாங்க?
என்றான். ராஜியை பேர் சொல்லாமல்
“ஐயோ, முகம் செத்து கிடக்கு தம்பி என்றாள். ம்ம் என விலகினான்.
ஹாலினுள் வந்த கனகு, கதிரை கண்டான். 

‘தோடா, பெரிசு ஒண்ணு போதாதுன்னு இவன் வேற ஒருத்தன். இவன், ராஜிய பாக்கற பார்வையே சரி இல்ல..... அதென்ன அது, வேலக்கார நாயி, சமையல் உள் வர இவனுக்கென்ன உரிம குடுத்து வெச்சிருக்கு...
‘பெரிசும்தான் ஆகட்டும், கதிரு... தம்பி கதிருன்னு, இவம்மேல உசிரயே விடுது.
‘இருடா, வெச்சுக்கறேன் ஆப்பு... என கருவிக்கொண்டான்.

முதல் நாள் தப்பியது. இன்றிரவு எப்படியோ என பயந்தாள் ராஜி. அந்தக் கலக்கம் அவள் முகத்தில் தெரிந்தது. தாலி கட்டிய கணவன்தான், உரிமை பட்டவந்தான், ஆனாலும் ஏனோ மனம் ஒப்பவில்லை. முதலில், அவனைத் திருத்தி, நல்லவனாக்கி, பின் அவனுடன் குடித்தனம் செய்யவே அவளது மனம் விரும்பியது.

இதை அந்த முரடனிடம் சொல்வது யார் என உள்ளே உதரலெடுத்தது. இத்தனைக்கும், தந்தைக்கு வேறு, இதைப்பற்றி ஒன்றுமே தெரியக்கூடாது. அதனால் அப்பட்டமாக அவனிடத்தில் எதையும் பேசவோ விவாதிக்கவோ முடியாமல் அவளை கட்டிப் போட்டது.

பெரியவர் இவள் முகக் கலக்கத்தை கண்டு கொண்டார். கனகு கள்ளுண்ட வண்டு போல இவளை கண்களால் மொய்ப்பதையும் கண்டு கொண்டார்.
“என்னம்மா தாயி? என்றார் ஆதுரமாக.
“ஒண்ணுமில்லியே பெரியப்பா என்றாள் முகத்தை சிரித்தபடி வைத்து.
“எல்லாம் எனக்குத் தெரியும் மா. உன் வயசை கடந்து வந்தவன், நாலையும் பார்த்தவன் மா, இந்தக் கிழவன்....
இப்படிப்பட்டவனோட எப்படி குடித்தனம் பண்ணுறதுன்னு கலக்கமா? என்றார் நேராக.
அவள் கலக்கத்துடன் அவரை ஏறிட்டாள். ஆம் என தலை அசைத்தாள்.
“வந்து, இல்ல... அவுக என் புருஷன்தான், இருந்தாலும், வந்து... பெரியப்பா... என தடுமாறினாள்.

“புரியுது தாயி.... ஆனாலும், உம் மனசுல உள்ளத இந்தக் கிழவன் கிட்ட கொட்டீடுமா.... உங்கப்பன்ட எதையும் பேச முடியாத நெலம, எனக்குத் தெரியும். நீ என்கிட்டே கூட கொட்டலைனா உன் இதயம் வெடிச்சுடும் மா... சொல்லு என்றார்.
“இல்ல பெரியப்பா, அவுகள நல்லவார்தையா சொல்லி திருத்த முடிஞ்சா, பிறகு மனசு ஒன்றி குடித்தனம் பண்ணறது நல்லதில்லீங்களா? என்றாள். அவளை கர்வத்துடன் பார்த்தார். வாஞ்சையுடன் அவள் தலையை தடவி கொடுத்தார்.
“போம்மா, சொல்லீட்டே இல்லே... போ, நிம்மதியா போய் உன் வேலையப் பாரு.... மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்....
“பொடிப்பய மா இவன். நாலு தட்டு தட்டினா தாங்கமாட்டான். சும்மா உதார் காமிச்சுகிட்டு திரியறான் மா.... அவன அடக்க எனக்குத் தெரியும். நீ போ என்றார். அவரை சந்தேகத்துடன் பார்த்தபடி. “நான் சொல்றது... என்றாள்.
“என்கிட்டே விட்டுடுன்னு சொன்னேனே தாயி என்றார். சரி என உள்ளே வந்துவிட்டாள்.

பெரிசு கோவில் பக்கமாக போவதை கண்டாள்.
பின்னோடு அவர் வீடு திரும்ப, சிறிது நேரத்தில் கோயில் பூசாரி இவர்கள் வீட்டை நோக்கி வந்தார்.
ராஜி இவற்றை தன் அறையில் இருந்த பால்கனியிலிருந்து பார்த்திருந்தவள், அவசரமாக கீழே இறங்கி வந்தாள்.
“வாங்க ஐயா என வணங்கினாள். “சௌபாக்யவதியா இரும்மா என ஆசீர்வதித்தார்.
“ஒரு முக்கிய விஷயம், பெரியவர் இல்லையாமா? என்றார்.
“இருக்காங்க, கூப்பிடுறேன், நீங்க உக்காருங்க... தாகத்துக்கு எதாச்சும்? என்றாள். “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்மா, நீ போ என்றார். சரி என உள்ளே ஓடினாள்.
“அப்படியே உன் புருஷனையும் கூப்பிட்டு விடு தாயி என்றார். சரி என தலை ஆட்டியபடி ஓடினாள்.
இருவரும், கூட பெரிசும் வந்தனர்.

பூசாரி அமர்ந்து கல்யாண விவரங்கள் பேசத் துவங்கினார்.
“நேத்து மிச்சமெல்லாம் நல்லபடி நடந்திருக்கும்னு நினைக்கறேன்....
பெரியம்மா இல்லாத வீடு பாருங்க, அதான் நல்லது கெட்டது எடுத்துச் சொல்லுறது நம்ம பொறுப்பா போயிடுச்சு... என்றார்.
“ஐயோ சாமி, நல்லா சொன்னீங்க போங்க, நீங்க இல்லேனா இதையெல்லாம் எங்களுக்குச் சொல்றது யாரு. நீங்க உங்க கடமையா நினைச்சு இதெல்லாம் சொல்லத்தான் வேணும்.

“ஏதானும் பூஜைங்களா, பண்டிகை எதுவும் வருதா.... ஏம்மா ராஜி? என்றார்.
அவள் கதவு அருகில், அதை பிடித்தபடி நிற்க, “நீ ஏம்மா அங்கேயே நின்னுகிட்டு, படிச்சவ, நாலும் அறிஞ்சவ.... இங்கன வந்து உக்காரும்மா என்று அழைத்தார். “இருக்கட்டும்பா என நின்றாள்.

“பண்டிகை காலம் இன்னும் ஆரம்பிக்கலீங்க. இன்னிக்கி ஆடி பிறந்திருக்கு, அடுத்து ஆவணியில தானுங்களே பண்டிகை முதலாவும் என்றார் பூசாரி.
“ஓ ஆமா, ஆடி பிறந்திருச்சா... என்றார் என்னமோ புரிவது போல இருந்தது. ‘ஹ்ம்ம், மகராசி விசாலம் இருந்திருந்தா எனக்கு இந்தப் பாடு உண்டா. பொட்ட புள்ளைய பெத்து, வயசுக்கு வந்த பெண்ணை என் கிட்ட ஒப்படைச்சுட்டு அவபாட்டுக்கு போய் சேர்ந்துட்டா... என பெருமூச்செறிந்தார்.

கனகுக்கு, ‘என்ன நடக்குது இங்க, அப்படி இப்படீன்னு எனக்குதான் ஏதானும் ஆப்பு வக்க கிளம்பி இருக்கானுகளா இவுனுக? என உள்ளே உதைத்தது.

“ஆமாங்கைய்யா. ஆடி பிறந்துடுச்சு. மாப்ள அவரோட வீட்டில தங்குறது நல்லது. இல்ல வீட்டோட மாப்ளனு கூட்டிகிட்டு வந்திருக்கீக, அதனால இங்கன தான் இருக்கணும்னு நீங்க நினைச்சா, அவரு கீழ தங்கட்டும்.... நம்ம ராஜி கண்ணு மேலேயே தங்கட்டும்..... நான் சொல்றது எல்லாருக்கும் நல்லா புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன் என்றார் நேராக யாரையும் முகம் காணாமல்.

ராஜி பெரியவரை ஆச்சர்யத்துடன் பார்க்க அவர் ஒன்றுமே அறியாதவர் போல வேறே திக்கில் பார்த்தார். அவளும் அறியாதவள் போல முகத்தை க்ஷண நேரத்தில் மாற்றிக்கொண்டாள்.

“என்னாது, என்ன சொல்ல வரீங்க.... எனக்கொண்ணும் விளங்கல, ஆடி பிறக்கறதுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்றான் அந்த புத்தி கேட்டவன்.
“அதில்ல மாப்ள, ஆடி மாசம், புதுசா கல்யாணமான கணவன் மனைவி சேரக்கூடாது. அதைத்தான் பூசாரி சொல்றாரு என்றார் ராஜலிங்கம்.

கனகுக்கு சுறுசுறுவென ஏறியது, “இன்னாது, என்ன இதெல்லாம்.... இந்த நூற்றாண்டில போய் காலம் நேரம் ஆடி தைய்யின்னுகிட்டு. அதெல்லாம் ஒண்ணும் முடியாது என்றான் காராராக.

“இல்லப்பா, இது ஊர் வழக்கம், நாம மாத்த முடியாது கனகு என்றார் பெரியவர்.
“ஓய் பெரிசு, நீர் அடங்கும் என அவரை அடக்கினான்.

“அண்ணன் சொல்றது சரிதான் மாப்ள, நீங்கதான் கொஞ்சம் பொறுத்து போவணும். என்ன இப்போ, ஓடற ஓட்டம்.... ஒரே மாசந்தானே, ஓடியே போய்டும். சின்னஞ்சிறிசுங்க மனசு அப்படிதான் கோவப்படும்.... நாமெல்லாம் படாததா... ஏண்ணே? என பெரிய ஹாஸ்யம் போல சிரித்து வைத்தார்.
“ஆமா
என பெரிசும் கூட சேர்ந்து சிரித்தார்.

ராஜி, ‘ஹப்பா இனி எப்படியாகினும் சமாளித்துவிடலாம் என்ற தைரியத்தில் உள்ளே சென்றுவிட்டாள்.
கனகுக்கு அவர்கள் சிரிப்பு அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றுவது போல ஏறியது.
“அப்ப நான் வரட்டுங்களா? என்று விடைபெற்றார் பூசாரி.

கனகு இன்னது செய்வது எனத் தெரியாமல் யோசனையுடன் இதை எப்படி முறிக்கலாம் என திணறியபடி வாசப்பக்கம் செல்ல,
“என்னண்ணா,  இது நானும் யோசிக்கவே இல்ல. மாப்பிள்ளைய பார்த்தாலும் பாவம்தான் இருக்குது
என்றார்.

“அட விடுப்பா. இதெல்லாம் எல்லார் வாழ்க்கையிலும் ஏற்படற அவஸ்ததானே. தாங்கித்தான் ஆகணும் என லேசாக்கிவிட்டு எழுந்து சென்றுவிட்டார் பெரியவர்.
பின்னோடு ராஜி மேலே செல்ல, கனகராஜும் அவள் பின்னே மேலேறிச் சென்றான்.

“இந்தா ராஜி, நில்லு என்றான்.
அவள் நின்றாள்.
“ரொம்ப சந்தோசமா இருக்காப்ல இருக்கு? என்றான் எகத்தாளமாக. அவள் பேசாமல் நின்றாள்.
“இதெல்லாம் உன் வேலயா? என்றான் தீர்கமாக அவள் முகத்தை பார்த்து.
“ஆடி மாசத்த லெட்டர் போட்டு நான் வரைவழைக்க முடியாது.... அது தானா தான் வரும், முப்பது நாள் பொழுது இருந்துட்டு தானாதான் போகும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்றாள் அமைதியாக.3 comments:

  1. Good story. Girls should be like this only ,no divorce let him think.finally make him correct.I read in one attempt.

    ReplyDelete
  2. I was so upset after reading the 3rd episode. This one is super! Tit for Tat to the drunkard!

    ReplyDelete