Friday 27 July 2018

NENJIL KODI MINNAL - 24

அருகில் யாரும் இல்லாதது கண்டு, அவள் அருகே வந்து, “ஏன் வந்தே ஏன் போறே.... என்னைக் கண்டு பயந்தா? என்றான் குழைவாக.

“இல்ல, மாங்கா பறிக்க ஆள் ஏற்பாடாகி இருந்துச்சு.... அத பாக்க வந்தேன்... நீங்கதான் இருக்கீகளே.... பார்த்துப்பீகன்னு போகக் கிளம்பினேன் என்றாள்.

“கண்டிப்பாக பார்த்துகிடுவேன்..... என் கண் போல பார்த்துகிடுவேன்.... உள்ளங்கையில வெச்சு தாங்குவேன் என்றான் ரெட்டை அர்த்தத்தில். அவளுக்கு குப்பென வியர்த்தது. முகம் சிவந்து போனது.

கால்கள் நிற்க முடியாமல் தள்ளாடியது.

“ஏன் இப்படி எல்லாம் பேசி வைக்கறீக? என்றாள் முனகலாக.

“என் மனசை பின்னே எப்படி, எங்கே வெச்சு, உனக்குப் புரிய வைக்கறது... அதான்... என்று சிரித்தான்.

“இதெல்லாம் நடக்கக் கூடிய விஷயமில்லை என்றாள்.

“நான் நடத்திக்காட்டுவேனே என்றான்

அவனை ஏறிட்டாள், கலங்கிய கண்களுடன்.... “எனக்கு எந்த கனவுகளையும் கொடுக்காதீக ப்ளீஸ்..... எனக்கு அதுக்கு அருகதையும் இல்லை, குடுப்பினையும் இல்லை..... நான் பட்டது வரை போதும்.... இனிமேலும் எந்தவிதமான ஏமாற்றங்களையும் அனுபவிக்க எனக்கு தெம்பில்லை என்றாள்.

அந்த நொடியில், “என் தங்கமே, உனக்கு நானிருக்கிறேனடி என் செல்லமே... உனக்கு ஒரு தீங்கும் வராமல் காப்பேன் என அவளை அள்ளி எடுத்து அணைத்துக்கொள்ள அவன் கைகள் பரபரத்தன.

கண்களை தப்பி, வெளியே உருண்டோடிய சிலத் துளிகளை ஒற்றி எடுக்க, அவன் தனது கைக்குட்டையை எடுத்து நீட்டினான்.

“இன்னிக்கி பொழுதுக்கு உங்கிட்ட கைக்குட்டையை மட்டுமே நீட்டுறேன்..... கூடிய சீக்கிரம் என் கைகளே நீண்டு அதை துடைக்கும்.... இனி கண்ணீரே இல்லாத நிலை ஏற்படும் என்றான் உணர்ச்சி பூர்வமாக உண்மை மனதுடன்.

அதை வாங்கி கண்ணீரை ஒற்றி எடுத்தாள். அவனிடமே திருப்பிக் கொடுத்தாள்.

“ஒரு முறை ஆசையுடன் உரிமையுடன் கொடுத்ததை, நான் என்றுமே திருப்பி வாங்கும் வழக்கமோ கேட்கும் வழக்கமோ எனக்கில்லை என்றான் அவளையே உற்று பார்த்தபடி.

அவள் தயங்கி, அதை எங்கே வைப்பது என யோசித்து தடுமாறினாள்.

எங்கேயானும் வைத்து அது காணாமல் போய்விடுமோ என பயம் வேறு. சுற்றிலும் பார்த்தவள் இடுப்பின் சேலை கொசுவத்தினுள் சொறுகிக்கொண்டாள்.

“ம்ம்.... பரவா இல்லடா.... நீ குடுத்து வெச்சவன்..... எங்கே போய் எப்படி உக்கார்ந்துகிட்டே பாரு.... என அவன் கைக்குட்டையைப் பார்த்து பேசினான். அவளையும் மீறி சிவந்து போய் களுக்கென சிரித்தாள்.

“இந்தச் சிரிப்பு என்னென்னிக்கும் உன் முகத்தில் நிலைத்திருக்கணும் ரஜ்ஜு என்றான் ஆசையோடு பார்த்தபடி. அவள் சிரிப்பு மாறி புன்னகைத்தாள்.

“காய் பறிக்க ஆளுங்க வந்துட்டாங்களா? என்று பேச்சை மாற்றினாள்.

“ம்ம் ஆமா. உள்ளே வேல ஆரம்பிச்சுட்டாங்க என்றான் அவனும். அவள் மெல்ல உள்நோக்கி நடந்தாள்.

அடர்ந்த காடாக இருக்கும் அவர்களது தோப்பு..... உள்ளே செல்லச் செல்ல இருள் கவ்விக்கொள்ளும்.

தனியே செல்ல கொஞ்சம் பயமுண்டு.  அவன் கூடவே வருகிறானா என கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டாள்.

அவனும் அதை கண்டுகொண்டான்.

“ஆமா கேட்கணும்னு.... அது எதுக்கு, அன்னிக்கி ஒரு நா சாப்பாட்டோட நாலு பச்சை மிளகாவும் அனுப்பின? என்றான்

‘ஐயோ மாட்டினேனா.. என தவித்தாள்.

“எனக்குத் தெரியாதே என்றாள் இயல்பாக

“ஹே, உனக்குத் தெரியாம பொன்னி சாப்பாடு அனுப்பமாட்டாக என்றான்

“இல்ல, வந்து.... அது.... நான் அவங்ககிட்ட வெருமன தமாஷுக்கு சொன்னேன்.... அவங்க என்னடான்னா... என நிறுத்தினாள்.

“என்னது தமாஷுக்கு என்று கேட்டான்

“ஒண்ணுமில்லைங்கறேன் என்றாள்.

“என்னமோ இருக்குங்கறேன், சொல்லுனா என்றான் அவனும் அவளைப்போல ராகம் இழுத்து.

“அதுக்கு முன்தினம், நீங்க ரஜ்ஜு னு கூப்பிட்டு என்னோட அழும்பு பண்ணினீங்க... அதுனால எனக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு.... இதென்ன இவரு திடீர்னு இப்படி எல்லாம் பேசுறாருன்னு ஒரே ஆத்திரமா இருந்தேனா, அந்த நேரம் பார்த்து, பொன்னியக்கா வந்து என்ன சமைக்கட்டும் என்ன அனுப்பட்டும்னு கேட்டாங்க. 

“நான் விளையாட்டுக்கு, என்னோட ஆத்திரத்தில, “ஹான் அனுப்புங்க பழைய சோறும் பச்சை மொளகாயும்னு
சொன்னேன். 

அவுக பாருங்க, ஆனாலும் குசும்பு, அப்படியே அனுப்பீட்டாக. எனக்குத் தெரியவே தெரியாது.... இந்நிக்கிதான் காலையில கந்தன் வந்து எதுக்கு பச்சை மிளகான்னு கேட்டப்போ தெரிஞ்சுது.... சாரி
என்றாள் அவனிடம் தயவாக

அவன், அதுவரை நமுட்டு சிரிப்புடன் அவளையே பார்த்திருந்தவன், அவளது ஐயோ பாவம் முகம் கண்டு பெரிதாக சிரித்துவிட்டான்.

“ஐயோ, என்ன இது, மெதுவாவே சிரிக்கத் தெரியாதா.... ஆளுங்க வேல பார்க்குறாங்க, எல்லாம் நம்மளயே பார்க்கிறாங்க பாருங்க எனச் செல்லமாக கடிந்து கொண்டாள்.

“இதென்ன வம்பா இருக்கே, சிரிக்கக் கூடவா கூடாது என்றான் மீண்டும் சிரித்து. ‘இவரோட பெரிய வம்பு என நினைத்துக்கொண்டே வெருசாக உள்ளே சென்றுவிட்டாள்.

சளசளவென பேசியபடி வேலையாட்கள் கொக்கி கத்தி மாட்டிய கழி கொம்பினால் மாங்காய்களை அறுத்தி போட்டுக்கொண்டு இருந்தனர். மின்னல் வேகத்தில் காய்கள் மலைபோல குவிந்த வண்ணம் இருந்தன.

அதைக் காண அவளுக்கு எச்சில் ஊறியது. மெல்ல குனிந்து ஒரு சின்ன மாங்காயை எடுத்து முந்தானையில் துடைத்து மெல்ல கடித்தாள்.

அது புளிப்பு ரகம். ஸ்ஸ் என புளிப்பில் வாய் கூச கண் சுருக்கினாள்.

“ஆமா, இந்தக் புளிப்புக்காய் பிடிக்க இன்னும் சில காலம் போகணும்.... இப்போ பிடிக்காதுதான் என்றான் காதோரம் ரகசியம் போல.

அதிர்ந்து திரும்பினாள்.... பக்கத்தில் அவன் முகம்.... ஒன்றும் அறியாதவன் போல நமுட்டுச் சிரிப்புடன் அவன் அகன்றுவிட்டான். அவளுக்கு குப்பென்று சிவந்து போனது.

“என்ன சின்னம்மா, அது புளிப்பு காயாச்சுதுங்களே..... அதோ, அந்தால இருக்கிற மரத்தோட காயச் சாப்பிடுங்க..... இனிப்பா இருக்கும்..... அதான் நல்ல ருசி.... என்றான் ஆள் ஒருவன். அவள் மெல்ல அந்தப்பக்கம் நகர்ந்தாள்.

அவன், அங்கே ஒரு மரத்தில் அமர்ந்து, அந்த ஒரு மாங்காயை கடித்து ருசித்துக் கொண்டு இருந்தான்.

அவள் அருகே சென்றதும், “வேணுமா? என அந்தக் காயை நீட்டினான்.

‘அவன் கடித்த காய். அதை தான் உண்பதா? என அவள் அதிர்ந்து போனாள்.

“ஏன், நான் எச்சில் பண்ணீட்டேன்னு யோசிக்கறியா? என்றான்.

“ஒரு பக்கமா தான் கடிச்சிருக்கேன்..... காய் மிகவும் ருசியா இருக்கு... இந்தப்பக்கமா சாப்பிடு என நீட்டினான்.

அவள் தயங்கினாள்.
வாங்காமல் வேறே பார்த்தாள்.

“ஏன், நான் தந்ததை சாப்பிட்டால் ஆகாதா? என முரண்டினான்.

அதை அங்கே மரக்கிளையின் மேல் வைத்துவிட்டு அகன்றுவிட்டான். கோவம் என அறிந்தாள். ஆனால் என்ன செய்வாள்.... மனம் தடுமாறியது.... யாரேனும் பார்க்கிறார்களா என சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள்.

இல்லை எனக்கண்டு அந்தக் காயை எடுத்து மெல்ல கடித்தாள். அணில் கடித்த மாம்பழம் போல இந்தப் பச்சை காயுமே அவ்வளவு ருசியாக இனித்தது.... நாவில் நீர் ஊறச் செய்தது. கன்னம் சிவந்தது.

“ம்ம்ம், இப்போ மட்டும் இனிக்குதோ? என்றான் பின்னோடு நின்று

‘இவன் என்ன மாயாவியா, எப்படி வருகிறான், எங்கிருந்து வருகிறான், என்றே தெரிவதில்லை..... ஆனால் சமயத்தில் சரியாக வந்து எதையோ கிசுகிசுக்கிறான்
என சிலிர்த்துக்கொண்டாள்.

அவசரமாக கையை மறைத்தாள்.

“நான், நீ திங்கறத பார்த்துட்டேன்..... தைர்யமா தின்னு என்றான் நகைத்தபடி. அவளுக்கு மேலும் வெட்கமாகியது.

கண் இமைக்கும் நேரத்தில் இருள் சூழ்ந்த அந்த மரத்தின் பின்னே அவளை இழுத்து, இடுப்பில் கை அணைத்து இறுக்கி மாங்காயையும் அவளையும் சேர்த்து ருசி பார்த்து நொடியில் விலகினான்.
அவள் இன்னது நடந்தது என தன்னிலை உணரும் முன்பே அவன் விலகி நடந்திருந்தான்.

விதிர்விதிர்த்து, இதயம் படபடக்க, முகம் சிவந்து காதும் கன்னமும் சூடாகி வியர்த்து நின்றாள் அந்த பேதை. அவள் வாழ்வின் முதல் முத்தம் அவளை அப்படி தடுமாற வைத்தது.

கொஞ்சம் கோவமும் வந்தது, ‘என்ன தெகிரியம், இத்தனை ஆளுக வேல பாக்குராக, யாராச்சும் பார்த்திருந்தா...?’ என முரண்டியது.

‘அது அவனுக்கு தெரியாதா... உன் மானம், பெருமைக்கு அவன் உடமைபட்டவன் பொறுப்பாளி என அறிந்துதானே அவனது ஒவ்வொரு பேச்சும் செயலும் இருந்தது, உணர்த்தியது...?’ என சிவந்த மனது பதிலளித்தது.

அவனை கண்எட்டி பார்க்க, அங்கிருந்து ஒரு குறுநகையோடு அவளை திரும்பி பார்த்தபடி அவன் உல்லாசமாக கைவீசி நடந்து போவது கண்டது. அரக்கன் என திட்டிகொண்டாள்.

கால் தடுமாறியது. அங்கே வேலை சரியாக நடக்கிறது என்பதை அறிந்து வெளி வேலைகளை பார்க்க போகலாம் என மெல்ல வெளியே வந்தாள்.

அதை கண்டு அவனும் அவளை தொடர்ந்தான்.

“எங்கே வயலுக்கா? என்றான்.

அவனை ஏறெடுத்து பார்க்கவும் வெட்கமாக இருக்க, ஆம் என தலையை மட்டும் அசைத்தாள்.

“ஆனாலும் மோசம்” என்றாள் முணுமுணுப்பாக.

“ஏன், நான் என்ன செய்தேன்... அத்தனை ருசி அதான்...” என்றான் உல்லாசமாக நகைத்தபடி.
அவள் மேலும் சிவந்து போனாள்.

“ஆமா, நேத்து ராத்திரி ஏன் கூப்பிட்டேன்னு நீ இன்னும் சொல்லலியே? என்று கிண்டினான்.

அவள் பதிலேதும் சொல்லாமல் நடக்க, “ரஜ்ஜு என்றான்.

“அப்படி கூப்பிடாதீக... எனக்கு என்னமோ போல இருக்கு என்றாள் அவனை பார்க்காமலேயே.

“ஏன் பிடிக்கலையா? என்றான்.

“இல்ல, அப்படி இல்ல என்றாள் அவசரமாக.

அவன் அவ்வளவு ஆசையுடன் செல்லமாக அழைப்பது அவளுக்கு பிடிக்காமல் கூட போகுமா என்ன.

“அப்போ பின்னே? என்றான்.

“இல்ல வேண்டாம் என்றாள்.

“அதான் ஏன்னு சொல்லு, நான் அழைக்கல என்றான் பிடிவாதமாக.

“உள்ளே போய் என்னமோ செய்யுது என்றாள் வெட்கி தலை குனிந்து.

“ம்ம்ம் அப்படியா, என்ன செய்யுது? என கிளறினான்

“ப்ளீஸ்
என்றாள்.

“எனக்கு உன்ன அப்படி கூப்பிடத்தான் பிடிச்சிருக்கு என்றான் மந்தகாசமாக சிரித்தபடி.

சிறிது நேரத்தில் அனைத்தையும் பார்த்து முடித்து அவனிடம் ஒரு தலை அசைப்பில் விடைபெற்று தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

இள மாலையில் அவசரமாக நந்தவனத்திற்குச் சென்றாள். 

“அதுக்குள்ள வந்துட்டியா, வா வா...
என அவள் தோழிகள் ஆசையாக தலை அசைத்து அவளை வரவேற்றனர்.

“ஆமாடி மல்லி..... மனசு ஒரு நிலையில் இல்ல..... என்னென்னமோ பதட்டம், நினைப்பு, உங்க கிட்ட பகிர்ந்துகிட்டாதானே எனக்கு நிம்மதி.... அதான் ஓடிவந்துட்டேன் என ஆசையாக தடவி கொடுத்தாள்.

“எங்ககிட்ட சொல்லமாட்டியாக்கும் கீச் கீச்... டூ... போ என்றன கிளி புறா குருவி குஞ்சுகள். 

“அச்சோடா, உங்க கிட்ட சொல்லாமையா?
என்று அவைகளுடன் கொஞ்சியபடியே தீனி வைத்தாள்.

“என்னது, நேத்து போட்டத இன்னும் சாப்பிடலையா.... ஏன் மிச்சம் இருக்கு? என கண்டித்தாள். 

“நானில்ல... நீயில்லை...
என கீச் கீச் என கத்தி தீர்த்தன. 

“சரி சரி, சண்டை போடாதீக.... இன்னிக்கி மிச்சம் வைக்காம சாப்பிடணும் தெரியுதா?
என விரல் காட்டி மிரட்டினாள். படபடவென சிறகினை அடித்துக்கொண்டு குதூகலமாக சரி என்றன பறவைகள்.

“சேதி தெரியுமா டீ ஜாதி என ஜாதி பந்தல் கீழ் சென்று அமர்ந்தாள்.

“இப்போ எல்லாம் ரஜ்ஜூனு சொல்லி கூப்பிட்டுறாரு..... இன்னிக்கி மாந்தோப்பில வெச்சு என்னாச்சு தெரியுமா..” என நாணி சிவந்து விவரித்தாள்... “எனக்கு ஒரே படபடப்பா போயிடுச்சு தெரியுமா.... என்றாள்.

“ஆமா, அது யாரு அவரு? என்றது முல்லை பந்தல் காற்றிலாடி கேலியாக.

“அவருதான் என்றாள் கெத்தாக, “கேளுடின்னா என முகச்சிவப்பு ஏறி.

“என்ன, இந்த மனுஷன் திடீர்னு இப்படி எல்லாம் கொஞ்சறாரு குழையறாரு.... என்ன நெனப்பு மனசில..... ஆனாலும் என்ன தெகிரியம்? என்று புலம்பினாள் செல்லமாக. 

“ஆனாலும் அரக்கன்..... என் மனச நல்லா புரிஞ்சு வெச்சிருக்காரு.... கிண்டல் பண்ணினாரு தெரியுமா....
என்று முறையிட்டாள்.

“அதுக்கு நீ என்ன சொன்னே? என்றது ஜாதிக்கொடி காற்றில் ஆடியபடி.

“என்னத்த சொல்றது..... பேச நாவே எழும்பல எனக்கு..... ஒரே படபடப்பாப் போச்சு.... அவர்கிட்ட போய் நான் என்னத்தடீ பேசுவேன்....? 

“இதெல்லாம் சரியா வருமான்னு கேட்டா, எனக்குத் தெரியும்.... சரியா வரவைப்பேன்னு சொல்றாரு....

“ஏண்டீ ஜாதி, மல்லி, நீங்களாச்சும் கொஞ்சம் அவர்கிட்ட இதைப்பத்தி பேசக்கூடாதா..... என் மனசு தவிக்கிற தவிப்ப கொஞ்சம் எடுத்து சொல்லுங்கடீ..... என்னை இப்படி படுத்த வேணாம்னு சொல்லுங்கடீ என்றாள்.

இதையெல்லாம் மெல்லிய முணுமுணுப்பாக அவள் பேசிக்கொண்டே வளைய வர, அவை அனைத்தையும் அப்போதே உள்ளே நிழைந்த மருது கேட்டுகொண்டே தான் இருந்தான். ஹோ, தோழிகளுடன் முறையிட்டு ஆகுதாக்கும் என சிரித்துக் கொண்டான்.

‘என்ன ஒரு அற்புதமான பிறவி இவள்..... இயற்கையை எல்லோரும் தாயாக நினைப்பார்கள், நானும்தான். ஆனால் இவளோ தோழியாக பார்க்கிறாள், பேசுகிறாள் பழகுகிறாள்.... எத்தனை மென்மையான மனது இவளுக்கு.

‘அந்த படுபாவிக்கு என்ன வக்கு இருக்குன்னு இந்தத் தங்கத்த கட்டி குடுத்தாங்களோ.... போகட்டும், என்னமோ எப்படியோ ஒழிஞ்சான்.... இனி நான் என் செல்லத்த கண்ணுக்குள்ள வெச்சுக்குவேன்.... இங்கேயே குடித்தனம் செய்ய வெச்சா என் தங்கத்துக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குமில்ல... என எண்ணிக்கொண்டான்.

“சரீடீ, உங்கத்தான் வந்திரப் போறாரு.... நான் கிளம்பறேன் என பூக்களை பறித்துக்கொண்டு கிளம்பினாள்.

‘உங்கத்தானா’.... அப்படி என்றால் அவளுக்கும் நான் அத்தான் என்றுதானே அர்த்தம்... அப்படியானால்...? என இப்போது முகம் சிவப்பது அவன் முறை ஆயிற்று.

ஓசை படாமல் வீட்டினுள் சென்றுவிட்டான்.  அவள் கூறியது இனித்தது.


‘இன்று இரவும் போன் செய்தால் என்ன என மனம் அசைபோட ஆரம்பித்தது.

2 comments:

  1. Super romantic. Written very well. How u could write so nicely. Fantastic

    ReplyDelete
  2. Heyyy lovely friendship and interaction with the flowers, creepers.! Poondhu viLaiyaadareaL pOngo!

    ReplyDelete