Thursday 12 July 2018

NENJIL KODI MINNAL - 9

“அவ, அங்க அவங்கப்பாரு வீட்டில இருக்கா, நாம வீட்டு மாப்பிள்ளையா போனா என்ன, அங்கேயே சதா விழுந்து கிடந்தா, நம்ம மருவாத என்னாகும் மாமோய்.... அதான், நான் அப்பப்போ இங்கே வந்துடுவேன் என்றான்.

“அதுவும் செரிதான், ஆனா மருமவளையும் கூட்டி வந்து இங்கே நாலு நாள் அங்கன நாலு நாளுன்னு குடித்தனம் பண்ணினா தானே மதிப்பு. 

“அது போகட்டும், நம்ம மவ கல்யாணத்துக்கு ஜோடியா முன்னாடியே வந்து எடுத்து நடத்தி கொடுக்கோணும். கண்டிப்பாக சொல்லிப்புட்டேன் ஆமா
என செல்லமாக மிரட்டிவிட்டு வேறு சென்றார்.

வேண்டா வெறுப்பாக போயே ஆக வேண்டும் அதுவும் ராஜியுடன் என்ற நிலை.
நெருங்கிய சொந்தம், தன் சகவயசு பட்டாளம் ஒன்றாகக் கூடும் வேளை.... சீட்டாட்டம், பாரின் சரக்கு, கேளிக்கை என அவனுக்கும் ஆசையாகத்தான் இருந்தது.
‘இன்றோடு முடிந்திருக்குமே.... அவளை ஆள்வது எப்போது..., திருமணத்திற்கு அழைத்துப் போவது போல போய், அங்கிருந்து நேராக தன் வீட்டிற்கு அழைத்து வந்து, அவளை கதற கதற ஆண்டு முடித்தால்தான் தன் ஆத்திரம் தீரும்
என திட்டம் போட்டான்.

அதன்படி நான்காம் நாள் காலையில் ராஜியின் வீட்டிற்குச் சென்றான்.
திருமண பத்திரிகையை முன் வைத்தான்.

“நம்ம நெருங்கிய சொந்தத்துல கல்யாணம்ங்க மாமா. நான் ராஜியோட ஜோடியா போகத்தான் வேணும், இல்லேனா அது ஒரு பேச்சா நின்னுடும்....
“அசலுக்கே, என்னடா, வீட்டோட மாப்ளையா போயிட்டியேனு என் கூட்டாளிக எல்லாம் என்னைய ஒரு மாதிரியா பேசறானுவ.... இதுக்கு போகலைனா ரொம்ப கேலியா போயிரும்..... ராஜி தயார் ஆகிட்டா அழைச்சுட்டு போலாம்னு யோசனை
என்றான் பவ்யமாக.

“ஆஹா பேஷா மாப்ள.... அதெல்லாம் கண்டிப்பாக போகத்தான் வேணும்.... அதெல்லாம் விட்டுகுடுத்துட முடியுமா.... நாளக்கி பேச்சா நின்னுடாது. ராஜியும்தான், தன் புகுந்த வீட்டு மனுஷங்கள பத்தி தெரிஞ்சுக்க இது நல்ல சந்தர்ப்பம் இல்ல.

“ராஜி, போம்மா. எல்லாம் ரெடி பண்ணிக்க..... மாப்ள கூட இப்போவே கிளம்பு.... நல்லபடி போயிட்டு வாங்க என்றார் கண்டிப்பாக.

“ஐயோ இவனுடனா, இவன் சொந்தங்கள் வீட்டுக்கா...? என யோசித்தாள்.

‘சரி, கல்யாண வீட்டில் நூறு பேர் மத்தியில் இவனால் ஒண்ணும் செய்ய முடியாதுதான். சரி போய்த்தான் பார்ப்போமே என அவளும் கிளம்பினாள்.

“வானம், மப்பும் மந்தாரமுமா இருக்குது... மாப்ளயோட வண்டியிலேயே போய்டுங்க, என்ன நான் சொல்றது மாப்ள என்றார்.
“ஆகட்டும் மாமா
என்றான்.

இவர்கள் கிளம்பும் முன்னரே இடியும் மின்னலுமாக வானம் பொத்துக்கொண்டு கொட்டத் துவங்கியது.
‘ஐயோ இதுவேறா என்று பயந்தபடிதான் சென்றாள்.

“இந்த மழையில கல்யாணம் எப்படி? என்று மெல்ல கேட்டாள்.
“நாம என்ன கல்யாணத்த முன்ன நின்னு நடத்தவா போறோம் என்றான் யதார்த்தமாக.
“பின்னே? என்றாள்.

“அதாவது ராஜி கண்ணு, கல்யாணத்துக்குதான் போறோம் ஆனா, நாமளா நடத்தி வெக்கப் போறோம்... அதுக்கெல்லாம் பெரியவங்க இருக்காங்க, தகுந்த  ஏற்பாடு செஞ்சிருப்பாங்கதானே என இளித்தான்.

‘இவன் என்ன இப்படி இளிக்கிறானே, வேறு ஏதானும் திட்டம் போட்டிருப்பானோ என உள்ளூர பயம் வந்தது.
நேரம் செல்ல செல்ல மழை வலுத்தது. 

‘ஐயோ, நாள் கெட்ட நாளில் இப்படி மழை வலுக்கிறதே.... அறுவடை முடிந்த நேரமாகிற்றே, நெல்மணிகள் என்னவாகும் எனக் கவலை உண்டானது. ‘அப்பா ஒண்டியாக திண்டாடுவாரே, கதிர் கூட ஊரிலில்லையே?
என கவலைப்பட்டாள்.

“அத்தான், ஒரே மழையா இருக்கே, அறுவடை முடிஞ்ச நேரம் வேற.... கதிர் வேற ஊரில் இல்லை.... என இழுத்தாள்.

“அதுக்கு இப்போ என்ன பன்ணணுங்கற? என்றான்

“இல்ல, நாம வேணா திரும்பி போய் அங்கே நிலவரம் எப்படி அப்பாக்கு உதவி ஏதானும் வேணுமான்னு பார்த்துட்டு பிறகு கல்யாணத்துக்கு போலாமா?
என்றாள்.

“கொழுப்பாடீ. அங்கிட்டு உங்கப்பாருக்கு ஒதவத்தான் ஊர்கொண்ட ஜனமும் இருக்குதில்லா, பொறவு என்ன...... நீ போய்தான் அங்க ஆகணுங்கறது எதுவும் இல்ல.... மூடிகிட்டு வாடி.... வந்துட்டா. ஒலகத்தில இல்லாத பொண்ண பெத்துட்டாரு உங்கப்பாரு. நேத்துவரே நீங்கதான் எல்லாம் பாத்தீகளோ? என்றான் கிண்டலாக.

அறுவடை நேரமானால் நிலத்தை விட்டு அங்கிங்கு நகராமல் அவள் வேலை செய்வோருக்கு உற்ற துணையாக அங்கேயே நிற்பதும், அவர்களை மேய்ச்சுக் கட்டுவதும், அன்புடன் தட்டி குடுத்து வேலை வாங்குவதும் அவனென்ன அறிவான். தன் சொகுசு வாழக்கையை விட்டு என்றேனும் வெளியில் காலை வைத்து நிலத்தில் இறங்கி உழுதிருந்தால் அல்லவா நிலத்தின் அருமையும் அறுவடையின் தன்மையும் அவனுக்கு புரியும் என என்ணிக்கொண்டாள்.

உள்ளே கலக்கமாக இருந்தது.
திருமண வீட்டை அடைந்தனர்.

“வாங்க, வா வா புது மருமவளே.... என்ன ஒரே ராங்கியாமா, எங்க வீட்டு புள்ளைய விட்டுட்டு எப்போ பாரு உங்கப்பாரு வீட்டிலேயேதான் கிடக்குறியாமா? என ஆளுக்காள் கிண்டலடித்தனர். புன்சிரிப்புடன் பதிலேதும் பேசாது சமாளித்தாள்.

“ஆனாலும் அமுக்கு, ஆளு அழுத்தம் என தன் பின்னே பேசிக்கொண்டது ராஜி காதில் விழுந்தது.
‘எங்கேடா இங்கே வந்து மாட்டிக்கொண்டோமே, எப்போது கிளம்புவோம் என பரிதவித்தாள். மழை வேறு வானம் பொத்துக்கொண்டதுபோல கொட்டி தீர்த்தது.

“என்னடி, கல்யாண பொண்ணு எத்தன மூட்ட அரிசிய தின்னு தீர்த்தாளாம்.... இப்படி கொட்டுது மழை... மாப்ள வூட்டுக்காரங்கள்ளாம் எப்படி வந்து சேரப்போறாங்களோ...? என ஆளாளுக்கு கல்யாணப்பெண்ணை வைது தீர்த்தனர்.

அது பாவம் அசலே பயந்து கலங்கி கிடந்தது.

அவளிடம் சென்று தேற்றி அவளுக்கு அலங்காரம் செய்வதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள் ராஜி.

அக்கா என அவளும் ஆசையுடன் அவளிடம் ஒட்டிக்கொண்டாள்.

மாப்பிள்ளை வீட்டவர் வந்து சேர, திருமண பட்டு குடுக்கப்பட்டது. நகை போட்டனர். மழையில் பெண் அழைப்பு மாப்பிள்ளை அழைப்பு மூடிய காரில்தான் நடத்த முடியும். முறைப்படி, கோவில் வரையிலானும் சென்று வந்துவிட வேண்டும் என ஆளுக்கொரு காரில் என எல்லோரும் கிளம்பினர்.

கனகுவும் அவன் சகாக்களும் சீட்டாட்டத்தில் மும்முரமாக காசு வைத்து ஆடுவதில் ஈடுபட்டிருந்தனர்.

“நாங்க வரல மாமோய், கோவிலுக்கு சடங்குக்காகதானே... நீங்க போங்க என அனுப்பி வைத்துவிட்டான்.

இருட்டிய மழை இரவில் அவள் கோவிலுக்கு செல்ல விரும்பாமல் வாசப்பக்கம் மழையை வேடிக்கை பார்த்தபடி நின்றாள். இன்னும் சில வயதானோரும் கூட மழையில் அலைய முடியாமல் அங்கேதான் அமர்ந்திருந்தனர்.

அப்போது கந்தன் சைக்கிளில் அங்கு வந்து சேர்ந்தான். அவனை வாசலிலேயே கண்டவள், “கந்தா, நீயா, இங்கே எங்கே, என்ன சேதி.... அப்பாவுக்கு ஒண்ணும் இல்லியே? என பதறினாள்.

“பெரியய்யாவுக்கு ஒண்ணுமில்லீங்க சின்னம்மா, ஆனா, நெலம அங்க ரொம்ப மோசமுங்க.... அணக்கட்டு ஓடைப்பெடுக்கும்போல இருக்குதுங்க.... விரிசல் ஏற்பட்டு லேசா நீர் ஊறுதுங்க சின்னம்மா.... கதிர் ஐயாவும் இல்லீங்களா, பெரிசும் பெரியய்யாவும் தனியா இருட்டில மழையில அங்கிட்டும் இங்கிட்டும் அலைஞ்சு போய்டாங்க.... அதான் அவங்ககிட்ட கூட சொல்லாம நான் உங்ககிட்ட ஓடியாந்தேனுங்க.... நீங்களும் மாப்ள ஐயாவும் வந்தா ரொம்ப உபகாரமா இருக்குமுங்க என்றான்.

சொட்ட சொட்ட நனைந்தபடி தன்னைத் தேடி அவன் தீனக்குரல் எழுப்ப வந்து நிற்பதை பார்த்து அவள் தாயுள்ளம் பொங்கியது.

“அப்படியா சேதி.... நான் மழைய பார்த்ததுமே நெனச்சேன், அதேபோல ஆச்சுதே.... சரி இரு, தோ வரேன். நீ தலைய துவட்டு என கூறி உள்ளே ஓடினாள்.

அவன் சீட்டாடும் அறை வாசலுக்குச் சென்று “அத்தான் என குரல் குடுத்தாள்.
சீட்டு சரியாக வராமல் அவனே ஆத்திரத்தில் இருந்தான். கையில் பணம் வேறு கரைந்தது. 

“என்ன?
என்றான் எழுந்து வராமல். “ஒரு நிமிஷம் என அழைத்தாள்.
“ரோதனடா சாமி என அலுப்புடன் எழுந்து வந்தான்.
“என்ன? என்றான்.

“இல்ல, கந்தன் வந்திருக்கான்.... அங்க ஊர்ல நிலைமை ரொம்ப மோசமா இருக்குதாம்.... அணைக்கட்டு ஓடைப்பெடுக்கும்போல இருக்குதாம்.... அப்பா ஒண்டியா திண்டாடுறாரு, நாம ரெண்டு பேரும் போனா ரொம்ப ஒதவியா இருக்கும்.... வாங்க, மாமாகிட்ட தகவல் சொல்லீட்டு  கிளம்பலாம் என்றாள்.

“இன்னாது கிளம்பறதா, கல்யாண வீட்டுக்கு வந்திருக்கோம்டீ, உனக்கு இப்போ இது புகுந்த வீடு..... இங்கன ஒரு விசேஷம்னு வந்த இடத்தில, எப்ப பாரு என்னடி உன்னோட உங்கப்பாரு ரோதன.... அங்க அவ்வளோ ஆளுங்க இருக்காங்க எல்லாம் பார்த்துப்பாங்க.... நாம போகல, அவ்ளோதான்..... போய் கல்யாண வேலை எதாச்சும் இருந்தா போய் செய்யி, போ உள்ள என்று இரைந்தான்.

“வந்துட்டா, அப்பா குப்பான்னுகிட்டு என்று போய் அமர்ந்துவிட்டான்.
“நான் மட்டுமானும் போறேன் அத்தான் என்று குரல் கொடுத்தாள்.

“த பாரு, ஆத்திரமூட்டாத அம்புட்டுதேன் சொல்லீபுட்டேன்..... முடியாது. நீ போய், பொட்ட புள்ள, அங்கிட்டு கிழிக்க போறது ஒண்ணுமில்லா.... உள்ள போன்னு சொன்னா போ என ஆட்டத்தில் மும்மரமானான்.

அவன் சொல்லை மீறிச் செல்வதா, அல்லது இங்கேயே கையை மடியில் வைத்து அமர்ந்து கவலைப் படுவதா என மனப்போராட்டத்தில் ஆழ்ந்தாள்.

வாசப்பக்கம் வந்தாள். ஈராமான தன் மேல்துண்டினாலேயே ஈரம் சொட்டும் தலையை துவட்டியபடி நின்ற கந்தனை பார்த்து அங்கே தன் ஊரில் ஒவ்வொரு விவசாயியும் அந்த நிலையில்தான் தங்கள் சாகுபடியை காப்பாற்றிக்கொள்ள அல்லல் படுவர் என நினைத்து வேதனை மிகுந்தது.

காரில் எட்டி பார்த்தாள். சாவி காரிலேயே இருந்தது. நல்லவேளை என்று அவன் அறை வாசலில் சென்றாள்.

“அத்தான், நான் கிளம்பறேன்.... நீங்க வரமுடியாட்டி பரவாயில்ல... நான் போய்த்தான் ஆகணும், என்ன மன்னிச்சுடுங்க என கூறிவிட்டு அவனது பதிலுக்கு காத்திராமல் வாசபக்கம் ஓடி வந்தாள்.

காரில் ஏறி, “கந்தா, நீயும் வா வண்டியில ஏறு.... சைக்கிள நாளக்கி எடுத்துக்கலாம் என்றாள். 

“இல்லைங்க சின்னம்மா, இந்த மழையில ரோடு மேடும் பள்ளமுமா இருக்குதுங்க நீங்க வண்டி ஓட்டறது உசிதமில்லீங்க.... மாப்ள ஐயா வரலீங்களா?
என்றான்.

“இல்ல கந்தா, அவர் வர முடியாது... நாம கிளம்பலாம், அங்க என்ன நிலைமையோ என்றாள்.

“அப்போ, நான் முன்னே சைக்கிள்ல ரோடு பார்த்து போறேனுங்க.... நீங்க நான் போற பாதையிலேயே பின்னாடியே வந்துருங்க.... ஜாக்ரத சின்னம்மா ஒரே கும்மிருட்டுங்கோ என்றான்.

“ஐயோ நீ மறுபடி நினைஞ்சு ஒடம்புக்கு வந்துடப் போகுது கந்தா என கவலைப்பட்டாள். 

“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க, நீங்க வாங்க
என சைக்கிளில் ஏறினான்.

“என்னடா மாப்ள, நீ அவ்வளோ சொல்ற, எங்கப்பன் எங்க ஊருன்னுட்டு உன்ன கூட மதிக்காம போகிறா உம் பொஞ்சாதி.... ஒண்ணும் சரியில்லியே...? என ஏற்றி விட்டனர் அவன் சகாக்கள்.

“ஹ்ம்ம் ஹ்ம்ம் நடக்கட்டும், அங்க போய் என்னத்த கிழிக்க போறா.... அப்பா அப்பான்னு அவர் துண்ட புடிச்சுகிட்டு அலைவா.... போகட்டும். அவளுக்கு நாள காலையில இங்க திருமணம் முடிஞ்சு போய் வெச்சுக்கறேன் கச்சேரிய என உறுமினான். 

ஆனாலும் இந்த மழைக்காலத்தில், கும்மிருட்டில் அவள் காரில் ஏறி போயிருப்பாள் என அவன் ஒரு போதும் நினைத்திருக்கவில்லை. அவள் ஒட்டிச்சென்றதை அவன் காணவும் இல்லை.

கரடு முரடான பாதையில் கும்மிருட்டில் முன்னேச்சரிகையுடனும் ஆனால் தகுந்த வேகத்துடனும் காரை செலுத்திச் சென்றாள் ராஜி.

ஊரை அடைய, அங்கே மோசமான நிலை என கண்டாள். அணை உடைப்புதான் விரிசலாக ஆரம்பித்திருந்தது.

பள்ளிக்கூடத்தைத் திறந்து அங்கே, தண்ணீரில் தத்தளித்த மக்களை மாற்றி இருக்க ஏற்பாடு செய்தாள்.

“அப்பா எங்கிருக்காரு கந்தா? என கேட்டாள்.

“அங்க நெற்போர் கிட்ட இருக்காருங்க.... கோடவுனுக்கு மாத்த ஏற்பாடு நடக்குதுங்க..... இப்படி சடார்னு சொல்லாம இந்த பேய் மழை வரும்னு யாருங்க கண்டா என புலம்பினான் கந்தன்.

“சரி சரி, நானும் அங்க போறேன்.... நீ இங்க பார்த்துக்க என்று அவனை குடிசை பகுதியில் இருத்திவிட்டு ஓடினாள்.

உடனடியாக கலெக்டருக்கும் போலீசுக்கும் பொது மருத்துவமனைக்கும் போனில் தகவல் சொல்லி, அப்போது என்ன நிலைமை, அவர்கள் தரப்பிலிருந்து என்னென்ன ஏற்பாடுகள் நடந்துள்ளன என்று கேட்டு தெரிந்துகொண்டாள்.

புடவையை இழுத்து மேலே கொசுவத்தை சொருகிக்கொண்டு நெற்போர் உள்ள இடத்தினை நோக்கி செல்ல, அங்கே, ஆட்கள் அவசரமாக அறுவடையான நெல்மணிகளை கோடவுனுக்கு மாற்ற ஓடிக்கொண்டிருப்பதை கண்டாள். இதற்கு மத்தியில், அணைக்கட்டினை பார்வையிடச் சென்றிருந்த ராஜலிங்கம் வந்து இவளை கண்டார்.

“என்ன ராஜி கண்ணு, நீ தனியாவா வந்த.... எப்படி வந்த கார ஓட்டிகிட்டு இந்த மழையில... தனியாவா, ஏன் மாப்ள கூட வரல....

ஐயோ, உனக்கு எதாச்சும் ஆகி இருந்தா.... இப்படி கூட செய்யலாமா..... மாப்ள கிட்ட சொல்லீட்டு தானே வந்தே? என ஆயிரம் கேள்வி கேட்டார். 

“ஆனா தாயீ, நீ வந்தது நல்லதாபோச்சு. நீதான் கலெக்டர் ஐயாவுக்கு போன் போட்டியா?
என்றார்.

“ஆமாபா, அங்க நிலை கட்டுக்கு வந்துகிட்டிருக்குனு, மேலும் ஆட்கள் ஏற்பாடாகி இருக்குன்னு சொன்னாரேப்பா... என்றாள்.

“ஆமங்கண்ணு, தகுந்த ஆளுங்கள இறக்கி உடைப்பை செரிசெய்ய துடங்கிட்டாவ, அணைக்கட்டு காபந்தாகீடும் சீக்கிரமே.... நல்லவேளை, முழுசா உடைப்பெடுக்கலை.... நான் அத பார்த்துட்டுதான் இங்க ஓடியாந்தேன்” என்றார்.


“சரிப்பா, குடிசை பகுதியில, நிறைய பேருக்கு மழையினால வீடு போச்சு.... அவங்கள கந்தன வெச்சு, பள்ளிக்கோடத்தில தங்க ஏற்பாடு பண்ணி இருக்கேம்பா.... அவங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி பண்ணனும், நான் வரேன் என பறந்தாள்.

2 comments:

  1. What a strong personality is she! Hats off to her upbringing!!

    ReplyDelete
  2. Wat a.lady is raji I am proud of her

    ReplyDelete