Saturday 28 July 2018

NENJIL KODI MINNAL - 25

வீட்டிற்குச் சென்ற ராஜி அவனுக்கு என்ன பிடிக்கும் என மீனாக்ஷி அம்மாவினை கேட்டு தெரிந்து கொண்டவள், அதையே இன்று சமைக்கவும் துவங்கினாள்.

“எதுக்கும்மா கேக்குறே? என்றாள் கிழவி. “ஒண்ணுமில்லியே பெரியம்மா... சும்மாதான்.... நமக்காவ வந்திருக்காவ, வாய்க்கு ருசியா சமைச்சு போட்டாதானே நமக்கு பெரும என்று சமாளித்தாள்.

இனி கொஞ்சம் ஜாக்ரதையாகவே நடந்துகொள்ள வேண்டும். வாயும் காதும் கண்ணும் கொஞ்சம் மறைமுகமாக பேசிப் பழக வேண்டும் என தன்னை திருத்திக்கொண்டாள்.

பொன்னிக்கு சிரிப்பு.

சமைத்து ருசி பார்த்தாள். பக்குவமாக வந்திருந்தது.... டிபனில் அடைத்து, “சூடாக இருக்கும்போதே சாப்பிட சொல்லு கந்தா என அனுப்பி வைத்தாள்.

முன்னேயே வந்துவிட்டான் ஆகையால், அவன் டிபன் வந்ததும் அங்கேதான் இருந்தான். பத்திரிக்கை வாசித்துக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டு அவனது சாய்வு நாற்காலியில் வாசத் திண்ணை அருகே அமர்ந்திருந்தான்.

“சின்னைய்யா, சூடா சமைச்சு அனுப்பி இருக்காங்க சின்னம்மா. சூடா இருக்கறப்போவே சாப்பிட்டுட சொன்னாங்கைய்யா எனக் கூறி மேஜையின் மேல் வைத்துவிட்டு, தட்டு நீர் என வைத்துவிட்டு அவன் சிட்டாக பறந்துவிட்டான்.

“ஓஹோ, ஏதோ ஸ்பெஷலாக்கும்.... எனக்காக என் செல்லம் சமைச்சு, சூடா வேற சாப்பிடச் சொல்லி, அக்கறையாக அனுப்பி இருக்கிறாள் என ஆவலோட உள்ளே சென்றான்.

பசி இன்னும் எடுக்கவில்லை ஆனாலும், டிபனை திறக்க, கும்மென்ற மணம் வீசியது. நா ஊறியது. பணியாரமும் தக்காளி சட்டினியும் தேங்காய் சட்டினியும் நீர் மோரும் அனுப்பி இருந்தாள்.

“ம்ம்ம் அடி சக்க, இன்னிக்கி ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான் என அப்போதே தட்டில் போட்டுக்கொண்டு அமர்ந்தான். ஒவ்வொரு வாய் உணவையும் ரசித்து ருசித்து அமுதாக எண்ணி உண்டான்.

சாப்பிட சாப்பிட பசியை கிளறியது ருசி.... அனைத்தையும் விழுங்கியபின், ‘அதுசெரி, இப்படி தின்னா ஒடம்புக்கு பருமன் ஏறப்போகுது.... இவ பொஞ்சாதியா வந்துட்டா வாசக் கதவ மாத்தி இல்ல கட்டணும் போல இருக்கு... என வாய்விட்டு சிரித்துக்கொண்டான்.

வெளியே நிலாவொளி வீசியது. தென்றல் தீண்டிச் சென்றது.

“என்ன, ஜாதி, மல்லி, என்ன சொல்லீட்டு போறா உங்கக்கா.... ஒரே புகாராக்கும் எம்மேல...? என அவைகளை தீண்டினான். முல்லையை முகர்ந்தான்.

“ஆமா ஆமா என கீச்சிட்டன பறவைகள். 

“அப்படியா சேதி.... என்னவாம், நான் என்ன தப்பு செஞ்சேன்.... என் மனசில இருக்கிற ஆசைய சொன்னேன் அம்புட்டுதானே.... நிஜமான ஆசைய தானே சொன்னேன்
என்று முறையிட்டான்.

“கவலைப்படாதே, எல்லாம் நன்மையில் முடியும் என தலை அசைத்து பொல பொலவென பூக்களை கொட்டி வாழ்த்தியது பன்னீர்மரம். அதை கை நிறைய அள்ளி கை மாற்றி கை விளையாடினான்.

“ஆனாலும், என்னை விடவும் அவளுக்கு உங்க மேல தான் பிரியம் ஜாஸ்தி என்று பிணக்கம் கொண்டான்

“இருக்காதா பின்னே, நாங்க எல்லாம் அவ சிறுவயதுத் தோழிகள் இல்லியா.... நீ இப்போ வந்தவன் என ஓய்யாரமாக தலை சாய்த்து பார்த்தது புறா ஒன்று.

“அத்தா அத்தா என்றது பச்சைக் கிளி. 

“அடி என் கிளியே, உனக்கெப்பிடிடீ எம் பேரு சொல்ல வந்துது.... யாரு கத்து குடுத்தா..... ஆஹான், நானில்லாதப்போ உங்கக்கா வந்து கத்து குடுத்துட்டு போனாளா?
என்று சிரித்தான்.

“டீ பச்சக்கிளி, அவ பேரச் சொல்லு பாப்போம் என்று கூட்டினை வருடினான்.

“க்கா க்கா என்றது. ஹஹஹாஹ என வாய்விட்டு சிரித்தான்.

“சும்மா சொல்லக்கூடாது, அதான் அவ நந்தவனமே சொர்க்கம்னு கிடக்கறா போல.... உங்கள விட்டுப் பிரிய யாருக்கானும் மனசு வருமா என்றான் ஆசையுடன். கீகீகீ என்றன அனைவரும்.

அங்கே ராஜி உண்ண அமருகையில், ‘அவர் சாப்பிட்டாரோ என்னமோ, பிடித்ததோ, வயிறு நிறைந்ததோ இல்லையோ? என யோசனையில் ஆழ்ந்தாள். 

‘எல்லாம் சரியாதான் இருக்கும், நீ சாப்பிடுடீ
என தன்னையே அதட்டிக் கொண்டாள். ‘என்னம்மோ கட்டிக்கொண்டவள் போல என கடிந்து கொண்டாள்.

சாப்பிட்டு முடித்து, வாயிலில் எப்போதும் போல நடை பழகினாள்.

இன்னிக்கும் அழைப்பாரோ என ஆசை வெட்கமறியாமல் போனது.

ஒரு வேளை அழைத்திருந்தால், என உள்ளே ஓடினாள்... செல் போனை எடுத்து நூறுதரம் பார்த்துக்கொண்டாள். அதை தன் ஜாக்கெட்டில் மறைத்துக்கொண்டாள். 

‘சரியா போச்சு.... நான் என்ன இப்படி...? என தன்னை நொந்துகொண்டாள்.

‘இரவின் மடியில் பாட்டுகளை கேட்டபடி படுத்திருக்க, கைகள் கழுத்துச் செயினை உருட்டியபடி இருந்தது.

‘மல்லியிடம், உங்கத்தான் வந்துடப் போறாருன்னு சொன்னேனே... என வெட்கி சிவந்தாள். தலையணையில் முகம் புதைத்தாள்.

‘அத அந்த மனுஷன் கேட்டிருந்தா அவ்ளோதான் என இன்னமும் சிவந்தாள்.

எங்கேயோ செல் போன் அடித்தது.

“ஐயோ, இந்த மனுஷன் நிஜம்மாவே இன்னிக்கும் கூப்பிட்டுட்டாரு போலிருக்கே, எங்கே வெச்சேன் போன..? என தேடினாள். ஜாகெட்டில்தான் அடிக்கிறது என்பதை மறந்து.

‘ஐயோ காணுமே என தவித்தாள். தனக்குள்ளிருந்து மணி அடிப்பதை பின் உணர்ந்து எடுத்து அமுக்கினாள்.

மருதுதான்.

“ஹலோ என்றாள்.

“என்னவாம் இவ்வளோ நேரம் போனை எடுக்க? என்று சிணுங்கினான். 

“இல்ல, கைமறதியா எங்கியோ வெச்சுட்டு வேறே எங்கியோ தேடினேன், அதான்
என்றாள் பேச்செழாமல்.

“எங்கே வெச்சே? என்றான். அவள் எப்படிச் சொல்லுவாள். 

“அது அது வந்து... இங்கதான்
என்றாள்.

“ஹே ரஜ்ஜு, ஏன் கூப்பிட்டேன்னு சொல்லு பார்க்கலாம்? என்றன். 

“எனக்கென்ன தெரியும்
என்றாள்.

“இன்னிக்கி பணியாரமும் சட்டினியும் சூப்பரு என்றான்.

“பிடிச்சுதா, சாப்டீங்களா? என்றாள் அகமகிழ்ந்து. 

“சாப்பிட்டேனாவா, டப்பாவையே காலி பண்ணியாச்சுது
என்றான். 

“ஐயோ, அப்போ பத்தலையா?
என்றாள் வெகுளியாக. 

“அடி என் செல்லமே, அதிகமாவே சாப்பிட்டுட்டேன்... இனி இவ்வளவு அனுப்பாதே..... ருசியா இருக்கா, நிறுத்த முடியாம எல்லாத்தையும் சாப்பிட்டு திணறிகிட்டு இருக்கேன்.... அப்புறம் நல்லா குண்டாயிடுவேன்
என்று சிரித்தான். அவளும் களுக்கென சிரித்தாள்.

“அப்புறம், உன் தோழிங்களோட நான் அரட்டை அடிச்சேனே.... நீ அவங்ககிட்ட முறையிட்டதை எல்லாம் என்கிட்டே சொல்லீட்டாங்களே என்றான் அவளை வம்புக்கிழுத்து.

“அடி ஆத்தி என்றாள்.

“என்ன சொன்னாங்களாம்.... நான் அவங்ககிட்ட சொன்னது ரகசியம், அத அவங்க உங்ககிட்ட எப்படியும் சொல்லாமாட்டங்களாக்கும் என்றாள் கெத்தாக.

“நிசம்மா செல்லம்.... சொல்லிட்டாங்க என்றான்

“என்னவாம்
என்றாள்.

“இல்ல ரஜ்ஜு, பச்சகிளிதான் சொன்னா, நீ அவளுக்கு க்காவாம்
நான் த்தானாம்
என்றான்

அவளுக்கு சிவந்து திக்கு முக்காடி போனது

“சி போங்க
என முகத்தை மூடிக்கொண்டாள்.

“ஐயோ சத்தியமா, பச்சக்கிளிதான் சொன்னா.... எனக்கென்ன தெரியும் என்றான் 

அவளால் நம்ப முடியவில்லை. அவன் கலாய்க்கிறான் என நினைத்தாள்.

“நிஜம்மாவா, நிஜம்மாவா பச்சக்கிளி அப்படி சொல்லிச்சு? என பலமுறை கேட்டாள்.

“சத்தியமா என்றான்.

‘இது என்ன, எப்படி.... கிளி பேசும்தான், ஆனால், தான் அதற்கு இப்படி ஒன்றும் சொல்லிக் கொடுக்கவில்லையே...? என ஆச்சர்யப்பட்டாள்.

“என்ன தங்கம், சத்தத்தையே காணும்? என்றான்

“ஒண்ணுமில்லை
என்றாள் பரவசமாக.

“ரஜ்ஜு என்றான் தாபத்துடன்.

“ம்ம் என்றாள்

“எனக்கு நீ வேணுமடி..... காலமெல்லாம் என்னுடன் நீ வேணும்.... 

வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணு வடம் நீ எனக்கு
புது வைரம் நான் உனக்கு என மெல்ல காதோரம் பாடினான்.

அவளுக்கு மனம் நிறைந்து தளும்பி கண்ணில் நீர் வழிந்தது. 

‘இதற்கு நான் கொடுத்து வைத்திருக்கிறேனா தெய்வமே...?
என கசிந்தாள்.

அவனை அணைத்துக்கொள்ள வேண்டும் போல.... தன் நெஞ்சில் சாய்த்துக்கொள்ள வேண்டும் போல மனம் பரபரத்தது..... மனம் நிறைந்து நெஞ்சம் தவித்து ஆசையெல்லாம் தேக்கி, “அத்தான் என்றாள் முதன் முதலாக.

“ரஜ்ஜு என சொக்கி போனான்.

“ரஜ்ஜு இன்னொரு முறை சொல்லு தங்கம் என்று கெஞ்சினான். 

வெட்கம் மேலிட “அத்தான்
என்றாள்.

“இந்த ஒரு சொல் போதும்.... உம் மனசு எனக்கு புரிஞ்சு போச்சு.... இனி உலகமே எதிர்த்தாலும் நான் உன்னைத்தான் கட்டுவேன், இது அந்த சாமி மேல சத்தியம் என்றான்.

அத்தான் என கதறினாள்.

“வேண்டாம் ரஜ்ஜு, இனி நீ சந்தோஷத்துக்காக கூட அழவே கூடாது.... நீ பட்டதெல்லாம் போதும்.... அழுத வரையிலும் போதும்.... இனி நானாச்சு, என் செல்லம், நான் சீக்கிரமா ஏற்பாடுகள பண்ணுறேன்.... கொஞ்ச அவகாசம் கொடு, என்ன சரியா.... சிரிடா தங்கம், என் ரஜ்ஜு இல்ல..? என்றான். 

“ம்ம்
என்றாள் அழுதுகொண்டே சிரித்தாள். 

“சரி நேரமாச்சுது படுத்துக்க. நல்லபடிய உறங்கு.... குட் நைட்
என்றான்.

“குட் நைட் என்றாள்.

“அதென்னடி மொட்டையா குட் நைட் மட்டும் சொல்றே? என்றான் குறைபட்டுக்கொண்டே.

“பின்னே என்ன சொல்லணுமாம்? என சீண்டினாள்.

“போ, நான் பேசல என்றான்.

“குட் நைட் அத்தான் என்றாள்.

“அது என சிரித்தபடி போனை வைத்தான்.

அடுத்து வந்த நாட்களில் இருதலை கொள்ளி எறும்பாக தவித்தாள் ராஜி.

மருதுவும், அவனது கொள்ளை பிரியமும், ஆசையான பேச்சுக்களும், அவனை காண்பதுமே கூட அவளுக்கு இனித்தது என சொல்லவும் வேண்டுமா.

ஆனால், தான் தன் நிலை, என அறிந்தவள் தெரிந்தவள் என்பதால் உள்ளே ஒரு குற்ற உணர்ச்சி அவளை கொண்றுதின்றது.

‘இது சரியா, நான் இப்படி செய்யலாமா, இது அடுக்குமா, ஊர் என்ன சொல்லும், புருஷன் செத்து ஆறு மாசம் ஆகல இவ வேற ஒருத்தனோட சுத்துறானு பேசுமோ...? என பயந்து வெலவெலத்துப் போனாள்.

அந்த நேரங்களில் அவளது இருண்ட முகம் கண்டுவிட்டால், மருது தான், பேசிப் பேசி அவளை சரி செய்ய முயன்றான். தைர்யம் சொன்னான்.

“இந்த பயத்திலேர்ந்தும் குற்ற உணர்ச்சியிலேர்ந்தும் நீ வெளியே வந்தே ஆகணும் ரஜ்ஜு என்றான் கோபமாக.

அவன் கோபத்தை கண்டு அரண்ட போதும், ‘அவுக சொல்வதும் சரிதான் என்றாலும்... என திணறினாள்.

‘நீ செய்வது சரிதான், இதில் எந்தத் தவறும் இல்லை என அவன் ஆயிரம் கூறினாலும் அதையே தன் தந்தையோ தாயோ இருந்து தைர்யம் கூறி இருந்தால் அது வேறு தானே. என மனதினுள் பாரம் ஏறியது.

வேறே யாரிடம் கேட்பது என குழம்பினாள்.

எல்லோரும் அவளது நலம்விரும்பிகள் அதனால் இதுதான் சரி என்றுதான் கூறுவர்.

நிஜமான நன்மை எதில் உள்ளது என்பதை எப்படி யார் வாய்மூலம் அறிவது என குழம்பினாள்.

மருதுவோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவனின் காதலையும் அன்பையும் பல்வேறு விதங்களில் வார்த்தைகளில் அவளிடம் வெளிப்படுத்திய படி இருந்தான்.

அந்நேரங்களில் மனம் நிறைந்து முகம் சிவந்து தலை குனிந்து தன்னையும் அறியாமல் அதை ரசித்தபடி நின்றாள்.

ஒரு மாலை, வழக்கம் போல நந்தவனத்திற்க்கு சென்று பூக்களுடனும் பறவைகளுடனும் கொஞ்சிவிட்டு “அவுக வர்றதுக்குள்ள நான் கிளம்புறேன் என இவள் வெளியேற முயல, அதற்குள் அவனது பைக் அங்கே உள்ளே நுழைந்துவிட்டது.
‘ஆஹா, இவ இங்கே வந்திருக்காளா...? என ஆர்வமாக மருது வீட்டினுள் செல்லாது ஒசைப்படுத்தாமல் பக்க வழியே சுற்றிக்கொண்டு பின்கட்டை அடைந்தான். இவன் வந்துவிட்டானே எப்படி அவன் காணாமல் செல்வது என்ற யோசனையுடன் அவள் அங்கேதான் ஓசையின்றி பதுங்கி அமர்ந்திருந்தாள்.

அவனை அங்கே கண்டதும் நேராக கண்ணோடு கண் காண முடியாமல் வெட்கம் சூழ்ந்து தலையை குனிந்து கொண்டாள்.

“நான் கிளம்புறேன் என அவள் எழ, “இரு போலாம் என்றான்.

“இருட்டிக்கிட்டு வருது, யாராச்சும் பார்த்தா வம்பு பேசுவாக... நான் வரேன் என முன்னே நடக்க முயன்றாள்.

சட்டென அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

“ஐயோ, என்ன இது? என அரண்டு கையை விடுவித்துக்கொள்ள முயன்றாள்.

“இரு போலாம்னு சொன்னேனில்ல, அப்புறம் என்ன.... இருட்டிட்டா நானே கொண்டு விடறேன்.... அஞ்சு பத்து நிமிசத்தில ஒண்ணும் கொள்ளை போயிடாது.... ஆனாலும் ரொம்பத்தான் பிகு என பிங்கினான்.

அதற்குமேல்  அவள் போக விரும்பவில்லை. அப்படியே தோய்க்கும் கல் மேல் அமர்ந்தாள். அவளது இடது கை இன்னமும் அவன் கையில் தான் இருந்தது.... இரும்பாக பிடித்திருந்தான்.

“நாந்தான் போகல இல்ல, கைய விடுங்கன்னா என்றாள் கெஞ்சலாக.

“இல்ல, விட்டா நீ ஓடிடுவே என்றான் மந்தகாசமாக.

“இல்ல, நான் போகமாட்டேன் விடுங்க ப்ளீஸ் என்றாள்.

அவன் கிணற்றுத் திண்டின் மேல் அமர்ந்தான். மிகவும் மிருதுவான அவளது கையை பிரித்து அவள் உள்ளங்கையைத் தொட்டு உணர்ந்தான்.... பட்டுபோல இருந்தது.... முகமருகே கொண்டு சென்று அந்த சிவந்த உள்ளங்கையில் மெல்ல முத்தமொன்று வைத்தான். அவள் சிலிர்த்து அதிர்ந்து போனாள். 

‘என்ன இது?
என அவனை ஏறிட்டாள்

“ஏன், நான் உன்னை தொடக்கூடாதா.... நீ என்னுடையவனு இன்னுமா உனக்கு புரியல.... இல்ல இஷ்டமில்லியா? என்றான்

“அதெல்லாம் இல்ல.... ஆனாலும் நீங்க.... நான்.... எல்லை மீறலாமா?
என தடுமாறினாள் சரியான வார்த்தை கோர்வையாக கிடைக்காமல்.

“எல்லை மீறினேனா, அப்படி நான் நினைச்சிருந்தா இந்நேரம் என்னவும் நடந்திருக்கும் ரஜ்ஜு என்றான் தாபத்துடன்

“ம்ஹூம், உங்கப் பார்வை பேச்சு எதுவுமே சரி இல்ல.... நான் கிளம்புறேன் என எழப் போனாள்.

“போ, போயேன்.... எனக்கென்ன என அவள் கையை தள்ளிவிட்டான். அவனது கோபம் புரிந்தது.

“சரி போகல, என்ன செய்யணும் சொல்லுங்க என்றாள் தன்மையாக.

“அம்மாடி, நீ ஒண்ணும் எங்களுக்கு தயவு காட்ட வேண்டாம்... போம்மா போ என்றான் கிண்டலாக.

“அத்தான் என்றாள் அவனை கெஞ்சலாக.

“உக்காரு என்றான் சாந்தமாக.

அவள் கையை தன் கையில் பிணைத்துக்கொண்டான். 

“எனக்கு வேற ஒண்ணுமே வேணாம்..... உன் கைய இப்படியே பிடிச்சுகிட்டு பேசாம செத்த நேரம் உக்காரணும்... அம்புடுதேன்
என்றான்.

‘அவனருகே அமர்ந்து, அவன் கைக்குள்ளே தன் கையா? என அதிர்ந்தாள். அவனை ஏறிட்டு பார்க்க, அதில் கடுகளவும் கல்மிஷம் இல்லை. 

எழுந்து சென்று ஜாதி மல்லி பந்தலின் கீழே அமர்ந்தாள்....அவன் அவளை விசித்தரமாக பார்க்க, அவனை ஏறிட்டு பார்த்து, கண்காளால் சேதி சொன்னாள். 

“வாங்க என

அவன் புரிந்து, விரைந்து, அங்கே நடந்தான்.... அவளது பக்கத்தில் மண்ணை சுத்தம் செய்தாள்.  அதைப் புரிந்து அவன் அவள் அருகே அமர்ந்தான்.


1 comment: