Wednesday 18 July 2018

NENJIL KODI MINNAL - 15

‘ஆனால் அது அத்தோட போகக் கூடியது இல்லையே, இன்று அவளை கேட்பவன் நான்கு நாட்களில் ஆசை நிறைவேறியதும் அலுத்து போவான்.... அவனது அடுத்த எதிர்பார்ப்பு, அவளை விடவும் பெரிய எதிர்பார்ப்பு, அவர்களது பணமும் சொத்தும் அல்லவா...... சொந்தப் பணம் போனாலும் பரவாயில்லைதான். ஆனால், அவனால் தங்களது ஆதீனத்தில் உள்ள கிராமங்கள் என்னவாகும்.... பண்ணையும் தோப்பும் துறவும் அதில் வேலை செய்யும் ஆயிரமாயிரம் குடியானவருடைய வாழ்வும் என்னாகும்..... அவர்களுக்காக தன்னையே கொடுத்தவர் ராஜலிங்கம்.... அவர்களுக்கு ஒரு தீங்கு என்றால் அவர்தான் முன்னே நிற்பார். மற்ற கேட்டறிந்த பண்ணையார்களைப் போல அல்லவே ராஜலிங்கம்....

மருந்தின் மயக்கத்தில் ஓய்வாக உள்ளே படுத்திருந்த ராஜலிங்கத்தின் காதுகளில் அணு பிசகாமல் அனைத்தும் விழுந்தன.

‘கடைசீல இதானா இவன் புத்தி. என் சொத்து போனா போவுது, என் ராஜி வாழ்க்கை போச்சே.... ஐயோ, இவன் என்ன நாற அடிப்பானோ எம் புள்ளைய ஆத்தா நான் என்ன பண்ணுவேன்.... இத எப்படி சரிசெய்யப் போறேன் வழிகாட்டு. என பதறினார்.

இப்போதும் விட்டு விட்டு நெஞ்சை வலித்துக்கொண்டுதான் இருந்தது. 

‘இதுவேறு தொந்தரவு.... எனக்கு எதாச்சும் ஒண்ணு ஆகிட்டா எம்புள்ள கதி?
என கதிகலங்கி போனார்.

அடுத்த நாள் சொன்னதுபோலவே கனகு பஞ்சாயத்தாரிடம் பிராது குடுத்து கூட்டிவிட்டான்.

இரவு தூங்கா இரவாகிப் போனது ஆனாலும் விடியா இரவாகப் போகவில்லையே.... எழுந்து அவரவர் வேலைகளில் மும்முரமாக இருக்க, பஞ்சாயத்தாரிடமிருந்து தாக்கல் வந்தது.

“அடப்பாவி இவன் கட்டையில போக. சொன்னதுபோலவே செஞ்சிட்டானே படுபாவிப் பய என பொன்னி வைது தீர்த்தாள்.

“என்னம்மா செய்யப் போறீங்க? என்று வந்து நின்றாள். அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை.
ராஜியின் முகம் செத்துகிடந்தது. “ஆத்தா விட்ட வழி பொன்னியக்கா என்றாள்.
கதிரும் வேளையோட வந்துவிட்டான். நடந்ததெல்லாம் அவனுக்கும் தெரிந்தேதான் இருந்தது.

ராஜலிங்கதிடம் வந்து அமர்ந்தான். அவர் கைகளை பிடித்துக்கொண்டான். அவர் முகமே சொல்லியது அவரது கலக்கத்தையும் அவரது உடல் நிலையையும். டாக்டரிடம் அவன் முன்னரே கூறிதான் வைத்திருந்தான்.

“இது இந்த நேரத்தில ரொம்ப மோசமான விஷயம் கதிர்.... இதை அவர் உடம்பு தாங்குமான்னு எனக்குக் கவலையா இருக்கு என அவரே கூறி இருந்தார். “எதுக்கும் பார்த்துக்குங்க, அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது என்றார்.

முடியக்கூடிய காரியமா. தன் ஒரே செல்வ செல்ல மகளின் வாழ்க்கை அல்லவா அங்கே பகடை காயாக உருட்டப்படவிருக்கிறது. கதிர் அறியாமல் இல்லை.

ஆனாலும் “நானிருக்கேங்கையா. சின்னம்மாவுக்கு ஒரு ஆபத்தும் வராம நான் காத்திடுவேன்... நீங்க தைர்யமா வாங்க, ஒண்ணுமே பேசாதீங்க..... நாங்க எல்லாம் பார்த்துக்கறோம்.

“சின்னம்மாவுக்கு நீங்க குடுத்த தைர்யம் நேர்மை அயராத நெஞ்சத் துணிவு அவங்களை காப்பாத்தும், நீங்க வாங்க எனக் கூடவே இருந்து இருவரையும் அழைத்துப் போனான்.

ராஜலிங்கத்தின் பேரில் ராஜியின் பேரில் வழக்கா குற்றசாட்டா...? என பதறிப் போய் மொத்த கிராமமும் அங்கே குழுமி இருந்தது.

பஞ்சாயத்து துவங்கி கனகு தன் தரப்பினை கூறிக்கொண்டே போனான். ‘எதுவுமே சரியாக செய்யப்படவில்லை.... கூறியபடி ஒன்றுமே தரப்படவில்லை.... ராஜியும் தன்னுடன் படுக்கவில்லை என அப்பட்டமாக அனைவருக்கும் முன் வெட்கமேயின்றி பிட்டு பிட்டு வைத்தான். குனிந்த தலை நிமிராமல் சிலை போல அப்படியே நின்றாள் ராஜி. முகம் கன்றி சிவந்து போயிருந்தது அவமானத்தில்.

வீட்டு முற்றத்தை நாலுபேர் மத்தியில் பிரித்து காட்டுபவனை என்னதான் செய்துவிடமுடியும்....

பஞ்சாயத்தார், இவ்வளவு நாசூக்கான விஷயத்தை இவன் பலபேர் முன்னில் வைத்து இப்படி தண்டோரா போடுவான், என அதுவும், ராஜலிங்கத்தின் குடும்பத்தையே இப்படி ஏலம் போடுவான் என அவர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

ராஜலிங்கத்திடம் விசுவாசமும் மதிப்பும் மரியாதையும் நிறைந்திருந்த அவர்களுக்கு, அவர் தீர்ப்பு கூறி, அதன்படி ஆவன செய்துதான் பழக்கம். இப்போது குற்றவாளியாக நிற்பதோ அவரின் குடும்பம். கையை பிசைந்தபடி குழம்பினர்.

ஒருவர் மட்டும் துணிந்தார்.

“த பாருப்பா கனகு.... நீயும் பக்கத்து கிராமத்து ஆளுதான்.... பெரிய பெரிசின் மானம் மரியாதை குடும்ப வெவரம் தெரியாத அசலூர் ஆள் கிடையாது..... தூரத்து சொந்தம் வேற..... இப்போ அவங்க வூட்டு மாப்பிள்ள..... இப்படி இருக்கையில, நாலு சுவத்துக்குள்ள நாசூக்கா பேசி முடிக்க வேண்டிய விஷயத்த இப்படி ஆயிரக்கணக்கான பேர் மத்தியில பந்தி விரிக்கறது நாகரீகம் இல்ல..... போங்க அமைதியா கலைஞ்சு போய்டுங்க என்று கூறி பார்த்தார்.

“யோவ், பெரிய பெரிசு குடும்பத்த பத்தி உங்களுக்கு வேணா பெரிசா இருக்கலாம்.... எனக்கு அவங்க துரோகம்தான் பண்ணீட்டாங்கன்னு சொல்றேன்....

“தோ இருக்குதே இந்த முறுக்கு மீச பெரிசு, இதக் கேளுங்க..... அதா அந்தால பொஞ்சாதி முந்தானையில ஒளிஞ்சுகிட்டு இருக்குதே தலைப்பா கட்டின பெரிசு ஒண்ணு. அத கேளுங்க. இவனுங்களும்தான் வந்தானுங்க என்னோட சம்பந்தம் பேச. பெரிசு என்னென்னா வாக்கு குடுத்துச்சுனு நீங்களே கேளுங்க.... அதன்படி ஒண்ணாச்சும் நடந்துச்சா விசாரிங்க....

அத எல்லாம் விட்டுபுட்டு சமரசமா போன்னா எப்படி போறது?

“சொத்து மொத்தமும் என் கையில வந்தாகணும்.... ராஜியும் என்னோட என் வூட்டுக்கு வந்தாகணும்.... எங்கூட ஒழுங்கா பொஞ்சாதியா லக்ஷணமா குடித்தனம் செஞ்சாவணும்..... இல்லேனா நடக்கறதே வேற..... நீங்க இத பைசல் பண்ணலனா நான் கோர்ட்டுக்கு போவேன் என்றான்.

“அடப்பாவி என முணுமுணுத்தனர் கூட்டத்தினர்.


“என்னப்பா, ஒரே அடியா இப்படி அடாவடியா பேசினா எப்படி...?
“அதான் உர மருந்து ஆபீச உன் பொறுப்பில விட்டிருக்காரே. தென்னதொப்பும் மாந்தோப்பும் கூடத்தான் உம் பொறுப்பில இருக்குது.... அது எனக்கே தெரியுமே..... ஒண்ணுமே செய்யலைனா எப்படிப்பா அப்படி சொல்லுறது? என்றார் தலைவர்.

“அஹான் இத்துனூண்டு அத்தினியூண்டுன்னு கண்ல காட்டீட்டா ஆச்சா. பொறுப்பு குடுக்கறோம்னு சாவிய குடுத்துட்டு, பின்னோட, இந்தப் பணத்தை ஏன் தொட்டே கணக்கு சொல்லு.... அந்த பணத்த ஏன் செலவு செஞ்சே கணக்க சொல்லுன்னு சொம்மா நோண்டினா..... அதுக்கு எதுக்கு குடுப்பானேன்.... என் பொறுப்பு என் இஷ்டம் எனக்கு தெரிஞ்சாப்போல நான் பார்த்துக்குவேன். பொறுப்ப ஒப்படைச்சுட்டா அதன் பின் அத ஏன் நோண்டணுங்கறேன்? என்று எகிறினான்.

“அதெல்லாம் கூட விடுங்க..... உங்க பேச்சுக்கே வாரன்.... ராஜி விஷயம், அது எப்படி.... கல்யாணமாகி வருஷகணக்காகுது.... புருஷன்காரன் நானு, ஓடம பட்டவன். இன்னிக்கி வரைக்கும் என் கூட படுத்திருக்காளா சாந்தி கழிஞ்சிதா விசாரிங்க என்றான்.

“அட நாரப் பயலே, அந்தத் தங்கத்த போய் இப்படி சபையில வெச்சு அவமானப்படுத்துறானே என அங்கிருந்த அனைவருமே, அவனைப் பார்க்கக் கூட பிடிக்காமல் தலை குனிந்தனர்.

“கனகு, போதும், இத்தோட நிறுத்திக்க..... அந்த புண்ணியவதியப் பத்தி சபையில பேசி, அசிங்கம் பண்ணாதப்பா என்றார் நல்ல வார்த்தையாக.

“முடியாது, வராளா இல்ல என்ன சங்கதின்னு நீங்க இப்போ இங்கேயே வெச்சு விசாரிங்க அம்புடுதேன் என்றான் அடமாக.

“அம்மாடீ ராஜி, நீ என்னம்மா சொல்றே? என்றார் வேறு வழி இல்லாமல்.

அந்த கணத்தில் மனத்துணிவுடன் அந்தக் கேள்வியை எதிர்கொண்டாள் ராஜி, “நான் ஏதுக்கே அவுககிட்ட சொன்னதை தாங்கையா நான் இங்கே பஞ்சாயத்தார் முன்னாடியும் சொல்ல விரும்பறேன் என்றாள் தலை நிமிர்ந்து. உள்ளே ஆயிரம் குடைந்தாலும் புகைந்தாலும் நேர்வுடன் பதிலளித்தாள்.

“நான் அவுகளோட வாழ மாட்டேன்னு சொல்லல.... அவுக கூட போகமாட்டேன்னு சொல்லல.... கொஞ்சம் திருந்தி வாழுங்கனு சொல்றேன்.... வேண்டாத பழக்க வழக்கங்கள மாத்திக்குங்க, பொறுப்பா நடந்துக்குங்க.... பிறகு மனமொன்றி வாழத் துவங்குவோம்னு சொல்றேன்.... திருந்தி வந்தா, சந்தோஷமா அவுகளோட வாழ நான் முயற்சி செய்வேங்கைய்யா என்றாள்.

“பாத்தீங்களாய்யா, முயற்சி செய்வாளாம்.... அப்போகூட கண்டிப்பா செய்யறேன்னு சொல்ல நாக்கு வரல.... கொழுப்பு, பணத்திமிரு..... அவங்கப்பேன் கொடுத்த செல்லம். என்று எகிறினான் கனகு.

“த கனகு, ஜாக்ரதையா பேசு..... என்ன, சபையில, எங்க முன்னாடியே, அந்தபுள்ளைய அப்படி எகிருற..... அவங்கதான் தன் முடிவ சொல்லிப்புட்டாங்க இல்ல.... இப்போ நீ சொல்லு..... மாறி வந்து திருந்தி வாழ்ந்தா, கூட வந்து வாழறேன்னு சொல்றா இல்லா..... சபையில வெச்சு அந்தப் புள்ள வாக்கு குடுக்குதில்லா..... நீ மாறினாதான் என்ன..... உன்னைய என்ன, கடல்ல நீந்தி, முத்தையவா எடுக்க சொல்லுதாக...... குடி கூத்து விட்டுட்டு பொறுப்பா இருந்தா பொண்ணையும்தான் குடுத்திருக்காரு பொறுப்பையும்தான் குடுப்பாரு பெரிய பெரிசு என்றனர்.

“ஆஹான், அதானே பார்த்தேன்..... உங்க ஊர் பெரிசாச்சுதே, நீங்க அவருக்குதான் சப்போட்டு பண்ணுவீக.... அவர்பக்கம் சாயப்பாக்குறியளோ? என்றான் எகதாளமாக.

“சின்ன பேச்சு வேண்டாம்..... ரெண்டு தரப்பையும் கேட்டுட்டுதான் உனக்கு நல்ல வார்த்தையா சொல்லுறோம்.... கேட்டு நடந்தீனா உனக்குத்தான் நல்லது, மரியாத இல்லாம பேச வேண்டாம். என்று எச்சரித்தார் தலைவர்.

“என்னங்க பெரிசு, நீங்க ஒண்ணுமே சொல்லலியே.... கனகு முரண்டு பிடிக்குறாரு.... பொட்ட புள்ள விளக்கமா தெகிறியாமா சொல்லிடுச்சு தன் முடிவ..... உங்க மனசுல இருக்கறதையும் புட்டு வெச்சுட்டா தீர்ப்பு சொல்லிப்புடலாமே? என்றார்.

ராஜலிங்கம் எழுந்தார். ராஜியின் அருகில் வந்து அவள் தோள்களைப் பிடித்தபடி தள்ளாடி நின்றார்.

“எம் புள்ள வாழ்க்கைய நானே நாசமாகிட்டேனுங்க.... என் அறியாத புத்திய நானே செருப்பால அடிச்சுக்கணுமுங்க.

“எம் பிள்ளைய இனி காப்பாத்த ஒரே வழி, இவனோட உண்டான கல்யாணத்த அத்து விட்டுடுங்கைய்யா என்றார் துண்டினால் வாய்பொத்தி.

ஊரே அதிர்ந்து போனது. ஆளுக்காள் ஏதோ முணுமுணுத்தனர்.

“என்ன பெரிசு, நீங்களே இப்புடி... சட்டுன்னு அத்துபுடலாம் விட்டுபுடலாம்னு பேச, இது பொம்மை கல்யாணமில்லியே. ஆயிரங்காலத்து பயிறு பெரிசு..... யோசனை பண்ணி பேசுங்க. உங்களுக்கு தெரியாததில்ல.... நான் சொல்லணுங்களா? என்றார் தலைவர்.
“இல்லீங்க, நான் ராப்பூரா யோசனை பண்ணி எனக்குள்ள நானே போராடி தெளிஞ்சு எடுத்த நல்ல முடிவுதான் இது.... முடிச்சுருங்க. இந்த பயபுள்ளைய நம்பி, ஊரே எதிர்த்தும், நான் என் கண்ணையே இவன்கிட்ட ஒப்படைச்சேன்.... இவன் என்னடானா போட்டுடைக்க பார்க்கறான்.

“கூட வந்து குடித்தனம் பண்ணலன்னு என் தங்கத்த அவன் எப்போ ஆயிரம் பேர் மத்தியில பஞ்சாயத்தில நிறுத்தினானோ அப்போவே அவனுக்கும் எங்களுக்கும் விட்டு போச்சுது..... அம்புட்டுதேன் முடிச்சுடுங்க என்றார் தெளிவாக.

“ஆஹான், இதான் ப்ளான் போடறீங்களா வூட்டோட உக்காந்திகிட்டு....

அத்து வுட்டுட்டு வேற நல்ல மாப்பிளையா பார்த்து கட்டி வெச்சுடலாம்.... பொண்ணு சுகமா வாழ்வானு மனப்பால் குடிக்கிறீங்களாக்கும்..... நடக்காது....

“என்ன அல்லாம, இந்தப் புள்ளைய எவனும் கட்ட முடியாது.... எவன் முன்னால வந்தாலும் சரி, வெட்டிடுவேன்.... என தன் முதுகின் பின்னால் இருந்த வெட்டரிவாளை எடுத்தான்.

“போலீசுக்கு சொல்லுங்கப்பா, இது பெரிய வெவகாரமா இல்ல போச்சு என்றார் தலைவர்.

“போலீசுக்குதானே, சொன்னாபோச்சு, எனக்கொண்ணும் போலீசும் ஜெயிலும் புதிசில்ல, நேத்து வர அங்க களி தின்னவந்தான் நானு.... ஆனாலும் சரி, அங்க போறதுக்கு முந்தி, அப்படியோ இப்படியோ ரெண்டில ஒண்ணு தெரிஞ்சிக்கிட்டுதான் நான் போவேன்.... வாங்கடா எவன் பக்கத்தில வரீங்கன்னு பார்க்கறேன், யாரு ஒரு அடி எடுத்து முன் வெச்சாலும் தோ இந்த கத்தி இவ கழுத்தில தான் இறங்கும்னு புரிஞ்சுகிட்டு முன்னாடி வாங்க எனக் கூவினான்.

“அத்து விடுவீகளோ, எங்கே பார்க்கலாம்..... எனக்கு கிடைக்காதது வேற எவனுக்கும் கிடைக்க விட மாட்டேன்..... நேத்தே சொன்னேன் புரிஞ்சுக்கல.... என்னோட முடிவு வேற மாதிரிதான் இருக்கும் என சரேலென அவளை அருகில் இழுத்தான். அதைக்கண்டு ராஜலிங்கம் அதிர்ந்து போனார்.

“அம்மாடி ராஜி, ஐயோ..... எம் புள்ள.... எம் புள்ளைய யாராச்சும் காப்பாத்துங்களேன் என அலறியபடி கீழே மரமாக சாய்ந்தார்.

நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம், கீழே விழுந்தது, இதில் எதுவென தெரியாமல் அவர் துவண்டு சுருண்டு விழ, கூட்டம் ஸ்தம்பித்துப் போனது.

“அப்பா என அலறினாள் ராஜி.

ராஜலிங்கம் எந்த அசைவும் இன்றி கிடப்பதை பார்த்து கனகு, அதிர்ச்சியாகிப்போனான். 

‘ஐயோ, பெரிசுக்கு ஏதோ ஆயிடுச்சு போலவே, இங்கே இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும் இந்த ஊர் ஜனங்க அத்தன பேரும் மொத்தமா சேர்ந்து நம்மளை மொத்தி எடுத்துபுடுவானுங்களே...
என நினைத்தோ என்னவோ அவன் பிடி தளர்ந்தது..

அதுவே நேரம் என அவனிடம் விடுபட்டு, ராஜி அசைவின்றி கிடக்கும் தந்தையிடம் ஓடினாள்.

அவள் விடுபட்டதும், மொத்த ஊர்மக்களும் அது போலவே அவரை சூழ்ந்து கொண்டனர். அனைவருக்குமே உண்மை உரைத்திருக்க, கனகு மக்களின் கைகலப்பிற்கும் தப்பி, மெல்ல நழுவி அங்கிருந்து தெறித்து ஓடினான். அவனை பிடிக்க கதிரும் இன்னும் சிலரும் அவனைத் தொடர, 

“கதிர்
என ராஜி கூவினாள்.

“என்னாச்சு? என் அவன் அப்படியே திரும்பி அவளிடம் ஓடி வந்தான்.

கனகின் ஓட்டத்திற்கு ஈடுகுடுக்க முடியாமல் அவனை பிடிக்கவும் முடியாமல் போலீசிற்கு சொல்லலாம் என அந்தச் சிலரும் திரும்பி வந்தனர்.

இவர்கள் அருகே வந்து, தரையில் அமர்ந்து ராஜலிங்கத்தினை நோக்கி குனிந்த கதிர், அவர் மூச்சு ஓய்ந்திருந்தது என்பதை அறிந்து கொண்டான்..

“அப்பா, என்னாச்சுப்பா... முழிச்சு என்னப் பாருங்கப்பா, எனக்கு ஒண்ணும் ஆகலைப்பா என மேலும் பெரிதாக அலறினாள். அவரை தன் மடியில் கிடத்தியபடி கதறினாள்.

அந்த நொடியில் நடந்து முடிந்த கலவரம் அனைவரையுமே உலுக்கி எடுத்துவிட்டது. “கதிர் என அவனைப்பார்த்து தீனமாக அலறினாள்.


1 comment:

  1. My heart goes out for Rajee..please spare her from more sorrows!!

    ReplyDelete