Tuesday, 8 April 2014

அன்பு நட்புகளுக்கு வணக்கம்,

என் கதைகள் மூலமா என்னை சந்திச்சிருக்கீங்க எல்லாரும். இந்த முறை முதன் முதலா ஒரு blog போடலாம்னு யோசனை வந்தது. சின்னதா ஒரு கதை... அல்ல அல்ல சும்மா ஒரு கருத்து பரிமாறல்.

நமது தெற்கிந்திய மின்சார ரயிலினைப் பற்றியது. அதனை பல கதாபாத்திரங்கள் எனும் தேன் கலந்து, அவர்களுடைய குடும்ப வாழ்க்கை என்னும் பால் கலந்து இடை இடையே ஸ்வாரஸ்யமான பல ரயில் நிகழ்வுகளை கற்கண்டாக சேர்த்து உங்கள் முன் அமுது படைத்திருக்கிறேன். 

சும்மா பொழுது போகாத போது படித்து பாருங்க. எப்போதும் போல உங்கள் அன்பான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஏதேனும் தவறான கருத்து சொல்லி இருந்தால் மன்னித்து திருத்தும்படி வேண்டுகிறேன்.

சரி போலாமா, ரயிலுக்கு நேரமாச்சு. B-30 வந்துடுவான் வாங்க சீக்கிரம் என்னுடன் பயணம் செய்ய...

ரயில் சிநேகங்கள்

“மணி ஆச்சுங்க, பி தர்டி வந்துடுவான், அவன விட்டா ஆபிசுக்கு லேட்தான்...” என்று பறந்தடித்துக்கொண்டு வந்து தன் கணவன் ஸ்ரீதரின் ஸ்கூட்டரில் இறங்கினாள் விமலா.
“இருக்கட்டுமே விமல், அப்படி என்ன அவசரம், இப்படி தினமும் நீ பறக்கறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கல... அப்படியானும் நீ உத்யோகம் பார்க்கணுமாம்மா” என்றான் ஆதுரமாக ஸ்ரீதர்.
“ஸ்ரீ, இதை நிறைய பேசியாச்சு, இப்போ மேலே பேச நேரமில்லை, நான் வரேன், சி யு பை” என்று விறுவிறுவென நடந்துவிட்டாள். 
“ஹ்ம்ம்...” என்று வண்டியை திருப்பினான் ஸ்ரீதர்

“வா வா விமு, இன்னும் பிதர்டி வரல, மெதுவா வா ஆசுவாசப்படுத்திக்கோ” என்று கூறினாள் கல்பனா, அவளே பெரிய மூச்சுக்களை சாந்தப்படுத்தியபடி. 
“என்ன கல்பு, நீயும் இப்போதான் வந்தியா?” என்றபடி மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றாள் விமலா.
“ஆமா நாமதான் அவனுக்காக ஓடி ஓடி வருவோம்... அவன பாரு ஆடி அசஞ்சு மெதுவா உள்ள நுழையறத..” என்றாள் ஆதங்கத்துடன். அவனை கண்டு ரெண்டெட்டு முன்னே வைத்தனர் இரு பெண்களும்.. 

இப்படி யாரை எண்ணி மாய்ந்துபோய் ஓடி வருகின்றனர் என்று யோசிக்கிறீர்களா நேயர்களே, எட்டு முப்பதுக்கு தாம்பரத்தில் இருந்து சென்னை பீச் வரை செல்லும் மின்சார ரயிலினை எதிர்நோக்கி தான். அதில் ஏறினால்தான் சரியான நேரத்திற்கு ஆபிசை அடைய முடியும் என்பதாலும்தான்.. 
“வா வா” என்று ஒருவரை ஒருவர் கூறிக்கொண்டே கம்பார்ட்மெண்டில் ஏறினர். அவர்களின் வழக்கமான இடத்தில அமர்ந்துகொண்டனர். 
“என்ன கமலாகா, குட் மார்னிங் சௌக்கியம்தானே?” என்று விசாரித்தாள் விமலா.
“குட் மார்னிங் விமு, நான் நல்லா இருக்கேன், நீ எப்படி, என்ன கல்பு இன்னிக்கும் பறந்துதானா?” என்றாள் ஆற்றாமையுடன்.

“ஆமாங்கா, என்ன ஓடி ஓடி செஞ்சும் லேட் ஆயிடுது என்று அலுத்துக்கொண்டாள்.
“இன்னிக்கும் பாவம் ஸ்ரீ ஒரே அடியா ஆதங்கபட்டுண்டார் தெரியுமா...” என்று கூறிக்கொண்டாள் விமலா.
“பாவம் ஸ்ரீ தம்பி, நல்லவர்தான்” என்றார் கமலாகா... அவர் வயது நாற்பதை தாண்டி நின்றது.... கல்லூரிக்கு செல்லும் இரு பிள்ளைகள் ஒரு ஆண் ஒரு பெண்... அதனால் அவரை அக்காவாக்கி விட்டனர்....
கல்பனாவும் விமலாவும் இளம் முப்பதுகளில் இருந்தனர்.... இருவருமே ஒரே ஆபிசில் உத்யோகம் பார்கின்றனர். தாம்பரத்தில் தான் கொஞ்ச தூர நடையில் வீடு இருவருக்கும்.

ஸ்ரீதர், விமலாவின் கணவன் நல்ல உத்யோகத்தில் இருந்தான், ஆனால் மேனேஜ்மென்ட் எதற்காகவோ முரண்டி போனஸ் தராமல் இழுத்தடித்து ரகளை வெடிக்க, கம்பனியை லாக் அவுட் செய்துவிட்டனர். பேச்சு வார்த்தை நடந்துகொண்டு இருந்தது, ஆனால் இன்னமும் திறந்தபாடில்லை. அவள் எப்போதுமே வேலை செய்து வந்தாள்தான் ஆயினும் இப்போது கூடுதலாக செய்தே ஆகவேண்டிய நிலை. அதனை நினைத்து ஸ்ரீதர் வேதனை படாத நாளே இல்லை எனலாம்.

கல்பனாவின் கணவன் கணேஷ் மெடிகல் ரெப்.... வீதி வீதியாக சுற்றி அலைந்து மருந்து கம்பனி சாம்பிள்களை டாக்டர்களிடம் காட்டி ஆர்டர்கள் பிடிக்கும் நாய் பிழைப்பு.... அவனின் அல்லல் பார்த்து கல்பனாவும் கை கொடுக்கவென வேலைக்கு வருகிறாள்.... இப்போதுதான் ரெண்டு வருடங்களாக பணியில் சேர்ந்துள்ளாள்.... அதுவரை இருவரின் தனி குடித்தனம் என்று இருந்தவள்தான்.... பின்னோடு அவளும் உண்டாக, செலவு கழுத்தை நெரித்தது.... பிள்ளை பேரு, மருந்து, குழந்தையின் செலவு என்று மென்னியை முறிக்க, குழந்தை அனுவுக்கு இரண்டு வயதானதும் அவளை குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு தெரிந்தவர் மூலம் விமலாவின் கம்பனியிலேயே வேலைக்கு சேர்ந்தாள்.... ஒன்றாகவே போக வர நெருங்கிய தோழியாகிவிட்டனர் இருவரும்.

பிதர்டி என்று இவர்களால் செல்லமாக அழைக்க படுவது எட்டு மணி முப்பது நிமிடங்களுக்கு தாம்பரத்திலிருந்து கிளம்பும் மின்சார ரயில்.... அதில் கிளம்பினால்தான் சரியாக ஒன்பது பதினொன்றுக்கு சென்னை போர்டில் இறங்கி பொடி நடையாக ஆபிஸ் செல்ல ஏதுவாகும். பாரிஸ் கார்னரில் இருக்கும் பல சந்துகளில் அழுக்கேறிய பல பழைய மாடி கட்டிடங்களில் ஒரு கட்டிடத்தின் நான்காவது தளத்தில் அமைந்த ஒரு வெளிநாட்டு ஏற்றுமதி கம்பனியில் தான் இருவரும் பணி புரிந்தனர். 

கமலாகா நுங்கம்பாக்கத்திலேயே எட்டம்பதுக்கு இறங்கி விடுவார்.... அவருக்கு அங்கேயே ஒரு ப்ரைவேட் கம்பனியில் வேலை.... அவர் ஹெச் ஆர் இல் இருந்தார்.
“அக்கா, சாய் கா” என்றபடி வந்தான் வேணு, 
“இன்னிக்கி வேணாம்டா, வயிறு திம்முன்னு இருக்கு” என்றார்
“வயிறு திம்முன்னு இருந்தாதான் கா சூடா சாய் சாப்பிடணும், கலகலன்னு ஆயிடும், நம்ம சாய் குடிங்கக்கா சொல்றேன்” என்று கையில் திணித்தான், 
“எதையோ சொல்லி கையில திணிச்சுடுவேடா” என்றார் செல்லமான அதட்டலுடன்,
“மாமா நல்லா இருக்காராகா?” என்று விசாரித்துக்கொண்டான், “நீங்க காலையில சாய் குடிக்க மாட்டீங்க, காபிதான், வாசு தம்பி வருவான் பின்னோட, இருங்க” என்று விட்டு முன்னே சென்றான் வேணு. 
“எல்லாம் அத்துப்படி இவனுக்கு” என்று சிரித்துக்கொண்டார். 
“ஆமா கொஞ்ச நஞ்ச நாளாவா பழக்கம்?” என்று அன்று வந்திருந்த ஆனந்த விகடனை பிரித்தாள் கல்பனா. அதில் அவள் விருப்பமாக படிக்கும் தொடர்கதையை தேடி எடுத்து அந்த பக்கத்தில் மூழ்கி போனாள். “சூப்பரா எழுதராங்கடீ இந்த ரைடர்” என்று மெச்சிக்கொண்டாள்.

“அதுசரி, நீ ஒரு நாவல் தரேன்னு சொன்னியே என்னவாச்சு?” என்று ஞாபக படுத்தினாள்.
“ஒ கொண்டு வந்தேன்.... நல்லா ஞாபக படுத்தினே, இந்தா நான் இதுவரை மூணுவாட்டி படிச்சுட்டேன்” என்று குடுத்தாள். அது முத்துலக்ஷ்மி ராகவனின் “என்னவென்று நான் சொல்ல” மூன்று பாகங்களையும் கையில் திணித்தாள். 
“அட மூணா?” என்றபடி வாங்கி புரட்டினாள். 
“படி, கீழேயே வைக்க மாட்டே... நான் என் குழந்தைக்கு பால் குடுக்க கூட மறந்துட்டேன்” என்று சிரித்தாள் கல்பனா.
“என்னடி பெண்களா, புக்ஸ்ல மூழ்கினா போதுமே, சரி நான் இறங்கறேன், மாலையில பார்க்கலாம்,
ஹாவ் அ குட் டே” என்றபடி இறங்கினார் கமலாகா. 
“சரிகா, யு டூ” என்று அனுப்பி வைத்தனர்.

அதன் சற்று முன்னேதான் மாம்பலத்தில் எட்டேமுக்காலுக்கு ராதா ஏறி இருந்தாள்.
“ஹாய்” என்று பெரிதாக கை ஆட்டினாள். அவள் கையில் பெமினா புத்தகம் புது மணத்துடன் வழ வழவென கண்ணை பறித்தது, சல்வாரில் இருந்தாள்.... அவளுமே பாரிமுனையில் ஒரு பல்நாட்டு கம்பனியில் வரவேற்பில் இருந்தாள்.... இன்னும் திருமணம் ஆகவில்லை. சின்னப் பெண்.... இதுதான் முதல் உத்யோகம்.
“வா ராதா, அப்பாக்கு இப்போ தேவலையா?” என்று ஞாபகமாக கேட்டுக்கொண்டாள் கல்பு
“ஆமா கல்பு, நல்லா இருக்காரு தாங்க்ஸ்” என்று சிரித்தாள். மூட்டுவலி உள்ள அவள் தந்தைக்கு அவ்வப்போது அது மிகவும் தொல்லை படுத்தும், ஸ்கூட்டரை ஓட்ட முடியாமல் வீட்டில் தங்கி ஓய்வெடுக்க வைக்கும்.... அதுவும் இதுபோன்ற மழை நாளில் குளிரில் இன்னமுமே தொல்லை அதிகம்..... 
“டேய் காசி இங்க வா” என்று சிறுவனை அழைத்தாள். அவன் கிளிப்புகள் ரப்பர் பாண்டுகள், ஹேர் பின்கள் சின்ன பாசிமணி மாலைகள் என்று விற்றுக்கொண்டு இருந்தான். மாதத்தின் முதல் வாரம், அதனால் அவனும் சுறுசுறுப்பாக விற்று கொண்டிருந்தான். 
“காசி, எனக்கு அவசரமா ரப்பர் பான்ட் வேணும், பாக்கி பிசினஸ் சாயங்காலம் என்ன” என்று அதை மட்டும் ஒரு சின்ன பாக்கெட் எடுத்துக்கொண்டாள்.... சில்லரையாக எண்ணி கொடுத்தாள். அதில் ஒன்றை எடுத்து காற்றில் அலைந்த தன் முடியை இறுக்கினாள். 
“காலையிலேயே இருந்த ஒண்ணும் போடும்போதே பட்டுன்னு அருந்துடுச்சு..... சரி காசி இருப்பானே னு நம்பி வந்தேன்” என்று சிரித்தாள். “தாங்க்ஸ்கா” என்று சிரித்தான் காசி.

அது ஒரு தனி உலகம், உறவு வைத்து கொண்டாடும் சிறு, அல்ல அல்ல பெரும் குடும்பம்.... பல தரத்து, பல ஊர், பல மொழி, பல வேலை, செய்யும் மக்கள் ஒருங்கே ஒரு குடும்பமாக வாழும் தனி ஒரு உலகம்.... அங்கே சிரிப்புக்கும் அழுகைக்கும் பஞ்சமில்லை, கும்மாளத்திற்கும் வம்புக்கும் குறைவு இல்லை.... வாடிக்கைக்கும் வேடிக்கைக்கும் பேர் போன இடம்..... அதுதான் ரயில் குடும்பம்.... அதனுள் இருக்கும் பல ரயில் சிநேகங்களை நாம் பார்க்க போகிறோம்...

“என்னடி கல்பு இன்னிக்கி ராமஜெயத்தை காணும்?” என்றாள் விமலா. 
‘”ஆமா, நானும் கவனிக்கலை பாரு” என்று வியந்தாள். கொட்டும் மழையிலும் கடும் வெயிலிலும் கூட நாள் விடாது அதே ரயிலில் அதே பெட்டியில் பயணிக்கும் இன்னொரு நபர் வெங்கடேசன். 
ஏறும்போதே அனைவருக்கும் குட் மார்ணிங்குக்கு பதிலாக “ஸ்ரீராம ஜெயம்” என்று கூறியபடியே ஏறுவதால் இவர்கள் அவருக்கு செல்ல பெயர் வைத்திருந்தனர். 
“என்ன ராமஜெயம் அண்ணா, அண்ணிக்கு ஆஸ்துமா தொல்லை இப்போ தேவலையா?” என அவரையும் விட்டு வைக்காமல் அன்பாக விசாரித்துக் கொள்வர் பெண்டிர். 
“ஆமா மா, கொஞ்சம் தேவலை..... இந்த மழையும் ஈர வெதரும் குறைஞ்சா அவுளுக்கும் சுகமாகிடும்” என்பார் சிரித்தபடி.
இன்று அவரை காணாது குழம்பினர். 

“என்னடா வேணு, ராமஜெயம் அண்ணாவை இன்னிக்கி காணும், உனக்கெதுவானும் தெரியுமா?” என்றாள் கல்பு. 
“அவர் இன்னிக்கி வரமாட்டாரு கா உங்களுக்கு தெரியாதா, நேத்தே சொன்னாரே” என்றான் பெரிய மனிதன் போல. 
“சரிதான் டா, நீதான் இந்த ட்ரெயினின் ந்யூஸ் பேப்பர்னு எங்களுக்கு தெரியும், விஷயத்தை சொல்லு” என்றாள் விமலா.
“இன்னிக்கி அவருக்கு அம்பதாகுது அக்கா, அதான் கோவிலுக்கு போகணும், வீட்டில பிள்ளைகளோட சிம்பிளா ஒரு விருந்து..... கட்டாயபடுத்தி லீவு போட சொல்லி இருக்காங்கனு சொன்னாரு கா” என்றான். 
“அண்ணாக்கு அம்பதா, வயசு தெரியவே இல்லை பாரேன்” என்று வியந்தனர். “நம்மகிட்ட மட்டும் சொல்லவே இல்லை, இரு, நாளைக்கு வரட்டும்.... பிலு பிலுனு பிடிச்சுக்கறேன்” என்றாள் விமலா.

ராமஜெயம் வெங்கடேசன் செத்பெட்டில் ஒரு அலுவலகத்தில் தலைமை கணக்கராக வேலை பார்த்து வந்தார், அவர் அவரது மனைவி இரு பிள்ளைகள், ஒரு மகள் என்று குடும்பம் அளவானது. மகளுக்கு திருமணம் முடித்துவிட்டார். 
இவர்களையும் கூட அழைத்திருந்தார்.... இவர்களும் அன்று இதே ரயிலில் சென்று மாம்பலத்தில் இறங்கி கல்யாண மண்டபத்தை அடைந்து கலந்து கொண்டனர். 
சென்று கலந்து கொண்டதோடு அல்லாமல் அங்கே வேலை என்னவிருப்பினும் சட்டென பெண்கள் வரிந்து கட்டிக்கொண்டு வேலையில் இறங்கிவிட்டனர்.... சொந்தமா பந்தமா நட்பா என்று பலரும் வியந்து பாராட்டும் வண்ணம் இவர்கள் கை கொடுத்ததை ஆச்சர்யத்துடன் பார்த்தனர் பலரும்.

மகன்களில் ஒருவன் படித்துவிட்டு இப்போதுதான் வேலையில் சேர்ந்திருந்தான்.... மற்றவன் கடைசி வருட படிப்பில் இருந்தான்.
பேசிக்கொண்டே மணியை பார்க்க “ஹே கல்பு, வா வா மணி ஒன்பது பத்து” என்றாள் விமலா வாயிலை நோக்கி நகர்ந்த படி. அவளை தொடர்ந்து கல்பனாவுமே நடந்தாள். ஒன்பது பதினொன்றுக்கு பாரிமுனை போர்டில் வண்டி நிற்க இறங்கி நிலையத்தை விட்டு வெளியே நடக்க துவங்கினர் இருவரும்.

பொடி நடையாக ஆபிசை அடையவும் ஒன்பது பதினைந்து என கடிகாரம் சொல்லவும் சரியாக இருந்தது. கை எழுத்து இட்டுவிட்டு அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். அன்றைய வேலையில் மூழ்கி போயினர். மதிய உணவு இடைவேளையின் போது தான் மீண்டும் சந்திப்பு, ஒன்றாக பங்கிட்டுக்கொண்டு சாப்பிட்டனர்.

மாலை வேலை முடிந்து மீண்டும் நடை.... அதே ரயில், என ஏறிக்கொண்டனர். 
கல்பனா ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க துவங்க அதிலேயே மூழ்கி போனாள். 
விமலாவோ வண்டி ஏறும் முன் வாங்கி இருந்த தண்டு கீரையை அங்கேயே மடியில் ஒரு பிளாஸ்டிக் கவரில் பிரித்து போட்டுக்கொண்டு ஆய ஆரம்பித்தாள். இது அவ்வப்போது வழக்கம் தான்.... வீடு சேர எப்படியும் மணி ஏழாகும், அதற்குப்பின் சமைத்து கணவன் குழந்தையை பசியாற்ற வேண்டும், அதனால பெரும்பாலான ரயில் பெண்களை போல இவளும் சில சமயம் கல்புவும் கூட ரயில் நிலைய வாயிலில் கிடைக்கும் ப்ரெஷ் காய்கறிகள், கீரைகளை வாங்கிக்கொண்டு வந்து ரயிலில் செல்லும் நேரத்திலேயே அவற்றை சுத்தம் செய்து நறுக்கி அதற்குண்டான பைகளில் போட்டு ரெடியாக வைத்துக்கொள்வார்கள். 

இப்போதும் விமலா அதேபோல கீரையை ஆய்ந்தாள், சுத்தம் செய்தபின் பாகில் தான் வைத்திருந்த பிளாஸ்டிக் மணை மற்றும் சிறு மடித்த கத்தியை எடுத்து மளமளவென கீரையை நறுக்க துவங்கினாள்.... அதை நறுக்கி முடித்ததும் அதே பிளாஸ்டிக் கவரில் போட்டு முடிந்து பைக்குள் போட்டாள்..... தொடர்ந்து படிக்க...
http://www.myangadi.com/index.php?route=product/author/info&author_id=1606


Photos courtesy- various websites. Heart felt thanks to original photographers.