Saturday 14 July 2018

NENJIL KODI MINNAL - 11

முதல் நாளே, “மாப்ளைக்கு தகவல் சொல்லணுமே கதிரு என்றார் ராஜலிங்கம். 
அவன் தங்கியிருந்த கல்யாண வீட்டிற்கு போன் போட்டு கதிர்தான் அவனிடம் விஷயத்தை கூறினான்.

“இன்னாது காய்ச்சலா, ஆமா மகராசிய இன்னும் கொஞ்சம் சொல்பேச்சு கேக்காம மழையில ஓடச்சொல்லு.... காய்ச்சல் வராம என்ன பண்ணும்...
என்னமோ செய்யுங்க, ஆக மொத்தம் அவ என்னோட குடித்தனம் பண்ற நினைப்பே இருக்கா மாரி இல்ல.... நீங்களும் எல்லாரும் அதுக்கு ஒத்து ஊதறீங்க.
“நடத்துங்கடா, நானும் பாக்கறேன் எத்தன நாள் ஆடுது அவ ஆட்டம்னு... என கண்டபடி பேசினான்.

“கனகு சார், இது நல்லா இல்ல, அவங்க நினைவே இல்லாம கிடக்காங்க, நீங்க வந்தா நல்லாருக்கும் என்றான் பணிவுடனே வேண்டா வெறுப்பாக.

“ஹாங் ஹாங் எல்லாம் வரேன், இங்க கல்யாண வேல தலைக்கு மேல கிடக்கு, இப்போ கை ஒழியல, அவ நினப்பே இல்லாம கிடக்கான்னா நான் அங்க வந்து மட்டும் என்ன செய்யப் போறன். ஒடம்பு குணமாகி அவ கண் முழிச்சு எந்திரிக்கட்டும் அதுக்குள்ளாற வரேன் என போனை வைத்துவிட்டான்.

‘ச்சே இவனெல்லாம் ஒரு மனுஷன் என கதிர் அவனை திட்டி தீர்த்துவிட்டான் மனதினுள்.

ராஜிக்கு பலம் வந்து மூன்றாம் நாள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். நடக்க விடாமல் தாங்கினர் அனைவரும்.

“அப்பா, நம்ம ஊரு எப்படிப்பா..? என அப்போதும் அவளுக்கு ஊரைப் பற்றிய கவலைதான் வாட்டியது.

“கண்ணு முழிச்சதுலேர்ந்து என்னையும் இதே கேள்விய நூறு முறை கேட்டுப்பிட்டாங்கைய்யா என்றாள் பொன்னி.

“அதுக்கெல்லாம் ஒண்ணும் பங்கமில்ல தாயி... நீ கும்பிடுற உன் ஆத்தா நம்மள கை விடல.... எல்லாரும் சுகமா இருக்காங்க, எல்லோருக்கும் செய்யபோயி நீதான் படுத்துட்டே போ.

“என்னமோ போ, நான் துடிச்சு போய்டேன் என்றார் ராஜலிங்கம்

“என்னப்பா சும்மா காய்ச்சல்தானே
என்று சிரிக்க முயன்றாள்.

“நல்லா சொன்னே, நீ கிடந்த கெடப்ப பாத்து நாங்க எல்லாம் பதறீட்டோம், சின்ன காய்ச்சலாம் அண்ணே, பாருங்க இந்த பச்சை புள்ள பேசுறத.. என முறையிட்டார்.
நான்காம் நாள் காலார தோட்டத்தில் நடந்தாள்.

தனது நந்தவன வீடு எப்படி உள்ளதோ என பதைத்தாள்.

ஆனால் அங்கே போக யாரும் விட மாட்டார்கள் எனத் தெரியும். ‘பொன்னியை ஒரு எட்டு போய் பார்க்கச் சொல்ல வேண்டும், இந்த மழையில் பூச்செடிகளும் மரம் கொடிகளும் எப்படி இருக்கின்றனவோ என மாய்ந்து போனாள்.

புறாக்களுக்கும் அணில்குஞ்சுகளுக்கும் சாப்பாடு.... என வருந்தினாள்.

“பொன்னிக்கா என அழைத்தாள்.

“என்னம்மா? என ஓடி வந்தாள் அவள்.

“பொன்னிக்கா, நம்ம நந்தவனம்....? என இழுத்தாள்.

“ம்ம்ம் நல்லா இருக்கு, ஒரு தீங்கும் இல்ல.... நான் நித்தமும் போய்கிட்டுதான் இருக்கேன்..... அது உங்க செல்லமாச்சுதுங்களே, அப்படி விட்டுடுவேனா என சிரித்தாள்.

“ரொம்ப சந்தோஷம் பொன்னிக்கா என இவள் முகத்திலும் புன்னகை அரும்பியது.
“பொன்னிக்கா, அவுக..? என இழுத்தாள்.

“க்கும், அவுகளுக்கு என்னவாம் இப்போ? என நொடித்தாள்.
“வந்தாகளா என்னை கேட்டாகளா? என்றாள்.

“ஆமா வந்துட்டாலும்... என மேலும் முறைத்தாள்.

“கதிரு தம்பி போன் போட்டுச்சாம்..... முடியாம கிடைக்கையில நா அங்க வந்து என்ன செய்யப்போறேன், முழிச்சுக்கட்டும் அப்புறமா வர பாக்கறேன்னாகளாம் தொர என்றாள் நீட்டி முழக்கி. ‘எல்லாம் உடம்பு கொழுப்பு என மெலிதாக திட்டினாள்.

“ஓ என்று அமைதியானாள் ராஜி.

அன்று மாலை கனகு அங்கே வந்தான். 

“வாங்க மாப்ள
என்றார் ராஜலிங்கம். அவளை எட்டிக்கூட பார்க்காத அவன் மேல் அவருக்கும் கோபமும் வருத்தமும் இருந்தது.

“என்ன மாமா, எப்படி இருக்கா ராஜி..... இதுக்குதான் நான் அவ்ளோ சொன்னேன் போகாதே உனக்கு ஒடம்புக்கு ஒத்துக்காதுன்னு எம் பேச்ச யாரு கேக்குராவ என்றான் ரொம்ப கரிசனம் போல.

“இப்போ தேவலாம் மாப்ள, உள்ள போய் பாருங்க என்றார்.

உள்ளே வந்து அவளைக் கண்டான்.

அமைதியாக அமர்ந்திருந்தாள் ஏதோ புத்தகத்தை புரட்டியபடி.

“தா பார்ரா, என்னமோ முடியாம கிடக்கே, எழுந்துக்கவே இல்ல.... கண்ணையே தொறக்கலன்னாங்க.... நீ இங்கிட்டு ஹாயா புத்தகம் படிச்சுகிட்டு உக்காந்திருக்கே..? என்றான் கேலியாக.

“இன்னிக்கி கொஞ்சம் பரவாயில்ல என்றாள் மெல்ல.

“நல்லதாபோச்சு. பரவாயில்ல தானே, அப்போ கிளம்பு என்றான்.
“எங்கே? என்றாள் துணுக்குற்று.

“எங்கேயா, என் வீட்டுக்கு என்றான்.

அவள் புரியாமல் அவனை பார்த்தாள்.

“இங்கே நமக்கு ஒரு சாங்கியமும் சாந்தியும் நடக்கறாப்பல தெரியல.... நீ வா, என் வீடு இருக்கவே இருக்கு..... அதானே உனக்கும் இனி வீடு.... அங்க போய் நம்ம சந்தோஷமா வாழலாம்.... அப்பப்போ வந்து உங்கப்பார பாத்துட்டு போய்க்க என்றான்.
அவளுக்கு தூக்கிவாரி போட்டது.

“உங்கள இங்கேயே இருக்கணும்னுதானே.... என்று இழுத்தாள். எங்கே அவன் கோபம் வந்து கத்துவானோ என பயந்தபடி.

சாதா நாட்களில் அவள் அசருபவள் அல்ல.... ஆனால் இன்னமும் பலகீனம் இருக்கையில் எந்த ரசாபாசமும் வேண்டாமே, அப்பா வேறு வீட்டில் இருக்கிறாரே என்று...

“ஆமா, நானும் சரீன்னேன், ஆனா இங்கே எனக்குன்னு உள்ள உரிமையவே யாரும் தர மறுக்கறாங்க.... தெனோம் ஏதோ சாக்கு, ஏதோ தொல்ல.... நீண்டுகிட்டே போகுது..... போதும் போதும் கிளம்பு என்றான்.

“இல்ல, என்னால இன்னிக்கெல்லாம் எங்கேயுமே நகர முடியாது.... ஒடம்பு பலகீனமா இருக்கு.... நாக்கு கசப்பா இருக்கு.... முழுசா இன்னும் அன்ன ஆகாரமே உள்ளே போகல நாலு நாளாச்சு....
“கொஞ்ச நாள் போகட்டும், அப்படிதான் வரணும்னா அப்போ பார்க்கலாம்... என்றாள்.
“இன்னாது, பாக்கறியா, கொழுப்பாடீ, இன்னும் என்னத்த நீ பாத்தே, உன் தயவ வேண்டியா இங்க வந்து நிக்கறோம்...?.

“இது உன் புருஷன்காரன் உரிமைடீ, என் உரிமைய நான் கேக்குறேன், இன்னிக்கி ரெண்டில ஒண்ணு எனக்கு தெரிஞ்சாகணும்.... ஆமா சொல்லீட்டேன். போகுது போகுதுன்னு விட்டா ஒரே அடியா ஓரங்கட்டி உக்கார வெச்சுருவீங்க போலவேன். கிளம்புன்னா கிளம்பு. இது என்னோட ஆர்டரு என்றான்.

“முடியாது என்றாள் தீர்மானமாக.

அவளது துணிச்சல் கண்டு அயர்ந்து போனான். கோபம் ஏறியது.

“முடியாதா, என்னையவா முகம் பார்த்து முடியாதுன்னு சொல்லுறே? என்றான் ஆத்திரத்துடன்.

“எப்படி முடியாம போகுதுன்னு நானும் பார்க்குறேன். இன்னிக்கி பைசல் பண்ணீட்டுதான் மறுவேல என அருகில் வந்தான்.

அவள் பயந்துதான் போனாள்.

கலக்கமாக அவனை ஏறிட, “என்ன அத்தான் இது, சொன்னா புரிஞ்சுகோங்க, உடம்பு இன்னும் சோர்வா இருக்கு..... என்னால எழுந்து நிக்க கூட முடியல... என்றாள் கெஞ்சுதலாக.

“நான் நடக்க வக்கறேன் பாருடி என்று அவள் கையைப் பிடித்து இழுத்து எழுப்பினான். அவள் கால்கள் தடுமாற நிலைகொள்ளாமல் அவள் விழப்போக அவளை கைகளில் ஏந்தினான்.

“ஐயோ விடுங்க என்ன, கீழே இறக்குங்க என வீரிட்டாள்.

அவளையும் அறியாமல் “அப்பா என்றாள்

என்னமோ ஏதோ சரியில்லை என ராஜலிங்கமும் பொன்னியும் ஓடி வந்தனர்.

“என்ன மாப்ள இதெல்லாம்? என்றார் ஒரு அதட்டலாக.

“மாமா ஒதுங்கிக்குங்க.... பெரியவருன்னு மரியாதையோட பேசிட்டு இருக்கேன் அத கெடுத்துகாதீங்க..... கல்யாணமாகி ரெண்டு மாசமாக போகுது, ஒரு சாந்தியும் சாங்கியமும் காணும்..... தினத்துக்கும் ஏதோ சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு நாள கடத்தறீங்க.... போதும் நான் பொறுத்தது....
“நான் ராஜிய இப்போவே என் வூட்டுக்கு கூட்டிகிட்டு போறேன், அவ்ளோதான், வழிய விடுங்க....
“அங்க போய் நாங்க எங்க நல்லதோ கெட்டதோ பாத்துக்கறோம் என்றான்.

அவளது கண்கள் சொருகத் துவங்கின. தீனமாக “அப்பா என்றாள் அவரை நோக்கி கை நீட்டி.

“முதல்ல அவள கீழ இறக்குங்க மாப்ள..... அவளுக்கு இன்னும் சரியா தெம்பு கூட வரல... புள்ள அன்னத்த வாயில வெச்சு நாலு நாளாகுது.... விட்டுடுங்க.... எதுவானாலும் அவ பூரணமா குணமான பின்னாடி வெச்சுக்கலாம் என்றார் கெஞ்சுதலாக.

“த பெரிசு, வேணாம்..... நகரு என்றான். மரியாதை குறைந்தது.

ராஜலிங்கத்துக்கு முதுகு தண்டு ஜில்லென்றது. 

‘தப்பு செய்துவிட்டேன்.... என் பச்சைக்கிளியை இந்த முரடனிடம் மாட்டி வைத்துவிட்டேன்.... என் பொன் மகள் வாழ் நாளெல்லாம் இவனுடன் இப்படி போராடப் போகிறாள்
என வயிற்றில் கிளறியது. பந்தாக உருண்டு நெஞ்சுக்கு வந்து முட்டியது. அடைத்தது.

“விட்டுடு கனகு என்றார் இறைஞ்சலாக.

“இல்ல, முடியாது என அவளை அலங்கோலமாக தூக்கிய வண்ணம் முன்னே நகர்ந்தான். ஹாலுக்குள் வர யத்தனிக்க, அங்கே நின்றிருந்த பெரியவர் முருகானந்தமும் அப்போதே உள்ளே நுழைந்த கதிரும் அதிர்ந்து போனார்கள்.

“கனகு, அவங்கள கீழ விடுங்க என்றான் கதிர்.

“ஹே, நீ யாருடா.... வேலைக்கார நாய் நீ... உனக்கென்னடா இந்த வீட்டில அவ்வளவு அதிகாரம் குடுத்து வெச்சிருக்கு.... சி, அந்தால போ என்றான் அவனை ஒரு கையால் நெட்டித் தள்ளி.

கதிர் கால் தடுமாறினாலும் சமாளித்துக்கொண்டான்.

“கதிரு, அவள பலவந்தமா தூக்கிட்டு போறான்..... என்னால தடுக்க முடியல.... எனக் கலங்கினார். அதற்குள்ளாகவே அவருக்கு இதயம் படபடவென அடித்துக்கொள்ளத் துவங்கியது.

பொன்னி சட்டென கந்தன் முனியன் என அனைவரையும் அழைத்து வந்தாள். அவன் வாசலை கடக்கக் கூடாது.... எப்படியும் ராஜியை இவன் பிடியிலிருந்து இன்றைக்கு பொழுதுக்கானும் காப்பாற்றியே ஆக வேண்டும் என முனைந்தாள்.

“நான் வேலைக்கார நாய்தான்... ஆனா, விசுவாசமான நாய்... உன்னைப்போல உண்ட வீட்டில ரெண்டகம் பண்ற ஜாதியில்லை நாங்க.... வேணாம் கனகு, மரியாதையா கேட்டுக்கறேன், அவங்கள கீழ விட்டுடு என்றான்.

“விட முடியாது.... இன்னிக்கி நடக்க வேண்டியது நடந்தே தீரும்
என்றான் கனகு கொக்கரித்தபடி.

“வேணாம் கனகு, அவ பலகீனமா இருக்காப்பா என்று பெரிசு முறையிட்டார். “பெரிசு, நீயே சோத்துக்கு தண்டமா இங்கே ஒண்டிகிட்டு கிடக்கறே, உனக்கெதுக்கு இந்த வாய் பேச்செல்லாம்.....
“எல்லாம் எனக்குத் தெரியும்.... உன்னையப் பத்தி எனக்கு தெரியாதுன்னா நினச்சே, நீ, த, இந்தப் பொன்னி, ராஜி எல்லாம் சேர்ந்து போட்ட நாடகம்தானே இப்போ வர நடந்துச்சு..... நாளும் வாரமும் கடக்க, காப்பாதீட்டதா மனப்பால் குடிச்சீங்களே, எல்லாம் முடிஞ்சுபோச்சுது..... இன்னிக்கி ராவைக்கு கச்சேரிதேன் என்றான் இளித்தபடி.

இதற்குள் ராஜி அவன் தோளில் கண் சொருகி மயங்கியேவிட்டாள்.

அதைக்கண்டு கதிர் பதறினான்.

“கனகு அவங்க மயக்கமாயிட்டாங்க, இந்த சோபாவில அவங்கள படுக்க வெய்யி.... பொன்னிக்கா டாக்டருக்கு போன் போடுங்க என்றான்.

“எந்த மயக்கமும் நான் சரி பண்ணிக்குவேன்.... அவ என் பொஞ்ஜாதிடா, நீ என்ன நாட்டாமை இங்கே.... என முன்னே நகர்ந்தான். அவனை ஒரே தள்ளாக நெட்டித் தள்ளி அவனை  பிடித்துக்கொள்ள, கந்தனும் முனியனுமாக ராஜியை மெல்ல அவன் தோள்களில் இருந்து கீழே இறக்கி சோபாவில் படுக்க வைத்தனர்.

மீண்டும் ஒருமுறை அவன் அவளிடம் வந்துவிடாதபடி அவளை தீண்டிவிடாதபடி அரணாக காவல் நின்றனர்.

பெரியவர் அதிகாரம் கொடுக்காமல் கை ஒங்கக் கூடாது என கண்கள் சிவந்து கோபத்துடன் அசையாமல் நின்றனர். ‘இல்லேனா மவனே, தோல உரிச்சு உப்பு கண்டம் போட்டிருப்பேன்..... ஆயிரம் மாப்பிள்ளையே ஆனாலும் ஒரு பொண்ணு சம்மதம் இல்லாம அவளத் தொடக்கூடாதுன்னு கூட தெரியாது... ஒடம்புக்கு முடியாம கிடக்குறாங்க சின்னம்மா.... இந்த வேளையில இவ்வளோ பெரிய அயோக்யத்தனமா பண்ணுறே? என கண்களாலே அவனை வகுந்துவிட்டான் கந்தன்.

ராஜலிங்கம் இதற்குள் வியர்வை ஆறாக பெருக நெஞ்சை பிடித்தபடி சோபாவில் அப்படியே அமர்ந்துவிட்டார். கதிர் அவரிடம் ஓடினான். 

“ஐயா, என்னாச்சு.... பொன்னிக்கா டாக்டர் என்னசொன்னாரு?
என்று பதறினான்.

“நாம வேணா ஹாஸ்பிடலுக்கு போயிடலாமா ஐயா? என்று கேட்டான். வேண்டாம் என கையை அசைத்தார்.

அதற்குள் டாக்டர் வர, அங்கே இருந்த கலவரம் கண்டு அசந்து போனார்.

“டாக்டர், ராஜி மயக்கமாயிட்டுது கொஞ்சம் சட்டுன்னு பாருங்க.... தம்பியும் நெஞ்ச பிடிச்சுகிட்டு சாஞ்சுட்டான்.... அவசரமா கவனீங்க என பெரியவர் முறையிட்டார்.

நர்சிடம் ராஜியை கவனிக்க கூறிவிட்டு குமார் உடனடியாக ராஜலிங்கத்தை பரிசோதனை செய்தார்.


2 comments: