Wednesday, 29 March 2017

நெஞ்சமதில் உன்னை வைத்தேன் - பாகம் 11

பாகம் 11
ஏன் சித்தப்பா இன்னிக்கே கிளம்பணுமா, இன்னும் ரெண்டு நாளானும் இருந்துட்டு போலாமே?” என்று மாமாவை முறை வைத்து அழைத்து கேட்டுக்கொண்டாள் மது.
இல்லைமா, வேலை இருக்கு... போகணும்... நீங்க வாங்க நம்ம ஊருக்கு... இத்தனை நாளா வித்யா நம்ம ஊர் பக்கமே வரலை... அங்கே எல்லாம் எப்படி நடக்குதுன்னு வந்து பார்க்க வேண்டாமா என்றார்.
வித்யாவிற்கு சொந்தமான சில நிலங்களை அவர்தான் மேற்பார்வை பார்த்துவந்தார். குத்தகைக்கு விடப்பட்டிருந்தது எனினும் அவரும் கண்காணித்து வந்தார்.
வரோம் மாமா, கண்டிப்பா வரோம் இந்த முறை என்றான்.
டீ பெண்ணே மதுரா, இங்க வாடிகண்ணு என்றபடி வந்தார் அத்தை.
என்னம்மா?” என்றபடி இவளும் அன்பாக கேட்டுக்கொண்டே அவரிடம் சென்றாள்.
இந்தா வாங்கிக்க  என்று பட்டுப்புடவை ஒன்றை தாம்பூலத்துடன் வைத்து கொடுத்தார்.
இல்லைமா இதெல்லாம் எதுக்கு என்று மறுக்க...

ஒதை விழும், எனக்கு நீ வேற எங்க சுமா வேற இல்லை... இங்க வந்து உன்ன பாத்ததுக்குப் பிறகு எனக்கு உன்ன மிகவும் பிடிச்சுபோச்சுடா கண்ணு... வித்யா இங்க வாப்பா இத வாங்கிக்க நீயும்... மதுவையும் வாங்கிக்கச் சொல்லு என்றழைத்தார்.
வித்யா வர, அவனுக்கு பணமாக கவரில் வைத்து கொடுத்தார். ‘வாங்கிக்க என்று ஜாடை செய்தான். இருவருமாக அவரை வணங்கி வாங்கிக்கொண்டனர்.
நல்லா இருக்கணும்... இனிமேயானும் இந்த வீட்டில நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கணும் என்று மனதார வாழ்த்தினார்.

சுமா வந்து மதுவை கட்டிக்கொண்டாள்
.
அக்கா எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சு போச்சு... நீங்க கண்டிப்பா எங்க ஊருக்கு வரணும் என்று கொஞ்சிக்கொண்டாள்.
ஒரே நாள்ள எல்லோரையும் வசபடுத்தீட்டாளே!’ என்று மனதார மெச்சிக்கொண்டான் வித்யா. பார்வதிக்கோ பெருமை பிடிபடவில்லை. ஆயினும் காமுவிடம் கூறி மதுவிற்கு திருஷ்டி கழிக்க சொன்னார். அவருக்கு உள்ளூர பயம்.

எல்லோருமாக காலை உணவை சாப்பிட்டனர். பவிக்கு தான் ஊட்டப் போக
வேண்டாம் மம்மி நானே சாப்பிதுவேனே.... நீயும் சாப்பிது என்றது மழலையில்.
அட என் செல்லமே என்று அவளுக்கு பக்குவமாக சின்ன துண்டுகளாக செய்து தட்டில் வைத்துக்கொடுக்க கீழே சிந்தாமல் சமத்தாக சாப்பிட்டது. அவளுக்கும் ஒரு வாய் ஊட்டியது. அதை கண்கள் பனிக்க வாங்கிக்கொண்டாள் மது.
இதை எல்லாம் ஒரு புன்சிரிப்போடு பார்த்திருந்தான் வித்யா. அவனைக்கண்ட பவி அப்பா உனக்கும் என்று ஊட்டியது. அவனும் ஆசையாக வாங்கிக்கொண்டான்.

அத்யாயம் இருபத்தி ஒன்பது
அன்று மதிய உணவை சமைக்கும் பொறுப்பை மது ஏற்றிருந்தாள். அவள் சமையல் அறையில் பிசியாக இருக்க வித்யாவிற்கு ஒரே எரிச்சல். பவி விளையாடிக் கொண்டிருந்தது. அம்மா சற்று நேரம் படுத்துக்கொண்டிருந்தார்சொந்தங்கள் குளிக்க, கிளம்ப பாகிங் முடிக்க என்று சென்றிருக்க, இவன் மெல்ல சமையல் அறையில் எட்டிப்பார்க்க காமு ஆண்ட்டி காணப்படவில்லை.
காமு ஆண்ட்டி என்று கூப்பிட்டான்.
ஆண்ட்டி இல்லைங்க, அவங்க கடைக்கு போயிருக்காங்க என்றாள் மது. “என்ன வேணும் சொல்லுங்களேன் நான் செய்யறேன் என்றாள்.
ஓ ஆண்ட்டி இல்லையா அதான் எனக்கு வேணும் என்று சமைக்கும் அவளை பின்னிருந்து கட்டிக் கொண்டான்.
ஐயோ, என்ன இது யாரானும்  வந்துடுவாங்க...  பேசாம வெளியே போய் ஒக்காருங்களேன் என்றாள் கெஞ்சலாக.
போடி, இன்னைக்கே சமைக்கணும்னு என்ன வேண்டுதல்... அவனவன் கஷ்டம் புரியாம சமையல கட்டிக்கிட்டு அழறா ஒருத்தி என்று அலுத்துக்கொண்டான்.
அவள் பின்னங்கழுத்தில் முகம் வைத்து அவளது ஈர முடியின் வாசனை பிடித்தான்.... கிரங்கிப்போய் ஒரு முத்தம் வைக்க அவள் சிலிர்த்துப் போனாள். ஆயினும் யாரனும் வந்துவிடுவார்களே என்ற படபடப்பும் வெட்கமும் போட்டிபோட்டன.

என்ன இது சமைக்கும்போது என்று முனகினாள்.
நானா சமைக்கச் சொன்னேன்... என்னை கவனிக்கத்தானே சொன்னேன் என்றான் அவன் முனகலாக.
எல்லாம் ராத்திரி முழுக்க திரும்ப காலையிலயும் கவனிச்சாச்சு போறும் என்றாள் சிவந்தபடி.
அடிப்பாவி இதுக்கெல்லாம் கணக்கு உண்டா என்றான் பாவமாக முகத்தை வைத்து.
போதுமே போங்க என் செல்லமில்ல வெளில போய் ஒக்காருங்க... தோ ஆயிடுச்சு நான் வந்துர்றேன் என்றாள்.

அப்போது
அப்பா என்றபடி பவி ஓடி வந்து காலைக்கட்டிக்கொண்டது. அவளை தூக்கிக்கொண்டு  “ வந்துட்டியா டீ என் செல்லமே, உங்கம்மா நல்லநேரத்திலேயே ரொம்ப... நீயும் வந்துட்டியா அவ்ளோதான்.... இனிமே ஒண்ணும் நடக்காது என்றபடி அவளோடு வெளியே சென்றான். மது சிரித்துக்கொண்டாள்

சமையல் முடித்து எல்லோரையும் அமர்த்தி தானே தன் கையால் பரிமாறினாள்
. தடபுடல் சமையல் இல்லை எனினும் மிக நேர்த்தியாக சுவையாக சாம்பார், ரசம், பொரியல் கூட்டு பாயசம் என செய்திருந்தாள். எல்லோரும் அவளை பாராட்டியபடி சாப்பிட்டனர்.

வித்யா அவளின் சமையலை முதன் முறையாகச் சாப்பிட்டான். சொக்கிப் போனான். எல்லோருக்கும் முன் சரியாக பாராட்டக்கூட முடியவில்லையே என ஏக்கம் கொண்டான்.
மேலே வா என்று ஜாடை காட்டிவிட்டு சென்றான்.
அவள் சாப்பிடபின் காமு எல்லாம் நான் பாத்துக்கறேன் கண்ணு... நீ போ களைப்பா இருப்பே என்று அனுப்பி வைத்தார். மது மேலே செல்ல அங்கே ஆர்வமாக ஆவலாக காத்திருந்தான் வித்யா.
நேத்து நைட்டே உனக்கு தரணும்னு வாங்கி வெச்சிருந்தேன்... உன்னக்கண்ட மயக்கத்துல கொடுக்கவே மறந்துட்டேன்... இதை கொடுக்க இப்போவிட்டா வேற தருணம் இல்லை கண்ணம்மா என்று உருகியபடி அவள் கையில் ஒரு பரிசு பொருளை கொடுத்தான்.

என்ன இது?” என்றாள்.
திறந்து பாரு என்றான். அவள் அதை திறக்க ஒரு அழகிய வைர மோதிரம் ஜொலித்தது.
வைரமாட்டமா... என்றிழுக்க
ஆமா அதுக்கென்ன இப்போ என்று கண்டித்தான். அவனிடம் தன் விரலை நீட்ட அவனே அதை அவளின் மோதிர விரலில் ஆசையாக போட்டுவிட்டான். அந்த விரலை பிடித்து முத்தமிட்டான்.
அவள் அதையே கண்டபடி கண்கள் பனிக்க ரொம்ப அழகா இருக்கு அத்தான் தாங்க்ஸ் என்றாள்.
அது என்ன டிசைன்னு கண்டு பிடித்தியா?” என்றான்.

அப்போது அவள் அதை உற்றுபார்த்தாள்
. அதில் ஒரு எம் மற்றும் வீ பிணைந்திருந்ததைக் கண்டாள்... சிலிர்த்துபோனாள்... கண்மூடி நின்றாள்.... அதில் மெல்லியகோடாக ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
என்ன?” என்றான் அவளை அணைத்தபடி.
ஒன்றுமில்லை, தோ வரேன் என்று உள்ளே ஓடினாள். அவன் ஆச்சர்யமாக பார்த்திருக்க, ஒரு பரிசுபொருளை எடுத்துவந்து அவன் கையில் கொடுத்தாள்.
அட என்றபடி வாங்கித் திறந்தான்... திறந்து பார்த்தவன் பிரமித்து நின்றான்... இப்போது புரிந்தது அவளின் ஆனந்தக் கண்ணீர் எதனால் என்று.
எப்பிடிடீ?” என்றான். அவள் சிரித்தாள்... அவன் மார்பில் சாய்ந்தாள்.
ஆம் அவள் அவனுக்காக என வாங்கிய தங்க கப்ளிங்ஸ் மற்றும் டை பின்... அதிலும் வைர மோதிரம் போலவே அவளும் தான் பிரத்யேகமாகச் சொல்லி அதே போன்ற எம் மற்றும் வீ டிசைன் செதுக்கி வாங்கி இருந்தாளே.
இருவரும் சில நிமிடம் எதுவும் பேச்சின்றி ஒருவர் அணைப்பில் ஒருவர் பின்னிக்கிடந்தனர்.

மது, இன்னிக்கி எல்லாரும் ஊருக்கு கிளம்பறாங்க... நாம தேன் நிலவுக்கு ப்ளான் பண்ணிடலாமா?” என்றான் ஆசையாக.
தேன் நிலவா, பவிய விட்டுட்டு எப்பிடி அத்தான்?” என்றாள். அவன் முகம் சுருங்கினான்.
பவி அம்மாகிட்டதானே வளர்ந்தா இத்தனை நாளும் மது?” என்றான் ஆற்றாமையோடு.
உண்மைதான்... இப்போ நான் இங்கே வந்துட்டேன்னு கண்டு ஏதானும் ரகளை செய்வாளோன்னு தான் சொன்னேன் எனக்கு மட்டும் ஆசை இல்லையா விது என்றாள் கொஞ்சலாக.
போ, அது எல்லாம் இருந்துப்பா... அம்மா பாத்துக்குவாங்க... நீ கிளம்பற வழியப்பாரு... எங்க போக ஆசைப்படறே அதை மட்டும் சொல்லு என்றான்.
நான் சொன்னா நீங்க சிரிப்பீங்க என்றாள்.
அதெல்லாம் ஒண்ணுமில்லை சொல்லு என்று குழைந்தான். அவள்

ஒப்புக்கொண்டதே அவனுக்கு மகிழ்ச்சி
.
எனக்கு உங்க ஊருக்கு போகணும்போல இருக்கு விது... நான் கிராமமே கண்டதில்லை... பச்சைப்பசேல் புல்வெளியும் தலை ஆட்டும் கதிர்கள், தென்னந்தோப்புமாக பார்க்கணும்னு ஆசை என்றாள் தயக்கமாக.
அவன் கோ வென சிரித்தான். “கஷ்டம்டீ. நீ எந்த ஸ்விஸ் கோ லண்டனுக்கோ கேப்பேன்னு பாத்தா எங்க கிராமத்திற்கு போகணும்னு கேட்பேன்னு நான் நினைக்கவேயில்லைபோ... நிஜமாவா கேக்கறே... இல்லை கேலி பண்றியா?” என்றான்.
இல்லை விது நிஜம்மா என்றாள் ஆர்வமாக.
அவ்வளவா ப்ரைவசி இருக்காதே என்று முனகினான்.
ஒண்ணு பண்ணுவோம் ரெண்டு மூணு நாள் அங்கே போய்ட்டு பின்னோட உங்க இஷ்டப்படி எங்கியானும் போகலாம் ரெண்டு மூணு நாளு என்றாள்.

சரி நீ ஆசைப்பட்டு கேட்கிறே... அப்படியே செய்வோம்... நீ புத்திசாலி என்றான்.
ஏன் என்பதுபோல பார்க்க
நம்ம கிராமம்னா அம்மாவையும் பவியும்கூட கூட்டிப் போகலாம்... அவங்கள நாம கண்காணிக்கவோ கவனிச்சுக்கவோ தேவை இல்லை... ஆனா அவங்களும் வருவாங்க நம்ம கூட ஒரே வீட்டுல இருப்பாங்க... அதான் உன் ப்ளான் என்றான்.
அவள் அதை யோசித்திருக்கவில்லை... எனினும் அவன் கூறியபோது ஓ அதுவும் அப்படியோ என்று சந்தோஷமானது. அவள் வெள்ளையாய் சிரித்தாள்.
அப்படி சிரிக்காதே என்று நெருங்கினான்.
அவள் நகராமல் அவனை ஆழ்ந்து பார்த்து பேசாமல் நின்றாள். அவன் அருகே வந்து முத்தமிட கண்ணில் ஒரு மயக்கத்தோடு வாங்கிக் கொண்டாள்.

அத்யாயம் முப்பது
அடுத்த இரு நாளுக்குபின் வித்யா மதுவுடனும் பார்வதி பவியுடனும் தங்கள் கிராமத்திற்குச் செல்ல ஏற்பாடுகள் செய்தான். அங்கேதான் மாமாவும் வாழ்ந்தார். தாங்கள் அங்கு வரப்போவதாக அவருக்கு தெரிவித்தும் அவருக்கு ஏக சந்தோஷம்.
ரொம்ப சந்தோஷம் வித்யா... எம் பொண்ணு வந்த நேரம் உனக்கு இங்கே வரணும்னு தோணிச்சே என்று சிலாகித்தார்.
நான் எல்லா ஏற்பாடும் செய்துடறேன்...” என்று துள்ளினார் வாலிபனைப்போல.
உங்க பூர்வீக  வீடு இப்போதைக்கு காலியாத்தான் இருக்கு.... நல்ல சௌகரியமா இருக்கும்.... வசதி பண்ணி வெச்சிடறேன் என்றார்.
நீங்க நம்ம வீட்டுல சாப்பிடுக்கலாம்... அக்காவும் குழந்தையும் எங்களோடு இங்கேயே தங்கட்டும்... நீயும் மதுராவும் அங்க தங்கிக்குங்க. உங்களுக்கும் கொஞ்சம் ப்ரைவசி கிடைக்கும் என்றார் அந்த எல்லாம் தெரிந்த பெரியவர் இவன் மனதை படித்ததுபோல.

இவன் வெட்கத்தோடு சிரித்து
சரி மாமா என்றான்.
சரி சரி புரியுது வித்யா... வந்து சேருங்க என்று அவரம் சிரித்தார்.
ரயிலில் பயணம் செய்து திருச்சியை சென்றடைந்தனர். அங்கிருந்து ஒரு வண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டான் வித்யா. அந்தக் காரில் திருச்சியில் இருந்து அவர்களின் கிராமத்தை சென்றடைந்தனர். காரில் வரும் வழி எல்லாம் மது ஆசைப்பட்டது போல பச்சை வயல்களைக்கண்டு குதூகலித்தாள். தென்னையும் மாவுமாக தோப்புகள் ஆங்காங்கே காணப்பட்டன. அவளுக்குள் ஒரே மகிழ்ச்சி. அவள் முகம் கண்டு வித்யா புன்னகைத்துக்கொண்டான். மாமா காத்திருந்தார்.
வாடா மருமகனே வாம்மா மதுரா என்று அழைத்தார்.
மாமி வாசலுக்கு வந்து ஆரத்தி சுற்றி திருஷ்டி கழித்து அழைத்துச் சென்றார்.
வாங்க அண்ணி என்று மாமி பார்வதியையும் குழந்தையும் கூட்டிச் சென்றார்.

இங்கே வந்தபின் அவள் மேலும் ஆச்சர்யப்பட்டாள்... மாமாவின் வீடு பழங்காலம் போல் நடுவில் மித்தம் அதைச் சுற்றி அறைகள் முன்கட்டு பின் கட்டு என்று அமைந்திருந்தது... வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்து மகிழ்ந்தாள்... எடுத்தவுடன் இரு பக்க்கமும் ரெட் ஆக்சைட் போட்ட மழு மழுவேன்ற திண்ணை சிகப்பாக ஒளிர்ந்தது தண்ணென இருந்தது... முன்கட்டில்  காமிரா அறை என்று ஒன்று இருந்தது. அதை மாமா தன் அலுவலக அறையாகப் பயன்படுத்தினார்.... அதைத் தாண்டி உள்ளே வர, இடதும் வலதுமாக இரு பக்கமும் வெராண்டா போல உள்ளே வளைந்து சென்றது... இருபக்கமும் அதை ஒட்டி நான்கு அறைகள் இருந்தன... நடுவில் வானம் பார்த்து சாளரம் பதித்த மித்தம் இருந்தது... அதன் நடுவில் துளசி வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டிருந்தது... அங்கேயே சில தானிய வகைகள் முறத்தில் காயப்போடப்பட்டிருந்தன... அதைத் தாண்டி பின்கட்டு, அங்கே சமையல் அறையும் அதை ஒட்டிய சாப்பாட்டு மேஜையுமாக இருந்தது. அதன் பின் மளிகை சாமான்களும் மற்றவையும் வைக்க உக்கிராண அறையும் அதன்பின் தாழ்வாரமும் காணப்பட்டன... அதைவிட்டு வெளியே வந்தால் கிணற்று மேடை துவைக்கும் கல், செடிகளும் மரங்களும் நிறைந்த தோட்டம். சுற்றுச்சுவர் ஓரம் மாட்டுகொட்டில்.
இவ்வளவையும் கண்டு பிரமித்து போனாள் மது. பெரும் உவகையோடு சுற்றி வந்தாள்.

என்னம்மா, வீடு ரொம்ப பிடிச்சுட்டாப்போல இருக்கு என்றார் மாமா.
ஆமாம் சித்தப்பா ரொம்பவே பிடிச்சிருக்கு என்றாள் ஆர்வமாக. வித்யா சிரித்துக்கொண்டான்.
அவனவன் பெண்டாட்டிய சுவிஸ்க்கு அழைச்சுட்டு போய் ஏழு நக்ஷத்திர ஹோட்டலில் தங்க வைத்து தாங்குவான். இவளப்பாரூ  இந்த மித்தத்தையும் தோட்டத்தையும் பார்த்து ரசிச்சுட்டு இருக்கிறா என்று தோன்றியது.

எல்லோரும் குளித்து முடித்து காலை உணவை உண்டபின் சோர்வோடு பார்வதியும், விளையாட என்று பவியும் தங்கிவிட மதுவை அழைத்துக்கொண்டு வித்யா வெளியே சென்றான்.
நடப்பியா?” என்றுகேட்டான்
என்றாள் உற்சாகமாக.
சரி வாஎன்று அவளோடு கையோடு கைகோர்த்துக்கொண்டு மெல்ல களத்து மேட்டை நோக்கி நடந்தான். தன் புடவையின் முன் கொசுவத்தை சற்றே தூக்கி பிடித்தபடி அவன் கை பிடித்து வரப்பின் மீது நடப்பது அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.

இங்கே பாரு மது, இங்கிருந்து அதோ அங்கே தெரியுதே ஒரு மாந்தோப்பு அதுவரை நம்ம நிலம்தான் டா என்றான்.
பச்சை பசேல் என நெற்பயிர்கள் தலை அசைத்துக்கொண்டிருந்தன... வரப்பின் ஊடே மெல்ல விழாமல் பாலன்ஸ் செய்து நடந்தபடி மாந்தோப்பை அடைந்தனர்... அங்கே சட்டென்று ஒரு குளுமையும் இருளுமாக கவிழ்ந்திருந்தது... அதைக்கண்டு அவள் ஆச்சர்யப்பட்டாள். அவளை அழைத்தபடி உள்ளே சென்றான்... அங்கே அதன் முடிவில் ஒரு  ஓடை மெலிதாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு சின்ன குடிலும் கட்டப்பட்டிருந்தது.

இது நம்ம மாந்தோப்பு மது... இந்த ஓடையில மழை காலத்தில நிறைய தண்ணீர் பாயும்... இப்போ அவ்வளவா இல்லை.. ஆனாலும் என்னிக்குமே வற்றியதில்லை... இந்த குடில் நாங்க யாரானும் வந்தா இளைப்பாரவோ இல்லை இரவு காவல் காப்பவங்க தங்கவோ உபயோகமா இருக்கும்னு எங்கப்பா கட்டினது... எனக்கு இந்தக் குடில் ரொம்ப பிடிக்கும்... நான் பத்தாவது  வரை திருச்சியில் தான் படித்தேன்... விடுமுறை நாட்களில் இங்க கிராமத்துக்கு வந்துருவோம். மாமா வீடும், பக்கத்துல கூப்புடு தூரத்துல அத்தையின் வீடும் இருந்தது. அங்கே இங்கே னு ஆட்டம் போடுவோம் நானும் பார்த்தியும் பட்டாபியும். அவன்தான் எங்க இருக்கானோ தெரியல. டச் விட்டுப்போச்சுஎன்றான்.

பின்னோடு நாங்க சென்னைக்கு மாறிப்போக பார்த்தி குடும்பம் கோவைக்கு மாறிப் போனது. அதுவரை இந்த ஓடையில நீந்தி குளித்து ஆட்டம் போட்டிருக்கோம் என்று அந்த ஓடைக்கரையில் அவளோடு அமர்ந்தான். நீரில் காலை தொங்கவிட்டபடி ஒரு மரக்கட்டை மீது அமர தண்ணென நீரின் தன்மை காலில் உரைக்க சிலிர்த்தது மதுவிற்கு.
அவளை தன் இடது கையால் அணைத்தபடி பழைய நினைவுகளை அசைபோட்டபடி அமர்ந்திருந்தான் வித்யா.

மது இங்க வர ஆசைப்பட்டதும் நல்லதுக்கே... எனக்கே இங்கே வந்து பழைய நினைவுகள் வந்து உற்சாகமாக இருக்கிறதே, முதன்முறையாக வருகிறாள் அவளுக்குமே இது மிகவும் பிடித்துதானே போகும் என்று வியந்தான்.
அவர்களைக் கண்டு தோட்டக்கார தாத்தா வந்தார்.
யாரு?” என்று கண்மீது கைவைத்து இடுங்கி பார்க்க
நாந்தான் தாத்தா, வித்யா என்றான் சற்று உரக்க.
யாரு வித்யா தம்பியா, பட்டணத்தில் இருந்து எப்போ வந்தே தம்பி?” என்றார் உற்சாகமாக.
காலையில தான் தாத்தா, நீங்க எப்பிடி இருக்கீங்க பாட்டி நல்லா இருக்காங்களா?” என்று விசாரித்தான்.
இது என் மனைவி தாத்தா... மூணு நாள் முன்னாடிதான் கல்யாணம் ஆச்சு என்று அறிமுகப்படுத்தினான்.
அவளும் கைகூப்பி வணங்கினாள்.
அப்படியா! லக்ஷணமா இருக்குது புதுப்பொண்ணு.... கல்யாணம்னு தெரியும் தம்பி.... உங்க மாமா சொன்னாங்க.... எங்களுக்கெல்லாம் புதுத் துணி கூட குடுக்கச் சொன்னீங்களாமே.... ரொம்ப சந்தோஷமா இருந்தது தம்பி என்றார் நிறைவாக.
இங்கேயே இருங்க தோ வரேன், உங்க பாட்டிக்கிட்ட சொல்லி கூட்டியாறேன் என்று மாயமானார்.

தாத்தா என்றாலும் பார்வை கொஞ்சம் மழுங்கி இருந்ததை தவிர கிண்ணென்று இருந்தார்
. பின்னோடு பாட்டியுடன் கையில் இளநீர் சுமந்து வந்தார்.
இவளைக் கண்டு பாட்டி முகம் வழித்து திருஷ்டி கழித்தார்
என்ன அழகா இருக்குது புதுப்பொண்ணு!” என்று மாயந்துபோனார்.
நல்ல ஜோடிதான் என்று மெச்சினார். மதுவிற்கு வெட்கமாகியது.
அட புள்ள வெட்கபடுதுங்கறேன் என்று அதற்கும் சிரித்தார்.
இளநிர் சாப்பிடுங்க தாகத்துக்கு என்று உபசரித்தனர்.

அவர்கள் சென்றுவிட அங்கு அவர்கள் இருவருமே இருந்தனர்
. அந்த குளுமையான மாந்தோப்பின் அரை இருட்டில் தன்னோடு சேர்த்து மதுவை அணைத்தபடி உள்ளே நடந்தவன் சட்டென்று ஒரு மரத்தின் மறைவில் அவளை இறுக்கிக்கொண்டான். அவள் முகம் நோக்கி குனிந்து இதழ் படித்து கழுத்தில் முகம் புதைத்தான். அந்த நேரத்தில் அந்த இடத்தில அந்த நிமிடம் அப்படியே நின்று போகாதா என்று இருவர் உள்ளமும் அன்பில் தளும்பி நின்றது. அவளை மீண்டும் மூர்கமாக முத்தமிட்டு நிமிர்ந்தான் வித்யா. முகம் சிவக்க அவனைக் காணவும் முடியாது தலை குனிந்து அவனோடு இணைந்து நடந்தாள் மது.

மாங்காய் பறித்துக் கொடுத்தான்
. கொஞ்சம் தின்றுவிட்டு ஐய்யே புளிக்குதுங்கஎன்றாள் முகம் கோண.
ஆமாடி இப்போ அப்படிதான் புளிக்கும்.... கொஞ்ச நாள்ள இதையே விரும்பி கேப்பே பாரு ஆசையா என்றான் கண் அடித்தபடி.
முதலில் புரியாமல் பின்னோடு சீ போங்க..” என்று முன்னே ஓடிவிட்டாள்.
சிரித்தபடி அவளை ஓடிப் போய் பிடித்தான். “என்னடி எப்போ பாரு வெக்கம்..... உண்மைதானே நான் சொன்னது என்றான். அவள் பேசாமல் தலை குனிந்தாள்.

வீடு வந்து சேர்ந்து மாமி கொடுத்த விருந்தை உண்டு கொஞ்சம் இளைப்பாறினர். அன்று மாலை எழுந்து காபி ஆனவுடன் காலாற நடந்தனர். அப்போது பார்வதியையும் பவியையும் கூட்டிக்கொண்டனர். அங்கே இருந்த அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அதை ஒட்டிய குளத்தில் மீன்கள் துள்ளி விளையாட அவற்றிற்கு பொறி போட பவிக்குக் கற்றுக் கொடுத்தான். அது குதிகுதி என குதித்தபடி பொறி போட்டது. மீனை பிடிக்க ஓடியது. அது நழுவ கிளுகிளுவென சிரித்தது. அதைக்கண்டு வித்யாவும் மதுவும் கூட சிரித்துக்கொண்டனர்.

அம்மனை மாலை தீபாராதனையில் தரிசித்து வெளியே நடந்தனர்
. அங்கே அணிவகுத்திருக்கும் கடைகளில் அவளுக்கு கண்ணாடி வளையல்களும் பவிக்கு சில எளிமையான பொம்மைகளும் வாங்கித் தந்தான்.
மது அவனை ஆச்சர்யமாக பார்த்திருந்தாள்.  லக்ஷங்களில் புரளும் ஒரு கம்பனியின் எம் டி தன்னோடு தனக்காக தனது கிராமத்தில் வந்து அவளுக்கென கண்ணாடி வளையல்கள் வாங்கிக் கொண்டிருந்தான். அவள் அதை எண்ணி பூரித்துப்போனாள். பெருமையும் கொண்டாள். இவனது வேர் இங்கே ஆழமாக இறங்கி உள்ளது என்பதை அறிந்தாள். எந்த ஒரு பகட்டும் வேஷமும் இன்றி எளிமையாக அவன் நடமாடுவதைக்கண்டு அசந்து போனாள். அவள் மனவானில் மேலும் மேலும் அவன் ஏறிக்கொண்டே போனான். இவன் என்னுடையவன் என்று இருமாந்தாள் அந்த மங்கை.

அத்யாயம் முப்பத்தி ஒன்று
வீட்டிற்கு வந்து இரவு உணவு உண்டு பவியை மடியில் கிடத்திக் கொண்டு பெரியோர்கள் அந்தகால கதைகள் பேசிக் கொள்வதை ஆர்வமாக கேட்டபடி இருந்தாள் மது. பவி அவள் மடியில் தூங்கி இருக்க பார்வதியின் அறையில் அவளை கொண்டுகிடத்திவிட்டு வந்தான் வித்யா.
வித்யா நீயும் மதுவும் பக்கத்து உங்க வீட்டுல போய் படுத்துக்குங்க.... அங்கே சுத்தப்படுத்தி உங்களுக்கு எல்லா வசதியும் செஞ்சு வெச்சிருக்கேன் என்றார் மாமா.


தொடரும்...