Wednesday, 27 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE 10 - FINAL

“சரி வா, இந்த ஸ்ட்ரெயினே உனக்கு இப்போதைக்கு போதும், கொஞ்சமா ஏதானும் சாப்டுட்டு படுத்துக்கோ குட்டிமா” என்று அழைத்துச் சென்றான். பொம்மை போல அவனுடம் நடந்து சென்றாள்.
என்ன என்று கேட்க வாயை திறந்த அன்னையை கண்ணால் அடக்கினான். கொஞ்சமாக சாப்பிட்டாள். அவளது மாத்திரைகளை குடுத்து மீண்டும் கூட்டிச் சென்று படுக்க வைத்தான். சில நொடிகளில் உறங்கி போனாள். அவள் ஆழ்ந்து உறங்குவதை கண்டு அவன் வெளியே வந்தான்.

“எல்லா உண்மையையும் ஒரே நாளில் தெரிஞ்சுகிட்டு அதிர்ச்சியாகி இருக்கா மா..... கொஞ்சம் பொறுமையா பார்த்து தான் நடந்துக்கணும் அவகிட்ட” என்றான்.
“ஆமாம் பா..... நீ ஆபிசுக்கு நாலு நாள் லீவு போட்டுட்டு அவ கூடவே இரு, அவ முகமே இன்னும் தெளியல” என்றார் சிவகாமி.
“சரி மா” என்றான்.

அடுத்து வந்த சில நாளில் அப்படியே அவளுடன் நேரம் செலவழித்தான். மெல்ல மெல்ல சித்ராங்கி சகஜ நிலைக்கு மாறினாள்.... உடலும் தேறியது..... எப்போதும் போன்ற கலகலப்பு உடனே வரவில்லை வராது கூட, அதுவும் அவன் அறிந்ததே..... ஆனாலும் கண்ணாடியின் முன் சென்று நின்று தன் முகத்தையே பார்த்தபடி நிற்கும் வேளைகள் தவிர மற்ற நேரங்களில் நார்மலாகவே சகஜமாகவே இருந்தாள்..... நடமாடினாள் பேசி சிரித்து பழகினாள்..... கலாவை மடியிலேயே வைத்து சீராட்டினாள்.

டாக்டர் கோபினாத்திடம் அனைத்தையும் எடுத்து கூறி தங்களது நன்றியையும் மகிழ்ச்சியையும் இருவரும் தெரிவித்துக்கொண்டனர். அவன் கூறியதன் பேரில், மாயா போலவே ‘டாக்டர்பா’ என்று அழைத்து பேசினாள் சித்து. கோபிநாத்திற்கு கண் கலங்கி போனது.
“:ஒரு முறை வந்துட்டு போங்க சித்ரஞ்சன்” என வேண்டிக்கொண்டார்.
“கண்டிப்பா வரோம் டாக்டர், உங்கள எங்களால எப்படி மறக்க முடியும்.... எங்கள் குல தெய்வம் நீங்க” என்றான் உணர்ச்சிபூர்வமாக.

அந்த வியாழன் அன்று மாலை ஐந்து மணி வாக்கில் வாயிலில் யாரோ நிழலாட, “யாரது?” என்று சென்று கேட்டாள். அவன் அவளையே பார்த்த வண்ணம் பேசாமல் நின்றிருந்தான்.
“நீங்க யாரு, எனக்கு தெரியலையே?” என்றாள் மீண்டும் மரியாதையாக ஏனென்றால் அவனை கண்டால் படித்த பண்புள்ள மனிதன் போலத்தான் தெரிந்தான்.
“மாயா” என்றான் அவன் மெல்ல.
“மாயாவா, அப்படி யாரும் இங்கில்லையே” என்றாள்.
“நீங்க மாயா” என்றான் மறுபடி.
“இல்லை, உங்களுக்கு ஏதோ கன்ப்யுஷன் போல, நீங்க யாரை பார்க்கணும்?” என்றாள் தன்மையாக.
வந்தது வெங்கட், மாயா அவனை அடையாளம் கூட கண்டுகொள்ளவில்லை என அறிந்து அவனுக்கு விசனமானது. ‘ஆறு மாதங்கள் தினமும் கண்டு பழகியவனை அப்படியா மறந்து போகும்.... நான் என்ன அவ்வளவு மோசமானவனா, அவளை காப்பாற்றியவன் என்ற நன்றி வேண்டாம், யார் என்றே தெரியாது என்கிறாளே...’ என்று குழம்பி தவித்தான்.
“மிஸ்டர் ரஞ்சன் இல்லையா?” என்றான்.
“இப்போ வர்ற நேரம்தான், உங்களுக்கு அவர தெரியுமா?” என்றாள்.
“தெரியும்” என்றான்.
“அப்போ உட்காருங்க. அவர் இப்போ வந்துடுவார்.. பார்த்துட்டு போகலாம்” என்று சோபாவை கை காட்டினாள்.

காபி கொண்டு வந்து கொடுத்தாள்.... பின்னோடு ரஞ்சன் வந்தான்.... வெங்கட்டை கண்டு ஒரு கணம் மலைத்து
“ஹே வெங்கட், நீங்க இங்க..... என்ன ஒரே ஆச்சர்யமா இருக்கு” என்று கை கொடுத்தான்.
“சித்து, வந்துடீங்களா, இவர் யாரோ தெரியல, யாரோ மாயானு கேக்குறாரு... இங்க அப்படி யாரும் இல்லைனேன், பின்னால உங்கள கேட்டாரு.... அதான் உட்கார வெச்சேன்” என்றபடி கலாவுடன் வந்தாள் சித்ராங்கி. அவனுக்கும் காபி எடுத்து வந்தபடி.
“நீயும் இங்க உட்காரு சித்து” என்றான் ரஞ்சன்.

“இவர் பேரு வெங்கட், நமக்கு ரொம்ப வேண்டியவர்.... நம்ம குல தெய்வமா பூஜிக்க வேண்டியவர்” என்றான்.
“என்ன சொல்றீங்க?” என்றாள் பிரமித்து புரியாமல்.
“நீ அப்போ ரயில் விபத்தில மாட்டிகிட்ட போது இவர்தான் உன்னை காப்பாற்றினார் சித்து” என்றான்.
“என்னது இவரா அவர்.... கடவுளே, சாரி மிஸ்டர் வெங்கட்.... நான் உங்களை தெரிஞ்சுக்கலை, என்னை மன்னிச்சுடுங்க, என் உயிரையே காப்பாத்தி இருக்கீங்க..... ரொம்ப நன்றி” என்றாள் கண்ணீருடன்.

“ஐயோ ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாம்” என்றான்.
பின் யோசனையுடன் அவன் ரஞ்சனை பார்க்க அவன் பார்வையில் ஆயிரம் கேள்விகளை கண்டான் ரஞ்சன்.

“நீங்க நினைக்கறது ரொம்ப சரி வெங்கட், சித்ராங்கிக்கு பழைய நினைவுகள் வந்துடுச்சு... ஆனா மத்தியில இருந்த காலங்கள் மறந்துடுச்சு..... டாக்டர் கோபிநாத், இந்திரா, நீங்க, உங்க யாரையுமே அவளுக்கு இப்போ அடையாளம் தெரியாது..... ஆனா அதை அப்படியே விட முடியாது, அவ இன்னிக்கி உயிரோட இருக்கறதுக்கு காரணம் நீங்க எல்லாம்தான்.... அதான் அவளுக்கு இப்போ சொல்லி புரியவெச்சு அறிமுகம் செய்தேன்” என்றான் ரஞ்சன்.
“ஒ ஞாபகம் வந்துடுச்சா, தட்ஸ் கிரேட்” என்றான் சந்தோஷமாக.... ஆனால் தன்னை கவனம் இல்லையே என்ற வேதனை அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது....

இத்தனை நாளாகியும் அவனால் அவளை மறக்க முடியவில்லை என்பதுதான் உண்மை..... காதல் சொல்லி திளைக்கவில்லை எனினும், அண்ணன் தங்கை உறவும் இல்லை, நட்பின் எல்லையை கடக்கவும் முடியாமல் அங்கேயே நிற்கவும் முடியாமல் அவளை தினமும் கண்டு செல்வதே மகிழ்ச்சி என்று தான் எண்ணி இருந்தான் வெங்கட். அவளுக்கு பழைய நினைவுகள் இல்லை, அதனால்  அவள் யாரென தெரியாத நிலையில் எப்படியாகவும் பழைய உறவுகள் அவளை வந்தடைய முடியாது. அப்படி ஆகுமேயானால் சில மாதங்கள் பொறுத் டாக்டரிடமே கூறி அவளை மணக்க முடிந்தால்.... என்ற ஒரு சின்ன ஆசை, ஆவல் முளை விட்டிருந்தது எனலாம்.

அது, சித்ரஞ்சன் வந்து ஒரே நொடியில் வடிந்து போனது. ஆனாலும் மாயா என்ற மாயை அவனை விட்டு விலக்க அவனால் இன்னமும் முடியவில்லை. ஒரே ஒரு முறை அவள் நல்லபடி வாழ்கிறாள் சந்தோஷமாக இருக்கிறாள் ஆரோக்யமாக இருக்கிறாள்.... என்று நேரில் கண்டு வந்தால் தேவலாம் போல இருக்க, கிளம்பி வந்திருந்தான்.... வந்த இடத்தில அவளால் அவனையே தெரிந்துகொள்ள முடியாத நிலை.

இதுதான் விதி என்று தன்னையே தேற்றிக்கொண்டான்.
“நான் கிளம்பறேன் மிஸ்டர் ரஞ்சன்” என்று எழுந்தான்.
“இருங்க சாப்டுட்டு போகலாம் நொடியில சமைச்சுடுவேன்” என்று எழுந்தாள் சித்ராங்கி.
“இல்லை வேண்டாம்” என்று எழுந்தான்.
“வெங்கட், அவளுக்கு உங்களை ஞாபகம் இல்லாதது விதி, போனாபோகுது.... ஆனா நீங்க எங்க வீடு தேடி வந்திருக்கீங்க... ஒரு வேளையானும் இங்கே எங்களோட சாப்பிடனும்னு நானும் கேட்டுக்கறேன்..... ப்ளீஸ் மறுக்காதீங்க” என்றான் ரஞ்சன். அவன் மீண்டும் வற்புறுத்த சரி என்றான்.
சித்ராங்கி உள்ளே சென்று சமையலை மளமள வென முடித்து இலை போட்டாள்.... ரசித்து உண்டான்.... மனமார பாராட்டினான்.... தன் கணவன் தன் குழந்தை, தாய், அத்தை என தன் நிலையும் உணர்ந்து சந்தோஷமாக வாழும் அவளை கண்டு மனம் நிறைந்தது வெங்கட்டிற்கு..... அந்த நிறைந்த மனதுடனேயே அவளை வாழ்த்திவிட்டு விடை பெற்றான்.

இப்போது முழுமையாக  பழைய சித்ராங்கியாக அவள் மாறி இருந்தாள். சித்துவிடம் கூட பழைய சீண்டலும் கேலியும் அன்புமாக காதலுடன் நடக்க துவங்கினாள். அவனும் குட்டிமா என்று காதலுடன் அவளையே சுற்றி வந்து அவளை கவனித்துக்கொள்ள அவளுக்கு தனக்குள் இருந்த பழைய நினைவுகள் கிளர்ந்து மேலெழுந்தன.

“சித்து” என்றாள் அன்று இரவு அவனிடம்.
“என்ன குட்டிமா?” என்றான் ஏதோ புக் படித்தபடி.
“அதை கீழ வையுங்க, நான் முக்கியமா பேசணும்” என்றாள்.
“என்ன சொல்லு குட்டிமா” என்றான் அதை மூடிவிட்டு.
“வந்து சித்து, நீங்க... வந்து.... என்னை கண்டுபிடித்து கூட்டி வந்த பிறகு என்னிடம் எப்படி நடந்துகிட்டீங்க.... நான் உங்களை கலாவை எல்லாம் நல்லா கவனிச்சுகிட்டேனா, நான் உங்களை அடையாளமே தெரிஞ்சுக்கலையே, பாவம் நீங்க எல்லாரும் எவ்வளோ வருத்த பட்டிருப்பீங்க இல்லையா சித்து” என்று கேட்டாள்.

“ஆமாண்டா, கொஞ்சம் வருத்தமாத்தான் இருந்தது..... ஆனாலும் நீ முழுசா கிடைத்ததே போதும்னு மெல்ல உன்னை நாங்க நார்மலாக்க முயன்றுகிட்டு இருந்தோம்..... நீ கலாவை உடனே தாயா புரிஞ்சு ஏத்துகிட்டே.... அவளுக்கு எல்லாம் செய்து குடுத்து எப்போதும் போல அன்பா  பார்த்துகிட்டே... அம்மாவை தெரியலைனாலும் அம்மான்னு கூப்பிட்டு சகஜமா மரியாதையா பேசி பழகினே, ஆனா...” என்று ‘சொல்லவா வேண்டாமா, அவள் வருத்தப் படுவாளோ’ என்று நிறுத்தினான்.

“என்ன சித்து, ஏன் நிறுத்திட்டீங்க.... சொல்லுங்களேன், ஆனா என்ன?” என்று உந்தினாள்.
“இல்ல என்னிடம் மட்டும்தான் ஒதுக்கமா இருந்தே, என் கிட்டேயே வரலை, என் முகம் பார்த்து பேசலை..... எனக்கு வேண்டிய பணிவிடை எல்லாம் பார்த்து செய்தே, எனக்காக சமைச்சே பரிமாறினே.... ஆனா, அருகில் வரலை” என்றான்.

“ஒ அப்போ நான் உங்களை கவனிச்சுக்கவே இல்லையா, உங்ககிட்ட என் அன்பை காமிக்கவே இல்லையா சித்து?” என்று கேட்டாள். ஆம் என்பது போல கண்ணில் ஒரு வலியுடன் தலை அசைத்தான்.
‘ஒ’ என்று கவலையானாள்.
“போறது டா, அதைப் பத்தி இப்போ என்னத்துக்கு நீ யோசனை பண்ணிக்கிட்டு...” என்று தள்ளிட எண்ணினான்.
“இல்லை பேசணும், சொல்லுங்க... அப்போ அப்படீனா நமக்குள்ள ஒண்ணுமே நடக்கலையா சித்து?” என்றாள் லேசான முகச் சிவப்புடன்.
“இல்லைடா, டாக்டரும் பார்த்து கேட்டு நடந்துகுங்கனு சொன்னாரு, நீ உன் நிலையே உணராம என்னையும் தெரியாம இருக்கும் அந்த நேரத்தில நானும் உன்னிடம் எந்த உரிமையும் எடுத்துக்க விரும்பலை.....  தள்ளிதான் இருந்தேன், ஆனாலும் உன்னை எதிர்ல வெச்சுகிட்டு உன்னை தொடாம இருக்கறது இருக்கே, கொடுமை...” என்று சிரித்தான். அவளும் வெட்கத்துடன் சிரித்தாள்.

“ஆனாலும் அதிலும் கூட ஒரு சொகம் இருந்தது.... விடுடா” என்றான்
“அப்பறம் என்னாச்சு, சொல்லி முடீங்க” என்றாள்.
“அப்போதான் உன் பர்த்டே வந்தது, அன்னிக்கி நான் உனக்கு புடவை ரோஜா பூக்கள் எல்லாம் வாங்கி வந்தேன், அந்தப் புடவையில் நீ சொக்க வைப்பது போல இருந்தியா..... அன்னிக்கி மட்டும் என்னால என்னையே கட்டுபடுத்திக்க முடியலை..... உன்னிடம் பர்மிஷன் கேட்டுகிட்டு வந்து உனக்கு முத்தம் குடுத்தேன்” என்றான் லேசாக சிவந்து கூச்சத்துடன்.
ஒ என்று கண்களை அகல விரித்தாள்.
“அன்னிக்கிதான் நீயும் என்கிட்டே சகஜமா பேசினே, ‘சிக்கிரம் வாங்க கோவிலுக்கு போகலாம்.... பிறகு வெளியே சாப்டுட்டு வரலாம்னு’ சொன்னே. ‘அப்பறம்னு சொன்னே,’ ‘அப்பறம் என்னானு’ நான் கேட்டேன்... ‘அதை அப்போ சொல்றேன் னு வெட்கபட்டுகிட்டு உள்ளே ஓடிட்டே” என்றான் சிரிப்புடன் கண்களில் அந்த நாளின் நினைப்பில் ஒரு உல்லாசத்துடன்.
இதை கேட்டு சித்ராங்கி நாணினாள். அவளுக்கு அந்த வார்த்தைகள் எதை குறித்தவை என புரியாமலில்லை.

ஆனால் இப்போது சித்து இருக்கும் குழப்பமான மன நிலையில் அவளிடத்தில் எதையும் அவன் எதிர்பார்க்க கூட விரும்பவில்லை.... அது சரியாகுமா, அவள் இப்போது இவற்றையெல்லாம் ஏன் கேட்கிறாள், அவள் மனதின் உடலின் நிலை எப்படி உள்ளதோ என்று உள்ளூர யோசனை ஓடியது.
“அன்னிக்கிதான் சாயங்காலம் கலாவை லாரிலேர்ந்து காப்பாற்ற போய் நீ விழுந்து அடிபட்டுகிட்டு உன்னை மருத்துவமனையில சேர்த்தோம்..... உனக்கு பழைய நினைவுகள் வந்தது..... அதுக்கு பிறகு என்ன நடந்துதுன்னு தான் உனக்கே தெரியுமே டா குட்டிமா” என்றான்.

“ம்ம்ம்” என்றாள் தலை கவிழ்ந்து.... அவனுடன் ஒட்டி அமர்ந்தாள்..... அவன் மார்பில் தன் தலையை சாய்த்துக்கொண்டாள்.... முகம் நிமிர்த்தி அவன் முகம் கண்டாள்.
“என்னடா?” என்றான்.
“உங்கள போன்ற ஒரு உத்தமர் எனக்கு கணவனா கிடைக்க நான் எத்தனை எத்தனை புண்ணியம் பண்ணி இருக்கணும்... நீங்க பாவம் இல்லையா சித்து?” என்றாள் கண்ணில் நீருடன்.
“இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை சித்து, எனக்கு நீ கிடைச்சே அதுவும் இப்போ என் பழைய குட்டிமாவா கிடைச்சுட்டே... எனக்கு அதுவே போதும்டா” என்றான் அவளை இறுக்க அணைத்தபடி.

“போதுமா, அப்போ சரி” என்று விலகினாள், அவளை விடாமல் இறுக்கிக்கொண்டான்.
“ஹே வாலு” என்றான்.
“என்னவாம், அதான் வேறே ஒண்ணும் வேணாம்னு சொன்னீங்களே சித்து” என்றாள் கண்ணில் ஒருவித உல்லாசத்துடன்.
“அது அப்போ, வந்து.....” என்று உளறி கொட்டி கிளறி மூடினான். அவன் கண்களின் தாபத்தை கண்டு “ஆனா இப்போ?” என்றாள் சித்ராங்கி.

“இப்போ இந்த நேரத்தில மனசும் உடம்பும் ஏதேதோ கேட்குதுதான்” என்றான் அவள் கண்களில் உல்லாசம் கண்ட தைரியத்தில்.
“ம்ம்ம், அப்படியா.... என்ன கேட்குது நாலு உதையா, ரெண்டு அடியா?” என்றாள் குறும்புடன்.
“நீ ஆசையா எது குடுத்தாலும் என்ன குடுத்தாலும் எனக்கு ஒகே தான் குட்டிமா” என்று அவள் தலையோடு தலை முட்டினான். அவள் எழும்பி அவன் கன்னத்தில் தன் முத்தத்தை பதித்தாள். அது தந்த தைர்ய்த்தில் அவனும் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

மோகித்து தாகித்து இருந்த இரு அன்பு இதயங்கள் வாடி கிடந்த பயிருக்கு நீர் வார்த்தது போல சிலிர்த்துக் கொண்டன.... ஒரு முத்தம் பல முத்தமாக மாறியது.... அவள் கிறங்கி அவன் மார்பில் ஒன்றினாள்..... அவன் கண்ணால் வினவ, அவனுக்கு விடை கிடைத்த கணத்தில் அவன் மறந்து போயிருந்த காதல் பாடங்களை நடத்த முற்பட்டான்.... லேசான வெட்கமும் நாணமும் போட்டிபோட சிலிர்த்து துவண்டாள் சித்ராங்கி....

அடுத்து வந்த காலங்களில் அன்பும் நேசமுமாக எப்போதும் போல தன் வீட்டையும் தனது குடும்பத்தையும் அன்புற நடத்தி வந்தாள் சித்ராங்கி... பழைய கால புகைப்படங்கள், பார்க்கும்போது நெஞ்சில் சில சலனங்கள் வந்து மறைந்தன..... அதை பொக்கிஷமாக பொதிந்து வைத்து விட்டு வாழ்க்கையை அனுபவிக்க ரஞ்சன் அவளுக்கு கற்று குடுத்தான்.... அதே போல இன்னமும் கூட கண்ணாடியில் தன் முகம் பார்க்கும்போது, தினமும் ஒரு கணம் மனம் திடுக்கிடத்தான் செய்கிறது, அது இயற்கை, அதனால் அதை எதுவும் மாற்ற முடியாமல் அத்துடன் வாழ பழகி வருகிறாள் சித்ராங்கி.

நிறைந்தது


8 comments: