Monday 23 July 2018

NENJIL KODI MINNAL - 20

கதிர் காலையிலேயே இவளைக் கண்டான்.

“என்ன ராத்திரி, என்னமோ ரகளையாம்.... அந்தப் பய வந்துட்டான் போல இருக்கே..... வந்த உடனே ஆரம்பிச்சிட்டானா..... நீ இப்போவானும் ஒரு நல்ல முடிவ எடுக்கணும் ராஜேஸ்வரி, எத்தனை நாளைக்கு இப்படி அவன்கிட்ட அவதி படறதா உத்தேசம்? என்றான்.

அவளால் மெளனமாக தலை குனிந்து நிற்கவே முடிந்தது.

கதிர் வேலைகளை பார்க்க என வெளியேறிய அடுத்த ஐந்து நிமிடங்களில் வந்து நின்றான் கனகு.

“அன்னிக்கி விட்டத இன்னிக்கி பிடிக்க போறேன்.... மருவாதையா என்னோட வா.... ஒழுங்கா குடித்தனம் பண்ணு.... இனி துணிஞ்சுட்டேன், ரெண்டு வாட்டி ஜெயிலுக்கு போய் பழகிப் போச்சு. மூணாவது முறை போக ஒண்ணும் பயமில்லை.... நடுவே எந்தப் பய வந்தாலும் வெட்டிட்டு உன்னைத் தூக்கிப் போக என்னால முடியும் என்றான்.

அவள் இப்போது நிஜமாகவே அஞ்சினாள். தந்தை இருந்தவரை எதற்கும் அவரிருக்கிறார் என துணிந்து நின்றாள். இப்போது பயம் கவ்விக்கொண்டது.

“நான் உங்களோட வரத் தயாரா இல்லை..... உங்களோட என்னால குடித்தனம் பண்ண முடியாது..... ஜெயிலுக்கு போயும் நீங்க திருந்தல.... என்னால இனியும் உங்கள திருத்த போராட முடியாது, என்னை விட்ருங்க என்றாள்.

“விட்டுர்றதா, விட்டுபிட்டா எவன் கிடைச்சாலும் அவனோடு தொடுப்பு வெச்சுக்கலாம்னு எண்ணமா? என்றான்.

காதை பொத்திக்கொண்டாள்.

“இதத்தான் சொன்னேன், கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாம வாய் கூசாம என்னைப் பத்தி இப்படி பேசறீங்களே, உங்களோட நான் வந்து மனமொன்றி எப்படி வாழ முடியும்.... என்னால முடியாது என்றாள்.

“என்னதாண்டீ சொல்றே முடிவா? என்றான்

“எனக்கு விவாகரத்து குடுத்துடுங்க, எனக்கு உங்க கூட வாழ முடியும்னு தோணல” என்றாள் ராஜி துணிவுடன்.

முருகானந்தமும் அங்கேதான் இருந்தார். அவளது பதிலில் அசந்து போனார்.

“அடி சக்க.... விவாகரத்து, ஹூம் அத்து விடறத படிச்சவ பாஷையில சொல்றே.... ஆக அன்னிக்கும் இன்னிக்கும் ஒரே பேச்சுதான் இல்லியா....?

“முடியாதுடி என்ன பண்ணுவே? என்றான்

“என்னால பெரிசா ஒண்ணும் பண்ண முடியாதுதான், ஆனாலும், உங்க கூட வந்து வாழவும் மாட்டேன்.... என் தலை எழுத்துன்னு இங்கேயே இப்படியே வாழ்ந்துடுவேன் என்றால் அசராமல்.

“நீ சொல்லீட்டா, நாங்க அபப்டி வுட்டுடுவோமா... இழுத்து போய் குடித்தனம் பண்ணுவேண்டீ என்றான்

இல்ல முடியாது.... என்னை நீங்க தொட முடியாது.... இது எம் மேல ஆணை என்றாள்.

“அட, த பார்ரா.... ஆணை வெக்குறாங்க.... உன் ஆணைய நான் ஏண்டீ மதிக்கணும்..... நீ நான் கட்டிய தாலியவே மதிக்கல என்றான் எகத்தாளமாக.

அவளை நெருங்கி அவள் கையைப் பிடிக்க போக அவள் பின்னே நகர்ந்தாள்.

“வேண்டாம் போய்டுங்க என்றாள்.

“என்னடி மிரட்டறியா? என்று முன்னேறினான.

முருகானந்தம் முன்னே வந்தார்

“தா பெரிசு போயிடு, இது எங்களுக்குள்ள.... நாங்க புருஷன் பொஞ்சாதி தீத்துக்கறோம்.... நீ நடுவில வராத.... அனாவசியமா சாகாத என்றான் கனகு

“அவதான் தெளிவாச் சொல்லீட்டாளே தன்னோட முடிவ.... இனி எதுவானாலும் கோர்ட்ல பேசிக்கலாம் கனகு... அவள தொந்தரவு செய்யாதே என்றார்.

“கோர்ட்டா, நாந்தான் எனக்கு பெரிய கோர்ட் மேல் கோர்ட் சுப்ரீம் கோர்ட் எல்லாமே... அவ சொல்வாளாம், இவர் அதுக்கு வக்காலத்து... என அவளை கைப் பிடித்து இழுக்கப் போனான்.

அவள் பின்னே நகர, நிலை தடுமாறியது.... கீழே விழப்போனவளை அவன் கைப்பிடித்து இழுத்தான்.... அவள் நழுவ, சேலை முந்தானை அவன் கையில் சிக்கியது.

“சிக்கினியா மவளே, நீ இனி என் கையில அழிஞ்சே.... நகரவும் முடியாதுடி... என்கிட்டேருந்து தப்பிக்கவும் முடியாது என்றான் இளித்தபடி

அவள் கதிகலங்கி போனாள். முந்தானை அவன் பிடியில் இருக்க அவன் சொன்னதுபோல அவளால் நகரவும் முடியாமல் போனது. மிக கஷ்டப்பட்டு முன்சேலையை அவன் கையில் இழுக்காமல் இழுத்து மூடியபடி தவித்தாள்.

“விடுங்க விட்டுடுங்க என்று கெஞ்சினாள்.

“என்ன எத்தன நாள் அழ வெச்சிருப்பேடீ..... இன்னிக்கி நீ அழணும்..... கெஞ்சணும் கதறணும்.... அதப் பார்த்து நான் சந்தோஷமா சிரிக்கணும் என்று கொக்கரித்தான்

சேலையை அவன் கையிலிருந்து இழுக்க முயன்றாள். அவன் இரும்புப் பிடியிலிருந்து அது வெளிவர மறுத்தது.

பெரியவர் தடுக்க முயல, அவரை ஒரே தள்ளாக தள்ளினான். எட்டி கீழே விழுந்தார். சுதாரித்து எழுந்து தட்டு தடுமாறி கதிருக்கு போன் போட்டார்.

அந்த நொடியில் கதிர் மருதுவுடன் தான் கலந்தாலோசித்து கொண்டிருந்தான், உடனே பதறி இருவரும் வந்தனர்.

“அவுகள விடுறா படுபாவி என பொன்னியும் உதவிக்கு வந்தாள்.

“த புள்ள, போயிடு.... இல்ல மருவாத கெட்டுடும்..... இது எனக்கும் எம் பொஞ்சாதிக்கும் உள்ள பிரச்சன என்றான்.

“இருக்கலாம், ஆனா பொஞ்ஜாதியே ஆனாலும், ஒரு பெண்ணுக்கு இஷ்டமில்லாம அவள தொடக்கூடாதுன்னு சட்டமே சொல்லுது.... அவள விட்டுடு என கெஞ்சினார் பெரியவர்

ராஜி நிலை தளர்ந்த நேரத்தில், அவன் சேலையை இழுக்க, முந்தானை அவன் கையோடு போனது.

அவள் அலறியபடி சட்டென அந்தப் பக்கம் திரும்பி கைகளை நெஞ்சின்மேல் குறுக்காக கட்டிக்கொண்டாள்

‘அந்தப் பாஞ்சாலிக்கு கூட அந்தக் கண்ணன் வந்தான் எனக்கு யாரு வருவாங்க ஆத்தா? என உள்ளே கதறினாள்.

பொன்னி சட்டென ஓடிப் போய் வேறே சேலை கொண்டு வந்து அவளை போர்த்தினாள்

அப்போதே உள்ளே நுழைந்து ராஜியின் நிலை கண்டு கொதித்து போயினர் மருதுவும் கதிரும். ஒரே சமயத்தில் ஜாடை செய்துகொண்டு அவன் மேல் பாய்ந்தனர். அவனைப் பிடித்து வெளியே இழுத்து வந்தனர்.

இதனிடையில் பெரிய வீட்டில் கலவரம் என செய்தி பரவி வாசலில் கூட்டம் நெருங்கியது. ஊர் பெரியோரும் என்னவோ ஏதோ என அங்கே ஓடி வந்தனர்.

மருது அவனை அடிக்க முயல, “வேணாம் மருது, நாம இந்தப் பேடி பைய மேல கை வைக்க வேணாம்.... பஞ்சாயத்து முன்னால நிருத்தீடலாம் என்றான் கதிர்.

“அவங்களால மட்டும் இவன என்ன செய்திட முடியும்? என்றான் வெறுப்பாக மருது.

“பஞ்சயத்தாரா.... நடக்கட்டுமே, எனக்கென்ன பயமா..... எம் பொஞ்சாதி அவ என்றான் திமிறியபடி.

வீட்டு வாயிலிலேயே அவசர நிலையில் பஞ்சாயத்து கூடியது. அனைத்தும் இரு தரப்பினராலும் கூறப்பட்டது.

அவசர கதியில் புடவையை சுத்தி கொண்டு கலைந்த தலையும் வீங்கிய முகமுமாக அலங்கோலமாக ராஜியும் தான் பொன்னியுடன் வந்து நின்றாள்

“இது அன்னிலேர்ந்தே இழுபறியாவே இருக்கு.... என்னப்பா கனகு, அதான் அந்தப் புள்ள உன்னோட வாழ இஷ்டமில்லன்னு சொல்லிடுச்சே.... சேலையவா பிடிச்சு இழுக்கறது.... வெட்கமா இல்ல.... தப்பு இல்ல.... பொஞ்ஜாதியே ஆனாலும் தாய்க்கு சமானம் இல்ல, இதுக்கு நீ பதில் சொல்லியே ஆவணும் என்றார்.

“என் இஷ்டம், நான் அப்படிதான் செய்வேன் என்றான் முரண்டியபடி.

“அதுக்கு இங்க தண்டனை உண்டு, அபராதம் கட்டணும்..... அந்த புள்ள கால்ல எங்க எல்லார் முன்னாடியும் விழுந்து மன்னிப்பு கேட்கணும் என்றார்.

“அவ எம் பொஞ்சாதி, அவ கால்ல நானா..... இன்னா தலைவரே, கொழுப்பா? என்றான்

“தாரமானாலும் ஆத்தாளுக்கு சமானம்னு இப்போதானே சொன்னேன்....

எந்த பெண்பிள்ளையையும் அவ சம்மதம் இல்லாம தொடக்கூடாது..... அப்படி தொட்டா அது கற்பழிப்புக்கு சமானம் என்றார்

“அப்போ சரி, அவள முழுசா தொட்டுட்டு அவ கால்ல விழறேன் என கண் இமைக்கும் நேரத்தில் திமிறி, ராஜியை தன் பக்கம் இழுத்து பிடித்துக்கொண்டான்.

அவளது சேலையை அவிழ்க்க அவள் அலறினாள்.

கதிருக்கு எங்கிருந்துதான் அந்தத் துணிச்சல் வந்ததோ, பக்கத்தில் ஒருவன் வைத்திருந்த இளநி வெட்டும் அரிவாளை எடுத்து கனகராஜின் கழுத்தில் ஒரே போடாக போட்டான்.

நொடி நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்தன. அலறியபடி மண்ணில் சாய்ந்து ஓய்ந்தான் கனகுராஜ்.

அவனையும் கதிரையும் மாறி மாறி பார்த்தபடி பிரமித்து நின்றாள் ராஜி

“கதிர், என்ன காரியம் செய்துட்டே? என்றான் மருது

“இவனுக்கெல்லாம் இதுதான் சரியான முடிவு..... இல்லைனா அவன் ராஜேஸ்வரிய இந்த ஜென்மத்தில நிம்மதியா வாழ விடமாட்டான் என்றான் ஆத்திரம் தணியாமல்.


“என்னப்பா, எவ்வளவு நல்ல பிள்ள நீ.... இப்படி அவசரப்பட்டுட்டியே? என்றார் தலைவர்

“இல்லீங்கைய்யா, இதை நான் எப்பவோ செய்திருக்கணும், என் தகப்பன் சமானமான பெரியைய்யா சாவுக்கு இவன் காரணமான அன்னிக்கே செய்திருக்கணும் என்றான்

போலீஸ் வந்தது. அனைவரும் நடந்ததை கூறினார்.

கதிர் கைது செய்யப்பட்டான். கனகராஜின் உடல் ப்ரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கோர்டில் கேஸ் நடந்தது. அவளை, அவளது உயிரை, மானத்தை காக்க வேண்டி தான் கதிர் இமைக்கும் நேரத்தில் அப்படி நடந்துகொண்டான் என்றாலும் கூட குற்றம் குற்றமே என இரண்டாண்டு கால கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது

“என்னால அப்பாரு போய்ட்டாரு.... இப்போ நீங்களும் என்னால ஜெயிலுக்கு போறீக கதிர் என அழுதாள் ராஜி.

“த பாரு ராஜேஸ்வரி என அதட்டினான்.

“என்னவாகிப்போச்சு இப்போ, ரெண்டே வருஷம்.... ஓடி வந்துருவேன். அதுவர நாங்க பார்த்த சின்னம்மாவா, முன்னாடி நின்னு எல்லாத்தையும் எடுத்து நல்லபடி நடத்து,,,,. உன்னால முடியும்.,,, நீ அழுத வரைக்கும் போதும், இனி கண்ணீர் விடக்கூடாது.
உன்ன உங்கப்பாரு துணிச்சலா, தைரியமா வளர்த்தது உண்மைனா, அவருக்கு நீ அப்படியே துணிச்சலா வாழ்ந்து காட்டணும்.... அப்போதான் அவர் ஆத்மாவுக்கு சாந்தி ஏற்படும்.... நான் சீக்கிரம் வந்துருவேன், ஜாக்ரதையா இருந்துக்க எனக் கூறி மருதுவிடம் தனித்து அவளை காக்கும்படி கோரினான்.

“கதிர், உன்னை எப்படி பாராட்டறதுன்னே எனக்குத் தெரியலப்பா.... அவுகள நான் பார்த்துக்கிடுதேன்.... நீ சீக்கிரமா நல்லபடி திரும்பி வரணும்.... காத்திருப்போம் எல்லாரும் என்றான் நா தழுதழுக்க மருது.

கந்தன் முனியன் பெரியவர் அனைவரிடமும் பொன்னியிடமும் அவளை பாதுக்காக்கக் கோரி, ஜீப்பில் ஏறினான் கதிர்.

கனகராஜின் உடலை போலீசாரே அடக்கம் செய்ய வேண்டிக்கொண்டார் முருகானந்தம். 

“அவனுக்கும் எங்க குடும்பத்துக்கும் எப்பவும் ஓட்டும் உறவும் இருந்ததுமில்ல இப்போ புதுசா போனதும் ஒண்ணும் இல்ல.... ராஜி இருக்கிற நிலையில் அவள எந்த விஷயமாகவும் தொந்தரவு செய்ய வேண்டாம் இன்ஸ்பெக்டர் ஐயா. நீங்களே முடிச்சுடுங்க
என்றார்.

அவனது சகாக்களோ மற்ற உறவினர்களோ கூட முன்னே வர அஞ்சி ஒதுங்கினர். அவன் செய்த காரியங்களுக்கு எங்கே தங்களை போலீஸ் விசாரிக்க அழைப்பார்களோ என்ற பயமே அவர்களை விலகி ஓடச் செய்தது. ஆக அவன் அனாதை பிணமாக அடக்கம் செய்யப்பட்டான்.

ராஜி நிலைகுலைந்து போயிருந்தாள். தன்னால் எல்லோருக்கும் கஷ்டம் மட்டுமே என்ற ஒரு எண்ணம் அவளை வெகுவாக பாதித்திருந்தது.

கிராமப்புறம் என்பதால் சில வயதான மூதாட்டிகள் வீட்டு வாயிலில் வந்தமர்ந்து ஒப்பாரி வைப்பதும் அவளுக்கு செய்ய வேண்டிய சாங்கியங்களை செய்ய வலியுறுத்துவதுமாய் இருந்தனர்..., தாங்களே உள்ளே வந்து அவளை சூழ்ந்துகொண்டு முயற்சிக்க, பதறி போயினர் பெரியவரும் கதிரும்.

முருகனந்தம் அன்பாகவும் மரியாதையாகவும் அவர்களை விலகி அனுப்ப முயல, பொன்னியோ ஒரு படி மேலே போய் ஆடி தீர்த்துவிட்டாள்.

“ஏ கிழவிகளா, இப்போ மருவாதையா வெளிய போறீகளா வகுந்தரவா அத்தினி போரையும்..... ஒரு நா கூட அந்த கட்டைல போனவனோட வாழவே இல்ல, பச்சை குருத்து..... அதுகிட்ட போய் வெவகாரம் பண்ணிக்கிட்டு அலையரீக, போவீகளா வேலைய பார்த்துகிட்டு....” என கத்தி விரட்டி அனுப்பி விட்டாள்.

இவை அனைத்தும் ராஜியை வெகுவாக பாதித்தது. கனகு பெயருக்குத்தான் கணவன் என்பது அந்த ஊருக்கே வெட்ட வெளிச்சமாக தெரிந்த போதிலும், அவளுக்கு கணவன், இதே போல பலரும் பேசக்கூடும், என பயந்து ஒடுங்கி வீட்டினை விட்டு வெளியே வரவே இஷ்டப்படவில்லை.

நத்தை கூட்டுக்குள் சுருங்குவதுபோல தன்னைத்தானே அவள் வீட்டினுள் அடைத்துக்கொண்டாள். நந்தவனத்திற்கு போனாலாவது மனம் அமைதியடையும் என பொன்னி அவளால் ஆன வரை முயற்சி செய்தும் பலனில்லை.

அங்கே போனால் மருதுவை பார்க்க போனேன் என எண்ணி, கனகுவை போலவே, அவளை வேறு யாரேனும் தவறாக நினைத்து பேசுவார்கள் என்ற கிலி அவளுள் ஆழ பதிந்து போனது.

மாதம் ஒன்றாகியும் அவள் அப்படியே இருக்க, “என்ன கண்ணு இது கூறுகெட்டத்தனமா.... அந்த படுபாவிப் பயதான் என்னென்னமோ பேசினான்னா நீயும் அதப் போய் பெரிசா எடுத்துகிட்டு பேசிகிட்டு கிடக்கற..... அவன விட்டுத் தள்ளு. முடிஞ்சு போச்சு....

“சனியன் விட்டுதுன்னு நிம்மதியா தலைய மூழுவீட்டு சந்தோஷமா இருக்கறத விட்டுபோட்டு இது என்ன, நீ செய்யறது...? என கண்டித்தாள். ஆதரவாக பேசினாள். தாயாக தாங்கினாள். எதற்கும் ராஜியின் முகம் தெளியவில்லை.

பொன்னி இதைக்கண்டு பயந்து மருதுவிடம் புலம்பினாள்.

“சரியா சாப்பிட்டு மாசம் ஒண்ணாச்சுங்கய்யா என்றாள்.

“ஹ்ம்ம், என்ன செய்யறது பொன்னி, அவுக அனுபவிச்சது கொஞ்சமா நஞ்சமா..... சபையில வெச்சு அவங்கள மானபங்கப்படுத்த பார்த்தானே, அந்த கிலி அவுகள விட்டு போக இன்னும் எத்தன நாளாகுமோ தெரியலயே..... நாமதான் பொறுமையா கொஞ்ச கொஞ்சமா அவுகள மாத்தோணும். 

“நீ கூடவே இருந்து பார்த்துக்க.... மற்றபடி எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். அவுகள எந்த விஷயத்தில தொந்தரவு செய்யவே வேண்டாம்
என்றான்.

“ஆனா தம்பி, அவள அப்படியே தொந்தரவு செய்ய வேண்டாம்னு விட்டுட்டா, அவ அப்படியே கூட்டுகுள்ளாற நின்றிடுவா.... அதுக்கு பதில் அவள எப்போதும் போல எல்லாத்திலேயும் கலந்தாலோசித்து அவள வேலைமேல இழுத்துவிட்டா, இந்த ஊர் மக்களுக்காகவானும் பண்ணை பயிர்னு கொஞ்சம் வெளியே வந்து போய் கலகலப்பாக மாறுவாளோ என்னமோ? என்றார் கூட இருந்த முருகானந்தம்.

“நீங்க சொல்றதும் ரொம்ப சரிதானுங்கைய்யா.... அப்படியே செய்யறேன் என்றான்.


3 comments:

  1. Mixed emotions.. My heart goes out to Raji and Kathir; but deep inside there is a sense of relief that Kanaku's torture saga is over!

    ReplyDelete
  2. Good narrative, enjoying the daily dose like good old days when we used to wait for Ananda Vikatan, kalki,kumudam etc.

    ReplyDelete
  3. Very good narration. Aaana pavam Kadhir jail-kku pOi irukka vendaam. Kanagu vera eppadiyaavadhu pOirukkalaam. Anyways glad that Raji doesnt have to endure his torture anymore.

    ReplyDelete