Monday 9 July 2018

NENJIL KODI MINNAL - 6

“ராஜி கண்ணு என்றான். அவன் குரல் கேட்டு கீழே இறங்கி வந்தவள், அவன் முன் கைகட்டி நின்றாள் மிடுக்குடன் நிஜமான ஒரு ராணி போல.
“சொல்லுங்க என்றாள் குரலில் எதுவும் காட்டாமல்.

“ஒரே வேலை, பெண்டு நிமிந்திடுச்சு கண்ணு..... சூடா வெந்நீர் போடு, குளிச்சாத்தான் உடல்வலி போகும்.... சாப்டா பொணம் போல தூக்கம் சுழட்டும் என்றான்.

பீடாவை மீறி அவன் வாயிலிருந்து வந்த சாராய நெடி அவளுக்கு சர்வமும் விளக்கியதுதான்.
“ம்ம்ம் என்றபடி ஒரெட்டு பின்னே வைத்தாள்.

“ஓஹோ ரொம்ப வேலையோ பாவம்.... என்னென்ன செஞ்சீங்க எங்கே சொல்லுங்களேன் கேப்போம் என்றாள் உண்மைபோல.
மொத்த பண்ணை, நிலம், தோட்டம், தோப்பு, அத்தனையிலும் அவள் கறை கண்டவள் என்றோ, எல்லா விவரமும் அவள் கைநுனியில் வைத்திருப்பவள் என்றோ அவன் அறியான்.

தினம்தோறும் இல்லாவிடினும் வாரத்திற்கு நாலு நாட்களானும் அவள் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று சுற்றி பார்த்து, குறை நிறைகள் கேட்டறிந்து, தேவைப் படுவதை செய்து கொடுத்து, இல்லையேல் கதிர் காதிலோ தந்தையின் காதிலோ போட்டு வைப்பது, என தன்னை வளர்த்துக்கொண்டாள். எந்தவொரு அவசர நெருக்கடியிலும் அவளால் பண்ணையை தனியே நின்று நடத்திக்கொள்ள கூடிய விதத்தில் மெல்ல மெல்ல ராஜலிங்கம் அவளை தயார் படுத்தி இருந்தார். ஆனாலும் பூப்போன்ற தன் ஒரே செல்ல மகளினை கஷ்டப்படுத்த அவர் விரும்பாமல், பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை அவ்வளவு மட்டுமே.

இவை எதுவுமே அறியாத கனகு, நிஜம்போல அவளிடத்தில்,
“அதுவா ராஜி கண்ணு, வந்து.... உரம் வந்துச்சு. அத சரிபார்த்து வாங்கி அடுக்க வெச்சு, அதுக்கு பணம் பட்டுவாடா பண்ணி, வேற உரத்துக்கு வந்த ஆர்டரை கேட்டு எழுதி வைக்கச் சொல்லி.... என கூட்டி கூட்டி இழுத்து பேசி சமாளித்தான்.

“ஓஹோ உரத்துக்கு பணம் பட்டுவாடா பண்ணீட்டீகளா அத்தான்.... அடராமா, இது அந்த கணக்கு புள்ளைக்கு தெரியாம போச்சே...? என்றாள் நிஜமான வருத்தம் போல.
கனகுவிற்கு உள்ளே கொஞ்சம் கிடுக்கி போட்டது.

“ஏன், என்னவாச்சு? என்றான் அப்பாவி போல.

“அது ஒண்ணுமில்லை, உரம் வந்துச்சாம், பீரோவில எண்ணி வெச்சிருந்த பணத்தில ஒரு கட்டு காணாம பாதி பணம்தான் இருந்குனு கணக்குபிள்ள போன் செய்தாரு..... அப்பா வேற பண்ணைக்கு போயிருக்க, எங்கிட்டே இருந்த பணத்தில எடுத்து நாந்தான் கதிர் கிட்ட கொடுத்து, அவசரமா கொண்டு போய் குடுக்கச் சொன்னேன்.... மானம் பொழச்சுதாம் நல்லவேளை என்றாள் அவனை ஒரு கோப முறைப்புடன்.

“எங்க போனீக? என்றாள் நிதானமாக. “உண்மையச் சொல்லும். பணத்த எடுத்து போனீகளா.... என்ன செய்தீக? என்றாள்.

அவனுக்கும் ஏறியது. ‘கேவலம் ஒரு பொட்டபுள்ள தன்னை நிறுத்தி வைத்து கேள்வி கேட்பதா... என.
கோபத்துடன் அவளை ஏறிட்டான்.

“ஆம்பளன்னா ஆயிரம் செலவிருக்கும்..... நான் இன்னிக்கி ஒரு அவசரம்னு எடுத்தா, நாளக்கி அதை வேறு ஒரு அவசர நேரத்துக்கு திருப்பவும் முடியும்... செய்வேன் கூட....

“ஏதோ, என் சகா ஒருத்தன் அவசரம் ஆஸ்பத்திரி செலவுக்கு வேணும்னான் அவனுக்கு எடுத்து குடுத்தேன்..... ரெண்டு நாள்ள வந்துரும், திருப்பீடுவேன்.... என்னமோ இதுக்குபோய் போலீஸ் போல இல்ல நிக்க வெச்சு கேள்வி கேக்குறவ...... இதெல்லாம் நல்லா இல்ல சொல்லீட்டேன்..... மரியாதை கொறைஞ்சா நான் இங்க ஒரு நொடியும் தங்க மாட்டேன்னு சொல்லித்தான் உங்கப்பாருகிட்ட நான் பரிசம் போட ஒத்துகிட்டேன்.

“கட்டினவன் விட்டுட்டு போய் நீ வாழா வெட்டியா வாழ வேண்டி வரும்.... இல்லைனா, என் வீடு தேடி வந்து என் கூட குடித்தனம் பண்ண வேண்டி வரும்..... உங்கப்பாரு அதை ஒரு நாளும் தாங்கமாட்டாரு ஜாக்ரதை என மிரட்டினான்.

ராஜியா அசருவாள்

“ஓஹோ, அப்போ பணத்த எடுத்துட்டு போறேன்னு கணக்குபிள்ளகிட்ட சொல்லீட்டே போயிருக்கலாமே, அவரும்தான் நாங்களும்தான் பதறி இருக்கமாட்டோம், நேரத்தோட வேறே ஏற்பாடு பண்ணி இருப்போமே? என்றாள் ஏளனத்துடன்.

“ஆமா, அவனெல்லாம் ஒரு பெரிய மனுஷன்.... நான் அவங்கிட்ட கணக்கு சொல்லோணமாக்கும். முடியாதுடி என்றான் வீராப்பாக.

“அது என்னோட பொறுப்பிலுள்ள ஆபீசு.... அதில இருக்கறது எம் பணம்..... அத நான் எப்படியும் செலவழிப்பேன், போடுவேன் எடுப்பேன் திருப்புவேன்.... மாசக் கடசீல கணக்கு பார்க்கும்போது பணம் ஒதைச்சா ஏண்டா நாயேன்னு கேளு என்றான்.

“நாள் முச்சூடும் வெளி வேலையா அலைஞ்சு திரிஞ்சு வந்த புருஷங்காரனுக்கு, வாங்க, என்ன சாப்படறீங்க வென்னித் தண்ணி போடவான்னு கேக்க மனசு வரல.... பணத்த பத்திதான் எப்போதும் பேச்சு..... அந்தப் பணத்திமிருதானேடீ உன்ன இப்படி வளத்து ஆட வெச்சிருக்கு... என்றான் கருவிக்கொண்டு.

அதைக் கேட்டபடி பெரியவர் முருகானந்தம் உள்ளே வந்தார். பின்னோடு ராஜலிங்கம் வரும் சத்தமும் கேட்க, பெட்டிப் பாம்பாக அடங்கினான். நல்லவன் போல நடித்து பவ்யமாக நின்றான்.

ராஜலிங்கத்தின் காதுக்கு பண விஷயம் எட்டி இருக்கவில்லை.
கதிரிடம் இவள்தான் வேண்டிக் கேட்டிருந்தாள்.

“சொல்றது செரிதான். விட்டு பிடிப்போம்.... இப்போதைக்கு பெரியய்யாவுக்கு இதப்பத்தித் தெரிய வேண்டாம் என அவனும் கணக்குப்பிள்ளையிடமும் அப்படியே சொல்லி வைத்திருந்தான்.

“என்ன மாப்ள, என்ன பண்ணீங்க, மொத நாளு ஆபீசு எப்படி போச்சு? என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.

“அம்மாடி, ரொம்ப நேரமாயிட்டுதே.... மாப்ள அலுத்து களைச்சு வந்திருக்கார்போல பாரு.... சூட வென்னித் தண்ணி போடு.... குளிச்சதும் ரெண்டு பேருக்கும் சாப்பாடு பரிமாறீடு தாயீ என்றார்.

“ஆகட்டும்ப்பா என்றாள் அவளும் தன் கோபத்தை மறைத்து.

அவர் மேலும் விவரங்கள் கேட்கும் முன் அவன் மேலே நழுவிவிட்டான். குளித்து உடை மாற்றி மெளனமாக அவள் பரிமாறியதை சாப்பிட்டான். பின்னோடு மேலே சென்றுவிட்டான். 

“பாவம் மாப்ள, வேல செஞ்சு பழக்கமில்லீல்ல... அதான் தூக்கம் வந்துருச்சு போல.... வேளையோட நீயும் சாப்பிட்டு தூங்கு கண்ணு
என்று அவரும் உண்டுவிட்டு வாசப்பக்கம் சென்றுவிட்டார்.

அவளுக்கு சாப்பாடு தொண்டையில் அடைத்தது.
‘இவுக மாறவே மாட்டாகளோ.... போதாததற்கு, தன் தந்தை, இரத்தத்தை சிந்தி சம்பாதித்த பணம், சொத்து, மானம், மரியாதை, நற்பெயர், எல்லாமும் இவுக கையில் மாட்டி சீரழிந்திடுமோ...? என உள்ளே பயம் பந்தாக அமுக்கியது. நாலு வாய் உண்டேன் என பேர் செய்து எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். மேடையை ஒதுக்கி மேலே தன்னறையில் போய் தாளிட்டு படுத்தாள். உறக்கம் வரவில்லை. எப்போதும் போல ஜன்னல் திண்டில் அமர்ந்து வானில் ஒளிவீசும் நிலாவையும் அவளைத் தழுவி தாலாட்டிய தென்றலையும் ரசித்தாள்.

அந்தத் தென்றலின் தீண்டலில் உறக்கம் வரும்போல தோன்ற சென்று படுக்கையில் விழுந்தாள்.

அடுத்து வந்த நாளில் மேலும் வம்பு வளர்க்க விரும்பாமல் கனகு வேளையோடு ஆபீசிற்குச் சென்றான். அங்கே அவனுக்கு செய்ய ஒன்றும் இருக்கவில்லை. என்ன உர.... என்ன பருத்திக்கொட்டை புண்ணாக்கு, எந்த வயலுக்கு எந்த மருந்து.... ஒன்றுமே புரியாமல் மலைத்து அவன் பேசாமல் அமர்ந்திருக்க பழக்கப்பட்ட குதிரை போல வியாபாரம் நடந்தது. அவன் கையால் நடந்தபோதிலும், எந்த பட்டுவாடாவின்போதும் அவன் மீது ஒரு கண் வைத்திருக்கும்படி கதிர் கணக்குப்பிள்ளையிடம் கூறி இருந்தான்.

அவன் இருந்திருந்து ஏதேனும் ஒரு வாடிக்கையாளரிடம் பேரம் பேச முனைந்தாலோ, பணம் கொடுத்தல் வாங்கல் பற்றிய பேச்சு எழுந்தாலோ கணக்குப்பிள்ளையின் காது பாம்பாக மாறி அவனைச் சுற்றி வந்தது.

அவரறியாமல், லெட்ஜரில் காட்டாமல் ஒரு பத்து ரூபாயும் அவனால் கையாள முடியவில்லை. ‘இது சரியாகாதே, அங்கே காஞ்சனா வேற காசுமாலை வேணும்னு நச்சரிக்கறா... என மாய்ந்து போனான்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள், கணக்குப்பிள்ளை சாப்பிட போன நேரத்தில் பீரோவைத் திறந்தான். ஒவ்வொரு காசிற்கும் கணக்கு காட்டப்பட்டது. அதனால் அதைத் தொட முடியவில்லை.

வேறே என்னென்ன இருந்தது என ஆராய்ந்தான். ஏதேதோ பழைய தஸ்தாவேஜுகள் காணப்பட்டன. அவற்றை எடுத்து மேலோட்டமாக பார்த்தான். உர மற்றும் பூச்சி கொல்லி மருந்து வகைகள் அனைத்தையும் பாதுகாத்து வைக்கும் கோடவுன் பக்கத்திலேயே, அந்த ஆபீசை ஒட்டி எழுப்பப்பட்டிருந்தது. அந்த நிலத்திற்கான பட்டா, உண்மை பத்திரம் கண்ணில் தென்பட்டது. 

‘அடிசக்கை
என அதை எடுத்து தன் பையில் ஒளித்து வைத்தான். அவசரத்துக்கு உதவும் என . பின்னோடு பீரோவை பூட்டி இருந்தபடி வைத்துவிட்டான்.

பதினைந்து நாட்கள் இதைப்போல சென்றது. மாதம் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கையில்  கணக்கு வழக்கு பட்டுவாடா என எண்ணி பார்க்க, அவன் எடுத்த அந்த ஒரு கட்டு நோட்டு குறை என காண்பித்தது. கணக்குபிள்ளை இவனிடம் வந்தார். 

“நாள மறுநாளு பெரியய்யாகிட்ட போய் இந்த ஆபீசு சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கு ஒப்பிக்கணுங்க.... அந்த பத்தாயிரம் நோட்டுகட்டு கணக்கில ஒதைக்குதுங்க...
என்றார் இன்னமும் கூட மரியாதையுடனே...... என்னவிருந்தாலும் ஆயிரமிருந்தாலும், வீட்டு மாப்பிள்ளை அல்லவா....

“அதுக்கு என்னய்யா இப்போ.... என்னை என்ன பண்ண சொல்றீரு..... திடீர்னு அந்த பணத்த கொண்டான்னா, நான் மட்டும் என்ன பண்ணுவேன் எங்கே போவேன்.....
“எல்லாம், இந்தக் கடை என் பொறுப்பில்தான் விடப் பட்டிருக்கு.... பெரிசுகிட்ட நான் சொல்லிக்கறேன், நீர் ஒம்ம வேலைய பாரும் என்றான் எளிசாக.

“இல்லீங்க, அது எப்படிங்க, எம்பேர்ல குத்தம்னு வந்துடாதுங்களா... பெரியய்யாகிட்ட நான் எப்படிங்க பதில் சொல்லுறது? என கவலைப்பட்டார்.

“யோவ், நாந்தான் சொல்றேனில்ல போமைய்யா.... நான் பாத்துக்கறேன் என எரிந்து விழுந்தான்.

தனக்கென உள்ள பத்து ஏக்கர் நஞ்சை அடமானத்தில் இருந்தது. அதனை குத்தகைக்கு விட்டுதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். காஞ்சனா போன்ற திடீர் செலவுகளால் கடன் கைக்கடங்காமல் போக, அதை அடமானம் வைத்து பணம் வாங்கி கொஞ்சவற்றை அடைத்திருந்தான். 

குத்தகைக்காரரிடமே அடமானம் என்பதால் எல்லோரும் குத்தகைக்கு விட்டிருந்தான் என நம்பினார். ராஜலிங்கமும் கூட அப்படி எண்ணித்தான் பெண்ணைத் தந்திருந்தார் பாவம்.

‘அதை வித்து காசாக்கி இவனுக மூஞ்சில காச விட்டெறிஞ்சு மிச்சத்த கைச்செலவுக்கு வெச்சுகிட்டா இப்போதைக்கு கைகாசுக்கு ஒதவும்..... அதுக்குள்ளாற மிச்சம் மீதி பண்ணையும் கைக்குள்ள வந்துட்டா, பின்ன மொத்த ஜமீன் நம்முளுது.... அதுக்கப்புறம் எவன் கேக்குறவன்.... என மனப்பால் குடித்தான்.

‘ஆனால், நிலத்தை அவசரமாக வித்தாலும் ஆழும்பாழுமாக போய் கைக்கு வேண்டிய பணம் வராது.... வித்ததும் பெரிசுக்கு விஷயம் எட்டிடுமே எனவும் யோசித்தான். கைமாற்றாக வாங்க அப்படிப்பட்ட ஒசத்தியான சகா யாருமில்லை.

எல்லோரும் இவன் எச்சிலை சாப்பிட்டு குடித்து, கூட கூத்தடிக்கும் குப்பைகள்தான்.
நேராக தன் வீட்டை நோக்கிச் சென்றான். பல நாளாக, மணமானதிலிருந்து அங்கு செல்லாததால் குப்பையும் கூளமுமாக இருந்தது. அங்கே போய் ஆளை விட்டு சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தான். 

‘ஹப்பா, என்னவிருந்தாலும் நம்ம ராஜாங்கத்தில நிம்மதியா மூச்சுவிட முடியுதுபா.... அங்க, இந்தப் பெரிசு எப்போ வருமோ அந்தப் பெரிசு என்ன கேக்குமொன்னு பயந்து ஒடம்பு வெறைச்சுபோகுது
என எண்ணிக்கொண்டான்.

தன் உள்ரூம் பீரோவைத் திறக்க, தன் தாயின் சங்கிலி கண்ணில் பட்டது. தனது வருங்கால மருமகளுக்கு என அவர் விட்டுச் சென்றது. வீட்டுக்கு ராஜி வந்தபோது அதனை எடுத்து நீட்ட அவனுக்கு மனமில்லை.

‘இவ கிட்டா இல்லாத நகையா, எங்காத்தா நகை இவகிட்ட எதுக்கு.... அவசரம் ஆபத்துக்கு ஒதவும்..... காஞ்சனா போன்றவளுக்கானும் என்னிக்காச்சும் குடுக்க ஒதவும் என அதை மறைத்தான். இப்போது அதைக் கையில் எடுத்து தன் ஆப்த சிஷ்யன் ஒருவனை அழைத்து ரகசியமாக அதனை அடமானம் வைக்கச் சொல்லி அனுப்பி வைத்தான்.

பொழுது சாய அவன் பணத்தோடு வர, “எங்கேடா வெச்சே, உள்ளுரில வக்கலையே? என்று கேட்டான்.
“இல்லண்ணே, பக்கத்துக்கு டவுனுகுள்ளாற போய்தான் வெச்சேன். அதான் இவளோ நேரமாச்சுது என்றான்.
“புத்திசாலிடா நீ என மெச்சிக்கொண்டான்.

பணம் கிடைத்ததும் கொஞ்சம் மூச்சு வந்தது. இப்போது கெத்தாக ராஜியின் முன் சென்றான்.

“இந்தா ராஜி. இதப் புடி என்றான். அன்னிக்கி கணக்கிலேர்ந்து எடுத்த பணம்.... ஆபத்துன்னு குடுத்து ஒதவினேன்.... இன்னிக்கி நண்பன் திருப்பீட்டான்.... இத கணக்கில நீயே சேர்த்துடு... கணக்குப்பிள்ள ரொம்ப கலக்கமா இருக்காப்ல.... நீயே சொல்லி சரி பண்ணீடு... அங்கன போய் அவர்ட்ட இத நீட்ட எனக்கு இஷ்டமில்ல..... ஏதோ நான்  தப்பு பண்ணீட்டாப்போல பாவ்லா நடக்குது அங்க... என்றான் லேசாக.

‘வந்தவரை புண்ணியம், நிஜமாகவே யாருக்கேனும் உதவி இருப்பாகளோ? என ராஜியே நம்பும்படி நடித்தான்.

ஆனால், அன்று அவன் வந்து நின்ற கோலம் அவள் மனக்கண் முன்னே வந்துபோனது. ‘கருமம்... எனக் குமட்டியது. பணத்தை பத்திரபடுத்தினாள். ஒன்றும் பேசாமல் உணவு பரிமாறினாள்.

அவன் பம்மி இருந்ததற்கும் வேறொரு காரணம் இருந்தது.

ஆடி மாதம் முடிய இன்னமும் மூன்று நாட்கள்தான் இருந்தன. அடுத்த மாதம் பிறந்ததும் மாந்தோப்பையும் தென்னந்தோப்பையும் கூட இவன் பொறுப்பில் விடப்போவதாக ராஜலிங்கம் போன மாதம் கூறி இருந்தார். கைக்கு வந்துவிட்டதாகவே நினைத்து மனப்பால் குடித்தான் கனகு. அதுவே அவன் குழைவிற்கும் காரணமாகி இருந்தது.

‘ஆடி முடியட்டும்டீ வெச்சுக்கறேன் ஒனக்கு.... ஒன்ன நாயா பேயா நான் ஆண்டு கதற வைக்கல என் பேர் கனகு இல்லடீ..... உன் பணத்திமிரு, அகம்பாவம் கொழுப்பு எல்லாம் அதோட அஸ்தமிச்சுபோகும்... என கருவினான்


1 comment:

  1. O God... eppadithan indha kudikaarana samalikkaporalo... paavam..

    ReplyDelete