Monday, 30 July 2018

NENJIL KODI MINNAL - 27 - FINAL EPISODE

அதைக்கேட்டு சிவந்து போனாள்.

அவளிடமிருந்து எந்த சத்தமுமே வராமல் இருக்க, “ஹே ரஜ்ஜு என்றான் ஆசையுடன்
“ம்ம்ம் என்றாள்.

“கிடைக்குமா? என்றான் ஏக்கத்துடன்.

“போங்க நான் மாட்டேன் என்றாள் மேலும் சிவந்து.

“என் செல்லமில்ல என்றான்.

அவனின் குரல் அவளின் உள்ளே போய் ஏதோ செய்தது.

சிவந்து நாணி மெல்ல முத்தம் வைத்தாள்.

“படிச்ச பொண்ணு நீ, ஒரு முத்தத்துக்கே இந்த பாடா ரஜ்ஜு? என கிண்டல் செய்தான்.
‘ஆங் வெக்கமா இருக்காதாக்கும்? என்று முனகினாள்.

அவனும் பதிலுக்கு அழுந்த முத்தமொன்றினை வைத்தான்.

அவள் படபடப்பு அதிகரித்தது.

“இப்படி வம்பு பண்ணிணீரு நான் போன வெச்சுடுவேன் என்றாள் தைரியத்துடன்.

“எங்கே பாக்கலாம்? என்றான்.

அவளுக்கோ போனை வைக்க மனம் வரவில்லை.

அவன் எப்போதும் போல பெரிதாக சிரித்தான்

“சீ, ரொம்ப மோசம் என சிணுங்கினாள்.

“நான் என்ன, நேர்ல உதட்டோட உதடு முத்தமா கேட்டேன்.... என்னமோ போன்ல தந்ததுக்கே வெக்கப்பட்டு மாஞ்சு போறவ என கேலி செய்தான்

“ஆத்தீ என்றாள்.

“சரி சரி போய் உறங்கு என்றான்.

அடுத்த நாள் பெரியவரை சந்தித்து விலாவரியாக கூறி அவரிடம் ராஜியை மணக்க கேட்டான்.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல தம்பி.... ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.... பாவம் அந்தப் புள்ள, படாத கஷ்டம் இல்ல..... இந்த சின்ன வயசிலேயே அனைத்தையும் அனுபவிச்சுட்டுது.... இனியானும் உங்களால நல்ல வாழ்க்கை அமையணும்.... நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கோணும் என்று வாழ்த்தினார்.

“ஆமா தம்பி, உங்க வீட்டுல ஒப்புவாகளா? என்றார் சந்தேகமாக

“எனக்குன்னு இப்போ இருக்கறது என் பொறந்தவோ மாலதியும் மச்சான் குமரனும் தானுங்க. அவங்ககிட்ட நான் பேசீட்டேன் அவங்களுக்கு சந்தோஷம்தான் என்றான்.
“பெரியவங்க, நான் போய் பேசி சம்மதம் கேக்க போன்றவங்க... அப்படி யாரும் இல்லீங்கைய்யா....

“எங்க ரெண்டு பேருக்குமே, வீட்டுக்கு பெரியவங்களா, நீங்க முன்னிருந்து நடத்திகுடுத்து வாழ்த்தோணும் என்றான்

“ஐயோ தம்பி, அதச் சொல்லோணுமா, நல்லா நடக்கும்.... தம்பி மருது, கதிர பார்த்தீங்களா? என்று கேட்டார்

“ஆமாங்கைய்யா, இன்னும் சில மாசத்தில வந்துருவானாம்.... அதான் அதுக்கு பிறவே முகூர்த்தத்த வெச்சுக்கலாம்னு... என்றான்

“ரொம்ப சரி.... பாவம் அந்தப் புள்ள என்றார்.

அதன்படி ஏற்பாடுகளை அவரே முன் நின்று, தன் தள்ளாத வயதிலும், மிக உற்சாகமாக செய்தார்.

“பொன்னிக்கும் முனியனுக்கும் கந்தனுக்கும் இன்னும் அனைத்து வேலையாட்களுக்கும் விவசாயிகளுக்கும் மெல்ல மெல்ல விஷயம் கசிந்தது. முதலில் பொன்னிக்குத் தெரிய வந்தது.

“ஹப்பாடி, என் ஆத்தா கண்ணா திறந்திட்டா..... எங்க சின்னம்மாவுக்கு விடிஞ்சு போச்சு என குதூகலித்தாள்.

அனைவருக்குமே மிக்க மகிழ்ச்சி.

கல்யாண வேலைகளை முன்பை விடவும் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு ராஜிக்கும் மனம் நிறைந்தது. அவளுள் ஏற்பட்டிருந்த கலக்கம் கொஞ்ச கொஞ்சமாக மறைந்தது.

தான் எடுத்தது நல்ல முடிவுதான் போலும் என தேற்றிக்கொண்டாள் ஆனாலும் கிராமப்புறம்... ஊரின் பெரிய மூதாட்டிகளுக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
“அழிவு காலம் பொறந்துருச்சு ஆத்தா. அறுத்தவளுக்கு போய் இன்னொரு தாலியாமே, அவள முன் வந்து இன்னொருத்தன் கட்றதாமே, ஐயோ எங்காச்சும் கேட்ருப்பமா...? என வீடு தேடி வந்து புரளி பேசினர்... ஒப்பாரி வைத்து புலம்பினர்.

அதைக் கேட்டு தெளிந்திருந்த ராஜியின் உள்ளம் மீண்டும் கலங்கியது.

பெரியவர் முருகானந்தத்திடம் வைது தீர்த்தனர்.

“கேக்க ஆளில்லைனா சாமி இப்படி ஒரு ஏற்பாடு பண்ணிநீரு, பெரிய வீட்டு குலங்கோத்ரம் என்ன, மருவாத என்ன, அந்த வீட்டில போய் இப்படி கேடுகெட்டு நடக்கலாமா, சாமிக்கே அடுக்காது” என வாயை நீட்டினாள் ஒரு கிழவி.

“தா பாருங்க ஆத்தா, என் வாய கிளப்பாதீக, அது அசலே பச்சை குருத்து.... சீதா தேவிய விட உத்தமியான பொண்ணு, அந்த சீதா தேவிய விட அதிகம் துன்பங்கள இந்த இள வயசில அனுபவிச்சுட்டு ஒரு சுகமும் படாமா பட்ட மரமா நிக்குது... அதுக்கு நல்ல காலம் பொறந்து நல்லவன் ஒருத்தன் கட்டிகிட வந்திருக்கான்... அத கெடுக்கலாம்னு வந்தீகளா, போங்க தாயி வேலைய பார்த்துகிட்டு” பாதி எரிச்சல் பாதி கோபம் ஆனாலும் மரியாதை குறையாமல் விரட்ட பார்த்தார்.

அதற்கும் அசையாமல் அவர்கள் பிலாக்கணம் தொடர, துணிந்து பொன்னி எதிர்கொண்டாள்

“த கெழவி, இங்கே என்ன ஒப்பாரி வெச்சுகிட்டு... எழுந்து போவீகளா அப்பால, வந்துட்டாக... ஏன், நீ அம்பது வருஷம் தொங்க தொங்க தாலி கட்டி குடித்தனம் நடத்திபுட்டே அவுகள சொல்ல வாரீகளோ? தாலிகட்டிகிட்ட நாலா நாளே விளக்குமாரால அடிச்சே உம்புருசன துரத்தினவ தானே நீயி, அன்னிக்கி ஓடினவரு தேன்..... இப்போ வர தல காட்டல. நீ சுமங்கலியா இல்லையானே உனக்கே தெரியாது.... தா அவுக வீட்டிலே, சாமியாரா போனவரு போனவருதான், நீங்க எல்லாம் சுமங்கலியா பூ வெச்சு பொட்டு வெச்சு அலையரீக.....

அசலே அறியாப் பொண்ணு, சின்ன வயசு. வாழவே இல்ல ஊருக்கே தெரிஞ்ச விஷயம். வந்துட்டாக அத இத பேசிகிட்டு.... போ கெழவி என விரட்டினாள்.

“ஆனாலும் உனக்கு ரொம்ப வாய் கொழுப்பாகி போச்சு, எல்லாம் பெரிய வீடு குடுக்கற எடம் என வைதாள் பாட்டி

“அப்படிதான் வெச்சுக்க, போ கெழவி என திட்டினாள்.

“என்ன பொன்னியக்கா, பெரியவக அவுகள போய் நீங்க...? என்றாள் ராஜி

“பெரியவகளா, யாரு ந்தா இவுகளா, அட சும்மனாச்சும் வம்ப கிளப்பன்னு புறப்பட்டு வரும் தாயி இந்த செம்மம். நீங்க போங்க நான் இவிங்கள சமாளிச்சுக்கறேன்
என்றாள்.

வீடு கல்யாண களை பெற்றது.

கதிர் வந்துவிடுவான் என மருது உறுதி கூறி இருந்தான். அதை நம்பித்தான் ஏற்பாடுகள் நடந்து வந்தன. அவன் வந்துவிடணுமே என ராஜியும் வேண்டிக்கொண்டாள்.

எந்த ஆடம்பரமும் இன்றி கோவிலில் தாலி கட்டி ஊருக்கு விருந்து படைத்துவிடலாம் என ராஜியின் ஆசை.

பொன்னியும் பெரியவரும்தான் அவளுக்கு எடுத்துரைத்தனர் வெவ்வேறு விதத்தில்...

“என்னமா ராஜி பொண்ணு, நீ சொல்றது நியாயமா, மருது அவங்க ஊர் பண்ணக்காரர் இல்ல, சுற்றம் ஜனம் உற்றார் உறவினருங்கன்னு ஜாதி சனம்னு மனுஷங்க இருப்பாங்க இல்ல.... அவருக்கு இதுதானே மா மொத கல்யாணம். அவுக தங்கச்சி இருக்குதில்ல.... அதுக்கு எம்பூட்டு ஆச இருக்கும் தன் அண்ணன் கல்யாணத்த அப்படி நடதோணும் இப்படி செய்யோணம்னு.... நாம அத கெடுக்கலாமா சொல்லு.

“நீ நடந்து போனதையே மறந்துடு கண்ணு... அது கல்யாணமே இல்லை ராஜி கண்ணு என அவளை சமாதானப்படுத்தினர்

அதன்படி இங்கே கோவில் ஒட்டிய மண்டபத்தில் வைத்து அனைவரும் கூடி இருந்து திருமணத்தை நடத்திட ஏற்பாடாகியது.

அதை தொடர்ந்து விருந்து, பின்னோடு மறுநாள் மருதுவின் ஊருக்கு சென்று அங்கே விருந்து. பத்து நாட்கள் அங்கே தங்குவது, பின் அங்கும் இங்குமாக இருப்பது என பேசி முடிவு செய்தனர் மருதுவும் ராஜியும் பெரியவரிடம் ஆலோசித்து பேசியதன் முடிவு படி.

பத்திரிகை வந்ததும் முதல் அழைப்பாக தாம்பூல தட்டுடன் பெரியவர் முருகானந்தம் மற்றும் மருது, குல தெய்வம் கோவில் சென்று காணிக்கை செலுத்தி வைத்துவிட்டு, அங்கிருந்து, மாலதியினை கட்டிகொடுத்த ஊருக்கு சென்றனர். தங்கைக்கும் மச்சானுக்கும் வீட்டோருக்கும் புதுத்துணி வைத்து அழைத்தனர்.

பின்னோடு அவனது ஊரில் அவனின் உற்றார் சில உறவினர், ஊரின் பெருந்தனக்காரர், பண்ணை, மிராசு என உட்பட்டோரிடம் பாக்கு வெற்றிலையுடன் பத்திரிகை வைத்து அழைத்தனர்.

“என்னப்பா மருது, பண்ணையை பார்க்க ஒராளா போன, இப்போ ரெண்டாளாக ஏர்பாட்டோடவே வந்துட்ட....” என சந்தோஷமாகவும் சிலர் கொஞ்சம் பொறாமையுடனும் அவனை கேலி செய்தனர்.

மருதுவுன் நெருங்கிய நண்பன் சரவணனிடம்தான் இவனது நிலங்களை குத்தகை போல பார்த்துக்கொள்ள சொல்லி இருந்தான். அவனையும் அவனது குடும்பத்தாரையும் நேரில் கண்டு அளவளாவி நான்கு நாட்கள் முன்னரே வந்திருந்து நடத்திகுடுக்கும்படி வேண்டினான்.

அந்த நாள் விடிந்தது. அதி காலை எழுந்து ராஜியை தயார் படுத்தி மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். ஊரே விழா கோலம் பூண்டிருந்தது.

மருது மண மேடையில் வீற்றிருந்தான். அழகாக, கண்ணுக்கும் மனசுக்கும் நிறைந்த வகையில், அவனை அவளுக்கு ஜோடியாக பார்த்தவர்கள் கண்ணும் மனமும் நிறைந்தது.

“ஹப்பாடி இப்போவாச்சும் விடிஞ்சதே என அனைவர் வாயும் முணுமுணுத்தது.

அவளை அழைத்து வந்து அமர வைக்க, உள்ளே ஒரே திகிலாக வந்தமர்ந்தாள்.

அவனை கீழ் கண்ணால் காண அவன் பளீரென இவளைப் பார்த்து சிரித்தான்

அவளும் வெட்கத்துடன் புன்னகைத்தாள்.

“அண்ணா வந்துட்டாகளா? என பொன்னியை திரும்பி கேட்டாள்.

“இல்லையே, அவிகளுக்குதான் காத்திருக்கோம் என்றாள் அவள் வாசலையே பார்த்தபடி.

கந்தன் போயிருந்தான் ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வர.

காணலியே என அனைவரும் காத்திருந்தனர்

“அவன் வந்துருவான் கண்ணு.... முகூர்த்தம் தாண்டிடப் போகுது.... தாலிய கட்டிடலாம்
என்றார் பெரியவர்

“இல்ல பெரியப்பா, கதிர் அண்ணா வந்தாத்தான் இந்தக் கல்யாணம் என்றாள் மருதுவை ஆமோதிப்பாக கண்டபடி.

அவனும் ஆம் கண்டிப்பாக என கண் அமர்த்தினான்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது

“ரயில்ல வரலீங்க என கந்தன் கூறிக்கொண்டே வர கண்ணீர் தளும்பியது ராஜிக்கு. அவனைக் கண்டாள்.

“இரு பாப்போம் என அவள் கையை தட்டி கொடுத்தான்

இன்னும் ஐந்தே நிமிடங்கள் இருக்கின்றது என்ற நிலையில் மூச்சிரைக்க ஓடி வந்தான் கதிர்.

“கதிர் அண்ணா என்றாள் ராஜி
“ராஜேஸ்வரி வந்துட்டேன் என மூச்சிரைத்தான்

“என்னவாச்சு கதிர், ரயில்ல வரலியா? என்று கேட்டான் மருது

“இல்ல மச்சான். ரயில் மிஸ் அகீட்டுது. அதான் லாரி பிடிச்சு பஸ்ஸ பிடிச்சு ஓடியாறேன்... ஆகட்டும், நேரமாச்சுது.... தாலிய எடுத்துக்கோங்க என முன்னே வந்து நின்றான்

அவனைக் கண்ட நிம்மதியில் ராஜியும் சந்தோஷமாக தலை குனிந்து தாலியை வாங்கிக்கொண்டாள்.

மருதுவும் மகிழ்ச்சியுடன் கட்டிட மாலதி முடிச்சிட்டாள்.

கதிர் கண்ணில் நீர் நிறைய மனமும் நிறைய அவர்களை மனசார வாழ்த்தினான்.

அதன் பிறகு ஹப்பாடா என அமர்ந்தான்

“வந்த காலோட நிக்கறியே கதிரு.... போப்பா குளிச்சு எதாச்சும் சாப்பிடு என்றார் பெரியவர்

“அதுனால என்னங்கய்யா, நேரத்துக்கு வர முடிஞ்சதே சந்தோசமுங்க என்றான் மன நிறைவுடன்.

இருவரும், மற்ற அனைவரும் கூட, தன் மீது வைத்த மதிப்பும் அன்பும் அவனை திக்குமுக்காடச் செய்தது.

“ஒப்படைச்சுட்டேனப்பா மருது. இனி உங்க பாரம் என்றான் கிண்டலும் கேலியுமாக.

“நாங்க தங்கமா பார்த்துக்குவோமில்ல என்றான் அவள் கையை எடுத்து முகர்ந்தபடி.
அவள் வெட்கி தலை குனிந்தாள்.

உடனே தலை நிமிர்த்தி “கதிர் அடுத்து உங்க முறை என்றாள்.

“ரொம்ப சரி என்றான் மருது

“என்ன? என்றான் கதிர் புரியாமல்.

“அடுத்து உங்களோட திருமணம் பாக்கின்னு சொன்னேன் என்றாள்.

“போச்சுடா, தாலி கழுத்தில ஏறினதுமே இந்த பெண்டுக பெரிய மனிஷி மாதிரி ஆயிடறாங்கப்பா என்றான் சிரித்தபடி

“அப்படிதான் வெச்சுக்குங்களேன் என்றாள் அவளும் சிரித்தபடி

“அதுக்கென்னம்மா, நீயே எனக்கொரு நல்ல பெண்ணா பார்த்துடு.... நீ காட்டுற பொண்ணு கழுத்தில நான் தாலிய கட்டிபிடுறேன் என்றான்

“அப்படியா, அதுக்கென்ன பார்த்துட்டா போவுது... இன்னிக்கே ஆரம்பிக்கறேன் என்றாள்.

“அம்மா தாயே, இன்னிக்கி வேண்டாம்... அத விட முக்கிய வேல நெறைய இருக்கு என்றான் மருது அவளை கண்டு கண் அடித்து.

“சீ போங்க என கூறி தலையை குனிந்துகொண்டாள் ராஜி.

கதிரும் அனைவரும் கூட சிரித்தனர்.

ராஜியின் வெட்கச்சிவப்பும் கதிரின் நிறைந்த சிரிப்பும் பெரியோர் ஆசிகளும் கண்டு மருதுவின் கண்களில் ஆயிரம் கோடி மின்னல்கள் மின்னின.

முற்றும்