Tuesday, 10 July 2018

NENJIL KODI MINNAL - 7

அவளுக்கும் அந்த பயம் உள்ளூர வாட்டியது. ‘இவுகளுடன் மனமொன்றி எப்படி.... தாயே, ஆத்தா என்னைக் காப்பாத்து என உள்ளுக்குள்ளே கதறினாள்.

அந்த மாத கணக்கு வழக்கு சரிபார்த்து மனமகிழ்ந்தார் ராஜலிங்கம். ஆனால் அந்தளவு மட்டுமே. மேற்கொண்டு எந்த முடிவும் பதவியும் நடத்தவில்லை.

முந்தைய நாளே அவரை பண்ணையில் போய் தனிமையில் சந்தித்திருந்தாள் ராஜி.
சாப்பாடு எடுத்துப் போவது போல சென்றாள்.
“என்னம்மா, இந்த வெய்யில்லா நீ சோறு கொண்டுகிட்டு வந்திருக்கே?
என இரைந்தார் அவர்.
“இருக்கட்டும்பா, எனக்கு அப்பப்போ பண்ணைக்கும் வயக்காட்டுக்கும் வந்து பழக்கம்தானே என்று சிரித்தாள்.
“அதுசெரி, அதான் எனக்கு தெரியுமே.... அதனாலதானே இங்கே வேலைபார்க்குற பெண்டுபிள்ளைங்க எல்லாம் உன்னையே சுத்தி வருதுக.... சின்னம்மா சொன்னா வேற மறுபேச்சேது தாயீ.... உன் அன்பினால எல்லாரையும் கட்டி போட்டு வெச்சிருக்கிறியே கண்ணு என்று மெச்சிக்கொண்டார்.

“அப்பா, அன்பை பொழிய பொழிய வளரும், மேலும் பெருகும்.... உறவுகள் ஆனந்தமயமாகும் இல்லியாப்பா என்றாள்.
“கவித போல பேசுறடா நீ என்றார் இறுமாந்து.

“என்னடா, என்ன விஷயம்? என்றார். “என்னதுப்பா? என்றாள்.
“கண்ணு, நான் ஒன்ன பெத்தவனாக்கும், நீ விஷயம் இல்லாம எனக்கு சோறு தூக்கிட்டு இந்த நேரத்தில இப்படி வரமாட்டே.... சொல்லு தாயீ என்றார்.
“அப்பா அவர் தன்னை எவ்வளவு நன்றாக புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார் என கண்கள் நிறைந்தன.

“இல்லப்பா, அது வந்து... சொன்னா கோவிக்கப்டாது... தப்பா எதுவும்... என்று இழுத்தாள்.
“என்னத்துக்கு இம்பூட்டு யோசனை, சொல்லும்மா என்றார்.
“நாளையோட அவுகளுக்கு, அதான் உங்க மாப்ளக்கு, நீங்க கொடுத்த பொறுப்புல ஒரு மாசம் முடியுது.... அந்த நிர்வாகத்த பார்த்து தோப்புகளையும் அவுக பொறுப்பில நீங்க விடறதா பேச்சு.... அதான்.... என இழுத்தாள்.

“ஆமா கண்ணு, அதான் செவ்வனே பார்த்துக்கிடறாரு போல இருக்கே.... கணக்கு கூட ஒண்ணும் தப்பா சொல்லலியே.... பொறுப்பா இருக்காவன்னா நாமும் சொன்ன சொல் போல தோப்புகளை அவர் வசமாக்கிடணும்தானே ராஜி கண்ணு? என்றார்.

“இல்லப்பா என்றாள். “என்ன இல்ல? என்றார் கேள்வியாக புருவம் முடிச்சிட.

“இன்னும் ஒரு மாசம் போகட்டும்பா.... நல்லபடி தான் ஆபீச நடத்தினாக என்னாலும், உர மற்றும் மருந்துகள பத்தியே இன்னமும் முழுசா தெரிஞ்சுக்க அவுகளுக்கு முடியலப்பா.... அங்க விக்கற ஒவ்வொரு சாமானையும் பத்தித் தெளிவா தெரிஞ்சு, மேற்கொண்டு வாங்க விற்க, விலை மதிப்பீட, எந்த பருவகாலத்துக்கு எந்த மருந்து.... எந்த பயிருக்கு எந்த உரம்ன்னு சரிவர தெரிஞ்சுக்காம இன்னமும் அவுககிட்ட பொறுப்புகள ஏற்றிகிட்டே போனா எல்லாமும் அரைகுறையா தெரிஞ்சுகிட்டு குழம்பிடுவாக.... செய்யற பக்குவமும் வராதுன்னு தோணுதுப்பா என்றாள்.

யோசனையில் ஆழ்ந்தார் ராஜலிங்கம். உண்மைதான் இவள் கூறுவது என.
‘தான் ஆகட்டும், கதிர் ஆகட்டும், ராஜியாகட்டும், இதிலேயே முதல் நாள் கொண்டு ஊறி வளர்ந்தவர்கள். இவர்களுக்கே சில சமயம் தடுமாற்றம் ஏற்படுவதுண்டு.... அடுத்தவர் அதனை தீர்த்து வைப்பது உண்டு.... கனகு நேற்று பொறுப்பேற்றவன் அல்லவா. அவனுக்கு, தான் அவகாசம் கொடுக்கத்தான் வேண்டும்.

தான் எவ்வளவுதான், பொறுப்புகளை, ராஜி கனகு கதிர் என மூவரிடமும் ஒப்படைத்துவிட்டு கோவில் குளம் மற்றும் பிறக்கப்போகும் பேரப் பிள்ளைகள் என விச்ராந்தியாக இருக்க முனைந்தாலும், அவசரப்பட்டு நிறைகுடத்தை தளும்ப விடாமல் உடைந்து விடாமல் பாதுகாக்கவும் வேண்டும் தானே.... தனக்கென்ன, இப்போதைக்கு தெம்பில்லையா துணிவில்லையா.... கொஞ்ச உடல்நலக் குறைவு, அது வயசு ஏற்றத்தின் காரணமாக ஏற்பட்டது. சரி, மெல்ல செய்வோம் என தீர்வுகண்டார்.

“நீ சொல்றது அம்புட்டும் ரைட்தான் கண்ணு.
“ரொம்ப தெளிவா இருக்கே தாயீ.... நல்லா இருக்கணும் நீங்க ரெண்டு பேரும்.
“அப்படியே செய்வோம். கொஞ்சம் தள்ளிப் போடுவோம்...

“ஒவ்வொண்ணா தேர்ச்சி பெற்று முன்னேறட்டும்.... முட்டி மோதி வந்துருவாரு புத்திசாலி மாப்ளதான் என அவனையும் மெச்சிக்கொண்டார்.
அவள் வேறெங்கோ பார்த்து புன்னகைப்பது போல நடித்தாள்.

‘சொத்துக்களை அவன் கையில் நாரவிடாமல் காப்பாற்றிவிட்டாள்..... தன்னை எப்படி காப்பாற்றிக்கொள்ளப் போகிறாள்....

‘அல்லது, தன்னை அவனுக்குக் கொடுத்து அவனை திருத்த முயற்சி செய்வது நலமா..... என்ன இருந்தாலும் உரிமை பட்டவன் அல்லவா..... தாலி கட்டிய கணவன்.... அவனிடம் மறுக்க அவளுக்கு உரிமை இல்லை.... ஆனால் இணங்கவும் மனசில்லை... தளும்பி குழம்பினாள்....

‘அம்மா வழி காட்டு என கரைந்தாள்.
மீனாட்சி சிரித்தாள்.
“நான் செய்வது சரியாம்மா, தவறா.... அவருக்கு என்னை அர்பணிக்க வேண்டுமா, என் மனதும் உடலும் அதற்கு இணங்கவில்லையே அம்மா.... நான் செய்வது சரியா தவறா என எனக்கு எடுத்துக் கூற இருந்த என் தாயையும் நீ கொண்டு சென்றாயே.... நான் யாரிடம் போய் இதைப்பற்றி பேச முடியும். எப்படி தெளிவு காண்பது? என உருகினாள்.

யாமிருக்க பயமேன் என்பது போல அன்னை அபயம் அளித்தாள்... வேறொரு விதத்தில் பதில் வந்தது.

எதிர்பார்த்தபடி தோப்புகள் தன் கைக்கு வரவில்லை என்றதும் கனகுவின் சுயரூபம் விஸ்வரூபம் எடுத்தது. அவளை நெட்டி தள்ளிக்கொண்டு  விலகிப் போனான் கனகு.
ன்னா ராஜி, ன்ன நடக்குது, இந்த மாசம் பொறந்ததும் தென்னந்தோப்பு மாந்தோப்பு ரெண்டுமே எங் கையில பொறுப்பு விடுவார்னு தானே டீ உங்கப்பாரு போன மாசம் சொன்னாரு, இப்போ என்னமோ இருக்கட்டும் மாப்ள, மெள்ளமாத்தான் செய்யுங்களேன், எங்கே ஓடி போகுதுன்னு பேசறாரு....?

“இது என்னடி இழுவ... இதுக்கு என்ன அர்த்தம், நீதான் அவர்கிட்ட எதையாச்சும் போட்டு குடுத்தியா.... ஒன்னத் தவிர இந்த வேலையெல்லாம் செய்ய வேற எவனுக்கு தெகிரியம் இருக்கு இந்த ஜில்லாவில? என கர்ஜித்தான். 

ராஜி கொஞ்சம் மருண்டாலும், இதை, இன்னமும் மோசமாகக் கூட, அவன் நடந்துக்கொள்ளக் கூடும் என அறிந்தே எதிர்பார்த்தே இருந்தாள் என்பதால் சமாளித்துக்கொண்டாள்.

“இல்ல அத்தான். நான் ஒண்ணும்... என முனகினாள்.

“உங்க நல்லதுக்குனு அப்பாதான் சொன்னாரு. உர கம்பெனி விஷயமே இன்னும் உங்களுக்கு சரியா புரிபட்டிருக்காது அதுக்குள்ள போய் தோப்புகளையும் ஒப்படைச்சு உங்களை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு... என இழுத்தாள்.

“நல்லா இல்ல ராஜி, அம்புடுதேன் சொல்லிப்புட்டேன். நம்மகிட்ட முன்ன ஒரு பேச்சு பின்ன ஒரு பேச்சு என்னிக்குமே செல்லாது. மரியாதையா உங்கப்பார நாளக்காலையில எங்கிட்டே எல்லாத்தையும் முழுமையா ஒப்படைக்கச் சொல்லு. ஓரமா ஒதுங்கி சாப்டோமா கோவிலுக்கு போனோமான்னு மூலையில முடங்கச் சொல்லு... இல்ல, நடக்கற கதையே வேற. அசலுக்கே ஆள் இல்லாம ஆக்கிடுவேன் ஜாக்ரத என்று மிரட்டினான்.

“அது ஒரு பக்கம்... உனக்கும் இந்நிக்கிதான் கடைசி எச்சரிக்க.... ஆடி முடிஞ்சுது டீ..... வெச்சிருக்கேன் இன்னிக்கி ஒனக்கும் கச்சேரி என்றான் கண்கள் கொவைப்பழமாக சிவந்து, அவ்வளவு அருகில் அவன் முகத்தைக் கண்டு அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. கண்ணீர் பொங்கட்டுமா என பயமுறுத்தியது. அதை அப்படியே வழக்கம் போல முழுங்கினாள்.

உடல் வெடவெடவென நடுங்கத்தான் செய்தது. அதனை அவனிடம் வெளிக்காட்டாமல் மெல்ல தந்தையிடம் சென்றாள்.

‘பண்ணையை ஒன்றும் இல்லாமல் எரிப்பானோ... தன் தந்தையினை ஏதேனும் செய்வானோ? என அச்சுறுத்தலாக இருந்தது ராஜிக்கு. அதற்காக இவனுக்கு பயந்து அனைத்தையும் ஒப்படைப்பதா எனக் கேள்வி உள்ளே அரித்தது. சொத்து போனாலும் தந்தைக்கு ஒரு ஆபத்தும் வராமல் இருந்தால் போதாதா... இவனுக்கென்ன, விற்கும் உரிமை ஒன்றும் தரப்போவதில்லையே. மேற்பார்வை தானே..... என்ன கிழித்துவிடுவான் பாப்போம்.... குடுக்கச் சொல்லி விடுவோமா.... என பல யோசனைகள் வாட்டின.

முன்னுக்கு பின் முரணாக, தந்தையிடம் மீண்டும் போய், அவன் மிரட்டியதை கூறாமல், அனைத்தையும் அவனிடம் ஒப்படைக்கச் சொல்ல அவளுக்கு என்னவோ போல இருந்தது.

‘கஷ்டம் டா சாமி என வேறே வழி இன்றி சென்றாள். அப்பாவிடம் நயமாக, “அவுக சமாளிச்சுக்குவேன்னு சொல்றாக.... குடுத்து பார்த்தாதானே தெரியும் என்னால முடியுதா இல்லையான்னு னு கேட்குறாகப்பா. கொடுத்துதான் பார்க்கலாமாப்பா..... நீங்க என்னப்பா சொல்றீக? என்றாள்.

“ஹ்ம்ம், அப்படியா.... அதுவும் செரிதேன், அப்படியே செய்துருவோம் என்றார் அவரும். மகளின் நல்வாழ்வுக்காக அவர் என்னவும் செய்ய சித்தமாக இருந்தார்.

பொடி நடையாக யோசித்தபடியே வீட்டை அடைந்தாள். வெளிறி போன அவள் முகமே நிலைமை ஒன்றும் சரியில்லை என்பதை அப்பட்டமாக அனைவருக்கும் உணர்த்தியது.

“என்ன கண்ணு இது, வேர்க்க விறுவறுக்க இந்த உச்சி வெய்யில்ல நடந்தேவா வந்தீக, என்னவாச்சுது, முகமெல்லாம் வெளிறி போயிருக்கு... என்ன சங்கதி? என்று பூத்துவாலையால் அவள் நெற்றி வியர்வையை ஒற்றி எடுத்தாள் பொன்னி. பானையிலிருந்து வெட்டிவேர் மணக்க ஜில்லென சொம்பில் நீர் கொண்டு வந்து குடிக்கச் செய்தாள்.

“ஆங், என்ன பொன்னிக்கா? என்றாள் கனவிலிருந்து விடுபட்டவள் போல.

“என்னம்மா? என்றாள் அவளை நேராகப் பார்த்து பொன்னி.

“பொன்னிகா, வந்து.... அவுக ரொம்ப கோவத்துல இருக்காக..... அப்பா சொன்னபடி தோப்பு தொறவு அவுககிட்ட குடுக்கலையாம்... அதோட, அதோட... வந்து... என திணறினாள்.

“அதோட என்ன கண்ணு? என்றாள் ஆதுரத்துடன்.

“வந்து, இன்னிக்கி ஆடி முடிஞ்சிட்டுதாம்... என்றாள் அதற்குள் அவளுக்கு கன்றிச் சிவந்தது. அவளிடம் அதைப்பற்றி பேச அவமானமாக இருந்தது.

“ஓஹோ, வாத்யாருக்கு சின்ன ராணி கேக்குதோ.... ஏன் பக்கத்து டவுன் காஞ்சனா போறலையாமா? என்றாள் எகத்தாளமாக பொன்னி.

“என்ன பொன்னிக்கா, என்ன சொல்றீக யாரு காஞ்சனா? என்றாள் ராஜி அதிர்ந்து.

“ஒண்ணா ரெண்டா எடுத்துச் சொல்ல கண்ணு. இப்போதைக்கு தெரிஞ்ச பேரு ஒண்ணு காஞ்சனா. பக்கத்து டவுன்ல இவுனுகள மாதிரியான பொறம்போக்கனுங்கள வலையில போட்டுக்கவே முந்தி விரிச்சுகிட்டு உக்கார்ந்திருக்கா ஒரு சிறுக்கி.... அவகிட்ட, உங்கள கட்டறதுக்கு முந்தி இருந்தே இவுகளுக்கு தொடுப்பு உண்டு. அவளுக்கு கொட்டி அழுதே கடன் ஏறிப்போச்சாம். தன் நஞ்சைய குத்தகைக்கு விட்டிருக்காவனு ஊரையும் பெரியைய்யாவையும் நம்மளையும் நம்ப வெச்சு, நிசத்தில அதை குத்தகைக்காரர் கிட்டேயே அடமானம் வெச்சு கொஞ்சம் கடனை அடைச்சிருக்காவ. இன்னமும் பாக்கி நிக்குது வெளியில கடன் லக்ஷத்துக்கு மேலே என்றாள்.

“என்னக்கா சொல்றீங்க? என அதிர்ந்தாள்.

“ஆமா, அவ இப்போ அப்போ தொடுப்பு இல்ல. பல வருஷ கணக்கு....

“உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும், வேணுமின்னே யாராச்சும் புரளி கிளப்பி இருக்கலாம்தானே பொன்னிக்கா? என்றாள் குழந்தையாக.

“ஐயோ ஐயோ, பால்மணம் மாறாம இப்படி இருக்கப்டாது கண்ணு.... முழிச்சுக்க கண்ணு.... இந்தப் பய கிட்ட எப்போதுமே உஷாரா இருக்க கத்துக்கம்மா.... என் ராசாத்தி இல்ல என முகம் வழித்தாள்.

ராஜி அவ்வளவுக்கு குழந்தை இல்லைதான், ஆனாலும், பொய்யாக இருக்காதா என்ற நப்பாசைதான் அவளை அப்படிப் பேச வைத்து.

“அப்படீன்னா அவுக இப்பவும் அவங்ககிட்ட...? என இழுத்தாள். மேலும் அதைப்பற்றி பேச கூச்சமாக இருந்தது.

“அவங்க என்ன அவங்க, அந்த சிறுக்கிக்கு என்ன மரியாதை? என எறிந்தாள் பொன்னி. 

“இல்லக்கா, நாம ஏன் யாரையோ பத்தி.. ..

“அதுசெரி என முகவாயை தோள்பட்டையில் இடித்தாள் பொன்னி.

“ஆமா கண்ணு, இன்னமும் இந்த மனுஷன் அவ கிட்ட தொடுப்பூ வெச்சுக்கிட்டுதான் இருக்காரு....

“உங்களுக்கு கல்யாணம் நடந்த மொத ராத்திரி, இந்த மனுஷன் வீட்டுக்கு வந்த கோலத்த பார்த்தே எனக்கு அடி வயிறு கலங்கீடுச்சு.... அதான், என் மாமன் கிட்ட சொன்னேன், காதும் காதும் வெச்சாபோல இந்தாளப் பத்தி முழு வெவரமும் கண்டுபிடிக்கச் சொல்லி....

“எம்மாமன் கெட்டிக்காரர் இல்ல... என ஒரு நொடி அகமகிழ்ந்து பின் “அதான் கிடுக்கி பிடியா போட்டு பிடிக்கற ஆள பிடிச்சு கக்க வேண்டியத கக்க வெச்சுட்டாரு.

“மொத நாளு யாருக்கோ பணம் கைம்மாத்தா குடுத்திருக்கேன்னு சொன்னாகளே, அது பொய்யி.... ஆபீஸ் பணத்த எடுத்துகிட்டு நேரா அந்த பொட்டச்சி வீட்டுக்குத்தான் போனாகளாமில்ல. அங்க குடிச்சு கூத்தடிச்சுட்டுதான் நல்லவக போல இங்கே வந்து ரோஷத்த காமிச்சாவ. அந்தப் பணமும் அங்கதான் போயிருக்கு, அவ கைக்குனு, இன்னும் வேற நான் சொல்லணமாக்கும் என இடித்தாள்.

ராஜிக்கு தலையில் இடி விழுந்தது போல ஆகியது. குடிப்பான் சீட்டாடுவான் சூது கூட உண்டு.... முரடன், வலுச்சண்டை உண்டு.... எல்லாமும் அவளே கேள்விப்பட்டிருக்கிறாள். இந்த ஒரு மாதத்தில் அவளும் அங்கே இங்கே காதும் காதும் வைத்தாற்போல் விசாரிக்க ஏற்பாடு செய்திருந்தாள்தான். ஆனால் அவள் செவிக்கு காஞ்சனா விஷயம் இன்னமும் எட்டி இருக்கவில்லை.

‘கண்டவளோடு தொடர்பு வைத்திருக்கிறானா, இன்னமும், அவளைத் தொட்டு தாலி கட்டிய பின்பும்... இதையே அவள் செய்திருந்தால் பூகம்பமே வெடிக்கும் அல்லவா, ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்கோர் நியதியா? என உடலும் மனமும் எரிந்தது.

‘இந்த லக்ஷணத்தில், நாளை, தான் கேட்டுக்கொண்டதன் பேரில், தோப்புகளையும் அல்லவா தந்தை அவன் பொறுப்பில் விடப்போகிறார்? என திணறினாள். பண்ணை இன்னமும் தந்தை மேற்பார்வையில் இருந்தது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

‘என்னவானாலும் சரி, அவனை தன்னை தொடவிடக்கூடாது... இப்போதைக்கு கண்டிப்பாக இல்லை.... திருந்தி வந்தால், ஒழுங்காக அனைத்தையும் பார்த்து நடந்து கொண்டால்.... பின்னர் அவனை இந்தச் செயலுக்கு மன்னிப்பதைப் பற்றி யோசிக்கலாம்... என்ற திண்ணமான முடிவுக்கு வந்தாள்.

‘வந்தது வரட்டும், அப்படித்தான் ஒரு வேளை ரகளை வெடித்து இவன் சுயரூபம் அப்பாவுக்கு தெரிய நேர்ந்தால், என்னதான் செய்ய முடியும். விதிவசம் என அதையும் சமாளிக்க துணிந்தாள்.

“ம்ம்ம் செரிக்கா, இந்த விஷயம் நம்மோடு இருக்கட்டும் என்றாள் துணிச்சலுடன் எழுந்து.


முகம் கழுவி உடைமாற்றி சாப்பிட்டாள். 

1 comment:

  1. Very interesting . Rajee is bold enough to face problems

    ReplyDelete