Monday 16 July 2018

NANJIL KODI MINNAL - 13

“சார் என்று அலராத குறையாக.

“ஒண்ணும் பயமில்ல, வாங்க கதிர்வேலன் என்றார்.

“சரி சார் என, ராஜியிடம் எல்லாவற்றையும் கூறியபடியே பின் தெருவுக்கு வந்து மறைவாக காரை நிறுத்தினான். பின் அவர் கூறிய வண்ணமே இருவரும் ஆபீசை அடைந்தனர். அங்கே பின்கட்டில் அமர, தாசில்தார் அங்கே வந்தார்.

“வணக்கம் மேடம் என்றார். அவளும் எழுந்து கைகூப்பினாள் “வணக்கம் சார்.

“என்னவாச்சு, ஏதானும் வெவகாரமா.... இப்படி எங்கள இங்கே...? என வினவினாள்.

“ஆமா, மத்தவங்க விஷயம்னா வேற மாதிரி ஹாண்டில் பண்ணி இருப்போம். இது பெரியவீட்டு விஷயமாச்சுதே அதான் உங்கள கொஞ்சம் சிரம படுத்த வேண்டியதாபோச்சு.

“அதுவும் சம்பந்தப்பட்டவர் உங்க குடும்பத்தச் சேர்ந்தவர் வேற என்றார்.

“சார், ஒண்ணுமே விளங்கல... விஷயத்துக்கு வாங்க ப்ளீஸ் என்றாள்.

“மேடம், உங்க சொத்து ஒண்ணு விக்க வந்திருக்கு என்றார்.

“சொத்தா, எங்க சொத்து விக்கவா? என்றா அதிர்ச்சியுடன் கதிரை பார்த்தபடி. அவனுக்கு உள்ளே கொஞ்சம் விளங்கியது போலத் தோன்றியது.

“என்ன சொத்து, யாரு விக்கறா.... நாங்க எதுவும் அப்படிச் செய்யலையே என்றாள்.
“இத உங்க வாயால தெருஞ்சுக்கத்தான் மேடம் வரச்சொன்னேன்.

“உங்க உர கோடவுன், ஆபீசு, சம்பந்தப்பட்ட அசல் தஸ்தாவேஜு விற்பதற்காக எங்க கிட்ட தாக்கல் செய்யப்பட்டு இருக்கு..... சம்பந்தப்பட்ட பார்டிகள் ரெண்டு பேருமே உள்ளே எங்க ஆபீஸ்ல தான் உக்கார்ந்திருக்காங்க..... அதில விக்க சம்மதம்னு உங்க கை எழுத்து வேற இருக்கு மேடம் என்றார். 

“என்னது?
என்று அதிர்ந்தாள்.

“நான் அப்படி எதுவுமே சைன் பண்ணல சார் என்றாள்.

“தெரியும் மா, நான் சந்தேகப்பட்டேன்... அதான் கையெழுத்து ஆய்வாளருக்கு குடுத்தனுப்பி இருக்கேன்.... தெள்ளத்தெளிவா இது சீட்டிங் கேஸ் போல தான் எனக்குத் தோணுது.... அவர் முடிவு சொல்லீட்டா கேஸ் போட்டு உள்ள தள்ளீடலாம் போர்ஜெரி கேசு மா, தப்பிக்கவே முடியாது.

“யார் சார் பார்டி? என்றாள் உள்ளே தடதடவென அடித்துக்கொண்டது.

“உங்க ஹஸ்பெண்டுதான் மேடம் என்றார்.

“அது அவர் என்பதாலும், ஒரு வேள, நீங்க புரட்டி போட வேற ஏதானும் வாங்கன்னு அவர்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணி இருப்பீங்களோன்னுதான் அவசரமா உங்கள நேர்ல வரச்சொன்னேன்..... புதிய தஸ்தாவேஜு தயார் ஆகிகிட்டு இருக்கு, காத்திருங்கன்னு சொல்லி அந்த ரூம்ல உக்கார வெச்சிருக்கேன் ரெண்டு பேரையும் என்றார்.

‘அடப்பாவி என வாய்போத்தினாள்.

கதிருக்கு கண்கள் ஆத்திரத்தில் கொவைப்பழமாக சிவந்து போயிருந்தது.

“மேடம், இப்போ முடிவு உங்க கையில..... நீங்க போடலன்னு உறுதியா சொல்லீட்டீங்க..... அப்போ இது போர்ஜெரிதான்.... ரிபோர்ட் வர நாம காத்திருக்கணும்னு கூட அவசியமில்ல....

“நான் இந்த கை எழுத்த போடல, விக்க ஏற்பாடு எதுவும் செய்யல... என்னை அறியாம நடந்திருக்கு இந்த பிராடுன்னு நீங்க ஒரு புகார் எழுதி கொடுத்தா போதும்.... கம்பி எண்ண வேண்டியதுதான்.... ஆனா இதில சம்பந்தப்பட்டிருக்கிறது உங்க கணவர்..... என்ன செய்யணும்னு நீங்க சொன்னீங்கன்னா நான் அது பிரகாரம் ஆக்ஷன் எடுக்க ஈசியா இருக்கும் என்றார் அவர்.

ஒரு நொடியும் யோசிக்கவில்ல ராஜி.

“சார், சட்டத்துக்கு எதிரா புறம்பா யார் செஞ்சாலும் குற்றம் குற்றம்தான்..... அதிலும் இவர் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செஞ்சிருக்காரு.... அதுக்குண்டான தண்டனைய அவர் அனுபவிச்சே ஆகணும்.... நீங்க என்ன எழுதணுமோ சொல்லுங்க, நான் எழுதி கையெழுத்து போட்டு தரேன்..... உரிய நடவடிக்கையும் உடனே எடுத்துடுங்க..... அவங்க தப்பிச்சுடாம கவனமா பார்த்துக்குங்க.... அப்புறம் கையில பிடிக்க முடியாம போய்டும்..... அவர் கைதேர்ந்தவர்... ஜாக்ரதை.

“இதில உங்களுக்கு என்னோட முழு ஒத்துழைப்பும் கிடைக்கும், நான் இங்கேயே வெயிட் பண்றேன் என்றாள் நிமிர்வுடன்.

“தாங்க்ஸ் மேடம்.... நான் இதோ வரேன் என உள்ளே சென்றார்.

அவளின் முகம் காண சகிக்கவில்லை கதிருக்கு.

“ராஜேஸ்வரி என முதன் முறையாக அவளது கைகளை தொட்டான்.

“தைரியமா இரும்மா.... என தட்டி கொடுத்தான். மேலும் கீழும் தலையை ஆட்டினாள் ஆம் என.

“நான் செஞ்சது சரிதானே கதிர்? எனக் குழந்தையாக அவனிடம் அவன் முகம் பார்த்து கேட்டாள். கண்ணீர் கண்களை முட்டினாலும் ஒரு சொட்டும் கீழே விழவில்லை. அப்படியே மூச்சிழுத்து அதை உள்ளேயே முழுங்கினாள்.

“ஆமாம்மா, நீ செஞ்சது ரொம்ப சரி.... ரொம்ப தைரியமும் துணிச்சலும் வேணும் மா இதை இப்படிச் செய்ய....

“உன்னை மனசார பாராட்டறேன் என்றான்.

“அப்பாக்கு தெரிஞ்சா ஐயோ என பயந்து அவன் கையை இறுக்க பிடித்தாள்.

“பார்க்கலாம்.... வேற விஷயமா இருந்தா அவருக்கு தெரியாம மறைக்க பார்க்கலாம்தான், ஆனா இதை மறைக்கறது கஷ்டம்மா.... என்ன பண்ண முடியும். இவன் தினமும் இப்படி ஒன்றை நடத்திக்கொண்டு வந்தால் நாமும்தான் எதை எல்லாம் அவரிடத்திலிருந்து மறைக்க முடியும்....

“இப்போ உண்மை நிலை என்னனு அவருக்கும் தான் தெளிவாகிடுச்சே பார்க்கலாம் என்று தட்டி குடுத்தான்.

பின்னோடு தாசில்தார் வந்து, அவளிடத்தில் புகார் எழுதி கையொப்பம் வாங்கினார்.
“உள்ள துள்ளி கிட்டிருக்கிறான் பய, இன்னா இவ்வளோ நேரம்.... ஒரு காயிதம் டைப் அடிக்க இம்பூட்டு நேரமான்னு குதிக்கிறான். கையில பணத்த எண்ண அவ்வளவு அவசரம் போல.... பணத்த இல்ல கம்பியத்தான் எண்ணப் போறான்னு அவனுக்கு இன்னும் புரியல என்றார் அவர்.

விஷயம் வெளியாகும்போது அவன் அவளை என்னவும் செய்யக்கூடும் என இருவருமே பயந்தனர். கதிர் அவளை பின்னிறுத்தி தான் முன்னே அடை காப்பது என முடிவு செய்துகொண்டான்.

“ராஜேஸ்வரி, ஒருவேள ஏதானும் அசம்பாவிதம் நடக்கவிருந்தா, நீ இந்த பின்பக்க வழியாகவே ஓடிபோயி வண்டியில ஏறி ஊருக்கே போயிடு.... நான் எப்படியும் சமாளிச்சுப்பேன் என்ன.... தைரியமா இருக்கணும் சரியா, இந்தா கார் சாவி என்றான் குழந்தைக்குக் கூறுவது போல.

“ம்ம் சரி என்றாள் யோசனையுடனேயே.

தாசில்தார் அனுப்பிய கை எழுத்து ரிப்போர்ட்டும் வந்துவிட, அது இவள் போட்டதல்ல என்றதும் ருசுவாகிவிட்டது.

இவளது புகாரையும் அந்த ரிப்போர்ட்டையும் சாட்சியாக்கி கனகராஜின் பேரில் அரெஸ்ட் வாரன்ட் காதும் காதும் வைத்ததுபோல ஏற்பாடு செய்தார் தாசில்தார். அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை நேரில் வர வழைத்து தனித்து அவரிடம் விஷயத்தை எடுத்துக் கூறினார். அவருக்கும் பெரியவர் ராஜலிங்கத்தின் குடும்பத்தைப் பற்றி நன்றாகவே தெரியும் என்பதால், 

“ஓ அப்படியா விஷயம், அவங்க வீட்டுக்குன்னு இப்படி ஒரு புல்லுருவியா.... கேட்கவே கஷ்டமா இருக்கு சார்..... சரி நீங்க புகார குடுங்க, நான் உடனடியா அவன கைது பண்ணீடறேன்
என்று வாங்கிக் கொண்டார்.

“இன்ஸ்பெக்டர், விஷயம் தெரிஞ்சா அவன் மேடத்த என்னவும் செய்யத் தயங்கமாட்டான். பார்த்து என்று எச்சரித்தார்.

“எங்ககிட்ட வாலாட்டினா ஓட்ட நறுக்கீட மாட்டோம்.... நான் எதுக்கும் மேடத்துக்கும் பாதுகாப்பு ஏற்பாடு பண்ணீடறேன் என்றார்.

அதன்படி மளமளவென காரியங்கள் நடந்தன. வாசப்பக்கம் புகை பிடித்தபடி நின்ற கனகு மற்றும் சொத்து வாங்க வந்த வெளி ஊர் ஆசாமி இருவரையும் ரவுண்ட் அப் செய்து கொண்டனர் போலீசார்.

“என்ன, என்ன நடக்குது இங்க... நான் யாரு தெரியுமில்ல, பெரியவர் ராஜலிங்கத்தின் மாப்பிள்ள என்றான் கெத்தாக.

“ஓ தெரியுமே, அதான் மரியாதை செய்ய வந்திருகோம், வாங்க சார் என்றார் இன்ஸ்பெக்டர் கிண்டலாக. அவர் கூடவே நடக்க, உள்ளே சென்றனர். அங்கே தாசில்தாரின் முன்னில் வைத்து “சார் சொல்லுங்க என்றார் இன்ஸ்பெக்டர்.

“ஆமா சார், நான் குடுத்த கம்ப்ளெயின்ட் உண்மைதான்னு நான் உறுதி செய்யறேன்.... இந்த தஸ்தாவேஜில இருக்கிறது மேடம் ராஜேஸ்வரி தேவியின் கை எழுத்து இல்லை.... அது ருசுவாகிடுச்சு.... அவங்களையும் நாங்க கூப்பிட்டு நேர்ல விசாரிச்சுட்டோம், அவங்க அப்படி எதுவும் கையொப்பம் போடலைன்னு உறுதி சொல்லீட்டாங்க என்றார்.

அவர் மேலே கூறும் முன்பே “ஐயோ, என்னடா இது, அவ தான், எம் பொஞ்சாதிதான், ஒரு அவசரம்னு திருப்பி போட்டு மாத்தி வாங்க இந்த கடிதாசியை என்னிடம் கை எழுத்து போட்டு குடுத்தா என சாதித்தான். அதற்குள்ளாகவே, தாசில்தார், தான் கூப்பிட்டு நேரில் விசாரித்ததையும் அவள் மறுத்ததையும் கூறி முடிக்க, தான் வசமாக மாட்டினோம் என புரிந்துகொண்டான்.

“நான் ராஜிகிட்ட பேசணும்.... என்ன வேணுமினின்னே மாட்டிவிட திட்டம்போட்டு இப்படி செஞ்சுட்டா அவ..... அவதான் என்னை விற்க ஏற்பாடு செய்யச் சொன்னா என்று உண்மைபோல கூறினான்.

“அவ எங்கே, இங்கேதான் வந்திருக்காளா, அந்த கெட்ட எண்ணம் புடிச்சவ எங்கே, நான் பார்க்கணும் என்று எகிறினான்.

போலீசார் அவனை அழுத்திப் பிடிக்க, தாசில்தார் ராஜியை அழைத்தார்.

“வாடி, எம் பொஞ்சாதி, கொழுப்பா, அவ அவ தன் தாலியையும் புருஷனையும் காப்பாற்றிக்க வேண்டி, செஞ்சதக் கூட செய்யலனு பொய் சாக்ஷி சொல்லுவாளுக..... நீ என்னடான்னா நான் செய்யாதத செஞ்சதா பொய் சொல்லி என்னை வசமா மாட்டி வெச்சுட்டே இல்ல...? என சத்தியம் பேசுபவன் போல சாதித்தான்.

“நான் உங்கள மாட்டிவிட்டேனா, நல்லா இருக்கு உங்க கதை, ஆனா அதை நிஜம்னு நம்பத்தான் இங்க ஆளில்லை....

“இன்ஸ்பெக்டர், இவர் சொல்வது அத்தனையும் பொய்.... எனக்கும் இந்த விற்பனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..... நான் இந்த தஸ்தாவேஜை இவரிடம் கொடுக்கவும் இல்லை, இது உர ஆபீசில் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டு இருந்தது, இவர் கைக்கு வந்திருக்குன்னா அதை இவர் திருடி இருக்காருன்னு தெரியுது.... இந்த கை எழுத்தும் நான் போட்டது இல்லை, எனவே, நீங்க என்ன உண்டோ அதன்படி ஆக்ஷன் எடுக்கலாம் என்றாள் துணிவுடன்.

“அடிப்பாவி உன்ன... என போலீசாரையும் மீறி அவள் மீது பாய முற்பட்டான்.

கதிர் சட்டென முன்னே வந்து அவன் கைகளை அடக்கினான். ராஜியை பின்னுக்குத் தள்ளினான்.

“ஓஹோ, உங்க பாதுகாவலரோ, உங்களை காக்க வந்துட்ட தர்மபிரபுவாக்கும். இவன் இருக்கான்னு தைர்யம்தானேடீ உனக்கு என்னை உதாசீனப் படுத்த சொல்லிச்சு..... நாளைக்கு என்னை இல்லைன்னு ஆக்கிட்டா இவனோட கொஞ்சிக் குலாவலாம்னு ஆசை இல்ல.... அதானே உங்க ப்ளான்? என கர்ஜித்தான்.

“சீ, அசிங்கமா பேசாதே.... அசிங்கம் பிடிச்சவனே என்றான் கதிர் தாங்கமாட்டாமல்.

“என்னடா, வேலைக்கார நாயே, சத்தியசந்தன் போல சீன் போடுற? என்று அவன் மீதும் எகிறினான்.

“மேடம், உங்க வாக்கு மூலத்துக்கும் புகாருக்கும் நன்றி. நீங்க போகலாம். உங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு பண்ணப் பட்டிருக்கு, அதனால தைர்யமா போங்க. இவன இனி நாங்க கவனிச்சுக்கறோம் என்று அவனை நெட்டி தள்ளிக்கொண்டு போனார்.

இதையெல்லாம் கண்டு, வெளிறிய முகத்துடன், இவர்கள் குடும்பத்தை யாரென்றே அறியாத அந்த அசலூர்காரர், “ஐயோ எனக்கொண்ணுமே தெரியாதுங்க..... நல்ல இடம், நல்ல பிசினஸ்னு ஆசைகாட்டினாருனும்ஆ சைப்பட்டு வாங்க வந்தேனுங்க... என்ன விட்டுடுங்க, நான் ஒடீடறேன் என்று அழுதார்.

“சரி சரி, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கை எழுத்து போட்டுட்டு நடந்தத எழுதி கொடுத்துட்டு போ, விட்டுடறோம் என மிரட்டி அவரையும் அழைத்துச் சென்றனர்.

கலங்கிய மனதுடன் கதிருடன் காருக்கு வந்து மௌனமாகவே ஊரை வந்தடைந்தனர்.

“எங்கேம்மா போயிட்டீங்க ரெண்டு பேரும் காலங்கார்த்தால? என்று வாசலிலேயே வழி மறித்தார் ராஜலிங்கம்.

“ஒரு முக்கிய ஜோலியா போனோம்பா என்றாள்.

‘மேலோட்டமாக சொல்லித்தான் ஆக வேண்டும்.... மூன்றாம் நபர் மூலம் தெரிந்தால் அவரின் வேதனை அதிகமாகும் அவரால் தாங்கமுடியாமல் போகலாம் என பயந்தனர் இருவருமே.

“உக்காருங்கைய்யா என அவரை அமர வைத்து பெரியவர் முருகானந்ததையும் அமர வைத்து நடந்தவற்றை விளக்கமாக கூறினர்.

அயர்ந்து போய் அப்படியே சமைந்துவிட்டார் ராஜலிங்கம்.

‘இவ்வளவு தூரத்துக்கு போய்ட்டானே இவன், நாளைக்கு எம் மவளை என்னவும் செய்யத் தயங்கமாட்டான் போலவே... எனக் கண் கலங்கினார்.

ஆதுரமாக ராஜியின் தலையைத் தடவினார்.

“இந்த அப்பாவின் புத்திகெட்டதனத்தை மன்னிச்சுடு தாயி என்று கைகூப்பினார்.

“அப்பா என அதட்டல் போட்டு அவரை கட்டிக்கொண்டாள் ராஜி.

“என்னப்பா, நீங்க போய் என்கிட்டே.... என் நன்மைக்குன்னு தானேப்பா செஞ்சீங்க, இப்படி விபரீதமா போகும்னு யார் கண்டா.... விடுங்கப்பா.... திரும்பி வரும்போதானும் திருந்தி வந்தா சரி என்றாள்.

அவள் இன்னமும் நம்பிக்கையுடன் பேசுவதை ஆச்சர்யத்துடன் பார்த்திருந்தான் கதிர்.
கோர்ட்டில் அவனது போலி கையெழுத்து ருசுவாகி கனகராஜூக்கு இரண்டு வருட கடுங்காவல் தண்டனை தீட்டப்பட்டது.

உள்ளிருந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் கருவிக்கொண்டே தான் கழித்தான் கனகு. “நான் வெளியே வந்தா இருக்குடீ உனக்கு, என்னையவா உள்ளார தள்ளினே, புருஷன்னு கூட பாக்கல இல்ல, நானும் பொஞ்சாதின்னு பாக்கப் போறதில்ல. உன்ன நாசம் பண்ணி குடும்பத்தோட நான் அழிக்கல என் பேரு கனகராஜ் இல்ல... என மார்தட்டிக்கொண்டான்.

இங்கே இவளது வாழ்வு இப்படி சூனியமானதை எண்ணி ராஜலிங்கம், பெரியவர் மட்டும் அல்லாது, பொன்னி கதிர் முதல் பண்ணையில் வேலை செய்யும் கீழ்நிலை குடியானவனும் கூட கவலைப்பட்டனர் வருந்தினர்.


2 comments:

  1. So much in one day...waiting for good days for Raji!

    ReplyDelete
  2. Feeling emotional with regard to rajee's life...

    ReplyDelete