Thursday 19 July 2018

NENJIL KODI MINNAL - 16

அவனுக்குத் தெரிந்த வகையில் அவர் மார் மீது அமுக்கினான். அதற்குள் யாரோ டாக்டரையும் போலீசையும் அழைத்திருக்க, அவர்கள் பறந்து வந்தனர். 

குமார் பரிசோதித்துவிட்டு “சாரி மேடம்
என்றார் வருத்ததுடன்.

அந்த சொல்லைக்கேட்டு ‘ஆங்’ என்று விக்கித்து போனவள் தான், அதன் பின் அவளிடம் எந்த அசைவும் இல்லை. முகம் கல்லாய் சமைந்திருந்தது. சிலைபோல நடந்தாள் அமர்ந்தாள். பொன்னி தன் பலம்கொண்டு அவளை நடப்பித்து அழைத்து சென்றாள். தந்தை இறப்பின் மூலம், தன் மொத்த ஓட்டும் உறவும் இந்த பூமியிலிருந்து போய்விட்டதே என்பதைக்கூட அறிந்தும் அறியாமலும் கல்லாகி சமைந்திருந்தாள் ராஜி..

“அம்மா கண்ணு, அழுதுடு மா என பொன்னி உசுப்பி பார்த்தாள்.

குரலெடுத்து பிலாக்கணம் பாடி ஒப்பாரி வைத்தனர் ஊரார். ஆனாலும் அனைத்தையும் பார்த்தபடி அப்படியே கண் வறண்டு சிலைபோல அமர்ந்திருந்தாள்.

“இது நல்லதுக்கில்லை, அவங்க வாய்விட்டு அழணும் என்றார் குமார், வீட்டிற்கு அஞ்சலி செலுத்த வந்து.

அவளைச் சுற்றி, ஊரே தங்களது சொந்த தந்தை போல அனைத்தையும் பார்த்து ஏற்பாடு செய்தது.

பெரியவர் இறுதி பயணம் துவங்க, “அம்மா வாம்மா என அழைத்தனர் சடங்குகள் செய்ய.

“ஆங், என்ன.... என்னது, யாருக்கு? என மலைத்து போய் நின்றாள்.

அவளது நிலைகண்டு அனைவருமே கலங்கி அழுதனர்.

கதிர் வந்து இவளது அருகில் அமர்ந்து, “ராஜேஸ்வரி என்றான் மெல்ல அவளது தோளைத் தொட்டு.

“ஆங், என்ன கதிர்? என்றாள் ஒன்றும் புரியாமல்.

“த பாரு, உன் நிலைக்கு வாம்மா... தேத்திக்க.... அப்பா போய்ட்டாரு இல்ல, நீ செய்ய வேண்டியத செஞ்சுதானே ஆகணும்மா? என்றான் குழந்தைக்குச் சொல்வது போல.

“அப்பாவா.... அதோ, அங்க படுத்திருக்காரே, தூங்கறாரு கதிர் என்றாள்.

பொன்னி அடித்துக்கொண்டு அழுதாள்.

“ராஜேஸ்வரி என அவள் அதட்டி தோளைப் பிடித்து உலுக்கினான்.

“அப்பா உறங்கறாக கதிர், சத்தம் போடாதீக என்றாள்.

கதிர் துணிந்து, பளாரென அவளது கன்னத்தில் ஒரு அறை விட்டான். அவளைக் காப்பாற்ற, அவனுக்கு அந்த நேரத்தில், அதைத்தவிர வேறே வழி தெரியவில்லை.

அந்த அறையின் தாக்கத்தில் அவள் மீண்டாள். தன் நினைவுக்கு வந்தாள்.

தந்தையை கண்டாள் “கதிர் அண்ணா என பெருங்குரலெடுத்து அழுதாள்.

“அழுதுடு மா என அவளை அழவிட்டான். அவன் மடிமீதே சுருண்டு விழுந்து அழுதாள்.

பின்னர் மெல்ல தேற்றிக்கொண்டு எழுந்து செய்ய வேண்டியவற்றை செய்தாள்.

பயணம் துவங்கியது.

வீட்டை கழுவி, அவளை மிக கஷ்டப்பட்டு ஒரு வாய் உண்ணவைத்தாள் பொன்னி. அவள் மட்டுமல்லாமல், சில ஊர் பெண்களும் கூட அங்கேயே அவளுக்குத் துணையாக இருந்தனர். இமை போல காத்தனர்.

கதிர் பம்பரமாக சுழன்றான். எல்லாம் முடிந்தது.

ஊரார் ஒன்றுகூடி நடந்தவற்றை போலீசுக்கு சாக்ஷி கூறினார். கனகு மீது வழக்கு போடப்பட்டது. போலீசாரால் அவன் தேடப்பட்டு வந்தான். கனகராஜ் தலை மறைவானான்.

தந்தையின் இழப்பை நம்பவும் முடியாமல் பொறுப்புகளை துறக்கவும் முடியாமல் துவண்டாள் ராஜி. எல்லாவற்றிற்கும் கைகொடுத்து தந்தையுடன் கூட நின்று நடத்தியவள்தான் எனினும், அப்போது அப்பா என்ற ஒரு தூண் அவள் பின்னே நின்று தாங்கியது.

கதிர் இன்னொரு தூணாக இப்போதும் தாங்கினான் தான்..
ஆனாலும் பாசனம் செய்யும் முறைகளை அவன் அறியான்

இப்போது தான் தனியே என்ற நிலையே அவளது துணிவுக்கு தடை போட்டது.

மனதை திடப்படுத்திக்கொண்டு தன்னால் ஆனவரை முயன்றாள்.

பெரியவர் முருகானந்தம் கூடவே துணை நின்றார். அவரது வயதுக்கும் முதுமைக்கும் சவால் விடுபவர் போல அவளுக்கு ஈடுகொடுத்து தோள் கொடுத்தார்.

தட்டி கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

அங்கே இங்கே என அலைந்து திரிந்து ஓய்ந்துதான் போனாள் ராஜி.

பெரியவர் அவளை அமரச் செய்து பேசினார்.

“அம்மாடி தாயி, அன்னிக்கி உங்கப்பாரு சொன்னாரே பக்கத்து கிராமத்து மருதீஸ்வரன் பயலப் பத்தி... என்றார்.

“ஆமா பெரியப்பா என்றாள் அதுக்கென்ன என.

“இல்லம்மா, உன்னையப் பார்த்தா எனக்கு பாவமாவும் இருக்கு பயமாவும் இருக்கு. எம்பூட்டு நாளைக்குதான் நீ இப்படி ஓட முடியும்.... நீ உடம்புக்கு ஒண்ணுனு படுத்துட்டா என்னவாகும்.... அதான் எனக்கும் அப்பாரு சொன்ன யோசனை சரியா பட்டுது. அவன் கிட்ட பேசி பார்க்கலாம். அவன் சம்மதப்பட்டா செய்யட்டும் இல்லேனா வேற அடுத்து என்னன்னு யோசிக்கலாம்தானே தாயி? என்றார்.

“நீங்க சொல்றது சரிதான் நான் மறுக்கல, முயற்சிக்கலாம்தான் பெரியப்பா... ஆனா யார் போய் பேசுறது? என்றாள் தயக்கத்துடன்.

“ஏன், நானும் கதிர் தம்பியும் போய் பேசறோம் என்றார்.

“சரீங்க பெரியப்பா, பாருங்க என்றாள். தானும் ஓய்ந்து தான் போயிருந்தாள்.

அவளது உடலின் வலிமையை, அவளது மனதின் சோர்வும் இயலாமையும் சோதித்துப்பார்த்துக் கொண்டு இருந்தது.

பெரியவர் அடுத்த நாளே கதிருடன் கிளம்பிப் போய் மருதீஸ்வரனிடம் பேசினார்.

மருதீஸ்வரன் இவரைக் கண்டதும் வணங்கினான்.

“வாங்க கதிர் என நட்பின் கரம் நீட்டினான். அங்கே இங்கே என இருவருக்கும் சற்று பரிச்சயம் இருந்தது.

“தம்பி, நான் முருகானந்தம் என்று துவங்கினார்.

“தெரியுமுங்கையா, உங்க ஊர், உங்க குடும்பம், பெரியய்யா ராஜலிங்கம், அவங்க மக எல்லாமும் எனக்குத் தெரியும்.... பெரியய்யாவ நல்ல பரிச்சயம் உண்டு.... அவர் தவறியபோது நான் வந்திருந்தேனுங்க என்றான் மரியாதையுடன்.

“அப்படியா மன்னிச்சுக்க தம்பி, நாங்க இருந்த நிலையில யார் வந்தா இல்லைன்னு கூட சரியா பார்க்கலை கவனிக்கலை என்றார்.

“ஐயோ, அதுக்கென்னங்கைய்யா.... இதென்னா கல்யாணமா திருவிழாவா பந்தி விசாரிக்க. சொல்லுங்கைய்யா என்ன விஷயம்..... என்ன பார்க்கவென என்ன இவ்வளவு தூரம், என்னால ஏதானும் உதவிங்களா? என்றான்

“ஆமாம் தம்பி, பெரிய உதவிய எதிர்பார்த்து ரொம்ப நம்பிக்கையோட உங்ககிட்ட வந்திருக்கோம்

“இன்னும் சொல்லப்போனா இது பெரிய பெரிசோட ஆசை... அவர்தான் எப்பவோ இதை செய்யணும்னு ஆசைப்பட்டாரு.... இப்போ நிலைமை இருக்கிற இருப்பில வேற வழி இல்லாம உன்னைத் தொந்தரவு செய்ய வந்திருக்கோம் என கதிரை பார்த்தார்.

“சொல்லுங்க என்றான் காத்திருந்தபடி.

கதிர் துவங்கினான், “மருதீஸ்வரன் சார், அங்கே நிலைமை உங்களுக்கே தெரியும்னு சொல்லீட்டீக, அதற்குமேல விளக்கம் தேவையில்ல... பெரியவர் போய்டாரு, எனக்கும் விவசாயம் பற்றி அதிகமா ஒண்ணும் தெரியாது. கணக்கு வழக்கு பொதுவா அத இத மேனேஜ் பண்றதுன்னு நான் செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன்.... அவங்க மக, ராஜேஸ்வரி மேடம் தான் அங்க இங்கன்னு ஓடி அலைஞ்சு எல்லாத்தையும் பார்த்துக்கறாக.... என நிறுத்தினான்

“என்னால என் வயசுக்கு அவளுக்கு எந்த உதவியும் செய்ய முடியல.... பொறுப்பெடுத்து செய்ய ஆம்புள புள்ள இல்லாத வீடு பாருங்க.... சொத்தும் பண்ணையும் தோப்பும் ஆழும்பாழும் ஆயிடக்கூடாதுன்னு எங்க பயம்... அதான்... என நிறுத்தினார்.

“சரி மேல சொல்லுங்க, இதில நான் என்ன செய்யணும்னு நீங்க எதிர்பார்க்கறீக? என்று கேட்டான்.

“இல்ல மருதீஸ்வரன் சார், விஷயம் என்னன்னா... எனத் தயங்கினான்

“சாரெல்லாம் வேணாம் கதிர்வேலன், சும்மா மருதுன்னே சொல்லுங்க.... தயக்கம் எதுக்கு, என்னன்னு சொல்லுங்க... அப்பதானே விளங்கும்... எதுவானாலும் தைர்யமா சொல்லுங்க என்று ஊக்குவித்தான்.

“இல்ல தம்பி,  உங்களுக்கும் இங்க நெலபுலம் எல்லாம் இருக்கு தெரியும், ஆனா, நீங்க கொஞ்ச நாள் அங்க வந்து தங்கி எங்க நிலம், தோப்புன்னு பார்த்துகிட்டா ராஜி கண்ணுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்....

“மொத்தமாகவோ லாபத்தில பங்காகவோ நீங்க என்ன கேக்குறீகளோ அத நாங்க தர தயாரா இருக்கோம். பணத்துக்காக வேல பார்க்க வரச்சொன்னோம்னு நீங்க தயவு பண்ணி தவறா எடுத்துக்கப்டாது.... தம்பி நல்ல மனசு வைக்கோணும் என்று முடித்தார்.

லேசாக சிரித்தவன், “என்ன சொல்றீங்க, நான் அங்க வர்றதா, அங்க தங்கி உங்க சொத்துக்கள பார்க்கிறதா... அது எப்படிங்க, என் நிலம் நீச்சுனு இங்க இருக்குதுங்களே அதை யார் பார்ப்பா, அதுமட்டுமில்லாம நான் வந்து மட்டும் என்னங்க செய்துட முடியும். அதான் அவங்க பார்க்குறாங்களே, நல்லாதானே செய்யறதாகக் கேள்வி என்றான்.

“உண்மைதான், ஆனா, எத்தன நாளைக்கு அப்படி முடியும் சொல்லுங்க?

கொஞ்ச நாளானும் நீங்க கை குடுத்து உதவினா, நானும் உங்க கூட சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குவேன், நானும் கூட துணை நிற்பேன்.... அதுக்குள்ள பார்த்துக்கலாம் இல்லீங்களா?
என்றான் கதிர்.

“ஹ்ம்ம். இதுல நான் நிறைய விஷயம் யோசிக்க வேண்டியதிருக்கு என்றான்.

“பணத்த பத்தினதா இருந்தா, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் என்றார் அவசரமாக.

“ஐயா, நீங்க பெரியவக.... உங்களை அவமதிக்க நான் விரும்பலை.... நான் இங்க பணத்தை பத்தி யோசிக்கவும் இல்லை பேசவும் இல்லை.... நான் மண்ணை தாயா மதிக்கிறவன், அத வியாபாரமா எண்ணிப் பார்த்ததில்ல, அப்படி வளர்க்கப்படவும் இல்ல என்றான் சிறிது கோபமாக.

“ஐயோ தம்பி, உங்களப் பத்தி தெரியாதா, மன்னிச்சுடுங்க.... நான் அதுக்குச் சொல்ல வரல..... நீங்க உங்க நிலபுலன்களை வுட்டுபுட்டுதானே அங்க வரீங்க, அதனால உங்களுக்கு நஷ்டம்னு ஒண்ணு ஏற்படும் இல்லியா, அதை நாங்கதானே சரி செய்யணும், அதான் சொன்னேன்.... சொன்னத மறந்துடுங்க என்றார்.

“இல்ல இல்ல புரியுது, அத விடுங்க, நான் சொன்னாப்போல நிறையவே யோசிக்க வேண்டியதிருக்கு. பலதும் யோசிக்கோணும், இங்க நிறைய ஏற்பாடுகள் பண்ண வேண்டியதிருக்கும்.... ஆகையால, எனக்கு கொஞ்சம் அவகாசம் குடுங்க, நான் கூடிய சீக்கிரம் யோசிச்சு சொல்லி விடுதேன்... பிறகு என்ன எப்படின்னு நாம பேசி முடிவு செஞ்சுக்கலாம் என்றான் பட்டும் படாமலும்.

“ஓ, தம்பி அப்படி சொல்றீங்களா, சரி, இது பெரிய முடிவு.... நீங்க சொல்றதும் சரிதான், நீங்க ஆற அமர யோசிச்சு சொல்லி விடுங்க தம்பி, ஆனா ஏமாத்தீடாதீக.... பாவம், ராஜி கண்ணு அவஸ்தைய கண்கொண்டு பார்க்க முடியாமத்தான் நாங்க ஓடி வந்தோம் என்றார்.

“சரிங்க, ஆகட்டும் பார்க்கறேன் என்றான்.

“என்ன கதிரு, தம்பி பிடிகொடுத்தே பேச மாட்டேங்குதே? என்றார் பெரியவர்

“விட்டு பிடிப்போம்ங்க, பெரியய்யாகிட்ட இவருக்கு ரொம்ப மரியாத.... அதனால ஒப்புக்குவாரு. அவரும் நாலும் யோசிச்சுகணும் இல்ல.... வழிக்கு வருவார், பார்த்துக்கலாம் என்றான்.

சரி என ஊர் திரும்பி வந்து ராஜியிடம் நடந்ததை ஒப்பித்தனர்.

“இதுக்குத்தான் பெரியப்பா நான் அப்போதும் இப்போதும் தயங்கினேன். அவுகளுக்குன்னு அங்க பொறுப்புகள் இருக்கும்போது, இங்கே வந்து எல்லாம் எடுத்து செய்யணும்னா எப்படி? என்றாள்.

“இரும்மா தம்பி மாட்டேன்னு சொல்லலை..... யோசிச்சு முடிவெடுக்கறேன்னு தான் சொல்லி இருக்கு.... நல்லதே நடக்கும்னு நம்பு என்றார்.

நடந்தது.

அடுத்த வாரத்தில் அவனிடம் இருந்து தகவல் வந்தது. வரப்போகும் வாரத்தில் ஒரு நல்ல நாளில் இவர்கள் கிராமத்திற்கு வருவதாகவும், தனக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து வைத்துவிட்டு, இப்போதைக்கு ஆறு மாதங்களுக்கு இங்கே வந்து அனைத்தையும் பார்த்துக்கொள்வதாகவும், அதன் பின் தேவை ஏற்பட்டால் நீட்டிக்கொள்வதாகவும், இல்லையேல், திரும்புவதாகவும் கூறி அனுப்பி இருந்தான். தங்க ஒரு சிறிய இடம் மட்டும் ஏற்பாடு செய்யக் கேட்டிருந்தான்.

அவன் தன் ஊரையும் வீட்டையும் நிலத்தையும் விட்டுவிட்டு தங்களுக்காக தங்கள் கிராம நலனுக்காக வருகிறான் எனத் தெரிந்து அவளுக்கு அவன் மீது மிக நல்ல மதிப்பு ஏற்பட்டது.

“ஏன் பெரியப்பா, அவுகள எங்க தங்க வைக்கறது? எனக் கேட்டாள்.

“இங்க வேண்டாம், அவன் நாலு ஜோலியில திரிவான். அவனுக்குன்னு ஒரு ஜாகைய கொடுத்துட்டாதான் நல்லது. நம்ம நந்தவன வீட்டில தங்க வைச்சா என்ன? என்றார்.
“என்னது? என அதிர்ந்து போனாள் ராஜி

“என்ன பெரியப்பா, அது என்னோட இடமில்லியா, நான் வேற தினமும் போய் வருகிற இடம்... அங்க போய் எப்படி...? என்றாள் தயங்கி.

“என்னம்மா குழந்தையா பேசுறவ, அவன் நமக்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கான்தானே, அப்போ நாம அவன நல்ல முறையில கவனிக்க வேண்டாமா, அதப் போல மதிப்பான இடம் நம்ம கிராமத்தில வேற இருக்கா சொல்லு, அந்த வீடுன்னா, இந்தப் பக்கம் கோவில்.... அந்தப் பக்கம் நம்ம நிலம், பிறகு தொப்புன்னு நாலாபக்கமும் அவருக்கு போக வர பார்க்க, சவுகரியம் இல்லியா கண்ணு, அதுக்குதான் நாலையும் யோசிச்சு சொன்னேன்.... நீயும் யோசிச்சு பாரு நல்ல முடிவா எடு என்றார்.

அவர் சொல்வது நிஜம்தான். யோசித்தாள்.

‘நந்தவனம் அவளது உற்ற தோழி.... அங்கே வேறொருவன், ஒரு ஆடவன் வந்து தங்குவதா..... அந்த இடம் அவளுக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததென அவனுக்கு எப்படித் தெரியும்.... அவன் அந்த இடத்தை எப்படி வைத்திருப்பானோ என்னவோ, அவன் அங்கே தங்கினால் அவள் தினமும் அங்கே செல்வதெப்படி.... அங்கே செல்லாமல் அவளால் எப்படி இருக்க முடியும்...? என பலவும் யோசித்து ‘சரி அவன் தங்கட்டும். அவன் வெளி வேலையாக சென்றிருக்கும்போது தான் அங்கே சென்று எட்டி பார்த்துவிட்டு ஓடி வந்துவிடலாம் என முடிவு செய்துகொண்டாள்.

பொன்னியிடம் கூறி அங்கே மேலும் சுத்தம் செய்து அனைத்தையும் அவனுக்காக தயார் நிலையில் வைக்கச் சொன்னாள்.

“பொன்னிக்கா, அங்க அவுகளுக்கு சாப்பாடு? என்று கேட்டாள்

“அதான் எங்க பெரியம்மா கிழவி இருகாள்ள, அவள அங்க அனுப்பீருவோம்.... நல்லா வகை வகையா சமைக்கும் கிழவி.... காலையில வீட்ட பெருக்கி மெழுகி, அவர் துணிகள துவச்சு காலை பலகாரமும் செஞ்சுடட்டும். மதியமும் சமைச்சு பண்ணைக்கு குடுத்து அனுப்பீடட்டும்....


2 comments:

  1. After the heart breaking news, there is little solace that one more good soul will help Raji now. Hope Raji finds her soul mate in Marudhu.

    ReplyDelete
  2. மருதீஸ்வரர் மருந்தீஸ்வரராக காப்பாற்றுவாரா?

    ReplyDelete