Wednesday 25 July 2018

NENJIL KODI MINNAL - 22

“ஆஆ என விழப்போனவளை இடுப்பில் கைகொடுத்து அழுந்த பற்றிக்கொண்டான் மருது
“ஓ நீங்களா? என தன்னை சுதாரித்துக்கொண்டாள்.

“சாரி அவசரத்தில... என்றான் மன்னிப்பாக.

“பரவாயில்ல.... இல்லேனா கீழே சேற்றில விழுந்திருப்பேன் என நன்றி கூறினாள்.

“அசலுக்கே வரப்பில நடந்துகிட்டிருந்தீக.... இதில நான் குரல் குடுத்தா, சட்டுன்னு திரும்பி சறுக்கீடும்னுதான் நான் வாயத் திறக்காம வந்தேன், ஆனாலும், இப்படி ஆயிடுச்சு என்றான்.

அவள் புன்னகைத்தாள்.

“அந்த வரப்ப கொஞ்சம் வெட்டி விடணுமாட்ட இருக்கு..... அந்தப்பக்கம் நீர் சரியா போகமாட்டேங்குது... என்று சுட்டி காட்டினாள்.

“ஆமா, நானும் கவனிச்சேன்..... அந்த இடத்தை நோக்கி, அதை சரி செய்யத்தான் நான் போய்கிட்டிருந்தேன் என்றான்.

“ஓ அப்படியா? என்றாள்.

அதற்குள் அவள் மண் மேட்டிற்கு வந்திருக்க, அவன் தொடர்ந்து சென்று அவன் சொன்னதை செய்தான்.

அதை நின்ற இடத்திலிருந்தே பார்த்து நின்றாள். 

“நான் ஏதானும் உதவட்டுமா?
எனக் கேட்டாள்

வேண்டாம் என புன்னகையுடன் தலையாட்டி மறுத்தான்.

தலையில் முண்டாசுடன், கட் பனியனும் தார் பாய்ச்சி கட்டிய வேட்டியுமாக அவனே குனிந்து மண்வெட்டியுடன், வரப்பினை வெட்டி... நீர் பாதை வகுப்பதை பார்த்து நின்றாள்.

இவன் யார், இவனுக்கு உள்ள சொத்து சுகம் என்ன... அனைத்தையும் தங்களுக்காக உதறிவிட்டு இங்கே வந்திருக்கிறான்.... இப்போது, தானும் ஒரு பண்ணைக்காரன் என்று கூட நினைக்காமல் மண்வெட்டியுடன் தானே வரப்பு வெட்டவும் துவங்கிவிட்டான்... என அவனைப் பற்றி பெருமையாக எண்ணியபடி அசையாமல் நின்றாள்.

“என்ன ரோசன, எந்த கோட்டையை பிடிக்கப் போறீக? என்றான் கேலியாக.

“ஹான், அப்படி ஒண்ணுமில்ல... என அவளும் நடந்தாள்.

அவளுடன் கூடவே நடந்தான்.

“வீட்டுக்கு தானே? என்றான்

“ஹ்ம்ம் ஆமா என்றாள்.

“வாங்க என்று தன் பைக்கில் ஏறினான்.

“வேண்டாம்.... எதுக்கு, இங்கதானே, நான் நடந்தே போய்க்கிடுவேன் என்றாள்.

“ஏன், நான் உருட்டி தள்ளீடுவேன்னு பயமா, அன்னிக்கி பத்திரமாத்தானே கொண்டு சேர்த்தேன் என சிரித்தான்.

அவளுக்கு சட்டென அன்று சினிமா கொட்டகையிலிருந்து அவனுடன் பைக்கில் வீடு வந்ததும் மட்டுமின்றி, பின்னோடு கனகு வந்து பேசிய பேச்சும் அடித்த கூத்தும் நினைவுக்கு வந்தது.... முகம் இருண்டு போனது.

“ஐயோ, வேண்டாதத நினவு படுத்தீட்டேன் போல இருக்கே என்று தவித்து போனான் மருது.

அருகே வந்து, “ரஜ்ஜு என்றான்

அவள் அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து சடாரென பார்த்தாள்.

“சாரி சாரி என்றான்

அவன் அவளை மனதினுள் சில நாட்களாக அப்படி அழைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தான்... அவள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபாடு ஏறிக்கொண்டே போனது... அவன் மன சிம்மாசனத்தில் எந்த நொடியிலும் அவள் ஏறி அமர்ந்துவிடுவாள் என்ற நிலை.....

அந்த தடுமாற்றம் உள்ளே இருக்க, இப்போது அவள் வரப்பு மீது நடந்து சென்ற போது, பின்னிருந்து பார்த்தவன், அவளது ஒய்யாரமும் இளமையும் அழகும் மிடுக்கும் பண்பும்... என அசைபோட்டபடிதான் அவளை தொந்தரவு செய்ய விரும்பாமல் தொடர்ந்து நடந்து வந்தான்.

இவை அனைத்தும் அவனை கலைத்து போட்டிருந்த நேரத்தில், அவளின் அருகாமை, அவளின் வேதனை, அவனை நெஞ்சுருக்க செய்திருந்தது.

அவள், அவன் சொன்னபடி கேட்டு, மனம் மாறி, தன்னை உசுப்பிக்கொண்டு எப்போதும்போல கலகலப்பாக மாறியது அவன் நெஞ்சம் இறுமாந்தது.

‘நான் சொல்லி அவள் செய்தாள் என்பது அவன் மனதுக்குள் வீணை மீட்டியது.

இன்றோ, இதோ, இந்த நொடியில், அவன் உள் மனது அவனிடம் உத்தரவு கேட்காமலேயே திறந்து கொண்டது.... வெளியே வந்து எட்டியும் பார்த்துவிட்டது.... இனி அடக்குவதோ தாளிடுவதோ கடினம்.

“மன்னிச்சுடு என்றான் அவன் அப்படி ஒருமையில் பேசியதும் ரஜ்ஜு என்று அழைத்ததும் ராஜியை புரட்டிப் போட்டது.

அவனை மேலும் நேராகக் காணக் கூட அவளுக்கு என்னவோ போல இருந்தது.

மடமடவென அங்கு நில்லாமல் வீட்டை நோக்கி நடந்தாள்.

‘ச்சே, என்ன மடத்தனம்.... அவளே இப்போதான் சகஜமாகிகிட்டு வருகிறா.... நானும் என் வாயும், இப்படி ஓளறீட்டேனே..... இந்த வார்த்தைகள் போதாதா.... அவளுக்கு எம் மேல இருந்த நல்லெண்ணத்தை இது மாற்றிடுமோ என்னமோ.... பழையபடி நத்தை போல சுருண்டுகிட்டா என்ன செய்யறது? என அவன் தடுமாறினான்.

வீட்டை அடைந்த ராஜி படபடத்து போனாள்.

“என்ன இவுகளுக்கு இன்று என்னவாகிற்று.... ரஜ்ஜூவாமே.... இது என்ன பேரு....

நீன்னு வேற சொல்றாவ.... என்ன நடக்குது....? என திணறினாள்.

பதில் கிடைக்காத, அவனிடமே கூட, போய் கேட்க முடியாத கேள்விகள் அவளை குடைந்தெடுத்தன.

“கண்ணு, சின்னைய்யாவுக்கு மாலை டிபன் என்ன பண்ணட்டும்.... இல்லே நீங்க வந்து செய்யறீகளா? என்று தினம் போல வந்தாள் பொன்னி.

“என்னத்தையோ அனுப்புங்கக்கா, என்னை ஏன் கேக்குறீங்க? என்று எரிந்து விழுந்தாள்.

‘என்னவாச்சு? என பொன்னி யோசித்தாள்.

“அதுக்கில்ல, அவருக்கு நித்தமும் எதாச்சும் நீங்க பெசலா செய்விக... அதான் கேட்டுகிட்டு செய்யலாம்னு... என்றாள் தயங்கி.

“ஆங், பழைய சோறும், பச்சை மிளகா வெங்காயமும் அனுப்புங்க.... எல்லாம் போதும் என்றாள் இடக்காக

“இன்னது பச்சை மிளகாய அனுப்பறதா? என அதிர்ந்து போனாள்.

“என்னவாச்சுது? என்றாள் மென்மையாக அருகில் வந்து அவள் தலை தடவி. உடனே சுதாரித்துக்கொண்டாள் ராஜி

“ஒண்ணுமில்லக்கா, லேசா தலைவலி அவ்ளோதான்.... நீங்களே ஏதானும் சமைச்சு அனுப்பீடுங்க என்றாள்.

“கூடவே பச்சை மிளகாவும் வெச்சி அனுப்பீடவா? என்றாள் நமுட்டு சிரிப்புடன் பொன்னி

“ஹான், அனுப்புங்க எனக்கென்ன என்றாள் இவளும் மிடுக்கு குறையாமல். “அப்போ சேரி என பொன்னி உள்ளே சென்றாள்.

அன்று மாலை டிபனுக்கு ஆப்பமும் குருமாவும் செய்து கூடவே நான்கு பச்சை மிளகாயையும் ஒரு வெங்காயமும் அனுப்பி வைத்தாள் பொன்னி அவளுக்கே உண்டான குறும்புடன்.

டிபனை திறந்தான் மருது. அசலே அவன் மனம் ஒண்ணும் அவன் பேச்சை கேட்கும் நிலையில் இல்லை.... கலைந்து கிடந்தது.... நல்ல பசி வேறு....

டிபனை திறந்தால் அதில் ஆப்பத்துடன் நான்கு பச்சை மிளகாயும் வெங்காயமும் இருப்பதைக் கண்டான். ‘இதென்னது, இந்த பச்சை மிளகா எதுக்கு? என யோசித்தான். புலப்படவில்லை.... நாளைக்கு பார்த்தா கேட்கலாம் என எண்ணிக்கொண்டான்.

உண்டுவிட்டு வாச முற்றத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தான். மடியில் அவனது சிறிய ரேடியோ பெட்டி பாடிக் கொண்டிருந்தது.

“பாலிருக்கும் பழமிருக்கும்
பசி இருக்காது
பஞ்சணையில் காற்று வரும்
தூக்கம் வராது

என்று அவன புன்னகைத்துக்கொண்டான்.

எப்போதுமே இப்படிப்பட்ட பாடல்கள் அவனுக்கு கேட்க பிடிக்கும். இப்போது மிகவும் பிடித்தது. தானும் முணுமுணுக்கத் துவங்கி இருந்தான்.

‘தான் ஆறு மாதங்கள் என கெடு வைத்துக்கொண்டு இங்கே வந்ததென்ன, இப்போதோ ஒரு வருடமும் முடியப் போகிற நிலையில் தான் இங்கேயே இருக்கும் இருப்பென்ன..... தனது ஊரின் நினைவும் கூட வருவதில்லையே என எண்ணி சிரித்துக்கொண்டான்.

தங்கையும் கூட திட்டிகொண்டுதான் இருக்கிறாள். 

“என்னண்ணா, கட்டி குடுத்ததோட என்னையும் மறந்துட்டியா..... அதென்ன நம்ம ஊர் நிலம் எல்லாத்தையும் விட்டுபோட்டு அங்கே எங்கேயோ போய் எதுக்குண்ணா இதெல்லாம் செய்யோணும்?
என்று புலம்பினாள்.

“அது நிறைய கதை இருக்குது குட்டிம்மா.... விடு.... அப்புறமா சொல்றேன் விலாவரியா என்றான் அவளிடம்.

“சரி சரி, சீக்கிரமா ஊருக்கு போய் சேருகிற வழியப் பாரு... சீக்கிரமா கல்யாணம் கட்டிக்க அண்ணா என்றாள்.

அவனும் போக எண்ணி இருந்தான் தான்.... ஆனால் இங்கே நினைக்காமல் நடந்துபோன பல சங்கடங்கள்..... ராஜி தனித்து நின்றுவிட்ட கொடுமை..... அவள்பால் அவன் கொண்ட ஈர்ப்பு..... எல்லாமும் சேர்ந்து, அவளை இனி தனியே எப்படி விட்டுச் செல்வது.... என திணறினான். 

இப்போதைக்கு இங்கேதான், பின்பு பார்க்கலாம் என முடிவும் செய்துவிட்டான்.

அவள் நிமிர்வு, பண்பு, அடக்கம், துணிச்சல், அழகு, அறிவு என ஒவ்வொன்றும் அவனை ஈர்த்தது. அவளின் மேல் மரியாதை என்ற ஒன்றுடன் துவங்கிய ஒன்று, இன்று நெருக்கம் என்று வந்து நின்றது..... பலநாள் பழகிய நட்பு போல வளர்ந்தது.... அவளோடு எதைப்பற்றியும் பேச முடியும், விவாதிக்க முடியும், சிரிக்க முடியும், கலங்க முடியும், தோள் கொடுக்க முடியும் என விரிந்தது.... 

இப்போதோ, அதையும் மீறி, ஆண் மகனுக்கே உரிய சலனமும் ஈர்ப்பும் இணக்கமுமாக வளர்ந்தது. வேர்விட்டு விருக்ஷமானது.... இனி இந்த நிலை மாறாது மாற்ற முடியாது..... காதலாகி கசிந்தே விட்டான்.... ஆனால் அவள் மனம் படும் பாடு அவனுக்குத் தெரியு,ம் இந்த நிலையில் அவன், காதலை அவளிடம் கூறினால் போட்டுடைப்பது போலத்தான் ஆகும்... அவளால் அவனின் அன்பின் ஆழத்தை இப்போது புரிந்து கொள்வது கடினம்..... அங்கீகரிப்பது அதனிலும் கடினம்.... விட்டு பிடிக்க வேண்டும்..... நல்லதொரு நேரத்திற்காக காத்திருத்தல் அவசியம் என மௌனித்திருந்தான்.

ஆனால், என்னவாகினும் சரி, தனக்கு மனைவி என்று ஒருத்தி வருவாளே ஆனால் அது ராஜிதான் என்ற முடிவுக்கும் வந்துவிட்டிருந்தான்.

அங்கே ராஜி, ‘அவன் ஏன் அப்படி சொன்னான்.... அதென்ன, ஏன் இப்படி...? என யோசித்து புழுவாக துடித்தாள்.

“கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும்
கொண்ட பள்ளியறை பெண் மனதை போர்களமாக்கும்

என்று, அவன் கேட்ட அதே பாட்டு, அவள் படுக்கை அறையிலும் பாடி, அவளை அவள் மனதை போர்க்களமாக்கியது.

அவளின் உள்ளே, வெளி காட்டாது ஒளித்து வைத்திருந்த, அவன் பால் ஏற்பட்ட சலனம், இப்போது பெருநெருப்பாகி கொழுந்துவிட்டு எரிந்து அவளையும் தகித்துக் கொண்டுதான் இருந்தது. அதனை அணைக்கும் வழிதான் புலப்படவில்லை.

அவனை வயல்வெளியில், அங்கே இங்கே தூரத்தில் காண கிடைத்தாலும் பிறர் அறியாது கண்களால் அவனை பருகினாள்.

அவன் குரல் கேட்டாலோ பரவசமடைந்தாள்.

‘ஐயோ, நான் கைம்பெண்.... அவர் மீது இப்படி எல்லாம் எண்ணம் கொள்வதே பாவம் என தன்னை அடக்கி அடக்கி அவள் ஓய்ந்து போனாள்.

அவள் அடக்க அடக்க, மேலும் வேர்விட்டு விருக்ஷமாக வளர்ந்தது... அந்த எண்ணமும் ஏக்கமும் இன்றோ அவளையே ஆட்கொண்டது.

அவன் கை, இவள் கைதொட்டு பிடித்து நிறுத்தியபோது தொட்ட இடம், சுட்டு பொசுக்கியது.... அவன், அவள் சறுக்கி விழாமல் இடை பற்றியபோதோ கேட்கவே வேண்டாம்.... உடலே தணலென எரிந்து பொசுக்கியது.... அவன் தொட்ட இடத்தில், இடுப்பில், இன்னமும் அவன் கை இருப்பது போலத் தோன்றியது.... இப்போதும் கூட தொட்டுப்பார்த்துக்கொண்டாள்.

அவள் விழுந்துவிடாமல் அவன் அழுந்தப் பற்றியதால் அவள் இடுப்பில் அவனின் விரல் படிந்திருந்தது..... சிவந்த தளிர்மேனி, இப்போது துவண்டது தவித்தது.... அவன் விரல் அடையாளம் சிவப்பாக கன்றி இருந்த இடத்தை மெல்ல தடவி பார்த்துக்கொண்டாள்..... முகம் சிவந்தது.... முகம் மொத்தமும் உஷ்ண்மாகிப்போய் காதிலும் கழுத்திலும் சூடேறிப் போனது..... இதயம் படபடவென அடித்துக்கொண்டது.

‘என்ன இது, நான் போய் இப்படி, வெட்கமே இல்லாமல் போயிற்றா எனக்கு..... நான் அவ்வளவு நெகிழ்ந்து போய்விட்டேனா..... என் அடக்கம், என் மன உறுதி எங்கே போயிற்று, என்னவாகியது எனக்கு...? என யோசித்து மண்டை வலித்தது.

மேலும் அவளது உடலை தகிக்க செய்யவென பாட்டுகள் தொடர்ந்தன.

“எனக்காகவா நான் உனக்காகவா
என்னைக் காணவா என்னில் உன்னைக் காணவா
வா வா...

எனப் பாடல் அழைத்தது. அவளது ஏக்கமும் தாபமும் அவளை தகித்தது.... தூங்க முயன்று தோற்றாள்.

வாரம் பத்து நாட்கள் இப்படியாக மனம் அவளை சித்ரவதை செய்தது. ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் துணிவில்லாமல் தவித்தது. அவனை கண்டால் உருகி விடுவோம், தன்னை தன் நிலையை இழந்து விடுவோம் என அஞ்சி, அவனில்லாத நேரத்தில் நந்தவனத்தை சென்று பார்ப்பது, அவன் தோப்பில் என்றால் இவள் கழனியில் அவன் இங்கே என்றால் இவள் அங்கே என கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது.


5 comments:

  1. Appadi pOdu pOdu pOdu... Appadi pOdu thannalae!

    Kanna moochi aattam super cool... But romba neram vilaiyaada vendaame!

    ReplyDelete
  2. Nalla paadalgal. Flying with the songs.

    ReplyDelete