Sunday 15 July 2018

NENJIL KODI MINNAL - 12

“பிபி ரொம்ப அதிகமா இருக்குங்கைய்யா.... மைல்ட் அட்டாக்கோன்னு தோணுது.... எதுக்கும் ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போயிடலாம் என கூற கதிர் “இதோ என கந்தனை பார்க்க அவனும் முனியனுமாக அவரை குழந்தை போல தூக்கிச் சென்று காரில் ஏற்றினர்.

நர்ஸ் பல்ஸ் பார்த்து “ஒன்றுமில்லை டாக்டர், சோர்வினால மயக்கம் போலதான் தெரியுது என்றாள். 

குமாரும் செக் செய்து, “ஆமா, பயமில்லை...  அதே மருந்துகள குடுங்க.... கொஞ்ச நேரத்தில முழிச்சுடுவாங்க... நான் இன்ஜெக்ஷன் போட்டுட்டு போறேன்
என குடுத்தார்.

“பொன்னி, பார்த்துக்க என்று கூறிச் செல்ல. கதிரும் ராஜலிங்கத்தை ஏற்றிய காரில் பறந்தான்

கந்தன் மட்டும் ராஜியை விட்டு ஒரு நொடியும் விலகவில்லை.

நிலைமை கொஞ்சம் விபரீதம் ஆகியது கண்டு கனகு சிறிது விட்டு பிடிக்கலாம் என தீர்மானித்து “ச்சே, நார பயலுவ.... நல்ல குடும்பத்தில பொண்ணு எடுத்தேண்டா சாமி என காரி துப்பிவிட்டு பெரியவரை முறைத்துவிட்டு அவசரமாக வெளியேறினான்.
அங்கே ராஜலிங்கத்துக்கு அவசர முதலுதவி செய்ய, கொஞ்ச கொஞ்சமாக அவருக்கு நினைவும் வந்து பிபியும் கட்டுக்குள் வந்தது. 

“இங்கேயே இருக்கட்டும் கதிர்
என்றார் குமார். 

“கண்டிப்பா
என்றான்.

“டாக்டர் குமார், பக்கத்து டவுன்லேர்ந்து யாரானும் ஸ்பெஷலிஸ்ட் வர வைக்கணுமா, மருந்துகள் எதுவும் தேவைப்படுதா? என்று கேட்டான்.

“இப்போதைக்கு ஐயா புண்ணியத்தில நமக்கு அந்த மாதிரி பிரச்சினை எதுவுமே இல்லை கதிர்....

“நம்ம ஊர் ஹாஸ்பிடலைத்தான் அதி நவீன வசதியோட லேட்டஸ்ட் மருத்துவ வசதிகளோட ஐயா கட்டி கொடுத்திருக்காங்களே.... என புன்னகைத்தார். 

“ஆம்
என தலையசைத்தான் கதிர்.

சிறிது நேரத்தில் ராஜலிங்கம் முழித்து, “ராஜி ராஜி எனப் புலம்பினார்.

கதிரை கண்டதும் “ஐயோ, தம்பி கதிரு, நீயும் இங்கே என்னோட வந்திட்டியா.... அந்தப் பய என் ராஜிய என்ன பண்ணினானோ தெரியலியே, ஐயோ நான் என்ன பண்ணுவேன் என அலறினார்.

“ஒண்ணும் இல்லீங்கையா, அவங்க பத்திரமா இருக்காங்க. கந்தனும் பொன்னியும் பெரியவரும் துணைக்கு வெச்சுட்டுதான்யா நான் வந்தேன்..... கனகு பின்னோட கிளம்பி போய்டானாமா.... ஐயா சொன்னாங்க என்றான்.

“ஹப்பாடா எம் புள்ள பொழச்சுதா....

“இன்னிக்கி இப்படி, நாளைக்கு என்னாகுமோ... ஐயோ தப்பு பண்ணீட்டேனே கதிரு என்று அழுதார்.

“நீங்க உணர்ச்சிவசப்படக் கூடாதுங்கைய்யா.... ஒண்ணும் ஆகாது..... நாமெல்லாம் இல்ல, நம்மள மீறி அந்த பயலால என்ன செய்துட முடியும், நீங்க தைரியமா இருங்கைய்யா என்றான்.

“இல்ல கதிரு, எம் மகளோட வாழ்வ நினைச்சா எனக்கு ஒரே கலக்கமா இருக்கு. தீர்க்க முடியாத பெரிய தப்ப நான் அவளுக்கு பண்ணீட்டேன் கதிரு என அவர் கலங்க, 

“கதிர் திஸ் இஸ் நாட் குட்..... இவர் இப்படி ஸ்ட்ரெயின் பண்ணிகிட்டா அது அவர் ஹார்ட்டுக்கு நல்லதில்ல... ஏதானும் பண்ணனும்..... நான் அவருக்கு தூங்கறதுக்கு மருந்து குடுத்துடறேன்..... கொஞ்ச நேரம் அமைதியா தூங்கினாத்தான் இவர் நிலை நார்மலாகும்
என மருந்தை சலைனிலேயே ஊசியால் ஏற்றினார்.

அங்கே ராஜியும் முழிதெழுந்தாள். கனகு அங்கே எங்கேயுமே இல்லாதது அவளுக்கு ஆசுவாசமாகியது.

“பொன்னிக்கா, அப்பா? என்றாள் கவலையோடு.

“ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு கண்ணு.... இப்போதான் கதிர் தம்பி கூப்டுச்சு.... இப்போ பயப்பட ஒண்ணுமில்லையாம், தூங்க மருந்து குடுத்திருக்காங்களாம்..... ஒன்னப் பத்தின கவலையில புலம்பிகிட்டே இருந்தாகளாம்... என்றாள்.

“ஐயோக் கடவுளே, எல்லாம் என்னால....”” என குமுறினாள்.

“ச்சே, அதென்ன பேச்சு.... அந்த பயபுள்ள பண்ணினதுக்கு நீ ஏன் ஒன்னையே கொற சொல்லிக்கற கண்ணு..... உருப்படாத பய, கொஞ்ச நேரத்தில எல்லாரையும் கலக்கிபுட்டான்.... விளங்குவானா...
என கையை முறித்தாள்.

“நான் அப்பாவ பார்க்கணும், வாங்க போலாம் என்றாள்.

“ஆத்தாடி, நீங்க நாலு நாளக்கி எங்கேயுமே நகரப்டாதுன்னு டாக்டர் ஐயா என்கிட்டே உத்தரவு போட்டிருக்காரு தாயி..... என்னைய மன்னிச்சுடுங்க, நான் எங்கேயும் அசைய விடமாட்டேன் ஆமா என்றாள் கண்டிப்பாக.

“என்ன பொன்னிக்கா, அப்பா அங்க முடியாம இருக்கும்போது... எனக்கொண்ணும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன், வாங்க அஞ்சே நிமிஷம் பார்த்துட்டு வந்துரலாம் என்றாள்.

“கதிர் தம்பி அங்கன தான் இருக்கு..... நிழல்போல பெரியய்யாவ அது பாத்துக்கும் நீங்க பேசாம இந்த சாப்பாட்ட சாப்டுட்டு மருந்து மாத்திரைய போட்டுக்கிட்டு படுங்க என்றாள் நல்ல வார்த்தையாக.

ராஜிக்கு அங்கே இருப்பே கொள்ளவில்லை.

கதிருக்கு ஹாஸ்பிடலுக்கு போன் போட்டாள். டாக்டர் குமாரிடமும் கதிரிடமும் அப்பாவை குறித்து விலாவரியாக கேட்டு தெரிந்து கொண்டாள். சிறிது மனம் லேசாகியது.

கொஞ்சம் உண்டுவிட்டு மாத்திரைகளை போட்டுக்கொண்டு படுத்தாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ராஜலிங்கம் உடல் தேறி வீடு திரும்பினாலும் அவர் முகமும் மனமும் சரியில்லை. நடந்து முடிந்த சம்பவம் அவரை வெகுவாக அசைத்து பார்த்துவிட்டது. நிதர்சனம் இன்னவென்று தெள்ளத் தெளிவாக அவருக்கு விளங்கிவிட்டது.

‘அப்படிப்பட்டதொரு முரடனிடம் வாழ் நாளெல்லாம் எப்படி... என துவண்டு போனார். பெரியவரிடம் புலம்பி தீர்த்தார். 

“என்ன தம்பி இப்படி.... நீயே இப்படி புலம்பினா, பாவம் அந்தச் சின்னது, என்னத்த பண்ணும்..... நீதான் தைர்யமா இருக்கோணும்..... நம்ம ராஜிய நீ அவ்வளவு பூஞ்சை மனசா வளர்க்கல.... ஆம்பளைக்கு ஆம்பளையா எல்லா நேரங்களிலும் எதிர்த்து நின்னு சமாளிக்கவும் கத்து குடுத்திருக்கிற.... அத மறந்துடாத
என தைர்யம் கூறினார்.

ஆனாலும் ஏனோ அவர் நெஞ்சுக்கு துணிவு ஏற்படவில்லை. நிம்மதியும் உறக்கமும் காணாமல் போனது.

கனகு, வார நாட்கள் அமைதியாக இருப்பவன் போல நாடகமாடிவிட்டு, மீண்டும் ஆபீசில், கணக்குப்பிள்ளையிடம், பேருக்கு ஒரு வார்த்தை கூறிவிட்டு இம்முறை இரண்டு கட்டு நோட்டுகளை எடுத்துக்கொண்டு போயே போனான். 

நான்கு நாட்கள் ஆபீசிற்கும் செல்லவில்லை, இங்கேயும் வரவில்லை, தனது வீட்டிலும் காணவில்லை என்றனர் வேலையாட்கள்.

“எப்போதும் போலத்தான், கழுத கெட்டா குட்டிச்சுவரு என்றாள் பொன்னி ஆத்திரத்துடன்.

“என்னது குட்டிச்சுவரு, என்ன பொன்னி.... அவரு என்ன இருந்தாலும் நம்ம வீட்டு மாப்ள, அத மறக்கப்பிடாது... என்ன இது மரியாதை இல்லாம... நாமளும்தானே தப்பு செய்துட்டோம்....

“இள வயசு, உரிமை பட்டவன் கேக்குறான்.... நேரத்தோடவே நாம செய்ய வேண்டியத செஞ்சிருந்தா இப்படியெல்லாம் முரட்டுத்தனமா அவன் ஆடி இருக்க மாட்டானோ என்னமோ... என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொள்வது போல வாய்விட்டே பேசினார் ராஜலிங்கம்.

பொன்னி பலதும் சொல்ல நினைத்தும் அவரின் எதிரில் நின்று வாய் திறக்க திராணி இல்லாமல் மூடிக்கொண்டாள்.

ராஜியின் உள்ளம் உள்ளே கொந்தளித்தது.

‘ச்சே, தன்னை திருத்திக்க முடியல... சந்தர்ப்பம் குடுத்தும் மாறல, கேவலம், இந்த உடம்பை அனுபவிக்கத்தானா இந்த போராட்டம்.... என கசப்பாக இருந்தது.

மீண்டும் அவன் அங்கே அந்தப் பெண்ணிடம்தான் போயிருப்பான் என கேள்விப்பட்டதும் நிச்சயமாக இனி அவன் தன்னை தொடப்போவதில்லை என தீர்மானம் செய்தாள்.

கணக்குப்பிள்ளை வீட்டிற்கே வந்து கதிரிடமும் அவளிடமும் தனிமையில் சந்தித்து அவன் பணத்தை வாரிக்கொண்டு போனதை கூறினார். அவர் பயம் அவருக்கு.

“பெரியய்யாவுக்கு நான் என்னங்க பதில் சொல்றது சின்னம்மா? என கலங்கினார்.

“இல்ல, நீங்க அதைப்பத்தி கவலைப்படவேண்டாம் ஐயா.... நான் அதை சரி பண்ணிக்கறேன் என்று அவருக்கு தைர்யம் கூறி அனுப்பி வைத்தாள்.

“என்ன செய்ய போற மா? என்றான் கதிர்.

“இன்னது செய்யறது, இந்த நிலையை, அந்த மனுஷனை எப்படி கையாள்றதுன்னு நான் போராடிக்கிட்டுதான் இருக்கேன் கதிர்.... எங்கே எப்படி தோற்பேனோ ஜெயிப்பேனோ எனக்கு புரிபடாம இருக்கு என்று பெருமூச்செரிந்தாள்.

நாலு நாள் குடித்து கூத்தாடிவிட்டு அவன் மீண்டும் ராஜியின் வீட்டுக்கு படை எடுத்தான்.

“நல்லா கெத்தா, பளபளன்னு தான் இருக்கா எம் பொஞ்சாதி என விகாரமாக இளித்தான்.

“எங்கே வந்தீக, ஒரு வாரமா எங்கே போயிருந்தீக, மீண்டும் பணம் எடுத்து போனதா கணக்குபுள்ள சொல்றாரே, என்ன செஞ்சீக அவ்வளவு பணத்தையும்? என்று நேராக நிற்க வைத்து மென்மையாகவே கேட்டாள்.

“ஆமாடி எடுத்து போனேன்.... எங்கிட்ட பணமில்ல, கடந்தான் இருக்கு. சொத்துபத்து இல்ல, குடுக்கறதா சொன்ன பெரிய மனுஷங்களும் சொன்னபடி எதையுமே குடுக்கல..... சொத்துபத்து பணம் வரவு செலவு கணக்கு சாவிகொத்து கூடவே நீ, எல்லாமும் கிடைக்கும் சுகமா வாழலாம்னு எண்ணி உன்னை கட்டிகிட்டேன்..... அதுனால ஏற்பட்ட கஷ்டம், எனக்கு ஒண்ணுமே இல்லாம நடுத்தெருவில நிக்கறேன்..... என் மனப் புண் ஆறணும்.... ஒடம்பு பசிக்கு நீ கிடைக்கல, அதுக்கு பசியாற்றணும்.... போக வேண்டிய இடத்துக்கு போனேன்.... பணமில்லை, இருந்த இடத்திலேர்ந்து எடுத்தேன்.... செலவு செஞ்சேன்.... இப்போ என்னாங்கற. அப்படிதாண்டீ செய்வேன்.... இன்னமும் போவேன் இன்னமும் எடுப்பேன். என்றான் திமிராக

“இனி அது போல செய்ய முடியாது..... இது நம்ம வீட்டு பணம் மட்டும் இல்ல, ஊர் பணம்..... ஊர் ஜனங்களுக்கும் இதில பங்கு இருக்கு, அவங்க ஒழப்பு இருக்கு.... அத சீரழிய நான் விட மாட்டேன்.... சாவி கொத்தை குடுத்துடுங்க.... இனி எதுவுமே உங்க பொறுப்பில இருக்காது.... ஆபீசுக்கு நீங்க போகத் தேவையில்ல.

“மாசாமாசம் உங்களுக்குனு கைச்செலவுக்கு கொஞ்சம் பணம் குடுக்கச் சொல்லி ஏற்பாடு செய்வாரு அப்பா.... கணக்குபுள்ளகிட்டேர்ந்து வாங்கிக்கோங்க.... அதை என்னவும் செய்துக்குங்க.... உங்கள கட்டிகிட்ட பாவத்துக்கு மாசம் பொறந்தா இதே போல படி அளக்கப்படும்.... அம்புடுதேன்.... வேற எதுவுமே கிடையாது.... “ஆனா, இப்போவும் நீங்க எல்லாதையும் விட்டுட்டு திருந்தி வந்தா, உங்களுக்குண்டானது எல்லாம் கிடைக்கும்.... சொத்தும் பொறுப்பும் பணமும் கூட நானும்... என்றாள்.

“அடிசக்க, நீ எனக்கு பஞ்சப்படி அளக்கறியா, நீ தூக்கி போடுற எச்சில் காசுல நாங்க வாழணுமாக்கும், அவ்வளவுக்கு இறங்கி போகலடீ நானு.... மானம் மரியாத கெட்டுடும் மவளே, வகுந்துருவேன் வகுந்து..... யார்கிட்ட உன் விளையாட்டெல்லாம்.... கணக்குபுள்ளகிட்ட நான் போய் கையேந்தி பிச்ச காசு வாங்கி அதை தாராளமா செலவு செஞ்சுக்கணுமாக்கும். கொழுப்பாடி பணத்திமிர்தானே? என்று கொக்கரித்தான்.

“நீங்க, இத எப்படி நினைச்சாலும் சரி... இப்போதைக்கு இதான் முடிவு.... வேறே பேச்சுக்கே இடமில்ல.... இங்கே தங்கணுமின்னா தாராளமா தங்கலாம். எப்போதும் போல உங்களுக்குண்டான சாப்பாடு மத்த வசதி எல்லாம் வழக்கம் போல நடக்கும்.... ஆனா என்ன அடைய முடியாது.... இனி உங்க இஷ்டம் என்று கூறிவிட்டு இனி உன் பாடு நான் சொல்ல வந்தது சொல்லிவிட்டேன் என்பதுபோல மேலேறி சென்றுவிட்டாள் ராஜி.

“என்ன கொழுப்பு, என்ன திமிரு..... எங்கடீ உங்கப்பன்..... இதை எல்லாம் உன்ன பேசவிட்டுட்டு பொட்டச்சியாட்டம் உள்ள ஒளிஞ்சிகிட்டிருக்குறானாக்கும்? என்று எகிறினான்.

“போதும், அடங்கு கனகு, நான் இங்கன தான் இருக்கேன்..... நீ அவகிட்ட பேசுன, அவ உனக்கு வேண்டிய பதில சொன்னா, முடிவ சொன்னா. இனி உன் இஷ்டம்..... இதில அனாவசியமா என்னை ஏன் இழுக்கறே.... நான் அவளை கட்டாயப்படுத்தி உன்னோட அனுப்ப முடியாது.... அந்த புள்ள மேஜரான புள்ள. பொட்டபுள்ளையானாலும் படிச்ச புள்ள..... அவளுக்கு சொந்தமா யோசிக்கற புத்தி இருக்கு, கையில திறமை இருக்கு, பொறுப்பு இருக்கு..... அவ சொன்னதில எந்த தப்பும் இல்ல, அப்படி இருக்கிறப்ப, நான் ஏன் அவள கண்டிக்கணும்.....? 

“நீதான் முதலிலிருந்தே வெவகாரமா நடந்து கொண்டு வற, ஆக நீதான் திருந்தோணும். நீ திருந்தி வா.... ராஜபோகமா இரு, எம் மவளோட சந்தோசமா குடித்தனம் செய்யி.... யாரு தடுத்தா. போ போய் ஆற அமர யோசனை பண்ணு
என்று முடித்தார்.

“கை கழுவீட்டா ஆகிபோச்சுதா.... உம்ம பொண்ணுக்குதான் அறிவு இருக்கா? எங்களுக்கு மேலே இருக்கறது என்ன வெண்ணையா.?

“அது அறிவா இல்ல மண்ணான்னு காமிக்கறேன்
என சூளுரைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அடுத்து வந்த நான்கு நாட்கள் அமைதியாக போக, பூகம்பம் எப்போது எங்கே வெடிக்குமோ.... திரும்பி வந்து மீண்டும், கனகு ராமாயணம் படிப்பானோ என உள்ளே பயமிருந்தது.

வேறே விதத்தில் வெடித்தது குண்டு.

வெள்ளி காலையில் ராஜி சாமி கும்பிட்டு வெளியே வர, கதிர் எதிர்பட்டான். “ராஜேஸ்வரி என்றான் மெல்ல.

“சொல்லுங்க கதிர் என்றாள்.

“அவசரம், கொஞ்சம் வா என்றான் கலவரத்துடன்.

கனகு மீண்டும் என்ன ரகளை செய்து வைத்திருக்கிறானோ என பயந்தபடி அவன் பின்னே காமிரா அறை உள்ளே சென்றாள்.

“தாசில்தாரு  போன்ல இருக்காரு, உன்னோட பேசணுமாம் என்றான்.

“தாசில்தாரா என்னோடவா? என ஒன்றுமே புரியாமல் போனை கையில் எடுத்தாள்.
காமிரா உள்ளே ஒரு போன் இருந்தது. ஹாலிலும் படுக்கை அறையிலும் உள்ள போனின் இணைப்புதான் அது. ஹாலில் போனை எடுத்த கதிர் பதறி போய் அவளை காமிரா உள்ளின் போனை எடுத்து பேச வைத்தான்.

“சார், வணக்கம், சொல்லுங்க... என்ன விஷயம், என்னோட பேசணும்னு சொன்னதா... என்றாள்.

“வணக்கம், ஆமா மேடம். நீங்க கொஞ்சம் தாசில்தார் ஆபீஸ் வரை உடனே புறப்பட்டு வர முடியுமா.... மிஸ்டர் கதிர்வேலனையும் கூட வரச்சொல்லி இருக்கேன்.... ரொம்ப நாசூக்கான விஷயம்.... பெரியவருக்கு இப்போ ஒண்ணும் தெரிய வேண்டாம் என்றார்.
“என்ன பூடகமா சொல்றீங்க, யாருக்கு என்ன? என்றாள்.

“நீங்க வாங்களேன், எங்களுக்கு ஒரு சந்தேகம்.... அதை நீங்கதான் வந்து தெளிவு படுத்த முடியும் என்றார்.

“சரி, உடனே வரேன் என வைத்தாள்.

“என்ன கதிர், தாசில்தார் என்னென்னமோ சொல்றாரு, உங்க கிட்டேயானும் எதாச்சும் வெவரமா சொன்னாரா? என்று கேட்டாள்.

“இல்ல, உங்கிட்ட சொன்னதத்தான் என்கிட்டேயும் சொன்னாரு. நாம கிளம்பறது நல்லது என்றான்.

“ம்ம் ஆமாம் போயிட்டு வந்துடலாம். பொன்னிகிட்ட சொல்லீட்டு வரேன். அப்பாவுக்கு தெரிய வேண்டாம்னு வேற சொல்றாரே என உள்ளே சென்றாள்.

பின்னோடு அவள் வெளியே வர, கதிர் காரை எடுத்தான்.

வெறுசாக பக்கத்து டவுன் தாசில்தார் ஆபீஸ் பக்கமாக நெருங்க, மீண்டும் கதிரின் செல்போனில் கால் வந்தது.

“சொல்லுங்க சார், உங்க ஆபீஸ்கிட்ட வந்துட்டோம் நாங்க என்றான்.

“இல்ல இல்ல வேண்டாம்... பின்னாடித் தெரு வழியா வாங்க. ...அங்கிருந்து ஒரு ஒற்றையடி பாத எங்காபீசுக்கு வந்து சேரும், அதுல பின்னலேர்ந்து உள்ள வந்து சத்தம் போடாம உக்கார்ந்துடுங்க, நான் உங்கள சந்திக்கிறேன் என்றார்.


2 comments:

  1. Sudha Akka, andha Raji PoNNukku vandha kashtam ellam podum..paavam..seekiram yaedhvadhu nalladhu nadakka vaiyingo!

    ReplyDelete