Wednesday 11 July 2018

NENJIL KODI MINNAL - 8

மாலை ராஜலிங்கமும் கனகராஜும் வீட்டிற்கு வந்தனர். கனகு அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்... ‘என்ன நடக்கிறது, இவளிடம் எந்த மாறுதலும் இல்லையே..... இன்றிரவுக்குண்டான எந்த ஏற்பாடும் நடப்பது போல தெரியவில்லையே..? என பார்த்திருந்தான்.

“என்ன மாமா, ஆடி தான் முடிஞ்சுட்டுதே...? என்றான் அவரிடம் பச்சையாக. 

ஒரு நொடி, அவரே என்ன எப்படி பதில் கூறுவது எனத் திணறித்தான் போனார்.
“ஆங், ஆமா மாப்ள... ஆடி முடிஞ்சுட்டுது.... நடக்க வேண்டிய நல்ல காரியத்த நடத்திட வேண்டியதுதான். நான் பூசாரி ஐயாகிட்ட பேசறேன், நல்ல நாளா பார்த்துடுவோம் சீக்கிரமே என்றார்.

“இன்னும் எத்தன நல்ல நாளு பார்ப்பிக மாமா. கல்யாணம் முடிஞ்சு எத்தனையோ நாள் ஆகப் போகுது, இனிமேயும் நல்ல நாளு அது இதுன்னுகிட்டு... என்று புலம்பினான்.

“அப்படி இல்ல தம்பி, குலம் தழைக்கணுமில்ல.... அதெல்லாம் நாள் நட்சத்திரம் பார்த்துதான் செய்யோணும் என்றார்.

“ஆமா பின்ன, அதானே நல்லது என்று ஒத்து பாடினார் முருகானந்தம். 

“அண்ணே, நீங்களே பூசாரிகிட்ட ஒரு எட்டு போய் கேட்டுட்டு வந்துருங்களேன்
என்றார்.

“அதுக்கென்ன தங்கமா செஞ்சா போச்சு.... தா வாரேன் எனக் கிளம்பினார் அவரும்.
போகும்போதே, ராஜியை இந்த இக்கட்டிலிருந்து மேலும் எப்படி காப்பாற்றுவது என யோசித்துக்கொண்டே சென்றார்.

பூசாரியைக் கண்டு விவரத்தைச் சொல்லி, நாள் கேட்க, அவர் ஒரு வாரம் கழித்து நல்ல நாள் குறித்து கொடுத்தார். ‘போகுது, ஒரு வாரம் கிடைச்சிருக்கு... அதுக்குள்ள வேறே யோசிக்கலாம், எதாச்சும் ஏற்பாடு செஞ்சிடலாம் என தைர்யத்துடன் வீட்டை அடைந்தார்.

பீதி நிறைந்த கண்களுடன் அவரை எதிர்கொண்டாள் ராஜி. அவளைக் கண்டு, ஆசுவாசமாக கண்களை ஜாடை காட்டி, “இந்தா பொன்னி, இன்னும் ஏழே நாளு... ஆமா, வர்ற பதிநெட்டாந்தேதி எல்லா ஏற்படும் ஜமாயச்சுபுடணும் ஆமா என்றார் சற்று உரக்க. எல்லோருக்கும் அதுவே செய்தியானது போல.
“இன்னாது, இன்னமும் ஒரு வாரமா? என்றான் கோபம் கொப்பளிக்க கனகு. “அதெல்லாம் அப்படித்தான் தம்பி கோவப்படக்கூடாது.... அன்னிக்கி சர்வ முகூர்த்த நாளாம்.... ரொம்ப நல்லா இருக்குன்னு நேரம் குறிச்சு குடுத்திருக்காரு பூசாரி என்றார் முருகானந்தம்.

‘யோவ் பெரிசு, ஒன்னைய வகுந்தாத் தேவலையா என பார்வையால் எரித்தான்.
பின்னோடு அவன் கோபம் அவளை தாக்கியது.

“மாமா, நான் என் வூட்டுக்கு போறேன். இங்கே ஒண்ணும் செரியா நடக்கறாப்போல எனக்கு புடிபடல..... நான் இந்த வாரம் அங்கேயே தங்கிக்கறேன். இங்கே எனக்கு மூச்சுகூட செரியா விட முடியல.... தாலிகட்டின பொண்டாட்டிய தொடக் கூட கண்டவன் கிட்ட பர்மிசன் கேக்க வேண்டியதாருக்கு.... ச்சே, என்ன பொழப்புடா சாமி, வெக்கக்கேடு. நாண்டுகிட்டு சாகலாம்.... என் கூட்டாளிக கேள்விப்பட்டா காரி துப்புவானுங்க என்று இரைந்தான்.

“பதினெட்டு கடைசி அவகாசம்.... அன்னிக்கி எதாச்சும் சாக்கு போக்கு சொன்னா அதோட அம்புடுதேன் உங்க பொண்ணு... என நிறுத்தினான்.

“வேறே நான் ஒண்ணும் இப்போதைக்கு சொல்ல விரும்பல உஷார் என அவளை விரல்காட்டி மிரட்டிவிட்டு வேட்டியை மடித்துக்கட்டி, யார் சொல்லியும் கேட்காமல் காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

நிஜத்தில் ஹப்பா என்று இருந்தது ராஜிக்கு.

‘இன்னும் ஏழு நாட்கள். இதில் என்ன சாதித்துவிட முடியும்... ஹ்ம்ம், பார்க்கலாம் என யோசனையில் ஆழ்ந்தாள்.
தன் வீட்டிற்குச் சென்ற கனகுவிற்கு தாறுமாறாக கோபம் ஏறியது. வழியில் வாங்கி வந்த சாராய பாட்டில்களை கடகடவென காலி செய்தான். இன்றிரவு நடந்துவிடும், இனி எந்த சாக்கும் நிற்காது என நினைத்திருந்த நேரத்தில்.... அனைத்தும் ஒரு நொடியில் மாறிப் போக, ராஜியின் பருவ அழகும் அவளது இளமையும் அவனை வாட்டி வதக்கியது. அவளை எதிரில் வைத்துக்கொண்டு அவளைத் தொடாமல் இருப்பது பெரும்பாடாக இருந்தது அவனுக்கு. அதனால்தான் பெரிசின் முன் ரசாபாசம் எதுவும் ஆகிவிடக் கூடாது என அவன் இங்கே வந்திருந்தான்.

முட்ட குடித்துவிட்டு தன் சகா வாங்கி வந்த பிரியாணியை உண்டுவிட்டு நேராக காஞ்சனாவின் வீட்டை நோக்கி காரை வேகமாக விட்டான். 

அங்கே செல்ல, அவள் வேறே ஒருவனுடன் பேரமாடிக்கொண்டு இருந்தாள்.
“டேய் நாயே, போடா, உனக்கு என் காஞ்சனா கேக்குதா... போ, பேடிப் பயலே
என அவன் சொக்காயை கொத்தாக பிடித்து இழுத்து வெளியே கொண்டு தள்ளிவிட்டு அவளுடன் உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொண்டான்.

“என்னய்யா இது, நீ வர்றதும் செய்யறதும் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. என் கஸ்டமருங்கள நீ இப்படி செஞ்சா, நாளக்கி எவன்யா என்னத் தேடி வருவான்..... உன்னையே நம்பி உக்கார்ந்திருக்க நான் என்ன உம்ம பொண்டாட்டியா வப்பாட்டியா? என இரைந்தாள்.
“எதுவும் இல்லைனாலும், நீ, நான் கேக்கும்போது எனக்குதான் சொந்தம். த பாரு காஞ்சு, செம கடுப்புல ஆத்திரத்தோட வந்திருக்கேன்.... இந்த மாமன்கிட்ட நெருவிசா நடந்துக்க.... என் கோபத்த சமாளிச்சு என்ன சொக்க வைய்யி.... இல்லேனா நடக்கறதே வேற என கொஞ்சலுடனும் கெஞ்சலுடனும் கோபமான இயலாமையுடனும் பேசினான்.

அவளுக்கும்தான், அவனை, அவனது கோபத்தை, தெரியுமாதலால் அவனிடம் தன்மையாகவே நடந்துகொண்டாள்.

பொழுது விடிந்து எழுந்து, அங்கேயே குளித்து சிற்றுண்டி உண்டுவிட்டு, “வரட்டாடீ என் காஞ்சு. மாமன வசியப்படுத்திட்டடீ என அவளை மெச்சிக்கொண்டான். “செரிதான் போய்யா என அவளும் சிவந்துபோனாள்.

அங்கிருந்து கடைத்தெருவு பக்கம் மேய்ந்தான். தனக்கென சில பொருட்களை வாங்கிக்கொண்டு காரில் ஏறினான். நேராக ஆபீசை நோக்கி காரை செலுத்தினான். தினம்போல நல்லவனாக காண்பித்துக்கொள்ள முயன்று தோற்றான்.

ராஜி, பொன்னியுடன் கோவிலுக்குச் சென்று திரும்புகையில் கதிர் எதிர்பட்டான். “பொன்னிக்கா என்று நிறுத்தினான்

“வாங்க கதிர் தம்பி, எங்க, நீங்க கோவில் பக்கம்? என நின்றாள். 

“நான் சின்னம்மாவோட தனிச்சு ஒரு விஷயம் பேசணும், அதான் இங்க வந்தேன்
என்றான்.

அவனின் குரலில் இருந்த தீவிரம் அவளை என்னவோ செய்தது. 

“பேசுங்க தம்பி
என படித்துறை ஓரம் பூக்கூடையுடன் அவளும் அமர்ந்து ராஜியையும் அமர வைத்தாள்.

“என்னாச்சு கதிர், ஏன் உங்க முகமெல்லாம் என்னமோ போல இருக்கு... உடம்புக்கு சரி இல்லையா? என்றாள் ஆதுரத்துடன் ராஜி.

“இல்லம்மா என்றான். முகத்தை அழுந்த கைகுட்டையால் துடைத்தபடி.
“பின்ன என்னவாச்சு? என்றாள்.

“நான் அதோ, அந்தால போயிட்டு தோ வாரன் என்றாள் பொன்னி.

“பொன்னிக்கா நீங்க இருங்க.... இருக்கணும்... உங்களுக்குத் தெரியாத ரகசியம் ஒண்ணுமில்ல.... நீங்க இருந்தா இன்னமும் நல்லது என்றான் கதிர். அவனது பீடிகை இவர்கள் வயிற்றைக் கலக்கியது. 

“சொல்லுங்க
என்றாள் ராஜி.

“நான் இன்னிக்கி விடிகாலம்பரையே டவுனுக்குப் போயிருந்தேன் என்றான்
“ஆமா தெரியும், பாங்கில வேலை குடுத்திருந்தாரே அப்பா
என்றாள் ராஜி.
“ஆமா மொத வேலையா அத முடிச்சுட்டா நல்லதுன்னு வெள்ளன கிளம்பீட்டேன்....
“டவுன்ல, பாங்க நோக்கி போயிட்டிருக்கிறப்போ, அவுகள பார்த்தேன். 

“யார?
என்றாள் ராஜி.

“அதான் கனகுவை என்றான் அசிங்கம்பட்டவன் போல. அவன் பெயரை சொல்லக்கூட அவனுக்கு இஷ்டம் இருக்கவில்லை.

“டவுன்லையா, அங்கே அவுகளுக்கு அந்த வேளையில என்ன வேலை.... தன் வீட்டுக்குத்தானே போறேன்னு போனாக? என்றாள் ராஜி.

“உக்கும், போயிட்டாலும்.... என கைகளை நொடித்தாள் பொன்னி.

“மேலே சொல்லுங்க, என்ன விவரம்? என்றாள் ராஜி

“வந்து வந்து... என அவளை நேராகக் காணவும் கூசி பொன்னியை பார்த்தபடி, “அது வந்துக்கா, அங்க இந்த மனுஷனுக்கு ஒரு தொடுப்பு இருக்காளாம்... என்றான் மென்று விழுங்கி.

பொன்னி ராஜியை பார்க்க அவளும் இவளை பார்க்க, ‘போச்சுடா, இவுகளுக்கும் தெரிஞ்சு போச்சா... என எண்ணிக்கொண்டாள் பொன்னி.

‘இவனும் பார்த்திருக்கிறான், தெரிந்திருக்கிறது என்றால் இதில் அத்தனையும் உண்மையாகத்தான் இருந்திருக்க வேண்டும்... என ராஜிக்கு ஆத்திரம் பொங்கியது.
“ம்ம்ம், மேலே சொல்லுங்க.
என்றாள்.

“நேத்து நைட் அங்கதான் இருந்தாப்லையாம்... அவ வீட்டில ஏற்கனவே இருந்த யாரோ ஒருத்தன இழுத்து வெளியே தள்ளி சண்டை போட்டு அனுப்பீட்டு இந்தாளு உள்ள பூந்து பூட்டிகிட்டானாம். தெருவே பேசுது.... அடிக்கடி வந்து போவானாம். நகை பணம்னு வாரி இறைப்பானாம்.

இன்னிக்கி காலையில், அந்த வீட்டிலேர்ந்து இந்தாளு வெளியே வரும்போதுதான் நான் பார்த்தேன். அவளிடம் வாசல் வரை வந்து வழிந்தபடி காரில் ஏறினான். அவனைப் பின் தொடர்ந்தேன், மார்கெட்டில் அலைந்தான்.... பின் நம்ம ஊரை நோக்கி காரைத் திருப்பினான்.

“எனக்கு பாங்குக்கு நேரமாச்சுதுன்னு நான் அப்படியே அங்கே போய்டேன். என் வேலை முடிஞ்சு, திரும்ப அங்கேயே வந்து அக்கம் பக்கம்னு விசாரிச்சேன் எல்லாம் கத கதயா சொல்றாங்க என்றான் விசனத்துடன்.

“ஹ்ம்ம் என பெருமூச்சு எறிந்தாள் ராஜி.

“ஐயோ, கிளிய வளர்த்து இப்படி கொரங்குகிட்ட குடுத்துபுட்டாகளே... என பொன்னிக்கு முட்டிக்கொண்டு வந்தது அழுகை.

“பொன்னிக்கா என அதட்டினாள் ராஜி.

“சரி கதிர். இதெல்லாம் ஓரளவு பொன்னிக்கா ஏற்கனவே எனக்கு சொல்லி இருக்காங்கதான் அதனால பெரிய அதிர்ச்சியா இல்ல....

“ஆனா, மேற்கொண்டு என்ன எப்படி செய்யறதுன்னுதான் யோசிக்கறேன் என்றாள்.

‘இந்தத் தளிர் பூங்கொடிக்கா இந்த நிலை.... இவள் அழகென்ன, அறிவென்ன, படிப்பென்ன அந்தஸ்தென்ன.... இவுகளுக்குப் போய் கடவுள் ஏன்...?

முட்டிக்கொள்ளலாம் போல கதிருக்கு துக்கம் வாட்டியது. அதுவும் அவளை தேவியாக மனதில் வைத்து ஆராதிப்பவனுக்கு அவளது இந்த நிலை பெருத்த துயரத்தை குடுத்தது.

“என்ன செய்யலாம்னு யோசனை? என்றான்.

“தெரியல, இப்போதைக்கு தல சுத்துது பாரமா இருக்கு.... ஒண்ணும் புரிபடல.... யோசிக்கணும், நிறைய யோசிக்கணும்... என்றாள்.

“பொன்னிக்கா நாம போலாமா.... கதிர், நாங்க வரோம்... நீங்க கவலைப்படாதீக என்று எழுந்தாள்.

‘இது என்ன மாதிரியான ஒரு தெய்வீக பிறப்பு, நான் இவளைப்பற்றி கவலைகொண்டு வருந்த, இவளோ எனக்கு தைர்யம் சொல்லிச் செல்கிறாள்... என பார்த்தது பார்த்தபடி இருந்தான். பின் பெருமூச்சுடன் அவனது வீட்டை நோக்கிச் சென்றான்.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு படுத்தவளுக்கு ஒன்று மட்டும் திண்ணமாக விளங்கியது. இனி அவன் ஒரு போதும் அவளை தொடப்போவதில்லை. அதனால் என்ன பூகம்பம் வெடித்தாலும் எதிர்கொள்வாள். தந்தைக்கு அறிய நேர்ந்தாலும் சரி, ஊர் சிரித்தாலும் சரி, அவளை அவன் அத்துவிட்டாலும் சரி என.

அந்த ஏழு நாட்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, அவனைப் பற்றி மேலும் விசாரித்து அவளுக்கு ஆத்திரத்தில் புத்தி மழுங்கியது நஞ்சையும் இல்லை புஞ்சையும் இல்லை. எல்லாமும் விற்று தின்றாகிவிட்டது. சமீபத்தில் தான் அடமானத்தில் வைத்த நிலம் மூழ்கியே போய் குத்தகைக்காரரே சொந்தமாக்கிகொண்டு விட்டார். போன வாரம், அதற்கான இவன் தாக்கல் செய்த கேஸ், கோர்டில் நடந்துகொண்டு இழுபறியில் இருந்தது என அறிந்தாள். லக்ஷகணக்கில் கடன் வேறு அவனை மலைக்க வைத்திருந்தது என்பதையும் அறிந்தாள்.

‘ஆக, தன்னை தனக்காகவோ தன் தந்தை போய் கெஞ்சினார் என்பதற்காகவோ அல்ல... தன் சொத்துக்கும் பணத்திற்காகவும் மட்டுமே கட்டிக்கொண்டான். கூடவே, தன்னை ஆளவும் முடியும் என்ற ஆசை வேறு.... எப்போதுமே அவன் அவளை கண்ட பார்வையில் விரசம் இருந்தது. இப்போதோ நிலைமை இன்னமும் விபரீதம்.
வாரம் கழிந்தது. அந்த நாளும் வந்தது.

“என்னா, இன்னிக்காச்சும் ஏதானும் சடங்கு உண்டா? எனக் காலையிலேயே வந்து நின்றான் கனகு வெட்கமேயில்லாமல். ராஜி அவன் எதிரிலேயே வரவில்லை.

பொன்னி மூலம் செய்தி அனுப்பினாள்.

“அதெல்லாம் இன்னும் நாலு நாளைக்கு ஒண்ணும் நடத்த முடியாது.

“இன்னா கிண்டலா? என்று எகிறினான்.

“ஏன் பொன்னி, ராஜி எங்கே, நீ ஏன் இப்படி சொல்றே? என ராஜலிங்கம் கேட்டார்.

“பெரியைய்யா அது வந்துங்கைய்யா... என தலையை சொரிந்தாள்.

“என்னனு சொல்லித் தொலை என அவன் எறிந்துவிழுந்தான்.

சின்னம்மா வீட்டுக்கு விலக்குங்கைய்யா.... அதுனால நாலு நாள் தள்ளணும்.... அதன் பிறகுதான் எதுவானாலும் என்றாள் அவனை கெத்தாக பார்த்தபடி.

அவள் சொல்வது அப்பட்டமான பொய் என்பதை அவளின் திமிர் பார்வையிலேயே அவன் அறிந்துகொண்டான்.

ராஜலிங்கம் அறியவில்லை.

“ஓஹோ, அப்படியா செய்தி. நாமதான் தப்பு பண்ணீட்டோம்... பூசாரிகிட்ட இந்த கணக்கெல்லாம் சொல்லி நாள் குறிச்சிருக்கணும்.... அதுக்குதான் வீட்டில பெண்டுகள் இருக்கணுங்கறது... என்ன அண்ணே? என்றார்.

“ம்ம்ம், அதுக்கென்ன பண்ண முடியும்.... நடக்க வேண்டியது நடக்கும்தானே என்றார் உள்ளூர மகிழ்ந்து.

ஐந்தாம் நாள் அவன் சுற்றத்தில் நெருங்கிய திருமணம் ஒன்று வேறு இருந்தது. புதிதாக திருமணமானவன் என்பதால் அவனை அவன் வீட்டிலேயே வைத்து அழைத்திருந்தனர். 

அப்போதே, “என்ன கனகு, நீ மட்டுமா இங்கே இருக்கே, அவங்க வீட்டு மாப்ளையா இல்ல போன, நீ இங்க சரி, மருமக எங்கே?
என வினவினர். அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியது.



1 comment:

  1. Interesting. How long poor girl will manage?... Waiting for the next episode. 👍

    ReplyDelete