Monday, 9 December 2019

பரிசு - சிறு கதை - அனைத்து நிர்பயா, ப்ரியங்கா போன்ற சகோதரிகளுக்கு சமர்ப்பணம்


பொக்கை வாய் சிரிக்கட்டுமா என லேசாக குழி விழுந்தது. அழட்டுமா என கருவண்டு கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
பட்டு போன்ற கையையும் காலையும் ஆட்டியபடி மடியில் பொன் குவியலாக கிடந்த சிசுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் அவள்.
‘என்ன, என் குழந்தையை நானே இப்படி கண்கொட்டாமல் பார்க்கிறேனே, தாய் கண்ணோ நாய் கண்ணோ என்பார்களே’ என துணுக்குற்றாள்.
கண்களை சிமிட்டி நிறைந்த கண்ணீர் வெளியே விழுந்திடாமல் உள்ளேயே கரைத்தாள்.
சட்டென நிமிர்ந்தாள். அப்படியே அமர்ந்திருந்தால் ஆக வேண்டிய காரியம் நிறைய உள்ளதே என குழந்தையை பாதுகாப்பாக வாரி எடுத்து நெஞ்சோடு அணைத்து எழுந்தாள்.
நடு வயது நர்ஸ், இவளை பிரசவத்தின்போது தாய் போல தாங்கியவள். இவளை கண்ணில் நீர் நிறைய கண்டாள்.
இது வேண்டுமா என்ற வினா அவள் கண்களில் காணப்பட்டது.
அவளை பார்த்து ஒரு சோக புன்னகை புரிந்தாள்.
“அவங்களை கூப்படறீங்களா சிஸ்டர்?” என்றாள் பணிவாக.
“அவங்க வர்ற நேரம்தான் மா... வரட்டும், வந்த உடனே உள்ளே அனுப்பறேன்” என்றபடி அவர் வெளியே சென்றார்.
‘ஓ என் செல்வமே, உன்னை என் கையில் ஏந்தி மார்போடு அணைத்து அமுதூட்டிட இன்னமும் சிறிது நேரம் உள்ளதா’ என்பது போல பார்த்தாள். அது சிரித்தது.
‘என்னடீ கண்ணு என்னை பார்த்து சிரிக்கறே, நீயும் ஒரு பெண்ணா நீ வாழணுமானு சிரிக்கிறியா, இல்லே ஏண்டீ உனக்கு புத்தி இப்படி போச்சுன்னு சிரிக்கிறியா, உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்குனு சிரிக்கிறியாடீ?’ என்று கொஞ்சினாள்.
நெஞ்சோடு சேர்த்து அமுதூட்டத் துவங்கினாள். தன்னையும் மறந்து அந்த சுகத்தில் கண் மூடினாள்.
மூடிய கண்களுக்குள் மீண்டும் அந்த பயங்கரம்.
அருமை பெருமையாக வளர்க்கப்பட்ட செல்ல மகள் அவள். அவளது பெற்றோரின் இனிய கண்மணி. நன்கு படித்தாள், அறிவும் அன்பும் பண்புமாக வளர்ந்தாள். பார்ப்போரை இன்னும் இன்னும் திரும்பி பார்க்க வைக்கும் சுண்டி இழுக்கும் அழகு.... பளீரென்ற நிறம்.... செதுக்கிய சிற்பமாக உடல் அமைப்பு.
படித்து முடித்த பின் நல்லதொரு பல்நாட்டு கம்பனியில் வேலைக்கு சேர்ந்தாள்.
அனைவரையும் போல நடுநிசி வரை ட்யூட்டி. முடித்தபின் கம்பனி கார் வீட்டு வாசல்வரை கொண்டு இறக்கிவிடும். பாதுகாப்பாக போய் வந்தாலும் பெற்றோருக்கு வயிற்றில் கலக்காமல் இல்லைதான். இவள் உள்ளே நுழையும்வரை தாய் விழித்திருப்பாள் என்பதை இவளும் அறிவாள்.
“உடம்பை கெடுத்துக்காதே மா” என்று இவள் திட்டினால்,
“உனக்கென்ன தெரியும் என் கலக்கம்.... நீ வந்துட்டேன்னு தெரிஞ்சாத்தான் நிம்மதியா தூங்கவே முடியறது” என பதில் குடுப்பாள்.
அப்படிப்பட்ட ஒரு இரவு அது..., ஒரு காலத்தில் பேய்கள் உலாவியதாக பூதங்களும் பிசாசுகளும் நிறைந்திருந்ததாக பாட்டி சொன்ன கதையில் ஞாபகம்.
ஆனால் இன்றோ உடல் பசி எடுத்து ஆடும் பேய்களின் நடமாட்டம், பிணங்களை அல்ல உயிர் உறவாடும் பதுமைகளை பிணம்கொத்தி கழுகுகளாக கொத்தித் தின்று உருக்குலைக்கும் கயவான்கள் நிறைந்த உலகம் அல்லவா இது.
நள்ளிரவு இவள் வந்த கம்பனி காப் நின்று போனது. நின்றே போனதோ அந்த காப் ஓட்டுனரும் இதில் கூட்டோ தெய்வமே அறியும்.
அவள் பாதுகாப்பாக காபினுள்ளேயே அமர்ந்திருந்தாள். உள்ளே உதறியது. பயந்து வியர்த்தாள்.
“என்னாச்சு அண்ணே?” என்றாள் துணிச்சலுடன்.
“பார்த்துகிட்டு இருக்கேன் மா” என்று பதில் வந்தது.
அவள் அவனிடம் கவனம் வைத்த அதே நேரத்தில் பின்பக்க இரு கதவுகளையும் திறந்துகொண்டு நுழைந்தனர் இரு கயவர்கள்.
அவளுக்கு புரிந்தது. முயன்றவரை போராடினாள். ஆனால் அவர்களின் முரட்டுத்தனத்தின் முன் தோற்றுப்போனாள்.
மீண்டும் இருவர் என மொத்தம் ஆறு பேர் அவளை சூறையாடி கிழிந்த நாராக எறிந்துவிட்டு ஓடி ஒளிந்தனர். அவளது கத்தலும் அலறலும் அந்த வழியே சென்ற யாரையுமே தடுத்து நிறுத்தவில்லை. திரவுபதிக்கு உதவி கண்ணன் ஓய்ந்தான் போலும் அவனுமே கூட செவி சாய்க்கவில்லை.
வண்டி ஓட்டுனர் எப்போதோ ஓடிவிட்டானோ அல்லது அவனும் இதில் ஒருவனோ வண்டியினின்று அவளை ரோட் ஓரமாக வீசிவிட்டு சென்று இருந்தனர்.
அதிகாலைவரை அப்படியே நினைவிழந்து கிடந்தாள். ரோந்து சுற்றிய போலிஸ் வண்டி அவளை கண்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்தனர். கேஸ் பதிவாகியது. அலறியபடி ஓடி வந்தனர் பெற்றோர்.
பெரும்பாடுபட்டு மருத்துவர்கள் அவளை பிழைக்க வைத்தனர். நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவள் மீள பல மாதங்கள் ஆகின. உடல் காயங்களுக்கு மருந்துண்டு மனம் காயப்பட்டு ரணப்பட்டு உடைந்து சில்லாகி இருந்ததற்கு மருந்தேது. ஒவ்வொரு இரவும் கனவாக நினைவாக வந்து வந்து பயமுறுத்தியது. தூக்கம் போனது, கண்ணை மூடினால் அந்த பயங்கரம், கனவிலும் நினைவிலும் அலறினாள்
ஆனாலும் அவள் போராடினாள். துணிவை வளர்த்துக்கொண்டாள்.
அனைத்து மீடியாவும் போலிசும் ஏவிய கேள்விகளை ஏற்று நின்றாள். நிமிர்வுடன் பதில் இருத்தாள். உள்ளே உடைந்தாலும் அதை முகத்தில் காண விடவில்லை.
அவள் அடையாளம் காட்டிய நால்வரையும் கைது செய்தனர். கேஸ் நடந்தது. கோர்ட்டில் அவர்களுக்கு தண்டனை இன்றோ என்றோ வரலாம். தொடரும் தொடர்கதையாக இந்த கேஸ் நீண்டுகொண்டே போகலாம். அவள் எதற்கும் துணிந்தாள்.
அதே நேரம் அவள் கருவுற்றிருப்பது தெரிய வந்தது. கலைக்க வேண்டும் என பெற்றோர் ஒற்றைக் காலில் நின்றனர்.
“இல்லை இந்த குழந்தை பெற்றெடுப்பேன்” என்றாள் பிடிவாதமாக.
“உனக்கென்ன பைத்தியமா?” என அதிசயமாக அருவருப்பாக ஆச்சர்யமாக பார்த்தனர் குடும்பமும் உற்றாரும் சுற்றாரும்.
“நீ இதை தனியா வளர்க்க முடியாது. நாளைக்கு உனக்கு ஒரு துணை தேடுவதே பெரும்பாடு எனும்போது, இந்தக் குழந்தையும் கையில் இருந்தால் ஒருவனும் ஏற்க மாட்டான்” என புத்தி கூறினர் பெற்றோர்.
“தெரியும், இத்தனைக்கும்பின் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.... அதையும் மீறி ஆசைப்பட்டாலும் கூட, என்னை ஒருவனும் ஏற்க முன் வரமாட்டான்.... அவனுடைய ஆண் ஜாதியால் மோசம் இழைக்கப்பட்டவள் நான், ஆனாலும் தண்டிக்கப்படுவதும் நானே.... அதுதான் நமது சமுதாயத்தின் சிறப்பு” என விரக்தியாக சிரித்தாள்.
“இத்தனையும் வக்கணையாக பேசும் நீ எல்லாவற்றையும் அறிவு பூர்வமாக சிந்தித்து எதிர்கொண்ட நீ, இந்த முட்டாள்தனத்தை ஏன் செய்ய வேண்டும் என பிடிவாதம் செய்கிறாய்?” என்றனர்.
“எவனோ கயவன் செய்த தவறிற்கு இந்த பச்சை மண் என்ன பாவம் செய்தது. ஜனித்துவிட்ட உயிரை மாய்ப்பது கொலை அல்லவா....?”
“அப்போது நீயே வளர்க்க போகிறாயா?” என்றனர்.
“இல்லை” என்ராள்.
“பின்னே?” என்றனர் ஆச்சர்யத்துடன்.
“இந்த நாட்டில பிள்ளையில்லாதோர் எத்தனையோ பேர்.... அதனால் ஒதுக்கிவைப்பு, விவாகரத்து, இரண்டாம் மனைவி மணப்பது என மீண்டும் மீண்டும் பெண்களுக்குத்தான் தண்டனைகள்.
அதில் யாரேனும் ஒருவருக்கு இந்தக் குழந்தை வாழ்க்கையின் பரிசாக போய் சேரட்டுமே” என்றாள்.
“நீ சீரழிக்கப்பட்டு அதனால் உதித்த ஜீவன் இது.... இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்” என்று புத்தி கூறினார்.
“நான் ஒன்றுமே மறைக்கப்போவதில்லை. உண்மையை உள்ளது உள்ளபடி கூறியே இந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ள முன் வருவோருக்கு தர ஆசைப்படுகிறேன்” என்றாள்.
தான் சீரழிக்கப்பட்ட தினம் முதல் தன்னை சிகிச்சை செய்துவந்த தாய்சேய் நல மருத்துவரின் உதவியுடன் அந்தக் குழந்தையை ஏற்க விரும்பும் தம்பதியை சந்தித்தாள்.
பல வருடமாக இயற்கையாகவும் மருத்துவத்தினாலும் பெரும்பாடு பட்டும் கருத்தரிக்க முடியாமல் குழந்தை பேரின்றி தவிக்கும் செல்வ செழிப்பான தம்பதி அவர்.
“பேப்பரில் எல்லாமே பத்தி பத்தியாக படித்திருப்பீங்க, நானும் என் உண்மை வாக்குமூலமாக அனைத்தையும் உங்களிடம் மறைக்காமல் சொல்லிவிட்டேன், இதெல்லாவற்றையும் கேட்ட பின்பும் முழு மனதோடு ஒருவித உறுத்தலும் இன்றி நீங்க இந்த குழந்தைய ஏற்க விரும்பறீங்களா?” என அவர்களை நேர் பார்வையுடன் கேட்டாள்.
“நாளை ஒரு வேளை, இது சேற்றில் முளைத்ததென கூறி சிறுமைபடுத்தினால் நான் அன்று அங்கு வந்து நிற்பேன். நீங்க உலகத்தின் எந்த மூலையில் போய் வாழ்ந்தாலும் நான் வருவேன்... என் சிசுவை உங்களிடம் இருந்து பிரித்துக்கொண்டு வந்துவிடுவேன்” என்றாள் கனல் பறக்கும் கண்களுடன்.
கண்ணில் நீர் வார்த்தபடி “இல்லையம்மா, உன்னை நினைத்து நாங்கள் பெருமை படுகிறோம்.... நீ பட்ட துன்பம் அவமானம் அசிங்கம் அனைத்தையும் மீறி நீ செய்யப் போகும் இந்த செயலால் எங்கள் வாழ்க்கையே மலர ப்போகிறது.... சேற்றில் தானே செந்தாமரையும் மலர்கிறது.... அந்த சகதியில் கால் வைத்து கைவிட்டு தானே அந்தத் தாமரை மலரை பறித்து அதை கடவுளுக்கும் படைக்கிறோம்.... உனக்கு இந்த மாதிரியான எந்த சந்தேகமும் வேண்டாம். இந்தக் குழந்தை எங்கள் உயிராக இருக்கும். அவளை அண்ட நினைக்கும் எந்தத் தீங்கும் எங்கள முழுங்கித்தான் அவளை தீண்ட முடியும்” என்றனர்.
“யாரால நீ கசக்கி எறியப்பட்டிருந்தாலும், இது ஜனித்தது உன் வயிற்றில். உத்தமியாகத்தான் நாங்க உன்ன பார்க்கிறோம். ஜனித்தது யார் மூலமாக என்ற ரிஷிமூலம் நதி மூலம் எங்களுக்கு தேவை இல்லை மங்கை.” என்று கும்பிட்டார் அந்தக் கணவர்.
அவளுக்கு மனம் சமாதானம் அடைந்தது. ஒன்பது மாதங்கள் அவர்களுக்காக தன் சிசுவை பேணி போற்றி தன் மணி வயிற்றில் சுமந்தாள். அவள் செய்வதை முழு மனதுடன் அங்கீகரிக்க முடியாவிடினும் அவளை கண் போல பார்த்துக்கொண்டனர் அவளது பெற்றோர்.
இதோ இன்று காலை சுகப்ரசவம் ஆனது. ரோஸ் நிற டவலில் சுற்றி ரோஜா குவியலாக தான் பெற்ற கண்மணியை இதோ வந்துகொண்டே இருக்கும் அந்த பெற்றோரிடம் சேர்ப்பிக்கப் போகிறாள் இன்னொரு நிற்பயா.
அவர்கள் உள்ளே வந்தனர். வாயெல்லாம் பல்லாக நீர் மிதக்கும் கண்களுடன் ஆசை ஆசையாக தன் மகளை கையில் ஏந்த ஆயிரம் கண்களுடன் கை நீட்டினாள் அந்தப் பெண். அவளை அணைத்தபடி முகமெல்லாம் பூவாக மலர அவள் கணவன் கூடவே.
இருவர் கையிலும் தன் சிசுவை கொடுத்தாள்.... கைகள் நடுங்கின.... உடலின் ஒரு பாகமாக மட்டுமின்றி தன் உயிரையே ஒரு பாகமாக பிரித்து கொடுப்பது போன்ற வலி நெஞ்சை நிறைத்தது.
கண்ணை இருக்க மூடினாள். நிறைந்த கண்ணீரை முழுங்கினாள்.
“இதற்கு கைமாறா நாங்க உனக்கு என்னம்மா செய்யறது?” என வினவினர்.
புன்னகைத்தபடி “நான் என் சிசுவை உங்களுக்கு விற்கவில்லையே” என்றாள்.
“அய்யயோ நாங்க அப்படிச் சொல்ல வரலை, ஆனாலும் உன்னுடைய நல்ல மனசுக்கு நாங்க ஏதானும் செய்யணும்னு ஆசைப் படறோம்” என்றார் அந்த தனவந்தர்.
“எனக்கு என்னுடைய நிலைமையால வேறே எங்கேயும் வேலை கிடைக்குமான்னு தெரியலை, உங்களால எனக்கு ஒரு வேலை வாங்கி குடுக்க முடியுமா...? என்றாள் கூச்சத்துடன்.
“இங்கிருந்து இந்த ஊர் இந்த மண்ணைவிட்டு தூரே தூரே எங்கேயானும் போய்டணும்னு தோணுது.... நான் இங்கேயே இருந்தா என்னை எதையுமே மறக்க விடமாட்டாங்க இந்த போலிசும் மீடியாவும்” என்றாள் மனம் கலங்க.
“இவ்வளவுதானே, நான் இங்கே நடத்தும் என்னுடைய கம்பனியின் மெயின் ஆபிஸ் ந்யு யோர்கில இருக்கு.... அங்கேயே உன்னை அனுப்பி வைக்கறேன்.... வேலையில சேர்ந்துக்கோ” என்றார். மன நிறைவுடன் சரி என்றாள்.
கையில் விழுந்த ரோஜா குவியலை நெஞ்ஜோடு அணைத்தபடி அந்த தாய் முன்னே நடக்க அவளை அணைத்தபடி “நான் நாளைக்கே உனக்கு வேண்டிய உத்தரவுகளோட உன்னை வந்து சந்திக்கிறேன் மா” என்றபடி சென்றார் அந்த கணவர்.
தன் உயிர் தன்னை விட்டு இன்னொருவரின் வாழ்க்கை பரிசாக போவதை நிறைந்த கண்களுடன் கண்டபடி நின்றாள் மங்கை.
முற்றும்.