Saturday 21 July 2018

NENJIL KODI MINNAL - 18

“நானும் இதை யோசிக்காமல் இல்லை.... ஆனா அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சாத்தான் இதை செயல்படுத்த முடியுமான்னு பாக்க முடியும்.... ராஜெஸ்வரிகிட்ட இதப்பத்தி பேச எனக்கு பயம்மா இருக்கு.... எத்தனைக்கெத்தனை புதுமை பெண்ணோ, அதே நேரத்தில நம்ம நாட்டு பண்பாடு கலாச்சாரம்னு மனசுல வெச்சு வாழற பொண்ணு அவ என்றான்.

“நீங்க அவுங்கள ரொம்பவே ஆராதிக்கறாப்போல தெரியுது...? என்றான் சந்தேகமாக.

மருது, எந்த தவரான நோக்கத்துடன் பேசவில்லை எனினும், அவனுக்கு அந்த சந்தேகம் தோன்றாமலில்லை. வெளிப்படையாக இன்று பேச கிடைத்த சந்தர்ப்பத்தில் அதை தெளிவுபடுத்திக்கொள்ள நினைத்தான்.

“மருது... நீங்க எங்க ரெண்டு பேருடைய உறவை சந்தேகக் கண்ணோட பார்க்கறீங்கன்னு நினைக்கறேன் என்றான் கதிர் புண்பட்டு.

“ஐயோ இல்லை, சத்தியமா இல்லை கதிர்.... சின்னதொரு சந்தேகம், உங்க மனசுல என்னவிருக்குன்னு... அவ்ளோதான்.

சாதாரணமான, மனித இயல்புக்கே, உரித்தான ஒரு குருகுருப்புன்னு வேணா சொல்லலாம். ஏன்னா உங்களையும் சரி, அவுங்களையும் சரி, நான் பார்த்து பேசி புரிஞ்சுகிட்ட வகையில, அப்படி தகாத எண்ணமெல்லாம் என் மனசில எழவே இல்லை என்றான் உண்மையுடன்.

“ஹ்ம்ம். சோக கீதம் எல்லாம் ஒன்றுமில்லை.... ஒரு காலத்தில, நான் படிச்சு முடிச்சு இங்க வேலைக்கு வந்த புதிசில, அந்த வயசும் அப்படி, ஒண்ணா படிச்சு வளர்ந்த சூழல் வேற, அவுங்க மேல எனக்கு அப்படி ஒரு ஆராதனை இருந்தது. அது காதலான்னு கூட எனக்கு இப்போ சரியா சொல்லத் தெரியல.... ஆனா ஒருவித உணர்ச்சி, மலைப்பு, ஆராதனை..... அவங்கள ஒரு தேவதையப் போல நான் எண்ணினேன். இவ என் வாழ்க்கையில இருந்தா அது சொர்க்கம்னு தோணிச்சு என்றான். அதை கூறும்போது கதிரின் கண்களில் எந்த மயக்கமும் இல்லை. ஆனால் அதை கேட்டு மருதுவின் முகத்தில் ஒரு ஆவல், கலவரம் கண்டிப்பாக இருந்தது.

அதை கதிரும் கண்டுகொண்டான்.

“நேரடியா அவங்க கிட்ட அதைச் சொன்னேன்....  நேர்மையான பெண்ணல்லவா, நேராகவே, ‘கதிர், நான் உங்களை அப்படி அந்தக் கண்ணோட்டத்தில பார்க்கலை பார்க்கவும் முடியாது..... பிள்ளை போலன்னு எங்கப்பா உங்களைப் பற்றி அடிக்கடி பேசி பேசி வேறே மாதிரியான எண்ணம் வரலை.... அதுக்குன்னு அண்ணான்னு கூப்பிட்டு வசனம் பேச முடியாது.... ஆனா, நீங்க எனக்கு சகோதரனுக்கும் மேலனு சொல்லீட்டா.... ஷி இஸ் கிரேட் என்றான் கதிர் பெருமையுடன்.

“நிஜமாகவே கிரேட் என்றான் மருது. அவன் கண்ணில் இப்போது கோடி மின்னல்கள் பளிச்சிட்டன.

அவன் வந்து கை கொடுத்த பின் எல்லாமே நல்ல விளைச்சல் தான் லாபம்தான்... நினைத்ததற்கும் மேலேயே விளைந்தது. ராஜிக்கும் விவசாயிகளுக்கும் அனைவருக்குமே ஏகப்பட்ட சந்தோஷம். நல்ல லாபத்தில், கூட்டுறவு பண்ணை மூலம் நெல்லை விற்க மருதுவே ஏற்பாடு செய்தான்.

ஊரே அவனை கொண்டாடி மகிழ்ந்தது. எவனை கேட்டாலும், அவன் வாயில் ‘மருது ஐயா சொன்னாக மருது ஐயா கேட்டாக என அவன் பெயர் தான் முழங்கியது. ராஜிக்கும் கூட அதில் சந்தோஷமே.

‘ஹ்ம்ம், இப்படி ஒருவனாக கனகு ஏன் இல்லாமல் போனான்.... அப்பாவுமாகட்டும் நானும்தான் அவனை இப்படி இருக்க வேண்டும் என்று தானே நினைத்தோம்.... அப்படி எண்ணித்தானே அழைத்தோம், பொறுப்புகளை இதுபோலத்தானே கொடுத்தோம்..... எங்கே எது தப்பாகிப்போனது...? என வருந்தினாள்.

மருதுவை காணும்போது சபலபடட்டுமா என தளும்பிய மனதை வெகுவாக கட்டுப்படுத்த பாடுபட்டாள். இளம் பெண், அழகு அறிவு பண்பு படிப்பு எல்லாம் நிறைந்தவள்... தனிமை மிகக் கொடுமை... ஆனால், வளர்க்கப்பட்ட வளர்ப்பு அவளை தன்னைத்தானே கட்டுப்பாடாக வைத்திருக்க கற்றுத் தந்திருந்தது.

ஆனாலும் தத்தளித்துபோனாள் என்று தான் கூற வேண்டும். 

ஒரு நாள் மாலை நேரத்தில், அவள், நந்தவனத்தில், அவன் வந்திருக்கமாட்டான் என நினைத்து உலாவ வந்தாள். ஆனால் அவனோ அன்று மதியமே வீடு திரும்பி இருந்தான். வேலை ஒன்றும் அதிகம் இருக்கவில்லை.

மாலை ஐந்தாகப்போகிறது. கிணற்றடியில் ஜில்லென்று குளித்துவிட்டு, ஆற அமர காலாற நடக்கலாம் என்று அவன் குளித்து முடித்தான். அந்நேரம் அவள், பக்கவாட்டின் வழியாக பின்கட்டை அடைந்தாள்.

இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு தலையிலிருந்து ஈரம் சொட்ட துவட்டியபடி அவனை அங்கே கண்டாள்.... அவளுக்கு உடலெல்லாம் உதரலெடுத்தது... நாணம் கவ்விக்கொண்டது... “சாரி என்று கூறிவிட்டு சரேலென அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். ஆனாலும் அந்த கண நேரம், அவள் அவனை கண்ட காட்சி அவளை புரட்டிப்போடாமல் இல்லை... அவளின் இளமையை தட்டி எழுப்பாமலில்லை.

“பரவாயில்லை என்று அவன் கைநீட்டி எதோ சொல்ல எத்தனித்தான். அதற்குள்ளாகவே அவள் சிட்டென பறந்து வீட்டின் வெளியே வந்துவிட்டாள். படபடக்கும் நெஞ்சத்தை கையால் பிடித்துக்கொண்டாள்.... இதயம் வாய்வழியே வெளியே வந்துவிடுமோ என்பதுபோல அடித்துக்கொண்டது.... உடல் முழுவதும் குப்பென ஒரு வகை உணர்ச்சி.... அப்படியே விறுவிறுவென நடந்தவள் வீட்டில் நுழைந்து, தன்னறைக்குச் சென்றபின்தான் நின்றாள். தன்னைத்தானே அமைதிபடுத்திக்கொண்டாள்.... பானையில் இருந்து நீரை மொண்டு நிறைய குடித்தாள். ...அப்படியே முந்தானையையும் நனைத்து முகத்தை கழுத்தை துடைத்துக்கொண்டாள்.

அப்படியே பொத்தென தன் பால்கனியில் இருந்த ஊஞ்சல் நாற்காலியில் விழுந்தாள். இன்னமும் இதயம் ஒரு நிலைக்கு வராமல் அடித்துக்கொண்டுதான் இருந்தது. கண் மூடி அமர்ந்தாள்.... மூடிய கண்ணின் உள்ளிலும், அவனின் அந்த உருவம் தான் வந்து தட்டாமாலை சுற்றியது.

அந்த ஒரு கணம் அவள் நெகிழ்ந்து போய்விட்டாள். அதனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் தானே வெந்து தணிந்தாள்.

‘ஐயோ, நான் மணமானவள்.... நான் போய் இப்படி, வேறொரு ஆடவனைக் கண்டு இப்படி மனம் மயங்கி, ஒரு கணமேனும்... ச்சே என்னதிது, நான் இவ்வளவு கீழ்த்தரமானவளா...? என்று தன்னையே வெறுத்தாள்... கடிந்துகொண்டாள்.

ஆனால் அந்தக் காட்சி....

உழைத்து உரமேறிய கட்டான உடல்.... சிவப்பும் அல்ல கருமையும் அல்ல என்ற நிறம்.... திருத்தமான முகம் கூர்மையான கண்கள் எடுப்பான நாசி.... சுருளான கிராப்.... மார்பில் புரண்ட சங்கிலி.... அவளை சித்திரவதை செய்தது.... ஐயோ நான் இந்த அவதியில் ஏதேனும் குற்றம் செய்துவிடுவேனோ என தவித்தாள்.

முகத்தை கழுவிக்கொண்டு சஷ்டி கவசத்தை படித்தாள். மனது கொஞ்சம் அமைதியுற்றது.

‘இப்படி எத்தனை நாள் தவிப்பது... என பயம் வந்தது. ‘இவனை சீக்கிரமே இங்கிருந்து போகச் சொன்னால்தான் என்ன என்ற எண்ணம் கூட வந்தது.

அப்படி அவன் சென்றுவிட்டால் தங்களது நிலம், பண்ணைகள் தோப்புகள் கதி.... இப்போது அனைத்தும் பக்குவமாக நடந்துகொண்டு இருக்கிறது.... நல்ல அறுவடை, நல்ல பலன்... விவசாயிகளுக்கும் தங்களுக்கும் நல்ல லாபம்.... மனமும் நிறைந்திருந்தது.... வயிறு வாழ்த்தியது.... அது எல்லாம் பாழாகுமே. பார்க்கலாம். அவனாக ஆறு மாதங்கள் கழிந்த பின்னர் போக விரும்பினால் நிறுத்த வேண்டாம் போக விட்டுவிடலாம் என எண்ணிக்கொண்டாள்.

‘ஐயோ, அவன் சென்றுவிடுவானா...? என்ற திகில் புதிதாக மனதினை நிறைத்தது. படக் படக் என உள்ளே திடுக்கிட்டது மனம்.

சொல்லிக்கொள்ளவும் யாருமின்றி தவித்துப்போனாள் அந்தப் பேதை.

பொன்னி, அவளின் நிலை அறிந்தாலும் ஒரு அளவுக்கு மேல் என்ன பேச முடியும், எப்படி கேட்க முடியும்.... ஆயிரமே இருந்தாலும் எஜமானி அல்லவா.

அடுத்த நாள் அங்கே சென்று பூக்களை காணவும் பேசவும் கூட தயக்கமாக இருந்தது ராஜிக்கு. போகாமல் இருந்தாள். மாலையானதும் கை கால் தவித்ததுதான். ஆனாலும் அடக்கிக்கொண்டாள்.

ஆறு மணிக்கு மருது வீட்டை அடைந்தான். கொல்லென பூத்து குலுங்கின மல்லியும் ஜாதியும் முல்லையும்.

‘அட, என்ன இன்னிக்கி, உங்க ஆருயிர் தோழி வரலியா உங்கள பார்க்க, பறிக்காம விடப்பட்டிருக்கே...? என இவனும் பூக்களுடன் பேசியபடி கை கால் கழுவி வந்தான்.

பின்னோடு ஒரு பூக்கூடை எடுத்துவந்து பொறுமையாக பூக்களை பறித்தான்.... கூடை நிரம்பியது.... கை நிறைய மல்லிகைய எடுத்து தன் முகம் அருகில் வைத்துக்கொண்டு வாசனை முகர்ந்தான். மனம் எதையோ ஏங்கித் தவித்தது.... மனதுக்கு இனியவள் ஒருத்தியின் அருகாமைக்கு மனமும் உடலும் ஏக்கம் கொண்டது.... அப்படி வரப்போவது யாரோ என்றோ.... என எண்ணி இருக்கையில் அவனையும் அறியாமல் ராஜியின் முகம் கண்ணெதிரே தோன்றியது. புன்னகைத்துக்கொண்டாலும் இது தவறு என உடனே கண்டித்துக்கொண்டான்.

மல்லிகை வாசம் பிடித்தவன், அவற்றை கூடையுடன் தன் பைக்கில் வைத்துக்கொண்டு அவளது வீட்டை அடைந்தான்.

உள்ளே கால் தரிக்காமல் நடை பழகிய ராஜி, அவனது பைக்கின் சத்தம் கேட்டு தூக்கிவாரி போட்டு நின்றாள். ‘அவுகளா, இங்கேயா....? என தவித்தாள்.

வாசப்பக்கம் பொன்னி அவனை வரவேற்பது கேட்டது. மரியாதை நிமித்தம் வெளியே சென்றாள்.

கையில் பூக்கூடையுடன் அங்கே அவன் நிற்பதைக் கண்டாள்.

“இன்னிக்கி நீங்க அங்க வரல போலிருக்கே, உங்க தோழிக எல்லாம் உங்கள காணாம தவிச்சு போய்ட்டுது.... அதான், நானே பூக்களை பரிச்சுகிட்டு வந்தேன்.... இல்லேனா வீணாதானே போயிடும் என்று நீட்டினான்.

“ஐயோ, அதுக்குன்னு நீங்க சிரமப்படுவானேன்.... நான் அப்புறமா பொன்னிக்காவை அனுப்பலாம்னு நினைச்சிருந்தேன்.

“ஏன் வரல? என்றான் பூக்களை கொஞ்சம் எடுத்து முகர்ந்தபடி. 

“ஒண்ணும் இல்ல.... என்னமோ வேல இருந்தது
என சமாளித்தாள்.

“இல்ல, என்னைப் பார்த்த கூச்சத்தினால ஏற்பட்ட தடுமாற்றம்... என்றான் நேராகப்பார்த்து.

“ஆமா.... இல்ல... என உளறினாள்.

“இந்த தடுமாற்றங்கள எல்லாம் மூட்ட கட்டி வெச்சுட்டு, உங்களோட நந்தவனத்துக்கு எந்த கூச்சமும் இல்லாம நீங்க எப்போதும் போல வந்து போகணும்... அதான் என் வேண்டுகோள் என கூறிவிட்டு “நான் வருகிறேன் என்று விடைபெற்றான்.

“சாப்பிட்டு போலாம் என்றாள்

“இருக்கட்டும், நான் வரேன்... அங்கே சாப்பாடு வந்திருக்குமே என கிளம்பிவிட்டான்.

அவன் தந்த பூக்குடலையை எடுத்து வாசம் முகர்ந்தாள். மனம் நிறைந்துதான் இருந்தது.

மல்லிகையின் வாசம் நெஞ்சை அடைத்தது. அதை பக்குவமாக கோர்த்து தலையில் அணிந்து கொண்டாள். மல்லிகைச் சரம், அவள் முதுகிலும் தோள்களிலும் முகத்திலும் ஒட்டி உறவாடியது.... மனம் எங்கோ பறந்தது.... ஏக்கம் தாபம் அவளை கொன்றது.

இப்போதெல்லாம், நந்தவன வீட்டுக்கு இரவுச் சாப்பாடு செல்கிறது என்று துவங்கியபோதிலிருந்தே, வாரத்திற்கு ஓரிரு நாட்களானும் ராஜி நான் சமையல் செய்கிறேன் என உள்ளே வந்துவிடுகிறாள்.

“உங்களுக்கு எதுக்கு கண்ணு இந்த வேலையெல்லாம், அதான் நானிருக்கிறனே என்று சொன்னாலும் கேட்பதில்லை.

பொன்னிக்கு எதுவோ புரிவது போல இருந்தாலும் கேட்க முடியாமல் வாயடைத்து இருந்தாள்.

“நானும்தான் பெண்ணாச்சே பொன்னிக்கா, சமைக்க தெரிஞ்சிருக்க வேண்டாமா, நீங்களே எல்லாம் செய்து போட்டு கிட்டு இருந்தா நான் எப்போதான் கத்துக்கறதாம்? என்று சண்டை போட்டாள்.

பொன்னியின் உதவியுடன் தினுசு தினுசாக மாலை வேளை சமையல் அசத்தினாள். சிற்றுண்டியே என்ற போதும் வகைவகையாக சமைத்தாள். ருசிகரமாகவும் சமைத்தாள். 

“கதிர், உண்டுட்டு போலாம் இருங்க
என அவனையும் அமர்த்தி பரிமாறினாள்.

“என்ன இன்னிக்கி, சமையல் எல்லாம் பலமா இருக்கு? என அவன் கூட இவளை ஆழம் பார்த்தான்.

“சும்மா உக்கார்ந்திருக்க ஒரே போரா இருக்கு கதிர்... அதான் நான் சமைச்சேன்... நல்லா இருக்கா? என கேட்டுக்கொண்டாள் குழந்தை போல.

“ஏன் பொன்னிக்கா, அங்கே மருதுவுக்கு சாப்பாடு போயாச்சா, இல்ல.... இவ்வளவு நல்ல சமையலா இருக்கே, அதான் கேட்டேன் என்றான் சகஜம் போல.

“ஆங், அதெல்லாம் நேரத்தோட கந்தன் கிட்ட குடுத்தனுப்பீட்டாகளே சின்னம்மா என்றாள் அவளும் அர்த்தபுஷ்டியுடன்.

“ஓஹோ, அப்படியா... அப்போ சரி என்றான்.

அவன் கண்டுகொண்டானோ என அவன் முகத்தை ஆராய்ந்தாள் ராஜி. ஒன்றும் கண்டுகொள்ள முடியவில்லை.

“கதிர், அவுக...? என்று துவங்கினாள் ஒரு நாள்.

“யாரு மருதுவா? என்றான்.

“இல்ல இல்ல... என்றாள் அவசரமாக “அதான்.. என நிறுத்தினாள் அவனைப் பற்றி பேசவும் இஷ்டமில்லை, ஆனாலும் தெரிய வேண்டிய நிலை.... என்னவானாலும் கணவன்.

“ஓ கனகராஜா, ஆங்.... விசாரிச்சுட்டேன்.... இன்னும் ஒரு மாசத்தில வெளியே வந்துருவான் போல.. என்றான் எரிச்சலுடன்.

அதுவே நல்ல சந்தர்ப்பம் என்று பேசத் துவங்கினான்.

“ராஜேஸ்வரி, அது சம்பந்தமாத்தான் நானும் உங்கிட்ட பேசணும்னு... என்றான்.

“என்ன சொல்லுங்க? என்றாள்

“எத்தன நாளைக்கும்மா...  இப்படிபட்டவனோட பேருகாச்சும் பொஞ்சாதிய இருக்கணும்னு உனக்கென்ன தலை எழுத்தா....

“உனக்கென்ன அழகில்லையா வசதியில்லையா குணமில்லையா படிப்பில்லையா... போதும்னு இவன விவாகரத்து பண்ணிட்டாதான் என்ன... போதுமே நீ பட்டது இல்லியா....

“வேற நல்லவனா பார்த்து பிறகு மறுகல்யாணம் பண்ணிகிட்டா, நீயும் நிம்மதியா சந்தோஷமா இருப்பே.... பெரியய்யா ஆத்மாவும் சாந்தியடையும் இல்லியா? என்றான். அவள் திடுக்கிட்டாள்.

“என்ன கதிர் நீங்க சொல்றது.... நாம இருக்கறது கிராமத்தில, பட்டினத்தப் போல பிடிக்கலைனா சட்டைய மாத்தகிற மாதிரி புருஷன மாத்திக்கவா முடியும்....?

“என் தலை எழுத்துன்னு நான் சொல்லி அதை பொலம்ப விரும்பல... ஆனாலும், கட்டிகிட்டாச்சு. போன தடவையே அவுக என்ன ஆகாத்தியம் பண்ணினாக.... எங்கப்பா அத்து விட்டுடுங்கன்னு சொன்னதுக்கு, நீங்களும் பார்த்தீங்கதானே.?


2 comments:

  1. Title வந்து விட்டது கதையில்..

    ReplyDelete
  2. Now both the hearts will brood over this and hope they start beating together.

    ReplyDelete