Friday, 13 July 2018

NENJIL KODI MINNAL 10

“பொன்னிக்கா, நாலு பொண்டுகள புடிங்க, அங்கன பள்ளிக்கூடத்தில பெருவாரியான ஜனம் பட்டினியா வீடு வாசல இழந்து நிக்குதுக்கா. அவங்க பசியாறணும்.... கதம்ப சாதமா வடிச்சு போடச் சொல்லி சாமான நம்ம வீட்டு கிடங்குலேர்ந்து எடுத்து குடுங்க..... வயலில வரப்பில அணைக்கட்டுல, நிறைய பேர் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்க.... அங்க, இந்த மழையில, ராத்திரி நேரத்தில டாக்டருங்க நர்சுங்க வந்தாங்களோ இல்லியோ.... நான் ஒரெட்டு போய் பார்த்துட்டு வரேன் என அந்த அவசரத்திலும் தன் பட்டுப் புடவையினை உதறிவிட்டு கையில் கிடைத்த பருத்தி புடவையை எடுத்து உடுத்திக்கொண்டு காரை வேகமாக ஒட்டிச் சென்றாள். 

தலையை துவட்டக்கூட நேரமில்லாமல் அவள் பறந்ததைப் பார்த்து பொன்னிக்கு கவலை உண்டானது.

இவள் ஹாஸ்பிடலை அடைந்தாள். பக்கத்துக்கு டவுனிலிருந்து, அவசர நிலையாக, மேலும் டாக்டர்களும் நர்சுகளும் வரவழைக்க ஏற்பாடு செய்தாள்.

“என்ன டாக்டர் குமார், இங்கே நெலம எப்படி.... யாருக்கும் உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லியே? என்று கேட்டாள்.

“இல்ல மேடம், இப்போதைக்கு அப்படி ஒண்ணும் தோணல. ரெண்டு மூணு சீரியஸ் கேஸ் இருக்கு... ஆனா காப்பாத்தீடலாம்... அணைக்கட்டுல வேலை செய்யப் போனவங்கதான் நிறைய பேரு, சறுக்கி விழுந்து கையில காலிலன்னு அடிபட்டு வந்திருக்காங்க.

குளிர் ஜுரம்னு சில கேசுங்க புதுசா இப்போதான் வந்திருக்குது.... அத நினச்சாத்தான் கவலையா இருக்கு.... இது என்ன விஷ ஜுரமா என எண்ணத் தோணுது. இந்த மாதிரி மழை நாளில் இது சர்வ சாதாரணம்.... உயிரையும் கொண்டு போய்டும். ரத்த பரிசோதனைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்.... ரிசல்ட் வந்தா தெரியும் என்றார் அவர்.

“மேலும் ஹெல்புக்கு டாக்டர்ஸ் நர்சஸ் ஏற்பாடு பண்ணி இருக்கேன்.... ஒரு ஆம்புலன்சில அனுப்பறதா சொல்லி இருக்காங்க.... இந்நேரம் வழியில் இருப்பாங்கன்னு நினைக்கறேன், பார்த்துக்குங்க என்றாள்.
“மேடம் ஒரு வார்த்தை என்றார்.

“சொல்லுங்க.. என நின்றாள்.

“பம்பரமா சுத்தறீங்க சரி, ஆனா ரெயின் கோட் இல்லை... குடை கூட இல்லை.... நீங்க இவ்வளோ சொட்ட சொட்ட நனைஞ்சு, அதனால படுத்துட்டா இவங்களையெல்லாம் யாரு பார்க்கறது..... ப்ளீஸ், உங்களை பாதுகாத்துக்கோங்க என்றார் உரிமையுடன்.
“தாங்க்ஸ் டாக்டர். நான் பார்த்துக்கறேன் என்றாள்.

அங்கிருந்து சென்று குடிசை வாழ் பகுதியில் யாரேனும் இன்னமும் அவதியில் மாட்டிக்கொண்டுள்ளனரா என பார்க்கச் சென்றாள். சேரும் சகதியுமாக குழம்பி நின்று காலை வாரி விட்டது. சறுக்கி விழப்போனவளை சட்டென கந்தன் பிடித்து நிறுத்தினான். ஆயினும் காலில் பலத்த சிராய்ப்பு ஏற்பட்டது, எரிந்தது.

அதை மதிக்காமல் அங்கேயே சுற்றி வந்தாள்.

“இங்கே யாரும் இல்லீங்க சின்னம்மா.... எல்லோரையும் பள்ளிக்கோடத்துக்கு மாத்தியாச்சுதுங்க.... நீங்க கிளம்புங்க மா.... நெலம கட்டுக்குள்ள வந்துருச்சு.... இனி நாங்க பார்த்துக்கறோம் என்றான் கந்தன்.

“இருக்கட்டும் கந்தா, அறுவடையான நெல்மணிகள் எல்லாம் கோடவுனுகுள்ள கொண்டுதான்னு தெரிஞ்சுகிட்டா நிம்மதி. அதேபோல டாக்டர்சும் வந்து சேர்ந்துட்டா நான் வீட்டுக்கு போறேன் என்று மீண்டும் சுற்றி வந்தாள்.

அதற்குள் செய்தி கேட்டு கதிர் பதறி அடித்துக்கொண்டு வந்து சேர்ந்தான்.
“எப்படி வந்தீங்க இந்த மழையில?
என்றாள். 

“லாரி பிடிச்சு மெயின் ரோட் வர வந்தேன்.... அப்போதான் இந்த ஆம்புலன்ஸ் இங்கேதான் வருதுன்னு பார்த்தேன்... அதில ஏறி ஊருக்குள்ள வந்துட்டேன்.... ஆம்புலன்ஸ் ஹாஸ்பிடலுக்கு போயாச்சு.... எல்லாம் கேள்விபட்டேன்... அவங்க பொறுப்பெடுத்துப்பாங்க நீங்க போங்க, இனி நான் பார்த்துக்கறேன். இப்படி சொட்ட சொட்ட நனைஞ்சுகிட்டு மழையடியில சுத்தினா ஜுரம் வந்துடும்
என்றான்.
“இருக்கட்டும்., பார்த்துகிட்டு போறேன் என அங்கேயே நின்றாள்.

“ப்ளீஸ் ராஜேஸ்வரி என்றான்.

சரி என வீட்டை நோக்கிச் சென்றாள்.

ஓயாமல் மழையில் நனைந்து, உடம்பில் குளிர் ஊறி கண்கள் எரிந்தன. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. மத்தியானம் உண்டது.... காலி வயிறு, மழை, குளிர், மயக்கம் என வாட்டியது. காலும் கையும் கெஞ்சின. ஒருவழியாக கதிர் திட்டியதால் வீட்டை அடைந்தாள்.

தன் அறைக்குச் சென்று, ஒரு சொம்புவிட்டு குளித்துவிட்டு, துணி மாற்றுகையில் அங்காங்கே சிராய்ப்பு எரிந்தது. டெட்டால் கொண்டு சுத்தம் செய்து தன்னிடம் கண்ட மருந்தை தடவிக்கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.

வாய்க்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. பள்ளியில் பசியும் பட்டினியுமாக பார்த்த முகங்கள் வயிற்றை பிசைந்தன.

“பொன்னிக்கா என குரல் கொடுத்தாள்.

“என்ன கண்ணு, வந்துட்டீகளா, வாங்க சாப்பிடுங்க என்றாள் அவள் வந்து.

“அவங்களுக்கெல்லாம் சாப்பாடு போயாச்சா? என கேட்டாள்.

“என்ன பொண்ணும்மா நீங்க. எல்லாம் வண்டியில போட்டு அனுப்பியாச்சுது. அதிகமாகவே அனுப்பி இருக்கு கண்ணு..... ரெண்டு வாய் சாப்பிட்டு போய் படுங்கம்மா.... ஒடம்புக்கு எதாச்சும் வந்துடப் போகுது என உரிமையுடன் திட்டி சாப்பிட வைத்தாள். நாலு வாய் கூட உண்ண பிடிக்காமல் வாய் கசந்தது.

“வேண்டாம் பொன்னிக்கா, வாய்க்கு என்னமோ போல இருக்கு.... பால் குடுங்க சூடா என்று தன்னறைக்கு சென்று விட்டாள்.

“ஐயோ, இவுகளுக்கு உடம்புக்கு எதுவும் வராம இருக்கணுமே என்ற கவலையுடன் பாலை எடுத்துக்கொண்டு அவளது அறைக்குச் செல்ல கோழிக்குஞ்சாக சுருட்டிக்கொண்டு படுக்கையில் விழுந்து கிடந்தாள். அழைத்தாலும் பதிலில்லை. துவண்டு உறங்கி போயிருந்தாள். மயக்கமா தூக்கமா என அறியாத நிலை.

பாலைக்கூட குடிக்கலையே, என்ன செய்வது என அங்கேயே மூடி வைத்தாள்.
கதவை ஒருக்களித்து வைத்து முனியனிடம் வந்தாள்.

“மாமா, நான் சின்னத போட்டுக்கிட்டு சின்னம்மா அறைக்கு வாசல்லையே படுக்க போறேன் செத்த நேரம்.... நீயும் நாலுவாய் சாப்பிட்டு வேல முடிஞ்சா வாசல்ல முடங்கு..... அம்மா நிலம ஒண்ணும் சரியா படல.... ரெண்டு வாய் கூட சாப்பிடல.. என்றாள்.

“சரி சரி போ போ, முதல்ல அவுகள பாரு, போ என அனுப்பி வைத்தான்.

அப்போதே மணி இரவு ரெண்டு என்றது.

அதிகாலை ஆறு மணிக்கு எழுந்தாள் பொன்னி.

உள்ளே எட்டிப் பார்க்க அப்படியே மயங்கிய நிலையில் கிடந்தாள் ராஜி. மெல்ல முனகல் கேட்டது. அருகில் சென்று நெற்றியில் கைவைக்க உடம்பு நெருப்பாக கொதித்தது.

“ஐயோ ஆத்தா, நான் என்ன பண்ணுவேன் என பதறி போனாள்.

வெளியே ஓடி பெரியவரை அழைத்து, பதைத்தபடி ராஜியின் உடல்நிலை குறித்து கூறினாள்.

“என்ன அப்படியா ஒடம்பு நெருப்பா கொதிக்குதா... ஐயோ என அவரும் அவளது உள்ளே ஓடினார். சுருண்டு நத்தைபோல கிடந்தவளின் அனத்தல் கேட்டபடி இருந்தது. அருகே சென்று அவரும் தொட்டு பார்க்க துடித்து போனார்.

“கதிரு, கதிர் வந்தானா புள்ள பொன்னி? என்றார். 

“இன்னும் காணலைங்களே.... நான் எம்மாமன அனுப்பறேங்கய்யா, டாக்டர இட்டார சொல்லி
என வசபக்கம் ஓடினாள்.

“மாமா ஜல்தியா வா.... ஓடு, ஓடி போய் நம்ம ஆஸ்பத்திரி டாக்டர இட்டா.... அம்மாவுக்கு ரொம்ப காய்ச்சலா இருக்குது, அனத்தலா இருக்கு என விரட்டினாள்.
“அட, என்ன புள்ள சொல்றே, தோ என அவன் சைக்கிளில் பறந்தான்.

டாக்டர் குமார், அப்போதுதான் இரவு முழுவதும் அனைவரையும் கவனித்துவிட்டு சற்றே கண் அயரலாம் என கிளம்பிக் கொண்டிருந்தார்.

“அப்படியா சேதி, நான் நேத்தே சந்தேகப்பட்டேன். ஓயாம மழையில அலைஞ்சாங்க மேடம் என அவரும் தன் மருந்து பெட்டியுடன் விரைவாக வந்தார்.

அவளை சோதித்ததில் மிகவும் வீக்காக இருப்பதும் ஜூரமும் அதிகமாக இருப்பதையும் கண்டார்.

“ஐயா, சின்னம்மாவ ஹாஸ்பிடல்ல சேர்க்கறது நல்லது.... ரொம்ப சோர்வா இருக்காங்க... ஜூரமும் அதிகமா இருக்கு. உடனே குறைக்கணுங்க என்றான் பவ்யமாக.

“ஐயோ, என்ன டாக்டர் சொல்றீங்க.... எம் புள்ளைக்கு ஆபத்தொண்ணுமில்லியே? என்று பதறினார் ராஜலிங்கம்.

“அப்படி ஒண்ணும் இருக்காதுங்க.... அங்க கொண்டு போய் கொஞ்சம் டெஸ்டுங்க பண்ணி பார்த்துடலாம். விஷ ஜுரமா இருந்தா ரொம்ப ஜாக்ரதையா பார்த்துக்க வேணும் என்றார்.

“ஆத்தா, இது என்ன சோதனை? என கண்ணீர் மல்க, “சரி டாக்டர். பொன்னி, ஏற்பாடு பண்ணு.... கந்தன வண்டிய எடுக்கச் சொல்லு... கூட்டிகிட்டு போயிடலாம் என்றார்.

துரிதமாக வேலைகள் நடக்க அப்போதுதான் சிவந்த கண்களும் கலைந்த தலையுமாக கதிர் அலைந்து திரிந்து உள்ளே வந்தான். ராஜலிங்கதிடம் ‘நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.... இனி எதுவும் பயமில்லை என கூறிவிட்டு ஓய்வெடுக்கலாம் என வந்தவன், வந்த காலோடு இந்த சேதி வர துடித்து போனான்.
“ஐயோ, என்னக்கா இது? என பதறி போனான். 

“சரி, ஹாஸ்பிடலுக்கு போயிடலாம் ஐயா, அதான் நல்லது
என உதவினான்.
அவனே வண்டியை ஓட்டினான்.

ராஜியை ஹாஸ்பிடலில் சேர்த்து உடனடி உதவிகள் செய்தனர்.
சலைன் ஏற்றப்பட்டது. ரத்த பரிசோதனைக்கு ஏற்பாடாகியது.

ராஜலிங்கம் கலங்கிப்போய் அங்கே வாச பெஞ்சில் அமர்ந்தார். ஹாஸ்பிடல் நிரம்பி வழிந்தது. எல்லோர் கண்ணிலும் சோர்வு, மழையின் தாக்குதல். ஆனாலும் சுறுசுறுப்பாக இயங்கினர்.

ராஜிக்கு ஒன்று என்றதும் எல்லோருமே பதைத்தனர்.

கதிர், பெரியவருக்கு தைரியம் சொன்னபடி அமைதியாக அவரருகே அமர்ந்திருந்தான். அவரது உடல் நிலைக்கு ஏதேனும் வந்துவிடுமோ என்பது அவனது அடுத்த கவலையாக இருந்தது.

‘ரத்த பரிசோதனை முடிவுகள் வர சிறிது நேரமாகும், ராஜலிங்கம் வேண்டுமென்றால் வீட்டிற்கு போகலாம்.... தான் போன் செய்து விஷயத்தை பகிர்ந்துகொள்வதாக கூறினார் டாக்டர்.

“இல்ல டாக்டர். என்னால என் தங்கத்த விட்டுட்டு வூட்டுக்குப் போவ முடியாது.... நான் த, இங்கனயே இருக்கேன்.... நீங்க பொறுமையா செய்ங்க.... எம்மவள எனக்கு பத்திரமா திருப்பி குடுத்துடுங்க, அது போதும் என கை எடுத்து கும்பிட்டார். 

குமார் பதறி போனார்.
“ஐயா, என்னங்கைய்யா... நீங்க இப்படி சின்னப் பிள்ள மாதிரி... அப்படி எல்லாம் ஆபத்தான கட்டம் எதுவும் இல்ல.... எதுக்கும் இருக்கட்டும்னு தான் இந்த பரிசோதன... என்று தேற்றினான் அவர் அருகே வந்து அவர் கைகளை பிடித்தபடி.

“நின்ன இடம் நிக்காம சுத்திச்சு புள்ள.... ராவெல்லாம் இந்த மழைதண்ணியில அலைஞ்சுச்சு .... சொன்னா கேட்டாதானே என கதிரிடம் புலம்பினார்.

“ஆனா கதிரு, இங்க நெலம கேள்விப்பட்டதும் என் தாயி எப்படி மழையில தன்னந்தனியா வண்டிய ஓட்டிகிட்டு பறந்து வந்துட்டா தெரியுமா..... இந்த ஊருன்னா நம்ம மக்கனா அவளுக்கு அம்பூட்டு உசிரு என சிலாகித்துக் கொண்டார்.

“ஆமாங்கைய்யா இந்த ஊர் மேல சின்னம்மாவுக்கு தனி பிரியம்தான் என்றான் அவன் ஆறுதலாக.

“நல்லவேள, நீ நேரத்தோட வந்து பொறுப்பெடுத்துகிட்ட, இல்லைனா அந்த நேரத்துக்கு கூட அவ வூட்டுக்கு போயிருக்க மாட்டா என புன்னகைத்தார்.

இரண்டு மணி நேரம் கழித்து அவளுக்கு நினவு திரும்பியது. சுரமும் குறைந்திருந்தது. ரத்த பரிசோதனை முடிவுகளும் வந்தன.

“விஷ ஜுரம் இல்லை, ஆனாலும் வைரல் இருக்கு.... ரொம்ப ஜாக்ரதையா பார்த்துக்கணும்..... வெளியே அங்கே இங்கே அலையவே கூடாது.... ஒரு வாரமானும் பெட் ரெஸ்ட் எடுக்கணும்.... ரொம்ப சோர்வா இருக்காங்க.... டானிக் எழுதறேன், தினமும் எடுத்துக்கணும்.

“நல்ல ஆகாரம், பழம்,பாலு, கீரைன்னு குடுங்க.... உடம்பு தேரணும்.... ஒரே நாள்ல இந்த வைரல் அப்படிதான் சோர்வாக்கும் என்றார் குமார்.

“எல்லாம் அப்படியே செய்யறோம்.... நீங்க எழுதி குடுங்க டாக்டர் என்றார். அதன்படி சகலமும் வாங்கப்பட்டது.

“இன்னிக்கி நாளைக்கு இங்கேயே இருக்கட்டும், என்னங்கையா பரவாயில்லையா? என கேட்டார்.

“கண்டிப்பா, உங்களுக்கு தெரியாதா டாக்டர், எது நல்லது கெட்டதுன்னு என்றார்.
“ராவைக்கு யாராச்சும் தங்கணும் எம் பிள்ளையோட என தவித்தார்.

“வேண்டாங்க, நர்ஸ் இருக்காங்க பார்த்துப்பாங்க என்றார் குமார்.

“ஐயோ, நான் சின்னம்மாவ விட்டுட்டு எங்கேயும் வர மாட்டேன்... நானிருக்கிறேனுங்கைய்யா என்றாள் பொன்னி.

“அது சரி, ராவும் பகலும் இருக்க முடியுமா பொன்னி.... அதான் நர்ஸ் இருக்காங்கனு சொல்லுறாரே? என்றார்.

“இருக்கட்டுங்க, அவங்க நேரம் பாத்து மருந்து மாத்திர குடுக்கட்டும்.... படிப்பறிவில்லாத ஜெம்மங்க.... அதெல்லாம் நமக்குத் வராது....

“அதைத்தவிர மத்தபடி நான் இருந்து கண்போல பாத்துப்பேனுங்க என்றாள் கேவியபடி.

“சரி சரி நீ அழுவாத புள்ள.... அப்படியே பாத்துக்க உங்க சின்னம்மாவ என்றார் மனம் நிறைந்த சிரிப்புடன் ராஜலிங்கம்.

“ரொம்ப நல்ல வேல செஞ்சீங்கக்கா என கதிரும் மெச்சிக்கொண்டான்.

அந்த இரண்டு நாட்களும் அவள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகரவில்லை.... வீட்டில், அவளின் பெரியம்மா மீனாக்ஷி, வந்து சமைத்து பெரியவர்களுக்கு போட்டு ஹாஸ்பிடலுக்கும் குடுத்தனுப்பினாள்.

ராஜி அன்ன ஆகாரம் இல்லாமல் கிடந்தாள். சலைன் ஏறியபடி இருந்தது. இட்லி கஞ்சி போன்றவை போதும் இன்று, என கூறிவிட்டார் டாக்டர்.

பொன்னி ஏதோ உண்டேன் என உண்டாள்.

கந்தன் ஹாஸ்பிடலுக்கும் வீட்டுக்கும் என அலைந்து கவனித்துக்கொண்டான்.

கதிர் ராஜலிங்கத்தின் மேல் ஒரு கண் வைத்தபடி அங்கேயே வீட்டில், சற்று கண் அசந்தான். 

“எனக்கு ஒண்ணுமில்ல கதிரு, நீ உறங்கு பா இன்னும் கொஞ்சம்
என்றார்.

“பரவாயில்லீங்கைய்யா, நீங்க ரெஸ்ட் எடுங்க என அவரை படுக்கவிட்டான்.

இப்படியாக இரண்டு நாட்கள் ஓட ராஜிக்கு முகத்தில் தெளிவு பிறந்தது.


1 comment:

  1. Romba super and gripping!!! Cant wait for the devil to come back and show his true colors!

    ReplyDelete