Friday, 28 February 2020

MANGALAM MAMI - 4மங்களம் மாமி – 4
மங்களம் வைத்தியுடன் வெளியே கிளம்பி கொண்டிருந்தார்.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தார் வைத்தி ,கார் பின் சீட்டில்.
என்னதிது இப்படி பார்த்துண்டு…?’ என கண்ணாலேயே கண்டித்தார் மங்களம். கார் டிரைவர் வேறு இருக்கிறான் என கண் ஜாடை செய்தார். வைத்தி சிரித்துக்கொண்டார்.
கார் கண்ணாடியை தாண்டி வேடிக்கை பார்க்க, மனம் எங்கோ லயித்தது. நினைவலைகள் ஓடிவந்து குளிர் மேகமாக சூழ்ந்து கொண்டது. அவளை ஒரு நொடி திரும்பி பார்த்து புன்னகைத்தவர் அவள் விரல்களோடு தன் விரல்களை பிணைத்துக்கொண்டு மீண்டும் கனவுலகில் லயித்து போனார்.
அவரது புன்னகைக்கும் அந்த விரல் பிணைப்புக்கும் அர்த்தம் புரிந்த மலர்ச்சியுடன் சிறு வெட்க சாயல் பூச மாமியும் வெளியே பார்த்தாள் அவருக்கும் தான் மலரும் நினைவுகள்.
வைத்தி மணமாகி சில வருடங்களிலேயே பெரிய வக்கீல் ஒருவரிடம் ஜூனியராக வேலை பழகத் துவங்கிவிட்டான்.
அவனது புத்தி கூர்மை சூட்சுமம் பெரியவரை அசைத்து பார்த்தது. ‘கிருஷ்ணமாச்சாரி, பார் அட் லா’ - யாரையும் லேசில் அருகில் சேர்க்காதவர், சட்ட விஷயங்களில் புலி. அந்நாளைய டைகர் வரதாச்சாரி போன்ற பெயர் பெற்ற வக்கீல்களுக்கு சமமானவர்.
ஆனால் வைத்தியிடம் அதீத பிரேமை. ஏதோ சொல்லொணா பந்தம் ஏற்பட்டுப் போனது. கிரிமினல் வக்கீல் கிருஷ்ணமாச்சாரி என்றால் சட்டமன்றமே நடுங்கும். ஜட்ஜே கூட கொஞ்சம் தன் லா பாயிண்டுகளை சரிபார்த்து கொண்டுதான் வந்து அமர்வார்.
அப்படிப்பட்டவர் ஏதேனும் சந்தேகம் இருந்தால் வைத்தியிடம் கேட்டு தெளிந்து கொள்வார். அவருக்கு தெரியாது என கேட்பதல்ல... வைத்தியின் புத்திசாலிதனத்தை தூண்டிவிட்டு அந்த விளக்கு பிரகாசிப்பதில் ஒரு தனி பெருமை. அதனால் அவனிடம் ஒரு வாஞ்சை. அவருக்கு இரு மகள்கள்தான் மகனில்லை.
வாயால் சொல்லாமல் போனாலும் வைத்திதான் அவருக்கு மகன் போல என்ற எண்ணம் அவருள் இருந்தது. அவராத்து மாமிக்கும் அதே வாஞ்சை உண்டு.
“வைத்தி, இரு போய்டாதே என்ன.... இன்னிக்கி பாயசம் பண்ணேன் கொடுத்தனுப்பறேன்” என ரகசியமாக வந்து சொல்லிவிட்டுப் போவார் காதருகில்.
அதை ஏதோ குத்தம் போல சிம்மம் பார்க்கும்.... கண்ணால் எரிக்கும். அதே சமயம் மாமி கொடுக்கவில்லை என்றால்,
“ஆமா இந்நிக்கென்ன விசேஷம், பாயசம் பண்ருகே... வைத்திக்கு தரலை போலிருக்கே?” என டைனிங் டேபிளை அதிர வைத்துவிடுவார்.
‘உக்கும், இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல... பாருடி வசந்தி, நான் சாப்டுட்டு போடா னு வைத்திட்ட சொன்னா அங்க என்னை கொல்றாபோல ஒரு பார்வை... இங்கே வந்து கொடுக்கலைன்னு குற்றப்பத்திரிகை. இவரோட நான் என்னத்த பண்ண...” என மொவாகட்டையை தோள்பட்டையில் இடித்துவிட்டு நமுட்டு சிரிப்புடன் உள்ளே சென்றுவிடுவார். பெரியவர் புன்னகைத்துகொள்வார்.
அப்படிப்பட்ட ஒரு தனிப்பட்ட பந்தம்.
அவர் வீட்டு கொலுவிற்கு என இவர்களை மாமி அழைத்தார்.
“சாயந்தரம் ரெடியா இரு மங்களம், நான் வந்து அழச்சுண்டு போறேன். பளிச்சுன்னு டிரஸ் பண்ணிக்கோ என்ன... அவா பெரிய வக்கீல். என் சீனியர்... நோக்குதான் தெரியுமே. ஜம்முனு போகணும்” என கூறிவிட்டு சென்றார். அப்போது மங்களத்திற்கு இருபதே ஆகவில்லை.
இவளுக்கோ என்ன செய்வது ஜம்முனுன என்ன... எப்படி அலங்காரம் பண்ணிக்கணும் ஒன்றும் தெரியவில்லை. மாமியாரை போய் கேட்டாள்.
“பளிச்சுன்னு பண்ணிக்கோனு சொன்னானா வைத்தி. ஆமா, அவா இருக்கப்பட்ட பெரிய வக்கீலாத்து குடும்பம். பளிச்சுனு அகல கரை பட்டு பொடவை கட்டிக்கோ” என அவருக்கு தெரிந்ததை சொன்னார்.
மங்களமும் முகம் அலம்பி பௌடர் டப்பாவில் தடுக்கி விழுந்து பெரிய குங்கும பொட்டு வைத்து... தலை மழுங்க வாரி நீண்ட ஜடை பின்னி கூடை கதம்பம் வைத்துக்கொண்டாள். முடிவில் குஞ்சலம் வேறு.
அகலகரை குங்கும கலர் பட்டு புடவை எடுத்து அவள் சிறிய இடையில் சுற்றமாட்டாமல் சுற்றிக்கொண்டாள். பத்து கொசுவம் வந்தது. நீண்ட தலைப்பு வேறு இழுத்து முன்னே இடுப்பில் சொருகி கொண்டாள். கண்ணாடியில் பார்க்க ஏதோ குறைந்தது. பீரோவில் தூங்கிய கல் அட்டிகையும் காது ஜிமிக்கியும் எடுத்து போட்டுக் கொண்டாள்.
இப்போது திருப்தியானது. ஆக பட்டுபொடவ கடை பொம்மைபோல இருந்தாள்.
வைத்தி நேரமாகிவிட்டது என அவசரமாக வந்தார். இவளை கண்டவர் சிரிப்பதா அழுவதா எனத் தெரியாமல் முழித்தார்.
“இதென்னதிது அவதாரம். யார் நோக்கு இப்படி எல்லாம் ஐடியா கொடுத்தா... இல்லை நீயேவா?” என கேட்டார் சிரிப்பை அடக்கி.
“ஏன் நா, நன்னா இல்லையா... நாந்தான் பண்ணிண்டேன்” என்றாள் தீனமாக அப்போதே அழுகை முட்டியது.. அதை கண்டு தானும் சுதாரித்து “சரி சரி நாழியாச்சு.... இப்போ அழுது கண் மை வேற கரைஞ்சு பவுடர் கலங்கி..... வேண்டாமே. வா வா போலாம்” என அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.
அப்போது கார் இல்லை. அவனது லாப்ரடார் ஸ்கூட்டர். அதில் புடவை தலைப்பை இழுத்து சொருகி விழுந்துவிடாமல் பாலன்ஸ் செய்தபடி அவனை பிடித்துக்கொண்டு உயிரையும் கூடவே கையில் பிடித்துக்கொண்டு ஒருவாறாக அங்கே போய் சேர்ந்தார்கள்.
“வா வா வைத்தி, இதாரு இது... அதிசயமான்னா இருக்கு... வாடீம்மா மங்களம்” என அணைத்து இவளை உள்ளே அழைத்துச் சென்றார் வக்கீலாத்து மாமி. அவருக்குமே இவளை பார்த்து தஞ்சாவூர் தேர் நினைவு வந்தது. சிரிக்காமல் முகம் மறைத்தார்.
அவரது மகள்கள் இருவும் கூட ஏகதேசம் மங்களத்தின் வயசுதான். அவர்களுக்கோ இவளை கண்டு ஒரே சிரிப்பு.
“சூ, உள்ளே அழச்சுண்டு போங்கோ. மங்களம் நன்னா பாடுவியாமே ஒரு பாட்டு பாடு” என வேறு உந்திவிட்டார் அந்த மாமி.
மங்களத்துக்கோ ‘ஏன் சிரித்தார்கள்.... பாட்டா இப்போவா, பொடவை எப்போ அவிழுமோ... அவர் வேற சிரிச்சார்... இவா வேற எல்லாரும் கிண்டல் பண்றாபோல இருக்கு... நான் அவ்ளோ அசிங்கமாவா இருக்கேன்...?’ என உள்ளூர ஒரே வருத்தம் திகில் அழுகை.
பயந்தபடி வைத்தியை பார்க்க பாடு என ஜாடை செய்தான்.
சரி என அவனுக்கு பிடித்த ‘அலைபாயுதே கண்ணா’ பாடினாள். அவன் உருகி உருகி கேட்டு மகிழ்ந்தான். அவ்வப்போது அவன் ரசிக்கிறானா என ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டாள்.
அனைவருமே அவளது உருக்கத்தில் உருகித்தான் போயினர்.
“திருஷ்டி சுத்தி போடச் சொல்லு மங்கா, உம் மாமியார்ண்ட” என்றபடி தாம்பூலம் கொடுத்தார்.
டிபன் முடித்து வீட்டுக்கு திரும்பினர்.
“வைத்தி, பாவம் டா சிறிசு... அவ்வளவா வெவரம் தெரியல. பன்னண்டு வயசுல கல்யாணம் ஆயிடுத்தோல்லியோ... நீதான் இந்த காலத்து நாகரீகம் நடை உடை பாவனை எல்லாம் கத்து தரணம். உங்கம்மாக்கு வயசாச்சு அவளால இதெல்லாம் முடியுமா தெரியுமா சொல்லு.
வசந்தி ஜெயந்தியோட கொஞ்சம் பழக விடு. அவா கூட சேர்ந்து தானே கொஞ்சம் கொஞ்சமா கத்துப்போ” என்று வைத்திக்கு அட்வைஸ் செய்தார். அவனும் “சரி மாமி ரொம்ப தாங்க்ஸ்” என்றான்.
“அந்தாத்து மாமி உங்களண்ட என்னமோ தனியா பேசினாளே.... என்ன சொன்னா, நான் சரியா பாடலையா.... என்னாச்சு, எல்லாருமே என்னப் பார்த்து நமுட்டா சிரிக்கறாப்லவே தோணித்து நேக்கு?” என்று இரவின் தனிமையில் அவனிடம் கேட்டாள் மங்களம்.
“அப்படி ஒண்ணும் ரகசியமில்லை. நோக்கு இன்னும் அழகழகா டிரஸ் பண்ணிக்க சொல்லித்தர சொன்னா மாமி” என்றான்.
“அப்போ இன்னிக்கி நான் செரியா பண்ணிக்கலையா.
ஏன் நா, அவர் உங்க சீனியராச்சே அவா ஆத்துக்கு நான் தண்டமா வந்துட்டேனா, உங்களுக்கு அது பெரிய அவமானம் ஆயிருக்கும் இல்லியா... நான் என்ன பண்ணட்டும் நேக்கு இதேல்லாம பெரிசா பழக்கமில்லை...” என உதடு துடிக்க கண்கள் பொங்கிட அவன் மார்பில் தலை சாய்த்தாள்
“அசடு, என்னதிது... இப்படியா பேசுவா, கண்ண தொடை. நீ எந்த குத்தமும் பண்ணலை தப்பாவும் பாடலை. நோக்கென்ன.... ஜம்முனு பாடினாய். அவாவா அசந்து போய் கேட்டாளாக்கும் நானே பார்த்தேன் நேக்கு அதுல ரொம்ப பெருமை” என தேற்றினான்
“மாமி சொன்னது என்னனா இன்னும் நாகரீகமா டிரஸ் பண்ணிக்கணும்னு. அங்கே அவ பொண்கள பார்த்தியோன்னோ எப்படி இருந்தா ஜம்முனு ஸ்டைலா அலங்காரம் பண்நீண்டு.... அதுபோல அவாகிட்டேயே கூட நீ பேசி பழகி கத்துக்கலாம். ரொம்ப நல்ல மாதிரி ரெண்டு பேருமே. என் தங்கைகள் போலத்தான் அவாளும்” என்று உற்ச்சாகமூட்டினான்.
“நேக்கும் அவாள பார்த்த ஒடனே தோணித்து. இத்தனை அழகா இருக்காளே எப்படின்னு...” என்றாள் சங்கோஜ சிரிப்புடன்.
“அதுசெரி” என அணைத்துக்கொண்டான்.
அடுத்து வரும் வாரங்களில் சில முறை தானே அவளை டவுனுக்கு அழைத்துச் சென்று காலத்திற்கேற்ப துணிமணிகள், அலங்கார பொருட்கள் என வாங்கிக்கொடுத்தான்.
கலர் சாந்து பொட்டுக்கள், நகச் சாயம், கலர் கண்ணாடி வளையல்கள். லேசான முக பூச்சுக்கு லக்மே ரோஸ் பவுடர். பாண்ட்ஸ் ஸ்னோ,  கண்மை... என பலவும்.
சில உள்ளாடைகளும் வாங்கி வந்தான்.
“அய்யய்யே, என்ன நா இது, இதை எதுக்கு போட்டுப்பானேன், அசிங்கம்” என்று தூர தூக்கி போட்டாள்.
“மக்கு. இதான் இப்போ பாஷன். பேசாம எடுத்து வை, உபயோகபடுத்து” என்றான் கண்டித்து.
“முதுகெல்லாம் தெரியுமே” என முணுமுணுத்தாள் அவன் முறைப்பதை கண்டு வாய்மூடிக் கொண்டாள். பின் வசந்தியிடம் பேசி தெளிந்தாள்.
அப்போதே பிரபலமாகி இருந்த ஷிபான், மல் மல்  புடவைகள். க்ளாஸ் நைலான் புடவைகள் என சில வாங்கி குவித்தான்.
“என்னடா இது, ரொம்பதான் ஆம்படையாள தாங்கற...?” என தாயார் கூட கண்டித்தார்.
“அம்மா நான் வளர்ந்து வர்ற வக்கீல். நாலு இடம் பெரிய மனுஷாளோட போக வர இருக்கும், அவளும் என் கூட வரணும் இல்லியா, இதெல்லாம் அவசியம் மா” என்று அவரை அடக்கினான். கூடவே ரெண்டில் ஒன்று உடன் பிறந்த சகோதரிக்குமே வாங்கி வந்தான் தான்.
வசந்தி ஜெயந்தியுடன் சேர்ந்து சில நாள் பேசி பழகினாள் மங்களம். அவர்கள் லேசான பவுடர் பூச்சு அதன் மேல் கன்னமேட்டில் கொஞ்சமாக ரோஸ் பவுடர் பூசுவது கண் மை குச்சியால் நீட்டி கண்களை அழகு கூட்டுவது என குடும்ப பெண்ணிற்கு ஏற்ப ஆனாலும் மிகை படாமல் அலங்காரம் செய்துகொள்வதை அவளுக்கு கற்றுத் தந்தனர்.
குஞ்சலங்கள் இடம் மாறி கலர் கலர் ரிப்பன்கள அமர்ந்தன. சின்னாளப்பட்டியும் ஆரணியும் மாறி ஷிபான், க்ளாஸ் நைலான் இடுப்பில் வழுக்கியது. பிச்சோடா கொண்டை தளர்ந்து உயர தூக்கி பன் வைத்து மூடி மறைத்த கொண்டைகள் உருமாறியது.
கூடை கதம்பம் மாறி ஒற்றை சரம் மல்லிகை அல்லது காதோரம் ஒற்றை, இரண்டு ரோஜாக்கள் வந்தமர்ந்தன.
கையில் ரிஸ்ட் வாட்ச் கட்ட பழகினாள். அவ்வப்போது அது வேலை செய்கிறதா என காதோரம் வைத்து கேட்டாள். அதன் இதய துடிப்பு போல டிக் டிக் சத்தம் கேட்டு புன்னகைத்தாள்.
நக ஓரங்களில் கலர் கலராக பட்டாம்பூச்சி போல சிவப்பும் ரோசுமாக நகப்பூச்சு மின்னியது.
பின் கழுத்து கொஞ்சமாக இறக்கி ப்ளவுசுகள் தைக்கப்பட்டன.
“என்னடி இது கருமம்.... பாதி முதுகுக்கு இருக்கு ரவிக்கை, இதென்னதிது என்னமோ உள்ள, இத்தனை சின்னதா, முதுகு தெரியறாப்ல?” என அன்னை அடுத்து காணும்போது வ்ளாசி தள்ளிவிட்டாள்.
“கையில என்னடி இது.... மருதாணி அழகு இந்த கருமத்துக்கு வருமோ?” என்று தலையில் அடித்துக்கொண்டாள். காலில் பார்த்த ஜரிகை செருப்பு கொஞ்சமே கொஞ்சம் ஒரு இன்ச் ஹில் கொண்டதை கண்டு, “உருப்பட வழியில்ல கொழந்த” என இரைந்தார்.
“இல்லேமா அவர்தான் இதெல்லாம் வாங்கீண்டு வந்து போட்டுக்க சொன்னார்” என்றாள் பயந்தபடி.
“நன்னா இருக்கு, அவர் சொல்வார்தான். ஆம்பளைகள் பலதும் சொல்வா செய்வா. நாலு இடம் போறவா பார்க்கறா... அதே எண்ணம். நமக்குனா இருக்கணும் அடக்கமும் நாணமும். இழுத்து போத்தீண்டு போறது தான் நம்ம பண்பாடு” என குழப்பினார். மங்கா மண்டை கொழம்பியது. அம்மா சொல்வது சரியா அவர் சொன்னதை கேட்கணுமா என தெரியாமல் துவண்டாள்.
வைத்தியிடம் சொல்லி அழுதாள்.
“அம்மா ஒரேயடியா திட்டி தீர்த்துட்டா நா” என்று
“போறது, அம்மாதானே உன் நன்மைக்குதான் சொல்லுவா. அவா அந்த காலத்து மனுஷா இல்லையாடா செல்லம்.... கொஞ்சம் அப்படிதான்.... மாற்றங்கள் அவாளுக்கு அதிர்ச்சியை கொடுக்கும்.
நீ அவாள பார்க்க போறச்சே கொஞ்சம் அவளுக்கேத்தாப்போல அலங்காரம் பண்ணிக்கோ. என்னோட எனக்கு ஏத்தார்போல வா. இதுல ஒரு குழப்பமும் வேண்டாம் டா. வயசாக ஆக நோக்கே இதெல்லாம் எடம் பொருள் ஏவல் பார்த்து சரியாய் நடந்துக்க தானாகவே வந்துடும்” என்று சமாதானாப்படுத்தினான்.
அப்படி படிப்படியாக மெல்ல தடுக்கி தடுமாறி பழகி கற்று தேர்ந்தாள் மங்களம்.
இதோ இப்போது வைத்தியினுடன் காரில் ஒரு முக்கியமான கல்யாண வரவேற்பிற்காக சென்று கொண்டு இருக்கின்றனர்.
மென் ரோஸ் நிற பெனாரஸ் மென் பட்டு. கையில் காதில் கழுத்தில் சன்னமான ஆனால் டாலடிக்கும் வைர நகைகள், நாகரீகமான லேட்டஸ்ட் டிசைனில்
உயர தூக்கி போட்ட டிசைன் பூ கொண்டை. அதைச் சுற்றி ஒரே ஒரு வட்டமாக செண்டு மல்லிகை சரம். நெற்றியில் அளவான அழகான பெனாரஸ் நிற கலர் குங்கும பொட்டு வகிட்டில் குங்குமம். லக்ஷ்மி தாண்டவமாடினாள் அவள் முகத்தில். வைர பேசரி மூக்கில் ஜொலித்தது அழகுக்கு அழகு சேர்த்தது.
இப்போது வைத்தி அட்வகேட் ஜெனரல் ஆயிற்றே. ஜம்மென சூட்டில் இருந்தார். அவளை இன்னமும் அதே காதல் கண்களோடு நோக்கியபடி காரை விட்டு கீழிறங்கி உள்ளே சென்றனர். ஜோடி மீது பட்ட கண்கள் அனைத்தும் பிரமிப்பில் ஆழ்ந்தன.
மீண்டும் சந்திப்போம்.


Wednesday, 26 February 2020

இறைவனுடன் பேசிய தருணங்கள்இறைவனுடன்_பேசிய_தருணங்கள்
அவனில்லாமல் அணுவும் அசையாது அல்லவா!
அதை ஒவ்வொரு அணுவணுவிலும் முற்றிலுமாக உணர்ந்து இளகி நெக்குருகி திளைத்திருப்போரில் நானும் ஒருத்தி.
பேசாத நேரம்தான் எது... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நான் அவனிடம் பேசிக்கொண்டேதான் இருக்கிறேன். சிலருக்கு என்னை காண்கையில் இது லூசு னு கூட தோன்றுமோ என்னவோ.
ஆனால் அதுதான் நிஜம். சின்ன வயதில், இவை ஒன்றும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. இரண்டு வயது குழந்தையாக என் அன்னை என்னை இடுப்பில் தூக்கிக்கொண்டு என் மனதுக்கு உகந்த பிள்ளையாரின் ஆலையத்துக்கு அழைத்துச் சென்ற பலனோ... அவனே எனக்கு சர்வமும். பேசாத போற்றாத (திட்டாத, சண்டை போடாத) நாளில்லை. கற்றதும் பெற்றதும் அவனாலே. ஒவ்வொரு மூச்சு உள் எடுத்து வெளியேற்றுவது அவனாலே என நம்புபவள் நான்.
வாழ்வில் பலப்பல தருணங்கள் ஏதோ ஒரு உருவில், ஏதோ ஒரு விதத்தில் அவன் என் முன்னே நின்று என்னை வழி நடத்துகிறான்.
ஒரே ஒரு விஷயம் என... சில தருணம் என... எடுத்துக்காட்டுடன் சொல்ல தெரியாத அளவிற்கு நான் அவனது Divine Intevention ஆல் ஆட்கொள்ளப்பட்டவள்.
சொல்ல வேண்டுமெனில்... சின்ன வயது முதலே கலை என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். தமிழ் மீதும் பற்று கொண்டிருந்தேன். ஆனால் என்றேனும் ஒரு நாள், இதோ இதுபோல், நான் உங்கள் முன்னில் அவனைப்பற்றிய என் கட்டுரையை நானே எழுதி சமர்பிப்பேன் என நான் கனவிலும் நினைத்ததில்லை.
ஒரு நொடி நேர உந்துதலில் 2012 எழுதத் துவங்கினேன். எழுத வைத்தவன் அவன். அவன் தயவில் இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறேன். வரும் வெள்ளி என் தொடரின் அத்யாயம் என்ன என இன்று என்னை யாரும் கேட்டால் எனக்குத் தெரியாது. ஆனால் அதுவாக வரும்... தோன்றும், எழுத வைப்பான் அவன்... என் பரம்பொருள் என் வினைகளை தீர்க்கும் விநாயகன்.
இதெல்லாம் கற்பனை செய்யும் வேலை என வாதிடலாம், ஆம் கற்பனைதான்... அது எங்கிருந்து எப்படி நம் அறிவில் மனதில் உதயமாகிறது... இதுவரை படிக்காத விஷயங்களை, அறிந்திராத விஷயங்களை எப்படி கோர்வையாக எழுத முடிகிறது.. அதுதான் அது. சம்பவங்கள், நாயக நாயகி கதாபாத்திர பெயர்கள்..... அவ்வளவு ஏன், கதையின் one liner கூட யோசிக்காமல் எழுதத் துவங்கி இருக்கிறேன் சில நேரம். அவன் பிள்ளையார் சுழியிட்டு துவங்கி முடித்து கொடுத்திருக்கிறான்.
அதேபோல சொல்ல வேண்டுமானால் வானொலியின் கூட கூட பாட்டை முணுமுணுக்காதவர் யார்... அப்படி பாடத் துவங்கியது இத்தனை வருடங்களுக்கு பின் இந்த வயதில் ஓரளவு பலர் முன்னே பாடும் ஒரு திறமையாக வளர்த்தவன் பாட வைத்தவன் யார்...
“என்னை பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்”. ஆம் அவனே என் பாட்டுக்கும் தலைவன்.
முறைப்படி சங்கீதம் கற்கவில்லை, கற்றுக்கொள்ள முயற்சிக்கவுமில்லை. கட்டைகள் எத்தனை தெரியாது... கம்பிகள் எவை எனப் புரியாது. நான் பாடிக்கொண்டே இருக்கிறேன். ஜானகி அம்மாவாக சுசீலா அம்மாவாக அல்ல சுதாவாக மட்டுமே, எளிய முறையில் வகையில்.
இறைவனுடன் பேசிய தருணங்கள் –ஒரு சிறிய எடுத்துக்காட்டாக:
ஏதோ கொஞ்சம் பாடும் திறமையினால் பலப்பல முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருப்போரை எங்கள் குழு எங்களது இசையால் மகிழ்விக்க முயற்சி செய்கிறோம்.
அந்த சில நிகழ்சிகளில் நாங்கள் கண்ட நெகிழ்வு எங்களுக்கு, முக்கியமாக எனக்கு, இறைவனை பிரத்தியக்ஷமாக காட்டியது.
தள்ளாத வயது, முதுகு வளைந்து கேள்விக்குறியாக... குறுகிய தளர்ந்த உடல். தடி பிடித்தோ, மற்றோரின் உதவியோடோ அல்லது சக்கர நார்காலியிலோ வந்து அமர்கிறார்கள். நாங்கள் பாடுகிறோம்...
அவர்கள் கண்களில் பிரகாசம்... முகம் முழுவதும் மலர்ந்து பூத்த புன்னகை. சிலர் கண்களின் ஓரம் கசிவு. ecstacy... புளங்காகிதம் அடைகின்றனர்.
அருகே அழைத்து “மன்னாதி மன்னன் பாட்டு தெரியுமா, உத்தம புத்திரன் பாட்டு பாடுவேளா.... MGR பாட்டு SIVAJI பாட்டு...?” என எடுத்து கொடுக்கிறார்கள். முடிந்தவரை அனைவரது ஆசையையும் நிறைவேற்றுகிறோம்.
மதியம் அந்த இல்லத்திலேயே அமுது படைக்கின்றனர். தினசரி வீட்டு  சமையல்... ஆனாலும், அமுதமாக நெஞ்சை நிறைக்கிறது. வயிறு குளிர்கின்றது. ஏன்...
கல்யாண வீட்டில் கூட இந்நாளில் அத்தனை உபசரிப்பு கண்டிப்பாக இல்லை, காணாமல் போய்விட்டது. ஆனால் அந்த மனிதம் அன்பு உபசரிப்பு ஆத்மியம் அங்கே நிறைந்து நிற்கிறது. பார்த்துப் பார்த்து தள்ளாத வயதில் பரிமாறுகிறார்கள்.
“இன்னும் கொஞ்சம் போட்டுக்கொங்கோ, வயிறார சாப்பிடுங்கோ...”
மீண்டும் பாட்டு.
“அச்சிச்சோ அதுக்குள்ள முடிச்சுட்டேளே.... ராத்திரி வரைக்கும் கூட பாடி இருக்கலாமே...?” என ஆதங்கம் – அசலே நான்கு மணி நேரம் பாடியாகிவிட்டது.
“ராத்திரி இருந்து சாப்டுட்டு போயிருக்கலாம், எங்களுக்கும் இன்னமும் சந்தோஷமா இருக்குமே?” என ஆற்றாமை.
மீண்டும் வருகிறோம் என வாக்கு கொடுத்து விடைபெறும்போது அந்த தருணம் நான் சந்தித்த “இறைவனுடன் பேசிய அந்த தருணம்”.
பஞ்சாக நொந்திருக்கும் கைகொண்டு நம் கையோடு கை இணைத்து அமுக்கி பிடித்து “ரொம்ப நன்னா பாடினேள் மா எல்லாரும். நன்னா இருங்கோ” என் கன்னம் வருடி கண் வியர்த்து தலை மீது பட்டு கரம் வைத்து ஆசிகள் வழங்கும் அந்தத் தருணம்... அந்த ஸ்பரிசம் - உலகில் வேறெதுவுமே தேவையில்லை.
அன்று வீடு திரும்பி, பசி தூக்கம் சோர்வு களைப்பு அறியாது.... உடை கூட மாற்றத் தோன்றாது சுருண்டு கிடப்பேன். இறைவனை என்னை ஸ்பரிசித்ததால், அவன் என்னை வருடியதால்.... என்னை உச்சி முகர்ந்தான். கன்னம் வருடினான்.
“கட்டாயம் சீக்கிரமா வந்துடணும் என்ன, எங்களோட முழு நாள் இருக்கணும் என்ன, இங்கேயே சாப்பிட்டுடலாம்” – நம்மில் எத்தனை பேர் இந்த வார்த்தைகளை நம் உறவுகளிடமிருந்து சமீபத்தில் கேட்டுள்ளோம்... மனதை தொட்டு கேட்டுப் பாருங்கள்... நாம் இந்த சொற்களை சமீபத்தில் யாரிடமாவது மனமார கூறினோமா – என் சொந்த பதில் – இல்லை.
அவர்கள் வாழ்க்கையில் நொந்து போனவர்கள். எந்த ஆசையையும் இனி பூர்த்தி செய்து கொள்ள முடியாத தள்ளாமை. முடியாமை, சிலருக்கு நோய் நொடி வலி வேதனை. தனிமை. அவரவர் முகத்தையே தினமும் கண்டு சலிப்படைந்த நிலை. நாம் அங்கே சென்று அவர்களை ஏதோ கொஞ்சம் மகிழ்விக்கையில் ஏதோ அவரவரது சொந்தங்களே வந்து சந்தித்தைப்போன்ற ஒரு ஆனந்தநிலை.
“இன்னிக்கி நேரம் நன்னா போச்சு. நாளைலேர்ந்து திரும்ப சூனியம்” என அவர்கள் கூறும்போது நம் கண்கள் வியர்கின்றன.
ஒரு ரொம்ப அற்புதமான வரைபடம் உண்டு, நாம் அனைவருமே பார்த்திருக்கிறோம் – உலகின் இரு மூலையிலிருந்து இரண்டு கைகள் நீண்டு விரல்கள் ஒன்றை ஒன்று தொட முயலும் முனைகள் தீண்டும். அதே நிலை இங்கே - இறைவன் கையெட்டும் தூரத்தில், நம்மை ஸ்பரிசிக்க காத்திருக்கிறான்.
நாம் அவர்களுக்கு நம்மால் ஆன சந்தோஷத்தை கொடுக்க கை நீட்டுகிறோம். அவன் அவர்கள் மூலம் நம்மை மனமுவந்து ஆசிகளுடன் கருணையுடன் மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன் தீண்டுகின்றான்.
‘இது போதும் எனக்கு, இது போதுமே... வேறென்ன வேண்டும் இது போதுமே
நன்றி வணக்கம்.
(இதை இங்கே ஒவ்வொரு வார்த்தையையும் எழுத வைத்தவனும் அவனத்தான்)

Friday, 21 February 2020

MANGALAM MAMI - 3மங்களம் மாமி 3
“அம்மாடி, என்ன வெய்யில் இது, இன்னும் சித்திரையே பிறக்கல...” என அலுத்தபடி மங்களம் ஆத்துக்குள்ளே வந்து ஊஞ்சல்ல உட்கார்ந்தா. “அம்மா, இந்த மோர் தண்ணி கொஞ்சம் குடியுங்கோ, வெய்யிலுக்கு இதமா” என்றபடி கோகி கொண்டு குடுத்தாள்.
“சாப்பிடணுமேடி...” என்றபடி எடுத்து ஒரு மிடறு விழுங்கினார். பானை தண்ணீர் கலந்த ஜில்லென்ற மோர் தொண்டையை தாண்டி அமிர்தமாக இறங்கியது. பக்குவமாக உப்பிட்டு கொஞ்சமாக பெருங்காய பொடியும் கறிவேப்பிலை ரெண்டு ஜீரகம் என பதமாக கலக்கி இருந்தாள் கோகி எனும் கோகிலம்.
கோகி இந்தாத்துக்கு வந்ததே ஒரு அதிசயம், அசம்பாவிதமான சந்தர்பமும்தான்.
ஒரு பத்து பதினோரு வருடங்களுக்கு முன்னே ஒரு நா மங்களம் மாமி கோவிலுக்கு போயிட்டு வைத்தி மாமாவோட கார்ல ஆத்துக்கு வந்திண்டிருந்தா, ரெண்டு தெரு தள்ளி வர்றச்சே ஒரு மூலை குடிசை முன்னால ஒரே கூச்சலும் அமர்க்களமுமா இருந்துது. இவா ஆத்துல வேல பண்றவளும் இருக்க, மங்கா, “என்னடி ஒரே கூத்து?” என வண்டியை நிறுத்த சொல்லி கேட்டார்.
“ஐயோ அம்மா அத ஏன் கேக்கறீங்க” என காதோடு வந்து பக்கமாக ஓதினாள்.
“அடிப்பாவிகளா.... என்னடி உசிரோட விளையாடறேள், இதுல என்னடி வேடிக்கை உங்களுக்கு” என மாமி பதறி போனாள்.
“அட இல்லம்மா, யார் வீட்டுப் பொண்ணுன்னு தெரியல, யாருன்னு ஒரு தாக்கு தகவல் இல்லீங்கம்மா... அதான் ரோசனையா இருக்கோம்” என்றாள் இழுத்தபடி.
“போடி போக்கத்தவளே, நகரு” என இறங்கி அந்த குடிசையின் உள்ளே சென்றார் மங்கா. பார்த்தவர் அலமலர்ந்து போனார். நெஞ்சு துடித்துப்போனது. ‘இவளை முந்தாநா கோவில்ல பார்த்தேனே...’ என நினவு கூர்ந்தார்.
முந்தைய நாள் மாலை கோவில் சென்று சுற்றிவர வெளி பிரகாரம் திண்டருகில் யாரோ சுருண்டு மயங்கியதை போலத் தோன்ற சட்டென நின்றார் மங்கா. ‘யாரு இது’ என அருகே சென்று பார்க்க அந்த பெண் மயக்கமாகித்தான் இருந்தாள். சின்னப் பெண். மிஞ்சி போனால் பதிமூணு பதினாலு வயதிருக்கலாம். ‘அச்சோ பாவமே’ என மங்காக்கு இளகி போயிற்று. 
“அம்மாடீ கொழந்தே” என அழைத்து பார்த்தார். பதிலில்லை. சோர்வு மயக்கம்தான் என முகத்தை பார்த்தால் ஓரளவு கணிக்க முடிந்தது, மளமளவென உள்ளே சென்று சில பிரசாத பொட்டலங்களும் கொஞ்சம் தண்ணீரும் வாங்கிக்கொண்டு வந்தார்.
அழுக்கேறிய உடையுடன் சுருண்டிருந்த அந்தப் பெண்ணை மெல்ல எழுப்பியவர் அதிர்ந்து விதிர் விதிர்த்து போனார். அந்த பச்சிளம்பெண் நிறைமாதம் போல காணப்பட்டாள். இதென்ன கூத்து என பதைத்தது.
அந்தப் பெண் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.
“இந்தா இதை சாப்பிடு, மொதல்ல ஒரு வா தண்ணி குடி” என புகட்டினார். குடித்தவள் பிரசாதத்தை பார்த்ததும் ஆவலுடன் வேறு எதையும் யோசிக்காமல் கபகபவென உண்ண துவங்கினாள். மங்காவின் நெஞ்சு துடித்து போனது.
“நீ யாரு, எங்கேர்ந்து வரே... தனியாவா வந்தே?” என கேட்க அந்தப் பெண் பதிலேதும் கூறாமல் சாப்பிட்டுக்கொண்டே மாலை மாலையாக கண்ணீர் வடித்தாள்.
“சரி சரி அழாதே, சாதம் நெஞ்சில மாட்டிக்கும் விக்கும்... நீ மொதல்ல சாப்பிடு.... நெறைய இருக்கு, கெட்டுபோகாது நாளைக்கும் சாப்பிட்டுக்கோ என்ன....” என்றபடி மேற்கொண்டு என்ன செய்வதென அறியாமல் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வெளியே வந்தார்.
‘இவள் யாரு இங்கே எப்படி, இந்த வயதில் கர்ப்பமாவது...’ என பல்வேறு யோசனைகள். இரவு வைத்தியிடம் எல்லாவற்றையும் கூறினாள்.
“அட பாவமே, என்ன சொல்றே மங்களம்” என அவரும் யோசனையானார்.
“சரி, நாளைக்கு ஏதானும் தாய்சேய் நல விடுதி கண்டு பிடிச்சு சேர்க்கலாம். நீ இப்போ நிம்மதியா தூங்கு” என்றார்.
இதோ இப்போது மங்கா கண்டதும் அதே பெண்தான். பிரசவ வலி கண்டிருந்தது. துடித்து கொண்டிருந்தாள். அசலே பலமே இல்லாத பூஞ்சை உடம்பு. பச்சிளம் வயது வேறு. என்னாகுமோ.
இதில் சுற்றியும் நின்ற அனைவருக்கும் ஏதோ தயக்கம் யோசனை. யாரோ என்னவோ.... உதவ போய் நாளைக்கு என்ன ரகளை வருமோ, வினை வருமோ, என்ன ஜாதியோ மதமோ என்பது வேறு. பெண்ணின் முகத்தை பார்த்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவளோ பேசும் நிலையில் இல்லை.
மங்கா அவசரமாக வெளியே காருக்கு வந்தாள். சுருக்கமாக வைத்தீயிடம் விஷயத்தை கூறினாள். கண்ணாலேயே அவரிடம்  அனுமதி பெற்றாள். மறுபடியும் சட்டென குடிசையினுள் நுழைந்தாள்.
“த பாருங்கோ, அவ யாரோவா இருந்துட்டு போகட்டும், யோசிக்க இப்போ நேரமில்லை. நான் அவளுக்கு முடிஞ்ச அளவு உதவ போறேன். ரெண்டு உசிரோட நீங்க விளையாடறேள்.
அவளே ஒரு கொழந்தே இதில, அவளுக்குள்ள ஒரு உசிரு, ரெண்டையும் காப்பாத்தணும், இல்லேனா ஏதானும் ஒரு உசிரு போய்டும். அதாபார்த்துண்டு என்னால சும்மா இருக்க முடியாது. உதவணும்னு  நீனைக்கறவா உள்ளே இருங்கோ. மத்தவா எல்லாம் வெளியில போய்டுங்கோ. அவாவா வேலைய பாருங்கோ” என்றார் அதட்டலாக.
“என்ன மாமி நீங்க இப்படி சொல்றீங்க” என நான்கு பேர் முன் வந்தனர். “அப்போ சரி, இந்தாப்பா, நீ போய் உள்ளூர் மருத்துவச்சிய சட்டுன்னு வரச்சொன்னேன்னு சொல்லு. நான் அழைச்சதா சொல்லு” என விரட்டினாள்.
“டீ கண்ணம்மா, நீ போய் அடுப்பில சுடுதண்ணி வை” என அனுப்பினாள். மளமளவென காரியங்கள் நடந்தன.
“அதுசரி, இவ இந்த குடிசைக்குள்ள எப்படி வந்தா, இது நம்ம வண்ணாத்தி வீடாச்சே?” என்றார்.
“ஆமா மாமி, இது தட்டு தடுமாறி நடந்து வந்துச்சு.... இந்த தெருவில வந்து வயத்த பிடிச்சுகிட்டு மயக்கமா விழுந்துடுச்சு. இந்த வூடு காலியா இருந்துதுன்னு வாச படலை தள்ளி உள்ளே கொண்டாந்துட்டோம் நாங்கதான்” என்றாள் இன்னொருத்தி.
“நல்ல காரியம் பண்ணினேள் போ” எனவும், அந்தப் பெண் மேலும் அலறவும் சரியாக இருந்தது.
பனி குடம் உடைந்திருந்தது. அனைவரையும் விரட்டி அந்த பெண்ணின் அருகே சென்று, “ஒண்ணும் இல்லை.... த பாரு... நானிருக்கேன், சுவாமி இருக்கார் பயப்படாதே” என தைர்யம் ஊட்டியபடி அவள் இடுப்பை நீவி வயிற்றை கீழ் பக்கமாக அமுக்கி விட்டாள். அந்த பெண் துடித்தாள்.
மங்காவிற்கு மூன்று பிரசவம் ஆயிற்றே ஓரளவு சமாளித்தார். கூட இரு பெண்களுமாக கால் பற்ற, அந்த பெண்ணுக்கு உந்த கூட சக்தி இருக்கவில்லை.
“டீ, அவ மயங்கறா பாரு, அவள கன்னத்தில தட்டி எழுப்பு. அவ முக்கித்தான் ஆகணும்” என் மாமி சத்தம் போட்டார்.
சுடு தண்ணி காலில் ஒத்தடம் கொடுத்தனர். வயிற்ரை அமுக்கி இடுப்பை நீவி என வைத்தியம் தொடர்ந்தது. அதற்குள் மருத்துவச்சி வந்தார். அவர் பொறுப்பெடுத்து கொண்டாலும் மங்கா அங்கிருந்து அகலவில்லை.
மிக கடினமான பிரசவமாக அமைந்தது. ஆனால் இத்தனை முயன்றும் சிறு வயது, தெம்பில்லை, முக்கமுடியவில்லை, மூச்சு திணறல் ஏற்பட்டு பிறந்த பெண் குழந்தை இறந்தே பிறந்தது. அந்த பெண்ணோ மயங்கி கிடந்தாள்.
அவளை முழிக்க வைத்து கொஞ்சம் சூடாக கரைத்து கொடுத்து விஷயத்தை கூற அந்த பெண்ணுக்கு அழவும் தெரியவில்லை, சந்தோஷப்பட வேண்டுமா எனவும் தெரியவில்லை. மலங்க மலங்க விழித்தாள். அதற்குள் வண்ணான் வண்ணாத்தி தங்கள் வீட்டிற்கு வர அனைத்தும் கூறப்பட்டது.
‘அதுசரி, அடுத்து என்ன.... இவளை எங்க வீட்டில எப்படி எத்தன நாள், யாரோ எப்போ என்ன எப்படி...’ என பலருக்கும் பல கேள்விகள். யாருக்கும் இதில் திருப்தி இல்லை இஷ்டம் இல்லை... வைத்து பாதுகாக்க, என தெரிந்தது முகங்களில்.
வைத்தீ மங்காவை விட்டு ஆபீஸ் சென்றிருக்க, மங்களம் இன்னது செய்வதென அறியாமல் ஒரு நொடி திகைத்து பின் தெளிந்தாள்.
“கண்ணம்மா, இவளை குளிப்பாட்டி சுத்தப்படுத்துவேளா இல்ல அதுவும் முடியாதா?” என காரமாக கேட்டார்.
“ஐயோ என்னங்கம்மா, நான் செய்யறேன்” என அவளும் வண்ணாத்தியும் முன் வந்து செய்தனர். அந்த சிசுவை தானே அடக்கம் செய்துவிடுவதாக வண்ணான் இன்னும் இரண்டு ஆட்களோடு எடுத்து சென்றுவிட்டான்.
அந்த பெண் மெளனமாக அழுதாள். திக்ப்ரமையாக இருந்தாள். எல்லாம் முடிந்தது. தன் கையில் இருந்த பணத்தை வண்ணாத்தியிடம் தந்துவிட்டு மாமி வண்டி பிடித்து வரச்சொல்லி கண்ணம்மாவின் உதவியோடு அந்தப் பெண்ணை ஏற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
மாமியார் ரொம்பவே ஆசாரம், மடி விழுப்பு தீட்டு என பார்ப்பவர் ஆயிற்றே, என்ன எப்படி சொல்லி எப்படி சமாளிக்க போகிறோம் என வழி முழுவதும் யோசனைதான்.
“பின்பக்கமா கொட்டகைக்கு அழச்சுண்டு போ கண்ணம்மா, நான் வரேன்” என்று வாசல் வழியே உள்ளே நுழைந்தார். நல்லவேளையாக வைத்தீ வந்திருந்தார் மதிய உணவுக்கு. அவரை கலவரத்துடன் கண்டார் மங்கா. “என்ன?” என்றார் கண்ணால். சுற்றும் பார்த்து மாமியாரை தேடினார். “சாப்பிட்டு படுத்திண்டிருக்கா அம்மா” என்றார் மெல்ல.
ஹப்பா என நெஞ்சை நீவி கொண்டார்.
“என்னாச்சு?” என வினவ சுருக்கமாக எந்த நிலைமையில் அந்தப் பெண்ணை வீட்டிற்கே அழைத்து வர வேண்டி வந்தது என கூறினார். “ஐயோ, அம்மா?” என அவரும் பயந்தார்.
“அதான் நா, எனக்கும் கலக்கமா இருக்கு நா” என்றாள்.
“சரி இரு பார்க்கலாம்” என்றார். மங்களம் பின்னங்கட்டிற்கு சென்று அங்கே வேலைக்காரர்கள் இளைப்பாற கட்டிய குடிலின் உள்ளே சென்றாள். அங்கே அந்த பெண் கயிற்று கட்டில் மேல் படுத்திருந்தாள். “கண்ணம்மா, வா, அவளுக்கு ஏதானும் ஆகாரம் குடுக்கறேன் கொண்டு குடுத்து சாப்பிட வெச்சுட்டு நீ வேணா போய்கோ” என்றார். அவளும் அதே போல செய்தாள். தானும் உண்டேன் என பெயர் செய்தாள் மங்களம்.
மதியம் அம்மா எழுந்ததும், “அம்மா ஒரு விஷயம்..” என் மெல்ல துவங்கினாள். “என்னடி?” என்றார் காபியை டபராவில் ஆற்றியபடி.
சுருக்கமாக நடந்த விஷயத்தை கூறினாள் மங்களம்.
“அடபாவமே, யாரந்த பொண்ணு, பாவம் கொழந்தே போய்டுத்தா, என்ன கொடுமை இது...” என விசனப்பட்டார்.
“யாராம், என்ன குலமாம்?” என வினவினார். புலி வந்தேவிட்டது. இவள் வைத்தியை பார்க்க அவர் இரு என கண் அமர்த்தி.
“அது தெரியலைமா. அந்த பொண்ணும் இன்னும் வாயைத் திறந்து பேச திராணி இல்லாம விழுந்து கிடக்கா” என்றார்.
“ஓ, நீயும் பாத்தியா வைத்தீ?” என்றார்.
“ஆமா மா, அதனால நாங்க ஒரு முடிவு பண்ணினோம், நீ கோச்சுக்கப்டாது மா. இது தற்காலிகமான ஏற்பாடு மா” என்றார் பவ்யமாக குழைந்தபடி.
“என்ன தீர்மானம் என்னை கேட்காம?” என்றார் அம்மா
“அந்த கொழந்தே பாவம் மா, பதினாலு கூட இருக்காது. அதான் அவள நம்மாத்துக்கே அழைச்சுண்டு வந்துட்டோம். மங்களம் கூட தயங்கினா... ஆனா நாந்தான் அம்மாட்ட பேசறேன்னு சொன்னேன்.”
“என்னடாது அநியாயமா இருக்கு, என்ன குலமோ கோத்ரமோ, பிள்ளபெத்தா தீட்டு வேற.... இங்கே கொண்டுவந்தேங்கற, என்ன கண்றாவி?” என வானுக்கும் பூமிக்கும் குதித்தார்.
வைத்தி சிறு குழந்தைக்கு சொல்வது போல புரியவைத்தார்.
“ஒண்ணும் பண்ண முடியாதுமா, ரொம்ப வீக்கா இருக்கா, எங்க மா தங்க விடறது, எங்கே போவோ அந்தக் குழந்தை... யோசி”
“ஆத்துக்குள்ள வர மாட்டா, போறுமா... நீ கொஞ்சம் பொறுத்துக்கத்தான் வேணும். பச்சை கொழந்தே மா.” என்றார்
“அப்போ அவ எப்படி பிள்ளையான்டாளாம், கல்யாணம் ஆச்சா, இல்ல அதுவும் இல்லையா.... என்னடா இது கிரகச்சாரம்?” என தலையில் அடித்துக்கொண்டார்.
“மா இப்போதைக்கு ஒண்ணுமே தெரியாது மா. இனி அவ தெளிஞ்சுதான் எல்லாமும் விசாரிக்கணும்” என்றார்.
“என்னமோ பண்ணுங்கோ. எம்பேச்ச யார் கேட்கறா இந்தாத்துல...” என முறைத்துக்கொண்டு உட்கார்ந்தார்.
அந்தவரை பாக்கியம் என்று நிம்மதி ஆயிற்று.
அந்தப்பெண்ணிடம் மெல்ல பேசி விஷயம் கிரகிக்க போதும் என்றானது மங்களத்திற்கு. அந்த பெண், அவள், கோகிலம்.
அனாதை. யாரோ சொந்தக்காரர் வீட்டில் தங்கியபடி அவர்களுக்கு வீட்டு வேலையில் சமையல் என ஊழியம் செய்து வந்தாள். அடிமை போல நடத்த பட்டாள். அடிப்பது திட்டுவது தினமும் நடந்தது. கோவிலுக்கு மட்டுமே போக அனுமதி.
அங்கே போக வர ஒரு கயவன் கையில் மாட்டினாள். இவள் நிலை பற்றி அங்கே இங்கே அறிந்து அவளை நைச்சியமாக பேசி மயக்கினான். கல்யாணம் செய்துகொள்வதாக வாக்கு குடுத்தானாம். கோவலில் சத்தியம் செய்தானாம். நெற்றியில் குங்குமம் வைத்தானாம்.
இந்த சிறு பேதை அவனை முழுவதுமாக நம்பினாள். கொடிக்கு கிளைகொம்பு கிடைத்ததாக எண்ணி தொற்றினாள். அந்த கயவன் இவளை அனுபவித்துவிட்டு போனவன்தான்.
தனக்கு என்னவாயிற்று என்ன நிலை என்பது கூட புரியாத தெரியாத நிலையில் நான்கைந்து மாதங்களுக்கு பிறகுதான் தனக்குள் என்னமோ மாற்றங்கள் என்பதை உணர்ந்தாள் அந்தப் பேதை.
அந்த வீட்டின் மக்கள் மருத்துவரை அணுக, அழிக்க முடியாமல் வளர்ந்திருந்தது சிசு. உடனே இவளை வீட்டைவிட்டு நிர்தாட்சண்யமாக விரட்டி விட்டனர். ஊர் ஊராக அலைந்து அங்கே இங்கே வேலை செய்து பட்டினியும் வயிற்றில் பிள்ளையும் என இந்த ஊர் எல்லையை அடைந்தாள். இதோ இப்போது இங்கே இந்நிலையில் இப்படி.
மங்களம் துடித்து போனாள். என்னவானாலும் இவளை இங்கேதான் வெச்சுப்பேன் என மனதில் முடியிட்டுகொண்டாள்
“அம்மா” என்று அழைத்தாள் கோகி. மங்காவிற்கு வயிறு புரண்டது அந்த வார்த்தை கேட்டு.
தொழுவத்து குடிலில் தான் வாசம். ஆனால் மங்கா கை வைத்தியம் பத்தியம் நல்ல சாப்பாடு அவளை நன்றாக தேற்றியது. சுறுசுறுப்பாக வெளிப்புற காரியங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்ள துவங்கினாள் கோகி.
உள்ளே மட்டும் மறந்தும் வரவில்லை. சாப்பிட கூட.
பாட்டி என்றால் அவளுக்கு சிம்மசொப்பனம்.
“ஏய் குட்டி, நான் மடியா என் துணி தோய்ச்சு உணர்த்தி இருக்கேன், நீ, உன் நிழல், உம் மூச்சு காத்து கூட அது மேல படப்டாது சொல்லீட்டேன்” ‘கஷ்டம் கஷ்டம், இந்த தள்ளாத வயசில எனக்கு வேணுமா இந்த கண்றாவி எல்லாம்?’ என் கடினமாக இரைந்தார். ஒடுங்கி நடுங்கினாள் கோகி.
ஒரு சில மாதங்கள் ஓடிய நிலையில், ஒரு நாள் பசு மாட்டிற்கு புல் குடுக்க பாட்டி தோட்டப்பக்கம் சென்றார். கீரையை குடுத்து அதை தடவி கொடுக்க, அந்த கணத்தில் பசுவிற்கு என்னவாயிற்றோ கொம்பால் பாட்டியை முட்ட முயன்றது.
சட்டென அவர் நகர்ந்தாலும் பசு முன்னேறி மேலும் முட்ட பாட்டி கீழே சாய்ந்தார். பசு அவரை நோக்கி மேலும் பாய, அதை கண்ட கோகி “பாட்டிமா” என அலறியபடி ஓடி போய் அவரை அப்புறம் தள்ளிவிட்டு இவள் முன்னின்றாள். பசு முட்டிய வேகத்தில் அவள் போய் அதனை கட்டவென நட்டிருக்கும் இரும்பு முகப்பில் விழுந்தாள். அதன் கூரான முனை அவளது வலது கையினை ஆழமாக கீறி உள் சதை கண்ணில் தெரிய காயமாகி ரத்தம் கொட்டியது. பாட்டி அதை கண்டு அலறி மயக்கமானார். இதனிடையில் மங்களம், மற்ற வேலைகாரர்கள் சத்தம் கேட்டு வந்து பசுவினை இழுத்துச்சென்று இறுக்க கட்டினர்.
டாக்டரை வீட்டிற்கு அழைத்து இருவரையும் பார்க்க,
“பாட்டிக்கு அதிர்ச்சிதான், ஊசி போட்டிருக்கு சரியாயிடும். இந்த பெண்ணுக்குத்தான் ரொம்ப ஆழமான காயம். தண்ணியே படாம பார்த்துக்கணும். எப்படியும் பதினஞ்சு நாள் ஆகும் ஆற. கட்டு போட்ருக்கேன்” என தையல் போட்டு கட்டும் போட்டார் டாக்டர். தடுப்பூசியும் போட்டு கையை துளியிலும் கட்டினார்.
வீடே அதிர்ந்து போனது. ஆளாளுக்கு அசந்து போய் அமர்ந்திருக்க, உள்ளே சமையல் அறையில் ஏதோ அரவம் கேட்டு மங்களம்தான் முதலில் தேறினார்.
‘ஐயோ சாப்பாட்டு வேளை ஆச்சே, அம்மாக்கு பசிக்குமே, அந்த கொழந்தை வேற அடிபட்டு கிடக்கே...’ என பரபரவென எழுந்தார். அங்கே பின்னங்கட்டில் அவள் கண்ட காட்சி.... அவரை ஸ்தம்பிக்க வைத்தது. தாரை தாரையாக அவர் அறியாமல் கண்ணீர் பெருகியது.
“சாதம் போடறியா மங்களம்?” என வந்தவர் அவளை கண்டு திகைத்தார் “என்ன?” என கேட்கப் போக ‘பேசாதீங்கோ’ என ஜாடை காட்டி கண்ணை காண்பித்தார். அவள் காட்டிய திக்கில் பார்த்து வைத்தியும் வாயடைத்து போனார்.
“நெறைய மருந்து குடுத்திருக்கா, நெறைய சாப்பிடணும் இல்லேனா கை புண் சீக்கிரம் ஆறாது கொழந்தே” என மெல்லிய குரலில் பேசியபடி பாட்டி குண்டானில் தன் கையால் பிசைந்த சாதத்தை தன் கையால் எடுத்து கோகியின் வாயில் ஊட்டிக்கொண்டிருந்தாள்.
“நானே சாப்படறேன் பாட்டிம்மா, நீங்க போய், என்ன தொட்டு.... ஊட்டி...” என கோகி கூச்சப்பட்டுக்கொண்டேதான் இருந்தாள்.
“சூ, சும்மா இரு. கைய்ய தூக்கவே ப்டாதுன்னு சொல்லிருக்கார் டாக்டர். உயிருக்கு முன்னால மடி என்ன விழுப்பென்ன ஜாதியென்ன குலமென்ன, எனக்கு இந்த விஷயத்த புரிய வைக்கத்தான் இன்னிக்கி லக்ஷ்மி(பசு) என்னை முட்ட வந்தா போலிருக்கு. அதெல்லாம் போகட்டும்.”
“இனிமேல நீ இந்தாத்து கொழந்தே. அன்பும் பண்பும் தாண்டீ மா பெரிசு, புரிஞ்சுடுத்து.... நன்னாவே புரிய வெச்சுட்டார் பகவான். சாப்பிடு கொழந்தே” என வாயார ஊட்டினார்.
அவளும் கண்ணீர் உருண்டோடியதை இடது கையால் துடைத்தபடி திணறிக்கொண்டு சாப்பிட்டாள்.
“நீங்க சாப்டேளா பாட்டி?” என்றாள்
“பார்த்தியா, இந்தாத்துல யாருக்கானும் கேட்கணும்னு தோணித்தோ, பாரு இந்த பிஞ்சு கொழந்தே தான் கேட்கிறா நான் சாப்பிட்டேனான்னு” என கிண்டலாக சிரித்தார்.
“போங்க பாட்டிமா” என அவளும் சிரிக்க முயன்றாள்.
சாப்பாட்டினை எடுத்து வைத்து அவருக்கும் வைத்திக்குமாக பரிமாறிவிட்டு மங்களம் மீண்டும் அங்கே வந்து, “அம்மா, நீங்க போய் சாப்பிடுங்கோ. நான் ஊட்டறேன் கோகிக்கு” என்றாள்.
“போடீ, நோக்கென்ன தெரியும் ஊட்ட. நீ உன் பசங்களுக்கு ஊட்டு போ. நான் இவளுக்கு ஊட்டீட்டு வந்து சாப்டுப்பேன்” என விரட்டினார்.
அப்படியாக அந்த வீட்டில் ஒருத்தியாக இன்றியமையாதவளாக ஆகி போனாள் கோகி.
அந்த வீட்டின் பிள்ளைகள் மூன்றிலிருந்து நால்வர் ஆயினர்.
இப்போது கோகிக்கு இருபத்தி ஐந்து வயதாகி உள்ளது. சிட்டுபோல ஓடி ஓடி யாருக்கு என்ன வேண்டும் என்றாலும் பரந்தடித்துக்கொண்டு செய்வாள். மகள் பாலாம்பிகையும் இவளும் ஏகதேசம் ஒற்ற வயது. ரெண்டு கூட குறைய. உற்ற தோழிகளாகினர். சகோதரிகளாகினர்.
“பாருங்கோடா இது உங்க தங்கை” என பிள்ளைகளுக்கு முதலிலேயே ஆழமாக சொல்லி வளர்க்கப்பட்டனர். கடைக்குட்டி தங்கையானாள் கோகி.
இதோ அவள் மனசு போலவே, ஜில்லென்ற, மோர் தண்ணியுடன் எதிர்கொண்டாள் அந்த கோகி. வெய்யிலுக்கு நிழலாக, வெம்மைக்கு மோராக, வயிற்றிற்கு பாலாக மனதுக்கு தென்றலாக அந்த வீட்டிற்கு மயிலிரகானாள் கோகி.
மீண்டும் சந்திப்போம். வணக்கம்.