Sunday 22 July 2018

NENJIL KODI MINNAL - 19

“அதுனால எங்கப்பாவையே நான் இழுந்துட்டு தனிமையில நிக்கறேன்.... இந்த முறை அப்படி ஏதானும் பேசப்போய் அவுக என்னையே கொன்னுட்டா கூட யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது...

ஒரு வேள நீங்க சொல்றபடி நடந்துட்டாலும் கூட, ஊரும் மக்களும் என்ன சொல்லும், என்னப் பத்தி, எங்க குடும்பத்த பத்தி தாறுமாறா பேசீட்டா...? என்றாள்.

“இது என்ன பைத்தியக்காரத்தனம் ராஜேஸ்வரி. அப்படி எல்லாம் ஒண்ணுமாகாது....

“இந்த ஊர்ல, உன்னை பெண் தெய்வமா மதிக்கிறாங்க.... சின்னம்மான்னு கும்பிடுறாங்க.... அவங்க உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையலையேன்னு வருந்தறாங்கம்மா எனக்குத் தெரியும். எத்தனையோ பேரு என்கிட்டேயே பொலம்பி இருக்காங்க.... யாரும் தப்பா பேசமாட்டாங்க.... “

“நீ நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு.... அதுக்குள்ள கனகுவும் வெளியே வந்திருவான், முடிச்சுடலாம், போதும் நீ அவனுக்கு பேருக்கானும் பொண்டாட்டியா அவதிப்பட்டது என்றான்.

அவள் பதிலேதும் பேசவில்லை.

இப்போதைக்கு துணிச்சல் இருக்கவில்லை. பிறகு யோசிக்கலாம் என தள்ளிப்போட்டாள்.

அங்கே தினமும் வாய்க்கு ருசியான பலதும் மருதுவை வந்தடைந்த வண்ணம் இருந்தன. ரசித்து உண்டான்.

‘ஹ்ம்ம், யாருக்கு குடுத்து 
வெச்சிருக்கோ.... வாய்த்தவனுக்கோ அருகதை இல்லை.. என பெருமூச்சுவிட்டான்.

அவளை அடுத்த நாள் கண்டவன், “நேத்து ரொம்ப நல்லா இருந்துச்சு சாப்பாடு.... எங்க ஆத்தா போனதுக்கு பிறவு வாய்க்கு ருசியா இப்போதான் சாப்பிடுதேன், ரொம்ப ரசிச்சு உண்டேன் என்றான் ஆத்மார்த்தமாக. அவள் மகிழ்ந்து போனாள்.

“கல்யாணம் கட்டிக்கலாமே? என்றாள் அவனை நேராகக் காணாமல். “கட்டிக்கிடணும்தான். நல்ல பொண்ணா கிடைக்கோணுமே... என்றான் எங்கோ பார்த்தபடி. அவளையும் மீறி கன்னங்கள் சிவந்து போயின.

அறுவடைக்கு பின்னோடு பொங்கல் திருநாள் வந்தது. மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் மனம் நிறைந்து கொண்டாட முடிவெடுத்தனர்.

அனைவருக்கும் புதுத் துணிகள் வழங்க முடிவு செய்தாள் ராஜி. அதையும் மருதுவின் கையால் கொடுக்க ஏற்பாடு செய்தாள்.

“நான் எதுக்கு, இது நீங்க செய்யற ஏற்பாடு... நீங்களே குடுக்கலாமே? என்று தயங்கினான்.

“இல்ல இல்ல, ஏற்பாடு என்னோடதா இருக்கலாம்.... ஆனா இதுக்கெல்லாம் காரணம் நீங்கதானே, அதான், நான் அப்படி தீர்மானிச்சேன் என்றாள்.

இருவருமாக செய்யலாம் என்று ஒப்புக்கொண்டான்.

மகளிற்கு இவளும் ஆடவருக்கு அவனுமாக புதுத் துணி வெல்லம் நெல்மணிகள் என அனைத்தும் குடுத்து வாழ்த்தினர்.

மக்கள், இருவரையும் ஒன்றாகப் பார்த்து, “எம்பூட்டு நல்ல ஜோடி..... இதுபோல ஒரு நல்லவன் கையில் பெரியய்யா சின்னம்மாவ பிடிச்சு குடுக்காம தப்பு பண்ணீட்டாகளே...? என்று இவர்கள் காது படவே பேசிக்கொண்டனர்.

ராஜிக்கு கண்கள் தளும்பியது. “தோ வரேன் என உள்ளே ஓடிவிட்டாள்.

அவளை அன்னிலையில் கண்டு நெஞ்சு வெடித்தது மருதுவுக்கும் கதிருக்கும்.

“கதிர், இதுக்கு மருந்தே இல்லியா? என்றான் மருது.

“பேசி இருக்கேன்... பார்க்கலாம், என்ன முடிவு எடுக்கறாகன்னு....

அது மட்டுமில்லை மருது, அவங்க பயப்படுவது போல, அப்படியே அந்த முரட்டு பயலோட சண்ட போட்டு விவாகரத்து வாங்கி கொடுத்துட்டாலும், இவுகள, அவக நல்ல மனச அவகபட்ட பாட்ட தெரிஞ்சு அறிஞ்சு முழு மனசோட ஏத்துக்க, வேற ஒரு நல்லவன் வரணுமே.... அவங்க கைப்பிடித்து மணமுடித்து சந்தோஷமா வாழவைக்க...? என மருதுவின் முகத்தை ஆழமாகப் பார்த்தான்.

மீண்டும் அவன் முகத்திலும் கண்ணிலும் கோடி மின்னல்களை கண்டான். “அதென்ன, அப்படி சொல்றீக, நல்லவன் யாரானும் இல்லாமையா போய்டுவான்.... இவகள பண்ணிக்க அவனில்ல குடுத்து வெச்சிருக்கோணும் என்றான்.

அன்று காலை அனைவரும் பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ஊரே தேர்த்திருவிழா போல அலங்கரிக்கப்பட்டு குதூகலமாகக் காணப்பட்டது. கூத்தும் பாட்டுமாக நிறைந்திருந்தது.

மாலையில், பலரும் அங்கிருந்த ஒரே டென்ட் கொட்டாயில் புதியதொரு படம் திரையிடபட்டுள்ளதென சென்றிருந்தனர்.

“நாமளும் போலாம்மா என பொன்னி நச்சரித்தாள்.

“ராத்திரி தனியா வரணுமே பொன்னி? எனத் தயங்கினாள். 

“கார் வேற ரிப்பேருக்கு போயிருக்கே..?
என்றாள்.

“இருக்கட்டும்மா, திரும்புகையில எம்மாமன வந்து நம்மள பத்திரமா வீட்டுக்கு கூட்டியாந்துறச் சொல்லுறேன் போலாமா? என்றாள்.

“சரி கிளம்பு என்றாள் அவளுக்கும் தான் வீட்டிலேயே மூச்சடைப்பதுபோல இருந்தது.

புத்தாடை உடுத்த பொன்னி கட்டாயப்படுத்த, பொங்கலுக்கு என வாங்கிய மெல்லிய கீற்று ஜரிகை போட்ட பட்டுப்புடவையை எடுத்து கட்டிக்கொண்டாள். பொன்னியும் புதிய புடவை உடுத்தி, தலையில் கொண்டையிட்டு, பூ சுற்றி கலகலப்பாகக் கிளம்பினாள். இவள், அவளது சிறுபிள்ளை போன்ற உற்சாகத்தைக் கண்டு சந்தோஷித்தாள்.

போகும்போது இவர்கள் பேசிக்கொண்டே பொடிநடையாக நடந்தே சென்றுவிட்டனர் அங்கே சென்று டிக்கெட்டும் எடுத்து அமர்ந்தனர். அதற்குள் முனியனும் அங்கே வர, “அட மாமோய், நீ இப்போவே வந்துட்டியா? என உற்சாகமானாள் பொன்னி.

அவனுடன் சினிமா பார்க்கத் தானே அவள் பிரியப்படுவாள் என அறிந்து “பொன்னிக்கா, நீங்க போங்க... முனியனோட உக்கார்ந்து சினிமா பாருங்க.... நாம படம் முடிஞ்சு வீட்டுக்கு போகையில என்னை பத்திரமா கொண்டு சேர்த்துடுங்க என்றாள்.

“நிசமாவா கண்ணு, நீங்க தனிச்சு படம் பாப்பீகளா? என நாலுமுறை கேட்டுக்கொண்டு மகளையும் இழுத்துக்கொண்டு முன்னே நகர்ந்து தன் கணவனுடன் படம் பார்க்க அமர்ந்தாள் பொன்னி.

ராஜிக்கு, தனித்து படம் பார்க்க என்னவோ போலதான் இருந்தது... ஆயினும், இப்போது இருட்டிய அந்தி நேரத்தில் தனியாக வீட்டிற்கும் செல்ல முடியாது.... படத்தையானும் ரசிப்போம் என அமர்ந்திருந்தாள். விளக்கு அணைந்து படம் துவங்கியது. அப்போதே யாரோ ஒருவன் அருகே வந்து அமர்ந்தான்.

ராஜிக்கு, ‘யாரோ என்னமோ, புது படம் வேறு.... அக்கம் பக்கத்து ஊர்களிருந்தெல்லாம் மக்கள் பண்டிகை தினமென படம் பார்க்க வந்திருந்தனர்.... கூட்டம் அலைமோதியது... என கொஞ்சம் பயம்தான்.

கைகளை தனக்குள்ளே கட்டிக்கொண்டு படத்தில் கவனம் செலுத்தினாள்.

அவ்வப்போது அதனையும் மீறி அந்தாளின் கைகள் உரசாமலில்லை... வேண்டுமென்றே இல்லை என்றாலும் அவளும்தான் அவனும்தான் சின்னச் சின்ன இருக்கைகளில் வேறே என்னதான் செய்ய முடியும். 

சிரிப்பு காட்சிகள் பலதும் நிறைந்த ஜனரஞ்சகமான படமாக அமைந்தது... அவள் தன்னையும் மீறி சிரித்து கன்னம் சிவந்தது... ரொம்ப நாட்கள் கழித்து இத்தனை சிரிக்கிறோம் என நினைத்துக்கொண்டாள்.

இருட்டில் அவளின் சிரிப்பும் கன்னத்து சிவப்பும் பக்கமிருந்தவனின் கண்களில் மின்னல் வரச்செய்தது. பல நேரங்களில் அவன் தன்னை உற்று பார்ப்பது போலத் தோன்றி, அவள் திரும்பியபோது அவன் முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டான்.
பின்னோடு ஒரு பாடல் காட்சி வந்தது. அதன் பலமான வெளிச்சத்தில், எதேர்ச்சையாக திரும்பியவளின் கண்களில் பக்கத்தில் அமர்ந்தவன் பட்டான்.

“அட, இவுகளா? என அசந்துபோனாள்.

‘அவன் அருகே.. என தர்மசங்கடம் ஆனது. எழுந்து செல்லவும் முடியாத நிலை.... தவித்தாள்.

அவனும் அவளின் தவிப்பைக் கண்டான்.

“நாந்தான், சொன்னா, நீங்க அப்போவே எழுந்துக்க முயலுவீக... இருந்து இருந்து வெளியே வந்திருக்கீக, படத்தை ரசிச்சுகிட்டும் இருக்கீக, அதை கெடுக்க வேண்டாம்னு அமைதியா இருந்தேன்.... படத்தை ரசிங்க. வேற எந்த தவிப்பும் வேண்டாம் என்றான் ஆதுரத்துடன் மருது.

கொஞ்ச நேரம் தவித்தாலும் பின்னோடு கதையின் போக்கில் ஒன்றிப்போனாள். மிக அருமையான காதல் சிரிப்பு என கதை ஓடியது.

கதையின்போக்கில் அவள் ஒன்றிப்போன நேரங்களில் இருவர் கையும் கைப்பிடியில் ஒன்றாகத்தான் உரசியபடி இருந்தன. அவன் அதை கண்டுகொண்டாலும் இயல்பாக இருக்க முயன்றான். அவளின் அருகாமை, அவளது மல்லிகையின் மணம், அவளது கை ஸ்பரிசம் என அவனை கொஞ்சம் தடுமாறச் செய்தது நிஜம்.

அடுத்தவன் மனைவி என்று அவனை அவனே கண்டித்துக்கொண்டுதான் இருந்தான்.

படம் முடிந்தது. விளக்குகள் போடப்பட்டதும் அவனை வெளிச்சத்தில் கண்டு அவளுக்கு கூச்சமானது. பொன்னியை தேடினாள். அவள் இவளை நோக்கி வர முயன்று கொண்டிருந்தாள். கூட்டம் குறைய காத்திருந்தாள்.

“எப்படி வந்தீக? என்றான் மருது.

“வரும்போது பொன்னிக்காவோட பேசியபடி நடந்தே வந்துட்டேன்.... இப்போ முனியன் ஏதானும் வண்டி பிடிச்சு கொண்டு விடுவான் என்றாள்.

பொன்னி அதற்குள் அங்கே வந்தாள்.

“அம்மா, ஒரே ஜனமான ஜனமா இருக்கும்மா..... கும்மிருட்டு வேற..... எப்படி வீடு போய் சேரப்போறோமோ தெரியலம்மா.....

“அட, மருது ஐயாவா. ரொம்ப நல்லதாப்போச்சு.. எம்மாமன் சைக்கிள்ள வந்திருக்கு.... நான் அவுகளோட போனா, நீங்க சின்னம்மாவ உங்க வண்டியில கொண்டு பத்திரமா சேர்த்துடறீகளா, உங்களுக்கு புண்ணியமா போவும்? என வேண்டிக் கொண்டாள்.

முதலில், அவள் என்ன நினைப்பாளோ எனத் தயங்கினாலும், “ஓ, அதுக்கென்ன அவகள வரச் சொல்லு பொன்னி என்றான்.

“அதெல்லாம் வேண்டாம் பொன்னிக்கா, நாம நடந்தே போய்டலாம்... முனியன் பின்னோட காவலா சைக்கிளில் வரட்டும் என்றாள்.

“அட நீங்க ஒண்ணும்மா... மார்கழி முடிஞ்சும் இன்னும் பனி கொட்டுது.... எம்பூட்டு தூரம் இருக்கு, கும்மிருட்டு வேற.... நல்லபடியா ஐயா கொண்டு விடுவாக.... வீட்டுக்கு வந்துடுங்க... நான் பின்னோட சைக்கிளில வந்துருவேன், நல்லபடியா போய் இறங்கிக்குங்க போங்க என உந்திவிட்டு போயே போய்விட்டாள்.

‘அவனோடு மோட்டார் சைக்கிளில் பின் அமர்ந்து போவதா.... யாரேனும் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ன பேசுவார்கள்? என எண்ணி பயந்தாள்.

“நான் மெல்ல நடந்தே போய்க்கறேன், உங்களுக்கு எதுக்கு சிரமம் என்றாள் மென்று விழுங்கி.

“என்ன இது, படிச்சவங்க பேசற பேச்சா இல்லியே.... இந்த இருட்டில தனியா நடக்கப் போறீகளா.... வாங்க, எனக்கெதுவும் சிரமம் இல்லை என்று அவளுடன் கூடவே நடந்தான்.

“இங்கேயே இருங்க, நான் ஸ்டாண்டிலிருந்து என் வண்டிய எடுத்துட்டு வரேன்.... நடக்கறேன் பேர்வழின்னு கிளம்பீடாதீக என்று கூறிச் சென்றான்.

‘தெய்வமே எனப் புடவை தலைப்பை இழுத்து போற்றியபடி அங்கேயே நின்றாள்.

‘இந்தப் பொன்னிக்காவை என்ன பண்ணினா தேவலை என கோபம் வந்தது. ஒரே படப்படப்பாக இருந்தது.

அவன் பின்னோடு தன் புல்லெட்டில் வந்தான். ராஜகுமாரன் ஒருவன் தன் குதிரையில் வீற்றிருப்பதைப் போல தெரிந்தான்.

‘ஆமா, தேவை எனக்கு என தன்னையே கண்டித்துக்கொண்டாள்.

அவன் மேல் படாமல் சீட் பாறை பிடித்தபடி ஒதுக்கமாக அமர்ந்தாள்.

“நம்ம ஊர் ரோடப் பத்தி உங்களுக்கே தெரியும்.... ஒழுங்கா நகர்ந்து நல்லபடி உக்கார்ந்துகோங்க.... இல்லேனா நீங்க விழுந்தது கூட தெரியாம நான்பாட்டுக்கு போய்கிட்டிருப்பேன்... பின்னாடி எந்தப் பெண்ணையும் உட்கார வெச்சுகிட்டு போய் பழக்கமில்லை என சிரித்தான்.

அவளும் சிரித்தாள். கெட்டியாக பிடித்துக்கொண்டாள் சீட்டின் உள்ளே நகர்ந்து அமர்ந்தாள். வண்டி மேடேறி வேகம் பிடித்தது. ஊதக் காற்று சில்லென உள்ளே சென்று தைத்தது. கையும் காலும் விறைத்தன. புடவை தலைப்பை அழுந்த மூடி பற்றிக்கொண்டாள்.

அவ்வப்போது குண்டும் குழியும் ஏறி இறங்கியபோது அவன் மீது முட்டிக்கொள்ளத்தான் வந்தது.

எதுவும் செய்ய முடியாத நிலை. தோ போய்டலாம் என எண்ணி அப்படியே அமர்ந்தாள்.

சில நொடிகள் அவன் முதுகில் முட்டிக்கொண்ட அந்த கணங்கள் அந்தப் பேதையின் மென் உடலை பதம் பார்த்தது. வெதுவெதுப்பான அவனது முதுகின் மீது சாய்ந்ததும் அப்படியே கட்டிக்கொள்ளத்தான் மனம் ஏங்கியது.

அவள் உணர்சிகளின் கொந்தளிப்பில் தவித்தாள்.... அவமானத்திலும் ஏக்கத்திலும் மூச்சிரைத்தது.... முகம் சிவந்தது.... குளிர் காற்று வேறு கன்னங்களை ஐஸ் கட்டியாக கன்றி சிவக்க வைத்தன.

ஒரு வழியாக தங்களது தெருவை அடைந்தது வண்டி.

அவன் வேகம் தணித்து மெல்ல நிறுத்த முனைகையில்,
“அடி சக்க, சூப்பரு போ..... வாடி எம் பத்தினி தெய்வமே.... உனக்கு கதிர் ஒருத்தன் பத்தாதுன்னு இவன் வேறயா... இது யாருடி புதுசா பிடிச்சிருக்கே..... ஜோடி போட்டுகிட்ட இந்த ராத்திரி நேரத்தில இவனோட எங்கே சுத்தீட்டு வரே? என குடி போதையில் உளறி கொட்டியபடி அவள் மீது விழப்போனான் கனகு

‘இவுகளா, இங்கேயா இப்போதா..... இருந்திருந்து நான் இந்த நிலையிலா இவுக கண்ணில் பட வேண்டும்..... அசலே நாற்றம் பிடித்த வாயும் குப்பை கூளமுமான மனதும் கொண்டவராயிற்றே..... அம்மா சோதிக்கிறியே... என துடித்துப் போனாள்.

“வாங்க, எப்போ வந்தீக? என்றாள்

“அட, என்னையப் பத்தின அக்கறை கவலை எதாச்சும் இருக்காடீ.... இவன் ஆரு, அதச் சொல்லு முதல்ல.... அவனோட உனக்கு பைக்ல என்னடி ஊர் சுற்றல்? என கொத்தாக அவளது தலை முடியை பற்றிக்கொண்டான்.

“ஆஹ் என அலறினாள்.

“விடுங்க, அவங்க தலைமுடிய விடுங்க என்றான் மருது முன்னே வந்து

“டேய், யாருடா நீ..... எம் பொஞ்சாதியோட உனக்கென்ன தொடுப்பு.... வெச்சிருக்கியா அவள? என்றான் நாராசமாக.

“வாய மூடுங்க அதிகம் பேச வேணாம்.... அவர் அசலூர்க்காரர்.... நம்ம வயல் தோப்பு தோட்டங்களை பார்த்துக்க உதவி செய்யறாரு.... மரியாதையா பேசுங்க என்றாள் ராஜி தலை முடியை விடுவித்தபடி

“வயல் வரப்பை பார்த்துக்கறானா, உன்னைய பார்த்துக்கறானா..... அவனோடு ஒன்றி முதுகில சாஞ்சுகிட்டு இல்ல ஒய்யாரமா வந்தே நீனு..... மரியாதையா நான் பேசணுமா? என்றான்.

“நீங்க போங்க, இத நான் பார்த்துக்கறேன் என்றாள் அவனை ஏறெடுத்து கூட பார்க்காமல் அவமானத்தில் குன்றிப் போய்.

“இருக்கட்டும்.... நிலைமை எனக்கு சரியாப் படலை.... என்றான் மெதுவாக.

“எம் பொஞ்சாதி என்னோட பேசறது உனக்கு சரியா படலையாடா, வேலைக்கார நாயி நீ, உனக்கென்ன அவ்வளவு அதிகாரம்..... அவ மேல என்ன அவ்வளவு அக்கறை....? என்றான் மீண்டும்.

“போதும், வாய்க்கு வந்தபடி எல்லாம் பேச வேண்டாம்.... அப்புறம் மரியாதை கெட்டுடும்.... அவுக புருஷன்னும் பார்க்க மாட்டேன் என்றான் மருது.

“ஆமாண்டா, அவ புருஷன் தான்.... நாந்தான் ஓடம பட்டவன்..... ஆனா என்ன செய்யறது, பட்டா மட்டும் தான் எம் பேர்ல இருக்கு... ஆண்டு அனுபவிக்கறதெல்லாம் வேறே எவன் எவனோ என்றான்.

காதை பொத்தியபடி ராஜி உள்ளே ஓடிவிட்டாள்.

அவளை அப்படி துடிக்க வைப்பவனை கொன்றால் தகுமா என யோசித்தான் மருது.

“இப்போ குடி போதையில் இருக்கே நீ, பேசாம போய் முடங்கு.... எதுவானாலும் காலையில பார்த்துக்கலாம் என்றான் குடிகாரனுடன் பேச விரும்பாமல்.

“போறதா, எங்கே.... நான் போய்டா நீ போய் படுக்கலாம்னு பார்க்கறியா? என்றான்.
“டேய் என கொத்தாக அவன் சட்டையை பிடித்தான் மருது.

“உண்மையச் சொன்னா கசக்குதோ என்று இளித்தான்.

அதற்குள் முனியன் கந்தன் அனைவரும் சைக்கிளில் வந்திவிட,
“ஐயோ இந்த கேடுகெட்ட பய எங்கே வந்தான் இந்த வேளையில...? என பதறி போயினர்.  மருது அவன் சொக்காயை பிடித்திருப்பதை பார்த்ததும், “என்னங்க சின்னையா? என்றான் கந்தன்

“ஒண்ணுமில்ல கந்தா, அசிங்க அசிங்கமா பேசிகிட்டு உங்க சின்னம்மாவ தொந்தரவு செய்யறான் இந்தாளு, அதான்,  நீங்க போங்க என்றான்.

“ஐயோ, இந்த கேடுகெட்டவன் கிட்ட நீங்க எதுக்குங்க உங்க மருவாதைய கெடுத்துக்கறீக..... எங்ககிட்ட விட்டுடுங்க, நாங்களாச்சு என அவனை இழுத்துக் கொண்டனர்.

“டேய் விடுங்கடா, எங்கேடா தூக்கிட்டு போறீங்க? எனத் திமிறினான்.

“ஆங், மாமனார் வூட்டுக்கு என்று அவனை அவனது வீடு வரை கொண்டு உள்ளே அடைத்து விட்டு வந்தனர்.

உள்ளே சென்ற ராஜி குமுறி அழுதாள். கடலாக கொந்தளித்தது மனது.... சினிமா கொட்டகையிலும் பைக்கிலுமாக அவளது மனம் நெகிழ்ந்ததென்ன.... அந்தக் குற்ற உணர்ச்சியே அவளை கொல்லுகின்ற நேரத்தில், இவன் எங்கிருந்து திடீரென்று முளைத்தான்..... எவ்வளவு கேவலமாக பேசுகிறான்..... இதற்கு முடிவும் விடிவும்தான் என்ன... எப்போது.... என ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள்.

புடவையைக் கூட மாற்றாமல் அப்படியே உறங்கியும் போனாள்.

காலை முழித்ததுமே, ‘ஐயோ கனகு ஊருக்குள் வந்துவிட்டானே என்ற கிலிதான் அவளைப் பிடித்தாட்டியது.


‘என்ன செய்வானோ, அவனுடன் போக வேண்டி வருமோ...? என பயத்தில் உள்ளம் படபடத்தது.

2 comments:

  1. Rajee in very critical condition. Feeling sad.

    ReplyDelete
  2. Thavarana mudivugalai thodaravendiya avasiyam ethumilai! Raji have to take a bold decision.kanagu liners thirumanam virumbatha genmangalai vilakuvathuthan siranthathu!

    ReplyDelete