Friday 20 July 2018

NENJIL KODI MINNAL - 17

“மாலையில நாம இங்க சமைக்கறத, கந்தனோ எம்மாமனோ, அவங்க கையில குடுத்து அங்கிட்டே அனுப்பீடலாம்... ஏன்னா கிழவிக்கு பாவம், ராவானா கண்ணு மங்கலாகீடும், அதேன் சொல்லுதேன்....  என்ன நான் சொல்றது கண்ணு? என்றாள்.

“அப்படியா சொல்றீங்க, இங்கிருந்து தினமுமா? என்றாள்.

“அதுக்கென்ன, இத்தனை பேர் இருக்கானுவ... டேய்னு குரல் கொடுத்தா கொண்டு குடுத்துட போறானுவ. சூடா ருசியா நேரத்துக்கு கிடைக்குமில்ல, நமக்காக தானே வாராக அவுக... நாமதானே கண்ணும் கருத்துமா பார்க்கோணம்....

“அவுகளுக்கென்ன பொஞ்சாதியா அம்மாவா... பொறந்தவளா... யாரும் இல்ல என்றாள்.

“ஓ அப்படியா, யாரும் இல்லியா? என்று கேட்டாள்.

“ம்ஹூம் பொட்டச்சியே கிடையாது வீட்டில.... இவுக அம்மா இவுக சின்னப்பவே போய்டாகளாம்.... அப்பாரும், இப்போதான் சில வருஷங்களுக்கு முன்னால போய்டாகளாம். தங்கச்சிய கட்டி குடுத்துட்டாக.... இப்போதைக்கு தனிக்கட்டை.... இன்னும் தான் கல்யாணம் கட்டல.... சொந்தத்தில பொண்ணுங்க இருக்காம்., ஹாங் பார்க்கலாம்னு... இவரும் தள்ளி போட்டுக்கிட்டு இருக்காராம் என்றாள் பொன்னி.

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? எனக் கேட்டாள் ராஜி.

“உக்கும், இந்த பொன்னிக்கு தெரியாத சேதி உண்டா ஊர்ல...? என்று சிரித்தாள்.
 “அதானே, நீங்கதான் ரேடியோ பெட்டியாச்சுதே என்று கிண்டல் செய்தாள் ராஜி.

‘ஹப்பா, இப்போதான் கொஞ்சமேனும் சிரிப்பு மீண்டுள்ளது என எண்ணிக்கொண்டாள் பொன்னி.

அடுத்த நாளே நந்தவனம் சுத்தமானது. வேண்டிய மளிகை மற்ற சாமான்கள் படுக்கை வசதிகள் அனைத்தும் தயாராகின.

அவனும் வந்தான். விடியற்காலையே குளித்து கிளம்பி தனது மொட்டார் சைக்கிளில் பெட்டியை பின்னே வைத்துகட்டிக்கொண்டு வந்துவிட்டான்.

அவன் தங்கப்போகும் வீட்டினை பார்த்ததும் அவனுக்கு ஆச்சர்யம்.

“இந்த வீட்டிலியா? என்றான் சந்தேகத்துடன். 

“ஏன் பிடிக்கலையா தம்பி?
என்றார் பெரியவர்.

“ஐயோ அப்படி இல்லீங்க, இது எனக்கு அரண்மனை.... இம்பூட்டு அழகா இருக்கு, பார்த்து பார்த்து கட்டினதுபோல, அருமையான இடம் பேருகேத்த நந்தவனம் அதான் சந்தேகமா கேட்டேன் என்றான் மனம் மகிழ்ந்து.

“ஆமா தம்பி. இந்த நந்தவனம், எங்க ராஜியினுடைய செல்லத் தோழி.... தினமும் ராஜி கண்ணு கொஞ்ச நேரமானும் இங்கதான் பொழுது போக்கும்...

நீங்க அங்க நல்லா வாழரவக, இங்க எங்களுக்காக வந்திருக்கீக.... அதான், இந்த வீட்டில தங்க வெச்சாதான் மரியாதை, உங்களுக்கும் வசதின்னு, அதுதான் முடிவு பண்ணிச்சு என்றார்.

“ஓ என உள் வாங்கிக்கொண்டான்.

வீட்டின் உள்ளே சென்று சுற்றிவர, மனம் சந்தோஷத்தில் துள்ளியது. ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து அருமையாக செய்யப்பட்டிருந்தது. ‘உண்மையாகவே நந்தவனம்தான், என ஒவ்வொரு பூச்செடியையும் தடவிகொடுத்தான். அவனுக்குமே இயற்கை என்றால் கொள்ளை பிரியம்தான். மனதுக்கு ரம்மியமானதொரு சூழ்நிலை என அகமகிழ்ந்தான்.

மீனாக்ஷி வந்திருந்து, உள்ளே இவனுக்கு வெந்நீர் போட்டு காலை உணவு சமைத்துக்கொண்டிருந்தாள்.

“இவுக மீனாக்ஷி அம்மா, தினமும் காலையில இங்கே வருவாக.... வீட்டு வேலை எல்லாம் செஞ்சுட்டு காலை உணவும் மதியத்துக்கும் செஞ்சுடுவாங்க. 

மாலையில நம்ம வீட்டிலேர்ந்து சூடா வந்துடும். ராத்திரி பாவம் இவுகளுக்கு கண் அவ்வளவா தெரியாது, அதனால இந்த ஏற்பாடு
என்றார் பெரியவர்.

“ஐயோ பாவம், அப்போ அவங்களை ஏன் தொந்தரவு செய்யணும், நான் என் சாப்பாட்டை எங்கேயாச்சும் வெளியில பார்த்துப்பேன் என்றான்.

“அட, அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க தம்பி. நாள் முச்சூடும் ஒண்ணும் பிரச்சினை இல்லை.... ராத்திரி ஆனா தான் கண் மங்கலாகத் தெரியும்.... இவுக செய்வாங்க.... இங்க, இந்த கிராமத்தில, என்ன காபி கடையா இருக்கு.... நீங்க போய் சாப்பிட.... அதெல்லாம் ஒண்ணுமே சிரமம் இல்ல.... அங்கிருந்து முனியனோ கந்தனோ கொண்டு வந்திருவானுக என்றார்.

சரி அப்படியே என்றான்.

குளித்து சிற்றுண்டி அருந்தியபின் இவர்களின் நிலத்தை நோக்கி நடந்தே சென்றான். அந்த ஊரின் அழகை ரசித்தபடி நடந்தான். கோவிலை கண்டான். உள்ளே சென்று வணங்கினான்.

‘எல்லோரும் எல்லாமும் பெற்று நலமாக வாழ வேண்டும் என வேண்டிக்கொண்டான். ‘இந்தப் புதிய முயற்சி எல்லோருக்கும் நன்மை பயக்க வேண்டும் எனவும் வேண்டினான்.

வெளியே வந்ததுமே பச்சை பசேல் என இவர்களின் நிலம் வரவேற்றது. 

‘ஹ்ம்ம், பரவாயில்லையே நல்லபடி பாசனம் செய்யப்பட்டிருக்கு போல.... நல்ல பயிர் வளர்ச்சி...
என உள்ளூர மெச்சிக்கொண்டான்.

அருகே செல்ல, அங்கே வரப்பின் மேல் ராஜி நிற்பதைக் கண்டான். சாதாரண நூல் சேலை கட்டி இருந்தாள். அதை லேசாக தூக்கி சொருகியபடி அவள் மெல்ல இவன் இருந்த திசையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அவன் அங்கேயே நின்றான். அவள் வந்து இவனைக் கண்டாள். 

‘ஓ, இவன்தான் போலும்...
என எண்ணிக்கொண்டாள். ஆறடி உசரத்திற்கு சற்றே கருத்த அளவான உடல் கட்டுடன் நிமிர்ந்து நின்றான். ஆணழகன் இல்லை என்றாலும் உழைத்து உரமேறிய உடலுடன் கண்ணுக்கு நிறைவாக இருந்தான்.

அவனைக்கண்டு புடவை கொசுவத்தை இறக்கிக்கொண்டு அவனருகே வந்தாள். அதற்குள் கதிரும் அங்கே வர, “ராஜேஸ்வரி, இவர்தான் மருதீஸ்வரன். நமக்கு உதவ வந்திருக்காரு. பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவரு. உனக்குத்தான் மிச்சமெல்லாம் தெரியுமே என்றான்.

“ம்ம் என தலை அசைத்தாள். அவனை நிமிர்ந்து நேராக பார்த்து கை கூப்பி வணங்கினாள்.

“வணக்கம், உங்க ஊர், நிலம் சொத்துன்னு எல்லாத்தையும் விட்டுட்டு எங்களுக்காக எங்க ஊர் மக்களுக்காகன்னு நீங்க உதவ முன் வந்ததுக்கு ரொம்ப நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கேன் என்றாள்.

“வணக்கம். அது ஒண்ணும் பெரிய விஷயமில்ல. பார்த்தவரைக்கும் நீங்க நல்லபடியாதான் செஞ்சிருக்காப்போல தெரியுது.... என்ன என்ன நிலம், பண்ணைகள், தோப்பு வெவரம்னு விலாவரியா தெரிஞ்சுக்க விரும்பறேன் என்றான்.

“கண்டிப்பா. உங்களுக்கு தங்கற அந்த வீடெல்லாம் வசதியா இருக்குங்களா? என்றாள் மரியாதையாக.

“ஆஹா, நிஜமான நந்ததவனமேதான். ரொம்ப பிடிச்சிருக்கு.... அது உங்க உற்ற தோழின்னு கேள்விபட்டேன்... என சிரித்தான்.

“ஓ அதுவா, பெரியப்பா சொன்னாகளா, ஆமா சின்ன வயசுலேர்ந்து அங்கே போய் வந்து எனக்குப் பழக்கம். ரொம்ப பிடிச்ச இடம் என்றாள் கூச்சத்துடன்.

நல்லா அமைச்சிருக்கீக. மனசுக்கு ரம்மியமா இருக்கு.... உங்க மனசுக்கு நெருக்கமானதுன்னு சொன்னா அதில ஆச்சர்யப்பட ஒண்ணுமே இல்ல. என பாராட்டினான்.

“நன்றி. நம்ம நிலத்த பார்க்கலாமுங்களா? என நடந்தாள். எந்தக் கோடி முதல் எந்தக் கோடி வரை தங்களது நிலம் என காட்டினாள். என்ன பயிர் செய்யப்பட்டிருக்கிறது என்ற வெவரம் கூறினாள்.

மாந்தோப்பும் தென்னந்தோப்பும் சுட்டி காட்டினாள். 

“இதைத் தவிர ஒரு பெரிய மாட்டுப் பண்ணை இருக்கு, பூந்தோட்டம் இருக்கு.... உரம், பூச்சிகொல்லி மருந்துகள் கொஞ்சம் தயார் செய்கிறோம், கொஞ்சம் வெளியே வாங்கி இங்கே விவசாயிகளுக்கு விற்பனை செய்யறோம்..... இதை எல்லாத்தையும் பார்க்க ஒரு ஆபீசும் பக்கத்திலேயே கோடவுனும் இருக்கு
என்றாள்.

“பலே பேஷ், பரவயில்லையே.... ஓரளவு கேள்விபட்டிருக்கேன் தான், ஆனா, இவ்வளவு விரிவா இருக்கும்னு நெனக்கல.... பெரிய பொறுப்புகள கொடுத்திருக்கீக.... நீங்க உங்கப்பாரு எல்லாம் செஞ்சத கெடுக்காமையானும் இருக்கோணும்.... நல்லது செய்யாட்டி போனாலும் நஷ்டம் வராம பார்க்கோணும்னு பயம் வருது என்றான் உண்மையாக.

“ஐயோ, நீங்க என்னங்க.... உங்களுக்கு என்னமோ முன் அனுபவமே இல்லாத மாதிரி பேசறீக மருதீஸ்வரன் என்றான் கதிர்.

“இல்ல கதிர்வேலன், அப்படி இல்ல, பயம் அப்படீங்கற பட்டாம்பூச்சிகள் எல்லோருடைய வயிற்றிலும் பறந்துகொண்டே இருக்கணும், அப்போதான் மனமும் உடலும் அந்த குருகுருப்பில நல்லபடியா வேலை செஞ்சுகிட்டே இருக்கும்.... செய்யற காரியம் நல்லபடியாகவும் அமையும்....

“அது இல்லாம, ஆங், அதான் நமக்கு எல்லாம் தெரியுமேன்னு எண்ணம் வந்துட்டா அவ்வளவுதான், இருக்கிற இடத்திலேயே தேங்கி நின்றிவிடுவோம், முன்னேற முடியாது என்றான்.

அவனின் ஆழ்ந்த கருத்துக்களைக் கேட்டு அவள் அசந்து போனாள். கதிரை பிரமிப்புடன் பார்த்தாள்.

‘பார்த்தாயா என்று அவனும் கண்ஜாடை செய்தான்.

நாட்கள் நகர்ந்தன. அவன் வந்த வேகத்தில் மளமளவென காரியத்தில் இறங்கினான். புது புது பயிர் பாசன வழி முறைகளை புகுத்தினான். அதனால் சாகுபடி பெருகியது. பக்கத்து டவுனிலிருந்து உழுவதற்கென ட்ராக்டர்களும் மற்ற புதிய மாடல் உபகரணங்களை தேர்வு செய்து வாடகைக்கும் சொந்தமாகவும் என வாங்கி வந்தான். இதனுதவியால் வேலை எளிசானது.

பண்ணையில் பால் வளம் பெருகியது. மூன்று மாதங்கள் ஓடியதே தெரியவில்லை.

ராஜியும் முழு மூச்சுடன் அனைத்திலும் பங்கு கொண்டாள். அவளால் முடிந்தாலும் இல்லையெனினும் தினமும் அனைத்து இடங்களுக்கும் சென்று அவனுக்கு தோள் கொடுத்தாள்.

‘நான், என் பொறுப்பு... என்று இல்லாமல் அவனும் ஒவ்வொன்றையும் அவளுடன் கலந்தாலோசித்தே செய்தான். மேடம் என அழைத்தான்.

“ராஜின்னு அழைக்கலாமே என்றாள் ஓரிரு முறை.

“இருக்கட்டும் என்றுவிட்டான். அவளும் அவனை “மருது சார் என அழைத்தாள். அவன் அதை மறுக்கவில்லை.

இவன் வந்ததால் அவள் தனது நந்தவன நேரங்களை இளம் மாலைக்கு மாற்றிக்கொண்டாள். அவன் உழவு நேரம் முடிந்து வீட்டிற்கு வர எப்படியும் மணி ஆறுக்கு மேல் ஆகும் என்பதால் அவள் முடிந்தவரை நான்கிலிருந்து ஐந்திற்குள் வந்து அங்கே தோட்டத்தில் ஒரு மணி நேரம் கழித்துவிட்டுச் செல்வாள்.

ஒவ்வொரு மாலையும் தன் கையால் துளசிக்கு நீர் வார்த்தாள்.  பூச்செடிகளை தொட்டு நீவினாள்.... அப்போதே பூத்த ஜாதி, முல்லை, மல்லி அரும்புகளை சேகரித்துக்கொண்டு செல்வது வழக்கம். ஓரிரு முறை அவள் அப்படி சேகரித்துக்கொண்டு செல்கையில், வேளையோடு வீட்டிற்கு வந்தவன், அவளைக் கண்டான். வெறும் புன்னகையோடு சரி.

அவனில்லாதபோது வீட்டினுள்ளும் ஓரிரு முறை சென்று பார்த்தாள். மீனாக்ஷியம்மா நன்றாகவே வைத்திருந்தார் வீட்டை. அவனும்தான் தன் சாமான்களை வாரி இறைக்காமல் அழகாக அடுக்கி வைத்துக்கொண்டு கச்சிதமாக குடித்தனம் செய்தான். அவளுக்கு மனம் நிறைந்தது.

அவன் வரும் சந்தடி கேட்டால், ஒசைபடுத்தாமல் மெல்ல பூனை போல நழுவி தோட்டத்தின் வழியே வாயிலுக்கு வந்து வெளியே நடந்துவிடுவாள். அரவம் கேட்டதே என அவன் சுற்றி பார்க்கும்போதே அவள் சென்றிருப்பாள். 

‘இருக்கற இடம் கூடத் தெரியாம எப்படித்தான் வாழுராக...
என்று புன்னகைத்துக்கொள்வான்.

அவனை பொறுத்தவரை மிக மதிப்பாக அவளை நடத்தி, அணுகி, வேலை செய்தான். மணமானவள் என்ற அந்த மரியாதை எப்போதுமே காப்பாற்றினான்.

அவளோ அவன் கண்ணில் அனாவசியாமாக படவே விரும்பவில்லை. பட்டினம் அல்லாது இது கிராமம். ‘ஊரில் நாலுபேர், இவள் தன் வீடே ஆனபோதிலும், அங்கே சென்று வருவதைப் பார்த்து கதை கட்டினால் தன் பெயர் கெட்டுவிடும், வேண்டுமோ வேண்டாமோ மணமாகியவள்.... அதன் மரியாதையை காக்க வேண்டும். தாலிக்கு மதிப்பு தந்துதானே ஆக வேண்டும் என நினைத்தாள்.

கனகராஜினைப் பற்றி விசாரிக்க கூறி இருந்தாள். அன்று ஓடியவன் தான்.... விசாரித்ததில் மீண்டும் கைது எனத் தெரிய வந்தது... கைச்செலவுக்கு பணம் இல்லாமல் போன காரணத்தால், யாருடனோ வேண்டாத சேர்க்கை கொண்டு பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு, அவன் ஏதோ செய்யப்போக, அது ஏதோ கடத்தல் சம்பந்தமானதாக முடிந்தது.... இவனையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.... ஜாமீனில் எடுக்கவும் ஆளில்லாமல், கையில் பணமும் இல்லாமல் ஆறு மாத தண்டனை கிடைத்திருந்தது... என தெரிய வந்தது.

‘ஹ்ம்ம் என பெருமூச்சு வந்தது. ‘தனக்கு மட்டும் ஏன் இப்படி... என வெகு சில நேரங்களில் தன்னிரக்கம் கொள்வதுண்டு. நடக்க வேண்டியது நடந்தே தீரும் இதில் யாரைச் சொல்லியும் குற்றமில்லை என தன்னைத்தானே தேற்றிக்கொள்வாள்.

மருது கதிரிடம் ஒரு நாள் இதைப்பற்றி பேசினான்.

இங்கே இவன் வந்த இந்த மூன்று மாதங்களில் கதிரும் மருதுவும் உற்ற நண்பர்களாகி இருந்தனர்.

“ஏன் கதிரு, மேடமுக்கு போய் எப்படி பெரியவரு அப்படி ஒரு மாப்பிள்ளைய பார்த்தாரு.... அவன்கிட்ட என்ன இருக்குன்னு அந்த தருதல பயலப் போய்.... இவங்க அழகென்ன, படிப்பென்ன, அறிவென்ன, பண்பென்ன... என்றான் ஆற்றாமையோடு.

“ஐயோ மருது, ஏன் கேக்கறீங்க.... அதானே கொடுமையே. நாங்க எல்லாம் எத்தனையோ சொன்னோமே, வீட்டோட மாப்பிள்ளைன்னு ஐயா மயங்கீட்டாரு..... நிறைய நல்ல மாப்ளைங்க அப்படி வர இஷ்டப்படல.... இந்த கொரங்கு பய பணத்துக்கு ஆசைப்பட்டு ஒத்துகிட்டான். என்னமோ நடக்கக்கூடாதது நடந்திடுச்சு.... இப்போ ராஜேஸ்வரி அவதி படுது பாவம் என்றான் கலங்கிய மனதுடன்.

“ஏன் கதிர், அவங்கள எப்போதுமே அப்படித்தான் அழைப்பீங்களா? என்றான் ஆச்சர்யத்துடன்

“ஆமா மருது, எனக்கென்னமோ அந்தப் பெயர் அவங்களை முழுமைபடுத்துதுன்னு தோணும்.... நான் அவங்க மேல ரொம்ப மதிப்பு மரியாதை வெச்சிருக்கேன்....

இத்தனை நடந்த பின்னும், துணிஞ்சு நிக்கிறா ராஜேஸ்வரி..... அந்தத் துணிவு நேர்மை, பாரதி கண்ட புதுமைப் பெண்ணை எனக்கு ஞாபகப்படுத்தும்... என்றான் உணர்ச்சிபொங்க

“உண்மைதான், பாராட்டியே ஆகணும், ஆனா அவங்க வாழ்க்கை இப்படி பாழாகிவிட்டதே.... அவன இவங்க விவாகரத்து பண்ணீட்டு வேற நல்லவன் ஒருத்தன பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாமே...? என்றான்.

அந்த நொடியில் மருதுவின் கண்களில் ஒரு சிறு கீற்று போன்ற மின்னலை கண்டானோ என கதிருக்கு சந்தேகம் தோன்றியது. கண்களை இடுக்கி அந்த நொடியில் அவன் மருதுவை ஓரக்கண்ணால் பார்த்தான். 

‘ஒரு வேளை... சரி...
என அதை மறைத்துக்கொண்டான்.


2 comments:

  1. Suuuper! Come on! Marudhu should start thinking about Raji seriously now!

    ReplyDelete