Tuesday 24 July 2018

NENJIL KODI MINNAL - 21

அடுத்த நாள் அவளைக் காணவென சென்றான். வெளிர் நிறமானதொரு நூல்சேலை கசங்கி இருக்க, எந்தவித அலங்காரமும் இன்றி... கலைந்த தலையுமாக அமர்ந்திருந்தாள். கையில் காதில் கழுத்தில் ஏதும் அணிந்திருக்கவில்லை. மூளியாக அவளை அப்படி பார்க்கையில் உள்ளம் தவித்துப் போனது.

அவனை “வாங்க என்றாளே ஒழிய கண்ணெடுத்தும் காணவில்லை.

“என்ன இது கோலம்? என்றான் மனம் கேட்காமல்.

களையிழந்து தூசி படிந்த வீணையைப் போல அவளை அந்நிலையில் கண்டு அவனது உள்ளம் ரத்தம் சிந்தியது.

“ஒண்ணுமில்ல, நீங்க சொல்லுங்க.... ஏதானும் அவசர ஜோலியா? என்றாள் அவனை சீக்கிரமாக அனுப்பிவிடும் எண்ணத்துடன்.

“ஏன், நான் வந்ததில உங்களுக்கு ஏதானும் தொந்தரவா? என்றான் மருது நேராக பார்த்து.

“ஐயோ, அப்படி எதுவும் இல்லை என அவசரமாகக் கூறி தலை நிமிர்ந்தாள்.

“பாருங்க, நான் அசலூர்க்காரந்தான், சொந்த பந்தம்னு எதுவும் இந்த குடும்பத்தோட இல்லாதவன்தான்... ஆனாலும் நான் சொல்லப் போறத நீங்க தயவு பண்ணி கேட்டுக்கணும். இப்போ நான் பேசறது குரூறமா தோணலாம். யோசித்து பார்த்தா நா சொல்றதில இருக்கிற நன்ம புரியும் என்றான்.

என்ன என்பது போல அவனை பார்த்தாள்.

“உங்களுக்கு நடந்தது ஒரு பொம்மை கல்யாணம்.... பெரியவரு ஏதோ நெனச்சு ஏதோ எண்ணத்தில நடத்தின ஓரு பெரிய தவறு..... அத கல்யாணம்னு கூட சொல்ல முடியாது.

“நடந்த நாள் முதல் அவன் உங்கள சித்திரவதை செய்திருக்கான்.... பாதி நாளு ஜெயில்ல கழிச்சிருக்கான்...... மிச்ச நாளு குடி போதையிலும் சீட்டாட்டத்திலேயும் கூத்தியாளோடையும் கழிச்சிருக்கான்.

நீங்க அவன உங்க பக்கம் ஆண்ட விடாதது மட்டுமில்லை மனசாலையும் அவன தொடல.... அவனையும் தொட விடலை..... இந்த நிதர்சனம் இந்த ஊருக்கே தெரிஞ்ச ரகசியமா போச்சுது....

“அப்படி இருக்க, அவன் செத்ததுக்கு நீங்க துக்கம் கொண்டாடறீகளா, இது என்ன கோலம், நீங்க படிச்சவகதானே... நீங்க இப்படி துவண்டுட்டா உங்க ஊர் மக்களை யாரு காப்பாத்துவா..... நான் என்னிக்கிருந்தாலும் அசலூர்காரந்தானே.... நாளைக்கு கிளம்பி போய்ட்டா, இந்த ஊர் ஜனங்க அம்மான்னு யார்கிட்ட ஓடி வருவாங்க..... அவங்களுக்காகவானும் நீங்க துணிந்து நிக்க வேண்டாமா....

“இப்போ என்ன ஆயிடுச்சு, அவன் தகாத முறையில நடந்தான்.... தீராத அவமானம் செய்தான்... செத்தான். ஒழிஞ்சான்னு விட்டுட்டு உங்க கடமையா நீங்க செய்ய வேண்டாமா.... உங்க துயரம்தான் உங்களுக்கு பெரிசா போச்சா.... சின்னம்மான்னு ஊரே உங்கள எண்ணி அங்கே உருகுதே வாடுதே, நீங்க நல்லா இருக்கணும் இப்போதானும் உங்களுக்கு நல்லகாலம் பிறக்கணும்..... இனியானும் நல்லபடி உங்க வாழ்வு விடியட்டும்னு என்கிட்டேயே பல பேர் சொல்லிட்டாக.

“எல்லாத்தையும் விட உங்கப்பாரு ஆத்மா இப்போதான் சாந்தியாகி இருக்கும்.... அத விடுங்க, கதிர் என்ன நினைச்சு எதுக்காக துணிச்சலா இப்படி ஒரு காரியத்த பண்ணினாவ.... யாரோட நல்வாழ்வுக்காக பண்ணினாவ.... நீங்க நல்லா இருக்கணும்னு அவரு இப்போ ஜெயில்ல இருக்காரு..... நீங்க இப்படி சோம்பி சுருண்டு கலைந்து நின்னா, அவர் அங்க ரொம்ப நிம்மதியா இருப்பாருன்னா நினைக்கறீக? என்றான் நிதானமாக.

அவன் கேட்ட, சொன்ன, ஒவ்வொன்றும் தலையில் அடித்தது போல அவள் மனதில் உள்வாங்கியது.

நிஜம்தானே என்றது மனம்... ஆனாலும், ஆனாலும், என்று குமுறியது நெஞ்சம்.

“நீங்க சொல்றத நான் எதையுமே மறுக்கல, ஆனாலும்...
என்றாள்.

இத்தனை வருடங்களாக வராத கண்ணீர் கட்டுக்கடங்காமல் பொங்கியது.

“என்ன ஆனாலும்? என்றான். அவளை தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் வெளியே கொட்ட வைத்திட வேண்டும், லேசாகும் என்ற எண்ணத்துடன்.

“இல்ல வந்து, என்ன ஆனாலும் அவுக என் புருஷன் இல்லையா..... அவுகளோட போய் நான் குடித்தனம் செய்திருக்க வேணுமோ  என்னமோ..... அவுகளுக்கு சொல்லப்பட்டு அழைத்து வந்ததைப்போல எதையுமே நாம செய்யலைன்னுதானே அவுகளோட கோவம் ஆத்திரம் எல்லாமே.... சொத்துக்களானும் பாழாகும்னு பயந்தது நியாயம், ஆனா, நான் என்னை... என தடுமாறினாள்.

“ஹ்ம்ம் என்ன நான் என்னை..... உங்களை அவனுக்கு குடுத்திருந்தா மட்டும், உங்களையும் ஆண்டு அனுபவித்து, உங்க வாழ்க்கையையும் நாசமாக்கீட்டு, இதே போல குடி சீட்டாட்டம் கூத்தியாளுன்னு அவன் அலைஞ்சிருப்பான்.

“நீங்களும் போதாம, அலுத்து, பின் உங்கப்பா கஷ்டப்பட்டு சேர்த்த சொத்தும் அவன் கையில மாட்டி சீரழிஞ்சிருக்கும்.... அப்போ, அத பார்த்து, உங்கப்பா, ‘ஆஹா எம் மக ஆனந்தமா வாழுறானு சந்தோசப்பட்டிருப்பாக. ஊர் மக்களும் உங்கள நாசமாக விட்டுட்டு மகிழ்ச்சியா தங்க வேலைய பார்த்திருப்பாங்க அப்படிதானே...?.

“ஏன் ஏன் இப்படி.... புத்தி அசலுகே இல்லியா.... எப்போதுமே இப்படிதானா.... இல்ல இப்போதான் மழுங்கிடுச்சா...? என்றான் கொஞ்சம் கிண்டலும் கேலியுமாக கொஞ்சம் கோபமாக.

அவள் அவன் சொல்வதைக் கேட்டு அதிர்ந்தாள்.

‘சொல்வது நிஜம்தானே.... நான் நாசமாகி இருந்தால் அப்பா தாங்குவாரா.... என் வாழ்வு சீரழிவதைக் கண்டு இப்போது போன மனிதர் எப்போதோ போயிருப்பார் அல்லவா என்று துடித்தாள்.

“நான் இப்போ என்ன செய்யணுங்கறீக? என்றாள் சிறு பிள்ளை போல.

‘ஹப்பா என்றிருந்தது மருதுவுக்கு.

“முதல்ல இந்த கோலத்த மாத்தணும்..... இந்த ஊரின் பண்ணையார் மகள், சின்னம்மாவாக மாறணும்..... எப்போதும் போல துணிந்த நெஞ்சமும், நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், உங்க மிடுக்கும் அன்பும் பாசமும் குறையாம, அவங்க நடுவில வளைய வரோணும்...... அவங்க சுக துக்கத்தில பங்கெடுக்கோணும்.... பெரிசு இல்லைன்னாலும் சின்னம்மா இருக்காவன்னு அவங்களுக்கு தைர்யம் வரோணும்.

“வேலைகள் எப்போதும் போல நடக்கோணும்... சிரித்த முகமா இருக்கோணும்.... நீங்க சந்தோஷப்பட்டா அதுதான் இங்க இருக்கிறவங்களுக்கு டானிக் மாதிரி என்றான்.

“சரி முயற்சிக்கறேன் என்றாள். ‘ஆனாலும் என்றாள்.

“மறுபடி என்ன ஆனாலும்? என்றான்.

“நீங்க ஆயிரம் சொன்னாலும், பாவம் கதிர் அண்ணா, என்னாலதானே அவர் இப்படி... என்றாள் நீர் முட்ட.

“ஆமா பாவம்தான்.... ஆனா, அதுக்கு நீங்க அழுதுகிட்டு இங்கே இப்படி இருந்தா அவர் மட்டும் அங்கே நிம்மதியா இருப்பாரா?

“கதிர், இரண்டு வருடங்கள் வெளிநாடு போயிருக்காருன்னு நினைச்சுக்குங்க.... அவர் சார்பில நாம ரெண்டு பேரும் எந்த குறையும் வைக்காம அவர் வேலைகளை பங்கு போட்டு செவ்வனே செய்து முடிக்கணும்..... எனக்கும் கணக்கு வழக்கு கொஞ்சம் தெரியும்..... நீங்களும் ஒண்ணும் பச்சை புள்ளை இல்லை.... நடக்கும், நடக்க வைப்போம் என்றான்.

“சரி, நான் இப்போ என்ன செய்யோணும்?

“நாளைக் காலையில, எப்போதும் போல, நான் நம்ம நிலத்தில் காத்திருப்பேன்..... அடுத்த போகம் என்ன, எப்படி... என்ன சாகுபடி எல்லாம் பேச வேண்டியதிருக்கு...

உங்கள எப்போதும் போல அங்க எதிர்பார்க்கிறேன் என்றான்.

சரி என தலையை ஆட்டினாள்.

“நல்லது, நான் கிளம்பறேன்” என வணங்கினான். அவளும் வணங்கினாள்.

அவன் சென்ற பின்னும் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வாக்கியமும் காதில் ஒலித்தது.

‘ஆமாதானே, சரிதானே... என எண்ணி மெல்ல தெளிந்தாள். முதலில் சென்று குளித்தாள். ஈரத் தலையை முடிச்சிட்டபின் பளிச்சென ஒரு சேலையை எடுத்து உடுத்தினாள்..... தாலி கயிற்றையும் அதன் கூட இருந்த தங்கச் சங்கிலியையும் கழட்டி உள்ளே வைத்து பூட்டி இருந்தாள். வேறே ஒரு மெல்லிய சங்கிலியை எடுத்து லக்ஷ்மி டாலருடன் அணிந்தாள். தாயே நீ துணை என வேண்டினாள்.

கையில் காதில் எப்போதும் போல மெல்லிய நகைகளை அணிந்தாள்.... நெற்றியில் இட குங்குமத்தை தொட, கைகள் நடுங்கியது. சின்னதாக ஒரு பொட்டினை மட்டும் ஒட்டிக்கொண்டாள்.... இப்போது அவளுக்கே கண்ணாடியில் அவளை பார்த்துக்கொள்ள பிடித்திருந்தது.

ஹாலுக்கு வர, பொன்னி அவளை பார்த்து அசந்தாள். அவள் முகம் வழித்து சொடுக்கினாள்.

நீர் திரையிட்ட கண்களுடன், “இப்போ எம்பூட்டு நல்லா இருக்கு.... என்றாள் கொள்ளை சிரிப்புடன். இவளும் புன்னகைத்தாள்.

‘மருது சொன்னது நிஜம்தான். ஒரு பொன்னி மட்டுமல்ல, இந்த ஊரே இவளை இப்படித்தானே பார்த்திருக்கின்றனர்..... இப்படிதானே பார்க்க விரும்புவர்.... அவர்களுக்காகவானும் தான் மாறத்தான் வேண்டும் என முடிவு செய்துகொண்டாள்.
வீட்டின் நாலாபுறமும் சென்று அவளைப் போலவே களை இழந்து கிடந்த வீட்டை ஒழுங்குபடுத்தினாள். பொன்னியும் மற்ற வேலைக்காரர்களும் சுத்தமாக வைத்திருந்தபோதும், அதை அதை அங்கங்கே வைக்க அவளால்தானே முடியும்.

வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு சாப்பிட அமர்ந்தாள்.

“பொன்னிக்கா பசிக்குது, என்ன சமையல்? என்றாள்.

பொன்னிக்கு அழுகையே வந்துவிட்டது.

“தோ எடுத்தாறேன், எல்லாமே உங்களுக்கு பிடிச்ச ஐடம்தேன் என உள்ளே ஓடினாள்.
“பெரியப்பா, வாங்க சாப்பிடலாம் என அவரையும் அழைத்து இறுத்தினாள்.

“ஹப்பாடீ, இப்போ எவ்வளோ நல்லா இருக்கு, நீயும் இந்த வீடும் என்றார் அவரும் மனம் நிறைந்து.

இருவரும் சாப்பிட்டனர்.

மாலை எழுந்து, “அக்கா நான் நந்தவனத்துக்கு போயிட்டு வரேன் என நாலு மணியோடு கிளம்பினாள்.

“ஆத்தா என் வயித்தில பால வாரத்தே என கும்பிட்டாள் பொன்னி.

நந்தவனத்தை அடைந்தாள். சுற்றிலும் பார்த்தபடி செடிகளை கையால் தழுவியபடி நடந்தாள்.... நீர் பாய்ச்சும் பைப்புடன் அனைத்துக்கும் தன் கையால் ஆசை தீர வெகு நாட்களுக்குப் பிறகு நீர் வார்த்தாள்.

சில்லென நீர் பட்டதும் சிலிர்த்து சிரித்தன பூக்களும் செடிகளும் கொடிகளும்.... அவைகளின் உற்சாகம் அவளையும் தொற்றிக்கொண்டது.... கொஞ்சமாக பூக்களை பறித்து கூடையில் போட்டாள்.... கிணற்று மேடை அருகே உள்ள புறா கூட்டினை பார்க்கச் சென்றாள். அவைகளுக்கு உணவு வைத்தாள்.

“கீச் கீச்சென கத்தி தீர்த்தன குருவி குஞ்சுகள். 

“வரேன் வரேன், என்ன ஒரே அமர்க்களம்.... ஒவ்வொண்ணாதானே செய்ய முடியும்...
என சிரித்து பேசியபடி அவைகளுக்கு தீனி வைத்தாள். ஆசையாக உண்டன. அதைப் பார்த்து மனம் நிம்மதி பெற்றாள்.

நீர் பாய்ச்சியதில் மண் குளிர்ந்து, ஈர மண்ணின் வாசனை கும்மென்று வீசியது..... கூடவே மலர்களின் நறுமணமும் காற்றில் கலந்து வந்தது.... அந்தி சாயப்போகும் அந்த வேளையில், அந்த சூழ்நிலை அவளின் மனப்புண்ணை மிக வேகமாக ஆற்றியது.

அங்கிருந்து பூக்கூடையுடன் வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் வந்து சென்றதன் அடையாளங்களைக் கண்டான் மருது அன்று மாலை.

‘ஓ, ரொம்ப நல்லது.... மெல்ல மாறுவாள் என புன்னகைத்துக்கொண்டான்.

அடுத்த நாள் எழுந்து குளித்து சிற்றுண்டி உண்டுவிட்டு தெய்வத்தை வணங்கி எப்போதும் போல வரப்பு மேட்டை நோக்கி நடந்தாள்.

“காரில் போலாமுங்க என்றான் கந்தன் மனம் மகிழ்ந்து.

“வேண்டாம் கந்தா, எத்தனை நாளாச்சு, காலார நடக்கலாம் என்றாள். அவனும் கூடவே நடந்து வந்தான்.

வரப்பு மேட்டை அடைந்தபோது அப்போதே மருது அங்கே வந்திருந்து அங்கிருப்போரிடம் ஏதோ கூறிக்கொண்டிருந்தான்.

அவளைக் கண்டதும் அவளருகில் வந்தான்.

“ரொம்ப தாங்க்ஸ் என்றான்

“எதுக்கு, நானில்ல நன்றி சொல்லோணும் என்றாள் ஆச்சர்யத்துடன்
“இருக்கலாம், ஆனா, என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு, நான் சொன்னதையும் ஏற்று, நீங்க என் சொல்படி கேட்டு நடந்ததுக்கு நாந்தான் நன்றி சொல்லோணும் அதான்... என்றான்.

அவள் நெகிழ்ந்து போனாள். எத்தனை எத்தனை பேர் எத்தனை விதமாக தன்னிடம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கின்றனர் என மனம் நிறைந்தது.

வழக்கம் போல அடுத்து என்ன என திட்டமிட்டுக் கொண்டனர்.

இனி கதிர் செய்த வெளி வேலைகள் பாங்க் வேலைகளை தான் மேற்கொள்வதாக அவளே முன்வந்து கூறினாள். அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தவன் “அப்படியே என்றான்.

அடுத்த நாள் முதல் காரை தானே ஒட்டியபடியோ அல்லது கந்தனை ஓட்டச் சொல்லியோ பக்கத்து டவுன் வேலைகளை பார்க்கச் சென்றாள்.

உரகிடங்குக்கு மேலும் தேவைப்பட்ட உரம், மருந்துகள், பூச்சிக்கொல்லிகள் அனைத்தையும் தானே சென்று தேர்வு செய்து ஆர்டர் தந்து வந்தாள்.

நிறைய நின்று போயிருந்த வேலைகள் மளமளவென நடக்கத் துவங்கியது. அடுத்த மாதத்தில் ஒரு நாள் மருது கதிரை காண ஜெயிலுக்குச் சென்றான். அவனிடம் ராஜியின் மாற்றங்களைப் பற்றி கூற, கதிருக்கு மனம் நிறைந்தது.

“ரொம்ப நன்றி மருது, அவங்கள இந்த நிலைக்கு மாற்றி இருக்கீக... இதுவே பெரிய சேஞ்ச் என்றான்.

“ஆமா எனக்கு அதில சந்தோஷம்.... ஒண்ணும் தெரியுமா கதிர், நீ செய்த எல்லா வேலையும் இப்போ அவுகளே பார்க்கிறாக.... தனிச்சு தானே கார் ஓட்டிகிட்டு போய் செய்யறாக என்றான்.

“ஓஹோ, சந்தோஷமா இருக்கு... நிறைவா இருக்கு.... எங்கே அப்படியே ஒடுங்கீடுவாளோன்னு நான் ரொம்ப பயந்தேன் என்றான்.

“ஆனா தன்னால்தான் நீ இங்கே வந்துட்டேன்னு ரொம்ப ஆழமான வருத்தம்.... அத மாத்த என்னால முடியல என்றான் அவனும் வருந்தி.

“எனக்கென்ன, இங்கே ஒரு கஷ்டமும் இல்லை.... சும்மா இருப்பானேன்னு இங்கே  இருந்தபடியே மேலே படிக்கிறேன்.... கம்ப்யூடர் கத்துக்கறேன்.... எனக்கு ஸ்பெஷல் பர்மிஷன் கிடைச்சிருக்கு.... உருப்படியா என் நேரத்தை சிலவழிக்கிறேன்.... அவகிட்ட சொல்லுங்க.... நானும் கடிதம் போடறேன்.... அவ சந்தோஷப்படுவா என்றான்.

“கண்டிப்பா என்று விடைபெற்றான்.

ஆறு மாதங்கள் இப்படியாக ஓடிட, ஆடி பட்டம் தேடி விதை விதைத்தனர். நல்லபடி பயிராகியது.

நாற்றங்காலுக்கு நீர் பாசனம் சரியாக உள்ளதா என சுற்றிலும் பார்த்துவிட்டு மனம் நிறைந்து வரப்பின் மேல் நடந்து வந்தாள் ராஜி.

ஒடிசலான அவள் தேகம், வெண்ணிலவாக அந்தி வான நேரத்தில் ஒளிர்ந்தது.... வீசிய ஆடி காற்றில் அவளது நீண்ட கூந்தல் அடங்காது முகத்தில் விழுந்து வம்பு செய்தது..... புடவை ஒரு பக்கம் காற்றில் ஆடியது.... அதனை இழுத்து சொருகினாள்.... பின்னலை ஒதுக்கி விட்டபோதும் முகத்திலேயே வந்து விழுந்தது.... சி போ என செல்லமாக அதை மீண்டும் நெற்றியின் மேலே ஒதுக்கினாள்.

அடித்த காற்றில் அம்மியே பறக்கும் போல இருந்த நிலையில் அவளது ஒடிசலான தேகமும் நடை தடுமாறியது.... அடுத்தது சேற்றில்தான் விழப்போகிறோம் என்று பயந்தாள்...

அதே நேரம் கால் வேறு சேற்றில் சறுக்கப் பார்த்தது..... சட்டென அவள் விழாமல் பின்னிருந்து ஒரு கை முன்னே வந்து அவளது கையைப் பிடித்தது.

‘ஐயோ, யாரது என் கையைப் பிடிப்பது? என பயந்து திரும்ப, இருந்த நிலையும் போய் கால் சறுக்கியது.



2 comments:

  1. Nice cliff hanger! Kalakkals!!!

    ReplyDelete
  2. Stress relief for Raji and also for us while reading.

    ReplyDelete