Thursday 26 July 2018

NENJIL KODI MINNAL - 23

ஆனால் பகல் பொழுதை இப்படியாக விரட்டினாலும் இரவு என்பது அவளை கொன்றது. அவனை எத்தனைக்கு எத்தனை பார்க்காமல் மணத்தை அடக்கி ஆண்டாலும் அத்தனைகத்தனை அவள் நினைவில் இப்போதெல்லாம் அவனே முழுவதுமாக குடி கொண்டிருந்தான்.

அனைவருக்கும் இவள் சின்னம்மா என்றால் அவனே சின்னையாவானான். அவனை பற்றி யார் அவளிடம் என்ன பேசினாலும் அவளுக்கு இனித்தது. முகத்தில் தன்னை வெளிபடுத்தாமல் மனதார காதார கேட்டு இன்புற்றாள்.

அன்று இரவும் கூட படுக்க சென்றவள், அவனையே நினைத்து உருகி கிடந்தாள், தன்னையே தடுக்க முடியாமல் தவித்து கிடந்தாள்.... அவனைப் பார்க்க வேண்டும் போல.... அவன் குரலை கேட்க வேண்டும் போல.... ஒரு பெரும் ஏக்கம் அவளை ஆட்கொண்டது. ‘பட்டினமா என்ன, செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்த்துக்கொள்ள பேசிக்கொள்ள... என எண்ணி பெருமூச்சுவிட்டாள்.

அவள் கல்லூரியில் படிக்கும்போது, மற்ற நகரம் வாழ் மாணவிகள் தாம்தாம் ஆண் நண்பர்களுடன் அப்படி, எப்போதும் பேசிகொள்வதும் வழிவதையும் கண்டிருக்கிறாள்.
“இதென்ன, இவுக எல்லாம் இப்படி எப்போ பாரு வழிஞ்சுகிட்டு.... நேரம் காலமே இல்லாம...?
என சக மாணவியுடன் பேசி இருக்கிறாள்.

“இதென்ன பார்த்தே கூத்து, பட்டினத்தில் இன்னமும் பார்க்கணுமே... இவுளுக ஜோடி போட்டுக்கிட்டு அடிக்கிற கூத்த... என்று அவளும் கூட கேலி செய்திருக்கிறாள்.

இவளிடமும் இருந்தது, அப்பா ஆசையாக அவளுக்கு வாங்கித் தந்திருந்த செல்ப்போன். அதை அவள் மிக அவசியமானாலே ஒழிய உபயோகித்தது கூட இல்லை.

அவன், மருது, செல்போன் வைத்திருக்கிறான் எனத் தெரியும்.... அவசரத்துக்கு இருக்கட்டும் என இருவரும் நம்பர்களை பகிர்ந்திருக்கின்றனர்... ஆனாலும் இதுவரை பேசியதில்லை.

அப்படிப்பட்ட அவசர நிலையும் இதுவரை ஏற்படவில்லை.

மருதுவும் கதிரும் உற்ற நண்பர்களும் கூட...., அதனால், அடிக்கடி ஒருவருடன் மற்றவர் செல்லில் பேசிக்கொள்வதை கண்டிருக்கிறாள்.

‘என்ன பேசுவாங்க? என்று எண்ணிக்கொள்வாள். இருவரில் யார் ஒருவன் இவள் முன்னிலையில் பேசினாலும் இவள் கவனித்தது, சிரித்து சிரித்து பேசிக் கொள்வார்கள்.,,,, அவர்கள் இருவரும் ஒற்ற வயது... அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ள என்னவும் இருக்கும் என விட்டுவிட்டாள்.

மருது சிரிக்கும் போது ஹஹஹா என பெரிதாக சிரிப்பான். அவன் முகமே முழு நிலா போல பிரகாசமாக ஒளிரும் அந்நேரங்களில்.

அதை பலமுறை கண்டு வியந்திருகிறாள்.

‘இதென்ன நானு அவுகளப்பத்தியே நினச்சுகிட்டு இப்படி....?

‘என் நிலை மறந்து போச்சா எனக்கு? என அடக்க முயன்று தோற்றாள்.

அடக்கி பயனில்லை என உணர்ந்தாள்.

அவன் குரலை கேட்க வேண்டும் போலத் தோன்றியது.

செல்போனை தேடி எடுத்தாள். சார்ஜில்லாமல் அது செத்து கிடந்தது. 

“ப்ச் சீ போ
என தூர தூக்கிபோட எடுத்தாள்.

“ஐயோ ஒடஞ்சுடுமே என நிறுத்திக்கொண்டாள். ஓடிப்போய் சார்ஜரை தேடி எடுத்து பிளக்கில் சொருகினாள்.

சிறிது நேரத்தில் பச்சையாக கொஞ்சம் சார்ஜ் ஏறியதென காண்பித்தது. 

“மணி என்ன, ஒம்போது.... படுத்திருப்பாகளா...?
என்று வாட்சை பல முறை பார்த்தாள்.

செல் போனை, படுக்கையில் படுத்தபடியே, கையில் வைத்து, அவன் எண்ணை தேடி எடுத்தாள். ஒரே ஒரு முறை அமுக்கினால் கால் போகும் என்ற நிலையில் அப்படியே பார்த்திருந்தாள்.... ஒரு நொடி நேரத்தில் அவளையும் அறியாமல் விரல் அமுக்கியும் விட்டது.... அந்தப்பக்கத்தில் ரிங் வேறு போகத் துவங்கிவிட்டது. “ஐய்யயோ என பதறி அவசரமாக துண்டிக்கும் பட்டனில் தட்டு தடுமாறி விரல்கள் நடுங்க அழுத்தி அதை ஆப் செய்தாள். படபடப்பு அப்போதும் அடங்கவில்லை.... 

“இதேதுடா வம்பு, எப்படி நான் அப்படி அமுக்கினேன்.... ஐயோ மிஸ்ட் கால் என பார்த்திருப்பாகளோ.... என்ன நினைப்பாக என்னைப்பத்தி.... இந்த ராத்திரி வேளையில நானா போய் அவிகளுக்கு போன போட்டு.... ச்சே, வெக்கம் மானம் எல்லாம் காத்தில பரக்க விட்டாச்சு
என தன்னையே நொந்துகொண்டாள்.

நடந்துவிட்டது.... இனி அவுக என்ன நினைத்தால் தான் என்ன செய்ய முடியும்.... நடப்பது நடக்கட்டும் என திரும்பி படுத்து ரேடியோ பெட்டியை அணைத்த வண்ணம் கண் மூடி கிடந்தாள்.

“கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ என்றது பாடல்.

‘போச்சுடா என வெறுப்பானது. கண்ணை மூடி பாட்டினை ரசித்தபடி இருக்க, செல் போன் அலறி, அவளை தூக்கி வாரி போட்டு எழ செய்தது

‘நம்ம நம்பர், ஆருகிட்டேயும் கிடையாதே?
என இந்தப் பக்கம் திரும்பி செல்லை எடுத்து பார்க்க, சாக்ஷாத் அவனேதான்.

‘ஐயோ, அழைக்கிறாகளே... நான் என்ன சொல்றது, எதுக்கு கூப்பிட்டேன்னு கேப்பாகளே.... மானமே போச்சே.... நான் என்ன சொல்லுவேன்... அடி ஆத்தா.... நான் ஒண்ணும் கூப்பிடலைன்னு சாதிச்சுபிடலாமா...? என திணறினாள்.

ரிங் வந்துகொண்டே இருந்தது. ‘இதை முதலில் நிறுத்தணும்.... இல்லேன்னா மத்தவங்க யாரானும் முழிச்சுகிடுவாங்க என அவசரமாக பட்டனை அழுத்தினாள். ஆம், அழைப்பினை ஏற்கும் பட்டனை அழுத்தி இருந்தாள். அந்தப் பக்கமிருந்து அவன் குரல் அவளுக்கு கேட்டது

இதயம் தடதடக்க உடல் வியர்த்தது.... உள்ளங்கை சில்லிட்டது... 

“ஹலோ ரஜ்ஜு
என்றான் அவனும் கொஞ்சலாக.

‘இதென்ன இவுக, இப்போதும் ரஜ்ஜு என்கிறாவ? என கோபம் வந்தது. ஆனாலும் உள்ளே இனித்தது. அவளை யாருமே அப்படி அழைத்ததில்லை.

தடுமாறி தொண்டை கமற, “ஹலோ என்றாள் மெல்ல.

“ரஜ்ஜு, என்னவாச்சு கூப்பிட்ட.... அப்புறம் நின்னு போச்சு... உனக்கொண்ணும் இல்லியே.... நல்லா இருக்கேதானே ரஜ்ஜு? என்றான். 

அந்த இரவு நேர அமைதியில், தென்றல் மட்டுமே தழுவிச் சென்ற நிலா வேளையில், அவனின் மிருதுவான குரல் அவள் ஆழ் மனது வரை போய் தொட்டு நின்றது.

“வந்து வந்து, ஆமா... இல்ல... கூப்பிடல.. வந்து, அது தானா.... என்று பேற்றினாள்.

அவன் அந்தப்பக்கம் லேசாக நகைப்பது கேட்டது. சிவந்து போனாள்.

“ஓஹோ, உனக்கே தெரியாம என் நம்பரைத் தேடி கை தானாவே அமுக்கிடுச்சா? என்றான் கேலியாக

“ஆமா நிசமாத்தான், நான் ஒண்ணும்... என்று சமாளித்தாள்.

“சரி, எதுக்கு அழைச்சே? என்றான் குரல் கம்ம.

“நான் தான் அழைக்கலேன்னு சொல்றனே என்றாள் மீண்டும்

“ம்ஹூம், அப்படியா.... சரி போகுது, நீ அழைக்கலை.... நானா தான் கூப்பிட்டேன்னு வெச்சுக்க..... என்னோட பேசக் கூடாதா? என்றான் ஏக்கத்துடன்.

அந்தக் குரல் அவளை என்னவோ செய்தது

“என்ன பேசுறது?
என்றாள் குழந்தையாக

“என்ன வேணும்னாலும் பேசு.... நீ எது பேசினாலும் எனக்கு இனிக்கும் என்றான்

“என்ன நீங்க என்னென்னமோ பேசறீக.... இப்பெல்லாம் நீங்க ஒண்ணும் செரி இல்ல.... என்ன இது ரஜ்ஜூன்னு வேற...
என்று திணறினாள்.

அவன் ஹஹஹா என அவனது வழக்கம் போல பெரிதாக சந்தோஷமாக சிரித்தான். அவளது குழந்தைத்தனமான வெகுளி பேச்சு அவனுக்கு ரசித்தது. அவளை அவன் திணற அடித்திருக்கிறான் என்பது புரிந்தது.

மேல்கொண்டு அவனுடன் பேசத் திணறி, “நான் தூங்க போறேன், குட் நைட் என போனை வைத்துவிட்டாள்.

வைத்தபின்பும் படபடப்பு அடங்கவில்லை.... கூடவே ஏக்கம் அதிகரித்தது.

அவனது அந்த ஆசையான மிருதுவான குரலை, மீண்டும் கேட்கமாட்டோமா என ஏங்கியது. 

‘ச்சே அவசரப்பட்டு நானா போன வெச்சிருக்கக் கூடாதோ.... அவிக என்ன நினைச்சிருப்பாவ, ஏதானும் தவறா எண்ணி இருப்பாகளோ...?
என பலதும் யோசித்தது அவள் மனம்.

‘ஆனாலும், நான் இந்த வேளையில வேற்று ஆடவனுடன் இப்படி பேசுவது தகுமா, நான் செய்ததுதான் சரி என தன்னையே தேற்றிக்கொண்டாள். 

நிமிடங்களில் இவை அனைத்தும் மனதில் வலம் வர, பின்னோடு மீண்டும் கால் வந்தது. அவன்தான். கள்ளன் என திட்டிகொண்டாள்.

‘எடுக்கவா வேண்டாமா? என தடுமாறினாள்.

அவளது ஏக்கம் தான் வென்றது

“ஹலோ என்றாள் மெல்ல

“ஏன் போன் வெச்சுட்டே செல்லம்? என்றான் தாபத்துடன்.

“பின்ன என்ன செய்யணும்.... இந்த ராத்திரி வேளையில உங்களோட நான் இப்படி... என திணறினாள்.

“பேசினா என்ன தப்பு? என்றான்

அவள் என்ன பதில் சொல்லுவாள்.

“ரஜ்ஜு, ஒண்ணு சொல்லவா? என்றான்.

“ம்ம் என்றாள் முனகலாக.

“எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சு போச்சு..... உன்னோடவே காலமெல்லாம் வாழணும்னு ஆசையா இருக்கு என்றான்

அவள் அதிர்ந்து போனாள். ‘என்ன சொல்றாக இவுக? என, பேச நாவே எழாமல் மெளனமாக இருந்தாள்.

வாய்தான் மௌனமாகியதே ஒழிய, அதற்கும் சேர்த்து இதயம் மத்தளம் கொட்டியது..... அவளின் இதயத்துடிப்பு அவளுக்கே கேட்டது மட்டுமின்றி, அவள் தன் காதோடு சேர்த்து வைத்திருந்த செல் போன் மூலம் அவனுக்கும் கேட்டது.

“என்னாச்சு ரஜ்ஜு, இப்படி படபடன்னு அடிச்சுக்குது உன் இதயம்? என்றான்.

அவள் என்னத்தை பதில் சொல்வாள்.

வாய் திறந்தாலே குழறியது இல்லையேல் உளறியது. வாயே திறக்க பயந்து பேசாமல் இருந்தாள்.

“சரி ரஜ்ஜு, உன்னை நான் மேலும் கஷ்டப்படுத்த விரும்பலடா செல்லம்.... நீ போய் உறங்கு என்றான்.

“குட் நைட் என்றான்.

குரலே எழாமல் “குட் நைட் என்றாள்.

அவன் அந்தப்பக்கம் போனை வைத்துவிட்டான். இனி அவளுக்கேது உறக்கம். அகல கண் விழித்து, இன்னமும் இதயம் படபடக்க, அப்படியே நகராமல் கூட அசையாமல் கிடந்தாள்.

‘என்ன நடந்தது இப்போது..... எல்லாம் கனவுதானே....? என தன்னை கிள்ளிக்கொண்டாள். ‘ஐயோ வலிக்குதே.... கண் திறந்து கொண்டே கனவுதான் கண்டிருப்பேனோ..... அவுகளையே நினைச்சு படுத்து கிடந்தேன் இல்ல, அதான், அவுககூட பேசினாப்போல தோணல்... வேற ஒண்ணுமில்ல... என நினைத்துக்கொண்டாள் அந்தப் பேதை.

‘இல்லியே, அவிக குரல் கேட்டுச்சே என செல்லை அவசரமாக எடுத்து பார்த்தாள்.

அழைப்புகளில் அவள் அழைத்ததும், பின்னோடு அவன் இரு முறை அழைத்ததும் எல்லாமும் பதிவாகி இருந்தது

‘ஐயோ நிசமாத்தான் பேசினோமா, அவுகளும் கூட பேசினாகளா? என உரைத்தது.

இனி தப்பிக்க முடியாது எனத் தெரிந்தது. அவன் பேசியபோது, தன் படபடப்பிலும் கலக்கத்திலுமாக, சரியாக காதுகொடுத்து கேட்காமலும் புரிந்து கொள்ளாமலும் இருந்த அனைத்தையும், இப்போது சுவைக்க சுவைக்க அசை போட்டாள்.

அவனது ஒவ்வொரு சொல்லும் பேச்சும் தேனாக மனதில் ஊறி அவளையே இனிப்பாக்கியது.

அவன் தாபத்துடன் அன்பு பொங்க “ரஜ்ஜு என அழைப்பது போல காதில் ஒலித்தது
‘அடராமா, நாளையும் பிறவும் இனி அவுக முகத்தை நான் எப்படி பார்ப்பேன்?
என திணறினாள்.

‘போச்சு போ.... நான் ஆரம்பிச்சது எனக்கே வினையா முடிஞ்சுடுமோ
என பயந்தாள்.
‘இது என்ன இப்படி உருகுகிறாவ, இது எப்படி சாத்தியம்.... எப்படி இப்படி நடக்கக்கூடும்.... நான் எப்படி நினைத்தானும் பார்க்க முடியும்..... நான் ஒரு கைம் பெண் என அனத்தினாள்.

‘அது அவுகளுக்கு தெரியும்தானே....? என வக்காலத்து பேசியது அவள் உள்மனம். ‘தெரிஞ்சா போதுமா, அவிக உறவும், ஊர் மக்களும், ஜாதி சனமும் என்ன சொல்லுவாக..... வழித்துக்கொண்டு சிரிக்க மாட்டாகளா? என வாதிட்டாள்.

“என்ன, இதில சிரிக்க என்ன இருக்கு... ஊர்ல உலகத்தில நடக்காததா..... இந்த ஊர்ல அத்தனை பேருக்கும் என் கதைதான் வெட்டவெளிச்சமாக தெரிஞ்சு போச்சே..... நாந்தான் அந்தாளோட வாழவே இல்லைன்னு தெரியுமே.... நானும் ஒரு பெண்.... எனக்குள்ளும் ஆசைகள் இருக்காதா..... வாழத் தகுதி இல்லியா.... உரிமைதான் இல்லியா? என்று திணறினாள்.

‘எல்லாம் இருக்கு..... இதென்னா இருபதாம் நூற்றாண்டா என்ன, இருபத்தி இரண்டாம் நூற்றாண்டுல இருக்கோம்.... உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கும் இந்த நேரத்தில, கைம் பெண், விதவை மறுமணமா..... ஊர் என்ன சொல்லும்னு, இதென்ன பத்தாம்பசலித்தனம்.... நீ அப்படி வளர்க்கப்பட்டவள் அல்லவே ராஜி? என இடித்துரைத்தது மனது

உண்மைதான் என்றாலும்... எனத், தயக்கம் அழுகையாக மாறியது

எங்கே நினைத்தது நடக்காமல் போகுமோ.... கைக்கு எட்டியது, இனி ஒரு முறை கைக்கு கிடைக்காமல் போகுமோ என்ற பயம், ஏக்கம், தாபம் அவளை கலங்க வைத்தது. அழுதபடியே உறங்கிப் போனாள்.

“இந்நாள் நன்னாள் ஆகிடுக செல்லம் என அவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. முழித்ததும் முதலில் கண்டதே அதைத்தான்.

‘அட, பரவாயில்லை இவுக.... ரொம்ப துணிச்சல்தான்.... நான் என்ன பதில் சொல்ல... என திணறி கடைசியில் ஒன்றுமே பதிலளிக்காமல் விட்டாள்.

‘ஒரே மாலை இரவு பொழுதிற்குள் என்னவொரு மாற்றம் இது என சிரித்துக்கொண்டாள். கலக்கமும் இருந்தது.

தினம்போல எழுந்து குளித்து கிளம்பினாள். உருகி உருகி அம்மனிடம் வேண்டினாள். ‘இதைப் போன்ற சலனங்களை ஏன்மா எனக்கு குடுக்கறே.... நான் பட்டது போதாதா.... அனுபவிச்ச துக்கம் போதாதா.... ஏன் இப்படி...? என உள்ளே கதறினாள்.

மிதமாக அலங்கரித்துக்கொண்டாள். தனக்கு பிடித்தமான ஒரு சேலையை கட்டி இருந்தாள். பொன்னி பூச்சரத்துடன் அங்கே வந்தாள்.

‘வேண்டாம் என தலை அசைத்தாள். 

“என்ன இது, சின்ன பிள்ள மாதிரி.... இப்போ என்ன வந்துபோச்சுன்னு பூ வைக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க.... அப்போ ஏன் இன்னமும் தினமும் போய் பறிச்சுட்டு வறீங்களாம் நந்தவனத்திலேர்ந்து?
என்றாள் காரமாக.

“பொன்னிக்கா, நான் பார்க்கப் போறது என் ஆத்ம தோழிய..... பறிக்கறது சாமிக்கு போட..... நான் பூச்சூட்டிய நாட்கள் போயிடுச்சு என்றாள் விரக்தியாக.

“ஆமா, தொங்கத் தொங்க தாலிய கட்டிக்கிட்டு மனசு நெறஞ்சு, அவனோட பல நூறாண்டு வாழ்ந்து முடிச்சுட்டீக, அவன் போனதும் பூச்சூடாம மூலையில் உக்கார..... போதுமே, அந்த படுபாவி கட்டுனது ஒரு தாலி..... அதுக்கும் அவனுக்கும் ஒரு மருவாத வேறயா...... நல்லா வந்துரும்மா வாயில..... வெச்சுக்குங்கம்மா இந்தப் பூவ என்று கெஞ்சினாள்.

வேண்டாம் என மறுத்துவிட்டு கிளம்பினாள்.

அப்போதே கந்தன் உள்ளே வந்தான். 

“தா பொன்னிக்கா, நான் மறந்தே தொலைச்சேன், அன்னிக்கே சின்னையா கேட்டாக, இன்னாத்துக்கு பச்ச மொளகா அனுப்பிச்சீங்கன்னு, எதுக்கு அனுப்பிச்சீக?
என்றான் நடு வீட்டில் நின்றபடி.

“அதப்பத்தி இப்போ என்னடா தம்பி, அத அவிகளே மறந்திருப்பாக.... போடா போய் திரும்ப கேட்டா சமாளிச்சுடு...” என சிரித்தாள். 

“என்னக்கா?
என்றான் அவன் விளங்காமல். 

“அது ஒரு தமாஷுடா தம்பி, போ போ, சமாளிச்சுடு
என்று சிரித்தபடி உள்ளே சென்றுவிட்டாள். 

“த பாரேன்
என குழம்பி வெளியேறினான்.

‘அடக்கடவுளே இந்த பொன்னியக்காவுக்கு வரவர குசும்பு ஜாஸ்தியா போச்சுது..... நான்தான் சொன்னேன்னா இவுக நிஜமாவே அனுப்பிசிட்டிருக்காங்க பாரு மிளகாய... என்று சிரித்தாள் அவன் என்ன நினைத்திருப்பானோ என திணறினாள்.

தங்களது மாந்தோப்பிற்கு சென்று வரலாம், அங்கே காய்கள் பறிக்க ஆள் ஏற்பாடு ஆகி இருந்தது என அங்கே சென்றாள்.

அப்போதுதான் அவனது பைக் அங்கே நின்று கொண்டு இருப்பதைக் கண்டாள்.

‘அட,  இங்கே இருக்கிறாரா, அப்போ நாம உள்ளே போக வேண்டாம் வயலுக்கு போயிட்டு அப்புறமா வேணா இங்கே வரலாம் என திரும்பி நடக்க முற்பட்டாள். 

‘ஆமா, அதென்ன.... அவரா இவரான்னு புதுசா...?
என மனம் இடித்தது. அப்போதுதான் தன் மனதின் இந்நிலையை அவளே உணர்ந்தாள்.... தன்னையும் அறியாமல், மருதுவை அவர் இவர் என நினைக்கத் துவங்கி இருப்பதை அறிந்தாள்.

“வருவானேன், வந்த வேலையச் செய்யாம திரும்ப போவானேன்? என்றான் பின்னிருந்து. 

அவன் குரல்தான், அவளுக்குத் தெரியாதா என்ன.... நெஞ்சம் படபடத்தது
மெல்ல திரும்பினாள்.

“ம்ம் என்று புருவத்தை உயர்த்தி புன்னகையுடன் அவளைக் கேட்டான்.

“இல்ல, அப்படி இல்ல.. என்று தடுமாறினாள்.     


2 comments:

  1. கதை ஓட்டம் மிகவும் நன்றக உளது ..

    ReplyDelete
  2. Kalakkals! very smooth flow!

    ReplyDelete