Wednesday 6 March 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 13 FINAL


“உன்னை பார்த்தா சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க ஒண்ணும் அவசரப்படர மாதிரியே தெரியல, ஆனா எனக்கு தாங்காதுபா, பொன் விக்ரகமா உன்னை இவளோ அழகா பக்கத்தில வெச்சுகிட்டு சும்மா இருக்கணும்னா ரொம்ம்ப கஷ்டம்” என்றான் வலது கையால் இடது நெஞ்சை நீவியபடி.

“சி போ” என்றாள் வெட்கத்துடன்.
“எப்படியும் ஒரு மாசமானும் ஆகும்னு அம்மா சொன்னாங்க, அப்பப்போ என்னை கொஞ்சம் கவனிக்கலாம்தானே வினி” என்றான் ஏக்கத்துடன்.
“என்ன கவனிக்கணும்?” என்றாள் தெரியாதவள் போல.
“என்னவா?” என அவளை அருகே இழுத்து அணைத்து முகத்துடன் முகம் வைத்து இழைந்தபடி அவளை அழுந்த முத்தமிட்டான்.

“என்ன இது, அம்மா வரப்போறாங்க” என திணறினாள்.... வெட்கி சிவந்தது அவள் முகம்.... மணமான அந்த சில வருடங்களில் கூட இப்படிப்பட்ட ஆனந்தமான அன்பான கொஞ்சலை அவள் அனுபவித்ததில்லை ஆதலால், திணறித்தான் போனாள்.... இயற்கையிலேயே கூச்ச சுபாவம் உடையவள் சிவந்து போன முகத்தை அவன் மார்பிலேயே பொதிந்து கொண்டாள் மறைத்துகொண்டாள்..... அவளை மேலும் இறுக்கிகொண்டான் கீர்த்தி.....‘கடவுளே இவளை இப்படியே காலமெல்லாம் நான் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும், அதை நீதான் செய்து தர வேண்டும்’ என வேண்டினான்.

அவளை அணைத்தபடியே இருக்கையிலேயே அவன் மனதில் சில யோசனைகளும் வந்து போயின..... அதற்குண்டான ஏற்பாடுகளையும் செய்து முடிக்க வேண்டும் என நினைத்து கொண்டான்.
அதன்படி அவளிடம் கை ஒப்பம் வாங்கி வாசுவிற்கு விவாகரத்து பத்திரம் அனுப்பி வைக்கபட்டது.... வாரம் வரையிலும் பதில் இல்லாமல் போக அவளிடமே நம்பர் வாங்கி கீர்த்தி அவனை அழைத்து பேசினான்.

“த பாருங்க வாசு, நான் அன்னிக்கே சொன்னேன், நான் சுமுகமா இதை முடிக்க ஆசைப்படறேன், நீங்க மறுத்தா நான் கோர்ட் கேசுன்னு போவேன், மனுவுக்கு எதுவுமே ஆகாது..... நீங்க என்ன சொல்லி அவளை அவமானபடுத்தினாலும் எங்க முடிவுல எந்த மாற்றமும் நேராது.... ஆனா, உங்கள பத்தி சந்தி சிரிக்கும், பேசாம கை எழுத்து போட்டு அனுப்புங்க” என்றான் கறாராக.

போனை வைத்தபின் வாசு யோசித்தவாரே கிடந்தான்... தான் அவளுக்கு செய்த கொடுமைகளை அவன் தன்னுடைய தவறாக இன்னும் உணரவில்லை என்றாலும், அவளை தான் முழுவதுமாக இழந்துவிட்டோம் என்பதை உணர்ந்தான், உண்மையான வருத்தம் ஏற்பட்டது..... தன்னைப் பற்றிய நல்லது கெட்டது யோசிக்க துணிவில்லை, மனம் மாறவில்லை, ஆராயவில்லை, தன்னை மாற்றிக்கொள்ள விழையவில்லை... ஆனாலும் மனு மிகவும் நல்லவள், அவள் இல்லாதபோதுதான் அவளின் அருமை தனக்கு தெரிகிறது என எண்ணிக்கொண்டான். ‘இட்ஸ் டூ லேட் நவ்’ என மனம் கூறியது. ஹ்ம்ம் என பெருமூச்சுவிட்டான்.
இனி தன்னால் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என தெரிந்து கீர்த்தி கேட்டுக்கொண்டபடியே செய்தான்.... சுமுகமாக இருவர் ஒப்புதலுடன் விவாகரத்து தீர்ப்பானது..... அதன் பின்னேதான் மனு நிம்மதியுடன் உறங்கினாள்...... முழுமையான அன்புடன் ஆசையுடனும் கீர்த்தியை கண்டாள், இலகுவாக பேசி பழகினாள்....
ஆனால் வாசுவோ, எதையோ பறிகொடுத்த நிலையில், துவண்டான்.. நடந்தது விதியா அல்லாது தன் கைவினையா என குழம்பினான்.

முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு காஞ்சனா ராஜன் குடும்பத்தினர் என வந்திருக்க வீடு கல்யாண களை கட்டியது..... வேறே இடம் இல்லை என்பதால் மனு கற்பகத்துடன் கீழே உள்ள அறையிலேயே தங்க வைக்கபட்டாள்..... கீர்த்தி மேலே ராஜனுடன் தங்கினான்..... மற்றொரு அறையில் காஞ்சனா அவள் கணவன் மகன் என இருந்தனர்..... நாள் நெருங்க நெருங்க மனுவிற்கு கொஞ்சம் உதரலாகவும் வெட்கமாகவும் என உணர்ச்சி போராட்டத்தில் இருந்தாள்.... தான் செய்வது சரிதானா என இன்னமும் அவள் மனம் பதைத்தது.

முதல் திருமணம் அவள் இஷ்டமின்றியே நடந்தேறியது, ஒன்றுமே அறியாமலே அவள் புகுந்த வீடு சென்றாள்..... ரண வேதனை அனுபவித்தாள்..... அந்த வடுக்கள் இன்னமும் அவள் மனதில் ஆழ பதிந்துதான் இருந்தன..... உடல் வடுக்கள் கூட இன்னும் சில இருக்கத்தான் செய்தன..... அதையும் மீறி அவற்றை மறந்து தன்னால் முழுமையாக மனம் ஒன்றி கீர்த்தியுடன் குடித்தனம் செய்ய முடியுமா என பயந்தாள்..... ஒரு நாள் இரவு அதை அவனிடமே சொல்லவும் செய்தாள்.

“பைத்தியம், தாம்பத்தியம்னா அது மட்டும்தானா கண்ணம்மா, நீ எனக்கு கிடைச்சா அதுவே எனக்கு போதும், நான் நீயா தெளியற வரைக்கும் காத்திருப்பேன்” என்றான் அவளை ஆதுரத்துடன் அணைத்து.
“ஆனா ரொம்ப லேட் பண்ணீட மாட்டியே டா செல்லம்?” என்றான் குறும்பு கண்களுடன்,
“சி போங்க நீங்க” என அவனை தள்ளிவிட்டாள்.

அவளுக்கென யாருமில்லை என்பதால் கற்பகமும் காஞ்சனாவுமே அவளை அழைத்து சென்று பட்டு புடவைகள் நகைகள் என எடுத்தனர்.
“இல்லே ஆண்ட்டி போதும், என்கிட்டே கொஞ்சம் இருக்கு.... ஆசிரமத்துக்கு பக்கத்திலே பாங்க லாக்கர்ல வெச்சிருக்கேன்” என கூறி கீர்த்தியுடன் ஒரு நாள் சென்றாள்.
பத்திரிகை கொடுத்து பெரியவரை வணங்கி அழைத்தனர்.

“ரொம்ப சந்தோஷம் மா, நீ, உன் அறிவு, பண்பு எல்லாம் கண்டு, நீ ஏதோ நல்ல வீட்டு பொண்ணு, ஏதோ சந்தர்ப்பம் சரியில்லாம இப்படிப்பட்ட வேலைக்கு வர வேண்டிய சூழ்நிலைக்கு நீ தள்ளபட்டிருக்கேன்னு எனக்கு புரிஞ்சுதான் இருந்தது..... பழசை கிளறி உன்னை கஷ்டபடுத்த வேண்டாம்னு நானும் பேசாம இருந்தேன்...”

“கற்பகதம்மாவை பற்றி நான் கேள்விப்பட்ட வரையிலும் மிகவும் நல்லவங்க பாசமானவங்கனு தெரிஞ்சதினாலதான் நான் உன்னை அவங்ககிட்ட அனுப்பிச்சேன், அங்கே நீ நல்லா இருப்பேன்னு நினைச்சேன், என் நினைப்பு வீண் போகலை, உனக்கு அவங்க மகன் மூலமாகவே ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்டது.... ரொம்பவே சந்தோஷமா இருக்கு, இனியானும் நீ நல்லா வாழணும்... எங்களை எல்லாம் மறந்துடாதே மா” என்றார் மகிழ்ச்சியுடன்.
“கண்டிப்பா மறக்க மாட்டேன் ஐயா, நான் துன்பப்பட்ட நேரத்தில மருந்தா இருந்து என்னை காப்பாற்றி ஆதரவு குடுத்திருக்கீங்க.... உங்களையும் இந்த ஆசிரமத்தையும் நான் எப்படி மறப்பேன்” என்றாள் மனு.
ஐயா நான் என்னோட கொண்டு வந்த சில வீட்டு சாமான்கள் என் அறையில இருக்கு.. என்றாள் தயக்கத்துடன்.
அது அங்கேதான் மா இருக்கு, உன் அறையில நான் யாரையுமே போக விடலை. மாதத்தில ஒரு நாள் திறந்து சுத்தம் செய்துட்டு மூடிதான் வெச்சிருக்கேன்என்றார்.
ஐயோ தெரியும் ஐயா, நான் அத சொல்ல வரல, என்ன வேலை கிடைக்குமோ என்னமோ, நானே பொங்கி சாப்பிட வேண்டி வரலாமொன்னு என்னோட இதை எல்லாம் நான் கொண்டு வந்தேன், ஆனா உங்க தயவில இவரோட அன்பில அப்படி ஒரு நிலை எனக்கு ஏற்படலை..... இதை எல்லாம் ஆசிரமத்து கிச்சன்லே உபயோகப்படுத்திக்கலாமேன்னு சொல்ல வந்தேன், நீங்க தவற நினைக்கலைனா...என்றாள்.
ஒ அதுவா, நீ எப்படி சொல்றியோ அப்படியே செய்துடலாம் மாஎன்றார்.
ரொம்ப நன்றி ஐயா என வணங்கி விடைபெற்றாள்.

அங்கிருந்து பாங்க் லாக்கருக்கு சென்று அங்கிருந்த அனைத்தையும் எடுத்து வந்தாள் கற்பகத்திடம் நீட்டினாள்.
“என்னிடம் ஏன்மா குடுக்கறே, இதெல்லாம் உன்னோடது, நீ உன்கிட்டே வெச்சுக்கோ, கல்யாணத்தன்னிக்கி போட்டுக்கலாம்” என அன்பாக அவள் தலை தடவினார்.

அனைத்து ஏற்பாடுகளும் கீர்த்தியும் ராஜனும் காஞ்சனாவின் கணவன் சசிதருமே பார்த்து செய்தனர்.... சிம்பிளாக மருதமலை கோவிலில் திருமணம், பின் மாலை ஒரு வரவேற்ப்பு என ஏற்பாடாகியது.

நாளை திருமணம் எனும்போது இன்று மனுவை அமர்த்தி கிண்டல் செய்தபடி கஞ்சனாவும் இன்னும் கீர்த்தியின் சில சொந்தக்கார பெண்களுமாக அவளுக்கு மருதாணி வைத்தனர்.... மனுவிற்கு கண்ணீர் மல்கியது.

“என்ன இது அண்ணீ?” என காஞ்சனா பதறி போனாள்.
“ஐயோ ஒண்ணுமில்லை காஞ்சனா, என் தங்கைகள் இருந்தா கூட இவ்வளோ சிறப்பா செஞ்சிருப்பாங்களான்னு சந்தேகம், மனம் நிறைஞ்சு போச்சு, அதான்” என்றாள்.
“ஐய்ய, இதுக்கா அழுவாங்க, சரியா போச்சு போங்க..... தங்கைங்க நினைப்பு வந்தா கூப்பிட வேண்டியதுதானே, வான்னா வந்துட்டு போறாங்க” என்றாள் இலகுவாக.
“ஹ்ம்ம், நாந்தான் அதுக்கு குடுத்து வைக்கலையே காஞ்சனா, எல்லாரும் இருந்தும் நான் அனாதை மாதிரிதானே” என்றாள் பெருமூச்சுடன்.
“அப்படி எல்லாம் சொல்லீட முடியாதில்ல அண்ணீ, நீங்க வேணா உரக்க ஒரு முறை மனச விட்டு அம்மான்னு கூப்பிடுங்க, அவங்க வராங்களா இல்லையான்னு பார்ப்போம்” என்றாள் மருதாணி இட்டபடி தலையை கவிழ்ந்தபடியே

“காஞ்சனா, இதென்ன விளையாட்டு?” என்றாள் கொஞ்சம் முகம் சுருண்டு.
“கூப்பிட்டுதான் பார்ப்போமே அண்ணீ” என்றாள் மேலும்.
“ம்ம் நேரமாவுது இல்ல, கூப்பிடுங்க அண்ணீ” என்றாள்.
இதென்ன கூத்து என்றெண்ணியபடி மெல்ல அம்மா என்றாள்.
“போதாது, எனக்கே கேக்கலையே அண்ணீ” என்றாள்.
“என்ன காஞ்சன் இது விளயாட்டு?” என்றாள்.
“கூப்பிடுங்க அண்ணீ” என்று அதட்டினாள்.

“அம்மா” என்றாள் மனதின் ஆசை ஏக்கம் எல்லாம் ஒன்று சேர.
“மனு கண்ணு” என ஓடி வந்தார் அவள் தாய்.
மனுவுக்கு அவளை அங்கே கண்டு மூச்சே நின்றுவிட்டது.
“அம்ம்ம்மாமா” என்றாள் மெதுவாக, வார்த்தை வாயிலேயே நின்றுவிட்டது.... குரலே வெளிவராமல் சிக்கிகொண்டது....
“வந்துட்டேன்டீ கண்ணு, என்ன பாடெல்லாம் பட்டியோ, பாவம் டீ நீ, தனியா இத்தனை தாங்கி இருக்கே, நான் என்னிக்குமே உங்க யாருக்குமே நல்ல அம்மாவா நடந்துக்கவே இல்லை, நான் என் வட்டம்னு சுருங்க இருந்துட்டேன்....நீ காணாம போய்டே னு அந்த பய சொன்னதும் புத்திகெட்டுபோய் நம்பிட்டோம்.
இந்த ரெண்டு பெண்களும் கூட கல்யாணம் ஆகி போய் வீடு வெறிச்சுனு ஆனபோதுதான், உங்க அருமை எல்லாம் எனக்கு புரிஞ்சுது..... என்னையும் அறியாம உங்க மேல எல்லாம் எவ்வளவு பாசம் வெச்சிருந்தேன்னு உறைச்சுது... அதை வெளிகாமிச்சுக்க தான் தெரியல....இப்போ புத்தி வந்துடுச்சு... இந்த அம்மாவை மன்னிச்சுடுடா கண்ணு” என அழுதார்.

“ஐயோ ஆண்ட்டி, இப்போதான் அண்ணீ அழுவராங்கன்னு உங்கள வரவழைச்சேன், இப்போ உங்கள சமாதானபடுத்த யார வரச் சொல்றது” என்றாள் சிரிப்புடன்.
“ஏன் என் சின்ன பெண்களைதான்” என்றாள் பெருமிதமாக.
என்னமோ விளையாட்டு நடக்கிறது என ஊகித்தாள் மனு.
“அம்மா?” என்றாள் ஆச்சர்யத்துடன்.
“அப்போ நீங்களே கூப்பிடுங்க ஆண்ட்டி” என்றாள்.

“அம்மா மது, மதுவந்தி, மந்தா” என அழைத்தாள் அவள் தாய்.
“என்னமா நீ இங்கே வந்து உக்காந்துட்டியா, அங்கே கல்யாண வேலை எவ்வளோ இருக்கு, அக்காவ நாங்க பாத்துக்கறோம், நீ போ, அப்பா கூப்பிடறாரு” என்றபடி சர்வசாதாரணமாக வந்தாள் சற்றே மேடிட்ட வயிற்றுடன் மது எனும் மதுவந்தி.
“மது” என்றாள் ஆசையுடன் மனு.
“அக்கா” என்றபடி ஓடி வந்து அவளருகே அமர்ந்து அவளை கட்டிக்கொண்டாள். மறுபுறம் மந்தா அக்காவென வந்து கட்டிகொண்டாள்.
“மது, மாசமா இருக்கியா டா.... இதெல்லாம் என்னடா, நீங்க எல்லாம் எப்படி இது, எனக்கு ஒண்ணுமே விளங்கலை?” என கண்ணீரோடு கட்டிகொண்டாள்.

“காஞ்சு, நீயானும் சொல்லேன், என்னமோ நடக்குது.... எனக்கு மட்டும் ஒண்ணுமே சொல்லலை” என்று குறைபட்டுகொண்டாள்.

“அது ஒண்ணுமில்லை அண்ணி..... இது எங்கண்ணன் உங்களுக்கு கொடுக்கும் கல்யாணபரிசு, அவ்வளவேதான்” என்றாள் காஞ்சனா சிரித்தபடி.
“என்ன உங்கண்ணாவா, எப்படி என்ன நடந்துது?” என்றாள் குழம்பி மலர்ந்து சிவந்து என ஆயிரம் உணற்ச்சிகள் அவள் முகத்தில்.... அவளது பரவசத்தை தூரே நின்று கண்டிருந்தான் கீர்த்தி.

“அண்ணி அங்க பாருங்க” என காஞ்சனா கண் ஜாடை செய்தாள்..... அவள் கண்டபோது அவனும் அவளையேதான் கண்டபடி இருந்தான்.... அவர்கள் கண்கள் கலந்ததும் கண் சிமிட்டினான்....
“நீங்களா இதெல்லாம் செய்தது?” என கண்ணால் வினவினாள்.... ஆம் என தலை அசைத்தான் கண் அமர்த்தினான்.... அவள் கண்களாலேயே அவனுக்கு நன்றி சொன்னாள்..... பெருமிதமாக அவனை கண்ணார கண்டாள்..... கண்ணாலேயே அணைத்துக்கொண்டாள்.... அதைக் கண்டு அவன் முகம் மலர்ந்து அவளை கண்டு கண் அடித்தான்.

“சி போ” என உதடு மட்டும் அசைய வெட்கத்துடன் தலை கவிழ்ந்தாள்.... அடுத்த கணம் அவள் முகம் உயர்த்த அவன் அங்கே இல்லை....‘என் கீர்த்தியா எனக்காகவா..... நான் சொன்ன ஒரே வார்த்தைக்காகவா, நான் சங்கடப்பட்டேன், அழுதேன் என்றா?’ என மனம் நிறைந்து வழிந்தது தளும்பியது..... அவனின் அன்பில் திக்கு முக்காடி போனாள் மனு.

பின்னோடு அவளது தந்தையும் வந்து அவள் தலை கோதி, “எப்படிமா இருக்கே, நீ உன் நல்ல மனசுக்கு நல்லாதான் மா இருப்பே, இந்த கையாலாகாத அப்பாவை மன்னிச்சுடு செல்லம்” என்றார்.
“ஐயோ அப்பா, நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்கப்பா” என்றாள் அவர் பாதம் பணிந்து.
“இந்த முறையானும் மனம் போல மாங்கல்யம் அமையுது உனக்கு.... இதிலயானும் நீ நல்லா இருக்கணும், நல்லபடி வாழணும் கண்ணு” என்று மனதார வாழ்த்தினர்.

மளமளவென கல்யாண வேலைகள் நடந்தேறின..... மதுவந்தியும் மந்தாகினியும் அவள் கூடவே நின்று அவளை அடுத்த நாள் தயார் செய்தனர்....
மதுவந்திக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியிருந்தது...  வயிற்றில் நாலு மாதம் முதல் கர்ப்பம் தாங்கி நின்றாள்..... அதுவே அவள் அழகை கூட்டி காட்டியது.
மந்தாகினிக்கு இப்போதுதான் கல்யணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகி இருந்தன என்பதால் அவளையே சுற்றி சுற்றி வந்தான் அவள் கணவன்.

“ஐயோ, என்ன இது, அம்மாவ காணாத பச்சை குழந்தை மாதிரி.... போங்க, ஆண்களோட போய் உக்காருங்க, ஏதானும் கல்யாண வேலை இருந்தா பாருங்க” என அதட்டினாள் மந்தாகினி, எல்லோரும் சிரித்தனர். அவள் அழகாக வெட்கபட்டுக்கொண்டாள்..... மனுவிற்கு இவை எல்லாம் கண்டு மனம் நிறைந்தது..... இருவரையும் ஆசையுடன் அணைத்துகொண்டாள்.

நல்லபடி கல்யாணமும் நடந்து முடிந்து அவள் மனஸ்வினி கீர்த்திவாசன் ஆனாள்..... கிரகப்ரவேசமும் நடந்து அவள் அதே வீட்டினுள் இம்முறை மருமகளாக நுழைந்தாள்.... கற்பகத்தை வணங்கி கடவுளுக்கு தீபம் ஏற்றி வணங்கினாள்.

அன்றிரவு முதல் இரவு, மாடியில் கீர்த்தியின் அறையில்..... மனுவின்தாயும் தங்கைகளுமாக அவளை மிதமாக அலங்கரிக்க கஞ்சனாவுமாக உள்ளே கொண்டு சேர்த்தனர்...
“அண்ணி எங்கண்ணாவ இனியானும் சந்தோஷமா வாழ வையுங்க” என்றாள் காஞ்சனா கண்ணீர் மல்க.
“என்ன இது காஞ்சு, கண்ணை துடை, அவர்தான் என்னை நித்தமும் வாழ வெச்சுகிட்டிருக்கற தெய்வம் மா, அவரை நான் விட்டுடுவேனா, பூஜித்து கண்ணுக்குள்ள வெச்சுக்குவேன்” என்றாள் புன்னகையுடன் மனம் நிறைந்து.

வெளியே தைரியமாக பேசினாலும் கூட, உள்ளே கீர்த்தியை காண அவளுக்கு நடுங்கியது.... படுக்கை அறை, அங்கே ஒரு ஆண், அவள் உள்ளே செல்லும்போதே அவளுக்கு பழைய எண்ணங்கள் வாட்டி எடுத்தன, உடலும் உள்ளமும் நடந்து போனவற்றை எண்ணி பதறியது..... வியர்வை துளிர்த்தது.... வாயிலிலேயே கீர்த்தி வந்து அவளை அணைத்து உள்ளே அழைத்துச் சென்றான்.
“உக்காரு” என்றான் தோளோடு பிடித்து அமர்த்தி. கட்டிலின் மேல் பட்டும் படாமலும் அமர்ந்தாள்.... அவள் முகத்தில் தெரிந்த பயம் கலவரம் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.... அவளை பார்த்து ஆதரவாக சிரித்தான்...

“நான் அன்னிக்கே சொன்னேனே வினி, உன் முழு சம்மதத்துடன்தான் எதுவுமே நடக்கும்”. என்றான் அவள் கை பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு.... அவனின் அந்த ஸ்பரிசம், முரட்டுத்தனம் இன்றி, மென்மையாக மனதை வருடும்படி இருந்தது..... அந்த க்ஷணத்தில் அவள் மனதின் பயங்கள் விலகின..... கீர்த்தி தனக்காக என்னவெல்லாம் செய்தான் கடந்த சில நாட்களில் என்பது நினைவுக்கு வந்தது..... முகம் தெளிந்து அவனை ஏறிட்டாள்.... கண்களில் மலர்ச்சியுடன் அவள் அவனை காண்பதை அவனும் மனம் குளிர கண்டான்.
“நான் ஒண்ணு கேக்கட்டுமா?” என்றாள்.
“தாராளமா கேளேன், என்ன தயக்கம் என்கிட்டே” என்றான்.
“இல்ல, வந்து அம்மா அப்பா தங்கைங்க எல்லம் எப்படி?” என்றாள் அவனை ஏறிட்டு.

அவன் பெரிதாக புன்னகைத்தான். “சொல்றேன்” என்றான்.
“அன்னிக்கி நீ ரொம்ப அழுதியா, அவங்கள ரொம்ப மிஸ் பண்ணினியா, அதெல்லாம் பார்த்ததும் எனக்கு மனசு ரொம்ப வலிச்சுது.... அப்போவே நான் சில தீர்மானங்கள் பண்ணினேன், அதன்படி உங்கிட்ட சொல்லாம நான் சில காரியங்கள் செய்தேன்” என்றான் வெள்ளையாக குழந்தை போல சிரித்தபடி...... வால்தனம் செய்து மாட்டிகொண்ட பிள்ளை போல அவன் முகம் கண்டு அவனை வாரி அணைத்துக்கொள்ள தோன்றியது மனுவிற்கு. “என்னதது?” என்றாள் ஆவலுடன்.

“நான் உங்கப்பாவை போய் பார்த்தேன் நேர்ல” என்றான்.
“எங்க வீட்டு முகவரி உங்களுக்கு எப்படி...?” என்றாள்.
“உன் மொபைலில் அவர்களின் வீட்டு நம்பரை திருடினேன், அதை வெச்சு முகவரி கண்டுபிடிப்பது பெரிய வேலையா என்ன?” என்றான். ‘ஆங்’ என அசந்தாள்.
“அப்பறம்?” என்றாள்.

“அப்பறம் நேர்ல போனேன்..... உங்கப்பா முதலில் பிடி குடுத்து பேசலை, உக்கார சொல்லலை” என கூற துவங்கினான்.
கீர்த்தியை தங்கள் வீட்டு வாயிலில் கண்டவருக்கு குழப்பம்

யார் நீங்க என்ன வேணும்னு? என்றார்
கீர்த்தி தானே உள்ளே சென்று அமர்ந்து உங்க பெரிய பெண்ணை பற்றி பேச வந்திருக்கேன்என்றான்.
அவள் என்னைக்கோ செத்து போய்டாளேஎன்றார்.
போதும் நிறுத்துங்க உங்க உளறலைஎன சத்தம் போட்டான்.

நிஜம்மா சொல்றேன் செல்லம், அன்னிக்கி அவர் சொன்ன அந்த வார்த்தையை கேட்டு நான் எவளோ துடிச்சேன் தெரியுமா, அவர் மட்டும் உன் தந்தையா இருக்காம இருந்திருந்தா அவர் சொன்ன வார்த்தைக்கு நான் அவரை கொன்னே போட்டிருப்பேன்என்றான் இன்னமும் கோபத்துடன்.
அவள் முகம் சுண்டியது.
சாரி சாரி வினி என்றான் அவசரமாக.
இல்ல நான் அதை நினைக்கலை.... உங்கள கஷ்டபடுத்தீட்டாங்களே னு தான்...என்றாள் மெல்லிய குரலில்.
ஒ அதுவா, போகுது, அப்பறம் நான் உங்கப்பா கிட்ட பொறுமையா எல்லாதையும் எடுத்து சொன்னேன்
அவருக்கு கேக்க கேக்க கண்ணீர் நிறைஞ்சுடுச்சு.... அதுக்குள்ள உள்ளேர்ந்து உங்கம்மாவும் வந்துட்டாங்க..... அவங்க புடவை தலைப்பால வாயை மூடிகிட்டு அழ துவங்கீட்டாங்க.... எனக்கே பாவமா போச்சு தெரியுமா வினி மாஎன்றான். அதை கேட்டு அவளுக்கும் துக்கம் வந்தது.

சர் நான் சொல்றதை நீங்க கொஞ்சம் பொறுமையா கேட்டுதான் ஆகணும், நல்லவன் னு நீங்க யார நினைச்சு மனுவா கட்டி குடுத்தீங்களோ அவன் ஒரு நாள் ஒரு பொழுது கூட நல்லபடி உங்க மகளோட குடித்தனம் பண்ணல, அவள வேசியா வேலைக்காரியா தான் அவன் நடத்தினான.....கூட வேலை செய்யற பெண்ணை வீட்டுக்கே பார்டினு அழைச்சுகிட்டு வந்து உங்க மக முன்னாடியே இப்படி எல்லாம் நடந்துகிட்டான்..... போதாதற்கு கட்டாய அபார்ஷன் செய்ய வெச்சு அது வேற ஆபத்தா முடிஞ்சுதுஎன்றான் கீர்த்தி

நல்ல வேளை வினி, நான் சொன்னதன் தாக்கமோ நேரம் நல்லதோ தெரியாது... நான் சொன்னதை நல்லபடியா காதுகுடுத்து கேட்டாங்க, புரிஞ்சுகிட்டாங்க..... உனக்காக கண்ணீர் வடிச்சங்க..... அப்போதான் நீ எப்படி எந்த சூழ்நிலையில வீட்டை விட்டு வந்தே, என்ன வேலை பார்த்தே, எப்படி பிழைச்சே எப்படி எங்கிட்டே வந்துசேர்ந்தே, எல்லாமும் சொன்னேன்..... அவங்களுக்கு ஒரே ஆச்சர்யமா போச்சு..... பின்னோட வாசு வந்து அமர்க்களம் பண்ணினதையும் சொன்னேன், கூடவே நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறதையும் சொன்னேன்..... உங்க அப்பா கை கூப்பி என்னை வணங்கினாரு.

நீங்க யாரோ என்னமோ எனக்கு தெரியலை, நீங்க நல்லா இருக்கணும், உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகட்டும், எம் பொண்ணை இனியானும் நல்லபடியா வாழ வையுங்க....நான் ஒரு நல்ல அப்பனா இருக்கலை, பொண்ணுங்களை கரை ஏத்தினா போதும்னு மட்டுமே நினைச்சேன், அந்த பொருக்கி பய சொன்னதை நம்ப தெரிஞ்ச எனக்கு, என் சொந்த மக கிட்ட என்னது உண்மைன்னு கேக்க கூட தோணலை, நானே என் மகளை படு குழியில தள்ளீட்டேன், நல்ல வேளை அவ புத்தியா பிழைச்சு வெளியே வந்துட்டா, நீங்களும் இப்போ அவளை ஏத்துகிட முடிவு செஞ்சுட்டீங்க...அப்படீன்னு சொன்னாரு.

இவங்களையும் உன் தங்கைகளையும் பார்க்கணும் நீ ஆசைப்படுறேன்னு சொன்னேன்..... நம்ம கல்யாண பத்திரிகையை கையில கொடுத்தேன்..... உன் தங்கைகள் முகவரி கேட்டு வாங்கிகிட்டு அங்கே போனேன், என்னை அறிமுக படுத்திகிட்டேன்.... ரெண்டு வீட்டிலேயும் ஆச்சர்யம், ஏன்னா இப்படி ஒரு அக்கா அவங்களுக்கு இருக்கறது அங்கே மறைக்கப்பட்டிருந்தது....

மாப்பிள்ளைகளை தனிமையில் அழைத்து உன் பெற்றோர் சார்பா நான் மன்னிப்பு கேட்டுகிட்டு உண்மைகளை சொன்னேன், படிச்சவங்க புரிஞ்சுகிட்டாங்க. அதுவரையிலும் கூட எனக்கும் உள்ளே பயமாத்தான் இருந்துது வினி..... எங்கே நான் உனக்காக பேச போய் உன் தங்கைகள் வாழ்க்கை பாதிச்சுடுமொன்னு..... ஆனா நல்ல வேளை ரெண்டு பேருமே நல்ல மாப்பிள்ளைகள்..... எல்லாரையும் கல்யாணத்துக்கு வர வழைச்சேன்..... சந்தோஷமா ஒத்துகிட்டாங்க....ஆனா இது உனக்கு ஸர்ப்ரைசா இருக்கட்டும்னு ப்ளான் பண்ணினேன்..... நீ அவங்கள சட்டுனு சந்திச்சா உன்னோட சந்தோஷம் எப்படி இருக்கும், உன் முகம் எப்படி மலரும்னு பார்க்கணும்னு ஒரு ஆசை, அதான்.... அதுக்கு பிறகு நடந்து எல்லாம்தான் உனக்கே தெரியுமே வினிஎன்றான் அவளை வளைத்துகொண்டு.

இப்போது அவனுக்கு எப்படி நன்றி சொல்வதென அறியாது மகிழ்ச்சியில் திளைத்து திக்கு முக்காடினாள்.... அதையே அவனிடம் கூறினாள்.

நன்றி தானே, பலவகையிலும் சொல்லாம்..... நீ எப்படி சொல்ல விரும்பறேங்கறத பொறுத்து இருக்கு டார்லிங்என்றான். அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க அவன் கண்கள் சொன்ன கதை கண்டு வெட்கினாள்.

நீங்க எனக்கு வாழ்க்கையை மட்டும் தரலை, என் குடும்பத்தையே அவங்க அளவிட முடியாத பாசத்தையே எனக்கு திரும்ப கொடுத்திருக்கீங்க..... உங்க பெருந்தன்மைக்கு முன்னாடி நான் என்னத்த குடுத்துட போறேன்..... உங்கள மேலும் மேலும் காதலிச்சுகிட்டே இருப்பேன், அன்பால உங்கள திணறடிச்சுகிட்டேஇருப்பேன், முன்ன உங்களுக்கு கிடைக்காத, அன்பு பாசம் காதல் இனிமையான இதமான குடும்ப வாழ்க்கை இன்னும் இன்னும்...என சிவந்து நிறுத்தினாள்.

இன்னும்?” என்றான் கேள்வியாக.
வந்து இன்னமும் கூட கொடுப்பேன்என்றாள்.
அந்த இன்னமும் தான் என்னனு கேக்கறேனே, எனக்கு தெரியலையே நீ என்னத்த சொல்ல வரேன்னு...என வம்புக்கு இழுத்தான்.
போங்க நீங்க இப்படியே என்னை வம்பு பண்ணிக்கிட்டு இருந்தா நான் உங்களோட பேசவே மாட்டேன்என முகம் புதைத்து கொண்டாள்.
சரி என் காதோடு சொல்லு என்றான் காதை அவள் கன்னத்தோடு இழைத்தபடி. அவள் அப்போதும் மெளனமாக இருக்க,
நான் சொல்லவா?” என்றான் அவள் வெட்க மேலீட்டை கண்டு.
என்னவாம்?” என்றாள் முகம் மீளாது.

எனக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று, நான் ஏங்குவது, அதைத்தானே தருவேன்னு சொல்ல வந்தேஎன்றான் தாபத்துடன்.
என்னது சொல்லுங்களேன்என்றாள்.
உனக்கும் எனக்குமான ஒரு சின்ன பரிசு, நமது அன்பின் பிரதிபிம்பம், நம் வாழ்வின் அர்த்தம், இன்பம், எல்லாமுமாக விளங்க போகும் நம் குழந்தை.. சரியா?” என்றான்.
அவள் சிவந்து ஆம் என தலை அசைத்தாள்.
ஒ டார்லிங்என அவளை அணைத்துகொண்டான்.

கவனத்துடனேயே அவள் முக உணர்சிகளை கண்டபடி பட்டு போன்ற அவள் கன்னத்தில் மெல்ல முத்தமொன்றை பதித்தான்..... அவள் சிவந்து மெளனமாக அதை ஏற்க கண்டு துணிச்சல் வந்தது.
மை ஸ்வீடி பை என்றான் அருகே வந்து.... அவனின் அணைப்பு இறுகியது.... அவள் இழைந்து கொடுத்தாள்.
மனம் அவளையும் அறியாமல் தான் சந்தித்த முரட்டு கரங்களை நினைத்து பார்த்து உடல் நடுங்கியது.... அவன் ஒரு நொடியில் அவளின் உடல் அதிர்வை புரிந்து கொண்டான்..... மிருதுவாக அணைத்துகொண்டான்..... நெஞ்சோடு சார்த்தி கொண்டான்.

இனி அந்த வேதனைகள் நீ நினைக்கவே வேண்டாம் செல்லம், உனக்கு இனி நானிருப்பேன்என்றான் காதோடு. தன்னை அவன் உணர்ந்துவிட்டதை அவள் அறிந்தாள். மனம் அமைதி அடைந்தது. பூரண மனதுடன் அவனுடன் ஒன்றிகொண்டாள்.
அங்கே ஒரு இனிய தாம்பத்தியத்தின் துவக்க அத்யாயம் எழுதப்பட்டது.
நிறைந்தது.



















Tuesday 5 March 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 12


அவனும் அவள் முக உணர்சிகளைதான் கவனித்துக்கொண்டு இருந்தான்.... பேசாமல் அவன் சோபாவில் அமர, “என்ன மனு, என்னை அடையாளம் தெரியலையா, நான்தான் உன்னோட புருஷன் வாசு” என்றான் பல்லை இளித்துக்கொண்டு.

“நீ இல்லாம நான் ரொம்ப தவிச்சு போய்டேன் தெரியுமா, ரொம்ப அவஸ்தை பட்டு போய்டேன்... எங்கெல்லாமோ தேடி அலைஞ்சேன்.... உன்னைப் பற்றி ஒரு தகவலும் இல்லை..... நீ இல்லாம நான் ரொம்ப கஷ்டங்கள் அனுபவிச்சேன்....
சோத்துக்கு கூட வழி இல்லாம நானே பொங்கி தின்னுகிட்டு கைய கால சுட்டுகிட்டு.... வீடு ஒரு பக்கம் அலங்கோலமா கிடக்கு.... என் வாழ்க்கையும் அலங்கோலமா போச்சு.... நல்லகாலம் இப்போவானும் நீ கிடைச்சுட்டே” என்றான்.
தூக்கி வாரி போட அவனை ஏறிட்டாள்.

“என்ன வேணும் உங்களுக்கு, இங்கே எங்கே வந்தீங்க?” என்றாள் நிதானமாக.
“என்ன மனு, இப்படி கேக்கறே..... ஏதோ கோபம் சண்டை.... நீ வீட்டை விட்டு வந்துட்டே, இப்போதான் காலம் எல்லா புண்ணையும் கோபத்தையும் ஆத்திடுச்சே, வா, உன்னை அழைச்சுகிட்டு போகத்தான் நான் வந்தேன், என்னோட கிளம்பு....”

“இவங்க தான் உன்னை இத்தனை நாளா வெச்சு பார்த்துகிட்டாங்களாக்கும், இதென்ன நீ வேலைக்காரி மாதிரி இவங்களுக்கு சேவை பண்ணிக்கிட்டு இருக்கே, நீ யாரு, யாரோட பெண்டாட்டி, உன் நிலை என்ன.... இதென்ன இவ்வளோ தரம் தாழ்ந்து...?” என ஏளனமாக பேசினான்.... கீர்த்தியை ஈனமாக பார்த்தான்.....
மனுவுக்கு உள்ளே எரியத் துவங்கியது.... அது அவள் மனதில் பல வருடங்களாக அணையாமல் எரிந்து பின் நீருபூத்த நெருப்பாக உள்ளே கனன்று கொண்டிருந்த நெருப்பு..... வாசு வந்து இப்போது மீண்டும் வீசி விட்டதில் உள்ளே கொழுந்து விட்டு எரியத் துவங்கியது.

“அனாவசியமா பேச வேண்டாம்.... நான் உங்களோட வர தயாரா இல்லை, நீங்க மேற்கொண்டு இங்கே இருந்து எந்த வம்பு கிளப்பாம வந்த வழிய பார்த்து கிளம்புங்க” என்றாள்.
“என்ன சொல்றே, விளையாடறியா மனு, இன்னுமா உன் கோபம் தீரலை.... ஓஹோ நான் சுலோவோட அப்படி இப்படி இருந்தேனே அந்த கோபமா, அதெலாம் அப்போ, இப்போ தான் அவ கல்யணம் ஆகி போய்டாளே, இப்போ அவளோட நான் டச்லேயே இல்லை தெரியுமோ” என இளித்தான்.

“உங்கள வெளியே போங்கன்னு சொன்னேன்” என்றாள்.
“மனு, பொறுமையா பேசுமா” என்றார் கற்பகம்.
“இனி இவனோட பேச்சே எனக்கு அனாவசியம் ஆண்ட்டி... இதில பொறுமையா வேற பேச என்ன இருக்கு” என்றாள் ஆத்திரத்தை அடக்கி.

“என்னடி வாய் நீளுது?” என்றான்.
“ம்ம் போதும், இந்த டீ போடறதெல்லாம் என்கிட்டே வேண்டாம், அப்பறம் நானும் மரியாதை இல்லாம பேச வேண்டி வரும், உங்களை விரட்டிவிடும் முன் நீங்களா வெளியே போய்டா உங்களுக்கு நல்லது” என்றாள் ஒரு கை நீட்டி வாயிலை காண்பித்து.

“என்னடி கொழுப்பா, ஏதோ போனா போகுது, நீ செய்த தப்பை மன்னிச்சுடலாம், வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம்னு நானா வீங்கிகிட்டு வந்தா, உனக்கு நான் இளப்பமா தெரியறேனா... ஏதோ தனியா கிடந்து அல்லாடறோமே, நீ வந்தா கொஞ்சம் நிம்மதியா வசதியா இருக்கலாமேன்னு நினச்சுதான் உன்னை கூப்பிட வந்தேன்... ஏன் இத்தனை வருஷத்தில இவனோட இங்கே செட்டில் ஆயிட்டியா, கல்யாணம்னு ஒண்ணும் பண்ணிக்கலைன்னு கேள்விபட்டேனே.... அப்போ, என்ன இவன் உன்னை வெச்சிருக்கானா, அதான் என்னோட வர கசக்குதா?” என்றான்.

அவன பேச்சை கேட்டு அவனை ஏளனமாக பார்த்தாள்.
“ஹான், வந்துட்டியா.... உன் யோக்யதைக்கு வந்துட்டியா, நினச்சேன், நீயாவது மனுஷனா பேசறதாவதுனு இப்போதான் யோசிச்சேன், இதானே உன் அசல் நிறம், நீயாவது மாறறதாவது..... அசிங்கம் பிடிச்சவனே, அவரைப் பத்தி உன் வாயால் பேச கூட உனக்கு யோக்யதை கிடையாது.

“நீ என்னை பாசமா அன்பா எனக்காக அழைத்து போய், இனியானும் என்னோட நல்லபடி குடித்தனம் பண்ண கூப்பிடலை..... உனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலையுமில்லை, தெரியவும் தெரியாது..... ஏன்னா நீ கேடு கேட்டவன்...... உன் புத்தி இப்படிதான் போகும்.... இப்போ கூட என்ன சொல்றே, ‘நான் ரொம்ப கஷ்டபட்டுட்டேன், நான் ரொம்ப அவஸ்தை பட்டுட்டேன், என் வீடு அலங்கோலமா போயிடுச்சு.....’

“எல்லாமே நீ சம்பந்தப்பட்டது..... அதில் நான் என்பது எங்கேயுமே இல்லை..... உனக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரியா, சமையற்காரியா, படுக்கையில் நீ கூப்பிடும் போதெல்லாம் வந்து படுக்கும் தாசியா நான் வரணும் இருக்கணும்...
‘நீ அசலே ரொம்ப கஷ்டபட்டுட்டே, உன்னை நான் புரிஞ்சுக்காம இம்சை பண்ணீட்டேன், மன்னிச்சுடு, இனியானும் நான் உன்னை நல்லபடி வெச்சுக்கணும்னு ஆசைப்படறேன்னு’ சொல்லி நீ என்னை அழைச்சிருந்தா நான் கொஞ்சமானும் இதைப்பத்தி ஒரு நொடியானும் யோசிச்சானும் பார்த்திருப்பேன்..... ஆனா இப்போதும் கூட... சீ...

அந்த சுலோவும் இப்போ போய்டா, உனக்கு உடம்பு பசி வயிற்று பசி தீர்க்க வழியில்லாமல் போனது.... எத்தனை நாள்தான் ஹோட்டலில் சாப்பிட முடியும், இல்ல வேசியோட படுக்க முடியும்...... நீதான் கஞ்சனாச்சே, காசு செலவழிச்சு இதை எல்லாம் அனுபவிக்க மனசே வராதே உனக்கு..... அதான் ஓசியில நான் கிடைச்சா கூட்டிகிட்டு போய் உள்ளே அடைச்சு வெச்சு உன் இஷ்டபடி ஆளலாம்னு முடிவு பண்ணி, என்னைத் தேடி வந்திருக்கே, உனக்கு வெக்கமா இல்லையா, சீ, நீயும் ஒரு மனுஷனா” என்றாள் முகத்தை அசூயையுடன் திருப்பிகொண்டு.

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் வாசுவிற்கு முள்ளாக தைத்ததோ இல்லையோ, கீர்த்திக்கு, அவள் உள்ளே எவ்வளவு வலி வைத்துக்கொண்டு சிரித்து மெளனமாக இன்னாள் வரை இந்த துன்பங்களை தாங்கி வந்திருக்கிறாள் என்பதை அவளின் சொற்கள் அவனுக்கு பளிச்சென எடுத்துரைத்தன.
மனம் கலங்கி போனான்.

வாசுவுக்கு வேறே என்ன எப்படி பேசுவது என தெரியவில்லை..... ஏனெனில் அவள் சொன்னது தான் அவன் நினைத்ததுமே, ‘பேசாமல் இவளை கண்டெடுத்து அழைத்து சென்றுவிட்டால் எல்லாமே ஓசியில் கிடைத்துவிடுமே’ என நினைத்துதான், அழைக்க வந்தான்.....

அவனது நண்பன் ஒருவன் தான் கோவைக்கு வந்தபோது கீர்த்தியுடன் மனு காரில் செல்லும்போது கண்டு வாசுவிற்கு விவரங்கள் திரட்டி கூறி இருந்தான்.... அவர்கள் வீட்டு பார்டியில் கலந்து கொண்டவனுள் அவனும் ஒருவன், அதனால், அவனுக்கு மனுவை உடனே அடையாளம் தெரிந்து போனது.... சரி அழைத்து போய்விடுவோம் என வாசுவும் உடனே கிளம்பிவிட்டான்..... ஆனால், பசு போல வாயை திறக்காமல் எல்லா கொடுமைகளையும் அனுபவித்த அவனுக்கு தெரிந்த மனஸ்வினி, இப்போது புலியாக மாறி அவனையே கடித்து குதறுவாள் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.

“இவனை நம்பி கட்டினவனையா எட்டி உதைக்கிற, வெளியேபோன்னு சொல்றே, நாலு நாள் உன்னை நல்லா உபயோகிச்சுட்டு கறிவேப்பிலை மாதிரி உன்னை தூனு துப்பிடுவான் இவன்.... அப்போ வருவேடீ என்கிட்ட அழுதுகிட்டு.... என்னை ஏத்துகோங்கன்னு..” என்றான் கடைசி கையாக.

அவள் கேலியாக சிரித்தாள்.
“ஆமா, உன் புத்தி எங்கே போகும்....காமால கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாக தானே தெரியும், அதான் தன்னை போல பிறரையும் நினைனு இவரையும் உன்னைப் போல புத்தி கொண்டவராத்தான் உன்னால நினைக்க முடியும்.....”

“அவர் எவ்வளவு உசத்தி, உயர்ந்த குணமுடையவர், அவர் அன்பு பண்பென்ன உனக்கு விளக்கிகிட்டு இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை..... அப்படியே நான் இந்த வீட்டை விட்டு ஏதானும் காரணம் மூலமா வெளியேறுகிற நிலை வந்தாலும் நான் கண்டிப்பா உன்கிட்ட வரமாட்டேன்....”

“எனக்குன்னு கையில உத்யோகம் இருக்கு, திறமை இருக்கு, படிப்பு இருக்கு, அதுவும் கூட இவர் எனக்கு போட்ட பிச்சை, அது என்னை காப்பாத்தும்..... இதெல்லாம் மிஞ்சி என் சுயகவுரவம்னு ஒண்ணு இப்போ என்கிட்டே இருக்கு, அது எனக்கு சோறு போடும்.... போ வெளியே” என்றாள்.

“என்னடா, இதெல்லாம் உன் ட்ரெயினிங்கா?” என கீர்த்தியின் மீது பாய்ந்தான்.
அவன் சட்டை காலரை கொத்தாக பிடித்த கீர்த்தி, “உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மனுவோட பேசணும்னே, அவளும் உன்கிட்ட பேசிகிட்டு இருந்தா, அவளே சமாளிச்சுகுவானு தெரிஞ்சதாலா நானும் மௌனமா இடைபடாம பார்த்துகிட்டு இருந்தேன்..... ஆனா இனியும் நீ இங்கே நின்னு மேலும் மோசமா ஏதானும் நடந்துக்க முயற்சி பண்ணினா, அடுத்தது நான் போலீஸ்கிட்ட போக வேண்டி வரும்.....”

“அவ நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு.... டைவர்ஸ் நோட்டீஸ் வரும், மரியாதையா கை எழுத்து போட்டு அனுப்பு... பேசாம பிரிஞ்சுடு.... அவளை மறந்துடு... எக்காலத்திலேயும் இனி அவ உன்கிட்ட வர மாட்டா... அவ உனக்கு எந்த சொந்தமும் இல்லை..... மாட்டேன்னு முரண்டு பண்ணினா, கோர்ட் கேசுன்னு உன் நிலை தான் நாறி போகும்..... அவளை நீ எவ்வளவே இழிவு படுத்தினாலும் நான் அவளை மனசார எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்வேன்..... இதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனா உன் வண்டவாளம் வெளியே தெரிஞ்சா உனக்குத்தான் அவமானம்..... அதை யோசிச்சுக்க” என்றான்.
போலிஸ் கோர்ட் என கேட்டு வாசு பயந்தான். ஆனாலும் தன் ஜம்பம் விடாமல் கெத்தாக,
“நீ எப்படி நல்லா இருக்கேன்னு நானும் பார்க்கறேன்” என சூளுரைத்தான்.... அவனை கண்ணாலும் காணாமல் அவள் வெறுப்புடன் முகம் திருப்பிக்கொண்டாள்.

“இவன் சொல்றதெல்லாம் உண்மையா, இவனையா கட்டிக்க போறே?” என கேட்டான். அவள் பதிலை வாசு ஆவலுடன் எதிர்பார்த்தானோ என்னமோ, கீர்த்தி எதிர் பார்த்தான்.....“ஆமா, இப்போ அதுக்கு என்ன” என்றாள்.
“ஏண்டீ, உனக்கு வெட்கமா இல்லை, இதை கட்டின புருஷன், என்கிட்டேயே சொல்ல...?” என்றான்.

“நீயா, கட்டின புருஷனா.... இதை சொல்லிக்க உனக்கே வெக்கமா இல்லாதபோது இப்படி பட்ட நல்ல மனுஷரோட இணைய போறேன்னு சொல்லிக்க எனக்கு எதுக்கு வெட்கம், இப்போ நீயா வெளீல போறியா இல்ல...” என நிறுத்தினாள்
அதற்குமேல் வாசு என்ன பேசுவான்.
“இருடீ உனக்கு வெச்சிருக்கேன்” என வாசலுக்கு தடுமாறி வெளியேறினான்.
மனுபொத்தென சோபாவில் சாய்ந்தாள்.

அவன் முன் வராத கண்ணீர், இத்தனை வருடங்களாக அடக்கி வைத்தது, அணையை உடைத்துக்கொண்டு இப்போது அவளையும் மீறி பிரவாகமாக வழிந்தோடியது.... வாசலை அடைத்துவிட்டு உள்ளே வந்த கீர்த்தி இதை கண்டான்.... அவள் அருகே சென்று பேசாமல் அவள் கைகளை பிடித்தபடி அமர்ந்து அவளை அழவிட்டான்.

சிறிது நேரம் விக்கி விக்கி அழுது முகம் சிவந்து, தொண்டை காய்ந்து கமறியது.... தண்ணீரை எடுத்து அவளை தோளோடு தோள் சேர்த்து அணைத்து புகட்டினான்..... குடித்தாள்....இன்னமும் நெஞ்சு விம்மியபடி இருக்க, கண்ணீர் கோடாக வழிந்தபடி இருக்க, அவனை நிமிர்ந்து முகத்தை கண்டாள்..... பின் அவனோடு ஒன்றிகொண்டாள்.

“ஹப்பா, இப்போதான் எனக்கு மனம் நிம்மதியாச்சு..... இவனெல்லாம் ஒரு மனுஷனா, இவனோட நீ எப்படித்தான் அந்த ரெண்டு வருஷமும் தாக்கு பிடிச்சியோ.... விட்டுது பீடைன்னு தலைய முழுகு மனு மா.... நீங்க ரெண்டு பேரும் எடுத்திருக்கற முடிவு நல்ல முடிவு..... சீக்கிரமா நான் கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணறேன், நான் நம்பின என் முருகன்  என்னை கைவிடலை, நான்முதல்ல அவனுக்குத்தான் நன்றி சொல்லணும்” என மெல்ல எழுந்து பூஜை அறைக்குள் சென்றார்.

“போதும் வினி, நிறைய அழுதாச்சும்மா, கண்ணை துடை, போய் முகத்தை கழுவீட்டு வா. அதான் எல்லாம் நல்லபடி முடிஞ்சதே, இன்னும் என்ன வேதனை, நீ தைர்யமா பேசினியே, அவனுக்கு நல்ல பாடம் புகட்டீட்டியே கண்ணம்மா.... இன்னும் என்னடா” என்றான் ஆதுரமாக.

“இல்ல கீர்த்தி, எனக்கு ஆறவேயில்லை, என் ஆத்திரமும் அழுகையும் அடங்கவே மாட்டேங்குது.... ராஸ்கல், இவனல்லாம் ஒரு மனுஷனா, சீ, என் வாழ்வையே நாசம் பண்ணினான் சரி, எங்கப்பா அம்மாவையும் எனக்கு ஆக விடாம பண்ணீட்டானே, அவங்களோட இருந்த காலத்திலேயும் பெரிய அன்பு பாச பிணைப்புன்னு நாங்க அன்னியோன்னியமா வாழலைனாலும் அம்மா அப்பா என்னிக்குமே முக்கியம் தான், உறவு உண்டுதானே.... அவங்க என்னை வெறுத்து ஒதுக்கறா மாதிரி என்னைப்பத்தி இவன் அவங்ககிட்ட கதைகட்டி விட்டுட்டான்.....அதை அவங்களும் நம்பி எனக்கும் அவங்களுக்கும் இனி எந்த ஓட்டும் உறவும் இல்லைன்னு சொல்லிட்டாங்க கீர்த்தி, அதான் எனக்கு தாங்கலை”. என மீண்டும் அழுதாள்.

“ஹ்ம்ம் இப்படி வேறு நடந்ததா, பார்க்கலாம் வினி, நம்மளால ஏதானும் செய்ய முடிஞ்சா மீண்டும் பேசி பார்க்கலாம்” என்றான் ஆறுதலாக.
“பிரயோஜனம் இல்லை கீர்த்தி, நான் நடுவில முயற்சி பண்ணினேன், நான் அம்மான்னு சொல்லும் முன்பே ‘உன்னை அழைக்காதே எந்த தொடர்பும் வேண்டாம்னு தானே சொல்லி இருக்கு, உனக்கு வெக்கமா இல்லையா திரும்ப திரும்ப அழைக்கிறியேன்னு கத்தீட்டு வெச்சுட்டாங்க..... மூணாம் தரம் நான் ஹலோன்னதுமே போனை வெச்சுட்டாங்க” என்றாள் விம்மியபடி

“ஹ்ம்ம் என்ன செய்யறது.... தேத்திக்கோ.... உனக்குதான் கண்ணுக்கு கண்ணா எங்கம்மா இருக்காங்களே, போதாதா கண்ணம்மா” என்றான்.
“உண்மைதான்” என்றாள் புன்னகைத்து.

“ஒண்ணு கேட்கலாமா?” என்றான்.
‘என்ன’ என நிமிர்ந்தாள். இப்போது அழுகை நின்றிருந்தது.
“என்னை பண்ணிக்க இஷ்டம்னு நீ இன்னும் என்கிட்டே சொல்லலையே வினி?” என்றான். “கீர்த்தி” என அவன் மார்பில் சாய்ந்தாள்.
“நீங்க முழு மனசாவா என்னை எற்றுக்க விரும்பறீங்க?” என கேட்டாள்.
“இன்னுமா அதில உனக்கு சந்தேகம் கண்ணம்மா?” என்றான்.
இல்லை என தலை ஆட்டினாள்.
“அப்போ பின்னே?” என்றான் கேள்வியாக.
“எனக்கும் சம்மதம்” என்றாள்.
“எதுக்கு?” என்றான் கண் சிமிட்டி.
“சி போ” என அவன் மார்பில் குத்தினாள். அவளை அணைத்துக்கொண்டான். மனம் பெரும் நிம்மதி கண்டது.... பெரிய பொக்கிஷம் ஒன்று கையில் கிடைத்தது போல உணர்ந்தான்.

வாசு வந்த போன ரணம் மனதை விட்டு நீங்க சில நாள் பிடித்தது மனுவிற்கு.... கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தாள்.... அவள் அப்படி ஆகும்வரை கீர்த்தியும் மிகவும் அன்புடனும் ஆதரவுடனும் அவளை பார்த்துக்கொண்டான்.... தம் காதலை பற்றி மறந்தும் அவளிடம் பேச்சு குடுக்கவில்லை, நெருங்கவில்லை..... அந்த கண்ணியம் அவளை மேலும் அவன் மேல் காதல் கொள்ள வைத்தது.

கற்பகம் உற்சாகத்துடன் நடந்தவற்றை நடக்கவிருக்கும் திருமணத்தை பற்றி காஞ்சனாவுடனும் ராஜனுடனும் பகிர்ந்து கொண்டார்.... காஞ்சனா தேதி நிச்சயம் ஆனதும் உடன் புறப்பட்டு வருவதாக கூறினாள்..... கீர்த்தியை அழைத்து மகிழ்வுடன் பேசிகொண்டாள்.
அப்படியே அவன் போனை மனுவிடம் குடுக்க, “அண்ணீ, சாதிச்சுட்டீங்க, எங்க அண்ணனை மீண்டும் மனுஷனா ஆக்கிட்டீங்க, எங்க இப்படியே இருந்துடுவாரோனு நான் கலங்காத நாளில்லை... ரொம்ப நன்றி அண்ணி, உங்களால தான் அண்ணா வாழ்வு மலர போகுது” என்றாள் கண்ணீர் மல்க.

“ஐயோ, என்ன நீங்க, இப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க, எனக்கு அதுக்கெல்லாம் அருகதை இல்லை.... நானே அனாதையா இங்கே ஒண்ட வந்தவ காஞ்சனா, எனக்குதான் ஒரு பொன்னான வாழ்வை உங்க அண்ணா ஏற்படுத்தி குடுத்திருக்காரு” என்றாள்.

“என்ன நீங்க வாங்க னு எல்லாம் பேசறீங்க அண்ணி, என்னை நீ வா னு பேசுங்க.... நான் உங்கள விட சின்னவதான், உங்க காஞ்சனா” என்றாள் பாசத்துடன்.
அதை கேட்டு தன் தங்கைகளை சந்திக்க முடியாமல் இருக்கும் மனுவிற்கு நெஞ்சு நிறைந்தது.
“சரி காஞ்சனா, நீ எப்போ வருவே?” என்றாள்.

“சீக்கிரமா வரேன் அண்ணீ, முகூர்த்தம் குறிச்சதும் ஓடி வந்துடுவேன், எனக்கு இங்க கால் நிக்காது” என்றாள் உற்சாகத்துடன்.
“அதை சீக்கிரமா குறிக்க வைப்பதில இருக்கு உங்க சாமர்த்தியம்” என்றாள் கிண்டலாக அவளை கேலி செய்தபடி.
“போ காஞ்சனா” என வெட்கினாள் மனு.

இதை எல்லாம் பக்கத்தில் நின்று மனுவின் தோளை சுற்றி கை போட்டுகொண்டு கேட்டு கொண்டு சிரித்தபடி நின்றான் கீர்த்தி..... போனை வைத்ததும் “கடைசீல என்ன சொன்னா காஞ்சனா, நீ அவ்வளோ அழகா வெட்க பட்டே வினி?” என்றான் அவளையே பார்த்தபடி. “ஒண்ணுமில்லை” என முனகினாள்.
“சொல்லேன்” என்றான் கெஞ்சலாக.
“இல்ல, வந்து.... முகூர்த்த சீக்கிரமா குறிக்க வைக்கறதில இருக்கு என் சாமர்த்தியம்னு சொல்றா” என்றாள் தலை குனிந்தபடி.

“ஓ சரியா சொல்லீட்டா, அதுக்கு நீ என்ன பண்ண போறே வினி?” என்றான் கண்களில் குறும்புடன்.
“நானா, நான் வந்து.....” என சீரியசாக ஆரம்பித்து “உங்கள நாலு தர்ம அடி போட போறேன்” என்றாள் குறும்புடன்.
“அடப்பாவமே, டேய் கீர்த்தி கடைசீல உன் நிலை இப்படியாடா ஆகணும்?” என தன்னையே கண்டு பேசிகொண்டான்.
அவள் கலகலவென சிரித்தாள்..... அப்படி சிரிக்கும் அவளை காலமெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என தோன்றியது கீர்த்திக்கு.