Sunday 29 July 2018

NENJIL KODI MINNAL 26

அவள் கையை எடுத்து தன் கையில் வைத்த நேரம், வீசிய தென்றலில், ஜாதியும் முல்லையும் மல்லியும் பொல பொலவென அவர்கள் மீது உதிர்ந்தன. அவள் ஆனந்தத்துடன் அண்ணாந்து பார்த்தபடி தன் முகத்தில் உடலில் விழுந்த பூக்களை கையில் எடுத்தாள். வாசனை முகர்ந்தாள்.

அவனும் அவள் கையில் உள்ள மலர்களை வாசனை முகர்ந்தான்.

“பாத்தியா, தெய்வத்தின் ஆசிகள் இவை என்பது போல கண் ஜாடை செய்தான். ஆம் என்பது போல வெட்கத்துடன் தலை குனிந்தாள் ராஜி.

ஒரு அரை மணி பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். இருவர் மனதின்லும் அமைதி, ஆனந்தம் நிறைவு..... உள்ளூர இருவர் மனத்திலும் ஆயிரம் எண்ணங்கள், கேள்விகள் பதில்கள் உருவாகி தானாகவே விடை கிடைத்து மேலும் கேள்வி எழுந்து கொண்டுதான் இருந்தது.

அதன் தாக்கம் மேலே எழும்பி, இந்த அருமையான மாலை பொழுதினை கெடுக்க இருவருமே இடம் குடுக்கவில்லை.

“நான் கிளம்பவா? என கண்களால் விடைபெற சரி என அவனும் தலை அசைப்பில் விடை கொடுத்தான்.

வாசல்வரை அவள் கைபிடித்தபடியே நடந்து வந்தான்.

“நான் கொண்டு விட்டுரவா? என்றான் ஆசையுடன்.

“வேணாம்.... நான் போயிருவேன் என மெல்ல நடந்தாள்.

ரெண்டு தெரு தான் என்பதால் அவனும் சரியென அவள் கண்மறையும் வரை பார்த்திருந்தான்.

‘இப்படி எத்தனை நாட்களுக்கு...? என பெருமூச்சு எழுந்தது. 

‘முதலில் தங்கையிடம் சொல்ல வேண்டும்.... பின் பெரியவர் முருகானந்தத்திடமும் கதிரிடமும் பேச வேண்டும்.... அதன் பின் மளமளவென ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம்.... இனி தாளாது என முடிவு செய்துகொண்டான்.

அதன்படி அன்றிரவு தங்கையை அழைத்தான்.

“என்னம்மா எப்படி இருக்கே, மச்சான் எப்படி இருக்காவ? என்றான்.

“நல்லா இருக்கோம்ணா. நீங்க எப்படி இருக்கீக, எப்போ இங்க வரப்போறீக, இன்னமும் அங்கிட்டுதான் இருக்கீகளா? என மடமடவென கேள்விகளை அடுக்கினாள்.

“அம்மாடி, கொஞ்சம் மூச்சு விட்டுக்க என சிரித்தான்.

“போண்ணா என சிரித்தாள்.

பின் ராஜியைப் பற்றி விலாவரியாக கூறினான்.

“அடப்பாவமே என கரைந்தாள் அவள்.

“ஹ்ம்ம், என்ன போறாத காலமோ.... இப்போ எப்படி இருக்காக அவக? என கேட்டாள்.
“நல்லா இருக்கிறா என்றான் தயங்கி.

“மாலுகுட்டி, வந்து.... எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருக்குதுடா என்றான் சற்றே வெட்கத்துடன்.

“என்னண்ணா சொல்றீக? என அதிர்ந்து போனாள்.

“ஆமா, நான் முடிவே பண்ணிப்புட்டேன் மாலுகுட்டி.... நான் அவள கட்டிக்க போறேன்.... நீ என்னடா சொல்றே, மச்சான் எதாச்சும் தவறா நினைப்பாரா..... அவுக வீட்டில எதுவும்....? என்றான் சந்தேகத்துடன்.

“அப்படி ஒண்ணுமில்ல அண்ணே, ஆனாலும், நீங்க நல்லா யோசிச்சுகிட்டிகளா..... இது சட்டுன்னு எடுத்தேன் கவுத்தேனன்னு முடிவு செய்யற விஷயமில்ல தெரியுமில்ல.... நான் ஒமக்கு சொல்ல வேணாம் தான், ஆனாலும், ஒண்ணுக்கு ரெண்டுவாட்டி நல்லா யோசிச்சுகுங்க அண்ணே என்றாள்.

“நல்லா, ஆற அமர யோசிச்சுதான்மா இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.... இனி மாற்றமில்ல என்றான்.

“அப்போ சரி, நான் அவுக கிட்ட பேசறேன்.... “நாங்க வந்து பொண்ணு கேக்கறோம் என்றாள் ஆர்வமாக.

“ஆஹான், பெரிய மனுஷியம்மா வந்து பொண்ணு கேக்க போறீகளாக்கும்...? என சிரித்தான்.

“பின்ன? என்றாள்.

“இல்லடா, அப்படி நீங்க வந்து பொண்ணு கேட்டு செய்ய, இங்க பெரியவங்க சொந்தம்னு யாரும் இல்லீல்ல..... பெரியவரும் கதிரும் மட்டும்தான் இருக்காக.... நானே பேசறேன், பக்குவமா, என்ன மாலுகுட்டி என்றான். 

“சரி அண்ணே நீ சொன்னா சரி
என்றாள் மாலதி.

அடுத்த நாள் கதிரினைக் காணவென ஜெயிலில் பர்மிஷன் வாங்கி உள்ளே சென்றான்..

அவனைக் கண்டதும் கதிருக்கு பெரும் மகிழ்ச்சி. 

“வாங்க மருது. எப்படி இருக்கீங்க?
என வரவேற்றான்.

“நான் நல்லா இருக்கேன் கதிர். நீ எப்படி இருக்கே அதச் சொல்லு.... இங்க எல்லாம்....? என கேட்டான். 

‘ஜெயிலில் நீ சுகமா?
என எப்படி கேட்பது எனத் தயங்கி.

“நான் நல்லா இருக்கேன்.... என் கம்ப்யூட்டர் கோர்ஸ் கூட முடியப் போகுது.... என்னுடைய நன்நடத்தையால ஆறு மாசம் முன்னதாகவே விடுதலை செய்யப் போறதாக பேச்சு என்றான்

“அட என முழு மனதுடன் மகிழ்ந்து போனான் மருது.

“ரொம்ப நல்லதாப் போச்சு.... நான் வந்தது நல்ல நேரம்தானன்... ஹப்பா என்றான்

“என்ன விஷயம் மருது, முகத்தில ஆனந்தமான மின்னல்? என கேலி செய்தான் கதிர்
“அப்படி ஒண்ணுமில்லியே என சமாளித்தான்.

“சொல்லுங்க, ராஜேஸ்வரி எப்படி இருக்கா? என்றான்.

“நல்லா இருக்கா.... ரொம்ப நல்லா இருக்கா என்றான் மனம் நிறைந்து.

‘இருக்கா என்கிறானே.... இருக்காக, என்றல்லவா கூறி வந்தான் இந்நாளும்...? என யோசித்தான் கதிர்.

“அப்புறம் வேற, பெரியவரு, பொன்னி மற்ற பணியாளுங்க எல்லாரும் சுகமா, உங்க தங்கை குடும்பம் சுகமா... என்ன திடீர்னு இந்த பக்கம்? என்று கேட்டான்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க.... நான் ஒரு முக்கிய விஷயமா உன்னப் பார்க்க வந்தேன் என்றான்

“சொல்லுங்க எனக் காத்திருந்தான்.

“நம்ம ராஜிய.. என்றான்

“நம்ம ராஜியா, ஓஹோ.... விஷயம் அப்போ அப்படிப் போகுதா, நல்லது என மெளனமாக கேட்டான்.

“கதிர், நீ என்னை நம்பி அவள பார்த்துக்கச் சொல்லீட்டு வந்தே, நான் எந்த தவறான எண்ணத்துடனும் அவளோட பழகல..... அவளுக்கு எந்த கெட்ட பேரும் உண்டாக்கல..... ஆனா, அவ மேல என் உயிரையே வெச்சுட்டேன் கதிரு என்றான் அவனை நிமிர்ந்து காண முடியாமல்.

“ரொம்ப ரொம்ப சந்தோஷம் மருது.... இத ஓரளவு நான் எதிர்பார்த்தேன் என்றான் அவன்

“ஹான்? என அச்சர்யப்பட்டான்.
“எப்படி? என்றான்

“நான் இங்க வர்றதுக்கு முந்தியே அவளப்பத்தி நாம ஒரு நாள் இரவு பேசினோம் நினைவிருக்கா? என கேட்டான்

“ஆம் என தலை அசைத்தான்

“அன்னிக்கி, எனக்கும் ராஜேஸ்வரிக்கும் நடுவில என்னனு நீங்க கேட்டு தெரிஞ்சுகிட்டீங்க..... அப்போவே எங்க உறவைப்பற்றி நீங்க ஒரு ஆர்வத்துடனும் கலக்கத்துடனும் கேட்டீங்க..... நான் அவளுக்கு அண்ணன் போல என தெரிந்ததும் உங்க கண்ணில ஒரு நிம்மதி..... பலகோடி மின்னல் நான் பார்த்தேன்... என்றான் கதிர்
“போப்பா, ஆனாலும் நீ ரொம்ப சூட்டிக என்றான் சிரித்தபடி மருது.

“அப்போ அதான் உண்மையா? என கிண்டல் செய்தான் கதிர்.

“ஆமா.... ராஜேஸ்வரி என்ன சொல்கிறா லேசில ஒப்புக்காம படுத்தி இருப்பாளே? என்றான் அவளை நன்கு அறிந்தவனாக.

“ஐயோ, அதை ஏன் கேக்குற.... இன்னமும் முழு மனசா சரின்னு சொல்லல.... ஆசையும் இருக்கு, காதலும் இருக்கு, கூடவே யாரு என்ன சொல்வாங்களோ... கனகு போலவே யாரும் அவளை தப்பா பேசீடுவாகளோன்னு ஒரே பயம்.... ஒரே கலக்கம்.... அவ பயத்த போக்கி தைர்யம் சொல்றதே எனக்கு பெரும் பாடா போச்சுது என இன்பமாக அலுத்துக்கொண்டான்.

“ம்ம்ம் புரியுது, நிலம அப்படி இல்லியா? என்றான்

“ஆமா, நீ உன் தங்கைய விட்டு குடுத்திட மாட்டியே என்றான்

“ஆமா பின்னே என்றான் கதிரும் சந்தோஷமாக.

“ஆக, இப்போ என்ன முடிவு? என கேட்டான்

“இல்ல, நீ எப்போ வர முடியும்... அத பொறுத்து.... நிச்சயமா நீ இல்லாம இந்த நல்ல காரியம் நடக்க ராஜி ஒப்புத்துக்க மாட்டா, என் எண்ணமும் அதுதான் என்றான்.

“ம்ம்ம், நான் வெளியே வர இன்னும் சில மாசம் இருக்கு மருது.... நீங்க அது வரைக்கும் வெயிட் பண்ணுவானே..... நினைத்த நல்ல காரியத்த, தாமதம் செய்யாம சீக்கிரமா நடத்தினாத்தானே நல்லது..... நான் தேவை ஏற்பட்டா பரோல்ல வரப் பார்க்கறேன் என்றான்.

“அப்படியா சொல்றே.... அவ ஒத்துக்கணுமே...? என்றான் சந்தேகமாக.

“நான் அவளுக்கு எழுதறேன் என்றான் கதிர்.

“பெரியவர்கிட்ட பேசீட்டீங்களா? என்றான்.

“இல்ல இன்னும், முதல்ல உங்கிட்ட பேசி உன் முடிவ தெரிஞ்சுகிட்டு அதன் பின் அவரோட பேசலாம்னு... என்றான்

“ம்ம் சரி நாளைக்கே பேசீடுங்க.... நல்ல முகூர்த்தமா பாருங்க என்றான்.

“சரி அப்போ, இதில உனக்கு முழு சம்மதம்தானே கதிர்? என்றான்

“இத கேட்கவும் வேணுமா மருது என சிரித்தான்

“ரொம்ப சந்தோஷம்பா என விடைபெற்றான்.

“நான் எல்லாம் முடிவு பண்ணீட்டு சொல்றேன்.... பரோல்ல வருவியோ விடுதலையாகியே வருவியோ பாத்துக்கலாம்.... ஆனா ஒண்ணு நீ இல்லாம மட்டும் எங்களுக்கு கல்யாணம்னு ஒண்ணு இல்லை என்றான். அவன் மீது இவ்விருவரும் வைத்த அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனான் கதிர்.

“சரி என தலை அசைத்தான் தொண்டை அடைக்க.

அன்றிரவு வீட்டை அடைந்த பின் ராஜியை அழைத்தான்

“ரஜ்ஜு என்றான் கள்ளுண்ட வண்டாக

“என்னவாம் ஒரே குழையலு? என்றாள் அவள் லஜ்ஜையுடன்

“பர்மிசன் கெடச்சுடுச்சே அதான் என்றான்

“என்ன பர்மிசன் யாருட்டேருந்து? என்றாள்.

“இன்னிக்கி கதிர பார்க்கப் போனேன் என்றான்

“அப்படியா? என்றாள்

“எப்படி இருக்காக? என்றாள் ஆசையுடன்

“நல்லா இருக்கான்.... உன்னப்பத்தியேதான் கவலை, பேச்சு... மூச்சுக்கு முன்னூறு தரம் ராஜேஸ்வரி எப்படி இருக்கான்னு தான் கேள்வி என்றான்

“என்னாலதானே., அவுகளுக்கு இந்த நெலம.. எனத் துவங்கினாள்.

“அடராமா, இப்போ நீ திரும்ப ஆரம்பிக்காத ரஜ்ஜு..... விஷயத்த கேளு, நான் ரொம்ப நல்ல மூட்ல இருக்கேன் என்றான் சற்று அதட்டலுடன்

“சரி சரி சொல்லுங்க என்றாள்.

“கதிர் நல்லா இருக்கான்.... இன்னும் சில மாசத்தில விடுதலை ஆகீடுவானாம் நன்னடத்தை காரணாமா என்றான்.

“அட என சந்தோஷித்தாள்.

“நம்ம விஷயம் பேசினேன்

“அச்சோ, அவர்ட போய் என்ன சொல்லி வெச்சீக? என வெட்கினாள்.

“என்னத்த சொல்லுவேன், உன்ன ஏகத்துக்கு பிடிச்சிருக்கு கட்டிக்கப் போறேன்.... உன் தங்கச்சிய எனக்கு குடுடானு உரிமையோட கேட்டேன்.... அவனும் சரின்னுட்டான் என்றான்

“ஒ, அதானா ஐயா புள்ள ஒரே சந்தோஷத்தில மிதக்குராவ? என்றாள் ராஜி

“ஆமா இல்லியா பின்னே என்றான் அவனும்

“ஆனா அத்தான் என்றாள்

“ஐயோ, என்னடி புள்ள, நீ ஆனானு இழுத்தாலே எனக்கு வயத்தக் கலக்குது என்றான் கேலியும் நிஜமுமாக

“அட கேளுங்கன்னா என்றாள்.

“நான் என்ன சொல்ல வரேன்னா.... அவுக வராம நாம கல்யாணம் மட்டும் நடக்கப்டாது அம்புடுதேன் “என்ன செரியா? என்றாள்.

“அடி என் ரஜ்ஜு, அதத்தான் நானும் அவன்கிட்ட சொல்லீட்டு வந்தேன்... பரோல்ல வரப்பாக்குறேன்னு சொன்னான் அவன்.... இல்ல அவன் விடுதலையாகி வரட்டும் அப்போ முகூர்த்தம் வெச்சுக்குவோம் என்ன என்றான்.

“அத்தான், நீங்க எவ்வளோ நல்லவக தெரியுமா என்று குழைந்தாள்.

“ம்ஹூம் அப்படியா? என்றான் அவனும் குழைந்து.

“எம்மனச அப்படியே படிச்சுட்டீகளே என்றாள்.

“நிசம்மாவா? என்றான்

“ம்ம்ம் என்றாள்.

“அப்போ, உன் இந்த அத்தானுக்கு, பரிசொண்ணும் இல்லியா? என்றான் தாபத்துடன்
“பரிசா, என்ன வேணும்? என்றாள்.

“என்ன வேணும்னாலும் குடுக்கலாம் என்றான்

“இங்க இருந்துகிட்டு நான் என்ன தர? என்றாள்.


போனில் முத்தம் வைத்தான்.

2 comments: