Tuesday 17 July 2018

NENJIL KODI MINNAL - 14

இவளைப்பற்றிய கவலையிலேயே ராஜலிங்கத்தின் உடல்நிலை தடுமாறியது. நாளுக்கு நாள் மோசம் என்றானது.

அவரை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வதே ராஜிக்கு பெரும்பாடானது.

அவருக்கு முழு ஒய்வு கொடுத்துவிட்டு கதிரும் அவளுமே அனைத்தையும் பொறுப்பெடுத்துக்கொண்டனர்.

கதிர்வேலன் நிஜமான ஒரு மகனைப் போல அவரை பார்த்துக்கொண்டான். எப்போதும் போல கணக்கு வழக்குகள் செவ்வனே நடந்தன. 

பயிர், நாத்து, நடவு, அறுவடை என்பவற்றில் அவனுக்கு அதிகம் பரிச்சயம் இல்லை. ராஜி அதில் ஓரளவுக்கு தேர்ந்திருந்தாள் என்பதால் அவை அனைத்திற்கும் அவள்தான் செல்ல வேண்டி வந்தது.

இது வரை ராஜலிங்கம், இதுபோன்றவற்றை ஆழமாக சிந்தித்து அனைவருக்கும் உதவக்கூடிய வகையில் எந்த நேரத்தில் என்ன பயிர் செய்யலாம், நாத்து நடவு அறுவடை என பார்த்து பார்த்து பாதை வகுத்து கொடுப்பார். ஏழை விவசாயிகளுக்கும் கூட அவரது இலவச ஆலோசனைகள் பலவிதமாகவும் உதவியாகியது... தோப்பு துறவு நிலம் நீச்சு என அனைத்தையுமே செவ்வனே பார்த்துக்கொண்டார். இப்போதோ பெரியதோர் குறையாக நின்று போனது.

“நீங்க ரெண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி அலையறீங்களே, ஏதானும் சிலத விற்றுடலாமா? என்றார் ராஜலிங்கம் பரிதாபமாக.

“அப்பா, என்னப்பா பேச்சு இது.... எதுக்குப்பா விற்கணும், எங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லை.... நீங்க கொஞ்சம் அமைதியா இருங்கப்பா, ஏம்பா இப்படி கண்டதையும் யோசிச்சு மனசையும் உடம்பையும் கெடுத்துக்கறீக என கெஞ்சினாள்.
“சரி சரி, இனி விற்கறதப் பத்தி பேசல.... இன்னொரு யோசனை சொல்லவா, பக்கத்துக்கு கிராமத்தில நான் ஒரு பண்ணைக்காரனை சந்திச்சேன். நல்ல தெரிஞ்ச குடும்பம்தான்.... நம்ம அளவு சொத்து சுகம் இல்ல ஆனாலும், நல்ல பேருள்ள கவுரவமான குடும்பம்.... கொஞ்சம் நிலபொலம் இருக்கு. அவன் பேரு மருதீஸ்வரன்.
தங்கமான புள்ள. அவன இங்க வந்து நம்ம நிலபுலத்தை கதிருக்கு ஒத்தாசையா இருந்து பார்த்துக்கச் சொல்லி கேட்கலாமா? என்றார் ஆசையாக.

“என்னப்பா இது, அவருக்குன்னு நிலம் நீச்சு இருக்குனு சொல்றீக.... அப்படி இருக்கையில, அவரு தம் மண்ணை பார்க்காம நம்ம மண்ணில வந்து பாடுபட ஒப்புவாரா, நாம அப்படி அவர கேட்டாலும் அது நல்லதில்லையப்பா, அவர நாம தர்மசங்கடத்தில ஆழ்த்தக் கூடாது. நாங்க பாத்துக்கறோம் விட்டுடுங்க. நமக்கு ஒத்தாசையா, உயிரையும் குடுக்கத் தயாரா, இத்தனை பண்ணையாளுங்களும் குடியானவங்களும் இல்லியாப்பா...

“நீங்க சந்தோஷமா அமைதியா இருக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காரில்ல... ராமாயணம் பாரதம்னு படிங்க, என்னோட செஸ் விளையாடுங்க.... நம்ம நந்தவனத்துக்கு தினம் நடை பழகீட்டு வாங்கப்பா, உடம்புக்கு நல்ல காத்து படட்டும் என்றாள்.

“ம்ம்ம் சரிம்மா என்றார். உள்ளுக்குள் அவரை கவலை அரித்துக்கொண்டே இருந்தது.
இதனிடையில் இரண்டு வருடங்கள் ஓடிப்போனது.

கனகு ஜெயிலிருந்து வெளியே வந்தான்,

நேராக அவன் வீட்டிற்குச் சென்றான். காணததைக் கண்டவன் போல முட்ட குடித்தான். இஷ்டம்போல தின்றான். பின் மயங்கி படுத்து கிடந்தான்.

அடுத்த நாள் விடிந்து எழுந்தான். எங்கிருக்கிறோம் என அறியாத குடி போதை.

கொஞ்சம் தெளிந்து எழுந்து அமர்ந்தான்.

‘ம்ம்ம் விடிஞ்சிடுச்சா, அவளுக்கு இனிமேல விடியவே விடியாது... அதுமட்டும் நிச்சயம் என கறுவிக்கொண்டான்.

முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு நேராக ராஜியின் வீட்டை நோக்கிச் சென்றான்.
வாசலில் நுழையாமலே, “யாரு அது வூட்டுள்ள. வெக்கம் மானம் ரோஷம் உள்ள ஆராச்சும் இருந்தா வெளியே வாங்க பாக்கலாம்.... வூட்டு மாப்பிள்ளய கட்டுன புருஷன, போலீசில பிடிச்சு குடுத்து ஜெயிலுக்கு அனுப்பிட்டு நிம்மதியா உக்காந்து சோறு துன்ன முடியுது பாரு இந்த குடும்பதால தூ... என காரி துப்பினான்.

ராஜலிங்கதுகு அப்போதே பிரஷர் ஏறியது. “ஐயையோ அண்ணே, இவன் வெளியே வந்துட்டான் போல இருக்கே...? என.

“இன்னும் பதினஞ்சு நாள் பொறுத்துதானே வரப்போறதா பேச்சு என்றார் அவரும் கலங்கி.

ராஜி துணிச்சலுடன் வாசப்பக்கம் சென்றாள்.

“வாடி எம் பொஞ்சாதி. உத்தம பத்தினி ஜாதியாடீ.... நீ எல்லாம் ஒரு ஜென்மம்.... தூ என்றான் மறுபடி.

“எதுவானாலும் உள்ள வந்து பேசுங்க.... வாசல்ல நின்னு எந்த அசிங்கமும் வேண்டாம் என்றாள் பொறுமையாக.

“இன்னாது அசிங்கமா, நீ செஞ்சது அசிங்கமா, நான் இங்க நின்னு பேசறது அசிங்கமா, அப்படித்தாண்டீ பேசுவேன்... கத்துவேன்... துப்புவேன்.... ஏன் உங்க மருவாதைக்கு பங்கம் வந்துடுச்சோ, மரியாதைன்னு ஒண்ணு இருக்காடீ உங்க குடும்பத்துக்கு? என்றான்

“உள்ள வாங்க என்றாள் கடுமையாக.

“ஏன் உள்ள வந்தா என்ன செய்யப் போறே, ஆள விட்டு அடிச்சு கொல்லப்போறியா, இல்ல உள்ள இழுத்து தாழ்பாள போட்டு என்னோட படுக்கப் போறியா? என்றான் கண்கள் ரத்த சிவப்பாக வெறியுடன்.

“நீங்க உள்ள வர இஷ்டம் இல்லைனா நான் கதவ சாத்திகிட்டு உள்ள போகப் போறேன், நீங்க உங்க வழியில போகலாம் என்றாள்.

“தெனாவட்டு, கொழுப்புடீ மச்சு வீட்டில உக்கார்ந்து இருக்கோம்ங்ற திமிரு பணத்திமிரு என்றான்.

உள்ளே வந்தான் தடுமாறியபடி.

“எங்க, அந்த மானம்கெட்ட பெரிசுகள்ளாம், இருக்குதா இல்ல மண்டைய போட்ருச்சா? என்றான்.

“மரியாதையா பேசுங்க, அப்பா உள்ள இருக்காரு என்றாள்.

“அவனுக்கு என்னடி மருவாத, அவன் சொன்னபடி ஒண்ணாச்சும் செஞ்சானா, இதுல நான் இவ்வளோ கத்துறனே வெளியே வந்து எட்டி பார்க்கிறானா பாரு.... அது போகட்டும், அந்தக் கிழத்தோட நமக்கென்ன வேல... என்ன பேச்சு....

“ஒன்னோட தான் நான் பைசல் பண்ண வேண்டிய கணக்கு நிறைய இருக்கு.

“அதெப்பிடிடீ நீங்க எல்லாம் பத்தினி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு திரியறீங்க.... ஆனாலும், வெட்கமே இல்லாம சொந்த புருஷனையே ஜெயிலுக்கு அனுப்பீட்டு சோறும் திங்கறீங்க? என்றான்.

“த பாருங்க, அனாவசியம் பேச வேண்டாம்..... நீங்க செஞ்சது தப்பு, அதுக்குண்டான தண்டனைய அனுபவிச்சீங்க.... இதுல என் தப்பு எதுவும் இல்ல.... சட்டப்படி என்ன செய்யணுமோ அத செய்யுங்கன்னு மட்டும்தான் நான் சொன்னேன்

“நீங்க தஸ்தாவேஜ திருடினிங்க, அதில் என் கை எழுத்த போட்டு விற்க பாத்தீங்க.... பிடிபட்டீங்க..... அதுக்கு என் பேர்ல குத்தம் சொல்லாதீங்க
என்றாள் பொறுமையுடன்.
“பார்றா, உத்தமி நின்னு பேசற அழக என்றான் இளக்காரமாக.

“சரி நான் தப்பு செய்வதாகவே இருக்கட்டும், ஏன் செஞ்சேன், என் கைய்ய பணமுடையில மொடக்கி போட்டது ஆரு, என்னத் திருட வெச்சது ஆரு, சரி திருடினேனே வெச்சுக்குவோம், ஏதோ தெரியாம பண்ணீட்டாரு, இல்ல, நான்தான் தூக்க கலக்கதில அவர்கிட்ட குடுத்தேன்... அவர் தப்பு இல்ல... எதையோ சொல்லி என்ன காப்பாத்தி இருக்கலாமில்ல, அதுவும் இல்ல.

“என்ன உள்ள தள்ளீட்டு, நீ நல்லா சந்தோசமா வாழ்ந்தியாக்கும். அந்த கதிர் பயலோட ஜோடி போட்டுக்கிட்டு சுத்தறியாமா, நம்ம சகாக்கள்ளாம் சொன்னானுங்க கத கதையா...

ரொம்ப பிசியாமா, பண்ணைக்கும் வீட்டுக்கும் அசலூருக்கும்னு ஒரே சுத்தல்தானாமா, அதுனாலதான் என்ன வந்து ஜெயில்ல ஒரு முறை கூட பார்க்க முடியல மகாராணியம்மாவுக்கு என்றான்.

“ஆமா, எனக்கு உங்கள ஜெயில வந்து பாக்கணும்னு தோணல, வரல.

கதிர் பத்தி அசிங்கமா பேச வேண்டாம்.... அவரு எங்க குடும்பத்தில ஒருத்தர்.... இப்போ எல்லா பொறுப்புகளையும் அவர்தான் பாத்துக்கறாரு என்றாள்.

“அதானே பார்த்தேன்.... அதுக்குதானேடீ அவன் ப்ளான் போட்டு அப்படி நல்லவன் மாறி நடிச்சான்.... பெரிசும் அவன் நடிப்புல மயங்கீடுச்சு, தானாவே எல்லா பொறுப்பையும் அவன்ட குடுத்திருச்சு.,,,, அவன் இப்போ ஹாயா அனுபவிக்கறான்.

“என்ன சொன்னே, குடும்பத்தில ஒருத்தனா..... அப்போ உன்னையும் அவனுக்கு சொந்தமாக்கிட்டியா, இல்லேனா அவன் எந்த உறவு மூலமா சொந்தமாவான்? என்றான் விகாரமாக சிரித்தபடி.

“சீ,  வெட்கமா இல்லை உங்களுக்கு இப்படி நாக்கில நரம்பில்லாம பேசறதுக்கு. நான் நெருப்பு, ஜாக்ரதையா வார்த்தைகள விடுங்க....

அவர் எனக்கு ஒரு சகோதரனப் போல.... என் நல்வாழ்வுக்காக பாடுப்படறாரு என்றாள்.

“ச்சே இன்னாது சகோதரனா, ஹிஹிஹி. நல்லா இருக்குடீ. பொழுது விடிஞ்சா தங்கச்சி வந்தியோ ம்பான் ராவில தங்கசிவந்தியோன்னு கொஞ்சுவான் தெரியாதாக்கும் என்றான்.

“ச்சே, நீங்க அணு அளவும் மாறல இல்ல.... நீங்களும் உங்க வாயும், உங்க அசிங்க புத்தியும்..... மூடுங்க வாய, அவரப் பத்தி பேசற யோக்யத உங்களுக்கு இல்ல என்றாள் கோவம் ஏறி.

“நான் மட்டும்தானா பேசறேன், ஊரே பேசுது..... எங்கே போனாலும் இதப்பத்திதான் பேச்சு என்றான்.

அவள் அவனோடு மேலும் தர்க்கம் பண்ண இசையவில்லை.

“சரி, இப்போ எங்க வந்தீங்க, என்ன வேணும்? என்றாள்.

“அடி கூறுகெட்டவளே, புருஷன் ரெண்டு வருஷன் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கானே, அவனுக்கு என்ன வேணும் என்ன செய்யணும்னு தோணல.... ஏன் வந்தேன்னா கேட்குற மானங்கெட்டவளே என்றான்.

“மரியாதையா பேசுங்க, இல்லேனா நான் சும்மா இருக்க மாட்டேன்.... விஷயத்த மட்டும் சொல்லீட்டு கிளம்புங்க என்றாள்.

“கிளம்பறதா..... இனி இங்கிருந்து போனா அது மடத்தனம் இல்ல, அசலுக்கே நான் கோட்ட விட்டதெல்லாம் போதும்டி... இனி போனா அது எல்லா சொத்துக்களையும் உன்னையும் தூக்கி கிட்டு தாண்டி....

“உன்ன நார அடிக்க வேண்டாம். உன் வாழ்க்கைய அணு அணுவா சித்ரவதை செஞ்சாதாண்டீ என் மனசு ஆறும் என்றான்.

அவளுக்கு உள்ளே உதறல் எடுத்தாலும் அசையாமல் நின்றாள்.

“நான் உங்களோட வர முடியாது. இந்த ரெண்டு வருட ஜெயில் வாசம் உங்களை கொஞ்சமாச்சும் நல்லவராக்கி இருக்கும்னு நான் நினைச்சேன். அது அப்படி இல்லன்னு இப்போ தெரிஞ்சு போச்சு.

“இன்னாது வரமுடியாதா, இனிமே நீ சொல்ற எதையுமே கேட்டு நம்பி நான் நிக்க போறதில்லடீ...

நான் சொல்றத நீ கேளு, அதன்படி நட.... இல்லேனா நடக்கற கதையே வேற.

“நீ, உன் வீடு சொத்து பணம் நகை எல்லாமும் இனி என் சொத்து... என் இஷ்டம்போல ஆளுவேன்..... ஒரு பய கேட்க முடியாது.

நாலு பெரிய மனுஷாளுங்கள சாக்ஷி வெச்சுதானே டீ உங்கப்பன் என்கிட்டே வந்து சம்பந்தம் பேசினான். அவங்க பேச்சை நம்பித்தானே டீ நானும் உன்ன கட்டிகிட்டேன். அதில ஒண்ணையாச்சும் எனக்கு செரியா செஞ்சீங்களா... அப்பனும் மவளும் சேர்ந்துகிட்டு திட்டம் போட்டு என்னைய கவுத்திட்டீங்களேடீ என கத்தினான்.

இவற்றையெல்லாம் கேட்டபடி தான் இருந்தார் ராஜலிங்கம்.

“மருவாதியா என்னோட கிளம்பு என்றான் அவளருகே வந்து. நாற்றம் குப்பென வீசியது அவளுக்கு குமட்டியது. அந்தப் பக்கமாக மூக்கை பொத்தியபடி முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“இன்னாடீ நாறுதா, ஆமா பின்ன, நாட்டு சரக்கு நாரத்தான் செய்யும். ஒசத்தியா பாரின் சரக்கு குடிக்கணும்னு எனக்கும் ஆசைதான், கையில காசு இல்லியே என்று இளித்தான்.

“வா என்றான்.

“நான் உங்களோட உங்க வீட்டுக்கு வரமாட்டேன்....

“நல்லா கேட்டுக்குங்க, அன்னிக்கும் இன்னிக்கும் ஒரே பேச்சு ஒரே முடிவுதான், மென்மையாகவே சொல்றேன் நல்லவிதமா புரிஞ்சுகிடுங்க.

“நான் உங்களோட மனமொன்றி வாழணும் குடித்தனம் செய்யணும் என்னையே உங்களுக்கு குடுக்கணும்னா, அதுக்கு முதல்ல நீங்க மாறணும், குடிய விடணும், சூது சீட்டாட்டம் தொடுப்பு வெச்சிருக்கிறது எல்லாத்தையுமே விடணும்.

“பணத்த வாரி எடுத்து செலவு பண்றத நிறுத்தணும். முழுசா, குடுத்த பொறுப்புகள எடுத்து நின்னு நடத்தி கணக்கு வழக்குகள பார்த்து, உங்கள நீங்களே நிரூபிக்கணும்.
“இதெல்லாம் நடந்து, நீங்க நல்லவங்களா நாலு பேரு மதிக்கிறாப் போல நடந்தா... மாறினா.... நான் தானாகவே உங்க பின்னாடியே நீங்க கூப்பிட்ட இடத்துக்கு வருவேன். என கூறிவிட்டு கைகட்டி தூரே சென்று நின்றுகொண்டாள்.

“அடி சக்க, ரூல்ஸ் போடறீங்களோ ரூல்ஸ்.... முடியாதுடி..... நீ சொன்ன எதையுமே செய்ய மாட்டேன்....

“உங்களுக்கு அடங்கி நடக்கணும்னு என்கென்னடீ தலை எழுத்து.... உங்கப்பன் தானேடி எங்கால்ல விழுந்து உன்ன கட்டிகிடச் சொல்லி கெஞ்சினான். அதுனாலதானே நானும் மானம் ரோஷம் கெட்டு வீட்டு மாப்பிள்ளையா வர சம்மதிச்சேன்..... இப்போ அத விடு இத விடு மாறு.... வேலை செய்யி, பொறுப்புகள பாரு.... அப்போதான் வந்து கூட படுப்பேன்னு ரூல்ஸ் பேசுறே என்னமோ.

“செய்யாட்டி என்னடி பண்ணுவே. நீ எப்படி எங்கூட வராம இருக்கே எப்படி என்னோட படுக்காம இருக்கேன்னு நானும் பார்க்கறேன்.

“உன்னை வாழவிட மாட்டேன் ராஜி, நல்லா கவனம் வெச்சுக்க.

“போகாத ஊருக்கு வழி பண்ணி கலாட்டா செய்து அத்துவிட்டுடலாம். இவம் பீட ஒழிஞ்சுடும், நாம நிம்மதியா வாழலாம்னு மட்டும் கணக்குப் போடாத..... தப்பான கணக்கா போயிடும் ஆமா சொல்லிபுட்டேன்.

“என்னோட நீ வாழலைனா, இனி என்னைக்குமே வேற எவனோடும் நீ வாழ முடியாது.... வாழ விடமாட்டேண்டீ, அது நிச்சயம்....

“என்னோட படுக்க மாட்டாளாமில்ல, பணத்தத கண்ல காட்டமாட்டாளுங்களாம் இல்ல..... எப்படி நடக்குது உங்க தர்பாருன்னு நானும் பார்க்குறேன். நாளைக்கே கூட்டுறேன் பஞ்சாயத்த என்று சூளுரைத்தான்.

‘ஐயோ, நம்ம மானம் பஞ்சாயத்தில் நாற வேண்டுமா, அப்பா பஞ்சாயத்தை தலைவராக இருந்து முன் நடத்தி, பல தீர்ப்புகளை நல்ல படி கூறி, வழி நடத்தியவர் ஆயிற்றே.... அவரை கூண்டில் நிறுத்தவா, எப்படி பொறுக்க முடியும், பேசாமல் அவன் சொன்னபடி அவனுடன் போய்விடலாமா... குடித்தனம் செய்துவிடலாமா.. என கூட யோசனைகள் ஓடின ராஜி மனதில்.


1 comment: