Sunday 8 July 2018

NENJIL KODI MINNAL - 5

“கொழுப்புடீ. இங்க அவனவன் அவஸ்த புரியாம பேசுறா பாரு.... உனக்கென்ன, அப்பன் வீட்டு சுகம் கெடாம கிடந்து உறங்குவே என்றான்.

“இப்போ என்ன செய்யணுங்கறீங்க? என்றாள்.

அவனை பேசிப் பேசி, கொஞ்சம் கொஞ்சமாக திருத்த வேண்டும்... அதை இப்போதே துவங்க வேண்டும் என்பது அவளின் முடிவாக இருந்தது. அதனால் நாடகத்தைத் துவங்கினாள்.

கனகுக்கோ, இது வரை முகம் கொடுத்தே பேசாமலிருந்தவள், இப்போது தன் முகம் பார்த்து பேசுகிறாளே என கொக்கரித்தான்
“இல்ல ராஜி, உனக்கு புரியாதா என்ன என்றான் வழிந்தபடி.

அவள் சிவப்பது போல முகத்தை குனிந்து கொண்டாள்.
“ஒரே மாசம்தானே என்றாள்.
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா? என்றாள்.

“ஓ பேசேன், என்ன சொல்லப் போறே.... தாராளமா பேசு என்றான் மேலும் வழிந்தபடி அவளருகே நகர்ந்து.
“வாயேன், இங்கே உக்கார்ந்து பேசுவோம் என ஹாலில் இருந்த சோபாவை காட்டினான். “இல்லேனா, ரகசியமா இருந்தா, நம்ம ரூமுக்குள்ள... என்றான்.

இவள் அவசரமாக “இல்ல இல்ல, அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல அத்தான் என்றாள்.
‘முதன் முறையாக அத்தான் என்றாளே என அவனுக்கு ஜில்லென்றது.

“சொல்லு ராஜி கண்ணு, இந்த அத்தான் உனக்காக எது வேணும்னாலும் செய்யத் தயாரா இருக்கேன் என்றான் மார்தட்டி.

“இல்ல, வந்து.... கோவிக்கக் கூடாது என்றாள்.
“இல்ல இல்ல, உன்கிட்ட நான் ஏன் கோவிக்க போறேன் என்றான்.

“வந்து, நேத்து ராத்திரி, நீங்க அப்படி வந்து சேர்ந்தீங்க... என்றாள் மெல்ல பயந்தபடி.
“அதான் சொன்னேனே, ஒரே ஒரு பெக்தான் போட்டேன். அதுவே ஏறிடுச்சுஎன்றான் இளித்தபடி.

“ஒண்ணு ரெண்டு, இதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா நீங்க இனிமே குடிக்கக் கூடாது என்றாள்.

“ஐயோ, என்னடி குண்ட தூக்கி போடுறே, என்னிக்கோ தானே ராஜி கண்ணு, அதுவும் கொஞ்ச போறம் என்றான்.

“ம்ஹூம், அதுவும் கூட வேண்டாம். இனிமே நிறுத்திக்கோங்க. நீங்க இப்போ இந்த வீட்டு மாப்ள.... இத்தனை சொத்தையும் பண்ணையையும் நிர்வாகம் பண்ணணும் இல்லியா, அப்போ, நீங்க நல்லபடி, நிதானமா யோசிச்சு பல முக்கியமான முடிவுகள எடுக்க வேணும்... பண்ண ஆட்கள் உங்களை மதிச்சு கேட்கணும்னா, அதுக்கு, நீங்க உஷாரா இருக்கணும் இல்லியா அத்தான்? என்றாள் சிறுபிள்ளைக்கு சொல்வது போல. அவள் பேசும் முக்கிய சமாச்சாரங்கள் காற்றில் போக, சொத்து பணம் பதவி என்பது மட்டும் அந்த குள்ளநரிக்காரனுக்கு காதில் தேனாக வந்து பாய்ந்தது.

“ஆமா, ஆமா ராஜி கண்ணு என்றான்.
“சரி இனி நான் குடிக்காம இருக்க நிச்சியமா முயற்சி செய்யறேன் என்றான்.

“அதோட, நாளைலேர்ந்து சீக்கிரமா எழுந்து அப்பாவோட பண்ணைக்கும், நம்ம தீவனம் ஆபிசுக்கும், பூந்தோட்டம், மாட்டு பண்ணைக்கும் போய் எல்லாத்தையும் கொஞ்ச கொஞ்சமா பழகிக்கோங்க அத்தான் என்றாள்.

“எனக்கென்ன பண்ணைய ஆளத் தெரியாதா, தோட்டத்த பார்க்க வராதா, இதுல கத்துக்க என்ன இருக்கு, என்கிட்டேயும்தான் நஞ்சை நிலம்னு இருக்குதில்ல ராஜி... எல்லா பொறுப்பையும் என் கிட்ட ஒப்படைச்சுட்டு, சாவி கொத்தை கொடுத்துடச் சொல்லு அப்பாருகிட்ட. நானாச்சு கச்சிதமா பாத்துக்குவேன்.

“பெரிசு வயசான காலத்தில ஏன் அலைவானேன்.... இதுக்கெல்லாம்தான் நான் வந்திருக்கேன்.... அவரும்தான், முடிஞ்சு முடியாம செஞ்சு, எல்லா பயலுவளுக்கும் குளிரு ஏறி போய் கிடக்கு, செமத்தியா வாறு பிடிக்கணும். ஒரு நாலஞ்சு பயலுவள தூக்கி வெளியே கடாசணும், அப்போதான் மிச்ச பயலுவளுக்கு பயம் வரும்
என்றான்.

ராஜிக்கு அடி வயிற்றை கலக்கியது. “எல்லாத்தையும் ஒண்ணா பார்க்க நீங்களும் திணறுவீங்க அத்தான்.... முதல்ல எதாச்சும் ஒரு விஷயத்த நீங்க பார்க்க ஆரம்பீங்க.... மெல்ல மெல்லமா மிச்சத்தையும்.... என வாக்கு கொடுக்காமல் அப்படியே நிறுத்தினாள்.

“அப்படியா சொல்றே, சரி, நீ சொன்னா சரிதான். என்னத்த முதல்ல எடுக்கலாம்னு நீயே சொல்லு என்றான்.

“நான் அப்பாவோட பேசறேன் அத்தான். பேசீட்டு சொல்றேன் என்றாள்.

“ம்ம், அதுவும் சரிதான். நாளைக்கே பொறுப்பேத்துக்கறேன் என்றான் நாக்கில் நீர் ஊற.

இவன் நல்லபடி இதுவரை ஒத்துக்கொண்டானே, கொஞ்சம் நல்லவந்தான் போலும்..... முதலில் உர தொழிற்சாலை சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை ஒப்படைக்கச் சொல்லலாம்.... பெரிதாக அங்கே இவன் எதுவும் கெடுத்துவிட முடியாது. மெல்ல மெல்ல தேறிவிடுவான் போலும் என கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவனைப் பார்த்து சிரித்து பேசாவிடினும் சகஜமாக பேசினாள்.

அன்றிரவு ராஜலிங்கதிடம் இதைப் பற்றி பேச, அவருக்கும் சந்தோஷமே.
“அட மாப்பிளையா சொன்னாரு, எல்லா பொறுப்பையும் அவரே பார்த்துக்கறாராமா, ரொம்ப சந்தோஷம் தாயி.... எனக்குத் தெரியுமே, என் ராஜேஸ்வரி யாரு, அந்த ஆத்தா ரூபம் இல்ல, நீ சாதிச்சுபுடுவேனு எனக்குத் தெரியும் தாயி என்றார் அகமகிழ்ந்து.

“அப்பா, அப்பா இருங்கப்பா, ரொம்ப சந்தோஷமும் வேண்டாம், ஆசையும் வேண்டாம்.
“ஒண்ணொண்ணா குடுக்கலாம் பா. அவுகளுக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை இல்லியாப்பா... அதுக்குதான் சொல்றேன். இப்போதைக்கு முதல்ல உர தொழிற்சாலை சம்பந்தப்பட்ட கணக்கை பார்க்கச் சொல்லுங்க. ஒரு மாசத்தில என்ன சாதிக்கறாவன்னு பார்த்துட்டு ஒவ்வொண்ணா மத்ததையும் கொடுக்கலாம் என்றாள்.

“ஓ, அப்படி சொல்றியாமா, சரி சரிமா, நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் கண்ணு. அப்படியே, நாளைக்கும் நல்ல நாளுதேன். மாப்ளைய உர ஆபிசுக்கு கூட்டிகிட்டு போய், அதை ஒப்படைச்சுட்டு, அங்கிருக்கிற பயலுவள்ட்ட சொல்லி விட்டுட்டு வரேன் மா என்றார்.

“சரிப்பா என ராஜி மேலே சென்று படுத்தாள்.
‘அம்மா தாயே, இதெல்லாம் ஒழுங்கா வருமா, நீதான் திக்கு என வேண்டியபடி உறங்கி போனாள்.

அடுத்த நாள் விடியும்போதே படபடப்பாக இருந்தது ராஜிக்கு. ‘கனகு எப்படி சமாளிப்பானோ, எல்லாமும் நல்லபடி நடக்க வேண்டும்... பாவம் அப்பா, சிறு வயது முதலே ரத்தத்தை வியர்வையாக சிந்தி தானே வயலில் இறங்கி வேலை பார்த்து, ஒவ்வொரு பிடி மண்ணையும் முயன்று சொந்தமாக்கி காப்பாற்றி வைத்திருக்கிறார்.,,, அது யார் காரணமாகவும் நாசமாகி விடக் கூடாது என்ற பயம் பந்தாக வயிற்றில் சுழன்றது.

காபியுடன் கனகராஜினை எழுப்பினாள். 

“ராஜி
என அவன் கையை பிடித்து இழுக்க போக, 
“அப்பா ரெடியாகீட்டாங்க அத்தான், நீங்களும் சீக்கிரமா ரெடியாகி வாங்க, இன்னிக்கி பொறுப்பேற்றுக்கணுமே... என ஆசைகாட்டி பேசிவிட்டு நழுவி விட்டாள்.

‘பிடி குடுக்கவே மாட்டேங்கறாளே, இவள எப்படித்தான்... என்ற யோசனையுடனே காபியை குடித்தான். ரெடி ஆகி வந்தான்.

தன் வழக்கப்படி அவன் கெட்டி சரிகைக்கரை வேட்டியும், மைனர் ஜிப்பாவுமாக தயாராக, அதைக்கண்டு துணுக்குற்றாள் ராஜி.

“என்னத்தான் இது? என்றாள்.
“ஏன், இதுகென்ன.... சும்மா  துரை மாதிரி இல்ல என்றான் மீசையை முறுக்கியபடி.
“அதுசெரிதான் என்றாலும் இதை போட்டுகிட்டா கொஞ்சம் பதவிசா இருக்குமில்ல.. என்று வெள்ளை முழுக்கை சட்டையை எடுத்து நீட்டினாள்.

“ஐயோ, இதையா.... ஆபீசர் மாதிரி...? என்றான் முகம் சுளுக்கி.
“ஆமா ஆபீசர் மாதிரிதான் இருக்கணும் என்றாள்.
“சரி சரி குடு என எடுத்து மாட்டிக்கொண்டான்.

தெய்வத்தை வணங்கி அப்பாவுடன் அவனை அனுப்பி வைத்தாள்.
அங்கே ராஜலிங்கம் இவனை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த பின்னர், “மாப்ள, இந்தாங்க இங்கத்த கணக்கு வழக்கு புஸ்தகம், பீரோ சாவி.... இனி உங்க பொறுப்பு.... நல்லபடி நடத்துங்க.... ஒண்ணுக்கு ஆறா பெருகட்டும் என ஆசீர்வதித்து கொள்ளை ஆசையுடன் அவன் கையில் ஒப்படைத்தார்.
“அப்படியே மாமா என வாங்கிக் கொண்டான்.

“அப்போ நான் வரட்டுங்களா, எதாச்சும் சந்தேகம் இருந்தா, இந்தா கணக்கு புள்ள இருக்காரு, அவருகிட்ட கேளுங்க சொல்லீடுவாரு.... நான் பண்ணை வரைக்கும் போவேண்டியதிருக்கு என்று கிளம்பினார்.

அவர் அந்தப்பும் போனதுமே ‘ஹப்பா, பெரிசு கிளம்பிடுச்சா... என முதலாளி அறையினுள் சென்று அமர்ந்தான். மேஜைமேல் கால்களை எடுத்து போட்டுக்கொண்டான்.

உயர்தர சிகரெட்டு ஒன்றை பற்ற வைத்து இழுத்து புகையை வெளியிட்டபடி விளையாடினான்.

மேஜைமேல் இருந்த கோப்புகள் சிலவற்றை எடுத்து மேலோட்டமாக பார்வையிட்டான். ஒன்றும் புரியவில்லை. புரிந்துகொள்ள அவன் சிரமப்படவும் இல்லை.

இரும்பு பீரோ கண்ணில் பட்டது. சட்டென எழுந்தான். சாவி கொத்தை எடுத்து அதனை திறந்தான். நோட்டு கற்றைகள் சில இருந்தன. உர வாங்கவென இருந்த பணம் போலும். நோட்டுக்களை கண்டதும் கண்களில் மின்னல்... நாவில் எச்சில் ஊறியது..... ஒரு கட்டை எடுத்து தன் பாக்கெட்டில் விட்டுக்கொண்டான்.

“யோவ் கணக்கு என்று குரல் கொடுத்தான். 
“ஐயா என அந்தப் பெரியவர் உள்ளே வர, “ஏதானும் அர்ஜென்ட் மேட்டரு இருக்குதா? என வினவினான்.

“அர்ஜென்டுன்னு ஒண்ணும் இல்லீங்க.... எப்போதும் உள்ளதுதான்.... இன்னிக்கி திங்கள், இந்த வாரத்துக்குண்டான உர மூட்டைங்க, மாட்டுத் தீவனம்னு வந்து சேரும். அது ஸ்டாக் பார்த்து வாங்கி பட்டுவாடா பண்ணணும். அவங்களுக்கு பணம் குடுத்தனுப்பணும்என்றார்.

“அதெல்லாம் நீரு வழக்கமா செய்யறபடி செய்துரும்..... எனக்கு டவுனுக்குள்ள கொஞ்சம் ஜோலி இருக்கு, நான் போய் பார்த்துட்டு முடிஞ்சா மாலைக்குள்ள வரேன் என வெளியே வந்து காரை எடுத்துக்கொண்டான்.

“இந்த அம்பாசிடர் கார் தான் இருக்கா, சரி, இதை நான் எனக்கு என்னுடைய சொந்த உபயோகத்துக்குனு வெச்சுக்கபோறேன் ராஜி என அவள் காதில் போட்டிருந்தான்.

“அப்படியா? என யோசித்தவள் “சரி டிரைவரை அனுப்பறேன் அத்தான் என்றாள். “அவன் எதுக்கு, எனக்கு என்ன வண்டி ஓட்டத் தெரியாதா என்ன.... அவன் ஒருத்தன் எதுக்கு அனாவசியமா..... இங்கன இருக்கட்டும்..... உன்ன தோப்பு கோவில்னு கூட்டிகிட்டு போக உதவியா இருப்பான் என கூறிச் சென்றுவிட்டான்.

அவனுக்கென்ன தெரியும், அவள் நூறு மைல் வேகத்தில் வெகு நேர்த்தியாக கார் ஓட்டுவாள் என. ‘ஆத்திர அவசரத்துக்கு பெண்டுகளுக்கு கார் ஓட்ட தெரிஞ்சிருக்கணும் என ராஜலிங்கம்தான் அவளை பழக்கி இருந்தார். கதிர்தான் அவளுக்கு திறம்பட ஓட்ட கற்றுக் கொடுத்திருந்தான்.

வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிய கனகு, நேராக பக்கத்துக்கு டவுனை நோக்கி வண்டியை விட்டான். பெரியதொரு வைன் ஷாப்பில் நிறுத்தி உயர்ரக வெளிநாட்டு சரக்கு ஒன்றை வாங்கிக்கொண்டான்.

அங்கிருந்து நேராக தான் அவ்வப்போது தொடர்பு வைத்துக்கொள்ளும் காஞ்சனாவின் வீட்டை நோக்கி வண்டியை திருப்பினான்.

பட்ட பகலில் அவனை எதிர்பாராதவள், “என்ன இந்தப் பக்கம் இன்னிக்கி வெளிச்சத்திலேயே...? எனக் கதவை திறந்தாள்

“உன்னைய உள்ளாரையே சேர்க்கப்டாதுன்னு இருந்தேன். என்னையவிட்டுட்டு பண்ணையார் மவ கிடைச்சான்னு கல்யாணங்கட்டிகிட்டியாமா, ஒரு வார்தையாச்சும் சொல்லி இருப்பே? கொன்னா தேவலைன்னு ஆத்திரம் பொங்கிச்சுது. இப்போ அங்க என்ன கொரைன்னு இங்க வந்தே...? என பொரிந்து தள்ளினாள்.

“என் தங்கம், என் கண்ணு.... கோவிக்காதடீ என் காஞ்சு என குழைந்தான் கனகு. “சீ போ அந்தால என விரட்டினாள்.

கனகுக்கு ஏது ரோஷம். அவள் காலை பிடிக்காத குறையாக பூனைக்குட்டி போல அவளைச் சுற்றி வந்து மஸ்கா செய்தான்.

அவளை அமரச் செய்து நோட்டு கட்டினை எடுத்து அவள் முன் விசிறியாக ஆட்டினான்.

காஞ்சனாவை கவிழ்க்க அதுவே போதுமானதாக இருந்தது.
“என்னையா புது கட்டு மின்னுது? என குழைந்தாள்.
“ஏன்யா நிசம்மாவா அவள கட்டிகிட்டே? என குழைந்தாள். 

“ஆமா புள்ள, பண்ணையாரு என் வீடு தேடி வந்து கெஞ்சினாரு. நமக்கு தூரத்து சொந்தம் வேற.... ஓத்த பொட்டபுள்ள..... கணக்கில்லாம சொத்து.... நீயே சொல்லு, கசக்குமா?
என்றான் இளித்தபடி.

“அப்படியா சேதி, அப்போ, இங்க எங்க வந்தீரு, அங்கனையே போய் விழுந்து கிடக்க வேண்டியதுதானே..... புது பொண்டாட்டி முரண்டறாளாக்கும்.... அதான் ஒடம்பு காஞ்சு போய் இங்க வந்தீகளோ? என கிண்டலாக உரைத்தாள்.

“மொத நாளு சகாக்களோட சேர்ந்துகிட்டு நான் கொஞ்சம் அதிகமா போட்டுகிட்டேன். அர்தராத்திரி வூட்டுக்கு போனா அவ பார்த்துட்டா, திண்ணையில படுக்க விடாத கொறதேன். காமிராவுள்ள படுக்க வெச்சுட்டாங்க. இன்னிக்கி ஆடி மாசம் பிறந்திருச்சாமில்ல. புருஷன் பொஞ்சாதி சேரக் கூடாதாம்.
“அதுக்கு...?
என்றாள் காஞ்சனா.

“என்னடி கண்ணு, நீயும் ஒதச்சு தள்ளினா நான் எங்கடீ போவேன்.... அந்தப் பணம் நமக்கு வேணுண்டி கண்ணு என குழைந்தான். 

“அவ்ளோ இவளோ இல்ல.... கணக்கில்லாத சொத்துடீ
என்றான் இளித்தபடி. “அப்படியா? என கண் விரித்தாள் காஞ்சனா. பணம் சொத்து என்ற வார்த்தைகள் அவளுக்கு நாவூறியது.

அவனை எட்டி உதைத்தவள் இப்போது பின்னிக் கொண்டாள்.
ஊடலுக்கு பின் கூடலும், சிக்கன் பிரியாணியும் குடியும் கூத்தும் உறக்கமும், பொழுது சாய்ந்தது.

“ஐயோ, வூட்டுக்கு போவணும். அவ கிட்ட நல்ல பிள்ள மாதிரி நடந்து நல்ல பேரெடுக்கோணும் கண்ணு.... நான் வரேன் என முகத்தை துடைத்து வாயில் ஒரு பீடாவை போட்டு மென்றபடி நல்லவன் போல தள்ளாட்டத்தை மறைத்து வீட்டை நோக்கி காரை ஓட்டினான்.

நல்லவனாக வீட்டில் பூனை போல காலை வைத்தான். உழைத்து களைத்தவன் போன்ற ஒரு பொய் வேஷத்துடன்.


1 comment: