Thursday 5 July 2018

NENJIL KODI MINNAL - 2

கதிர்வேலன் அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். ராஜியை விட இரண்டு வயது மூத்தவன். அவனது தந்தை, ராஜலிங்கத்திடம் பல வருடங்களாக கணக்குப் பிள்ளையாக, விசுவாசத்தின் மறு பெயராக விளங்கினார்.
அவரது கணக்காற்றலை ஊரே மெச்சியது. வாய் கணக்கிலேயே லக்ஷங்களை கணக்கிட்டு விடுவார். 

அப்போது சிறு பிள்ளையாக இவன் டவுசருடன் அதை வேடிக்கை பார்க்க, “என்ன பயலே, நீயும் உங்க ஐயா போல கணக்கில புலியா வருவியா?” என கேட்பார் ராஜலிங்கம்.
“கண்டிப்பா இதேபோல நானும் வருவேன்ய்யா” என்பான் வீரமாக. இரு பெரியோரும் சிரிப்பார்கள்.

அது மனதில் உறைந்து போக, அவன் வெறியுடன் படித்தான். கணக்கில் புலியாகத்தான் வளர்ந்தான்.
ஊரில் படிப்பை முதன்மையாக முடிக்க, அவனை ராஜலிங்கம்தான் பட்டினத்திற்கு அனுப்பி சிஏவில் சேர்த்துவிட்டார்.
ஒரே முனைப்பாக அதனை பாஸ் செய்தான் கதிர்வேலன்.

பள்ளி இறுதி வரை ஒன்றாகத்தான் படித்தனர் ராஜியும் கதிரும்.
சிஏ முடித்து அவன் கிராமத்திற்கு திரும்பியதும் அவனது தந்தை முடியாமை தீண்டவும் சரியாக இருந்தது.

“ஐயா, சொன்னா கோவிக்கப்டாது, எனக்கு உடம்புக்கு முடியலீங்க, அதன் காரணமா, உங்க வேலைங்க நின்னு போகறதும் எனக்கு தாங்கலீங்க... 

நீங்க தவறா எடுக்கலைனா, நம்ம கதிர் படிச்சுட்டு வந்துட்டான்... அவனை நீங்களே....” என இழுத்தார்.


“ஏன்யா உம்மா புத்தி இப்படி போகுது, கதிர் எவ்வளோ பெரிய படிப்பு படிச்சுட்டு வந்திருக்கு, அவன் தகுதி என்ன... படிப்பென்ன, அவனுக்கு எவ்வளோ பெரிய உத்யோகமெல்லாம் காத்திருக்கு, அவனப் போய் இந்த கிராமத்தில முடக்கிப் போடச் சொல்றீரா, நல்லா இருக்குமா...?” என்று எகிறினார் ராஜலிங்கம்.

“இல்லீங்கையா, அத்தன பெரிய படிப்பு, நீங்க போட்ட பிச்சை.... அவன்கிட்ட பேசீட்டேனுங்க, இங்கேயே தங்கி உங்க கிட்ட வேல பார்க்கத்தான் அவனுக்கும் சந்தோஷம்னு சொல்றான். நன்றிகடனாக இல்லீங்கய்யா... அவனுக்கு நீங்கன்னா, இந்த ஊருன்னா உசிருங்க, அதான்” என்றார்.
“அது சரியா வருமா?” என மண்டையை குடைந்தார்.
“எல்லாம் வரும், தயங்காதீக” என்றார்.

“சரி, அவன் விருப்பம் அதுவானா எனக்கு கசக்குமா, பிள்ளையில்லா குறைய தீர்க்கறது போல, எனக்கு எல்லா விதத்திலேயும் உதவியா இருந்தா நல்லதுதானே.... ராஜி, என்னத்தை எல்லாம் தான் தனிச்சு பார்க்கும் பாவம் பொட்டபிள்ள...” என்றார் சந்தோஷமாக.
கதிரும் அப்படியே உள்ளே வந்து சேர, ராஜலிங்கத்திற்கு எதைப் பற்றியும் கவலைப் பட அவசியமில்லை... முக்கியமாக பணபட்டுவாடா, புழக்கம், வாங்குவது விற்பது என கதிர் அனைத்தையுமே சிரத்தையாக பார்த்துக்கொண்டான். அவனுக்கு பயிர், உரம், சாகுபடி பற்றி அதிகம் தெரியாதுதான். ஆனால் வெளி வேலைகள் கணக்கு வழக்கு இவற்றில் புலியாக இருந்தான்.

அவ்வப்போது கண்கள் ராஜியை சந்தித்தபோது ஒளிர்ந்தன.
மனசுக்குள் மத்தாப்பு மெல்ல பூத்தது, காதலா என அவனுக்கே சந்தேகம், பூவாக பூக்கட்டுமா என இவனையே சந்தேகமாக கேட்டது ஒரு சின்ன மொட்டு.

பெரிய பண்ணையின் செல்வ மகள், ஒரே மகள், அவளை கணக்குப்பிள்ளை மகனான தான் மணமுடிக்க கேட்கவும் முடியுமா, தோலை உரித்துவிட மாட்டார்களா, இது தகுமா, முறையா... என தயக்கம். துணிவின்றி, மொட்டை பூக்க விடாமல் பாதுகாத்தான். ஆனாலும், அவளை, மனதின் மூலையில் தேவதையாக பூஜித்தான். அவள் நன்றாக இருக்கவேண்டும் என தினமும் வேண்டினான்.

ஒரு நாள் அந்தத் துணிவும் வந்தது.
ராஜியுடன் பட்டினத்திற்கு போய் கூடமாட உதவியாக சில காரியங்கள் கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட, ராஜலிங்கம் இவர்களை அனுப்பி வைத்தார்.
“நாங்க மட்டுமாப்பா?” என ராஜி கூட கேட்டாள்.

“பின்னே, இதிலென்ன, கதிர விட தங்கமான பிள்ள கிடைக்குமா தாயி, நீ பத்திரமான துணையுடன் போறேன்னு மறந்துடாத... அவனைப்போல கிடைக்கணுமே” என்றார் மனது நிறைந்து.
“சரீங்கப்பா” என அவளும் சென்றாள்.
எப்போதும் போலத்தான், மெல்லிய சரிகை கீற்று போட்ட பருத்தி சேலை நேர்த்தியாக கட்டி, முழம் மல்லிகையை சூடி, கண்ணில் மை, ஒரே ஒரு வட்ட பொட்டு என தயாராகி வந்து நின்றாள்.

‘இத்தனை எளிமையிலும் இவ்வளவு அழகா, இவளது கம்பீரம் ராஜலிங்கத்தின் சீதனம்...’ என்று அவளை கண்டு மாய்ந்து போனான் கதிர்.
அவளை பின்னே அமரச் செய்வதா, முன்னே, தன்னருகே அமரச் செய்வதா, என அவன் குழம்பி தவிக்க.

“கதிர் நம்ம டிரைவர் இல்ல கண்ணு, அவன் பக்கத்தில முன்னாடி உக்கார்ந்துக்க” என காதோடு உரைத்தார் ராஜலிங்கம்.
சரி என தலை ஆட்டிவிட்டு தானே போய் முன்பக்க சீட்டின் கதவை திறந்து அமர்ந்தாள். அதைக்கண்டு புல்லரித்து, ஓடி அந்தப் பக்கம் போய் வண்டியை எடுத்தான் கதிர்.

பட்டினத்தை அடையும் நேரம் ஒரு மணி அளவு.
மெளனமாக வண்டியின் வானொலியில் பாட்டு கேட்டபடி, தீண்டி வந்த தென்றலை அனுபவித்து பிரயணித்தனர்.
போன வேலைகளை முடித்துவிட்டு, நேரமாகிவிட்டபடியால், உணவை அங்கேயே முடித்துவிடலாம் என ஒரு பெரிய உணவிடத்திற்கு சென்றனர்.

அங்கே, தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்த நேரத்தில், இதே தருணம் என துணிச்சல் வந்தது கதிருக்கு.
“ராஜேஸ்வரி” என்றான் மெல்ல.
“சொல்லுங்க கதிர்” என்றாள் அவள் புன்னகை முகத்துடன். 


எப்போதுமே அவன் முழு பெயர் கூறித்தான் அவளை அழைப்பான், அதுவும் தனிமையில் மட்டுமே. மற்றவரின் முன் அவளைப் பற்றி பேசுகையில் சின்னம்மா என்றுதான் குறிப்பிடுவான்.

எஜமானி என்ற விசுவாசம் மட்டுமல்ல, அந்தப் பெயர் அவளை முழுமையாக்குவது போல அவனுக்குத் தோன்றும்.

“படிப்பெல்லாம் முடிஞ்சுது போல...” என்றான்.
“ம், டிக்ரீ ஆச்சு.... மேலே படிக்க அப்பாரு ஒப்புவாக போல தெரியல” என்றாள் புன்னகை மாறாமல்.
“இனி வரன் பார்க்கத் துவங்கீடுவாங்க போல...” என்றான் யதார்த்தம் போல.
“இருக்கலாம்” என்றாள் தலை குனிந்து.

“உங்களுக்கு எப்படி பட்ட கணவன் வேணும்னு ஆசைப் படறீக?” என்றான். “அதென்ன எப்பவும் நீங்கன்னுகிட்டு. நீ வா போ னு பேசலாம்னு பல தடவை சொல்லி இருக்கேனே கதிர்”
“ஒண்ணா படிச்சு, விளையாடி, பழங்கினவகதானே நாம?” என்றாள்.
“சொன்னீங்கதான்... இல்ல சொன்னேதான்....” என தடுமாறினான்.
‘இது என்ன, அவனுக்கு கொடுக்கப்படும் பச்சை விளக்கா...?’ என குழம்பினான்.
“நான் ஒண்ணு கேக்கலாமா, நீ தப்பா எடுத்துக்க மாட்டியே?” என்றான் கைகளை நீவியபடி.

அவனை புதிராக பார்த்தவள், “அப்படி என்ன கேக்க போறீக, என் கிட்ட எது வேணும்னாலும் தைர்யமா கேக்கலாம் கதிர்... தயக்கம் எதுக்கு?” என்றாள் அவனை நேரடியாகப் பார்த்து.

அவளின் பார்வையில் உண்டான நேர்மை, கண்களின் ஒளி, அவளின் நிமிர்வு, அவனை ஒரு கணம் தடுமாறச் செய்தது.

சூப் வந்தது. அதை மெல்ல அளைந்தபடியே, “என்னைப் பத்தி என்ன நினைக்கறே ராஜேஸ்வரி?” என்றான்.
“உங்களைப் போல கிடைக்கணுமேன்னு அப்பாரு அடிக்கடி சொல்வாக கதிர்.... என் நினைப்பும் அதுதான்.... நீங்க ஒரு பக்கா ஜென்டில்மான்” என்றாள்.

அவன் புன்னகைத்தான். “தாங்க்ஸ் ராஜேஸ்வரி... நான் அதக் கேக்கல” என்றான். 

‘பின்னே’ என பார்த்தாள்.

“என்னை நினைச்சதுண்டா?” என்றான் தலை குனிந்து. உள்ளங்கை வியர்த்தது.
“உங்களையா... நானா... நினைச்சேனா.... அப்படி ஒண்ணும் இல்லியே” என்றாள் வெகுளியாக. இந்தக் கேள்வியின் அர்த்தம் என்ன என்று இன்னமும் புரிபடாமல்.
“ராஜேஸ்வரி, உன்ன மேலும் குழப்ப விரும்பல... நேராகவே கேக்கறேன், தவறா பேசினா மன்னிச்சிடு”

“எனக்கு, உன்னை.... உன்னை....” என தடுமாறினான், சூப்பினை ஒரு ஸ்பூன் எடுத்து மிடறு விழுங்கினான்.

“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, ரொம்ப, ஒரு தேவதையாக பார்க்கறேன் நான் உன்னை....”
“உன் மனசில என்னவிருக்குனு தெரியாம மேற்கொண்டு நான் யாரிடமும் எந்த ஸ்டெப்பும் எடுக்க தயக்கமா இருக்கு” என்றான்.

“என்ன சொல்றீக கதிர்?” என திகைத்தாள்.
அந்தப் பார்வையில் கோபமில்லை.

“நான் என்ன சொல்ல வரேன்னு...” என தடுமாறினான் கதிர்
ஒரு நிமிடம் மெளனமாக இருந்தாள். சூப்பினை கலக்கினாள்.
பின் மெல்ல, “எல்லாமே புரிஞ்சுது, நீங்க மேற்கொண்டு சொல்லணும்னு அவசியமில்ல.... நான் இதில உங்கள தவறா நினைக்க ஒன்றுமில்ல கதிர்.... நம்ம வளர்ந்த சூழ்நிலை அப்படி.... ஓத்த வயதினர்... இதுபோன்ற எண்ணங்கள், ஆசைகள், ஏற்படறது சகஜம்தான்... ஆனா...” என நிறத்தினாள்.

“நீங்களும் கூட இப்போ நான் சொல்லப்போவதை தவறா எடுத்துக்காதிக கதிர்” என்றாள் வினயமாக.
“நீ ஒண்ணு சொல்லி அதை நான் தவறா எண்ணுவதா... அப்படி ஒண்ணு நடக்கவே நடக்காது... மனசில உள்ளத உள்ளபடி தெளிவா சொல்லீடு ராஜேஸ்வரி” என்றான் அவனும்.

“உங்களப் பார்த்து எனக்கு அப்படி ஒரு எண்ணம் வரல கதிர்... அதுக்கும் காரணம் இருக்கு.... சின்ன வயசு முதலே ஒண்ணாவே பள்ளி போய் வந்தோம்... சிறு வயசில ஒண்ணா ஓடி பிடிச்சு விளையாடினோம்.... அப்போகூட எனக்கு ஒண்ணுன்னா நீங்க ஓடி வந்து என்ன காப்பாத்துவீங்க, எனக்காக பேசுவீங்க... சண்டை கூட போட்டிருக்கீங்க”
“அப்பா, அந்த வயசுலேர்ந்தே, ‘கிடைச்சா பிள்ள இப்படி இல்ல இருக்கணும், எனக்கு பிறக்காத பிள்ளையா தெய்வம் கொண்டு வந்து சேர்த்திருக்குனு...’ அடிக்கடி சொல்லுவார்”.

“அதக் கேட்டு வளர்ந்ததினாலையோ என்னமோ, எனக்கு அதற்கு புறம்பான எண்ணங்கள் எதுவுமே உங்க மேலே வரல.... யார் மேலேயுமே வரல கதிர்....
அதுக்குன்னு உங்களை உடனே கதிர் அண்ணானு கூப்பிட்டு நான் வசனம் பேச விரும்பல.”

“நீங்க என்னோட மிக நல்ல நண்பர், சகோதரன் இல்லைன்னாலும் அதுக்கும் மேலானவர், எனக்கு மிக நெருங்கியவர்.... உங்க மேல, உங்க வார்த்தை மேல, மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் எனக்கு இருக்கு.... ஆனா மணமுடிக்க முடியும்னு தோணல.”
“என்னை புரிஞ்சுக்குவீக இல்லையா கதிர்” என்றாள் இறைஞ்சலுடன்.

அவன் கண்கள் அவள் கூறியவற்றை கேட்டு கலங்கிவிட்டன.
‘தந்தையும் மகளும் அவன்பால் கொண்டுள்ள இந்த சிநேகம், மதிப்பு, மரியாதை அன்பு, பாசம், இதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டாமா... கிடைக்கணுமே... பெரிசு சொல்வதுபோல....’

“ராஜேஸ்வரி, நான் குடுத்து வெச்சிருக்கேன்மா.... இனி என்னால உனக்கு இதுபோன்ற திண்டாட்டம், குழப்பம் எதுவுமே ஏற்படாது... நீ தெள்ளத்தெளிவா உன் மனச சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
உன் நம்பிக்கை வீணாவது போல நான் என்னிக்குமே நடந்துக்க மாட்டேன்... கடைசி வரைக்கும் உன் நல்வாழ்வுக்கு பாடுபடுவேன்.”
“இனி, தேவதையா இல்லாம என் அம்பிகையா, நீ என் மனசில கொலுவிருப்ப... என்ன நம்பலாம்” என்றான் நிமிர்ந்து தெளிவுடன்.

மொட்டு கருகவில்லை... பூத்து, தெய்வத்தின் காலடியில் அற்பணமாகியது.... விகல்பமில்லாத அவனது காதலின் தூய்மை, யாருக்குமே களங்கம் ஏற்படாமல் காப்பாற்றிவிட்டது.

மனதை தேற்றிக்கொண்டு, உண்டு முடித்து, வண்டியை எடுத்தான். இருவரும் ஒன்றும் பேசவில்லை.

அதன் பின், அவன் கேட்டான் என்பதை கூட அவனே அழித்துவிட்டான், என்பது போல அவன் நடமாட, ராஜியும் அவனுடன் பழைய சகஜ நிலையுடன் பேசிப் பழகி வந்தாள்.
இதோ, இப்போது, திருமண மண்டபத்தின் அருகே நின்று நீர் மல்க ஆசீர்வதித்தான் கதிர். தான் காதலித்தவள் வேறொருவனை மணமுடித்து விட்டாளே என்று அல்ல.... பூபோன்ற ஒரு பொன் தேவதை நல்லபடி வாழ்வு அமையவேண்டுமே என... .
அவனுக்கு ஏனோ முழு திருப்தி இல்லை. கனகு அதிகம் படிக்காதவன், வேலை, தொழில் என எதுவும் செய்வதில்லை. கொஞ்சம் முரட்டு சுபாவம் எனக் கேள்விப்பட்டிருந்தான்.

அவனால் முடிந்தவரை, அவன் ராஜலிங்கத்திடம் போராடி பார்த்துவிட்டான். அவருக்கு, கனகராஜின் மேல் ஏனப்படி ஒரு நம்பிக்கை ஏற்பட்டது என அவனால் கண்டுகொள்ள முடியவில்லை. ஆயிரம் முயன்றும் திருமணத்தை தடுக்கவும் முடியவில்லை.

ராஜியின் வாழ்வு நல்லபடி அமைய, அந்த ஆண்டவன் துணை இருக்க வேண்டும் என மனமுருக பிரார்த்தித்தான் கதிர்.

திருமணம் நல்லபடி முடிந்து ஊரே விருந்தை உண்டு ரசித்து களைப்பாறியது.
புது மண தம்பதிகளும் உணவு உண்டு முடித்து கனகராஜின் வீட்டிற்குச் சென்றனர். அங்கே சென்று, விளக்கேற்றி அவனது பெற்றோரின் படத்தினை வணங்கிவிட்டு அமர்ந்தனர். சில உறவு பெண்களின் கையால் பாலும் பழமும் உண்டனர்.

அன்றிரவு ஊர் மொத்தத்திற்கும் என கூத்து ஏற்பாடு செய்திருந்தார் ராஜலிங்கம். அந்த வட்டாரத்திலேயே பேர்பெற்ற கூத்து குழுவினர் ராமாயண கதையை அழகுற கூத்தாக மேடையேற்றினர்.

மொத்த கிராமமும் அதைக் கண்டு களித்தபடி இருந்தது. ராஜியும், தன் தந்தை மற்றும் பொன்னி, சில தோழிகள் என அமர்ந்து ரசித்தாள்.

கூத்து துவங்கும் முன்பே கனகு அவளிடம் வந்து, “தா பாரு ராஜி, என் கூட்டாளிக தோஸ்துங்க எல்லாம் என்னோட கொஞ்ச நேரம் பொழுத கழிக்க ஆசப் படறானுவ, நீ உங்கப்பாருடன் கூத்து பார்த்து முடி.... ராவைகுள்ள நான் வந்து சேர்ந்துகிடுதேன், என்ன... என்றான் இளித்தபடி. அவனை ஏறெடுத்து பார்க்கவில்லை. மெல்ல தலையை மட்டும் ஒப்புதலாக ஆட்டினாள்.


4 comments:

  1. I see a world of difference between the bride and groom. How did the father miss this?? I feel anxious!! It only goes to show your writing skills!!

    ReplyDelete
  2. Fintastic natural slang you put in the story. As usual sooooooo good.

    ReplyDelete
  3. Your writing is so good that I ffel that raki and ksthir are before me conversing. Excellent

    ReplyDelete
  4. Sorry. Typo error. I feel raki and kathir

    ReplyDelete