Saturday 1 September 2018

MANNAVANE AZHALAMA - 1

அத்யாயம் 1

தெற்கு டெல்லி அலகநந்தா பகுதியில் அழகிய தனி பங்களா. உள்ளே நுழைந்தால் வளைவான பாதை போர்டிகோவில் போய் முடியும். அந்தப் பாதையின் நடுவில் கண்ணுக்கு இதமாக அழகிய பச்சை பசேல் என்ற புல்வெளி. காலையும் மாலையும்  சில்லென்று வீசும் தென்றல் மனதுக்கும் உடலுக்கும் இதம் கொடுக்கும். கீழும் மேலுமாக நான்கு மிகப் பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட அந்த பங்களா நுணுக்கமான வேலைபாடுகளுடன் கலை நயம் மிக்கதாக விளங்கியது. கண்ணுக்கு ரம்மியமான வர்ண பூச்சு, அதற்கேற்ப அலங்கார பொருட்கள். முக்கிய ஹாலின் இரு பக்கமிருந்தும் வளைந்து மேலே ஏறும் படிகட்டுகள். மேலே வெராந்தாவிலிருந்து பார்த்தால் கீழே மொத்தமும் காணலாம்.

வெளிவாசலில் கார் ஹார்ன் கேட்க கூர்க்கா ஓடி வந்து சல்யுட் அடித்து கதவை விரிய திறந்தான். காரை ஒட்டி வந்த தருண் போர்டிகோவில் நிறுத்திவிட்டு சாவியை வீட்டு டிரைவரிடம் கொடுத்தான் கராஜில் வண்டியை விடவென.

உள்ளே சென்று இடது பக்க படிகளில் வேகமாக ஏறி மேலே தன் அறைக்குச் சென்றான். எங்கும் வெறுமை.... அன்று வேலையும் நிறைய.... தானே இழுத்து போட்டுக்கொண்டது பாதி.... இப்போதெல்லாம் தன்னை தன் வேலைகளில் மூழ்கடித்துக் கொண்டான் என்றால் தகும். வேறே எந்த எண்ணமும் கவலைகளும் குழப்பங்களும் அவனை அண்டாத வண்ணம் வேலையின் பெயரில் தப்பித்து வந்தான்.

முகம் கூட கழுவ மனமின்றி டையை தளர்த்திவிட்டு ஷர்டின் மேல் ரெண்டு பட்டனையும் விடுவித்துவிட்டு, தன்னுடைய சாய்வு நாற்காலியில் தொப்பென அமர்ந்து கண் மூடினான். 

“சார் டீ” என்று உள்ளே வந்தார் மேரி.
“தாங்க்ஸ் மேரி” என்றான். டீயை ரசித்து பருகினான்.
“மேரி, பச்சே ஆகை க்யா?” (பசங்க வந்துட்டாங்களார்?, 

ஆகை. அப்னே ரூம் மெ ஹே” (வந்துட்டாங்க அவங்க ரூம் ல இருக்காங்க)


 ஒரு மகள் ஒரு மகன். கனிகாவிற்கு பதினொன்று, மகன் நிதினுக்கு ஒன்பது ஆகிறது. மேரி இந்த பங்களாவின் கவர்னஸ். அவள் மட்டும் இல்லை என்றால்... நினைக்கவே பயமாக இருந்தது தருணிற்கு.

ஐம்பதை நெருங்கும் வயது.... ஆரோக்யமாக ஒடிசலாக உடம்பு... எறும்பு போல சுழண்டு கொண்டிருப்பாள் மேரி.... பிள்ளைகளை கவனித்து, அவனது தேவைகளையும் கவனித்து, அந்த வீட்டையும் திறம்பட நிர்வகித்தாள். நிதின் பிறந்தபோது வந்தவள்தான் மேரி. அவளுக்கென்று யாருமில்லாது ஆதரவின்றி இருந்தவளை கூட்டி வந்து வேலை போட்டு கொடுத்தான்.

அவன் வாழ்வின் அனைத்து ஏற்ற தாழ்வையும், கூட இருந்து ஒரு தமக்கையாக கண்டவள், தாயாக இருந்து தாங்கியவள்.

“ஹை டாட்” என்றபடி உள்ளே வந்தாள் கனிகா.
“ஹை கனி, ஹவ் வாஸ் யுவர் டே?” என்றான் அன்பாக. அவன் எதிரே கட்டிலில் அமர்ந்தபடி. “குட் டாட், யு லுக் சோ டயர்ட்..” என்று கேட்டாள் ஆதுரமாக.
“ஹும், ஐ ஆம் டயர்ட் கிட்” என்றான் சோர்வாக. 

“டாடீ” என்று கத்தியபடி புயலாக உள்ளே நுழைந்தான் நிதின்.
“நிதின், ஏன் இப்படி ஓடி வரே, மெல்ல வா என்று தன் மேல் ஏறி அமர்ந்த மகனை அணைத்துக்கொண்டான் தருண்.
பின்னோடு மேரி ஓடி வந்தார். “சார், சப்தர்ஜங் ஹாஸ்பிடல்ல பையர்.... ந்யூஸ் பாருங்க, காமிக்கறாங்க..” என்றாள் பதட்டத்துடன் பயந்து.

“வாட்!” என்றபடி அவசரமாக தன் அறையில் உள்ள டிவியை போட அதில் அனைத்து ந்யூஸ் சானல்களில் ப்ளாஷ் செய்தி என இதுவே வந்துகொண்டிருக்கக் கண்டான். கனிகாவும் கூட பீதியுடன் தருணை காண, உடனே டையை உதறிவிட்டு ஷர்டை சரிசெய்துகொண்டு,
“நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இங்கேயே இருங்க.... நான் போய் பார்த்துட்டு வரேன்” என்று கீழே ஓடினான்.
“மேரி, டேக் கேர்” என்றபடி புயலாக வாசலை அடைந்து வண்டியைக் கிளப்பிக்கொண்டு பறந்தான்.
“ஒண்ணும் ஆகாது கவலைப்படாதீங்க” என்று பிள்ளைகளை அரவணைத்து அருகே அமர்த்திக் கொண்டு ந்யூசை மேலும் பார்த்துக்கொண்டு அமர்ந்தனர்.

மருத்துவமனையை அடைந்த தருண் அங்கே ஒரே குழப்பமும் கூச்சலும் கூக்குரலுமாக இருந்தததைக் கண்டான். தன் மொபைலை எடுத்து டாக்டரை அணுக முயல, அது சைலண்டில் இருந்தததை அப்போதுதான் கண்டான். ஆபிசில் முக்கியமான மீட்டிங் என அப்படி வைத்தவன் அதன் பின் கவனமில்லாது அதை அப்படியே விட்டிருந்தான். அதை உயிர்பித்தபோது பத்து மிஸ்ட் கால்ஸ் கண்டான் டாக்டர் கன்னாவிடமிருந்து.

‘ஒ மை காட்’ என்று உள்ளே ஓடினான். செக்யூரிட்டி பலப்படுத்தப் பட்டிருந்தது. அவனை உள்ளே விட மறுத்தனர். இவன் டாக்டர் கன்னாவின் பெயரைச் சொல்லி அவர்தான் அழைத்தார் என்று கெஞ்சி உள்ளே ஓடினான். பல தடைகள் மீறி அவன் கன்னாவின் அறையை அடைய அவர் பதட்டமாக அங்கேயிருந்த சில தீக்காயம் பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை செய்துகொண்டிருந்தார்.

இவனைக் கண்டு, “ஓ தருண்ஜி, எத்தனை நேரமா உங்களுக்கு ட்ரை பண்ணினேன்...” என்றார் ஒரு ஆயாசத்தோடு. 

“சாரி கன்னா சாப், மன்னிச்சுடுங்க... அர்ஜண்ட் மீட்டிங்னு சைலன்ட் ல இருந்தது போன்.... இப்போகூட ந்யூஸ் பார்த்துட்டு ஓடி வரேன்.... ஹவ் இஸ் ஷி?” என்றான் அவனும் கலவரமாக. செய்த வேலையை தன் உதவியாளரிடம் ஒப்படைத்துவிட்டு அவனருகே வந்து அவன் தோளில் கைபோட்டு அணைத்தபடி அவனை அழைத்துச் சென்றார். அவரின் இந்த செய்கை அவனிடத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

“கன்னாஜி..?” என்றான் கேள்வியாக.
“அவங்க இருந்த ஸ்பெஷல் வார்ட்தான் மிக அதிகமாக தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது.... ஒண்ணும் சொல்வதற்கில்லை..... காப்பாற்ற முயன்று கடவுளின் முன் தோற்றுக்கொண்டிருக்கிறோம் தருண்..” என்றார் அவர் தலை தாழ்த்திக்கொண்டு. 

“நோ நோ, இட் கான்ட் பி..” என்று குமுறினான்.
“காம் டவுன் தருண்..... வாங்க...” என்று அழைத்துப் போனார். 

அந்த வார்டில் தீக்காயம் பட்டவர்களை, வேறே வார்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்தனர். அவனை அணைத்தபடி உள்ளே சென்றார். அங்கே அவன் கண்ட காட்சி அவன் ஜென்மத்தில் மறக்க முடியாததாய் இருந்தது.

உடலெங்கும் தீ காயம் ஏற்படிருந்ததால் ஒரு வெள்ளை கூடாரத்தின் உள் அவள் கிடத்தப்பட்டிருந்தாள். அவனுக்கு முகமூடியும் சுதீகரிக்கப்பட்ட கவுனும் அணிவித்து அருகே செல்லும்படி கூறினார். அவளைக் கண்டு தாங்கமுடியாதவனாக அவன் டாக்டரை பார்க்க, அவர் தலையை இடம் வலமாக தயக்கத்துடன் ஆட்டினார்.
“நோ” என்று அவர் தோளிலேயே தலை சாய்த்தான். 

“கடைசி மூச்சுகளை எண்ணிக்கொண்டிருக்கிறாள்.... வலி வேதனையையும் மீறி உன்னை பார்க்கவென கேட்டாள்.... அதுதான் உன்னை அழைத்தேன்” என்றார். 

அவள் அருகே நெருங்கிச் சென்று அவள் கையைத் தொட்டான். அவள் மெல்ல அரைக் கண் திறந்தாள். அவனைக்கண்டு கண்களில் ஒளி மீண்டது. 

“வந்துடீங்களா” என்பதுபோல சிறுநகை புரிந்தாள். அவன் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.
“தரு” என்றாள் உதடு மட்டுமே அசைந்தது. அவள் அருகே நெருங்கி நாற்காலியில் அமர்ந்தான். “சொல்லு வினு..” என்றான்.
“நான் போறேன், பசங்களைப் பாத்துக்குங்க..... எனக்கு ஒரு சத்தியம் செய்வீங்களா?” என்றாள் மெல்ல. 

“அப்படி எல்லாம் பேசாதே வினு” என்றான் கண்ணீர் மிதக்க. அவள் புன்னகைத்தாள். “பேசவிடுங்க, இன்னும் எத்தனை நிமிடங்கள் இருக்கோ எனக்கு” என்றாள். 

“என்னோட சந்தோஷமா நீங்க இருந்தது மிகச் சில நாட்களே.... அதுக்குப் பிறகு நான் உங்களுக்கு குடுத்ததெல்லாம் கஷ்டங்கள், வேதனைகள், கவலைகள், நிம்மதியில்லாத வாழ்க்கை மட்டும்தான் தரு.... நான் இப்போ போவதும் கூட ஒரு விதத்தில் நல்லதுதான்..... இனிமேயானும் நீங்க நிம்மதியா சந்தோஷமா வாழணும்..... எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க, நல்லவளா ஒருத்திய பார்த்து நீங்க கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கணும்..” என்றாள்.

“ஏண்டா இப்படி எல்லாம் பேசறே... உனக்கு ஒண்ணும் ஆகாது” என்றான்.
அவள் மீண்டும் புன்னகைத்தாள். ஒரு காலத்தில் அவளின் அந்த ஒரு புன்னகைக்காக தவமிருந்தவன், இன்று அதைக் கண்டு கலக்கம் கொண்டான். 

“ப்ளிஸ் ப்ராமிஸ் மீ தரு” என்று கை நீட்டினாள். அதற்குள் அவள் வேதனை கூடியது. மூச்சுகள் சீர்கேடாய் வந்தன.... பல்ஸ் குறைந்துகொண்டே வந்தது. கன்னா அவன் தோளின் மீது கைவைத்து அழுத்தினார். அவளின் அந்த கடைசி நிமிட சந்தோஷத்திற்கென, அவனும் அவள் கைமேல் கை வைத்தான். 

“எஸ் ஐ ப்ராமிஸ்” என்றான் மெல்ல. அவள் விரிந்த ஒரு புன்னகை முகத்தில் உறைய அவனை கண்டபடி அப்படியே உயிர் நீத்தாள். 

“வினூ” என்று கதறினான். அவனை தேற்ற முடியாமல் பார்த்திருந்தார் கன்னா. 

“ஐயோ நான் என்ன பண்ணுவேன், பசங்க இவளை பார்க்கக் கூட முடியாமல் போச்சே.... இதெல்லாம் எப்படி நடந்தது?” என்றான் கன்னாவிடம்.

“என்னத்த சொல்ல தருண்ஜி, நிமிட நேரத்திற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.... ஷார்ட் சர்க்யூட் ஆகி இருக்கு.... மளமளவென நெருப்பு பரவீடுச்சு..... நாங்க அதை உணர்ந்து எல்லா பேஷன்ட்களையும் மற்ற இடங்களுக்கு மாற்றும் முன்பே அது பரவி பலரையும் பாதிச்சுடுச்சு.... சாரி தருண்” என்றார் நிஜமான வருத்ததுடன். 

அவர் தனக்காக தன் இழப்புக்காக நிஜமாகவே வருந்துகிறார் என்று உணர்ந்தான் தருண். ஆம், அவர் விந்தியாவிற்கு கடந்த எட்டாண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை அளிப்பவர் அல்லவா. அவர்கள் குடும்பத்தின் அங்கத்தினர் போல ஆகி இருந்தார்.

அடுத்து என்ன என்றே புரியாமல் சிதைந்து போய் அப்படியே அசையாமல் விந்த்யாவின் கையை பிடித்தபடி அமர்ந்திருந்தான் தருண்.

கன்னா அவனை தேற்றி வீட்டிற்கு அழைக்கச் செய்தார். 

மெல்ல தேறி மேரியை அழைத்தான் தருண். அவளிடம் விஷயத்தைக் கூறி, பக்குவமாக பிள்ளைகளை தேற்றும்படி கேட்டுக்கொண்டான். பின்னோடு விந்த்யாவின் குடும்பத்துக்கும் தனது குடும்பத்துக்கும் சில நெருங்கிய நண்பர்களுக்கும் கூப்பிட்டு பேசினான். 

உடனே முதல் ஆளாக ஓடி வந்து எப்போதும் போல் கை கொடுக்க முன்னே நின்றது அவனது ஆப்த நண்பன் விஜயன் தான். அத்தனை நேரமும் தைர்யமாக இருப்பதாக காண்பித்துக் கொண்டவன் அவனை கண்டதும் உடைந்தான். அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு போய் காரில் அமர்த்தி அவனை அழவிட்டான் விஜயன். பிள்ளைகள் போனில் அழைத்தனர். அவர்களை என்ன சொல்லி தேற்றுவது என்றறியாமல் துவண்டான் தருண்.

சடங்குகளை முடித்து விந்த்யாவை கரை ஏற்றி முடித்தான். வீடு எப்போதுமே வெறுமைதான், இப்போது மேலும் வெறுமையாக தோன்றியது.... சூனியமாக மனம் துவண்டு கிடந்தது.... ஆபிசிற்கு செல்லவும் மனமில்லாமல், சாப்பிட தூங்க முடியாமல் பிள்ளைகளை இருபக்கமும் அணைத்தபடி அமர்ந்திருந்தான்.... அந்த சில நாட்கள் விஜயன் கல்பனாவுடன் கூடவே தங்கினான். தருணின் தாயும் அங்கேயே தங்கி இருந்தார். கல்பனா உடன் இருந்தது அவருக்கும் பிள்ளைகளுக்கும் எவ்வளவோ ஆறுதலாக இருந்தது.

நினைத்துப் பார்த்தால் விந்த்யாவே கூறியதுபோல அவளோடு தருண் கழித்த நேரம் ஒரு கணக்கில் எடுக்கவே முடியாது. ஆனால் அந்த நேரத்தில் அவள் அவனுக்கு கொடுத்த அன்பு அரவணைப்பு மதிப்பற்றது. அதன் பின் அவன் வாழ்வு சூனியமே நிறைந்திருந்தது.

பிள்ளைகள் அழக்கூட தெரியாமல் அவன் மடியில் இருபுறமும் தூங்கி இருக்க, அவன் அந்த தூக்கமும் கூட வராமல் முழித்திருந்தான். விட்டத்தை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான். எண்ணங்கள் பின்னோக்கி ஓடின.

பதினாறு வருடங்களுக்கு முன்னால்...

தருண் பிறப்பால் கேரள மாநில பாலக்காட்டைச் சேர்ந்தவன். மலையாளமும் தமிழும் கலந்து கலந்தே வரும் பேச்சில்... அவனது பெற்றோருக்கு இரு மகன்கள் ஒரு மகள். பெரியவன் வருண் டாக்டருக்குப் படித்து அங்கேயே பாலக்காட்டில் கிளினிக் நடத்தி வருகிறான். பெற்றோரோடு தங்கி அவர்களையும் பார்த்துக்கொள்கிறான். அடுத்தவன் தருண் டிகிரியை திருச்சூர் கல்லூரியில் முடித்துவிட்டு எம் பி ஏ படிக்கவென டெல்லி கலாசாலையில் சேர்ந்தான்.

எம் பி யே படிக்கும்போது அவனுடன் படித்தவள் விந்தியா. கோதுமை நிறம், சற்றே பூசினாற் போன்ற உயரமான உடலமைப்பு. கழுத்தளவில் அழகாக வெட்டிவிடப்பட்ட கூந்தல் என்று அழகாக இருந்தாள். மத்தியதர குடும்பத்துப் பெண்.... டெல்லியைச் சேர்ந்தவள்... அறிவும் பண்புமாக வளர்ந்திருந்தவள். படிக்கும்போது மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபாட்டுடனும் படித்து வந்தாள்.

தருண் பள்ளிப்படிப்பில் இரண்டாம் மொழியாக ஹிந்தி எடுத்திருந்ததால் ஓரளவு ஹிந்தி தெரியும் புரியும் பேசுவான்.... ஆனால் அந்தக் கொச்சை மொழியைக் கண்டு ‘மதராசி’ என்று கேலி செய்தவர்களும் எகதாளம் செய்தவர்களும் தான் அதிகம்.

அது போன்ற கிண்டல் தருணை தனிமைப்படுத்தியது... விந்தியா அந்த நேரத்தில் அவனை நண்பனாக்கிக்கொண்டாள்.... அவன் வேதனை இன்னதென புரிந்து நட்புடன் பழகினாள்... அவனுக்கு மேலும் ஹிந்தியை புகட்டினாள்.... பாடங்கள் அவளுக்கு விளங்காதபோது தருணைத்தான் வந்து கேட்டுக்கொள்வாள்.... அவனும் விரிவாக எடுத்துச் சொல்வான்... அப்படி ஆரம்பித்த அவர்களின் பழக்கம் நல்லதொரு நட்பாக வளர்ந்தது.

அன்றும் கேன்டீனில் சாப்பிடவெனச் சென்றபோது அவன் வகுப்பு மாணவர்கள் மட்டும் இன்றி இரண்டாம் ஆண்டு மாணவர்களும் கூட அவனைப் பார்த்து கேலி செய்தனர். 

“ஹேய் மதராசி, ஆஜ் க்யா
, சாம்பார் காயேகா?” (என்னடா மதராசி இன்னிக்கி என்ன சாம்பார் சாப்பிடுவியா ) என்றான் ஒருவன்.
“அவனுக்கென்னடா புரியும் நீ ஹிந்தியில பேசினா” என்றான் இன்னொருவன்.
“ஆனாலும் மச்சம்டா, இவுனுக்குன்னு மாட்டுச்சு பாரு, அந்தப் பொண்ணப் பாரு மச்சி, என்ன அழகு, பாஷையே தெரியாம எப்பிடிடா மயக்கினான் அவள?” என்றான் மற்றொருவன்.
“டேய் இதுக்கெல்லாம் மொழி தேவையா?” என்று கிசுகிசுப்பாக என்னமோ கூறி கிண்டல் செய்தான் மூன்றாமவன். அதைக் கேட்டு அனைவரும் ஹோ என்று சிரித்தனர். 

அந்நேரம் வரை அவனை பேசியதில் வருத்தம் இருந்தாலும் பொறுத்துக் கொண்டான் தருண்.... ஆனால் தன்னோடு இணைத்து விந்த்யாவின் பெயரையும் அவர்கள் அசிங்கமாக பேசுவது அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.... விந்தியா என்ன தடுத்தும் கேளாமல் எழுந்து அவர்கள் அருகில் சென்றான்.

“க்யூ
, ஆப் லோகோங்கோ க்யா தக்லீப் ஹேய்?” (ஏன் உங்களுக்கு என்ன குடையுது) என்றான் முறைப்பாக.
“அரே, இவன் ஹிந்தி பேசறாண்டா” என்றான் அதிசயித்து ஒருவன். 

“எல்லாம் மேடம் பாடம் நடத்தி இருப்பாங்க ராத்திரி” என்றான் கண் அடித்தபடி இன்னொருவன். அவன் சட்டையை கொத்தாக பிடித்து, “வாய மூடு, அனாவசியமா என் விஷயத்தில தலை இட்டா நான் சும்மா இருக்க மாட்டேன்.... விந்தியா பெயரை அசிங்கப்படுத்தினால் கொலை விழும் ஜாக்ரதை..” என்று சரமாரியாக தெரிந்தவரை ஹிந்தியில் மிரட்டிவிட்டுத் திரும்பினான்.

பின்னோடு எல்லாமும் பழக்கமாகிவிட்டது. பின் அதை நினைத்தால் சிரிப்புதான் வந்தது. கல்லூரி வாழ்க்கை என்பது அப்படிப்பட்ட வசந்த காலம் அல்லவா.
விந்த்யாவோடு பேசி பழகி படித்து ஊர் சுற்றி திரிந்தான். இனிமையாக கழிந்தன அந்த நாட்கள்.

“ஹை வினு, எப்படி பண்ணி இருக்கே ப்ராஜக்ட்?” என்றான் தருண்.
“நல்லா வந்திருக்கு போலத்தான் தோணுது தரு, பார்க்கணும், அந்த சிடுமூஞ்சி ப்ரொபசர் என்ன சொல்லுமோ...” என்றாள் பழிப்பு காட்டியபடி. அவன் சிரித்தான்.
“நான் இங்க கவலையா சொல்லிகிட்டிருக்கேன், என்ன சிரிப்பு?” என்றாள். பின்னோடு அவளுக்கும் சிரிப்பு வர சேர்ந்து சிரித்தாள். 

இன்டர் காலேஜ் போட்டிகளில் இருவரும் கலந்து கொண்டு கலக்கினர். அவன் பேச்சு போட்டி, பட்டிமன்றம் என்று கலக்க அவளோ பாட்டு கதக் என்று அசத்தினாள். 

பழைய ஹிந்தி பாடல்களை தேர்ந்தெடுத்துப் பாடி மயக்குவதில் அவளை அடித்துக் கொள்ளவே முடியாது என்று அவனுக்குத் தெரியும். அதிலும் அவனுக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள் சில உண்டு அதில், “தேரா மேரா ப்யாரு அமர்...” என்று அவள் குழைய ஆரம்பித்தால், இவன் இங்கே குழைந்து சொக்கிப் போவான். வகுப்புகள் இல்லாத நேரங்களில் கார்டனிலோ கேன்டீனிலோ அமர்ந்து அவளைப் பாடச் சொல்லி கேட்பான்.

2 comments: