Sunday 30 September 2018

ENGIRUNDHO VANDHAAN - 10


‘இங்கேயேவா இப்போதிலிருந்தேவா..’ என்று தயங்கினாள் மது.
“இல்லைமா, அங்கே எல்லாம் அப்படியே கிடக்கு... போட்டது போட்டபடி வந்துட்டேனே.... எல்லாம் முடிவாகட்டுமே மா” என்றாள் திக்கித் திணறி.
“சரிதான் திருமணத்துக்கு முன்னாடியே இங்க வந்து தங்க கூச்சமா இருக்காக்கும்.... அதுவும் சரிதான்.... நான் உங்க பூரணியோட பேசீட்டு முகூர்த்தம் குறிச்சுட்டு கூப்படறேன் சரியா.....
“போகலாம் மாலைவரை இரு..... அதுக்கு அப்பறமா திலீப் கொண்டுவிடுவான்” என்று அமர்த்தினார்.

கண்ணன் தூங்கி வழிவதைக்கண்டு அவனை தோளில் சாய்த்துக்கொண்டு தட்டி கொடுத்தாள். சில நிமிடங்களில் அவன் தூங்கி இருக்க
“வா மது, அவன நம்ம ரூமில படுக்க வை” என்று மேலே அழைத்துப்போனான்.
“வேண்டாம் நான் இங்கே கீழேயே படுக்க...”
“பேசாம வா” என்றான் அடங்கின குரலில்.
அவனோடு மாடி ஏறினாள்.
“என்னடி ரொம்பதான் பிகு பண்றே?” என்றான் ஆற்றாமையோடு.
“எம் பிள்ளை என் பெட்டில படுக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா” என்றான்.
“சரி அப்படியே” என்று அங்கே படுக்க வைத்து அருகில் தலையணை அண்டம் கொடுத்தாள்.
அவள் நிமிரும் முன்பே பின்னிருந்து அவளை கட்டிக்கொண்டு
“மது இவ்வளவு சீக்கிரம் நம்ம திருமணம் நிச்சயம் ஆகும்னு நான் நினைக்கவே இல்லை” என்றான் அவளை தன்னோடு மேலும் இறுக்கி கொண்டபடி.
“ம்ம் நானும்தான்”
“அம்மாதான் இங்கேயே இருன்னு சொன்னாங்களே, அப்பறம் ஏண்டீ?” என்று கேட்டான்.
“அவங்க பெரிய மனசு, சொல்லிட்டாங்க தீபு..... ஆனாலும் நான் எப்படி இங்க தங்க முடியும்... அது மரியாதை இல்லை..... நாம சொன்னதும் அப்படியே தங்கிட்டா அதுதான் சாக்குன்னு அம்மாக்கு தோணிடிச்சுன்னா?” என்றாள்.
“போடி” என்று அலுத்துக்கொண்டான்.

நாட்கள் மளமளவென ஓடியது. கோடை விடுமுறை ஆதலால் அவளுக்கு நிறைய நேரம் இருந்தது. பூரணி அம்மாவிடம் தானே விசாலத்தை அழைத்துச் சென்றாள் மது. அவருக்கு மிக்க மகிழ்ச்சி. விசாலத்தின் கைகளை பிடித்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர்விட்டார். அவரை முன்னிறுத்தி வீட்டோடு நிச்சயம் வைத்துக்கொண்டனர். முகூர்த்த தேதீ நிச்சயிக்கப்பட்டது.
மதுவையும் கூட கூட்டிக்கொண்டு கோவை சென்று கல்யாணத்திற்கு வேண்டிய ஜவுளிகளை எடுத்தார் விசாலம். நகைகள் சில வாங்கினர். பத்திரிகை அடித்து வந்தது. சில முக்கியமானவர்களுக்கு கொடுக்கவென மதுவையும் அழைத்துக்கொண்டு திலீப் சென்று வந்தான். அங்கு இங்கு அவனோடு செல்ல வசதியாக சில பிரிண்டட் பட்டுகளும் மெல்லிய நகைகளும் அவளுக்கென வாங்கி இருந்தான். அவள் தடுத்தும் கேளாமல் அவற்றை உடுத்திக்கொண்டு கூட வரச்செய்தான்.

திருமண நாளும் வந்தது. கண்ணனை விசாலம் கையில் ஏந்தி இருக்க திலீப் மதுவின் கழுத்தில் தாலி கட்டி முடித்தான். சிம்பிளாக திருமணத்தை முடித்துக்கொண்டு மிக கிராண்டாக வரவேற்பு வைத்திருந்தான் திலீப். அவனிடம் வேலை பார்க்கும் எல்லாத் தொழிலாளர்களும், பிசினஸ் சுற்றங்களும் சொந்தங்களும் நண்பர்களும் வந்து ஒருமுகமாக வாழ்த்தினர்.  எஸ்டேட் தொழிலாளர்களுக்கு மற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் இரண்டு மாத போனசும் புதுத் துணிகளும் வழங்கப் பட்டன. மதுவை பார்லரிலிருந்து வந்த பெண்கள் அழகோவியமாக அலங்கரித்திருந்தனர்.

எப்போதும் சாதா காட்டன் சல்வாரிலோ காட்டன் புடவையிலோ ஒரு சிறிய பொட்டு மட்டும் வைத்துக்கொண்டு நடமாடும் மதுவுக்கு இது தான்தானா என்று பிரமிப்பு ஏற்பட்டது கண்ணாடியில் தன்னைக் கண்டபொழுது.
திலீபோ சொக்கிப் போயிருந்தான். அலங்காரத்தில் அவள் அழகுக்கு அழகானாள். அவன் கண்களில் தெரிந்த மயக்கம் அவள் முகத்தை செம்மையுறச் செய்தது. கண்ணனுக்கு அந்த வயதுக்குண்டான சின்ன சூட் தைத்திருந்தான் திலீப். அதை போட்டுக்கொண்டு தன் சிறு நடையில் தத்தித் திரிந்தான் கண்ணன்.

இப்போது அவன் பாட்டியிடம் பெரும் ஒட்டுதல்.... சாப்பிடுவது தூங்குவது எல்லாமும் அவரோடுதான்..... விசாலத்திற்கு அதில் பெரும் மகிழ்ச்சி.... கண்ணனை மதுவின் அக்கா குழந்தை அவன் பெற்றோர் விபத்தில் இறந்துவிட்டனர்... அதனால் இவர்களே ஸ்வீகாரம் எடுத்து வளர்க்கின்றனர் என்று விசாலமே கூறி எல்லார் வாயையும் அடக்கிவிட்டார்.

வரவேற்புக்கு வந்திருந்த சுவாதிக்கு வயிறு எரிந்தது. ‘இந்த அற்பத்துக்கு வந்த வாழ்வு..... அவ்வளோ பெரிய அரண்மனையின் முதலாளியம்மாவா, இவளா இவளும் இவ பவிசும்’ என்று மாய்ந்து போனாள்.

வரவேற்பு முடிந்து வீட்டை அடைந்தனர். கண்ணன் விசாலத்திடமே தூங்கி இருக்க அவனை தனது அறையிலேயே படுக்க வைத்துக்கொண்டார். நன்றாக அலைந்திருந்தான். சாப்பாடும் விசாலமே ஊட்டி இருக்க அயர்ந்து தூங்கிவிட்டான்.

மேலே தன் அறைக்கு மதுவுடன் சென்ற திலீப்
“எம் பிள்ளை ரொம்ப சமத்துடீ” என்றான்.
ஏன் என்பதுபோல மது அவனை பார்க்க, “அப்பாக்கு அம்மாகிட்ட இன்னிக்கி நைட் நிறைய வேலை இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு சமத்தா சாப்பிட்டு தூங்கீட்டானே பாட்டிகிட்ட” என்று கண் அடித்தான்.
“சீ” என்று சிவந்து படபடத்து போனாள் மது.

அத்யாயம் பதினாறு

பொழுது விடிந்து எழுந்தாள் மது. திலீப் இன்னும் அசந்து உறங்கிக்கொண்டிருக்க தான் சென்று குளித்து கீழே இறங்கிச் சென்றாள். அங்கே கண்ணன் இன்னும் முழித்திருக்கவில்லை. பூஜை அறைக்குச்சென்று விளக்கு ஏற்றி வணங்கிவிட்டு வெளியே வந்தவள். காபி போட உதவினாள்.
“என்னதிது, வந்த முத நாளே சமையல் அறையில உனக்கென்ன வேலை... போ போ காப்பிய எடுத்துகிட்டு நீயும் குடிச்சுட்டு அவனையும் எழுப்பு” என்று மேலே அனுப்பிவிட்டார் விசாலம்.
“இல்லைமா அவர் இன்னமும் தூங்கராரு..... கண்ணனும் எழுந்து உங்கள படுத்துவானோன்னு...”   என்றாள்.
“அதெல்லாம் அவனும் அசந்துதான் தூங்கறான்.... நீ போ நான் பாத்துக்கறேன்” என்று கூறி அனுப்பினார். மேலே செல்ல திலீப் அப்போதே முழித்து புரண்டு கொண்டிருந்தான்.
“எங்க போனே இந்த காலையில?” என்றான் பிணங்கி.
“இல்ல குளிச்சுட்டு விளக்கேத்தீட்டு வந்தேன்.... இந்தாங்க காபி” என்று குடுத்தாள்.
“அங்க எட்ட நின்னு காபின்னா நாங்க எழுந்து வந்து எடுத்துக்கணுமாகும்.... நீ வந்து இங்க எம் பக்கத்தில ஒக்காந்து குடிக்க வை... அப்போதான் எழுந்திருப்பேன்” என்று அடம் செய்தான்.
“நான் குளிச்சாச்சுங்க..” என்றாள்.
“இருக்கட்டும் விளக்கும்தான் ஏற்றியாச்சே அப்பறம் என்ன வாடீன்னா” என்று அடம் செய்தான்.

நாணியபடி அவனருகே வந்து அமர்ந்து கப்பை நீட்டினாள். அவள் அதை பிடித்தபடியே அவன் குடித்து முடித்தான். பின் அவன் முகம் நோக்கி குனிய வெட்க மேலீட்டால் அவனிடம் இருந்து நழுவி கீழே சிட்டென பறந்துவிட்டாள்.
‘பெண்ணே உனக்கு நான் இன்னும் நிறைய பாடங்கள் கற்றுத்தரவேண்டும்’ என்று சிரித்துக்கொண்டான்.

கீழே சென்று பார்க்க அதிசயித்தாள். கண்ணன் எழுந்திருந்து விசாலத்திடம் கொஞ்சியபடி பாலை குடித்துக்கொண்டிருந்தான்.
“அட சமத்துப் பயலே, பாட்டிய படுத்தாம பால் குடிக்கிறியே” என்று மெச்சிக்கொண்டாள். தாயைக் கண்டதும் அவனும் இவளிடம் தாவினான். மிச்சம் பாலை தானே புகட்டினாள்.
பின்னர் திலீப் கீழே இறங்கி வர அவனிடம் தாவினான் கண்ணன்.
“டேய் பயலே என் செல்லக்கண்ணா” என்று கொஞ்சியபடியே அவனை வாங்கிக்கொண்டான். தன் மடியில் அமர்த்தியபடி பேப்பரை மேய்ந்தான்.

கண்ணனை விட்டுவிட்டு அதிக நாள் இருக்க முடியாதென்பதால் மூன்றே நாட்களுக்கென தேன் நிலவுக்குப் போக முடிவு செய்தான் திலீப். “மூணு நாளா?” என்று அதற்கே முழித்தாள் மது.
“என்னடி அவனவன் ஒரு வாரம் பத்து நாள்னு போறான்.... மூணு நாளான்னு மாய்ஞ்சு போறே.... கண்ணன் எனக்கும் மகன்தான் ஆனா அதைவிடவும் நீ என் மனைவி புது மனைவிடீ” என்றான் தாபத்தோடு. அவள் அவன் மனம் அறிந்து சரி என்றாள்.
“கண்ணன் என்னோட சமத்தா இருப்பான், நீங்க நல்லபடியா போய்ட்டு என்ஜாய் பண்ணீட்டு வாங்க” என்று தைரியம் கூறி அனுப்பினார் விசாலம்.
மூன்று நாள் மூன்று நிமிடங்களாக பறந்திட, மீண்டும் வந்து தங்கள் வேலைகளை தொடர்ந்தனர். மது தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டாள். வீட்டில் இருந்து கவனிக்க நிறைய வேலைகள் இருந்தன... மருமகள் என்னும் பொறுப்பு வேறு இருந்தது.... கூடவே கண்ணனை வேறு பார்த்துக்கொள்ள வேண்டி இருந்தது.

நாட்கள் கடந்து ஓடின. கண்ணனின் முதல் பிறந்த நாள் வந்தது. மதுவிற்கு பெரிதாக செய்ய ஆசை மனதில் இருந்தும் திலீப் விசாலம் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்று ஒரு பாயசம் வைத்து கோவிலுக்குச் சென்று வரலாம் என்று எண்ணி இருந்தாள். ஆனால் திலீப் இதை அறிந்தவுடன் பெரும் தடபுடலாக ஏற்பாடுகள் செய்துவிட்டான். 

நண்பர்கள் சொந்தங்கள் சுற்றத்தார் சில நெருங்கிய பிசினஸ் வட்டம் என்று அழைத்து விருந்து வைத்து கண்ணனை கேக் கட் செய்ய வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.... மதுவிற்கு அவனை பாராட்ட நன்றி கூற வார்த்தைகளே இல்லை. அவளது நன்றிகளை மனதின் ஆழ்ந்த  நெகிழ்ச்சியை வேறே விதங்களில் வெளிப்படுத்தி அவனை திக்குமுக்காட செய்துவிட்டாள்.
“என்னடி இன்னிக்கி என் காட்டில மழை.... இப்படி பரிசுகள் கிடைக்கும்னா தினமும் கண்ணனுக்குப் பிறந்த நாள் கொண்டாடலாம் போலிருக்கே” என்று அவளை சீண்டினான்.
“சி போங்க” என்று நாணி சிவந்தாள்.

அடுத்து வந்த நாட்களில் கண்ணன் அதை இதை பிடித்துக்கொண்டு நடமாடத் துடங்கி இருந்தான். அதனால் எந்த ஒரு சாமானையும் கீழே கை எட்டும்படி வைக்க முடியவில்லை. அவன் பின்னேயே சுற்ற வேண்டி இருந்தது மதுவுக்கு.
“என்னடா இப்படி படுத்தற கண்ணா” என்று அலுத்துக்கொண்டாள்.
அவன் அரிசி பல் சற்றே வெளியே தெரிய சிரித்து மயக்கினான்.
“போடா சிரிச்சு மயக்காதே, அம்மா ஒண்ணும் அசரமாட்டேன்” என்றாலும் கைகள் அவனை வாரி அணைத்துக்கொள்ளும்.

அந்த நாட்களில் ஒரு நாள் சில முக்கியமான பிசினஸ் கோப்புகளை மேசைமேல் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் திலீப். அப்போது கால் வரவே போன் அருகே சென்று அங்கேயே பேசியபடி நிற்க, கண்ணன் அந்த கோப்புகளை கீழே தள்ளி காகிதங்களை சிதறவிட்டு அதன் மத்தியில் ஏறி அமர்ந்து கசக்கிக் கொண்டிருந்தான். உள்ளே வந்த திலீப் அதைக் கண்டு கோபமிகுதியில்
“கண்ணா என்னடா இது?” என்று கத்தினான். பட்டென ஒரு அடி வைத்தான் அவன் முதுகில். கண்ணன் ஒ என்று அழ ஓடி வந்தனர் விசாலமும் மதுவும்.
“என்ன கவனிக்கற நீ பிள்ளைய, இதப்பாரு” என்று அவளிடமும் இரைந்தான்.

அவன் ஆபிஸ் காகிதங்களை கண்ணன் வீணடித்தான் என்பதை உணர்ந்து அவளுக்குமே சங்கடமாக இருந்தது தான். ஆனாலும் கண்ணனை திலீப் அடித்துவிட்டான் என்றதும் அந்த அடி அவள் இதயத்தில் விழுந்தது. பேசாமல் அவனை ஒரு அடிபட்ட பார்வை பார்த்தபடி கண்ணனை கையில் எடுத்துக்கொண்டு மேலே சென்றுவிட்டாள்.

“என்னடா திலீப் இது, சின்னக் குழந்தைங்க அப்படிதான் துறு துறுன்னு இருக்கும்..... உன் ஆபிஸ் பேப்பர்ஸை நீதான் ஜாக்ரதயா வைத்துக்கணும்..... அதுக்கு பச்சை பிள்ளையை போட்டு அடிப்பாங்களா” என்று புத்தி கூறினார்.

ஏதுக்கே தன் மகனாக வரித்தவனை முதன் முறையாக அடித்துவிட்டோமே என்று தன்னையே நொந்தபடி இருந்தான் திலீப். இப்போது இன்னமும் மனம் வலித்தது. எல்லாவற்றையும் எடுத்து ஒழுங்கு படுத்திவிட்டு மேலே சென்றான். அங்கே கண்ணனை அணைத்து சமாதானபடுத்திக் கொண்டிருந்தாள் மது. அவனை ஆசையாக வாங்கிக்கொள்ள கை நீட்டினான் திலீப். தர மறுத்து அவனோடு எதுவும் பேசாமல் அடுத்திருந்த பால்கனிக்கு சென்றுவிட்டாள் மது.

அவன் பின்னேயே சென்று “சாரி மது, நான் அவசரப்பட்டு அடிச்சுட்டேன்.....” என்று மன்னிப்பு கூறினான். அவள் அப்போதும் அவனிடம் முகம் கொடுத்து பேசவில்லை. கண்ணனின் முதுகை தடவிகொடுத்துவிட்டு அவன் அவசரத்தில் குளித்து கிளம்பி காலை உணவிற்கென கீழே வந்தான்... அப்போதும் மது வரவில்லை.... என்றும் போல அவனுக்கு உணவு பரிமாறவில்லை விடை கொடுக்கவும் வரவில்லை. அவன் மனம் வலித்தது. ஆனால் நின்று யோசிக்க நேரமில்லாமல் ஆபிஸ் வேலை அழைத்தது.. ஓடிவிட்டான்.

மாலை சோர்ந்து நேரம் கழித்து வந்தான். அப்போதும் மது மேலேயே இருந்தாள். அவன் பிரெஷ் செய்துகொண்டு சாப்பிட வர, அப்போதும் வந்து பரிமாறவில்லை. கங்காரு போல கண்ணனை தன்னிடமே வைத்திருந்தாள். அவன் மேலே செல்ல கண்ணனுடன் அவள் கீழே சென்று கொஞ்சம் சாப்பிட்டு கண்ணனுக்கும் இரவு உணவு கொடுத்துவிட்டு வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டே மேலே சென்றாள். அவனை தூங்கச் செய்து தொட்டிலில் கிடத்திவிட்டு தானும் கட்டிலின் ஒரு ஓரத்தில் ஒருக்களித்து படுத்துக்கொண்டாள். கண்களை இறுக்க மூடி படுத்திருந்தாள். உள்ளம் கன்றி இருந்தது. மனம் வெதும்பி இருந்தது.

‘எம் பிள்ளை என்றுதானே அடித்துவிட்டான்.... எங்கள் குழந்தையாக இருந்திருந்தால்....’ என்று எண்ணியது மனம். அப்போது வரை பேசாமல் அவளின் பாராமுகத்தை தாங்கி வந்த திலீபால் அதைவிட தாள முடியாமல் அவளை அவன்புறம் திருப்பினான்... தோளை இறுக பற்றி. அவள் திரும்ப மறுக்க முரட்டுத்தனமாகவே திருப்பினான்.

“என்ன மது இது, சின்ன விஷயம்.... நான் மன்னிப்பும் கேட்டுட்டேன்.... இன்னமும் நீ இப்படி பாராமுகமா இருக்கறது நல்லா இல்லைடா” என்றான் மெதுவாக.
அவளுக்கு கண்ணீர் முட்டியது. “நான் ஏதேனும் தப்பு செய்திட்டேனா மது... எம் பிள்ளையை அடிக்க எனக்கு உரிமை இல்லையா?” என்று கேட்டான். அவள் விசும்பினாள்.
“ஏதானும் சொல்லு மது” என்றான் அலுத்தபடி.

“நிஜமாவே உங்க பிள்ளையா இருந்திருந்தா அடித்திருப்பீங்களா?” என்று கேட்டாள் கண்ணீரின் ஊடே.
“என்ன, என்ன சொன்னே, எம் பிள்ளை உன் பிள்ளைன்னு கண்ணன் எப்போ ஆனான்,,,, அவன் எப்போதுமே நம் பிள்ளைதான் நினவில வெச்சுக்கோ.... உன் பிள்ளைனுதான் நான் அடிச்சேன்னா நீ இத்தனை வேதனை படறே மது.... அப்போ கண்ணன் என் மகன் இல்லையா அவனிடம் எனக்கு உரிமை இல்லையா..... தத்து எடுத்திருக்கேன் அவனை... என் மகனா... நினவு இருக்குதா.... அப்படி இல்லேனாலும் அவன் மேல நான் எவ்வளவு பாசம் வெச்சிருக்கேன்னு உனக்குத் தெரியாதா மது.... பைத்தியமா நீ.....
இதுவே நம்ம பிள்ளையா உனக்கும் எனக்கும் பிறந்த மகனா இருந்திருந்தாலும் விஷமம் பண்ணினா நான் அவனையும் இப்படித்தான் அடித்திருப்பேன்.... அப்பறம் மனம் மாறி கொஞ்சி இருப்பேன்.... சரி அதுதான் போகட்டும், கண்ணன் என் மகன் இல்லைன்னு நீ நினைச்சா, அவன் உன் மகனும் இல்லைதானே மது.... நீ அப்படியா நினைக்கிற மது.... அவனை உன் உயிராதானே நினைச்சு உருகற.... இதான் நீ என்னை புரிஞ்சுகிட்ட லக்ஷணமாக்கும்... ரொம்ப நல்லா இருக்கு” என்று குமுறிவிட்டு கோபத்துடன் அந்தப்புறம் திரும்பி படுத்துக்கொண்டான்.


No comments:

Post a Comment