Friday 28 September 2018

ENGIRUNDHO VANDHAAN - 8


நான் ஏன் கேட்கக் கூடாது.... நாளைக்கு நமக்கு கல்யாணம் ஆகணும் ஞாபகம் இருக்கட்டும்என்று போட்டுடைத்தாள்.
என்னது, கம் அகேயின்... நான் உங்கள பண்ணிக்கப்போறதா யார் சொன்னா.... நோ வே.... அந்த எண்ணத்த நீங்களும் மாத்திக்கறது உங்களுக்கு நல்லதுஎன்றான் அதிர்ந்து போய் தன் தாயைக் கண்டு.
என்னம்மா இதெல்லாம்என்று குற்றம் சாற்றியது அவன் கண்கள். விசாலம் தலை குனிந்தார் .
நீங்க இல்லைனா எனக்கு நூறு மாப்பிள்ளை... எனக்கு வேற ஆளா இல்லை.... நீங்களும் உங்க பழங்கால புத்தியும்.... ஏதோ உங்கம்மா சம்பந்தம் பேச வந்தாங்களேன்னு நாங்களும் பேசினோம்... ஐ டோன்ட் கேர்என்று கத்தினாள்.

குட்.... ரொம்ப நல்லது ...அந்த எண்ணத்தோடவே நாளை காலை ஊரைப்பார்க்க  கிளம்புங்கஎன்று கும்பிட்டான். தன் தாயின் பக்கம் திரும்பிகூட பார்க்காமல் மேலே ஏறிச்சென்றுவிட்டான். மனதை அமைதிப் படுத்தித் தூங்கும்போது நள்ளிரவு தாண்டி இருந்தது.

அடுத்த நாள் காலையிலேயே தனது கோபத்தையும் ஆத்திரத்தையும் பல வழிகளில் காண்பித்தபடி ஆங்காரமாக கத்திவிட்டு தன் சாமான்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள் சுவாதி. அன்றும் காலை உணவு உண்டேன் என்று பேருக்கு உண்டுவிட்டு தாயிடம் ஒன்றும் பேசாது ஆபிஸ் கிளம்பிவிட்டான் திலீப். நொந்து போனார் விசாலம்.

‘அப்படி என்ன தப்பு பண்ணீட்டேன்... எம் பிள்ளை என்னை வெறுத்துட்டானே... அந்தப் பிடாரியை நானா வரச் சொன்னேன்.... அவளா வந்தா ஆட்டம் போட்டா... கிளம்பீட்டா.... அதுக்கு நான் என்ன செய்ய முடியும்’ என்று புலம்பி தீர்த்தார். மனம் அமைதி இல்லாமல் அலைபாய்ந்தது.

அதற்குமேலும் பொறுக்க முடியாமல் அன்று மாலை திலீப் வந்ததும் பேச முயன்றார்.
“என்னம்மா பேசணும்.... எனக்கு பின்னாடி நீ நாடகம் நடத்தறியே, என்னை உன் வழிக்குக் கொண்டுவர.... அதுமட்டும் நியாயமா மா இன்னும் என்னமா பேசணும்?” என்றான் ஆற்றாமையோடு.
“இல்லைடா ராஜா, நிஜம்மா சொல்றேன், என்னை நம்பு.... அன்னிக்கி என்னிக்கோ நான் உனக்காக ராவ் பகதூர் வீட்டுல சம்பந்தம் பேசினது உண்மை.... நீ வேண்டாம்னு மறுத்ததும் நான் மேற்கொண்டு எந்த ஸ்டெப்பும் எடுக்கலைபா.... சத்தியம்.... முந்தா நாளு அவங்களாவே தான் கூப்பிட்டு இங்க ஒரு வேலையா வரோம் வீட்டுக்கு வரப்போறோம்னு சொன்னாங்க.... மரியாதைக்காக சரி வாங்கன்னு சொன்னேன்..... வந்தவங்க இந்த பிசாசை நம்ம தலையில கட்டீட்டு போவாங்கன்னு நான் நிச்சயமா எதிர் பார்க்கலை..... அவளப் பார்த்து கொஞ்ச நேரம் பேசி பழகினதுலேயே எனக்கு அவ அடங்கா தனம் பார்த்து பிடிக்காம போயிடுச்சு..... உன்னை நான் அவளோட முடிச்சு போடவே இல்லைடா ராஜா என்னை நம்பு” என்று அழுதார்.
“சரி மா, விடு விட்டுத்தள்ளு” என்று அணைத்துக்கொண்டான்.

“நான் இனிமே உன்கிட்ட கேட்காம எதுவும் செய்ய மாட்டேன்டா... ஆனா நீ மட்டும் அம்மாகிட்ட பாராமுகமா இருக்காதேடா.... எனக்கு உன்னைவிட்டா யாருடா இருக்கா” என்று அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.
“ஐயோ அம்மா, என்னம்மா, நான் அப்படி எதுவும் செய்யலை.... போதுமா.... என்னை மன்னிச்சுடு.... ஏதோ அவ மேல இருந்த கோபம் உன்மேல காட்டீட்டேன்..... விடுமா வா சாப்பிடலாம்” என்று அழைத்துச் சென்று சாப்பிட வைத்தான்.
வேறே விஷயங்கள் பேசி சிரிக்க வைத்தான்.
“ராஜா நான் ஒண்ணு கேட்டா கோபிக்க மாட்டியே” என்று துடங்கினார்.
“இல்லைமா கேளு” என்றான்.
“யாரோ ஒரு பெண்ணோட நீ பேசிகிட்டிருந்தே னு அவ சொன்னாளே... யாருப்பா அது?” என்று கேட்டார்.
உடனே முகம் மென்மையாக “மதுதான் மா.... கண்ணனுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை.... அவளுக்கு அவனைவிட்டா இந்த உலகத்தில யாருமே இல்லை..... அதனால் கலங்கீட்டா... அவனை டாக்டர்கிட்ட காண்பிக்க வந்திருந்தா.... நான் வழியில பார்த்தேன்.... கூட இருந்து கூட்டிப் போய் காண்பிச்சுட்டு வந்தேன்.... அப்போதான் இவ எங்களைப் பார்த்தா.... பார்த்தவ மதுவையும் என்னையும் கேவலமா வேற பேசினா” என்றான்.
“ஒ அப்படியா” என்று கேட்டுக்கொண்டார். அது வரையிலும் பிள்ளை மறைக்காது தன்னிடம் உள்ளது உள்ளபடி உண்மையாக பேசுகிறான் எல்லாமும் கூறுகிறான் என்ற சந்தோஷம் உண்டானது.

அத்யாயம் பதிமூன்று
மனம் ஒரு வழியாக கொஞ்சம் அமைதி அடைந்தது. ‘மேலும் நல்லதே நடக்க வேண்டுமே, அந்தப் பெண்ணையே மனதில் வைத்திருக்கிறானே மகன்..... இதற்கு என்ன வழி’ என்று குழம்பிப்போய் கோவிலுக்குப் போகலாம் என்று தீர்மானித்தார் விசாலம்.
அன்று மாலை வினாயகத்தை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார். மனம் அமைதி பெற வேண்டினார். தன் பிள்ளையின் நல் வாழ்வுக்காக வேண்டிக்கொண்டார். கண்கள் கலங்கின. ஒருவேளை நிஜமாகவே அவள் நல்லவளோ என்று ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது.
அன்றோ கோவிலில் ஏகப்பட்ட கூட்டம்... பிரகாரம் சுற்றி வர யார் யாரோ இடித்து தள்ளி நெட்டியதில் கால் தடுமாற விழப் போனவளை யாரோ ஒரு பெண் தாங்கிப் பிடித்து அமர்த்தினாள். கருங்கல் தூணில் கால் கட்டைவிரல் தாக்கியதில் ரத்தம் லேசாக வெளிப்பட்டு கரைகட்டியது. அங்கேயே கோவில் மேடையில் அமர வைத்து தண்ணீர் கொண்டு வந்து புகட்டினாள் அந்தப் பெண்.
“ரொம்ப தாங்க்ஸ் மா” என்றார்.
“இருக்கட்டும் மா.... எங்கியானும் அடிபட்டுதா மா, வலிக்குதா..?” என்று கேட்டாள் ஆதுரத்தோடு அந்தப் பெண்.
“கால் கட்டைவிரல்லதான்...” என முகம் சுணங்கினார் வலியில் விசாலம்.
“ஒ அப்படியா” என காலை தூக்கி சோதித்தாள். “லேசான அடிதான் ஆனா நகம் கொஞ்சம் பிஞ்சிருக்கு, அதான் ரத்தம் வருதுமா. எங்க வீட்டுக்கு வறீங்களா... கட்டு போட்டு அனுபறேன்: என வினவினாள் பிரியமாக.
‘எத்தனை நல்ல பொண்ணு’ என்று எண்ணிக்கொண்டார் விசாலம்.
“இல்லம்மா பரவாயில்லை, போற வழியில்தான் எங்க குடும்ப டாக்டர்... அவர்ட பாத்துகிட்டு போறேன். ரொம்ப தாங்க்ஸ் மா” என்றார் அதுரமாக.

“சரி இருங்கம்மா, நான் தரிசனம் முடிச்சுட்டு வந்து கார் வரைக்கும் கூட்டிகிட்டு போய் விடறேன்” என சென்றாள். விசாலம் பேசாமல் பிரகாரத்திலேயே அமர்ந்தார். சிறிது நேரத்தில் கொழுக் மொழுக் என்ற ஒரு குழந்தை தவழ்ந்து இவளிடம் வந்தது. இவள் மடியில் கை ஊனி எழ முயற்சித்தது.

“அட குட்டி யாரு நீ.... உங்கம்மா எங்கேடா குட்டிப் பையா?” என்று மடியில் தூக்கி வைத்துக்கொண்டார். ‘யார் குழந்தையோ கிருஷ்ண விக்ராகமாட்டமா இருக்கு’ என்று கொஞ்சி முத்தமிட்டார். அதற்குள் அவனைத் தேடிக்கொண்டு வந்துவிட்டாள் அந்தப் பெண்.

“ஒ உங்க கிட்ட இருக்கானா.... சரியான வாலு.... நான் பிரசாதம் வங்கிக்க நின்ன நேரத்துல என்னை ஏமாற்றிட்டு இங்க வந்துட்டான்” என்று சிரித்தபடி அவனை வாரி அணைத்துக்கொண்டாள். செல்லமாக திட்டவும் செய்தாள்.

“உம்பிள்ளையா, அப்போவே உங்கிட்ட இல்லியே? என்றார் அவர்.
“ஆமா, பக்கத்துவீட்டு அக்காவோட கோவிலுக்கு வந்தேன்... இவன் அவங்ககிட்ட இருந்தான்” என்றாள்.
“இப்படிதான் அம்மாவ தவிக்க விடறதா... நான் எவ்வளோ பயந்து போனேன் டா கண்ணா” என்று அவன் மூக்கை செல்லமாக நிமிண்டினாள். அது கெக்ககே என்று சிரித்து மயக்கியது.
“மாயக்கண்ணன் டா நீ” என்று சேர்த்தணைத்துக்கொண்டாள்.
இதை அனைத்தையும் கண்ட விசாலத்திற்கு மனம் ஏங்கியது.
‘நானும் என் பேரப் பிள்ளையை எப்போது இப்படி எடுத்துக் கொஞ்சுவேனோ’ என்று.
“இப்போ கொஞ்சம் தேவலையா ஆண்ட்டி?” என்று கேட்டாள்.
“ஆமாம் மா உனக்கு ரொம்ப தாங்க்ஸ்... உன் பேர் என்னம்மா?” என்று கேட்டார்
“மதுவந்தி ஆண்ட்டி” என்றாள்.
‘மதுவா! இவள் அவளோ,’ என்ற சந்தேகம் தோன்றியது.
“போலாமா மா, உன் வீடு எங்க.... நான் உன்னை உங்க வீட்டுல விட்டுட்டு போகட்டுமா?” என்று கேட்டார்.
“வேண்டாம் ஆண்ட்டி.... நான் போய்குவேன்... அக்கா வேறே காத்திருக்காங்க.. வீடு பக்கம்தான்.... நான் கார் வரை வரேன் வாங்க” என்று கண்ணனை இடது தோளில் சாய்த்துக் கொண்டு வலது கையால் விசாலத்தை அணைத்து கூட்டிச் சென்றாள்.

கார் அருகே வர நாயகம் பார்த்துவிட்டு “என்னம்மா?” என்று ஓடி வந்தார்
“ஒண்ணுமில்ல நாயகம், கால்ல கொஞ்சம் அடிபட்டுடுச்சு, அவ்ளோதான்” என்றார் விந்தியபடி வண்டியில் ஏறியபடி.

“என்ன நாயகம் அங்கிள். எப்படி இருக்கீங்க... என்னை நினைவு இருக்கா?” என்று புன்னகையோடு கேட்டாள்.
“ஆமாம் மா நல்லா நினைவு இருக்கு... நான் நல்லா இருக்கேம்மா நீ எப்படி இருக்கே?” என்று கேட்டார் அவர்.
“நானும் நல்லா இருக்கேன் அங்கிள்” என்றாள்.
“ஏன் நாயகம் உனக்கு இவளத் தெரியுமா?” என்று கேட்டார் விசாலம்.
அவரின் சந்தேகம் இப்போது தீர்ந்தே போய்விட்டது. ஆனாலும் தெரிந்துகொள்ள வேண்டி கேட்டார்.
“இவங்கதான் மா நம்ம தம்பிக்கு அன்னிக்கி மழை நாளுல அடைக்கலம் தந்தவங்க” என்றார்.
மது “ஏன் அங்கிள் இவங்க....?” என்று இழுக்க
“இவங்கதான் மா அன்னிக்கி நீங்க உதவி செஞ்சீங்களே திலீப் சாருடைய தாயார்”  என்றார் நாயகம்.
மதுவிற்கு தூக்கிவாரிப் போட்டது இவர் திலீபனின் தாயா.... ஐயோ கடவுளே என்ன நினைத்தாரோ.... என்னைப்பற்றி திலீப் கூறி இருப்பாரோ என்னமோ” என்று பயந்தாள்.
‘ஹ்ம்ம்’ என்று பெருமூச்சு எறிந்துவிட்டு காரில் மெல்ல ஏறி அமர்ந்தார் விசாலம்.
“வரேன் மதுவந்தி, வீட்டிற்கு வா ஒரு நாள்... இதுதான் விலாசம்” என்று தன் பேகிலிருந்து கார்டை எடுத்துத் தந்தார்.
“கண்டிப்பா வரேன் ஆண்ட்டி” என்றாள்.
“த பாரு, வரும்போது இந்த சுட்டிப் பயலையும் கூட்டிகிட்டு வா” என்று கண்ணனின் கன்னத்தை வழித்து முத்தம் குடுத்தார் விசாலம்.
“சரி” என்றாள்.
“போலாமா நாயகம்?” என அவரும் சரியென வண்டியை எடுத்தார்.

‘இந்தப் பெண்தான் அந்தப் பெண்ணா பார்த்தாள் ரொம்பவே நல்லவளா இருக்கா... நான் யாருன்னு தெரியாதபோதும் தானே வலிய வந்து உதவினாளே.... திலீபன் சொன்னது உண்மைதான்.... ஆனாலும் அந்தக் குழந்தை... எப்படி.... மணமாகாமல் பிறந்ததா... இல்லை கணவன் இறந்துவிட்டானா’ என்று குழம்பினாள்.
“நாயகம் இந்தப்பொண்ணு...” என்று இழுத்தார்.
“ஆமாங்க மா அதே மது தானுங்க..... ரொம்ப நல்ல மாதிரிங்க” என்று அவரும் புகழ்ந்தார். “ரொம்ப உதவி குணமுங்க” என்றார்.
“உனக்கெப்பிடித் தெரியும்?” என்று கேட்டார்.
“அன்னிக்கி நம்ம தம்பிக்கு உதவிச்சுங்களே இன்னிக்கி உங்களுக்கு உதவிச்சு.... பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தானுங்களே” என்றார் அவர் அது சரிதான் என்றார் விசாலம்.
மனம் குழம்பியது. வீட்டிற்குச் சென்று மகன் வந்திருப்பதைக் கண்டார்.
“என்னம்மா இத்தனை நேரம் எங்க போயிருந்தே, கால்ல என்னாச்சு, ஏன் இப்படி நடக்கற” என்று பதறினான் கவலையாக.
“கோவிலுக்குதான் போனேன் வேறெங்க போவேன்.... என் மனக் குமறலை அங்க போய் கொட்டீட்டு வந்தேன்... ஒண்ணுமில்ல கொஞ்சம் கும்பல்ல இடிச்சு அடிபட்டுடுச்சு. கட்டுபோட்டாச்சு டாக்டர்ட” என்றார்.
“ராஜா இங்க வா, எம் பக்கத்துல உக்காரு” என்றார்.
“என்னம்மா?” என்றான் பயந்தபடி அம்மா திரும்பவும் மதுவைப் பற்றி ஏதேனும் இழிவாக பேசுவாளோ என்று.
“அந்தப் பொண்ணு மது..... அவளப் பற்றி என்னமோ சொல்றேன்னு சொன்னியே சொல்லு” என்றார்.
“அம்மா!” என்றான் ஆச்சர்யமாக.
“சொல்லுடா” என்றார்.
“அம்மா மதுவுக்குனு யாருமே இல்லை இந்த உலகத்துல... என்று ஆரம்பித்து மொத்தக் கதையும் சொல்லி முடித்தான்.
கண்கள் ஆச்சர்யத்தில் விரிய ‘இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணா’ என்று பிரமித்தார் விசாலம்.
“நீ சொல்றதெல்லாம் நிஜமாடா ராஜா?” என்று கேட்டார் நம்ப முடியாமல்.

“ஆமாம் மா நீ கேட்டியே அவ சொன்னா நம்பீடறதானு.... அப்படி நானும் முழுமையா அவளை மட்டுமே நம்பி பேசலை மா..... அந்த வக்கீல் கிட்டதான் மொதல்ல உண்மைய தெரிஞ்சுகிட்டேன்..... பின் பூரணி அம்மாகிட்டயும் போய் கேட்டு உள்ளது உள்ளபடி தெரிஞ்சுகிட்டேன்.... அப்போகூட அவ மேல ஏதானும் தப்பிருக்கும்னு நினைத்து கேட்கல, அவளோ தன்னைப் பற்றி ஒண்ணுமே சொல்லிக்கறதில்லை. அவங்க மூலமாவானும் தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன்.
கடைசீயாகதான் மதுவிடம் பேசினேன்.....
தன்னால் யாரையும் திருமணம் செய்துகொள்ள முடியாதுனு தான் அழுதா..... கண்ணனுக்கு தாயா இருக்கறது மட்டும்தான் அவ வாழ்க்கைன்னு சொன்னா..... நாந்தான் பேசி பேசி கரைச்சேன்..... இன்னமும் அவ முழுமையாக மனம் மாறலை..... நீ என்ன சொல்லுவியோ.... கண்ணன் மேல இருக்கிற அன்பு முக்கியத்துவம் மணமானா மாறீடுமொன்னு இன்னமும் அவளுக்குள்ளே பயம் இருக்கு... அதான் தயங்கறா” என்றான்.

இப்போது விசாலத்தின் கண்கள் பனித்தன. ஒரு பெண்ணுக்கு வாழ்வில் என்னெல்லாம் சோதனைகள் கடவுளே என்று எண்ணிக்கொண்டார்.
“ஹ்ம்ம் சரி ஏண்டா அவ நம்பர் இருக்கா உன்கிட்ட?” என்று கேட்டார்
“ஏன்மா எதுக்கு?” என்றான் பயந்துபோய்.
“ஏண்டா, நான் உனக்குத் தெரியாம பேசி கெடுத்துடுவேன்னு பயப்படறியா?” என்றார் அடிபட்டவர் போல.
“இல்லைமா அப்படி இல்லை” என்றபடி அவளின் நம்பரை கொடுத்தான்.
“நீ போ, உன் வேலையப் பாரு” என்றார்.
திலீப்புக்கு இரவு தூக்கம் போனது ‘அம்மா எல்லாமும் ஏன் கேட்டார், இப்போது நம்பரை ஏன் வாங்கினார்.... என்ன நடக்கின்றது’ என்று குழம்பினான்.
அடுத்த நாள் அவன் வெளியேறியபின் விசாலம் மதுவின் நம்பரை அழைத்தாள். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மது எடுத்தாள்.
“ஹெலோ சொல்லுங்க யாரு?” என்றாள்.
“மது இது நாந்தான் விசாலம், திலீபன் அம்மா பேசறேன்” என்றார்.
மதுவிற்கு தூக்கிவாரிப் போட்டது “சொல்லுங்க ஆண்ட்டி, கால் எப்பிடி இருக்கு?” என்று கேட்டாள் திணறிக்கொண்டு.
“நான் நல்லா இருக்கேன்... நீ எப்பிடி இருக்கே.... சுட்டிப் பயல் எப்பிடி இருக்கான்.... எப்போ நம்ம வீட்டுக்கு வரே?” என்று கேட்டார்.
“கண்டிப்பா வரேன் இப்போ நான் கிளாசிலே இருக்கேன் பேச முடியாது..... அடுத்த அரை மணியில கிளாஸ் முடிஞ்சுடும்... நானே உங்கள இந்த நம்பர்ல கூப்பிடட்டுமா ஆண்ட்டி?” என்றாள் மரியாதையுடன்
“ஒ அப்படியா, சாரி எனக்கு தெரியல.... டிஸ்டர்ப் பண்ணீட்டேன்... நீ அப்பறமா கூப்பிடு, சரி வைக்கறேன்” என்று கட் செய்தார்.
பின்னோட் அரை மணியில் மது அழைத்தாள்.
“சொல்லுங்க ஆண்ட்டி” என்றாள்.
“அதான் நீ எப்போ இங்கே வரே?” என்று கேட்டார்.
“வரேன் ஆண்ட்டி... கூடிய சீக்கிரம்” என்றாள். “இன்னும் நாலு நாள்ள எங்க ஸ்கூல் தேர்வுகள் முடிஞ்சு லீவ் விட்டுடுவாங்க ஆண்ட்டி.... அப்போ வரேன்... நான் ப்ரீதான்” என்றாள்.


No comments:

Post a Comment