Saturday 8 September 2018

MANNAVANE AZHALAMA - 8


“என்ன வேணும் இப்போ, நான் யாருக்காக அலங்காரம் பண்ணிகிட்டு வாழணும்..... கவனிக்க வேண்டியவங்களுக்கு என்னைப் பார்க்க, ரெண்டு வார்த்தை அன்பா பேசக்கூட நேரமில்லை” என்று சுள் என்று விழுந்தாள். ஏதோ சரி இல்லை என்று தோன்றியது.

“என்னப்பா இது, அவ இப்படி இருக்கா, நீ அவளை கவனிக்கவே இல்லையா... நான் கொஞ்ச நாள் கொண்டுபோய் வைத்து பார்த்துக்கறேனே என் மகளை...” என்று கேட்டுக்கொண்டார் மருமகனிடம்.

“ஏன் மொத்தமாகவே வெச்சுக்குங்களேன் உங்ககிட்டேயே” என்றான் எகத்தாளமாக.
“அவ என்ன என்னோடையா குடித்தனம் பண்றா, எப்போ பாரு உம்முன்னு ஒரு மூஞ்சி, விட்டா அழுகை , இல்லேனா ஏதோ சோகம்னு தானே வாழறா.... ஒரு சிரிப்புண்டா குலாவல் உண்டா, ச்சே வெறுத்து போச்சு.... இதுல குழந்தை ரோதனை வேற, அதுவும் பெண் குழந்தை.. தூ வெட்கம்.... என் மரியாதை என்னாவது... ஒரு பிள்ளையை பெற்றுகொடுக்க துப்பில்லை” என்று மோசமாக பேசினான். 

தப்பு செய்துவிட்டோம் என்று அறிந்தார் சிங். அவளை உடன் அழைத்துக்கொண்டு பேத்தியுடன் டெல்லிக்கு வந்தார்.

அங்கே சென்று ஓரளவு உடல் தேறினாள் விந்தியா. அங்கு இங்கு அழைத்துச் சென்றார். பேத்தியுடன் விளையாடினார். பின்னோடு அவளை அம்ரித்சரில் கொண்டுவிட்டு விட்டு அவள் கணவனிடம் பேசினார்.

“பாரு அர்ஜுன், நீ ஒரு வாரம் லீவ் போடு.... குழந்தைய நான் பாத்துக்கறேன்..... பிரசவம் முடிந்த கையோடு அவளையும் குழந்தையையும் கவனிக்கக் கூட நீ அருகே இல்லை..... அந்த ஆதங்கம்தான் அவளை திங்கறதுனு எனக்கு தோணுது.... ஸ்பென்ட் டைம் வித் ஹர்.... அவள் பாவம்..” என்றார் ஒரு தந்தையாக. 

அவர் சொல்வதனால் அவனும் முரண்டு பண்ணாமல் அழைத்துச் சென்றான்.
மிதமான தட்பவெட்ப நிலை என்பதால் மூன்று நாட்கள் சிம்லா போய் வந்தான். 

அங்கே சென்று சுற்றியபின் விந்த்யாவுக்கு கொஞ்சம் முகம் தெளிந்தது. ஓரளவு அவனுடன் முகம் கொடுத்து பேசத் துவங்கினாள். இடது கையால் விந்த்யாவையும் அணைத்தபடி சிம்லாவின் சுகமான குளிரில் நடந்தான். அவனை ஒட்டி அவன் தோளோடு சாய்ந்துகொண்டு நடந்தபடி ஓரளவு ஒற்றுதலுடன் பழகினாள். கொஞ்சம் மனம் லேசானது விந்த்யாவிற்கு.

ஆனந்தமாக நாட்களை கழித்துவிட்டு ஊர் திரும்பினர். வந்தபின்னும் பழைய நாட்கள் போல அவ்வளவு மோசமாக பேசாமல் நடத்தாமல் இருந்தான் அர்ஜுன். ஓரளவு உள்ளமும் உடலும் தேறியது விந்த்யாவிற்கு.

அப்போதுதான் கனிகாவிற்கு பத்து மாதங்கள் ஆகி இருந்தன. அந்த நேரத்தில் எதிர்பாராமலே விந்தியா மீண்டும் உண்டானாள். முதலில் இருவருமே அதிர்ந்தனர். 

பின் தேற்றிக் கொண்டனர். பெற்றுக்கொள்வோம் என்று அர்ஜுன் முடிவு செய்தான்.... படப்போவது அவள்தானே... டாக்டர்ஸ் கொஞ்சம் ரிஸ்க் உண்டு என்று வேறு கூறி இருந்ததால் படுக்கையிலேயே முடிந்தும் முடியாமலும் தன் பேறு கால நாட்களை கழித்து நிதினை சிசேரியன் மூலமாகத்தான் பெற்றேடுத்தாள் விந்தியா. அந்த சிசேரியனும் கூட கொஞ்சம் சிக்கலுடனேயே நடந்தது. அதன் பின் அவளுக்கு குழந்தை பிறப்பது கடினம் என்று கூறிவிட்டார் அவளது மகப்பேறு மருத்துவர்.

சரி இரண்டு பிள்ளைகள் உள்ளார்களே என்று தேற்றிக்கொண்டாள். மகன் பிறந்துள்ளான் என்பதே போதுமானதாக இருந்தது அர்ஜுனுக்கு. போன முறை போல் இந்த முறை அவன் விட்டேத்தியாக இல்லாமல் அக்கறையுடன் அவளை கவனிக்க முயன்றான்... அசலே கடினமானதொரு அறுவை சிகிச்சைக்கு பின் பிழைத்தெழுந்துள்ளாள் என்று அவளுடனே நேரம் செலவழித்தான்.

ஆனால் முதல் வாரத்திலேயே அவளிடம் பலத்த மாறுதல்கள் கண்டான். 

எல்லாவற்றிற்கும் கோவம் வந்தது. அப்படி கோவம் வந்தபோது கையில் கிடைத்ததை எடுத்து யார் என்றும் பார்க்காமல் விட்டெறிந்தாள். ஆத்திரமும் கோவமுமாக இருக்க அவளை அமைதி படுத்தவென மருந்துகள் குடுக்கப்பட்டன. 

வீட்டிற்கு அழைத்து வந்தான். அவள் போட்ட சத்தத்தில் கனிகா பயந்து ஒடுங்கினாள். தாயின் அருகே செல்லவே பயந்தாள்.


அவ்வப்போது இப்படி விந்தியா தன்னை மறந்து, சின்னச் சின்ன விஷயங்களுக்கும் கூட பெரிதாக சண்டையிட்டாள்.
“இன்னிக்கி சீக்கிரமா வரச்சொன்னேனே ஏன் லேட்டா வந்தீங்க?” என்றாள்.
“இல்லை, சாரி மறந்துட்டேன், வேலை நிறைய....” என்றான் 

“என்னது, ஏன் மறந்து போச்சு... நான் ஒருத்தி வீட்டுல இருக்கறதானும் நினவு இருக்கா, இல்லை அதுவும் மறந்து போச்சா..... அப்படி என்ன வேலை..... இல்லை ரெண்டு பிள்ளை பிறந்து நான் அவங்களோட பிசியாகிட்டேன்னு யாரானும் அழகா இளமையா வேற ஒரு பெண்ணை பார்த்துகிட்டீங்களா?” என்று கத்தி தீர்த்தாள்.
“வினு என்ன பேசறே, யோசிச்சு பேசு..... அதுவும் கனிகா முன்னாடி..” என்று அடக்கினான். 

“நான் ஏன் யோசிக்கணும்..... நீங்க யோசிங்க, என்னைப் பற்றின கவலை கொஞ்சமானும் இருக்கா..... பிள்ளைங்களை பற்றின அக்கறை இருக்கா?” என்று மேலும் ஆத்திரமானாள். சிசேரியன் உடம்பு என்பதால் அவளை மேலும் கத்த விடாமல் அமைதிப் படுத்த மருந்து கொடுத்து தூங்க வைத்தான்.

அடுத்த நாள் விழித்தபோது எதுவுமே நடக்காததுபோல இருந்தாள். அவனிடம் அன்பாகப் பேசி பழகினாள். கனிகாவிற்கு காலை உணவு ஊட்டினாள். பிள்ளைக்கு பாலூட்டி குளிக்க வைத்து என்று நார்மலாக அன்பான தாயாக நடந்து கொண்டாள்.

இரு நாட்கள் அமைதியாக செல்ல அடுத்த நாள் மீண்டும் கனிகா அவளிடம் சாப்பிட வர மாட்டேன் என்று கூறியதே போதும் என்று அவளை குழந்தை என்றும் பாராமல் அடித்து திட்டி கோபித்துக்கொள்ள கனிகா ஒ வென்று அழுதபடி வெளியே ஓடிவிட்டாள். வேலைக்காரி அவள் பின்னே ஓடிச்சென்று அவளை பிடித்து அழைத்து வந்து, கொஞ்சி கெஞ்சி சாப்பிட வைத்து தூங்க வைத்தாள்

“நீ யாரு என் குழந்தைக்கு சாப்பாடு போட, தூங்க வைக்க..” என்று அவளை ஒரு அரை விட்டாள் விந்தியா. அவளின் மன உடல் நிலை தெரியும் என்பதால் அவளும் அதை இயல்பாக எடுத்துக்கொண்டாள். இவை அனைத்தையும் அறிந்த அர்ஜுனுக்கு கவலையானது. அவளின் மகப்பேறு மருத்துவரை தனிமையில் கண்டு விவாதித்தான்.

 இந்த வாரத்தில் நடந்தவற்றை விரிவாக கூற அவரும் யோசனையானார். பின் அவளை ஒரு மானோதத்துவ நிபுணரிடம் கூட்டிச் செல்லும்படி கோரினார்.

“என்ன சொல்றீங்க டாக்டர்?” என்று அதிர்ந்தான். 

“இதுல கவலைப்பட ஒண்ணுமில்லை மிஸ்டர் அர்ஜுன், சில பெண்களுக்கு பேறு காலத்தின்போது இது போன்ற தடுமாற்றங்கள் வரும்.... அதை நாம உடனே கவனிச்சுடணும்... இல்லைனா அது சீரியசாயிடும்..... பேறுகாலத்தில் அவங்க ஹார்மோன்ஸ் மேலும் கீழுமா மாறுதல்களோட இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் ரொம்ப சுலபமா இது போன்ற மன நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.... இதில் கவலைப் படவோ பயப்படவோ எதுவும் இல்லை..... நீங்க அழைச்சுகிட்டு போய் காமிங்க, அவங்க இப்போவே இதுக்கு தகுந்த சிகிச்சை குடுப்பாங்க..... அதை சில மாதங்கள் சரியா எடுத்துகிட்டு வந்தா ஷி வில் பி பைன்” என்று தைரியம் கூறினார் அவர்.
அதுவே போதும் என்று அவளை பிள்ளைகளுடன் டெல்லியில் கொண்டுவிட்டான்.
“த பாருங்க அங்கிள், உங்க பெண்ணைப் பற்றி எல்லாம் தெரிஞ்சும் நான் கல்யாணம் பண்ணிகிட்டேன்.... ஆனா இப்போ மூர்கமா நடந்துக்கறா, அடிக்கறா கத்தறா, பிள்ளைங்க பயப்படறாங்க.... எனக்கே பயமா இருக்கு.... இவளுக்கு பைத்தியம்னு வேற டாக்டர் சந்தேகப்படுகிறாரு.... எனக்கு இந்த வினையே வேண்டாம்.... எனக்கு உங்க மகளை கட்டியதிலிருந்து வாழ்க்கையில் நிம்மதியே இல்லை... நீங்களாச்சு உங்க மகளாச்சு.... அவ சுய நினைவுல இருக்கும்போதே நான் அவளிடம் நயமா பேசி விவாகரத்து பத்திரத்தில் கை எழுத்து வாங்கீட்டேன்.... போதும், என்னை விட்டுடுங்க.... இனி அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.... ஆளை விடுங்க” என்றுவிட்டு போய்விட்டான். 

திக்ப்ரமை பிடித்து நின்ற சிங் அப்படியே கீழே சாய்ந்தார். அந்த நிமிடமே அவர் உயிர் பிரிந்தது.

தன் வீட்டில் தந்தை உயிர் நீத்து கிடக்க, பிள்ளைகள் அழுது நிற்க, தன் நிலை அறியாது ஏதோ ஒரு உலகத்தில் இருந்தாள் விந்தியா. அக்கம் பக்கத்தோர் சிங்கின் கடைசி சடங்குகளை முடித்து அவளுக்கும் குழந்தைகளுக்கும் உணவளித்து பார்த்துக்கொண்டனர்.

ஒருவாறாக தங்களது புதிய கம்பனியை நிறுவி வெள்ளோட்டம் முடித்து சில பல ஆர்டர்களும் பிடித்து சீராக அது நடக்கத் துடங்கிய நேரத்தில் தருண் இதைப் பற்றிக் கேள்விப்பட்டான்.

துடிதுடித்துப் போனான். உடனே அவளை காண அவளிடம் ஓடிச் சென்றான். அவனை யாரென்றும் அறியாத நிலையில் பிதற்றியபடி அமர்ந்திருந்தாள். அந்நாட்களில் தான் அநாதரவான மேரியை கண்டெடுத்து தன்னையும் தன் வீட்டையும் பராமரிக்க என வேலைக்கு வைத்திருந்தான் தருண்.

குழந்தைகளை கூட்டிக்கொண்டு வந்து வீட்டில் மேரியின் பொறுப்பில் விட்டான். உடனடியாக விந்த்யாவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்.

அப்போதுதான் முதன் முறையாக டாக்டர் கன்னா அறிமுகமானார். அவரிடம் பேசினான். அவர் சில டெஸ்ட்கள் செய்தார். அவளின் மன நிலையை அறிய பல கேள்விகள் கேட்டார். பின் நிதானித்து மருந்துகள் கொடுத்தார். அவளின் நிலை அறிந்து அவளை குணப்படுத்த சிகிச்சைகள் ஆரம்பித்தார். 

“மிஸ்டர் தருண், இப்போவே கொஞ்சம் ஆழமா தான் இறங்கி இருக்கு அவங்க மன நோய்..... நான் ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிருக்கேன், பார்க்கலாம்” என்றார். அவர் சந்தேகத்துடன் கூற கவலையானான் தருண். 

“என்ன டாக்டர்?” என்றான். அவனை தட்டி கொடுத்து, “கவலைப்படாதீங்க தருண் ஜி நான் இருக்கேன்” என்றார்.

வீட்டிற்கு அழைத்து வந்தான். அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான் தருண். தன் புத்தி தெளிந்து இருக்கும்போது, தான் அவன் பங்களாவில் இருப்பதைக் கண்டு தவித்தாள். 

“என்ன இது, நான் எப்படி இங்கே வந்தேன், என்னை இங்க ஏன் கூட்டி வந்தீங்க?” என்று அழுதாள்.

“இல்லைமா நீ அங்க தனியா பார்க்க ஆளில்லாம கிடந்தே, உன்னை அப்படி விட்டுட்டு வர என் மனம் இடம் குடுக்கலைடா” என்றான் அன்பாக.

“ஆனாலும் ஊர் என்ன சொல்லும், என் கணவன் அசலே என்னை சந்தேகப்படும் ஆளு...” என்று மேலும் அழுதாள். 

பக்குவமாக அவள் தந்தை இறந்ததையும் அர்ஜுன் அவளிடம் விவாகரத்து பத்திரத்தில் கை எழுத்து வாங்கியதையும் எடுத்துச் சொனான். அவள் அதிர்ந்து போய் அமர்ந்துவிட்டாள். அதன்பின் எதுவுமே பேசாமல் தன் கூட்டுக்குள் ஒடுங்கிவிட்டாள். அவளை சிறு குழந்தைக்கும் மேலாக பார்த்துக் கொண்டனர் அவனும் மேரியும்.

நார்மலாக இருக்கும்போது பொதுவாக பேசுவாள், உணவு உண்பாள். பிள்ளைகளோடு விளையாடுவாள்.

வெறி வந்துவிட்டால் அவனையே அடித்து கீழே தள்ளி விடுவாள். கனிகா அவள் இருக்கும் இடத்திலேயே நிற்க மாட்டாள். எப்போதும் மேரியுடனோ தனது அறையிலோ தான் இருப்பாள். தருண் தன் பிசினசையும் விட முடியாமல் இவளையும் கவனிக்க முடியாமல் தவியாய் தவித்தான்.

விஜயனுக்கு கொஞ்சம் கோபம்தான்.

“ஏண்டா, இது உனக்கு தேவையா, அவ நிலை தெரிஞ்சும் அவளை ஏன் உன் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தே, ரெண்டு சின்னக் குழந்தைங்க வேற.... ஏதானும் ஆசிரமத்தில் சேர்த்திருக்கலாமேடா,... உன்னால முடியுமா இவங்க மூணு போரையும் பார்த்துக்கொள்ள... வினுவின் மன நிலை வேற இவ்வளோ மோசமா இருக்குது..... போதும்டா விட்டுடு” என்று மன்றாடினான்.

“இல்லை விஜி, என்னால என் வினுவ அப்படி விட முடியாது.... பெற்றோரும் இறந்து போய்ட்டாங்க, கட்டினவனும் போதும்னு விவாகரத்து செய்துட்டு தெருவில விட்டுட்டு போய்ட்டான்.... ஆனா என்னால அவளையோ அவ பிள்ளைகளையோ அப்படி விட முடியாது விஜி.... இனி அவங்க என் பிள்ளைங்க.... நான் அவங்கள ஆதிகாரபூர்வமா ஸ்வீகாரம் எடுத்துக்கப் போறேன்... நான் வளர்ப்பேன் அவங்கள.... நல்லா படிக்கச் வெச்சு ஆளாக்குவேன்.... வினுவ முடிஞ்ச அளவு சிகிச்சை செய்து சரியாக்குவேன்” என்றான் அமைதியாக.. தெளிவாக.

“நல்லா யோசிச்சுகிட்டியா தருண்?” என்றான். 

“ஆம், இதில் மாற்றம் ஏதுமில்லை” என்றான் தருண். 

“அப்போசரி, நீ எடுத்த முடிவுல நில்லு, என்னால முடிஞ்ச உதவிகள உனக்காக நான் செய்யத் தயாரா இருக்கேன்” என்றான் விஜயன்.

அடுத்து வந்த நாட்களில் வேண்டிய ஏற்பாடுகள் செய்து கனிகாவையும் நிதினையும் முறைப்படி தத்து எடுத்துக் கொண்டான் தருண். கனிகாவிற்குக் கூட தன் தந்தை என்று அர்ஜுனை சிறிதளவும் ஞாபகம் இருக்கவில்லை. இங்கே வரும்போது நிதினோ கை குழந்தை. அதனால் அவனை முதலிலிருந்தே டாடி என்றே அழைத்துக்கொண்டனர் இருவரும். தருணுக்கு ஒவ்வொரு முறை அவர்கள் அப்படி அழைக்கும்போதும் நெஞ்சம் விம்மும். “என் பிள்ளைகள்” என்று இரு புறமும் அணைத்துக் கொள்வான்.

அந்த நேரத்தில், ஆண் குழந்தை நிதினை தன்னுடன் அனுப்பும்படி அர்ஜுன் தருணை தேடி வந்து சண்டையிட்டான்.

“ஓஹோ, அவ எப்போ திரும்பி வருவான்னு காத்திருந்து, அவளை உன் வீட்டுக்கே கூட்டி வந்து வெச்சுகிட்டு குடித்தனம் பண்றியா, வெக்கமாயில்லை உனக்கு,... அப்போ ஒரு வேளை, அவள் என்னிடம் பைத்தியம் போல நடித்தாளோ, உன்னிடம் வரவேண்டும் னு..” என்றான் அசிங்கமாக. 

“போதும் வாய மூடு, இப்போ உனக்கு என்ன வேணும், அத மட்டும் சொல்லு” என்றான் தருண் கோபமாக.

அர்ஜுன் வந்த நேரத்தில் அவன் வீட்டில் இருக்கவில்லை. வந்தவன் நேரே மேரியை இடித்து தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து நிதினை தூக்கப் போக மேரி செக்யுரிடியை அழைத்து அவனை தடுத்தாள். வினுவையும் குழந்தைகளையும் ஒரு அறையில் வைத்து வெளியே தாளிட்டாள். உடனே சமயோசிதமாக தருணுக்கு அழைத்தாள். பறந்தோடி வந்து பார்த்தால் அர்ஜுன்... அவனின் அட்டகாசத்தில் அனைவரும் பயந்து போயிருந்தனர்.

“நிதின் என் மகன், என்னிடம்தான் வளரவேண்டும்” என்று கத்தினான். 

“உன் மகன்னு அவங்கள நிராதரவா விட்டுட்டு ஓடினியே, அப்போ நினைவில்லையா, பெண்டாட்டி வேண்டாம், பெண் குழந்தை வேண்டாம், மகன் மட்டும் வேண்டுமோ, முடியாது..... நீ எப்போ வினுவ விவாகரத்து பண்ணிட்டியோ அதுக்கு மேல அவ குழந்தைகளோட உனக்கு எந்த ஓட்டும் உறவும் கிடையாது..... நான் முறைப்படி அவங்கள தத்து எடுத்துகிட்டேன்.... நீ போகலாம்” என்று தருணும் மிரட்டினான்.

தருணை தள்ளிவிட்டு தாளிட்ட கதவினை பலவந்தமாக திறந்து அவன் நிதிநி தூக்க, அர்ஜுனின் முரட்டு தாடி மீசை உருவம் நிதினை பயப்பட வைத்தது. ஒரு வயதே தாண்டி இருந்த நிலையில் அவனின் உருவம் கண்டு பலமாக அழத் துவங்கினான் நிதின். 

சுதாரித்து எழுந்து சட்டென உள்புகுந்து நிதினை பிடுங்கி மேரியிடம் தந்தான். அவனை மேரி தன்னோடு அணைத்து சமாதானப் படுத்தினாள். அர்ஜுனை நெட்டி தள்ளிகொண்டுபோய் வாசலில் விட்டான்.

பலவாறு மிரட்டிப் பார்த்தான் அர்ஜுன். தெரிந்த போலிஸ் கான்ஸ்டபிளை கூட்டி வந்தான். 

“பாருங்க சார், நிதின் சின்னக் குழந்தை, தாயின் அரவணைப்பில்தான் அவன் இருக்கணும்..... இவங்க யாருமே வேண்டாம்னு முரிச்சுகிட்டு போய்ட்டாரு இந்தாளு. நான் பிள்ளைங்களை முறைப்படி ஸ்வீகாரம் எடுத்துகிட்டேன்.

நல்ல வார்த்தை சொல்லி இந்த ஆள அழச்சுகிட்டு போங்க” என்று எடுத்துச் சொன்னான் தருண். எந்த சொல்லும் எடுபடவில்லை என்றதும் அர்ஜுன் பேசாமல் பின்வாங்கினான்.


விந்தியா கூட தெளிவாக இருந்த நேரத்தில் கேட்டாள்,
“என்ன இது தரு, பிள்ளைங்க உங்களை டாடின்னு கூப்பட்றாங்களே?” என்று. “ஆமாம் வினு, நான் அவங்களை முறைப்படி தத்து எடுத்துகிட்டேன் மா.... உன்னிடம் கூட அன்றொருநாள் சொன்னேனே வினு” என்றான். 

“ஒ சொன்னீங்களா இருக்கும், எனக்குதான் மனது சரியில்லையே.... உங்களுக்கு எதுக்கு இந்த சிரமம் தரு..... என்னை கவனிப்பது போதாதுன்னு இதுகளையும் காலம் முழுக்க சுமக்கப் போறீங்கள..... உங்களுக்கு நீங்களே இப்படி தலைக்கு மேல பாரம் ஏத்திக்கணுமா தரு?” என்றாள் கண் கலங்க.

“இது சுமை இல்லை, சுகம்.... அதை அனுபவிச்சதுனால சொல்றேன் வினு.... இது இனிமையான சுகம்..... அவங்க என்னை டாடின்னு அழைக்கும்போது எனக்கு எவளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா, அதை கெடுத்துடாதே டா ப்ளிஸ்.... எனக்கு இந்த சந்தோஷமானும் நிலைக்கட்டும்டா?” என்று வேண்டிக்கொண்டான்.

1 comment:

  1. Superb!, Tharunukku enne thyaaga ullam! ippadipatta pillayay petreduthaval nichayamaay puniyavadhidhan.

    ReplyDelete