Sunday 23 September 2018

ENGIRUNDHO VANDHAAN - 4

திலீப்பும் சட்டேன்று போய் குளித்துவிட்டு தன் உடைகளை அணிந்து கொண்டு லுங்கியை அலசி உள்ளேயே காயப் போட்டான். கால் சற்று ஊன முடிந்தது ஆனாலும் மெல்ல, அழுந்த பதியாமல் நடந்து வாசல் படியில் வந்து அமர்ந்தான். அவள் தன் சல்வாரின் காலை மடித்து விட்டு துப்பட்டாவை இழுத்து சைடில் முடிந்து கொண்டு செப்பனிட்டு கொண்டிருந்தாள். சில கீரை பாத்திகள் சாய்ந்திருந்தன. அவற்றை பிடுங்கினாள். சிலவற்றில்  நீர் நிறைந்திருக்க அதை பாத்திவெட்டி ஓடவிட்டாள். பல வண்ண பூக்கள் தலை அசைத்தன. கூடவே கத்திரி, தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை புதினா, கொத்தமல்லி போன்ற செடிகள் வேறு. 


அவன் அவள் கைவண்ணத்தை எண்ணி வியந்தான். அந்த வீட்டின் உள்ளே சுற்றி பார்த்தவரை குளிர் சாதன பெட்டி பேன் கேஸ் அடுப்பு பாத்ரூமில் ஹீட்டர் என சில வசதிகள் இருந்தன. ஆனால் சோபாக்கள் டைனிங் டேபிள் போன்றவை இருக்கவில்லை. அவனுக்கு குழப்பம் அதிகரித்தது.
‘சரி நான் இவற்றை தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறேன் நான் இன்றோ நாளையோ இங்கிருந்து சென்றுவிடுவேன் அதன்பின் இவளை சந்திப்பேனோ இல்லையோ’ என்று எண்ணினான்.
‘ஆனால் இவளை, இந்த மதுவந்தியை மறக்க முடியுமா..... ஒரு கவலையுமற்றவள் போல எப்போதும் சிரித்த முகம்... தெளிவான நேர்மையான முகம்... நேர்கொண்ட பார்வை.. பளிச்சென்ற பேச்சு... தன்னம்பிக்கை... குழந்தை என்று வந்துவிட்டால் அளவு கடந்த பாசம்.... பிறருக்கு உதவும் பண்பு அப்பப்பா இவளின் சிறந்த குண நலன்களை சொல்லிக்கொண்டே போகலாம் போல’ என்று மெச்சிக்கொண்டான்.




அத்யாயம் ஆறு
அவள் சில கீரை கட்டுகளுடன் உள்ளே வந்து கை கால் சுத்தம் செய்து கொண்டு முதலில் கூழ் கரைத்து கண்ணனுக்கு ஊட்டினாள் அவனிடம் மெல்லிய குரலில் பேசியபடியே ஊட்டி முடித்து அவனை விளையாட விட்டுவிட்டு சென்று சமையலை முடித்தாள். இருந்தவற்றை வைத்து கீரை கூட்டும் உருளை வருவலும் ரசமும் செய்திருந்தாள். அவ்வளவு எளிமையான சுவையான உணவையும் அவன் உண்டதில்லை.
“சாப்பிட்டு கொஞ்சம் படுத்துக்கொங்க.... ராத்திரி நிம்மதியா தூங்கல இல்லையா..... கால் வலியில” என்று கூறினாள். ‘பேணுவதில் இவள் தாயேதான்’ என்று எண்ணினான்.
கொஞ்சம் படுத்து எழ, தன் அன்னையின் மூலம் இவள் நம்பர் அறிந்து நாயகம் அங்கிள் அழைத்தார்.
“என்ன தம்பி எப்படி இருக்கீங்க பத்திரமா இருக்கீங்கதானே..... ரோட் சுத்தம் செஞ்சுகிட்டிருக்காங்க. நான் இன்னும் கொஞ்ச நேரத்தில மெக்கானிக்கோட அங்கே வந்துடுவேன் உங்கள அழச்சுகிட்டு போக” என்றார்.
“ஒ வண்டர்புள்.... தாங்க்ஸ் அங்கிள்.... ஆமா நான் நல்லா இருக்கேன் பத்திரமான இடத்தில தான் இருக்கேன்... நீங்க காரை நிறுத்தின நேர் எதிர் வீட்டில தான் அங்கிள், வந்துடுங்க” என்றான் உற்சாகமாக.

போனை வைத்தபின் அவள் அவனையே பார்த்திருப்பதைக் கண்டான். அந்த முகத்தில் என்னவோ இருந்தது. அதில் சோகமா,  ஏமாற்றமா சோர்வா என கண்டுகொள்ள முடியவில்லை திலீபால்.
“போகணும் இல்லையா?” என்று கேட்டாள் மெதுவான குரலில்.
அவளின் குரலின் சோர்வு அவனையும் தாக்கியது.
‘ஐயோ இங்கிருந்து போக வேண்டுமே’ என்று இருந்தது.
‘கண்ணனை இவளை இனி எப்போது காண்பேனோ’ என்று ஏக்கம் உண்டானது.
கண்ணன் இப்போதும் அவன் மடியில்தான் அமர்ந்து கொட்டம் அடித்துக்கொண்டிருந்தான்.
‘ஆம்’ என்று தலை மட்டும் அசைத்தான். அவள் வெறுமனே புன்னகைத்தாள். அதன் வலி அவனை பாதித்தது.
‘இவள் யார் என்னை காக்க வந்த மோகினியா அல்லது தெய்வ உருவா..... என் தாயினும் மேலாக என்னை இந்த இரு நாட்களும் பேணி பார்த்துக்கொண்டாளே.... இவளுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்’ என்று எண்ணித் துவண்டான்.

தன் பர்சிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து கண்ணனின் கையில் திணித்தான். அதைக்கண்டு அவள் அவனைப் பார்த்த பார்வையில் அடிபட்டார் போன்ற உணர்ச்சி தெரிந்தது. ஓடி வந்து அந்த பணத்தை பிடுங்கி அவனிடமே நீட்டினாள்.
“மதுவந்தி, இருக்கட்டும், அது நான் நீ செய்த உதவிக்கு தந்ததாக எண்ணாதே.... நான் கண்ணனுக்கு ஏதேனும் வாங்கித்தர விரும்பி அதை அவனுக்கு என் பரிசாகத் தந்தேன்” என்றான்.
“இருக்கட்டும், அவனுக்கு உங்க அன்பு ஒண்ணு மட்டும் போதும்... இதெல்லாம் வேண்டாம்” என்று கண்ணனைத் தூக்கிக்கொண்டாள்.

“மதுவந்தி” என்றான் ஆதுரமாக. “நீ உன்னைப்பற்றி ஒன்றுமே கூறவில்லை..... ஆனாலும் நான் இப்போது ஒன்று கூறுகிறேன் மறுக்காமல் கேள்” என்றான்
அவள் என்ன என்பதைப்போல அவன் முகம் ஏறிட்டாள்.
“இது என் கார்ட்..... இதை பத்திரமாய் வைத்திரு..... எப்போது எந்த நேரத்தில் என்ன ஒரு உதவி வேண்டும் என்றாலும், என்னோடு பேச மனம் விழைந்தாலும் இதிலுள்ள என் செல் நம்பருக்கு போன் செய்..... செய்வாயில்லையா” என்று கார்டை அவள் கையில் திணித்தான்.
சரி என்று தலை அசைத்தாள். அதை தன் பர்சில் வைத்தாள்.

“நான் கண்ணனை கொஞ்ச நேரம் வைத்திருக்கேன்” என்று வாங்கிக்கொண்டான்.
கண்ணனை தன்னோடு இறுக்கிக்கொண்டு பேசாமல் சாய்ந்து அமர்ந்திருந்தான். எல்லையில்லா அமைதி அனுபவித்தான். கண்ணன் தன் மழலையில் பேசி சிரித்துக்கொண்டு தனக்குள் தானே விளையாடிக்கொண்டிருந்தான். அதைக்கண்டு இவனை எப்படி பிரிவது என்று துயரம் கொண்டான்.

ஆனால் போகத்தானே வேண்டும் என்று எண்ணி எழுந்தான். பின்னோடு அங்கிள் வர கார் ரெடியாகியது 
இவன் “மது, இது தான் விநாயகம் அங்கிள்.... பேருக்கு என் டிரைவர்.... ஆனால் என் வீட்டில் ஒருத்தர் போல..... நான்  வரட்டுமா நீ செய்த உதவிக்கு ரொம்ப நன்றிமா..... நான் சொன்னது நினைவு இருக்குமில்லியா” என்று விடை பெற்றான். அவள் கண்கள் பனித்தனவோ என்று சந்தேகம் தோன்றும் முன் மறைத்துக்கொண்டாள். விநாயகமும் நன்றி கூறினார்.
திலீப் கண்ணனை வாங்கி ஆசை தீர முத்தமிட்டு கொஞ்சிவிட்டு அவளிடம் கொடுத்துவிட்டு சட்டென்று அவளிடம் ஒரு தலை அசைப்புடன் கிளம்பிவிட்டான்.

அவள் அவன் கார் போவதையே பார்த்தபடி நின்றிருந்தாள். சட்டென்று அவள் வாழ்வு அஸ்தமித்ததுபோல உணர்ந்தாள்.
‘சீ என்ன நினைப்பு இது... அவர் யார் நான் யாரு... என்ன எண்ணம் இது’ என்று உதறிக்கொண்டாள்.
மன சோர்வுடனேயே நடமாடினாள். கண்ணன் அவள் மனதை மாற்ற பெரிதும் உதவியாக இருந்தான். அவன் கள்ளச் சிரிப்பில் அவள் தன் துக்கம் மறந்தாள்.

அத்யாயம் ஏழு
தன் வீட்டை அடைந்த திலீப் அன்னையிடம் எல்லா விஷயங்களும் கூறிவிட்டு கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டான். அது நேரம் வரை மறந்திருந்த எண்ணங்கள் தலை தூக்கின.
‘கண்ணன் என்ன செய்கிறானோ. மது எப்படி இருக்கிறாளோ. இன்றும் கூட செம மழைதான். கரண்ட் வேறு போய் போய் வந்தது’. ‘இருட்டில் இந்த குளிரில் கண்ணனையும் வைத்துக்கொண்டு தனியாய் எப்படி சமாளிப்பாள் மது’ என்று அவளையே சுற்றி வந்தது மனம்.
அட ச்சே என்று உதறிவிட்டு உறங்க முயன்றான். திரும்பும்போது கால் வலித்தது. ஒ இன்னும் வலி உள்ளது என்று ஒரு தலையாணைமேல் காலை தூக்கி வைத்துக்கொண்டு உறங்கிப்போனான்.

அடுத்து வந்த நாட்களில் வேலை பளு மிக அதிகமாக இருந்தது. அந்த நேரத்திலும் ‘கண்ணன் எப்படி இருக்கிறானோ மது எப்படி இருக்கிறாளோ’ என்று ஒரு ஓரத்தில் எண்ணம் தோன்றி மறைந்தது. அன்று மாலை கொஞ்சம் வானம் வெளுத்திருக்க வேலையும் விரைவாக முடிந்திருக்க திலீப் கிளம்பினான். கடைத்தெரு வழியாக வருகையில் அங்கே ஒரு கடை வாசலில் சின்னக் குழந்தைகளுக்கான துணிமணிகள் ஆடுவதை பார்த்தான். உடனே வண்டியை நிறுத்தச் சொல்லி உள்ளே சென்றான். கண்ணன் வயது கூறி ரெண்டு செட் உடைகளும் கூடவே வுல்லன் குல்லாய் சாக்ஸ் எல்லாமும் வாங்கினான். பாக் செய்து வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்தபோது ஏதோ இனம் தெரியாத பரவசம் தோன்றியது புன்னகைத்துக்கொண்டான். இவை அனைத்தையும் விநாயகம் பார்த்தும் பார்க்காததுபோல கண்காணித்தார்.


வீடு வந்தடைந்து பாக்கெட்டை சோபாவில் போட்டுவிட்டு போன் பேசும்போது அவன் தாய் அதை எடுத்து பார்த்தாள். என்ன என்பதுபோல அவனிடம் ஜடை பேச இரு என்று கை காண்பித்தான். பேசி முடித்து வந்து “இது கண்ணனுக்கு மா” என்றான்.
“கண்ணனா?” என்று அவர் வினவ
“அதான் மா, அந்த மழை நாளில் எனக்கு உதவினாளே மது அவள் மகன் கண்ணன்” என்றான். தாய்க்கு ஆச்சர்யம் ஆனது. ‘இப்போது வரை அவளையும் கண்ணனையும் நினைவில் வைத்திருக்கிறான் கூடவே உடைகளும் வாங்கி வந்திருக்கிறானே’ என்று.
“அந்த மதுவந்தி கணவர் என்ன செய்கிறார் திலீப்?” என்று கேட்டார்.
“அதுதான்மா தெரியலை..... எல்லாம் சொன்னா.... ஆனால் அதற்கு மட்டும் பதிலே சொல்லலை”.
“என்ன பதிலே சொல்லலியா... ம்ம், நல்லா இல்லையே” என்றார் முகம் சுணங்கி.
“இந்த துணிமணிகளை விநாயகம் கிட்ட கொடுத்தனுப்பீடு திலீப்.... நீ அங்க மறுபடி போக வேண்டாம்” என்றார்.
“ஏன்மா?” என்றான் ஆச்சர்யத்துடன்.
“எனக்கென்னவோ அந்தப் பெண்ணு சரியா படலை”
“அம்மா நீ மதுவ பார்த்தா அப்படி சொல்ல மாட்டே..... அவ மேல எந்த தப்பும் இல்லைன்னு என் மனசு சொல்லுது” என்றான்.
“இருக்கலாம், ஆனா அவங்க சங்காத்தம் நமக்கெதுக்கு.... உதவி பண்ணினா.... இதோ நீ அவ குழந்தைக்கு பரிசு வாங்கீட்டே கொடுத்தனுப்பீடு.... போதும்” என்று முடித்துவிட்டார்.
திலீப்புக்கு முகம் சுருங்கியது. ‘ஒருத்தரைப் பற்றி முழுசும் தெரிஞ்சுகொள்ளாம அம்மா இப்படி அவசரப்பட்டு முடிவெடுப்பது என்ன நியாயம்’ என்று பட்டது.
“இந்த வாட்டி நான் கொண்டுபோய் கொடுத்துட்டு நன்றி சொல்லீட்டு வந்துடறேன் மா.....” என்றான்.
அவனைத் திரும்பி பார்த்துவிட்டு “நான் சொல்றதை சொல்லீட்டேன் திலீப், அப்பறம் உன் இஷ்டம்” என்றுவிட்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் ஞாயிறு அவளுக்கு விடுமுறை இருக்குமே என்று எண்ணி கண்ணனின் உடைகளுடன் அவளுக்கும் ஒரு ஸ்கார்ப் வாங்கிக்கொண்டு காரை தானே எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றான்.
அங்கே சென்று காரை நிறுத்த, அவன் மனம் நிலைகொள்ளாமல் பரவசமாகியது. இறங்கி உள்ளே சென்று மணி அடித்தான். அவள் உள்ளே ஏதோ வேலையாய் இருந்தாள் போல. கை துடைத்தபடி வந்து எட்டி பார்த்தாள். இவனைக் கண்டதும் பூவாய் மலர்ந்தது அவள் முகம். அதை உடனே மறைத்துக்கொண்டு “வாங்க மிஸ்டர் திலீப்” என்று வரவேற்றபடி கதவை திறந்தாள். “எப்பிடி இருக்கே மது?” என்றபடி உள்ளே சென்றான்.
“நல்லா இருக்கேன், நீங்க எப்பிடி இருக்கீங்க.... உங்க கால் இப்போ தேவலை போல இருக்கே” என்றாள் அவன் நடப்பதைக்கண்டு.
“கண்ணன் எங்கே, எப்படி இருக்கான்?” என்று கேட்டான்.
“தூங்கறான் நல்லா இருக்கான்.... இப்போ எழுகிற நேரம்தான்.... உக்காருங்க காபி தரட்டுமா” என்று உள்ளே ஓடினாள். அவன் வரவு அவளுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்றதை கண்டுகொண்டான். அவள் காபியுடன் வந்து அவனிடம் நீட்ட அவன் பரிசு பொருளை அவளிடத்தில் நீட்டினான்.
“என்ன இது நாந்தான் ஒண்ணும் வேண்டாம் என்றேனே” என்றாள்.
“தெரியும் மது.... இது கண்ணனுக்கு.... சில துணிமணிகள் அவ்வளவேதான்... நான் உன் சொல்லை மீறலை.... ரொம்பதான் பிகு பண்ணாமல் வாங்கிக்கொள், ப்ளிஸ் மது” என்றான். அவன் கெஞ்சலை பார்த்து தயங்கியபடி வாங்கிப் பிரித்தாள்.
“அட ரொம்ப அழகா இருக்கு..... இந்த சாக்ஸ் குல்லாய் எல்லாமே அவனுக்கு குளிருக்கு அடக்கமா இருக்கும்.... நானே வாங்கணும்னு இருந்தேன்” என்றாள் சந்தோஷமாக.
அப்போதே கண்ணன் எழுந்து சிணுங்கும் குரல் கேட்டு உள்ளே ஓடினாள். அவனை வாரி எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் “யாரு வந்திருக்கா பாரு கண்ணா” என்று காண்பித்தாள். அவன் உடனே இனம் கண்டுகொண்டு திலீபனிடம் தாவினான். மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் திலீப் ஆசையாய் கை நீட்டி அவனை வாங்கிக்கொண்டான். முத்தமிட்டு கொஞ்சி மகிழ்ந்தான். அவனை தன் கையில் இயல்பாக வைத்தபடி அவன் பேசிக்கொண்டிருக்க அவளின் மனதில் சாரல் வீசியது. மனம் ஏங்க, என்ன பயன் அடங்கு, என்று அடக்கினாள்.
சில நொடி நேரத்தில் அவள் முகம் காட்டும் பல உணர்ச்சிகளை கண்டு இது என்ன மாயம் என்று வியந்தான் திலீப். கண்ணனை விட்டுச் செல்ல மனமில்லை. அவனோடு அங்கேயே அமர்ந்துவிட்டான்.
“சாப்பிடுட்டு போலாம்தானே.... நான் விரைவா சமைச்சுடறேன்” என்றாள் ஆசையாக
“வேண்டாம் மது.... நான் அவசரமா போகணும்” என்றான்.
“ஒ சரி” என்றபோது அவள் முகம் சுருங்கியது.
“உங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும் ஆனாலும் எங்களை மறக்காமல் வந்து பார்க்கணும்னு தோணிச்சே அதுவே போதும்” என்றாள் நன்றியுடன்.
“என்ன மது, உங்க ரெண்டு பேரையுமே என்னால் எப்படி மறக்க முடியும். நான் உங்களை அந்நியமா நினைக்கலை, நீதான் இன்னும் என்னை அந்நியமா நினைக்கிற மது” என்றான் அவளை நேராகப் பார்த்து.
“நானா உங்களை அந்நியமா நினைப்பதா?” என்றாள்.
மனதினுள் ‘உங்களையே தானே நான் நினைச்சுகிட்டு இருக்கேன்’ என்று அழுதாள்.
“ஆமா, இல்லைனா நீ இன்னும்தான் கண்ணனின் தந்தையைப் பற்றி என்னிடம் கூறத் தயங்குகிராயே” என்றான் குற்றச்சாட்டாக.
“ஒ அதுவா” என்று வாய் மூடிக்கொண்டாள்.
“மன்னிச்சுடுங்க திலீப்” என்றாள் அவனின் பார்வையை சந்திக்காது.
“சரி நான் கிளம்பறேன்” என்று எழுந்தான்.
“ஒ போகணுமா சரி” என்றாள் கண்ணனைக் கொஞ்சி முத்தமிட்டு அவளிடம் நீட்டினான். அவனோ இவனின் சட்டையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவளிடம் போக மாட்டேனென்று அடம் செய்தான்.
“என்னடா கண்ணா, எனக்கும்தான் உன்னை விட்டுப் பிரிய மனமில்லை..... ஆனா என்னடா செய்வேன்.... மீண்டும் சீக்கிரமே வரேண்டா செல்லம்.... என் கண்ணில்ல” என்று கொஞ்சிவிட்டு அவன் விரல்களை மெல்ல பிரித்துவிட்டு மனமில்லாமல் காரில் போய் ஏறிக்கொண்டான். அவளைப் பார்த்து ஒரு தலை அசைப்பில் விடைபெற்று ஓட்டிச்சென்றுவிட்டான்.
அவள் ஒரு பெருமூச்சுடன் உள்ளே சென்றாள். அவனுக்கு வாங்கி வந்த துணிகளை கண்ணனுக்கு மாட்டி அழகு பார்த்தாள். தன ஸ்கார்பை தடவி தடவி முகத்தோடு வைத்துக்கொண்டாள். அதில் பரவசம் கண்டாள். ‘இது என்னோட திலீப் வாங்கி வந்தது’ என்றது உள்ளம்.
‘என்னது உன்னோட திலீபா?’ என்று இடித்தது மனம். துள்ளி எழுந்தாள். ச்சே ச்சே என்று மனதை மாற்றினாள்.


அடுத்த ஞாயிறு காலை எழுந்து காபி குடித்து தன் தாயிடம் பேசியபடியே டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தவன் சட்டென்று நினவு வந்தவனாக சமையற்கார அம்மாளை அழைத்தான். 
“என்ன வாணி அக்கா, என்ன டிபன்?” என்றான். அவள் அவனை அதிசயமாகப் பார்த்தாள். அவன் அப்படி எல்லாம் அமர்ந்து கேட்டு பேசியவன் அல்ல.
“தம்பி பூரி பண்ணலாம்னு..” என்று இழுத்தார் அவர்.
“வேண்டாம் ஒரே ஆயில்.... பேசாம வெண் பொங்கல் கொத்சு பண்ணுங்களேன்” என்றான்.
“ஒ அப்படியே செய்துடறேன்” என்று அவர் சென்றுவிட திலீபன் தாய் அவனை விந்தையாகப் பார்த்தாள்.
‘இவனுக்கு இந்தப் பொங்கல் கொத்சுவெல்லாம் எப்படித் தெரியும்.... நம்ம வீட்டில் அதெல்லாம் பெரிதாக செய்ததே இல்லையே’ என்று எண்ணினாள்.
மகனின் போக்கு பல நேரங்களில் அவளுக்கு வியப்பையும் கலக்கத்தையும் தந்தது. டிவி பார்க்கும்போது ஏதேனும் சிறு குழந்தைகள் கொண்ட விளம்பரங்கள் வந்தால் அப்படியே நின்று பார்க்கிறான். கல்யாணம் குழந்தை என்று ஆசை வந்துள்ளதோ என்று எண்ணி அவரும் ஆசையாக அந்தப் பேச்சை எடுத்தார்.

No comments:

Post a Comment