Monday 24 September 2018

ENGIRUNDHO VANDHAAN - 5

“பார்க்கலாம் மா... அதுக்கு இப்போ என்ன அவசரம்” என்று கூறிச் சென்றுவிட்டான். வினாயகத்தை கூப்பிட்டு கேட்டுப் பார்த்தார்.
“இல்லைங்க அம்மா அன்னிக்கி துணி வாங்கினோம்.... அதான் எனக்கும் தெரியும். அதையும் தம்பியே கொண்டுபோய் குடுத்திடுச்சு போல. அதுக்குப் பிறகு நாங்க அங்கப் போகலை மா. அந்த பொண்ணும் பார்த்தா ரொம்ப நல்லவங்க மாதிரிதான் மா தெரியுது” என்று சொல்லி வைத்தார்.
‘என்னமோ நடக்கிறதோ’ என்று பயந்தாள் அந்தத் தாய்.

அத்யாயம் எட்டு
மாதத்தின் முதல் வாரம், திலீப் ரொம்பவே பிசியாக இருக்கும் நேரம். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம்பளம் குடுக்க.... கணக்கு சரி பார்க்க.... வேண்டிய சாமான்கள் வாங்க விற்க, என்று பறப்பான். அது போன்ற ஒரு நாளில் முக்கிய பஜார் தெருவில் பாங்க் மேனேஜரை கண்டுவிட்டு வெளியே வந்து தன் வண்டியில் ஏறினான். நாயகம் அங்கிள் அன்று தாயுடன் எங்கேயோ வேலையாகச் சென்றிருந்தார். தானே பலமுறை அப்படி வண்டி ஓட்டுபவந்தான் திலீப். வண்டியை எடுத்து ஒடித்து திருப்ப அப்போது எதிரே உள்ள ஒரு அலுவலகக் கட்டிடத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த மதுவைக் கண்டான்.
‘அட நம்ம மது’ என்றது மனம் துள்ளியபடி. ‘இவள் இங்கே மலைமேல் எங்கே?’ என்று எண்ணிய வண்ணம் எங்கே வந்து செல்கிறாள் என்று ஏறெடுத்து பார்க்க அது ஒரு வக்கீலின் ஆபிஸ் என்று தெரிந்தது.
‘ஓ வக்கீலின் ஆபிசில் இவளுக்கு என்ன வேலை?’ என்று குழம்பினான்.
‘அவள் என்ன செய்தால் உனக்கென்ன... அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?’ என்றது மனம்.
ஆனால் அவனால் அப்படி விட முடியவில்லை. அவள் நடந்து சென்று கண் மறைந்தபின் அவன் இறங்கி அந்த வக்கீலின் ஆபிசினுள் நுழைந்தான். உள்ளே சென்றபின்தான் அறிந்தான் அவர் தன் கம்பனி வக்கீலிடம் ஒரு காலத்தில் ஜூனியராக இருந்தவர் என்று. இவனைக்கண்டு அவருக்கு பெரும் மகிழ்ச்சி.
“என்ன திலீப் சார், நீங்க இங்க, எங்க ஆபிசை தேடிகிட்டு வந்திருக்கீங்க..... சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே” என்றார் பரபரத்து வரவேற்றபடி.
“இல்லை மிஸ்டர் பிரபு, இந்த வழியா வந்தேன்.... அதான் உள்ளே எட்டிப் பார்த்து ஹெலோ சொல்லலாம்னு வந்தேன்.... எப்படி போய்கிட்டிருக்கு உங்க ப்ராக்டிஸ்?” என்று கேட்டான்.
“ஒ ரொம்ப நல்லா இருக்கு.... எல்லாம் என் சீனியர் புண்ணியம் ஆசிகள்” என்றார் அவர் நன்றி மறவாமல்.
திலீப் சற்று தடுமாறி பின்
“பிரபு சார் நான் கேட்கிறேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.... இப்போ இங்க மதுவந்தினு ஒரு லேடி வந்துட்டு போனாங்களே அவங்களப் பற்றின சில டிடேயில்ஸ் எனக்குச் சொல்ல முடியுமா ப்ளிஸ்.... எனக்கு அவங்க ரொம்ப வேண்டியவங்க.... அதான் கேட்கிறேன்.... நான் நீங்க சொல்லப் போற விஷயங்கள் எதையும் துர்பிரயோகம் செய்ய மாட்டேன் உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும்தானே” என்றான் பீடிகையோடு.
“ஒ மதுவா, கேக்கறது நீங்கங்கறதால கட்டுப்பாட்டை மீறி சொல்றேன் திலீப் சர்...
அவ பாவம் சார்.... இந்த மாதிரியான கொடுமை எல்லாம் யாருக்குமே ஏற்படக் கூடாது” என்று அவரும் பீடிகை இட்டார்
“ஏன் என்ன மதுவுக்கு?” என்றான் படபடப்புடன்.

“மது ஒரு அனாதை” என்றார்.
“ஆமா தெரியும்” என்றான்.
மதுவும் அவ கூட ஆசிரமத்தில் வளர்ந்த பிரேமாவும் மிக நெருங்கிய தோழியர்... பிரேமா ஆஸ்திரியாவை சேர்ந்த ஒரு வெள்ளைக்காரனிடம் காதல் கொண்டபோது அவள் கூட நின்று மணமுடித்து வைத்தவள் மது... அவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் கண்ணன். குழந்தைக்கு மூன்று மாதம் ஆனபோது ஒரு நாள் அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்றனர் ஜார்ஜும் பிரேமாவும்... அப்போதுதான் அவர்கள் வாழ்க்கையில் கோரம் தாக்கியது... ஹேர்பின் வளைவில் மேலே வேகமாக வந்துகொண்டிருந்த லாரி ஒன்று அவர்களின் டூ வீலரை பின்னின்று இடித்தது. மோதிய வேகத்தில்  குழந்தை தூக்கி எறியப்பட்டான்... ஆனால் நல்ல வேளையாக அடுத்து போய்கொண்டிருந்த வண்டியில் ஒரு லாண்டரி துணி மூட்டையில் போய் விழுந்தான்... அதிகம் அடிபடவில்லை பிழைத்துக்கொண்டான்... பிரேமா அந்த கணமே மாண்டு போனாள்... அந்த நேரத்தில் நான் அங்கு என் வண்டியில் போய்கொண்டு இருந்தேன்.... மூவரையும் நாந்தான் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தேன்... ஜார்ஜ் தன் கடைசி மூச்சுகளை எண்ணிக்கொண்டிருந்தான். மதுவை வரச்சொல்லி வேண்டினார். நானும் தகவல் கூறினேன்.
கையில் குழந்தையுடன் வற்றாத கண்ணீருடன் அங்கேயே காத்திருந்தாள். அப்போது ஜார்ஜின் வேண்டுகோள்படி போலிஸ் அதிகாரியும் நானுமாக ஒன்றாக அமர்ந்து தலைமை டாக்டர் சாட்சியாக அவன் கூறக் கூற அவனது உயிலை எழுதி தயாரித்தோம். அதன்படி அந்த சிறு வீடும் அவன் கணக்கில் உள்ள இரண்டு லட்சம் ரூபாய் பணமும் கண்ணனின் பேரில் மாற்றி அவனுக்கு காலம் முழுதும் கார்டியனாக மது இருப்பாள் என்று எழுதக் கோரினான்... நாங்களும் எழுதி கை எழுத்து வாங்கினோம்.... மதுவிடம் மன்றாடி இந்தப் பெரும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஜார்ஜ் கை ஒப்பம் இட்ட மறு நொடி இறந்து போனான்”

“இதோ தன் இருபத்தி ஓரு வயதில் மணமாகாமலே தாயாகி தனி மரமாக அந்த வீட்டில் அந்த சிசுவை பெரும்பாடுபட்டு வளர்க்கிறாள் மது.... மாதா மாதம் கண்ணன் பேரில் இருக்கும் பணத்தின் வட்டியை என்னிடம்தான் வாங்கிச் செல்வாள். அதற்குத்தான் இன்றும் வந்திருந்தாள்.... ஏதோ கேட்டீங்க, நீங்க பெரிய மனிதர்னு சொல்லீட்டேன்.... நாங்க ரகசியம் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளவங்க... ஆனா ஏனோ நீங்க கேட்டதும் மறுக்க முடியாமல் கூறிவிட்டேன்..... அதனால் அவளுக்கோ அந்த குழந்தைக்கோ எந்த பங்கமும் வராம பாத்துக்குங்க மிஸ்டர் திலீப்” என்று கூறி முடித்தார் வக்கீல் பிரபு.
“ஷ்யூர் பிரபு சார்.... ஐ ப்ராமிஸ்” என்றான் திலீப் அழ்ந்த குரலில்.

மது அவன் மனதளவில் மேலே மேலே ஏறி உச்சாணியில் கொலுவிருந்தாள்.
‘என் மது’ என்று அந்த கணம் அவன் தன் மனதின் ஆழ் உணர்ச்சிகளை அறிந்து கொண்டான். ‘அவள் வேறு யாருக்கேனும் சொந்தமானவளோ...’ என்று முன்பு கொஞ்சம் இடறியது மனம்... அவள் தூய்மையானவள் மட்டுமின்றி மிக உயர்ந்தவள் மணமாகாதவள் என்று தெரிய வந்ததும் மனம் லேசாகியது. அவளையே நாடியது. அவளை உடனே காண மனம் துடிதுடித்தது. அடக்கிக்கொண்டு எழுந்து வெளியே வந்தான். மனதின் பல நாள் இறுக்கம் தளர்ந்ததுபோல உணர்ந்தான். விசில் அடித்தபடி வண்டி ஒட்டியபடி மேலே ஏறினான். வீட்டிற்குச் சென்றபின்னும் மனம் ஊஞ்சலாடியது.
‘என் மது என்னை மணக்க சம்மதிப்பாளா..... அம்மா ஒப்புவார்களா.... அப்போது கண்ணன் என் மகனாவான்..... அவனே என் மூத்த மகன்’ என்று மனம் துள்ளியது. அடச்சே அடங்கு என்று அடக்கி குளித்து சாப்பிட்டான்.
“திலீப் கொஞ்சம் உக்கார்ந்து அம்மாவுடந்தான் பேசேன் கண்ணு” என்று அழைத்தார் அவன் தாய்.
“என்னம்மா சொல்லு” என்றான் ஆசையாக அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு.
“உனக்கும் வயசு ஏறிகிட்டே போகுதேடா திலீப்.... நல்ல வரன் வந்திருக்கு.... நம்மளப் போலவே உசந்த வம்சம்.. நல்ல குடும்பம்... ஒரே பொண்ணு.... நிறைய செய்வாங்களாம்டா.... பொண்ணு பார்க்க கூப்பிடறாங்க போகலாமா, இந்த ஞாயிறு?” என்று ஆவலுடன் கேட்டார்.
தூக்கிவாரி போட்டது திலீப்புக்கு.
‘எனக்கு பெண் பார்ப்பதா.... என் மது என்னாவாள்.... அதெப்பிடி அவளை விடுத்து வேறு ஒருத்தியை நான் மணமுடிக்க முடியும்’ என்று வாதிட்டது மனது.
“இல்லைமா வேண்டாம்” என்றான்.
“இப்போ வேண்டாமா, என்ன சொல்றே?” என்று கேட்டார் கோபமாக.
“இல்லைமா நான் ஒரு குழப்பத்தில் இருக்கேன்... அது தெளியும்வரை எனக்குத் திருமணப் பேச்சு எடுக்க வேண்டாம்.... நானே சொல்றேன், அதுவரை ப்ளிஸ்மா..” என்று வேண்டிக் கொண்டான்.
“போடா எப்போ பாரு இதே பேச்சு..... அப்படி என்ன இருக்கு உன் மனசுல சொல்லித்தொலையேன்” என்று குமறினார்.
“ஐயோ அம்மா கோச்சுக்காதே..... சீக்கிரமா எல்லாம் சொல்றேன்”  என்று எழுந்து சென்றுவிட்டான். கலங்கிப்போனார் அந்தத் தாய். ‘இவன் எந்த வழிக்கும் வரமாட்டேன் என்கிறானே.... யாரையானும் விரும்பறானா.... ஒருவேளை அந்தப் பெண்ணையோ?’ என்று பயந்தார். ‘அவள் என்ன குலமோ மணமாகாமலே பிள்ளை வேறு கையில்’ என்று வெறுப்பு மண்டியது.

அத்யாயம் ஒன்பது
திலீப் பல நாள் யோசித்து களைத்தான். அவனே முன்னும் பின்னுமாய் வாதிட்டு பார்த்த பின்பும் அவன் மனம் மதுவையே நாடியது.
‘இந்த அளவு பண்பானா அன்பான உயர்ந்த உள்ளம் படைத்தவள் கிடைக்க நான் குடுத்து வைத்திருக்க வேண்டும்.... அம்மாவிற்கு வெறுப்புதான்.... உண்மை அறியவில்லை ஆதலால், சொல்லிப் புரிய வைப்பேன்’ என்று தெளிந்தான்.
அடுத்த நாள் மாலை நேரத்தில் வேலை முடிந்து திரும்பும்போது அவள் வீடு நாடிச் சென்றான்.
அவன் வண்டிதான் என்று சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தவள் மனம் மகிழ்ச்சி கொண்டது.
“வாங்க திலீப்” என்று வரவேற்றாள். அவனும் கொள்ளைச் சிரிப்போடு உள்ளே சென்றான்.
“கண்ணன் எங்கே?” என்றான்.
“தூங்கறான் அதோ தூளியில” என்றாள். “இருங்க காபி கொண்டுவரேன்” என்று உள்ளே சென்றாள்.
முதன் முறையாக அவனும் அவளோடு கூடவே பின்னோடு சமையல் அறைக்குச் சென்றான். அதைக்கண்டு அவள் அதிசயித்தாள் “என்ன ஏதானும் வேணுமா?” என்றாள் அவ்வளவு அருகாமையில் அவன் நிற்கக் கண்டு.
‘ஆம்’ என்று தலை அசைத்தான்.
“என்ன வேணும்?” என்றாள் குரலே வெளிவராமல்.
“நீதான்” என்பது போல ஜாடை செய்தான்.
“என்ன?” என்று அயர்ந்தாள். பால் அடுப்பில் கொதித்து கொண்டிருந்தது. அவள் இங்கே கொதித்துப் போயிருந்தாள்.
“என்ன விளையாட்டு இது திலீப்?” என்றாள் கடினமாக.
“விளையாட்டு இல்லை, உண்மை, எனக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருக்கு..... என்னை உனக்கு பிடிச்சிருந்தா உன்னை நான் திருமணம் செய்துகொள்ள ஆசைப் படுகிறேன் மது” என்றான் நேராக அவள் முகம் பார்த்து.
அவளின் இதய ஒலி அவளுக்கே கேட்டது ‘என்ன சொல்கிறான் இவன்.... இவன் வசதி என்ன வாழ்வென்ன.. என்னை இவன் மணப்பதா இதென்ன பிதற்றல்.....’

“எனக்கு ஒரு மகன் இருக்கிறான் தெரியுமா.... இதென்ன பிதற்றல்?” என்று கேட்டாள். வேண்டும் என்றே கோபக் குரலில்.
“தெரியுமே. கண்ணன்தான் நம் மூத்த குழந்தை, இப்போதும் எப்போதும்... அதை நான் எப்போதோ முடிவு செய்துவிட்டேன் மது” என்றான் ஆழ்ந்த குரலில்.
“திலீப் இது சாதாரண விஷயம் இல்லை..... இப்படி பேசினா நான் என்ன சொல்றது.... நான் ஒரு தாய் என்னால யாரையும் திருமணம் செய்துகொள்ள முடியாது” என்றாள் அவனை காணாமல் அடுப்பை கண்டபடி.

உள்ளம் சந்தோஷத்தில் தள்ளாடியது ‘இது உண்மையா இது நடக்குமா.... எப்படி நடக்கும்.... என் நிலை தெரிந்த பின்னும் இவன் இதையே கூறுவானா... காதலின் வேகத்தில் இவன் மணக்கக் கேட்டாலும் இவன் தாய் என்ன சொல்லுவார்களோ.... ஊரும் உலகமும் என்ன சொல்லும்’ என்று மருகினாள்.
அவள் மனம் கொந்தளிப்பதை அறிந்து திலீப் அவளை பின்னிருந்து மெல்ல அணைத்துக்கொண்டான்.
“திலீப், என்ன இது, விடுங்கள் என்னை” என்றாள் குரல் தெளிவில்லாமல்.
“என்னை சோதிக்காதீர்கள் திலீப்..... எனக்கு வேண்டாத ஆசைகளை கொடுக்காதீர்கள்... இது நடக்காது.... வேண்டாம் விட்டு விடுங்கள் இந்த எண்ணத்தை..... நீங்கள், உங்க குடும்ப பெருமை நான் அறிவேன்..... உங்களுக்கு நான் தகுதி அல்ல.... எத்தனையோ நல்ல குடும்பத்துப் பெண்கள் வரிசையில் நிற்பார்கள் உங்களை மணமுடிக்க” என்று கூறினாள் அழுகை முட்ட.

“இருக்கலாம் ஆனா எனக்கு உன்னைத்தானே பிடிச்சிருக்கு” என்றான் மேலும் இறுக்கியபடி. அவள் கால்கள் தடுமாறியது. கையும் காலும் குழைந்து போயின.
“நீங்க ஏன் இப்படி அடம் பண்றீங்க?” என்றாள் அழுகையுடன்.
“ஏன்னா எனக்கு நீ வேணும் டீ” என்றான்.
“வேண்டாம் இது வேண்டாம்” என்று பாலை அணைத்துவிட்டு மடங்கி தரையில் அமர்ந்து அழுதாள். அவளை இரு கைகளிலும் வாரி எடுத்து அணைத்துக்கொண்டான். அப்படியே தூக்கிச் சென்று ஹாலில் உள்ள நாற்காலியில் அமர செய்தான். பின் அவள் காலடியில் அமர்ந்தான்.
“ஐயோ என்ன இது நீங்க போய் என் கால் அருகில் தரையில் உக்கார்ந்துகிட்டு..” என்று பதறினாள்.
“பேசாம உக்காரு.... இப்போ சொல்லு.... ஏன் வேணாங்கற..... என்னை பிடிக்கலையா?” என்றான்.
‘பிடிக்கவில்லையா, இவனை எனக்கு பிடிக்காமல் போகுமா..... தெய்வமே இவனைத்தானே நான் எல்லாமுமாக நினைக்கிறேன்.... ஆனால்.. ஆனால்.. இவனை நான் எப்படி திருமணம் புரிவது?”  என்று தடுமாறியது அவள் மனம்.
ஆனால் மணமுடிக்க நெஞ்சுகொள்ளா ஆசையுடனும் திணறி அவளும் கீழே இறங்கி அவன் மடி சாய்ந்து அழுது தீர்த்தாள். கொஞ்ச நேரம் அழவிட்டான்.
‘எத்தனை எத்தனை நாளின் அழுகை ஆற்றாமை இப்போது வெளி வருகிறதோ.... இன்னாளோடு அவளுடைய துன்பம் யாவையும் வெளியேறட்டும்’ என்று அவளை மடி தாங்கினான்.

அழுது ஓய்ந்து நிமிர்ந்தாள். “என்னைப்பற்றி உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது தீபு.... கண்ணனப் பற்றியும் ஒண்ணுமே தெரியாது.... அப்படி இருக்கும்போது இப்படி ஒரு தீர்மானம் எடுக்காதீங்க” என்றாள்.
“அப்போ எல்லாவற்றையும் நீதான் சொல்லி தீர்க்கணும் மதுமா.... உன் மனசும் தெளியுமே டா” என்றான் ஆதுரத்துடன். “சொல்லணும்தான், அந்தக் கட்டாயம் இப்போது ஏற்பட்டு போச்சு.... ஆனா அதை எல்லாம் கேட்ட பிறகு நீங்க இந்த எண்ணத்தை மாற்றிப்பீங்க” என்றாள்.
“அப்படியா சொல்றே, சரி பார்க்கலாம் சொல்லு..” என்றான்.
அவன் நெஞ்சில் சாய்ந்து அமர்ந்து அவன் அணைப்பிலேயே அவள் தன் கதையை தன் நெஞ்சத்தின் பாரத்தை இறக்கி வைத்தாள். அனைத்தும் அறிந்தும் கூட அவள் பாரம் குறைய வேண்டி அவளை பேசவிட்டான். பொறுமையாக கேட்டுக்கொண்டான்.

நானும் என் மிக நெருங்கிய தோழி பிரேமாவும் ஒரே நாளில் ஆசிரமத்தில் கொண்டுவிட பட்டோமாம் தீபு.... அதனாலேயே எங்கள் இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் அலாதிப் பிரியம்..... நெருங்கிய தோழிகளானோம்.... பழகி பேசி படித்து பதினெட்டு வயதை அடைந்தோம்..... பிரேமா உடனே ஒரு புதிய பழத்தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்தாள். ஸ்டாக் எவ்வளவு வந்திருக்கு விற்றிருக்கு என்று கணக்கு வைத்துக்கொள்ள வேண்டிய வேலை... கண்ணியமான முதலாளி.... ஜார்ஜ் எனப்படும் அவள் முதலாளி ஆஸ்ட்ரியாவை சேர்ந்த ஒரு வெள்ளைக்காரர்.... சில வருடங்களாக இங்கே வந்து செட்டில் ஆகி பழத்தோட்டங்களை லீசுக்கு எடுத்து தொழில் செய்து வந்தார்
என்னை பூரணி அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவருடனே தங்கி அவரையும் அவர் வீட்டையும் பார்த்துக்கொள்ளும் வேலை எனக்கு.... இருவருமே சந்தோஷமாக இருந்தோம்.... அவ்வப்போது சந்தித்துப் பேசிக் கொள்வோம்
அப்போது ஒரு நாள் பிரேமா மிகவும் கலவரமாக என்னிடம் வந்தாள். அவள் முதலாளியை பிரேமாவின் குணமும் அழகும் வெகுவாகக் கவர்ந்தது.... அவருக்கென யாரும் இல்லாத காரணத்தாலே தான் அவர் இங்கு வந்து வாழ்ந்து வந்தார்... பிரேமாவின் அன்பான நடத்தை அவரை கவர்ந்தது.... அவளை காதலிக்க ஆரம்பித்தார்... அவளிடத்தில் தன் காதலைச் சொன்னதாகவும் அவளை மணக்கக் கேட்டதாகவும் கூறி பயந்தாள்.
இதுவும் இவர்களுக்கு ஒரு விளையாட்டோ என்று நினைத்து எனக்கும் கூட முதலில் கோபம்தான் வந்தது... அவளை அழைத்துக்கொண்டு அவரிடம் சென்று சண்டை போட்டேன்... நான் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்னார் அவர்.... ஒரு பக்கா ஜென்டில்மேன் என்று எண்ணம் எழுந்தது.... பூரணி அம்மாவிடம் நான் போய் விவரங்கள் கூறி அவரை விட்டு மேற்கொண்டு ஏற்பாடுகள் செய்யச் சொல்லி என் பிரேமாவின் திருமணத்தை நடத்தி வைத்தேன்

வாழ்வு இனிமையாக கடந்து சென்றது..... ஜார்ஜுக்கு நல்ல வருமானம் வந்தது... கேத்தி செல்லும் வழியில் விற்கவென வந்த இந்த சிறிய பழைய வீட்டை வாங்கி செப்பனிட்டு குடி புகுந்தனர்.... பின்னோடு பிரேமா கற்பம் தரித்தாள்..... எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி.... பிள்ளை பேரு காலத்தில் இரு பக்கமும் உறவுகள் இல்லாத நிலையில் என்னை தன் கூட வைத்துக்கொள்ள பூரணி அம்மாவிடம் கேட்டாள் பிரேமா... அவரும் ஒப்புதல் கொடுத்தார்.....

2 comments: