Friday 21 September 2018

ENGIRUNDHO VANDHAAN - 2

“அப்பா பேசாம இருங்கப்பா.... உங்களுக்கு உடம்புக்கு முடியாது” என்று தந்தையை அடக்கினான் கிருஷ்.
“ஆஹஹா என்ன இறக்கம் என்ன கரிசனம்.... அப்பாவாம் யாரு யாருக்கு அப்பா..... அவரு எங்க அப்பா.... உனக்கு இல்லை” என்றான்.
“அவன் என் தலைமகன்.... என் வாரிசு..... அவன் இங்கேதான் இருப்பான்.... ஆம் அவன் எனக்கும் உங்கம்மாவுக்கும் பிறந்தவன் இல்லை.... ஆனாலும் எங்கள் ஸ்வீகார புத்திரன்..... எங்களுக்கு எல்லாமே அவன்தான்.... உனக்கும் அவனுக்கும் எந்த நேரத்திலும் எந்த வித்தியாசமும் இல்லாமல் தான் வளர்த்தோம்.... ஆனால் எங்கள் வளர்ப்பில் அவன் மேன்மையடைந்தான்..... நீயோ வழி மாறிவிட்டாய்..... இனி உன்னிடம் பேசிப் பயனில்லை.... நீ எங்கள் மகனுமில்லை” என்று கத்திவிட்டு அமர்ந்தார் திலீப் மூச்சுவாங்க.

“அப்பா என்னப்பா, ஏன் நீங்களும் இப்படி உணர்ச்சிவசப்படறீங்க..... அவன்தான் ஏதோ சிறுபிள்ளைத்தனமா பேசறான்னா” என்று சமாதானப்படுத்தினான் கிருஷ்.
“ஹே நீ பேசாதேன்னேன்.... உன்னை வாய மூடச் சொன்னேன்..... நாங்க அப்பா பிள்ளைக்குள்ள ஆயிரம் இருக்கும்.... நீ உள்ள வராதே” என்று மீண்டும் கத்தினான் தினேஷ். “மரியாதையா சொல்றேன் இந்த வீட்டிற்கும் சொத்திற்கும் உனக்கும் எந்த சொந்தமும் இல்லை தொடர்பும் இல்லைன்னு கை எழுத்து போட்டுட்டு வெளியே போயிடு” என்று மிரட்டினான்.
“என்னடா சொன்னே நாயே” என்று ஓங்கி அறைந்தாள் மது.

இதற்குமேலும் அங்கிருக்க முடியாமல் சுதாவை அழைத்து பெற்றோரை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஒரு சிறு பெட்டியில் கொஞ்சமே முக்கிய சாமான்களை அடைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் கிருஷ்.
பெற்றோர் தடுக்க தடுக்க “இல்லைப்பா அவன் கோவம் அடங்கும் வரையிலானும் நான் அவன் கண்முன்னே வராமல் இருப்பது நம்ம குடும்பத்துக்கு நல்லது.... அம்மா வருத்தப்படாதீங்க..... உங்க உடம்பப் பாத்துக்குங்க” என்று கூறி தன் வண்டியில் கிளம்பி ரிசார்டை இரவோடு இரவாக அடைந்துவிட்டான்.

அனிதா துடித்து போனாள். ‘அவளாலேயே தாங்க முடியவில்லையே கிருஷ் எப்படி தாங்கினான்’ என்று அவளுக்கு மேலும் அவன் மீது பரிவு அதிகமானது.
‘நானிருக்கிறேன்’ என்று கூறாமல் கூறி அவனை ஆசுவாசப்படுத்தினாள். அவளிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டபின் கொஞ்சம் மனம் லேசானது க்ரிஷிற்கு.
“அடுத்து என்ன செய்ய போறீங்க?” என்று கேட்டாள்.
“இப்போதைக்கு நான் இங்கேயே ரிசார்ட்டில் இருக்க போறேன்.... அங்கே நிலைமை என்னன்னு பார்த்த பிறகுதான் மேற்கொண்டு யோசிக்க வேண்டும்” என்றான்.
அவன் கையை பிடித்து அமுக்கி கொடுத்தாள். புன்னகைக்க முயன்று தோற்றான். அவன் தோளில் தலை சாய்த்து அவனை அணைத்துக்கொண்டாள் அனிதா.
போலாம் என்று கிளம்பினர். அவனை தனியே விட்டு வீடு செல்ல அவள் மனம் கேட்கவில்லை ஆயினும் வேறு வழி இன்றி அவனை தேற்றி அனுப்பிவிட்டு அவள் இடத்தில் இறங்கிக்கொண்டாள்.

அங்கே ஊட்டியில் தங்களது பங்களாவில் வெறுமையும் வேதனையும் சூழ்ந்திருந்தது. நடந்தவற்றை தாங்க முடியாமல் பெற்றோர் துவண்டு போயிருக்க சுதா என்னவும் சொல்லி அவர்களை தேற்ற முடியாமல் தோற்றாள். எப்படியோ கெஞ்சி பசியாற வைத்தாள். தினேஷை கண்ணில் பட்டால் கொன்றேவிடுவேன் என்று திலீப் மிரட்டி இருந்ததால் அவன் எங்கோ வெளியே புறப்பட்டு போனவன்தான்.

“நான் என்னங்க தப்பு பண்ணினேன்.... இரண்டு போரையும் ஒரே போலதானேங்க வளர்த்தேன்.... பின்ன எங்க என்ன தப்பு நடந்தது.... ஏன் சின்னவன் இப்படி எல்லாம் நடந்துகிட்டான்?” என்று தவித்து போனாள் மது.
“விடும்மா, அது நம்ம வளர்ப்பின் குற்றம் இல்லை.... அவன் சேர்வார் சேர்கை சரி இல்லை.... அவனைப் பற்றி சிலது காதில் விழுந்தது.... அது நல்லதாகவும் இருக்கவில்லை... அதனால்தான் நான் அவனுக்கு கொடுக்கும் பணத்தை இழுத்து பிடித்தேன்.... ஆனால் அது இப்படி ஒரு பூகம்பத்தை கிளப்பும் என்று நானே எதிர்பார்க்கவில்லை.... நீ ஏன் உன்னையே குற்றம் சொல்லிக்கிறே மதுமா” என்றான் அவளை சமாதானப்படுத்தும் வகையில்.
“பெரியவன் என்னானானோ தெரியலையே” என்று கவலை ஆனாள்.
“அவனுக்கு ஒண்ணும் ஆகாது அவனுக்கு தன்னை பாத்துக்க தெரியும்மா... என்ன ரிசார்டுல தான் போய் தங்கி இருப்பான். ஆகட்டும் சில நாள் பாப்போம், அதற்குள்ளாக ஏதோ ஒரு தீர்வு வரும்” என்றார். மதுவை தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டு சோபாவில் சாய்ந்திருந்தவர் மனம் பின்னோக்கி ஓடியது. அது ஒரு நிலாக்காலம் என்று பெருமூச்சு எழுந்தது.

அத்யாயம் மூன்று -  இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்....

சோவென மழை பெய்து கொண்டிருந்தது. கூன்னூரிலிருந்து கேத்தி செல்லும் மலைப் பாதையில் அந்த வெளிநாட்டு கார் வழுக்கிக் கொண்டு ஊசி வளைவுகளில் ஏறிக்கொண்டிருந்தது.
திலீபன் என்னும் திலீப் சக்ரவர்த்தி பின் சீட்டில் கண் மூடி அமர்ந்திருந்தான். அன்று முழுவதும் ஒரே அலைச்சல். அவன் ஓய்ந்து போயிருந்தான். அதனால் களைப்பாக சாய்ந்திருந்தான். அவன் களைப்பு தெரிந்து அந்த மழை நேரத்திலும் பக்குவமாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தார் விநாயகம். நாயகம் அங்கிள் என்று அவன் மரியாதையாக விளிக்கும் அவர் அவன் குடும்பத்திடம்  பல ஆண்டுகளாக கார் ஓட்டியாகப் பணிபுரிந்து வந்தார்.

மழை இன்னும் வலுத்தது. வண்டியின் முன் பாதையே கண் தெரியாத நிலை.
“அங்கிள் ரொம்ப கஷ்டமா இருந்தா வேணும்னா கொஞ்சம் நிறுத்தீட்டு போகலாமா?” என்றான் அவரிடம்.
“வேண்டாம் தம்பி.... இன்னும் வலுத்துகிட்டுதான் வருது.... எப்படியானும் வீடு போய் சேர்ந்துடலாம்” என்றபடி லாவகமாக ஓட்டினார். ஆனால் என்ன பயன் இன்னும் ஒரு நூறு அடி போயிருப்பார்கள். வண்டி சட்டென்று நின்று போனது. விநாயகம் இறங்கி கொட்டும் மழையில் தனக்குத் தெரிந்த ரிப்பேர்களை செய்து பார்த்தார். அவர் சிரமம் பலிக்காமல் போனது.
அவர் திலீபனிடம் வந்து “தம்பி என்ன ட்ரபிள்னு தெரியலை.... நீங்க வண்டியிலேயே இருங்க... நான் பக்கத்துல யாரானும் மெக்கானிக் கிடைப்பாங்களான்னு பார்க்கறேன்” என்று டிக்கியிலிருந்து மழை கோட்டை எடுத்து அணிந்துகொண்டு நடந்து மாயமானார். ஹ்ம்ம் என்ற பெருமூச்சுடன் வண்டியிலேயே அமர்ந்திருந்தான் திலீபன்.

இங்கே திலீபனைப் பற்றி சில வரிகள், ஆறு அடியை நெருங்கும் உயரம் மாநிறம்... தீஷிண்யமான கண்கள்... செதுக்கியது போன்ற முகம். அளவான மீசை.. சுருட்டை முடி என்று மிக அழகாக இருந்தான்.
ஹேண்ட்சம் என்பார்களே அதற்கு அவனே இலக்கணம் போல இருப்பான். சின்ன வயது முதலே நல்ல செழிப்பான வாழ்வு, உயர்ந்த வகை சாப்பாடு, முறையான உடற் பயிற்சி, கொஞ்சமாக டென்னிஸ், முடிந்தபோது வாக் என்று வளர்ந்தவன் ஆயிற்றே. போதாததற்கு கிளீன் ஹேபிட்ஸ். அவன் மது, மாது, புகை என்று எந்தவித போதைக்கும் தன்னை இதுவரை அடிமைபடுத்திக்கொள்ளவில்லை. அதில் அவன் தாய்க்கு ஏகப் பெருமை.
“எங்க திலீபனப் போல வருமா” என்பார்.

வீட்டிலோ பிசினஸ் விஷயமாகவோ கூட எந்த பார்டியிலும் அவன் கையில் ஆரஞ்சு ஜூஸ் தான் இருக்கும். அவனை கல்லூரி நாள் முதலே இதற்காக கேலி செய்த நண்பர்களும் உண்டு.
“இதெல்லாம் போதை இல்லைடா.... உண்மையான போதை என்ன தெரியுமா, நினைத்ததை சாதிப்பது.... முக்கியமா நாம செய்யும் தொழிலில் சாதிப்பது...” என்பான் கண்களில் கனவுகளுடனும் முகத்தில் அதற்குண்டான வெறியுடனும். அவனை அறிந்தவர்கள் ஆம் என்று ஆமோதிப்பர்.

சிறு வயது முதலே தன் தந்தையின் வியாபார ஆளுமை கண்டே வளர்ந்தவன். மிக விரைவில் அவரிடம் இருந்து அந்தக் கலையை கற்றுத் தேர்ந்தான். கல்லூரி முடித்து வெளிநாடு சென்று எம் பி ஏ முடித்துத் திரும்பி வந்து தந்தையின் பாரத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டான். அதற்காகவே காத்திருந்தது போல அவரும் போய் சேர்ந்தார். தாயின் அன்பு மட்டுமே அவனுக்கு துணை என வாழ்கிறான். உழைப்பே அவன் கேளிக்கை... அதுவே அவனுக்கு உவகை... அதுவே அவனுக்கு போதை.... அதனாலேயே வெற்றி அன்னை அவனை தாவி வந்து அணைத்துக்கொண்டாள். ஊட்டியில் அவர்களுக்கென சில தேயிலை எஸ்டேட்கள் உள்ளன, அதன் கூடவே பழத் தோட்டங்கள், இரண்டு ரிசார்ட்கள் ஒரு ஹோட்டல் எல்லாமும் சொந்தமாக இருந்தன. ரிசார்ட்டும் ஹோட்டலும் இவன் தலை எடுத்து அமைத்தவை.

இதோ இப்போது கூட வானம் கொட்டித் தீர்க்கும் நேரத்திலும் பெங்களூரில் ஒரு முக்கிய பிசினஸ் மீட்டிங் வெற்றிகரமாக முடித்து கொண்டுதான் கோவை விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறான்.
காரின் உள்ளேயே அமர்ந்திருப்பது மூச்சை அடைப்பது போல உணர்ந்தான். மழையின் சீற்றம் கொஞ்சம் குறைந்திருந்தது. மெல்ல இறங்கி ரோடை க்ராஸ் செய்தான். அங்கே இருந்த ஒரு வழிகாட்டி மைல் கல் மேல் அமர்ந்தான். வானத்தை நிமிர்ந்து பார்த்தான். இன்னமும் கண்ணை மூடிக்கொண்டு பேய் மழை உண்டு என்று பயமுறுத்தியது. மணி என்னவோ ஐந்துதான் எனினும் இருட்டி இருந்தது. அவ்வப்போது சென்ற ஒரு வண்டியின் முன் விளக்கின் வெளிச்சம் மட்டுமே பாதை காட்டியது. முகத்தின் மேலே சட சடவென மழை துளிகள் விழ ஆரம்பிக்க அவன் சட்டேன்று எழுந்தான்.

‘காரில் எத்தனை நேரம் உட்காருவது அங்கிளை இன்னும் காணுமே...’ என்று யோசித்தான்.
எதிரே சைக்கிளில் ஒருவன் வர கைகாட்டி நிறுத்தினான், நிலைமை பற்றி விசாரித்தான். அங்கே மண்சரிவு ஏற்பட்டு பாதை முடக்கப்பட்டு உள்ளது எனாவன் தெரிவித்துவிட்டு சென்றுவிட, இவன் குழப்பமானான். 

'அடா, இப்பொது என்ன செய்வது, இப்படி நன்றாக நடுத்தெரிவில் இந்த பேய்மழையில் மாட்டிக்கொண்டோமே' என கொஞ்சம் கலவரமடைந்தான்.

அப்போது யாரோ குடையுடன் தன்னருகே வருவதை கண்டு நிதானித்தான் 

"நீங்க ரொம்ப நேரமா இங்க காத்திருப்பதைப் பார்த்தேன்.... வண்டி ஏதானும் ப்ராப்ளமா.... ஏதானும் உதவி வேணுமா?” என்றது அந்த இனிமையான குரல். ஆம் அது ஒரு பெண். மழை கோட் போட்டிருந்ததால் அவனுக்கு அது பெண் எனத் தெரிந்திருக்கவில்லை.
“ஆமா வண்டி ரிப்பேர்.... டிரைவர் அங்கிள் மெகானிக்கை தேடிப் போனாரு, ஆனா மலை சரிவு ஏற்பட்டு மாட்டிகிட்டார்” என்றான்.
“ஒ கடவுளே” என்று அவள் சிந்தைவயப்பட்டாள்.
“எத்தனை நேரம் இங்கேயே காரிலேயே இருப்பீங்க.... இங்க இந்த பக்கத்துல ஹோட்டல் கூட கிடையாது..... அதோ தெரியுதே அது எங்க சிறு வீடு.... உங்களுக்கு பரவாயில்லைனா இன்றிரவு அங்கே தங்கலாம்” என்றாள்.
அவன் தயங்கினான். ‘இது பெண்ணா இல்லை இந்த வேளையில் ஏதேனும் மோகினி நடமாடுகிறதோ’ என்று உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டான்.
“இல்லை தாங்க்ஸ்” என்று மறுத்தான்.
“காரிலேயே இருந்தா இந்த குளிர் உங்கள தாக்கி உடம்புக்கு வந்துடும்.... வேணும்னா வாங்க” என்று அதற்குமேல் வற்புறுத்தாமல் அவள் நகர்ந்தாள்.
‘இவளும் சென்றுவிட்டால் தனியே அவளே கூறுவது போல இந்த மழை இரவில் குளிரில் மூடிய காரில் எப்படி?’ என்று அவன் குழம்பினான்.
“உங்களுக்கு ஒண்ணும் சிரமம்....” என்று தயங்கியபடி கூறினான்.
“நத்திங், பெரிய வசதி எல்லாம் இருக்காது.... ஆனால் இரவை கழிக்க ஒரு பாதுகாப்பான இடம் நிச்சயமா உண்டு” என்றாள் பளீரென சிரித்தபடி. வெட்டிய மின்னலில் அவள் வெண் பற்கள் மின்னின.

காரை பூட்டிக்கொண்டுஅவளைத் தொடர்ந்து அவன் செல்ல முயன்ற போது இருட்டில் பாதை தெரியாமல் அவன் காலை எடுத்து வைத்த இடம் சேரும் சகதியுமாக இருக்க அதில் அவன் கால் வழுக்கி அம்மா என்றபடி மடங்கி விழுந்தான்.
“அய்யோ பார்த்து..... அடி பட்டுடுச்சா?” என்று பதறி ஓடி வந்தாள்.
“இல்லை இட்ஸ் ஒகே” என்று கூச்சத்துடன் கூறி எழ முயன்றான். அதே சகதியில் கால் மீண்டும் மீண்டும் தேய்த்துக்கொண்டு போனது.
அவள் குடையை மடக்கி அவன் காரின் மேல் வைத்துவிட்டு இரு கை கொண்டு தன் மொத்த பலத்துடன் அவனை எழுப்பி நிறுத்தினாள். அவன் மெல்ல சுதாரித்துக் கொண்டான்.
“தாங்க்ஸ்” என்றான் தன்னைக் கண்டு அவனுக்கே அசிங்கமாக இருந்தது.
“பெரிய அடி ஒண்ணும்.....” என்றாள்.
“இல்லை இடது பாதத்தில்தான் சுளுக்கு போல தோணுது” என்றான் காலை ஊன முடியாமல் நொண்டியபடி.
“இருங்க திரும்ப இந்த சகதி வாரி விட்டுடும்” என்று அவன் இடது கையை அவள் தோளைச் சுற்றி போட்டுக்கொண்டு குடையை பிரித்து பிடித்துக்கொண்டு மேலே நடந்தாள். ஒரு சிறு மேடு போல ஏறி அதன் மேல் இருந்தது அவளது அந்தச் சின்ன வீடு.
வீடு உள்ளே எப்படி இருந்ததோ, ஆனால் அந்த இருட்டு பொழுதிலும் பல வண்ண மலர்கள் மழை நீர் பட்டு தலை அசைக்க நறுமணம் அவன் நாசியைத் துளைத்தது. அவன் அவளின் உதவியோடு மெல்ல முன்னேறினான். வீட்டின் உள்ளே சன்னமாக ஒளிர்ந்தது லாந்தர் விளக்கு.
“சாரி இந்த மழையில் கரண்ட் வேற போயிடுச்சு.... இருட்டில உங்களுக்கு மேலும் கஷ்டம்” என்றாள் மன்னிப்பாக. நல்லவேளையாக அப்போது கரண்ட் மீண்டது.
“ஒ தாங்க காட்” என்றாள். பளிச்சென்று விளக்கு வெளிச்சத்தில் தான் அவளை முழுமையாகக் கண்டான். இளம் இருபதுகளில் இருந்தாள். அழகான வட்ட முகம். மாசு மறு இன்றி பளிச்சென்று இருந்தது. ஒரே ஒரு சின்ன கருப்பு பொட்டு மட்டுமே நெற்றியில். காதில் ஒரு சிறு முத்துத் தோடு. கழுத்தில் சன்னமான கருகமணி கையில் ஒரு மெட்டல் வளையல். இவ்வளவே அவளது அலங்காரம். முடி நீண்டு பிட்டத்தைத் தொட்டது. இருக்க பின்னி தொங்கவிட்டிருந்தாள்.

“உக்காருங்க” என்று கூறி உள்ளே சென்று சூடான டீ எடுத்து வந்தாள் கூட சில பிஸ்கட்டுகளும். அவன் காலை ஒரு துண்டை நனைத்து ஓட்ட பிழிந்து துடைத்தாள்.
சிராய்த்திருந்தது.... அதில் கொஞ்சம் ஆயின்ட்மென்ட் பூசி சின்னதாகக் கட்டு போட்டாள். அவன்தான் கூச்சத்தில் நெளிந்தான். “பரவாயில்லை வேண்டாம்” என்று தடுத்துப் பார்த்தான்.
“இல்லைங்க ஈரத்தில வேற நினைச்சிருக்கு... உடனே சுத்தம் செய்து மருந்து போடாட்டா செப்டிக் ஆயிடும்” என்று கருமமே கண்ணாயினாள். முதலுதவி படித்திருந்தாள் போலும்.

அவனது பான்ட் சேரும் சகதியுமாக இருந்தது கண்டு உள்ளே சென்று ஒரு லுங்கி எடுத்து வந்து கொடுத்தாள்.
“இதை உடுத்திக்கிட்டு பேண்டை குடுங்க அலசி காயப் போட்டுடறேன்.... பேன் காற்றில காலைக்குள்ள ஆறிடும்” என்றாள். “ஐயோ வேண்டாம்” என்றான் கூச்ச மிகுதியில்.
“அப்போ இந்த சகதியோடவே படுக்கப் போறீங்களா?” என்று கேட்டாள்.
“எனக்கொண்ணும் இதுல பெரிய கஷ்டம் இல்லை... இஷ்டப்பட்டா மாத்திக்குங்க” என்றுவிட்டு நகர்ந்தாள்.
அவர்கள் பேசிக்கொண்டே இருக்கும்போதே ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் அழுகுரல் கேட்டது.
‘என்ன’ என்று அதிர்ந்தான் ‘இவள் மணமானவளா.... இந்தச் சின்ன வயதில் மணமாகி குழந்தை வேறா?’ என்று திகைத்தான். “இல்லேடா, இல்லேடா கண்ணா, அம்மா தோ வந்துட்டேன்” என்று கூறிக்கொண்டே சிட்டாகப் பறந்து உள்ளே சென்று அள்ளி அணைத்து கையில் ஏந்திக்கொண்டாள்.

அவனுக்கு அம்மா என்றதும் தன் அம்மா கவலைப்பட்டுக் கொண்டிருப்பார் என்ற எண்ணம் வந்து "போன் பண்ணிக்கலாமா?" எனக் கேட்டான். "கண்டிப்பா" என்றாள்

அவன் தன் தாயை அழைக்க, அவர் கலவரத்துடன், 
"என்னடா திலீப் இருக்கே, இன்னும் வரலையே பா ஒரே மழையும் இருட்டுமா இருக்கே” என்று அங்கலாய்த்தார். 
“இல்லைமா நான் இன்னிக்கி வர முடியாது.... நான் நல்லா இருக்கேன்... இப்படி எல்லாம் ஆகிப்போச்சு....” என்று விவரித்தான்.
“நான் இங்க ஒரு வீட்டில தங்கி இருக்கேன்.. பத்திரமா இருக்கேன்.... கவலைப்படாதீங்கன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன்.... 

நாயகம் அங்கிள் அந்தப்பக்கம் மாட்டிகிட்டு இருக்கார்..... முடிஞ்சா வீட்டிற்கு வந்துவிடுவார்.... நீ ஜாக்ரதையா இருந்துகோம்மா.... என்னைப் பற்றி கவலைப்படாதே” என்று தைர்யம் கூறினான்.
“அடக்கடவுளே என்னடா இந்நிக்கின்னு இப்படி, சரி பார்த்துக்க பா” என்று கவலையோடு போனை வைத்தார்.


சிசுவை கையில் ஏந்தியபடியே சமையலறைக்குச் சென்று பால் கலந்து பாட்டிலில் ஊற்றி எடுத்துக்கொண்டு வந்து ஹாலின் ஒரு சுவரில் சாய்ந்து கீழே அமர்ந்து பாலை போட்டினாள். அதுவும் ஆவலாகக் குடித்தது பசி போலும்.
ஒரு வயது கூட ஆகாத சிசு. எட்டு பத்து மாதங்கள் இருக்கலாம்.... அழகாக கொழுக் மொழுக் என இருந்தது அந்த ஆண் குழந்தை.... கருவண்டு கண்களை முழித்து அங்கும் இங்கும் பார்த்தது.... குடித்து முடிக்க
“சமத்து டா செல்லம்” என்று திருஷ்டி கழித்தாள். அது சிரித்தது. அதைக்கண்டு அவளும் சிரித்துக் கொண்டாள். அதன் தலையை உயர்த்தினார்ப்போல பிடித்துக்கொண்டு முதுகில் லேசாக தட்டி கொடுத்தாள். அது சன்னமான ஏப்பம் விட்டது. அவள் முகத்தில் புன்னகை பூத்தது. பின்னோடு எழுந்து குழந்தையை தோளில் சாய்த்துக்கொண்டு மெல்ல தட்டி கொடுத்து தூங்கச் செய்தாள்... ஆனால் அவனோ விளையாடும் மூடில் இருந்தான், அவள் தோளில் இருந்தபடியே கண்கள் அலைபாய பராக்கு பார்த்தான்.
“சரியான வாலு, நான் சமைக்க வேண்டாமாடா... இப்போ போய் முழிச்சுகிட்டியே செல்லம்..” என்று கொஞ்சியபடியே
“நீங்க உடை மாற்றுங்க... நான் போய் இரவு உணவு தயார் செய்யறேன்” என்று சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


அங்கே இருந்த இரு கூடை சேர்களில் ஒன்றில் அமர்ந்திருந்த அவன் மெல்ல எழுந்து விந்தியபடியே பாத்ரூம் போய் தன் பேண்டை அவிழ்த்து தன் காலில் ஈரம் படாது வாஷ் பேசினில் அதை கழுவி சுத்தபடுத்தினான். சகதி பெரும்பாலும் மறைந்தது கொஞ்சம் கரை மட்டுமே இருந்தது... அதை பிழிந்து அங்கேயே வைத்துவிட்டு முகம் கை மற்ற கால் என்று கழுவிகொண்டு அவள் குடுத்த லுங்கியை அணிந்து கொண்டு துண்டால் முகம் துடைத்துக்கொண்டு வெளியே வந்தான். பேண்டை அங்கிருந்த இன்னொரு நாற்காலியின் மீது காயப்போட்டான்.

4 comments: