Tuesday 4 September 2018

MANNAVANE AZHALAMA 4

அவன் இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் எழும்போதே புத்துணற்சியுடன் எழுந்தான். காலை கடன்களை முடித்துக்கொண்டு யோகா வகுப்புக்குச் செல்வான். அங்கே புத்தம் புதிய மலர் போல காருணயாவைக் கண்டு மனம் சந்தோஷித்தது.... இப்போது ப்ராணாயாமாவில் பலதும் கற்றுக்கொண்டு யோகாவின் பல்வேறு ஆசனங்களையும் கற்று வந்தான். உடலும் மனசும் லேசாக ஆனதுபோல உணர்ந்தான். அங்கே வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வகுப்பு. அதனால் மற்ற நாட்களில் அவனே வீட்டில் தனியாக அவற்றை செய்து பார்ப்பான்.

காருண்யாவிடம் பேசியபோது, “நீங்க அப்படியும் செய்யலாம் அல்லெங்கில் , நடு நடுவே ஒரு மார்னிங் வாக் போல போகலாம்.... அதுவும் காலங்கார்த்தால பொழுதில் வாக் போனா உடம்புக்கு ரொம்ப நல்லது” என்று அறிவுரித்தினாள். அதன் காரணமாக வகுப்பில்லா நாட்களில் அவன் நடக்கத் துவங்கினான். கேரள மாநிலத்தை ‘காட்ஸ் ஒண் கண்ட்ரி’ என்பர். “தெய்வத்திண்டே நாடு” என்று அழைப்பர். அதன் பசுமைக்கு கேட்கவும் வேண்டுமா, பசுமையான சுற்றுபுரத்தின்  நடுவே நடை பழகும்போது உடலும் மனசும் சுத்தமாகி லேசாகி காற்றில் மிதப்பது போல தோன்றியது தருணுக்கு. மனதார காருண்யாவிற்கு நன்றி கூறிக்கொண்டான்.

இப்போதெல்லாம் மனதில் ஒருவித உற்சாகத்துடன் முகத்தில் புன்னகையுடன் நடமாடும் தருணை கண்டு வீட்டினர் சந்தோஷித்தனர்.

“எந்தா வருண், எந்தா விசேஷம், தருண் முகம் மலர்ந்நு?” என்று விசாரித்துக்கொண்டார் கல்யாணி. 

“அறியில்லா அம்மே, யோகா போகுனுண்டு, மனசு லேசாயிருக்கும். வினுவிண்ட மரணத்தின் சோகத்தை மறந்திருக்கலாம்..” என்றான் வருண்

ஒரு நாள் ஆபிசில் ப்ரீயாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது காருண்யாவிடம் அவளைப் பற்றி கேட்டான் தருண்

“உங்க வீட்டுல யாரெல்லாம உண்டு காருண்யா?” என்று

“நானும் அம்மாவும் என் அனியன்
(தம்பி) விஷ்ணுவும் மட்டுமே.... அச்சன் மறிச்சு போய் நாலு வருஷம் ஆறது.... தம்பி விஷ்ணு இப்போ இஞ்சினியரிங் கடைசி வருஷம் படிக்கிறான்.... நான் டிக்ரீ படிச்சு முடிக்கும்போது அச்சன் மறிச்சு.... சோ நான் வேலையத் தேடிண்டு குடும்பத்தை காப்பாத்தீண்டு வரேன்.... எங்களுக்குன்னு கொஞ்ச நிலம் இருக்கு, அதனால சாப்பாட்டுக்கு பெரிய சங்கடம் இல்லை....” என்றாள் புன்னகையுடன். 

எத்தனை பட்டும் அவள் முகத்தில் மாறாத புன்னகையின் ரகசியம் என்ன என்று தோன்றியது, அதை வாய் விட்டே கேட்டான். அவள் மீண்டும் புன்னகைத்தாள்.

“தியானம் பிராணாயாமா ரெண்டும் பண்ணினாலே மனம் ஒழுங்கு படும். 

அமைதியாகும். எப்போதுமே கஷ்டங்களக் கண்டு ஓட முடியாது இல்லையா சார்.... சந்திச்சுதானே ஆகணும் இல்லையா..” என்றாள். ஆம் என்று தலை அசைத்தான்.
“நீங்க உங்கள பத்தி ஒண்ணும் சொல்லலையே?” என்று கேட்டாள் அவன் முகம் நோக்கி.
அவன் ஒரு பெருமூச்சுடன், “சொல்ல என்ன இருக்கு.... என்ட வாழ்க்கையில சோகமான ஒரு கட்டத்தத் தாண்டி வர முயற்சி பண்ணீண்டு இருக்கேன்..... அதுக்கு உன்னையும் அறியாம நீ ரொம்பவே உதவியா இருக்கே ஆபிஸ்லேயும் யோகா மூலமாகவும்” என்றான். 

“விந்தியா, இப்போ உயிரோட இல்லை.... நாங்க கல்லூரி நாட்களிலே  இருந்தே காதலிச்சோம்.

அவாளுக்கு திடீர்னு உடம்பு முடியாம போச்சு, மருத்துவமனையில வெச்சு வைத்தியம் பார்த்தேன்... ஆனாலும் என்ன விதியின் முடிவோ என்னமோ அறியில்லா, டெல்லில அவ இருந்த ஹாஸ்பிடல்ல பெரிய தீவிபத்து ஆக்சிடென்ட் ஆச்சு.... அதுல அவ ரொம்பவே பாதிக்கப்பட்டா.... நான் போய் அவளோட ரெண்டு வார்த்தை பேசறதுக்குள்ளேயே அவள் இறன்னு போயி.... என்று மேலும் விவரங்கள் கூறினான் சோகம் இழையோட.

“அங்க இனிமே வாழ முடியாதுன்னு தோணி போயி... இவிட மாறி வன்னு.... இங்க என் பாமிலி இருக்கு.... அப்பா அம்மா, சேட்டன், ஏட்டத்தி, அனியத்தி திருச்சூர்ல இருக்கா” என்றான். “அதுமட்டுமில்லை இந்த எட்டு வருஷ போராட்டத்துல எனக்கு உதவியா மேரின்னு ஒரு கவர்னஸ் இருக்கா... அவளும் எங்களோட இங்கே வந்திருக்கா.... குழந்தைகள எப்போதுமே அவ பொறுப்பா பார்த்துப்பள்” என்றான்.

“உங்கள பார்த்தா இவ்வளோ பெரிய சோகத்த தாங்கீண்டு வேல செய்யறேள்னே ஆரும் சொல்லமாட்டா..... ஜோலின்னு வந்தா எவ்வளோ உஷாரா பண்றேள்..... கண்டிச்சு வேலை வாங்கறேள்..., அமைதியா உக்காந்துண்டு பிளான் பண்ணறேள்.... மனசுக்குள்ளா பூகம்பமே வெச்சுண்டு இது எப்படி சாத்தியம்..... என்னைபோய் கேட்டேளே, நான் எப்படி புன்னகையோட இருக்கேன்னு.... உங்க சோகத்துக்கு முன்னாடி என்னோடது ஒண்ணுமே இல்லையே...?” என்று வியந்தாள். 

“அதான் சொன்னேனே, எல்லாம் உன் மாஜிக் னு..” என்று சிரித்தான். 

அவன் வரிசை பற்கள் மின்னுவதை கண்டு வியந்து பின் கண்களை தழைத்துக்கொண்டாள்.

“ஆமா காருண்யா, உனக்கு இந்த பேரை யார் வெச்சா.... என்ன அழகான பேர், எவ்வளவு பொருத்தமா வெச்சிருக்கா...” என்று அவன் வியந்தான்.

“அப்பாதான் வெச்சாளாம், அம்மா சொல்லுவா.... அவர் மனசும் அப்படிதான்... கருணை நிறைஞ்சது, அதனாலதான் எனக்கு இந்தப் பேர வெச்சார் போலிருக்கு” என்றாள்

அதன்பின் அவர்களுக்குள் ஒரு நல்ல புரிதலும் நட்பும் ஏற்பட்டது. அவளை ஒரு நாள் தன் வீட்டிற்கு அழைத்தான். பிள்ளைகளை காண அவளுக்கும் கூட ஆசை இருந்ததால் உடனே ஒப்புக்கொண்டு வந்தாள். கனிகாவையும் நிதினையும் தன் இரு பக்கத்தில் அமர்த்திக்கொண்டு பேசினாள். அவர்களுக்கு சரியாக அரட்டை அடித்தாள்.

 மூவருமாக ஏதோ பேசி சிரித்துக் கொண்டனர் . அவளுக்கு அவர்களை பிடித்தது போலவே அவர்களுக்கும் அவளை மிகவும் பிடித்துப்போனது. அவள் கிளம்பும்போது நிதின் அழவே துடங்கிவிட்டான்.

“ஆண்ட்டி போண்டா.... என்னோடவே இருக்கணம்” என்று.
“நான் இப்போ போணமே குட்டா... நீ மிடுக்கன்
  (சமத்து) அல்லே, ஆண்ட்டி போயிட்டு நாள வராம்” என்று சமாதானப்படுத்தினாள். 

“நாள வருமோ?” என்றான் நிதின். 

இங்கே வந்து பள்ளியில் அனைத்துப் பிள்ளைகளுடன் படித்து மலையாளம் கொஞ்சம் சரளமாக வந்திருந்தது இருவருக்கும். இங்கே வந்து இப்போது பத்து மாதங்களும் ஆகி இருந்தன. 

“தீர்ச்சையாயிட்டு வராம், ஒகே, பை” என்று கிளம்பினாள்.

“கனிசேச்சி, ஆண்ட்டி வெரி நைஸ் அல்லே சேச்சி” என்றான். ஆம் என்பதுபோல அவளும் தலை ஆட்டிக்கொண்டாள். அவனளவு ஒரே நாளில் ஒட்டிக்கொள்ளவில்லை எனினும் அவளுக்குமே காருண்யாவை பிடித்துதான் போனது.

இந்நேரத்தில் ஓணம் பண்டிகை வந்தது. அனைவரும் அவர்தம் வீட்டில் பல நிற பூக்களை பறித்து வந்தனர். இங்கும் அங்கும் ஓடி தெரிந்தும் தெரியாமலும் பூக்களை சேர்த்துக்கொண்டு வந்தனர். பின்னர் பெரிது பெரிதாக வீட்டின் முன் பூக்கோலம் வைத்தனர். மூன்று நாள் பண்டிகையாக உத்தராட நாளிலிருந்தே துடங்கியது பண்டிகை காலம்.... தருணின் தாய்வீட்டில் ஒணப்பண்டிகயை ஒட்டி பலத்த ஏற்பாடுகள் நடந்தன. சாரதாவும் மகள் சுசியுமாய் பூக்களை பறித்து பெரிய டிசைனாக பூக்கோலம் வைத்தனர். 

அவர்களுடன் வந்து இரவே சேர்ந்துகொள்ள கூறி இருந்தனர். ஆயினும் கனிகா இப்போது வளர்ந்து வருகிறாள். அவளுக்கு தன் வீட்டில் அப்படி தனியாக பூக்கோலம் போட்டு பண்டிகை கொண்டாட ஆசை வந்தது. தருணையும் மேரியையும் பிடுங்கினாள். 

“வா, போய் பூ தேடி பறிச்சுண்டு வரலாம்” என்று 

“அங்கதான் சுசி எல்லாம் பண்றாளே கனி.... நமக்கு அவிட போகாம் அங்கே கொண்டாடிக்கலாமே டா..” என்றான். அவளுக்கு சம்மதமில்லை. சரியென மேரியுடன் அனுப்பினான், 

பை நிறைய மடி நிறைய வித விதமான பல வண்ண பூக்களுடன் மகிழ்ச்சியாக வீடு வந்தாள். ஆனால் மேரிக்கு பரிச்சயம் இல்லை, கனி மிகவுமே சின்னவள் என்பதால் எப்படி ஆரம்பிப்பது எப்படி வைப்பது என்று அறியாமல் குழம்பினாள்.

தருணுக்கு பள்ளி நாட்களில் தங்கள் வீட்டில் ஓணம் பண்டிகை கொண்டாடிய நினைவில் தடுமாறி உதவி செய்யப்போனான். கனிகாவிற்கு திருப்தி இல்லை. அழுகை முட்டியது. 

“எல்லாரும் ஓணம் வெக்கறா நம்மாதுலதான் இல்லை..” என்று புகார்.
அந்த நேரம் காருண்யா இவர்கள் வீட்டிற்கு வந்தாள் கையில் பாயசக் கிண்ணத்துடன். அவளைக் கண்டு ஓடி சூழ்ந்து கொண்டனர் இருவரும்.
அழகிய ஜரிகை போட்ட ரெட்டை முண்டு எனப்படும் கேரள டைப்பில் வெள்ளை புடவை அணிந்து அதற்கு பச்சை ப்ளவுசும் அணிந்திருந்தாள், நெற்றியில் பெரிய சிகப்பு வட்ட பொட்டு, அதன் மீது சந்தன கீற்று. காதில் குடை ஜிமிக்கி, கழுத்தில் பச்சை மாங்கா மாலை. கையில் தங்கமும் பச்சையுமாக வளையல்கள் குலுங்கின. தலையை ஆற்றுக் கட்டாக பின்னி நீண்டு தொங்கிய முடியை நுனியில் முடிச்சிட்டிருந்தாள். அதில் நிறைய மல்லிகை பூ சூடி தேவதையாய் அவள் வாசலில் வந்து நின்றபோது மனம் நிறைந்தது. முதன் முறையாக தருணின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

“ஆண்ட்டி ஞான் பூக்கோலம் வெய்க்கான் ட்ரை செய்து, வரலை.... நீங்கள் எனக்கு கத்து தராமோ?” என்று சங்கோஜமாக கேட்டுக்கொண்டாள் கனி. 

“ஓ அப்படியா, பூக்கள் எல்லாம் கொண்டு வந்னோ,..... அப்போ வா ஞான் அழகாயிட்டு ஓணம் வைக்க சொல்லித்தராம்” என்று புடவையை வரிந்து கட்டிக்கொண்டு வாசலில் நீர் தெளித்து ஈரமாக்கி, களிமண்ணில் குழைத்து நடுவில் மேடு செய்து அதன் மீது பெரிய மந்தாரப் பூவை வைத்துவிட்டு துவங்கினாள். அவள் இயல்பாக அப்படி ஒணப்பூ வைத்துக் கொண்டு இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான் தருண். மனம் நிறைந்தது. தன் மகளின் ஏக்கம் தீர்த்தாளே என்று அவளிடம் நன்றி பொங்கியது.
அழகழகான வண்ணக்கலவையில் ரகரகமான பூக்களை வட்டவட்டமாக அடுக்கிக்கொண்டே வந்தாள். கனிகாவும் நிதினுமாக ஒவ்வொன்றாய் எடுத்து குடுத்து உதவ கண்முன்னே வண்ணமயமான ஓணப்பூகோலம் விரிந்து பறந்து மிளிர்ந்தது. முடித்து எழுந்தாள்

“ஹையா” என்று பிள்ளைகள் இருவரும் கைகொட்டி துள்ளி குதித்து ஆரவாரித்தனர். அதைக்கண்டு தருணுக்கும் மேரிக்கும் கூட சந்தோஷமே. “தாங்க்யு காருண்யா, நல்ல சமயத்தில் வந்தாய்.... சரியாக போட வரலைன்னு என்னை உண்டு இல்லைன்னு பண்ணீட்டா எண்டே பொன்னுமோள்” என்றான் சிரித்தபடி. 

“இட்ஸ் ஒகே, பிள்ளைருக்குத்தானே பண்டிகை... அதான் நான் கூட பாயசம் எடுத்துண்டு வந்தேன்... லேட் ஆச்சு நான் கிளம்பட்டுமா..” என்று எழுந்தாள்.
“ஆண்ட்டி போகாதே” என்று மீண்டும் முரண்டு செய்தான் நிதின். 

“இன்னு ஓணம் அல்லே குட்டா... ஆண்ட்டி வீட்டிலேக்கு போணமே... நீயும் நிண்டே சுசி சேச்சி வினீத் எல்லாரும் கூடி அங்கே கொண்டாடணமே, ஆண்ட்டி நாள வராம் கெட்டோ..” என்று எப்போதும் போல அவனை சரிகட்டி கிளம்பினாள்.

‘நாளுக்கு நாள் நிதின் அவளிடம் மிகவும் ஒன்றிக்கொள்கிறான் இது நல்லதல்ல’ என்று தருணின் மனதில் எண்ணம் எழுந்தது. ‘இது நல்லதில்லையா’ என்று அவனின் மனம் கேலியாக அவனைப் பார்த்து சிரித்தது.

‘என்ன நினைப்பு இது. என்னால் என் வினுவை மறக்க முடியாது’ என்று தலையை உதறிக்கொண்டான். 

‘உன்னை யாருடா வினுவை மறக்கச் சொன்னது, அதுக்காகன்னு நீ இப்படியே இருக்கப் போறியா என்ன..’ என்று மனம் கேள்வி கேட்கத் துடங்கியது முதன் முறையாக.

பின்னோடு பிள்ளைகள் ரகளை செய்ய, இருவரையும் அழைத்துக்கொண்டு தாய் வீடு சென்றான். மற்ற இருவருடன் சேர்ந்து விளையாடச் சென்றனர். அப்படியே அவர்களை தங்கள் வீட்டிற்கும் அழைத்துபோய் ஓணப்பூ வைத்ததை காண்பித்தனர் கனிகாவும் நிதினும்.

“ஹையா எத்தரை நன்னாயிட்டுண்டு, ஆரா வெச்சது?” என்று கேட்டுக்கொண்டாள் சுசி.
“எண்ட ஆன்ட்டியா” என்றான் நிதின். 

“ஆரா ஆண்ட்டி?” என்றாள். 

“காருண்யா ஆண்ட்டி, நினக்கு அறியில்லே?” என்றான் சிறுவன். 

“இல்லல்லோ” என்றாள் அவள். 

“சரி ஞான் காணிச்சுத் தராம்” என்றான் பெரிய மனுஷன் போல.

வீட்டை அடைந்து “அம்மே கனிகாவிண்டே ஓணப்பூ எத்தரை நன்னாயிட்டு அறியோ.... ஆண்ட்டி வெச்சதுன்னா...” என்றாள் சுசி.
“ஆரா?” என்பதுபோல தருணை கண்டாள் கல்யாணி. 

“எண்ட ஆபிசில் காருண்யா இல்லே, அவள் வன்னிருன்னு... பிள்ளைரு அவளை பிடிச்சு நிறுத்தி ஓணப்பூ வைக்கான் பரஞ்சு.... அவளும் செய்து...” என்றான்.
சாரதாவும் வருணும் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டனர்.

பின் எல்லோரும் ஒன்றாக ஓண சத்யா உண்டுவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

“இன்னு சந்த்யா வேளையில் இவிடே கணபதி அம்பலத்தின் மண்டபத்தில் கைகொட்டிகளி(கோலாட்டம் போன்றதொரு பெண்கள் ஆடும் ஆட்டம். கை கொட்டியபடி சுற்றி சுற்றி ஆடுவார்கள்) உண்டு... நீயும் வா தருண், கொறைய காலமாச்சே நீ இதெல்லாம் கண்டுட்டு” என்றாள் கல்யாணி. 

“கைகொட்டி களி கண்டுட்டு ஞான் எந்தா செய்யும் அம்மே, பிள்ளைர கூட்டிக்கொண்டு நிங்கள் போய்கோ” என்றான். 

“அல்லா, நீயும்தன்னே வரணும்” என்றாள்.

சரி என்றான். பிள்ளைகள் தங்கள் அறையில் விளையாடி கொண்டிருக்க, கல்யாணி வருணிடம் கண் காண்பித்துவிட்டு மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.

“எந்தா தருண், நீ ஒரு கல்யாணம் கழிக்கில்லே..?” என்றாள். 

“அம்மே, இப்போள் எந்தினா ஈ பேச்சு?” என்றான் காட்டமாக.

“எனிக்கி கல்யாணமே வேண்டா அம்மே.... எனிக்கி எண்ட பிள்ளைகள் மதி....” என்று மறுத்து பேசினான். 

“அது ஆவில்லா மோனே. அப்படி எத்தர வயசாயி நினக்கு.... நீ கல்யாணம் பண்ணிக்கத்தான் வேணம். நான் பார்க்கறேன் நல்ல பெண்ணா” என்றாள். 

“அம்மே எந்தா ஈ பிடிவாதம்....?”
“அதே, பிடிவாதம்தன்னே.....”
“இன்னா பின்னே நோக்காம்” என்றான் அப்போதைக்கு.

என்னடா இது புதியதொரு பூதம் கிளம்புகிறது என்று யோசித்தான் தருண். மாலையில் எல்லோருமாக கணபதி கோவிலுக்குச் சென்று அங்கே ஓண ஸ்பெஷலாக கைகொட்டிகளி காணவென அமர்ந்தனர். அவரவர் ஆங்காங்கே கிடைத்த இடத்தில மணல் திட்டில் அமர்ந்து ஆட்டத்தைக் கண்டனர். மொத்தம் இருபத்தியொரு பெண்கள், எல்லோருமே பதினெட்டு முதல் முப்பது வயதுவரையிலானவர். ஒரே போல முண்டு சாரி உடுத்தி சிகப்பும் பச்சையுமாக ப்ளவுஸ் அணிந்து, தலையை ஒரே போல கொண்டையிட்டு அதில் மல்லிகை பூ சுற்றி, நெற்றியில் வட்டபொட்டும் சந்தன கீற்றுமாக ஒரு போல இருந்தனர். நடுவில் ‘நிற பறை’ எனும் தென்னங்குருத்துக்களை நெல்கதிர் நிறைந்த பறையின் மீது சொருகி வைத்து அதனைச் சுற்றி வந்து ஆடத் துடங்கினார்.

மிக இனிமையாக பாடியபடி மற்ற பெண்கள் சுற்றிலும் நிற்க, இந்தப் பெண்களின் ஆட்டம் மனதை மயக்கியது. தருண் ஆடியவரை கண்டுகொண்டே வர அதில் காருண்யாவும் இருப்பதைக் கண்டான். அவளை கண்டபின் மற்ற எவரும் அவன் கண்ணில் தெரியவில்லை.


அழகாக நளினமுடன் ஒயிலாக உடலை வளைத்து குனிந்து நிமிர்ந்து அவள் கை தட்டி ஆடிவர அவள் முகத்திலோ மாறாத புன்னகை. அந்த கண்களில் எப்போதும் போல சாந்தியும் கனிவும். ஆட்டம் முடியும்வரை பார்த்தபடி அமர்ந்திருந்தான். பின் ஆட்டம் முடிந்து மற்ற கலை நிகழ்ச்சிகள் துவங்கின. கனிகாவும் நிதினும் கூட்டத்தில் புகுந்து அவளிடத்தில் சென்றுவிட்டனர்.

“ஆண்ட்டி அடிபொளி” (ஆட்டம் பிரமாதம்) என்றான் நிதின்.
“அட குட்டா நீ எப்போள் வன்னு.... என்று கேட்டாள். 

“ஆங், எல்லோரும் வந்துட்டுண்ட ஆண்ட்டி.... எல்லோரும் டான்ஸ் கண்டு, வளர நன்னாயிட்டுண்டு ஆண்ட்டி” என்றான் அவள் கையை பிடித்தபடி. 

“ஆண்ட்டி வா” என்று கனிகாவும் அவள் கையைப் பிடித்து அழைத்து தங்கள் குடும்பத்தின் அருகில் வந்தாள். பெரிய மனுஷி போல ஒவ்வொருவரையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

அந்நேரம் வரையிலும் கூட தருணின் பார்வை அவளைவிட்டு விலகவில்லை அவள் பொதுவாக வணக்கம் கூறி புன்னகைத்தாள். வருணும் சாரதாவும் ஒருவரை ஒருவர் கண்டு புன்னகைத்துக்கொண்டனர். 

“ஞான் வரட்டே, நேரம் ரொம்ப ஆச்சு” என்று கூறி கிளம்பினாள்.
“கொண்டுவிடனோ?” என்று கேட்டான் வருண்,
“ஐயோ வேண்டா” என்றாள்.

No comments:

Post a Comment