Saturday 29 September 2018

ENGIRUNDHO VANDHAAN - 9


சரி வர்ற சனிகிழமை என்னோட இங்க வந்து இருக்கணும்” என்று கேட்டுக்கொண்டார்.
“சரி ஆண்ட்டி” என்றாள் உதறலுடன். அவளது தேர்வு மும்மரத்தில் இதை திலீபிடம் கூறவில்லை அதிகம் பேசவும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அத்யாயம் பதினான்கு
தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை துடங்கியது வெள்ளியன்று. அடுத்த நாள் காலை கண்ணனையும் திலீப் வாங்கிக்கொடுத்த புதிய உடை அணிவித்து ரெடி செய்து தானும் எளிய காட்டன் புடவை அணிந்து கொஞ்சம் பழங்கள் மட்டும் வாங்கிக்கொண்டு கிளம்பினாள். விசாலம் கொடுத்த விலாசம் கண்டுபிடித்து சென்றுவிட்டாள்.
மிக பிரம்மாணடமான பங்களா அது. வாயிலில் காப்பானிடம் கூறினாள். அவன் உள்ளே கேட்டு பின் அனுமதித்தான். கார் பார்க்கில் நாயகம் அங்கிளை கண்டு வணங்கினாள். அவரும் நலன் விசாரித்தார்.
வரும்போதே கவனித்தாள்... மிகப் பெரிய தோட்டம். அதில் இல்லாத பூக்களே இல்லை எனலாம்.... மா பலா தென்னை வாழை என்று மரங்கள் சூழ்ந்து சோலை போல இருந்தது இருபக்கமும்.....
பின் உள்ளே காலடி எடுத்து வைத்தாள். மிகப் பெரிய அரண்மனை போலிருந்தது வீடு. தேக்கு மர தூண்களும் உயர் ரக சித்திரங்களும் லஸ்தர் விளக்குகளுமாக மிக அருமையாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.
உள்ளே ஹாலில் கால் பதித்தாள்..... பயத்தில் கை வியர்த்து ஈரமாகியது.....

“ஆண்ட்டி” என்று அழைத்தாள்.
“வா வா மது உள்ள வா..... வாடா குட்டிப் பயலே” என்று கண்ணனை வாங்கிக்கொண்டார் விசாலம்.
“உள்ளே குரல் கொடுத்து அவனுக்கு கொஞ்சம் பாலும் அவளுக்கு குளிர் பானமும் கொண்டு வரச் செய்தார்.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ஆண்ட்டி” என்று மறுத்தாள்.
“மூச், பேசாம உக்காரு மது..... எனக்கு இங்க வீட்டில தனியா ஒரே போர்.... அதான் உன்னையும் பயலையும் அழைத்தேன்.... இன்னிக்கி புல்லா என்கூடத்தான் இருக்கப் போறே” என்றார் அவர் உற்சாகமாக.
‘ஐயோ தீபுவிடம் கூறவில்லையே.... இங்கே கண்டு கோபித்துக் கொள்வாரோ என்னமோ’ என்று மேலும் பயந்தாள்.
“சகஜமாக உக்காரு பயமில்லாம பேசு மது” என்று ஊக்குவித்தார். அவள் புன்னகைத்தாள்.
“இதப் பார்த்தியா” என்று எடுத்து வைத்திருந்த ஒரு ஆல்பத்தை அவளிடம் நீட்டினார்.
அதில் திலீபின் குழந்தை பருவம்  துடங்கி இளமைகாலம் மற்றும் இப்போது உள்ளதுவரை பல படங்கள் பெற்றோருடனும் நண்பர்களுடனும் படிக்கும்போதும் என்று நிறைந்திருந்தன. அதை ஆவலுடன் பார்த்தாள் மது.

‘இவ்வளவு பெரிய குடும்பத்து ஒற்றை மகன் என்னைபோய் ஏன் விரும்பினார்..... பாவம் அவனது தாய்.... என்னென்னா கனவுகள் கண்டிருப்பார் அவரின் திருமணம் குறித்து’ என்று எண்ணம் எழுந்தது.
பலதும் பேசினார் விசாலம் இவள் மௌனமான புன்னகையோடு கேட்டிருந்தாள். அதில் பலவும் திலீபனின் சிறுவயது சுட்டித்தனங்கள் பெரும்பாலும் அவனைப் பற்றிய பேச்சுக்கள். கேட்க கேட்க இனித்தன மதுவிற்கு.
‘இவற்றை எல்லாம் என்னிடம் ஏன் கூறுகிறார்..... இவருக்கு எந்த அளவு எங்கள் உறவைப் பற்றி தெரியும்?’ என்று மது குழம்பினாள். விசாலாமோ ஒவ்வொன்றும் பேசும்போது அவளின் கண்களையும் முக பாவங்களையும் கூர்ந்து நோக்கி இருந்தார். அவரின் பலவருட அனுபவம் அவருக்கு பல உண்மைகளை உணர்த்தின.
‘இவள் பணத்திற்கு மயங்காதவள்..... இவளிடம் அன்பு நிறைந்துள்ளது.... பாசம் மிக்கவள்..... என் மகனை தன் வலையில் விழவைக்க இவள் முயன்றிருக்க மாட்டாள்..... பிறருக்காகவே வாழ்கிறவள் இவள்’ என்று தோன்றியது.
“கண்ணா இங்க வா” என்று கூப்பிட அவனும் தவழ்ந்து வந்தான்.
“பாட்டிகிட்ட வா” என்றார்.
“பாத்தி” என்றான் மழலையில்
“ஐயோ என்ன அழகா பாட்டின்னு சொல்றான்” என்று வாரி அணைத்துக்கொண்டார்.
மது மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தாள்.
“வா மது” என்று அழைத்துச் சென்று வீட்டைச் சுற்றி காண்பித்தார். வீடா அது அல்ல அல்ல அரண்மனை. மது பிரமித்தவள் மேலும் மிரண்டாள்.

‘இந்த வீட்டிற்கு நான் மருமகளாவதா.... ஐயோ என்னால முடியாது...’ என்று கலங்கினாள் அவளின் அனைத்து முக பாவங்களையும் கண்டுகொண்டே சிரித்துக்கொண்டார் விசாலம். அவர் மனதின் மதிப்பில் மேலே மேலே அவள் ஏறிக்கொண்டே போனாள்.
‘என் பிள்ளை எந்த தப்பும் செய்யவில்லை.... இவள் எனக்கு மருமகளாக தகுதி ஆனவள்தான்’ என்று தீர்மானித்தார்.
“திலீப் இப்போ சாப்பிட வந்துடுவான் மது.... நீ  கண்ணனுக்கு ஊட்டணும்னா ஊட்டீடு இப்போவே..... பிறகு நாம மூணு பேறுமா ஒண்ணா சாப்பிடலாம்” என்றார்.
‘என்னது அவர் வேற இப்போ வராரா போச்சு... நான் தொலைஞ்சேன்.. கோச்சுக்கப் போறார்’ என்று பயந்தாள்.

ஆயினும் அவர் சொல்லைத் தட்டாது குழைய பிசைந்த ரசம் சாதமாக கொண்டுவந்து கண்ணனுக்கு ஊட்டினாள். அவனும் சமத்தாக சாப்பிட்டான். அவன் வாய் துடைத்து இடுப்பில் வைத்துக்கொண்டு அவள் வெளியே வரவும் திலீப் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. விசாலம் ஒரு சுவாரஸ்யத்துடன் இருவர் முக பாவங்களையும் உணர்சிகளையும் கண்டு கொண்டிருந்தார். அவனுக்கு சொல்லப் பட்டிருக்கவில்லை மது வரப்போகிறாள் என்று. சாப்பிட கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்று மட்டுமே சொல்லி இருந்தார்.
வந்தவன் அதிர்ச்சியில் உறைந்துபோனான்.

‘சுவாதீனமாக என் மது என் வீட்டில் என் மகனை தூக்கிக்கொண்டு வாய் துடைத்துவிட்டபடி உள்ளே இருந்து வருகிறாளே..... என்ன நடக்கிறது இங்கே’ என்று பிரமித்து போனான்.
“என்ன, நீ இங்க எப்பிடி?” என்று கண்ணால் வினவினான்.
“அம்மாதான்” என்று அவளும் கண்களால் விசாலத்தை காண்பித்தாள்.
“என்னடா ராஜா சாப்பிடலாமா?” என்று கலைத்தார் விசாலம்.
“ஆங் என்னம்மா... ஒ... ஒ சாப்பிடலாம் மா” என்றான் தடுமாறி. அவர் நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டார்.
“வா மது” என்று அழைத்தார்.
“நீங்க சாப்பிடுங்க ஆண்ட்டி.... நான் அப்பறமா சாப்பிடறேன்” என்று தயங்கினாள்.
“ஒ முதல் ஒரு ரவுண்ட் நமக்கு பரிமாறீட்டு சாப்பிடறேங்கறியா... அதுவும் சரிதான்.... இன்னைக்கு உன் கையால பரிமாறி சாப்பிட்டதா இருக்கட்டுமே” என்றார் இயல்பாய்.
மது திலீப்பை பார்த்தாள். அதில் கோவம் இல்லை ஆச்சரியமும் அதிற்சியுமே கண்டவள் கொஞ்சம் தெளிந்தாள்.
“வா பரிமாறு” என்று அழைத்தான் அவனும் அவளை ஜாடையில்.
அவள் உடனே உவகையோடு முந்தானையை இழுத்து செருகிக்கொண்டு பரிமாற ஆரம்பித்தாள்.
தன் மனதுக்கினியவனுக்கும் அவன் தாய்க்கும் ஆசை ஆசையாக பரிமாறினாள்.
“உன் தட்டுலயும் வை.... பின்னோட வந்து உக்காரு  மது” என்றார் விசாலம்
“சரி” என்று அப்படியே செய்தாள்.

அவள் தட்டை அவன் பக்கத்துக்கு இடத்துக்கு நகர்த்தி விட்டார் விசாலம். ஒரு நொடி தவித்தாள் மது. பின் தயங்கியபடி அவனருகில் வந்து அமர்ந்தாள். அது போன்ற பதார்த்தங்களை அவள் கண்டது கூட இல்லை. மெல்ல சாப்பிட ஆரம்பிக்க அவள் தொண்டை குழியில் இறங்கவில்லை, பயம் அடைத்தது.
“சரியா சாப்பிடு... இது உன் வீடு” என்றார் விசாலம்.
“ஆங்!!!” என்று திலீப்பும் மதுவும் ஒன்றாக அதிர்ந்தனர்.
‘என்னவாயிற்று இன்று அம்மாவுக்கு’ என்று வியந்தான் திலீப். ஆயினும் தன்னருகில் தன் வீட்டில் தன் மது பரிமாறி அவனருகில் அமர்ந்து அவனோடு உண்பதில் அவனுக்கு எங்கோ பறப்பதைப் போன்ற ஆனந்தம்.
“ம்ம் சாப்பிடு” என்று ஜாடையில் ஊக்குவித்தான். அவளும் ரசித்து ருசித்து மெல்ல உண்ண ஆரம்பித்தாள்.
சாப்பிடும்போது டேபிளின் கீழே அவள் கையை வேறு பிடித்துக்கொண்டான் திலீப்.
“ப்ளிஸ் விடுங்களேன்” என்று கெஞ்சிப் பார்த்தாள்.
“உஹூம்” என்று அடம் பிடித்தான்.
சாப்பிட்டு முடித்து அவள் எல்லாவற்றையும் ஒழித்து போட உதவினாள். இயல்பாக காரியங்களை செய்வதை கவனித்துக்கொண்டார் விசாலம்.

வெற்றிலை தட்டுடன் வர “எனக்கு நீயே மடிச்சு குடுத்துடு மது” என்றார். பக்குவமாக பாக்கு வைத்து சுண்ணாம்புடன் மடித்து கொடுத்தாள். “எனக்கு?” என்றான் வேண்டுமென்றே திலீப்.
“அவனுக்கும் கொடுமா.... சீக்கிரமே அவனுக்கும் கல்யாணம் ஆகப் போகிறதே இனிமே போட்டுக்கலாம்” என்று சிரித்தார்.
மதுவிற்கு குப்பென்று வியர்த்தது.
‘ஒருவேளை பெண் பார்த்துவிட்டாரோ. அப்படி ஒரு வேளை அவர் என் தீபுவிற்கு பெண் பார்த்து மணமுடித்தாலும் இந்த வீட்டில் இந்த ஒரு நாள் நான் அவருடன் இருந்ததை எண்ணிக்கொண்டே நிம்மதியுடன் வரப்போகும் காலத்தை வாழ்ந்துவிடுவேன்’ என்று எண்ணி பெருமூச்சுவிட்டுக்கொண்டாள்.
அவனுக்கும் பக்குவமாக மடித்து கொடுத்தாள். அவளிடம் இருந்து எடுத்துக்கொண்டு வாயில் போட்டுக்கொண்டான் அவள் முகத்தையே பார்த்தவண்ணம்.
சிவந்துபோய் முகம் தழைத்தாள்.
“சோபாவில் உக்காரு மது.... இது என்ன கீழ உக்கார்ந்துகிட்டு” என்று அதட்டி மேலே அமரச் செய்தார்.
“நீ போட்டுகலையா மது?” என்று கேட்டார்.
“இல்லைமா பழக்கமில்லை” என்றாள்.

“மது உன் வீட்டுல யாரெல்லாம் இருக்கா?” என்று வேண்டுமென்றே கேட்டார் விசாலம். அவரை அதிர்ச்சியோடு ஏறிட்டான் திலீப். அவனை காணாதவர் போல மதுவின் முகம் பார்த்தார்.
“யாருமில்லை ஆண்ட்டி.... எனக்கு என் கண்ணன் மட்டும்தான் உலகத்திலேயே ஒரே துணை உறவு எல்லாம்” என்றாள் மெல்லிய குரலில்.
“ஒ அப்போ உன் கல்யாணம்?” என்று கேட்டார்.
“அதைப் பற்றி நான் பெரிதாக நினைக்கலை ஆண்ட்டி” என்றாள்.
“ஓஹோ அதுசரி..... உன் கண்ணை எனக்கு கொடுப்பியா?” என்று கேட்டார்
அவள் அதிர்ச்சியுடன் திலீப் முகம் கண்டு பின் விசாலத்தின் முகம் கண்டாள்.
“இல்லைமா ப்ளிஸ்... அவனை மட்டும் கேட்காதீங்க.... அவன் மேல நான் என் உயிரையே வெச்சிருக்கேன்.... அவனைவிட்டுட்டு என்னால வாழவே முடியாது” என்றாள்.
“சரி அப்போ நீயும் இங்கேயே வந்துடு” என்றார். அவள் மேலும் அதிர்ந்தாள். விட்டால் அழுதுவிடுவாள் போல இருந்தது முகம்.
போதும் தன் விளையாட்டு என்று நினைத்த விசாலம்

“அசடே உன்னைவிட்டு நான் உன் பிள்ளையை பிரிப்பேனா.... என்னைவிட்டு நீயும்தான் என் மகனை பிரிப்பாயா..... என்னால் மட்டும் என் மகனை பிரிந்து இருக்க முடியுமா..... உனக்கு உன் கண்ணனைப்போல தான் எனக்கும் என் மகன் திலீப்... அவன் மேல நான் என் உயிரையே வெச்சிருக்கேன் மது..... அதனால்தான் அவன் மனசுப்படி அவன் விரும்பிய பெண்ணையே அவனுக்கு மணமுடிப்பதுனு முடிவே செஞ்சுட்டேன்..... அதான் உன்னை வரவழைச்சேன்...... சும்மா கொஞ்சம் கேலி பண்ணலாமேன்னு தான் கொஞ்சம் ரெண்டு பேரையும் அதிர வெச்சேன்.... இப்போ சொல்லு என் மகனை பண்ணிக்க உனக்கு இஷ்டம்தானே..... என் மகன் சொன்னபடி கண்ணன்தான் என் முதல் பேரனா இருப்பான்..... அதுக்குப் பிறகு நீங்க பார்த்து இந்த கிழவி மேல இறக்கப்பட்டு இன்னொன்னு பெத்து குடுத்தா நானும் கண்ணனும் அந்தக் குழந்தையோட விளையாடிப்போம், இல்லையாடா கண்ணா” என்று அவனை வாரிக்கொண்டார்.
“அம்மா” என்று கட்டிக்கொண்டான் திலீப். அவன் தலையை சிலுப்பி விட்டார்.
“அம்மா” என்று அவர் மடி சாய்ந்து அழுதாள் மது.
“சீ அசடு, எதுக்கு அழுகிறே..... எல்லாம் தான் நல்லதே நடக்குதே..... கண்ணை துடை மா..... பாரு கண்ணன் உன்னையே பார்க்கிறான்.... அப்பறம் அவனும் அழுவான்” என்று மிரட்டினார்.
மது சிரித்துக்கொண்டே கண்களை துடைத்துக்கொண்டாள்.

“போங்க போய் திலீபோட ரூமை பார்த்துட்டு வாங்க... போடா கூட்டிட்டுபோ.... கண்ணன் என்கிட்ட இருக்கட்டும்” என்று அனுப்பினார். மதுவுக்கு வெட்கமாகியது “இருக்கட்டும் மா.... அப்பறமா பாத்துக்கறேன்” என்றாள்.
“போ மது, இல்லைனா என் மகன் என்னை கொன்னே போடுவான்” என்று சிரித்தார். இவை அனைத்தையும் கண்டு பேச்சு மூச்சற்று சமைந்திருந்தான் திலீப்.
‘என் அம்மாவா இது எப்படி இப்படி’ என்று ஆச்ச்சர்யபட்டான்.

வெட்கி முகம் சிவந்து நிற்கும் மதுவை கண்டவண்ணம் மாடிக்கு அழைத்துச் சென்றான். அங்கே உள்ளே சென்றதும் கதவை அடைத்துவிட்டு கதவின் மேல் சாய்ந்து கைகட்டி அவளையே பார்த்திருந்தான் கண் இமைக்காமல்.
“என்ன அப்படி பார்க்கறீங்க”
“எப்பிடீ இப்படி மாயம் செய்துட்ட எங்கம்மாவை” என்றான் அளவிலா சந்தோஷத்துடன்.
அவள் தலை கவிழ்ந்தாள்.
“மது” என்றான் தாபத்துடன் கைகளை விரித்துக்கொண்டு. அவள் ஓடி வந்து அவன் கைகளுக்குள் அடைக்கலாமானாள். அவளை இறுக்கிக் கட்டி அணைத்துக்கொண்டு அப்படியே நின்றான் மெய்மறந்து.
அவளை அணைத்துத் படுகையில் அமர்த்தினான். அவள் பயந்தாள்.
“என்னடி பயம்.... நான் அத்துமீருவேன்னு உனக்குத் தோணுதா?” என்றான்.
“இல்லை” என்றாள் மெல்ல.
“பின்ன?”
“என் மேலேயே எனக்கு நம்பிக்கை இல்லை” என்று கூறி அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
“அட உனக்கு இப்படி எல்லாம் கூட பேசத்தெரியுமா?” என்று அவளை அமர வைத்து அவள் மடியில் படுத்துக்கொண்டான்.
“என்ன இது நீங்க இப்படி செட்டில் ஆகீட்டீங்க.... அம்மா காத்திருப்பாங்க”
“ஆமா காத்திருப்பாங்க இவ கண்டா.... அதான் அம்மாவே நம்மளை அனுப்பிச்சாங்களாக்கும்.... போடி அசடு” என்றான்..
“ஹப்பா எவ்வளவு நிம்மதீ” என்று அமைதிகொண்டான். அவள் அவன் தலைமுடி வருடி விட்டாள். கண் மூடி ரசித்தான்.

அத்யாயம் பதினைந்து
விசாலத்துக்கு மனம் நிம்மதி ஆயிற்று. சந்தோஷமாக கண்ணனுடன் கொஞ்சிக்கொண்டு அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் திலீப்பும் மதுவும் கீழே இறங்கி வர “மது சீக்கிரமாவே கல்யாணத்த முடிச்சுடணும்..... நீ என்ன சொல்றே..... எம் பிள்ள நாளைக்கு கூட தாலி கட்ட ரெடிம்பான் அது எனக்கு தெரியும்” என்றார் சிரித்துக்கொண்டே.
மது நாணியபடி தலை கவிழ்ந்தாள்.
“உங்க இஷ்டம் அம்மா” என்றாள்.
“சரி நான் யார்கிட்டயானும் பேசணுமா மா இதப்பத்தி?” என்று கேட்டார்.
“பூரணி அம்மாதான் எனக்கு அம்மாபோல..... அவரிடம் சொன்னாபோதும்..... ரொம்பவே சந்தோஷப்படுவாங்க”  என்றாள்.
“சரி அப்பறம்?” என்றார்.
“வக்கீல் சார் கிட்ட...” என்று கூறி திலீப்பை பார்த்தாள்.
“அத நான் பாத்துக்கறேன்” என்றான் அவன்.

‘ஏதோ அழைத்தார்கள் சென்று பார்த்து வருவோம்’ என்று கிளம்பி வந்தவளுக்கு அன்றே கல்யாணமே தீர்மானமாகி முகூர்த்தம் குறிக்க ஏற்பாடுகள் ஆகும் என்று மது கனவிலும் நினைக்கவில்லை. ‘இதேல்லாம என்ன கனவா நிஜமா.... எனக்குத் திருமணமா அதுவும் என் மனதுக்கினிய திலீப்புடனா’ என்று திகைத்துப் போனாள். “நான் கிளம்பட்டுமா மா?” என்றாள் திலீப்பை கண்டபடி.
அவன் முகம் சுருங்கினான்.
“என்ன எங்க போகணும்..... இங்கேயே இருந்துடு அங்க எதுக்கு இனிமே தனியா”
என்றார் விசாலம்.


2 comments: