Thursday 20 September 2018

ENGIRUNDHO VANDHAAN -1

எங்கிருந்தோ வந்தான் 

கண்ணன் எனப்படும் கிருஷ்ணன் கண் மூடி தன் காட்டேஜின் கட்டிலில் விழுந்து கிடந்தான். கண்கள் மூடி இருந்தாலும் மனம் விழித்திருந்தது. சஞ்சலப்பட்டு எரிமலையாய் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது

எப்படி முடிந்தது அவனால், எப்படி அப்படி பேச முடிந்தது..... வாழ்வில், இந்நாள் வரை சின்னச் சின்ன விஷயங்களைக் கூட என்னிடத்தில் ஓடி வந்து பகிர்ந்து கொண்டவனா இன்று அப்படி பேசினான்.... என்ன குறை... எங்கே யார் செய்த குற்றம்.... ஏன் இப்படி எல்லாம்என்று பல வினாக்கள் கண்ணனின் மனதில் எழுந்தன
கிருஷ்ணன் திலீப் சக்ரவர்த்தியின் மூத்த மகன். அவன் தாய் மதுவந்தி தாய்மையின் மொத்த உருவம். அவர்களின் உயிர் மூச்சு கண்ணன்தான். கிருஷ்ணன் என்று பெயர் சூட்டி இருந்தும் கண்ணா என்றே கொஞ்சி கொஞ்சி அழைப்பர் பெற்றோர். மற்றவர்களுக்கு அவன் கிருஷ்.
கிருஷ் தன் தந்தையைப்போலவே மிகச் சிறந்த பிசினஸ்மேன். ஊட்டியில் வசித்த இவர்களின் குடும்பச் சொத்தாக பல ஆயிரம் ஏக்கர்கள் நிலபுலங்கள் உண்டு. ‘மிஸ்டி மெடோஸ்என்ற தேயிலை எஸ்டேட் மற்றும் கோல்டன் நெஸ்ட்எனும் ரிசார்ட் என்று பேரும் புகழுமான குடும்பம். சிறு வயது முதலே இந்த ரிசார்ட் மற்றும் எஸ்டேட் பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டான் கிருஷ். அதனால் படிப்பு வெற்றிகரமாக முடிந்ததும் ஹோட்டல் அண்ட் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்தான். வெளிநாட்டில் சென்று ஹோட்டல்களின் சிறந்த பராமரிப்பு பற்றி தேர்ச்சி பெற்று வந்தான். தன் பெயரில் கேத்தியில் இருந்த சில ஏக்கர்களில் சின்னதாக தனக்கென கால் பதித்துக்கொள்ள ஒரு ரிசார்ட் துடங்க எண்ணினான். தந்தையிடமே கடனாகப் பணம் வாங்கிக்கொண்டு இருந்த நிலத்தில் உள்ள சின்ன வீட்டை இடித்து மேலும் பக்கத்தில் உள்ள சில நிலங்களை விலைபேசி வாங்கி ரிசார்டை உலக தரத்தில் கட்டி முடித்தான்


சுற்றும் சோலைவனமாக மாற்றி அமைத்தான். எங்கு பார்க்கினும் பூக்கள் பூத்து குலுங்கும் நந்தவனமாக அழகுடன் திகழ்ந்தது. உள்ளேயே ஸ்பா எனப்படும் உடலுக்கு சொகுசு கொடுக்கும் பார்லர் நிறுவினான். மனதும் உள்ளமும் சுகமாக சொகுசு பட அமர்ந்து ரிலாக்ஸ் செய்ய இது சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. யோகா செண்டர் இருந்தது. காலை மாலை நடைபழக என பாதை இருந்தது. சுவையான உணவு உண்ண இரண்டு  விதமான உணவு விடுதி அமைத்திருந்தான். பெரிய அலுவலகங்கள் மீடிங்ஸ் நடத்தவென கான்பரன்ஸ் ஹால் மற்றும் பேங்க்வெட் ஹால் இருந்தன.
மேலே ஊட்டியில் வியாபாரத்தனம் அதிகமாக ஆக கீழே குன்னூரும் கேத்தியியும் மக்களுக்கு பிடிக்க ஆரம்பித்தன. அதை பயன்படுத்தி சரியான நேரத்தில் இந்த ரிசார்டை அமைத்து வெற்றிகண்டான் கிருஷ். நாலே வருடங்களில் தந்தையிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி செலுத்திவிட்டான். மிகச் சின்ன வயதில் இத்தனை சாதனைகள் படைத்த மகனை எண்ணி பெற்றோருக்கு பெருமை.


ஆனால் இன்று இவன் நிலை... இதை எண்ணி பெருமூச்சு விட்டபடி தூங்க முயன்றான். மனம் உறங்க மறுத்தாலும் உடல் அசதி உறங்கச் செய்தது. விடிகாலை எப்போதும் போல விழித்தெழுந்து எங்கே இருக்கிறோம் என்று ஒரு நிமிடன் முழித்து பின் உணர்ந்தான். பல் விளக்கி முகம் கழுவி அறையிலேயே இருந்த கெட்டிலில் சுடு நீர் கொதிக்க வைத்து ரெடிமேட் காபி சர்க்கரை மற்றும் பால் தூள் சேர்த்து காபி செய்து அருந்திவிட்டு தனது ட்ராக் சூட்டில் வெளியே வந்தான். இப்போது பிப்ரவரியே ஆயிருந்தது. அதனால் பனி கிடுகிடுக்க வைத்தது. பேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்துக்கொண்டு நிதான நடையில் ரிசார்டிலேயே நடக்கத் துவங்கினான். கால் போன போக்கில் நடந்து கொண்டிருக்க மனம் அலைபாய்ந்தது. முன்தினம் நடந்தவற்றை அசை போட்டது. ஏன் எதற்கு என்று கேள்விகள் மீண்டும் எழுந்து அவனை புரட்டி போட்டன. அந்த எண்ணங்களை கலைத்துவிட்டு சுற்றிலும் இருக்கும் இயற்கை அன்னையின் அழகில் தன்னை மறக்க முயற்சித்தான். பயனும் கண்டான்

பனித்துளிகள் கண் சிமிட்ட பலவண்ண மலர்கள் அவனைக் கண்டு புன்னகைத்தன. பச்சை பட்டுடுத்தி மலை அன்னை இரு கை நீட்டி அவனை தழுவிக்கொள்ள மனம் லேசானது. சிலீரென முகத்தில் பட்டுச் சென்ற குளிர் தென்றல் மனதின் சூட்டை தணித்தது. மெல்லத் திரும்பி வந்து குளித்து அலுவலகம் செல்ல தயார் ஆனான்.

அங்கு செல்லும் முன் ரெஸ்டாரண்டிற்குச் சென்றான். ரிசார்ட்டின் முதலாளி அங்கே உணவு உண்ண வந்திருப்பது கண்டு அனைத்துச் சிப்பந்திகளுக்கும் சந்தோஷம். முகம் மலர்ந்து வரவேற்றனர். ஒரு தலை அசைப்போடு அவனும் மலர்ந்த முகமாய் உள்ளே வந்து அமர்ந்தான்

என்ன கொண்டு வரட்டும் சார்?” என்றான் அவன் உதவியாள் முத்து. “காண்டினெண்டல் ஆர் இண்டியன் சார்?” என்று கேட்டான்
இண்டியன்என்றான் ஒகே என்று சென்று சுடச் சுட மசால் தோசையும், வடையுமாக கொண்டு வந்தான். கூடவே பெரிய க்ளாஸ் நிறைய பிரெஷாக செய்திருந்த ஆரஞ் ஜூசும். வேண்டா வெறுப்பாக சாப்பிட அமர்ந்தவனுக்கு சுவையான சூடான அந்த உணவு மற்றும் அன்பான உபசரிப்பு மனமும் வயிறும் நிறைந்தது. சாப்பிட சாப்பிட பசி அறிந்தான். சாப்பிட்டுவிட்டு தலைமை சமையல்காரரிடம் போய் பாராட்டினான்.... அவருக்கு வாயெல்லாம் பல் முகமெல்லாம் புன்னகை..... முதலாளி தன் உணவை வேலையை பாராட்டினால் போதாதா ஒருவனுக்கு. அனைவரிடமும் புன்னகையுடன் ஒரு தலை அசைப்பில் விடைபெற்று உள்ளேயே இருந்த தன் ஆபிசை அடைந்தான். மனம் அடங்க மறுத்தாலும் தன் பணியில் தன்னை மூழ்கடித்துக்கொண்டான்

மே ஐ கம் இன்?” என்று கதவு லேசாக தட்டப்பட. “எஸ்என்றான். அனிதா உள்ளே நுழைந்தாள். எப்போதும் போல பளீரென்ற அவளது சிரிப்புடன் குட் மார்னிங் கிருஷ்என்றாள். அனிதா கிரிஷின் செயலாளர் மற்றும் அந்த ரிசார்ட்டின் கம்யுநிகேஷன் இன்சார்ஜ்’. அனைத்து பெரிய புக்கிங்சும் இவென்ட்சும் அவளைத் தாண்டியே செல்ல வேண்டும்.... ஏற்பாடுகள் அவள் சொல்படி நடக்கும்..... அதற்கு முழு தகுதியும் உடையவளும் கூட..... அதற்கேற்ற படிப்பு உழைப்பு என்று உயர்ந்திருந்தாள். ஊட்டியிலே பிறந்து வளர்ந்தவள்தான்.... அவளது தந்தை பிரிகேடியர் சுப்பிரமணியம் வெல்லிங்டனில் முக்கிய ராணுவ பதவி வகித்து ரிடையர் ஆனவர். ஒரு மகள் ஒரு மகன் மட்டுமே.


அனிதாவிற்கு விஷ் செய்துவிட்டு அனிதா, இரண்டு முக்கிய மெயில்ஸ் உன் பார்வைக்கு என அனுப்பி இருக்கிறேன்..... இன்னிக்கே கவனிச்சுடுஎன்றான்
எஸ் கிருஷ்என்று அவளும் உடனே அமர்ந்து தன் கணினியில் அதை பார்வையிட்டாள். இரு பெரும் கம்பனிகளிடமிருந்து சில தேதிகள் கேட்டு அப்போது இங்கே அறைகள் மற்றும் பேங்க்வெட் ஹால்ஸ் மற்ற ஏற்பாடுகள் செய்ய முடியுமா என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்

ஒன்று கம்பனியின் விற்பனை கிளைகளின் வருடாந்திர மாநாடு... இன்னொன்று கம்பனியின் வருடாந்திர ஜெனரல் பாடி மீட்டிங்.

இரண்டு தேதிகளையும் சரி பார்த்து நமக்கு ஒத்துக்க முடியுமான்னு கண்டு சொல்லு.... அதன்படி பதில் அனுப்பலாம்என்றான்
அதன்படி செக் செய்ய எஸ் கிருஷ் இதுவரை புக் ஆகலை.... அதனால நாம ப்ளாக் செய்யலாம்... ஏற்பாடு பண்ணீடலாம்என்றாள்
ஒகே தென், அதன்படி அவங்களுக்கு பதில் தந்துடு அனிதா..... கூடவே இவங்களுக்கு இருபத்தி ஐந்து அறைகளும் அவங்களுக்கு அறுபது அறைகளும் புக் பண்ணறதால பாதிக்குப் பாதி அட்வான்ஸ் பேமெண்ட் தந்துடணும்னு ஸ்ட்ரிக்டா எழுதிடு அனிதாஎன்றான்
சரி என்று அதன்படி மெயில் தயார் செய்து அவன் பார்வைக்கு டிராப்ட் அனுப்பினாள். அதை சரிபார்த்து குட் அனுப்பீடுஎன்றான்.


அவசர வேலைகள் முடிந்ததும் அவனுக்கு டீ எடுத்துக்கொண்டு அவனெதிரே வந்து அமர்ந்தாள்
கிருஷ்என்றாள். கணினியில் கண் பதித்திருந்தான் ஆனால் அவன் மனம் அதில் லயித்திருக்கவில்லை என்று உணர்ந்தாள். “கிருஷ்என்றாள் மீண்டும் யா அனிதாஎன்றான் தலை நிமிர்த்தி
ஆர் யு ஒகே?” என்று கேட்டாள்
ம்ம்என்றான்
இல்லை, நீங்க நார்மலா இல்லை..... ஏதோ பெரிய பிரச்சனை போல.... உங்க முகத்தில என்றும் இருக்கும் மலர்ச்சி இல்லை... உங்க கண்ணில ஒரு ஒளி இருக்கும் அதுவும் இன்னிக்கி மிஸ்ஸிங்என்றாள் கவலையுடன்

அனிதா அங்கே வேலை செய்ய வந்து இந்த நான்கு வருடங்களில் அவனை நன்கு புரிந்து வைத்திருந்தாள். செயலாளராக இருந்தது மீறி நல்ல நட்பு உருவானது. அவளிடம் எல்லாமும் பகிர்ந்து கொள்வான் கிருஷ். அந்த நிலை மாறி சமீபத்தில்தான் காதலாக கனிந்திருந்தது. சினிமா காதல்போல இருவரும் உராய்ந்துகொண்டு டுயட் பாடவில்லை.... ஐ லவ் யு கூறிக்கொள்ளவில்லை, எனினும் ஒருவர் மீது ஒருவர் ஈடுபாடும் அன்பும் அக்கறையும் கொண்டுள்ளதை இருவரும் அறிந்துதான் இருந்தனர்
எஸ் அனி, நிறைய விஷயம் இருக்கு..... உன்கிட்ட ஷேர் பண்ணிக்காம பின்ன யாரோட டா... ஆனா இப்போ இல்லை..... மாலையில மீட் பண்ணி அதைப்பற்றி பேசுவோம்..... இப்போ மதியம் நடக்கவிருக்கும் மீட்டிங்குக்கு தயார் பண்ணிக்கணும்என்றான்
வேலை நேரத்தில் அதுவே அவனுக்கு உயிர் மூச்சு. அதை அறிந்தவள் அவனுக்கு வேண்டிய பாயின்ட்சை எடுத்து தயார் நிலையில் வைத்தாள்.

மதியம் உணவு நேரமானது
சாப்பிடலாம் கிருஷ்என்றாள்
இல்லை அனி பசி இல்லைஎன்றான்
வீட்டு சாப்பாடு, உங்களுக்கு பிடிச்சதுஎன்று தன் வீட்டு சப்பாத்தி குருமாவும் உள்ளே இருந்தே வரவழைத்த சில உணவு வகையுமாக இரு தட்டுகளில் போட்டு எடுத்துவந்து அவனை இழுத்து சோபாவில் அமர்த்தி தட்டை கையில் கொடுத்தாள். அவன் வேறு வழி இன்றி உண்டான். இது போன்ற அவன் மனம் அறிந்து பணிவிடை செய்வதில் அவள் தாய்தான். அவனிடம் அளவு கடந்த பற்று வைத்திருந்தாள் அனிதா.


சாப்பிட்டு எப்போதும் இருபது நிமிடங்கள் மட்டுமே பவர் நேப் எடுப்பான் கிருஷ். பின் உற்சாகமாக வேலையில் ஈடுபடுவான். அதுபோல சோபாவிலேயே சாய்ந்து அமர்ந்து கண் மூடி இருக்க அவன் தூங்கவில்லை என்பதை அவன் கண் மணிகள் அலைபாய்வதிலிருந்து கண்டுகொண்டாள். பையன் வந்து சுத்தபடுத்திவிட்டு சென்றபின் கதவை அடைத்துவிட்டு வந்து சோபாவில் அவன் பின்னே போய் நின்றுகொண்டு மெல்ல அவன் நெற்றி புருவம் கண் என நீவி விட்டாள். அவன் முக சுருக்கங்களை நீக்குபவள் போல வருடி கொடுத்தாள். நெற்றி பொட்டில் புடைத்திருந்த நரம்புகள் அவன் நிலை உணர்த்தியது. அதனை நீவி விட்டு அவன் கண்களின் மேல் தன் தளிர் விரல்களைக்கொண்டு மூடி லேசாக அமுக்கி விட்டாள். அவன் அந்த மென்மையான சிசுருஷைகளை அனுபவித்தான்
ஒ அனிஎன்று அவள் கைகளை பின்னிருந்து தன் தோள்வழியே முன் இழுத்து மென்மையாக அவள் கைகளில் முத்தமிட்டான். பின் ஒரு பெருமூச்சோடு எழுந்து போய் முகம் கழுவி தலை சீவி மீட்டிங்குக்கு ரெடி ஆனான்
கம் அனிஎன்று அவளோடு கான்பாரன்ஸ் ஹாலிற்குச் சென்று அமர்ந்தான். அன்று அங்கே கோடைகால சுற்றுலா பயணிகள் கூட்டம் நிமித்தன் செய்ய வேண்டிய ஏற்பாடுகள், எடுக்க வேண்டிய அதிகப்படி பணியாளர்கள் என சில பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதை அனைத்தையும் குறித்துக்கொண்டாள் அனிதா.

மாலை மயங்கி அந்தி நேரத்தில் வேலை முடிந்து இருவரும் கிளம்பினர். அவளுடன் பேசிவிட எண்ணி அவளையும் தன் வண்டியில் அமர்த்திக்கொண்டு ரிசார்டை விட்டு வெளியே வந்து ஒரு பார்க்கில் வந்து ஒதுக்குப் புறமாக அமர்ந்தான். அனி பொறுமையாக அவன் முகம் பார்த்தாள்
தன் தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தான் கிருஷ். அவன் பேச பேச அதைக்கேட்டு அவளுக்கு ஆச்சர்யம் அதிர்ச்சி வேதனை கோபம் எரிச்சல் ஆத்திரம் என்று அவளே உணர்ச்சி பிழம்பானாள்.

என்ன சொல்றீங்க கிருஷ்.... இதெல்லாம் உண்மையா?” என்றாள்
ஆமாம் அனிஎன்றான் தாங்க முடியாத துயரத்துடன்.


கிருஷ்ணனுக்கு அடுத்தவன் தினேஷ். அதற்கடுத்து சுதா. கிருஷ்ணனின் பிறப்பில் ஒரு ரகசியம் இருந்தது. அவன் மதுவந்தி திலீப் சக்ரவர்த்தியின் சொந்த மகனல்ல என்பதுதான் அது. அதை அவனுக்கு அவனது பத்து வயதிலேயே பக்குவமாக எடுத்துச் சொல்லிவிட்டனர் மதுவும் திலீப்பும். அவர்களுக்கு கிருஷ்ணனும் தினேஷும் சுதாவும் ஒருபோலத்தான். கண்ணுக்கு கண் எந்தவித வித்யாசமும் இல்லாமல்தான் மூவருமே வளர்க்கப்பட்டனர். தினேஷும் சரி சுதாவும் சரி கிருஷ்ணன் அண்ணா தான் அவர்களுக்கு எல்லாமே. அதிலும் சுதா இவனின் செல்லம். தினேஷ் சின்னச் சின்ன விஷயங்களை கூட இவனிடம்தான் வந்து பகிர்ந்துகொள்வான். 

அப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று அதே தினேஷ் கிருஷ்ணனை பார்த்து “நீ யார், அனாதை பயல் நீ..... உனக்கென்ன எங்க வீட்டில அவ்வளவு உரிமை.... நீ என்ன எல்லா விஷயங்களிலும் நாட்டாமை” என்று இன்னும் என்னென்னமோ அசிங்கமாக பேசி சண்டையிட்டு அவனை அவமானப் படுத்தி இருந்தான். 
நேற்று மதியம் உணவுக்குப் பின் தினேஷ் எதையோ கேட்டு தந்தையை நச்சரித்தான். 
“இதற்குமேலும் உன் தண்ட செலவுகளுக்கு அழ என்னால் முடியாது.... முதலில் ஒழுங்காக படிப்ப முடி” என்றார் திலீப். 
“என்ன தண்ட செலவு பண்ணீட்டேன் நான்..... இங்க யாரெல்லாமோ சொந்த பந்தமே இல்லாம உக்காந்து சாப்பிடறாங்க.... சொத்தையே அழிக்கறாங்க.... நான் அதுபோல எல்லாமா செய்தேன்?” என்றான். 
“என்ன பேசறே புரிஞ்சுதான் பேசறியா.... இப்போ யாரு இங்க தண்டமா உக்காந்து சொத்தை அழிக்கறாங்க?” என்று இரைந்தார் திலீப். 
“என்னடா தினேஷ், அப்பாவிடம் போய் இப்படி எல்லாம்...” என்று அவனை அடக்க முயன்றான் கிருஷ். 
“அதானே பார்த்தேன்.... எங்கடா பெரிய வாயத் திறக்கலியேன்னு” என்றான் எகத்தாளமாக. 
தூக்கிவாரிப் போட அனைவரும் அதிற்சியாகினர். 
“என்ன சொல்றே தினேஷ், என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு?” என்றான் கிருஷ். 
“போறும், ராமபிரான் மாதிரி வேஷன் போடாதே..... உன் குட்டு எல்லாம் வெளிபட்டாச்சு” என்றான். 
“என்னது?” என்றான் புரியாமல். 

சுதா “தினேஷ் யாரைப் பார்த்து என்ன பேசறே?” என்று கூட சேர்ந்து இரைந்தாள். 
“நீ பேசாம இரு பெண்ணா லக்ஷணமா, உனக்கொன்னுமே தெரியாது... இந்தப் பய ஒரு அனாதை..... இந்த குடும்பத்துல எந்த ரக்த சம்பந்தமும் இல்லாத பயல்.... இவனுக்கு இந்த வீட்டில எல்லா அதிகாரமும் குடுத்து தலைமேல தூக்கி வெச்சுகிட்டு ஆடுறாங்க நம்ம பெற்றோர்..... சொத்தில பங்கு வேற.... கேத்தில தனியா ரிசார்ட் பிசினஸ்..... அதே நான் கேட்டா அஞ்சுக்கும் பத்துக்கும் நூறு கேள்விகள்.... இவன் யாரு.... இவனுக்கு எதுக்கு இத்தனை அதிகாரம்... இத்தனை சொத்து பணம் செல்வாக்கு..... இந்த க்ஷணம் இவனை வீட்டை விட்டுட்டு போகச் சொல்லுங்கப்பா” என்றான். 
சமைந்து தோய்ந்து அமர்ந்துவிட்டாள் மது. 
திலீப் உச்சக்கட்ட கோபத்தில் காச் மூச்சென தினேஷை திட்டி தீர்க்க


“இனி ஒரு பேச்சு பேசினா இந்த வீட்டை விட்டு போகறது அவனில்லை நீயாக இருப்பாய்” என்று மிரட்டினார். 
“யாரை பார்த்து என்ன பேசறே.... கொழுப்பா..... நீ கேட்டபோதெல்லாம் பணமா வாரி இறைத்தேனே அதற்கு தண்டனை தானே இதெல்லாம்” என்று கத்தினார். 

4 comments: