Sunday 2 September 2018

MANNAVANE AZHALAMA - 2

அதே போல்தான் இன்றும் அவள் பாட்டு போட்டியில் அவனது இன்னொரு பிரியமான பாடலை எடுத்து பாடிக்கொண்டிருந்தாள். 

“தும்ஹி மேரெ மந்திர் தும்ஹி மேரெ பூஜா தும்ஹி தேவதா ஹோ துமி ஹி தேவதா ஹோ....” “நீயே எந்தன் கோவில், நீயே எந்தன் பூஜை, நீயே என் தெய்வம்...” என்று பொருள் படும்படி இருந்த பாடல் அது... பாடும்போது அவனையே கண்டபடி லேசாக சிவந்தபடி அவள்பாட அவனுக்கு பளிச்சென்று அவளின் உள்ளம் புரிந்தது. அவனோடு சேர்ந்து நிறைய தமிழ் பாடல்களும் கேட்டுப் பழகி இருந்தாள். இதோ அடுத்ததாக, அவனுக்காகவென “கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்...” என்று அவள் அபிநயம் பிடிக்க, இவனுக்கோ இதோ வந்தேன் என்று ஓடிச் சென்று அவளை அணைத்து ஆட்கொள்ள மனம் பரபரத்தது.

ஆடிய களைப்பினாலும் அவனை நினைத்து பாடிய இன்பத்தினாலும் சிவந்த கன்னத்தை தழைத்து மறைத்தபடி அவனருகே வந்தாள் வினு. 

“ஓ வினு! யு வேர் டூ குட்.... மயக்கீட்டே போ” என்றான். 

“நிஸம்மா?” என்றாள் கண்கள் அகல விரிய. ஒரு வார்த்தை அரை வார்த்தை தமிழ் கற்று வந்தாள் அவனிடம்.

“ம்ம்ம் எஸ், ஐ லவட் இட்” என்றான் அவளை கண்ணோடு கண் பார்த்தவண்ணம். அவள் மேலும் சிவந்து கண்களை தழைத்துக்கொண்டாள்.

பாட்டில் முதல் பரிசும் கதக்கில் இரண்டாம் பரிசும் கிடைத்தது.அவனைப் பார்த்து மகிழ்ந்தபடிதான் பரிசுகளை வாங்கிக்கொண்டாள்.

அத்யாயம் 2
கல்லூரியில் இருந்து சுற்றுலா பயணமாக ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலை காண அழைத்துச் சென்றனர். பகல் வெளிச்சத்தில் தாஜினை காண்பது ஒரு அழகு என்றால், பௌர்ணமி இரவின் நிலவொளி வீச்சில் யமுனை ஆற்றின் கரையில் அமர்ந்து தாஜின் அழகை காண, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அப்படிப்பட்ட அந்த ரம்மியமான அழகை ரசிக்கும்போது இருவருக்கும் மெய் மறந்தது. ஒருவரோடு ஒருவர் அணைத்துக்கொண்டபடி நெருங்கி அமர்ந்து வாய் சொற்கள் ஏதுமில்லாது மனதோடு மனம் பேசியபடி அமர்ந்தனர். அந்த நிகழ்வு, அவனால் எந்நாளும் மறக்க முடியாததாக அமைந்தது.

காம்பஸ் நேர்முகத்தில், அவனுக்கு, புகழ்மிக்க ஒரு மருத்துவக் கருவி தயாரிக்கும் நிர்வாகத்தில் வேலை கிடைத்தது. அவளுமே மருத்துவ துறையில்தான் சேர விரும்பினாள் என்பதால் அவனுடனேயே அதே கம்பனியில், காம்பசில் கிடைத்த வேலையை ஒப்புக்கொண்டாள் வினு. அவள் மேல் உள்ள ஈடுபாடும் காதலும் அன்பும் அவனை அங்கேயே வேலையில் சேர உந்தியது. அவளை விட்டு பிரிந்து ஊர் திரும்ப அவன் மனம் ஒப்பவில்லை.

அவன் விட்டுச் சென்றுவிடுவானோ என்ற பயப்பீதி அவளுக்கு நாளும் பொழுதும் இருக்க, அவனை கண்களில் ஒருவித கலக்கத்துடனேயே பார்த்திருந்தாள். அவன் வேலையை ஏற்றுக்கொண்டுவிட்டான் என்று தெரிந்தபின்தான் அவள் முகம் தெளிந்தது.

அவர்கள் காதல் நாளுக்கு நாள் ஆழமானது. அவளை பிரிந்திருக்கும் ஒவ்வொரு கணமும் அவன் தவித்தான். அவனை காணாமல் இருக்க முடியாதென்று ஜுரத்துடனும் கல்லூரிக்கு வருவாள் வினு.

அந்த வேலையில் இருவரும் ஒன்றாக சேர்ந்தபோதுதான் அங்கே விஜயனைக் கண்டனர். அவனும் கூட இவர்களோடு ட்ரெய்னிங் எடுக்க, துவக்க நாளிலிருந்தே மிக நல்ல நட்பு உருவானது.... மூவரும் ஒன்றாகவே சுற்றுவர்.... விஜயனுக்கு சில நாட்களிலேயே அவர்களின் உறவு புரிந்து போக கிண்டலும் கேலியும் சேட்டையுமாக கழிந்தன.

தருணின் பிறந்த நாள் வந்தது. அன்று மாலை டெல்லியில் மிகப் பிரபலமான நிரூலாஸ் கு அழைத்துச் சென்றான். தின்பண்டங்களை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்து மூவருமாக அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். 


“என்னடா, எப்போ கல்யாணம்?” என்று வம்பிழுத்தான் விஜயன்.
“பார்க்கணும் டா, ரெண்டு பேர் வீட்டுலயும் தகராறு நிச்சயமா வரும்.... அதான் பேசவே பயமா இருக்கு...” என்றான் தருண். 

“அதுசரி, பயந்துட்டே இருந்தா, பேசித்தானே ஆகணும்” என்று கூறினான் விஜயன். 

“வினு, அந்தப் பெண்ணை பாரேன், அந்த ரெட் சுடிதார் பெண்” என்றான் தருண். 

அவள் அந்தப் புறம் திரும்ப, அவளது ஐஸ்க்ரீமை எடுத்துக் கொண்டான். அவள், “யாரு, எங்க தரு?” என்றபடி திரும்ப, “ஐயோ என் ஐஸ்க்ரீம்” என்றாள் அழாத குறையாக. அவளுக்கு ஐஸ்க்ரீம் என்றால் உயிர். வேண்டும் என்றே தான் அவளை அழ வைத்தான் தருண். விஜயனை பார்க்க அவனோ தருணிடம் தான் இருக்கு என்று ஜாடை செய்தான். 

“தரு, மரியாதையா குடுத்துடு.... என்கிட்டே விளையாடாதே” என்று முரண்டினாள்.
“சரி தரேன், ஆனா ஒரு கண்டிஷன்” என்றான். 

“முதல்ல குடு, அது உருகி போகும்..... அதன் பிறகு எதுவானாலும்” என்றாள். 

“எதுவானாலுமா! ஒகே ஒகே” என்று குடுத்தான் கண் சிமிட்டியபடி. 

விஜயனை கண்களால் கண்டபடி கண்ணால் மிரட்டினாள் வினு. ‘அதொண்ணும் பரவாயில்லை’ என்றான் அவனும் கண் ஜாடையில். விஜி புரிந்து சிரித்துக் கொண்டான். அவனுக்கும் இதெல்லாம் புதிதல்ல.... அவர்களின் குடும்ப நண்பரின் மகள் கல்பனாவை அவனும்தான் இஷ்டப்படுகிறானே. அவளுடன் அவன் பேசாத நயன பாஷைகளா....

தின்று முடித்து கிளம்ப, ‘வினுவை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்’ என்று கிளம்பினான் தருண். 

“சரி நான் ரூமுக்கு போறேன், ஐ ஆம் டயர்ட்” என்றான் விஜி அவர்களுக்கு தனிமை கொடுத்து. வினுவை தன் பைக்கில் அமர்தியபடி ஊரை சுற்றிக்கொண்டு அவள் இருப்பிடம் சென்றான் தருண். 

“என்ன தரு, எதுக்கு இந்த ரூட்?” என்று அவள் கேட்க,
“எத்தனை நேரம் உன்னோட இருக்க முடிஞ்சா அவ்ளோ நல்லதுன்னுதான்” என்றான் பெருமூச்சுடன்.

ஒரு கார்டனில் சிறிது நேரம் அமர்ந்தார்கள். அந்தி சாயும் பொழுது
“ஹே வினு, எங்கே என் பர்த்டே கிபிட்?” என்றான், அவள் கண்களை நேரே பார்த்து. அதில் தெரிந்த அளவிட முடியாத காதல் ஏக்கம் தாபம் வினுவை என்னவோ செய்தது. 

“என்ன தரு, நாம முன்னேயே பேசிகிட்டது தானே, அதெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுதான்னு..” என்றாள் முனகலாக தலை குனிந்தபடி. “அத யாரு இல்லைனா இப்போ” என்றான் அலுப்பாக. அவள் அவன் கோபம் கண்டு நெருங்கி வந்து அமர்ந்தாள். அவள் இடுப்பை வளைத்து இறுக்கிக்கொண்டான். மெல்ல பட்டும் படாமலும் அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு மீண்டும் வெட்கி தலை குனிந்துகொண்டாள். அவள் குனியும் முன்பே அவள் முகம் தேடி இழுத்து இதழோடு முத்திரை பதித்தே அவளை விடுவித்தான். ஒருகணம் அதிர்ந்தாலும் அந்த முத்தத்தின் வீச்சை தாங்காமல் முகம் சிவந்து போனது.

“ரொம்ப மோசம், நான் இனி உன்னோட தனியா வரமாட்டேன் போடா” என்றாள் கொச்சை தமிழில். அவன் ஓஹோ என்று சிரித்தான். 

“ஷ், என்ன இது, பொது இடம்” என்று அவன் வாய் பொத்தினாள். 

“நிஜம்மா வரமாட்டியா?” என்றான் அவளையே பார்த்தபடி. அவளால் அது முடியுமா. ‘ம்ஹூம்’ என்று தலை அசைத்தாள். 

“சரி, வா போலாம்... அம்மா தேடுவாங்க” என்றாள் வீட்டில் இருக்கும் ரகளை தெரியாமல்.

பழைய எண்ணங்களில் மூழ்கி தன்னை மறந்து அமர்ந்திருந்த நேரத்தில் மேரியின் அழைப்பு இடை மறித்தது.

“சார், ப்ளிஸ், கொஞ்சம் சாப்பிடுங்க” என்றபடி ப்ளேட்டோடு நின்றாள்.
“வேண்டாம் மேரி, ப்ளிஸ்” என்றான். “இல்லை சாப்பிட்டுதான் ஆகணும்”
ரொட்டி சப்ஜி கொண்டுவந்து கொடுத்து பலவந்தமாக அவனை உண்ண வைத்தாள். 

“அம்மா சாப்பிட்டாங்களா, பிள்ளைங்க?” என்று கேட்டான் மேரியிடம். 

“ஹான் சார், பலவந்தமா கொஞ்சம் குடுத்து சாப்பிட வைத்தேன்” என்றாள். “தேங்க்ஸ் மேரி, நீ மட்டும் இல்லைனா..” என்றான். 

“சார் ப்ளிஸ்” என்றபடி நகர்ந்துவிட்டாள்.

அவன் உண்டுவிட்டு மேலே தன் அறைக்குச் சென்று படுத்தான். முன்பானும் அவ்வப்போது எப்போதோ அப்போது கொஞ்ச நாளேனும் வினு வீட்டிற்கு வருவாள்.... வந்த நாட்களில் சாதாரணமாகவே இருப்பாள்.... அன்பும் பாசமுமாக நடந்துகொள்வாள்.... எப்போதும் அவர்களுக்குள் எந்த உறவும் ஏற்பட்டது இல்லை எனினும் அவளின் அருகாமையே போதுமானதாக இருக்கும் தருணிற்கு.... ஆனால் இனி அந்த வீட்டிற்கு வினு வரவே மாட்டாள் என்ற எண்ணம் எழுந்ததும் கண்கள் நிறைந்தன. 

‘வினு, ஏன் என்னைவிட்டு போனாய்..... ஏன் என்னிடம் அப்படி ஒரு சத்தியம் வாங்கினாய்’ என்று குமுறி அழுது தீர்த்தான். தலையணை நனைந்தது. அப்படியே தூங்கிப் போனான்.

விஜயன் தினமும் வந்து அவனுடன் நேரம் செலவழித்தான். தருணை தேற்றினான். பிள்ளைகளை சகஜமாக்கிட முயற்சித்தான். ‘அம்மா’ என்ற ஆசையும் பாசமுமாக அவர்கள் வினுவிடம் பழகவில்லை, என்றாலும் தாய் தானே.... அவர்களும் சோர்ந்துதான் இருந்தனர். அந்நேரத்தில் தருணின் தாயும் விஜயனிடம் கலங்கிப்போய் பேசிக்கொண்டிருந்தார். 

“எந்தா விஜி, இவரை இங்க இப்படி விட்டுட்டு நான் எப்படி ஊருக்குப் போறது, என்னால ஆகாதே.... இங்கேயே இருக்கவும் முடியாது.... ஞான் எந்தா செய்யும்...” என்று தவித்தாள். 

“பார்க்கலாம்மா, நீங்க பயப்படாதீங்க..... ஏதானும் வழி செய்வோம்” என்று தேற்றினான்.

பின்னோடு அவனும் தருணுமாக பிசினஸ் விஷயங்களை டிஸ்கஸ் செய்தனர். அதன் முடிவில் விஜயன், “பாரு தருண், தென்னிந்தியாவில நம்ம கம்பனி பிரான்ச் ஒண்ணு ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சோம் இல்லையா” என்றான். 

“ஆமா, அதுக்கு இப்போ என்ன?” என்றான் தருண். 

“இப்போதான் அதுக்கு சரியான நேரம்” என்றான். 

“என்ன சொல்றே விஜி?” என்று கேட்டான்.

“இங்கேயே இருந்தா நீயும் சரி, பிள்ளைகளும் சரி, இந்த சோகத்துலேர்ந்து மீளவே மாட்டீங்களோன்னு தோணுது.... அம்மாவும் கவலப்படறாங்க.... நீ ஏன் நம்ம ப்ரான்சை உங்க ஊர்ல ஆரம்பிக்கக் கூடாது.... பாலக்காட்டுல வேண்டாம்னா திரிச்சூர்ல ஆரம்பிக்கலாமே.... நமக்கு தேவை ஒரு ஆபிஸ், அதுல உதவியா சில நல்ல மனிதர்கள்.... அது எங்கயானா என்ன.... இங்க மட்டும் நாம அப்படிதானே ஆரம்பிச்சோம்..” என்றான். 

“அதெப்பிடிடா விஜி?” என்றான்.

“இல்லை, சரியா வரும்.... நீ பிள்ளைகளோட அங்க போ.... உன் பெற்றோரோட இரு.... அதே வீட்டுல அவங்களோட தங்க முடியாதுன்னா தனியே பக்கத்திலேயே ஒரு வீடு பார்த்து தங்கு..... பசங்க, அம்மா அப்பாகிட்ட போய் வந்து பழகின்னு இருக்கும்போது இந்த துக்கம் மறக்கும்டா..... உனக்கும் ஒரு நல்ல சேஞ்சா இருக்கும்.... நான் சொல்றபடி கேளு.... ஒருவேளை அங்க சூடு பிடிக்கலைனா சென்னையிலோ திருவனந்தபுறத்திலேயோ கூட அப்பறமா மாத்திக்கலாம்” என்றான். 

விஜி சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான் என்று பட்டது தருணிற்கு.

“சரி நான் பிள்ளைங்கள்ட முதல்ல பேசி பார்க்கறேன்.... மேரி வேற வர ஒத்துக்கணுமே..” என்றான். 

“அவங்க வந்தா பாரு, இல்லைனா உன் குடும்பம்தான் அங்க இருக்கே... அவங்களுக்கு நல்லபடியான ஒய்வு திட்டம் போல குடுத்துடு” என்றான். 

“இல்லைடா, அவ பாவம், அவளுக்குன்னு யாரும் இல்லை.... எங்கே போவா.... நான் பேசி பார்க்கறேன்” என்றான்.

இரவு முழுவதும் யோசித்தான். மனம் அதையே நாடியது.... என்ன இருந்தாலும் தன் சொந்த ஊர், தன்னுடைய குடும்பம் அங்கே உள்ளது... தன் வினு தன்னுடன் இல்லாமல் போய்விட்டாலும் அவனை அவன் பிள்ளைகளை தனிமையான வாழ்விலிருந்து காப்பாற்றி பாதுகாக்க தனது குடும்பம் உதவும்’ என்று நம்பினான். 

அதன்படி காலையில் கனிகா நிதினுடன் பேசினான்.

“நாம இங்கே காலி பண்ணிக்கிட்டு அச்சம்மை(பாட்டி) வீட்டுக்கு போலாமா.... அங்கேயே போய் செட்டில் ஆகிடலாமா?” என்று கேட்டான். 

துள்ளி குதித்து சரி என்றனர் இருவரும். 
“போலாம் டாட்.... இங்க எனக்கு பிடிக்கவே இல்லை..... அங்கேனா சுசி திதி, வினீத் பையா எல்லாம் இருக்காங்க.... ஜாலியா இருக்கும், அங்க பெரிய வீடு ஊஞ்சல், நிறைய மரங்கள், காயல் எல்லாம் இருக்கு...” என்றான் ஆர்வமாக நிதின். தருண் புன்னகைத்துக்கொண்டான். 

“சரி அப்போ நான் எல்லா ஏற்பாடும் பண்ணிடறேன்” என்றான். அதன்பின் மேரியிடம் பேசினான். 

மேரி முதலில் அங்கே பாஷை தெரியாதே என்று தயங்கினாள். பின் அவள் ஊழியம் செய்யப்போவது இதே குடும்பத்துக்கு தானே என்று தேற்றிக்கொண்டாள். 

“நானும் வருகிறேன், பிள்ளைங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியாது சார்” என்றாள். 

“ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் மேரி” என்றான் மகிழ்ச்சியோடு.

விஜயனுக்கு மனதார நன்றி கூறினான். 

“என்னடா தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு, நாந்தான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன், ஆனா நீயும் பிள்ளைங்களும் நிம்மதியா சந்தோஷமா இருந்தா அதுவே போதும்” என்றான் விஜி. 

கல்யாணிக்கு மகிழ்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை. 

“நிஜமா மோனே, எங்களோட வந்து இருப்பியா?” என்று மகிழ்ந்து போனார். “அம்மே நீ முன்னே போய்கோ.... ஞங்கள் பின்னே வராம்” என்று அவளை முன்னே அனுப்பி வைத்தான்.

இங்கே விஜயனுக்கு வேண்டிய பேப்பர் வர்க் எல்லாம் செய்து கொடுத்துவிட்டு அங்கே பிரான்ச் ஆரம்பிக்கவென ஏற்பாடுகளை செய்துகொண்டு இந்த வீட்டை விற்க ஏற்பாடு செய்தான். மனம் வலித்தது.

ஆசையாக பார்த்து பார்த்து அவன் வாங்கிய வீடு.... ஆனால் இங்கேயே இருப்பதும் கூட இயலாமல் போனதே...’ என்று மனதை இரும்பாக்கி விற்றான். எல்லாம் காலி செய்து பாக்கர்ஸ் வந்து பாக் செய்து கொண்டு கிளம்பினர். 

விஜயன் விமான நிலையத்தில் வந்து வழி அனுப்பினான். 

“குட்டீஸ்களா, இந்த விஜி அங்கிளை மறக்க வேண்டாம்” என்றான் கண்ணில் நீருடன்.
“நோ வே அங்கிள்” என்று அவனை கட்டிக்கொண்டன. 

“டேய் என்னடா, நீ இப்படி கலங்கினா நான் எப்படி..” என்று தருணும் கலங்கினான்.
“நான் அவ்வபோது வருவேன் டா..... உன்னை விட்டுப் போக என்னால் இந்த ஜென்மத்தில் முடியாது விஜி” என்று கட்டிக்கொண்டான்.

அங்கே பாலக்காட்டில் கல்யாணி எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டாள். தந்தை கோபாலனுக்கும் பிள்ளை திரும்பி வருகிறான் என்பதில் சந்தோஷம்தான். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை. மறுப்பேதும் சொல்லாது அமைதியாக இருந்துவிட்டார். 

வருண் அங்கே பக்கத்திலேயே ஒரு வீடு பார்த்திருந்தான். வந்து சில நாட்கள் தங்களுடன் கழித்தபின் வேறே தங்களுக்கென பக்கத்திலேயே ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகப்போவதாக கூறி இருந்தான் தருண். அதன்படி நடக்கும் தூரத்தில் ஒரு வீடு விலைக்கு வர அதை பேசி அட்வான்ஸ் குடுத்து நிறுத்தி வைத்திருந்தான்.

கோபாலனுக்கு அங்கே நல்ல பேர் மதிப்பு மரியாதை இருந்தது. பல ஏக்கர்கள் நில புலன், தென்னை என்று தோட்டமும் வயலுமாய் இருக்கும் பெரும் பணக்காரர் அவர். அதனால் அவர் வீட்டுப் பிள்ளை என்பதால் எல்லோருமே மரியாதை நிமித்தம் ஒப்புகொண்டுவிடுவார்கள். தருண் வந்து பார்த்தபின் பிடித்திருந்தால் விலைபேசிவிடலாம் என்று காத்திருந்தனர். 

தங்கள் வீட்டில் தருணும் பிள்ளைகளும் தங்கவென ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த சில நாட்கள் கூட வந்து இருந்து கொண்டாடவென சரண்யாவும் தன் மகனுடன் வந்திருந்தாள்

கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய தருணை தன் காரில் ஏற்றிக்கொண்டு தங்கள் வீடு நோக்கிச் சென்றான் வருண். ஒன்றரைமணி நேரப் பிரயாணம். 

இருபுறமும் செழித்த பசுமையான பாதை கண்ணையும் மனதையும் நிறைத்தது. கண் மூடி சீட்டில் சாய்ந்தான் தருண். பின் சீட்டில் கனிகாவும் நிதினும் மேரியுடன் ஏதோ பேசியபடி வந்தனர்.

வீட்டை அடைய ஆவலுடன் மொத்த குடும்பமும் வாசலில் காத்திருக்கக்கண்டு மனம் நிறைந்தது தருணுக்கு.

உள்ளே சென்று முதலில் இளநி குடிக்க, பின் அரட்டை துவங்கியது. எல்லோரும் ஒன்றாக பேசியபடி இருக்க கோபாலன் அமைதியாக அமர்ந்திருந்தார். 

“அச்சா” என்று அருகில் சென்று அவர் கைகளைப் பிடித்துக்கொண்டான் தருண். அவருக்குமே கண்கள் பனித்தன.
“போகட்டும் டா மோனே..... கஷ்டம் உண்டு.... தாங்கிக்கணம், பாவம் ஆ பெண்குட்டி, இப்படி ஆகும்னு ஞான் நினைக்கலை” என்றார். 

“அச்சா” என்று அவரை கட்டிக்கொண்டான்.
“சாரி தருண்” என்றார்.
“வேண்டா அச்சா, அங்கன பறையண்டா” என்று அவர் வாய் பொத்தினான் தருண். 

மிக நெகிழ்ச்சியான கணம் அது. பிள்ளைகள் சுசி மற்றும் வினீத்துடன் உள்ளே சென்றுவிட்டனர். மேரி தயங்கியபடி நிற்க,
“வா மேரி” என்று அவளுடன் கொச்சை ஆங்கிலத்தில் பேசியபடி உள்ளே அழைத்துச் சென்றாள் கல்யாணி. அவளுக்கு வீட்டினை சுற்றி காண்பித்துவிட்டு பிள்ளைகளுடன் அவர்கள் அறையிலேயே தங்கிக் கொள்ளலாம் என்று கூறினாள் சாரதா. தாங்க்ஸ் என்றாள் மேரி.


No comments:

Post a Comment