Monday 1 October 2018

ENGIRUNDHO VANDHAAN - 11


மதுவுக்கு பளிச்சென்று விளங்கியது. ‘ஆமாதானே தங்களுக்குப் பிறந்த மகனாயினும் அவன் இப்படித்தானே நடந்திருப்பான். ஆபிஸின் முக்கிய கோப்புகள் அல்லவா.... அந்த நேரத்து க்ஷண நேர கோபம் அல்லவா.... நான் எப்படி அதைத் தப்பாகப் புரிந்துகொண்டேன்’ என்று எண்ணி வெட்கினாள். அவனை சமாதானபடுத்த முயல அவனோ கோபத்துடன் முகம் திருப்பிக்கொண்டு தூங்கிப் போனான். ஒன்றும் செய்ய இயலாமல பிரமை பிடித்து படுத்திருந்து அவளும் அப்படியே தூங்கிப் போனாள்.

காலையில் விழித்ததும் எப்படியும் அவனை சமாளித்து மன்னிப்பு கேட்க வேண்டும் சரி படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். வேண்டுமென்றே கண்ணனை அவன் பக்கத்தில் உறங்கவைத்துவிட்டு குளித்து கீழே சென்றாள். காபியுடன் வந்து எட்டிப் பார்க்க திலீப் முழித்துக்கொண்டு தூங்கும் கண்ணனை இழுத்து அணைத்து இறுக்கிக்கொண்டு கண்மூடி அந்த அரவணைப்பை எப்போதும் போல ரசித்தபடி கிடந்தான். அவள் வரும் அரவம் கேட்கவும் ஏதோ சாதாரணம்போல முகத்தை வைத்துக்கொண்டான்.


காபி என்று நீட்டினாள். “குட் மார்னிங்” என்றாள் பதிலில்லாமல் காபியை வாங்கிக்கொண்டான். பேசாமலே குடித்தும் முடித்தான்.
“இன்னமும் கோபம் போகலையா.... என்னை மன்னிக்க மாட்டீங்களா தீபு?” என்றாள்.
“நாந்தான் மட்டித்தனமா நடந்துகிட்டேன்.... நீங்கதான் பெரிய மனசோட மன்னிச்சுடக் கூடாதா?” என்று வேண்டினாள். கண்ணன் தூக்கத்தில் இன்னமும் திலீபன் மடியோடு ஒண்டினான்.
“பாருங்களேன் இவன் உங்களிடம் எப்படி ஒன்டிகிட்டான்” என்று சிரித்தாள்.
“ஆமா அவனுக்கு இந்தச் சின்ன வயசுல புரிஞ்சது கூட சில வளர்ந்த மனுஷங்களுக்கு புரியல, அது என் தலை எழுத்து..” என்றபடி குளிக்கச் சென்றுவிட்டான்.

கண்ணில் நீர் முட்ட அடுத்து என்ன செய்வது அவனை எப்படி சரி செய்வதென புரியாமல் அமர்ந்திருந்தாள். அவனுக்கு உடைகள் எடுத்து வைத்துவிட்டு முழித்துவிட்ட கண்ணனோடு எழுந்தாள்... திலீப் வந்து உடை மாற அவள் கண்ணனுக்கு முகம் கழுவி எடுத்துவந்தாள்.
“இந்தா நீயாச்சு உங்கப்பாவாச்சு... அவரை சமாதானாப்படுத்து.... அம்மா பாவம் கோச்சிக்க வேண்டாம்னு சொல்லி சரி பண்ணி கீழே அழச்சுகிட்டு வாடா கண்ணா” என்று வேண்டும் என்றே அவனிடம் கண்ணனை திணித்துவிட்டு கீழே இறங்கி சென்றுவிட்டாள். கண்ணன் முகம் பார்த்து சிரிக்க திலீப்பும் இளகினான். அவனை பக்கத்தில் அமர்த்தி தான் ஆபிசிற்கு ரெடியாகி அவனை தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தான்.

அவனையும் அமர்த்தி காலை உணவு உண்டான் அவனுக்கும் ஊட்டினான். அதில் கண்ணன் சிலது உமிழ தன் டவலால் அதைத் துடைத்துக்கொண்டே ஊட்டி மகிழ்ந்தான். இவற்றை கண்டவளுக்கு மனம் நெகிழ்ந்தது. விசாலம் அருகில் இல்லை என்று கவனித்துக்கொண்டு கண்ணனை தூக்க வருபவள் போல அருகில் வந்து திலீபன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு
“ஐ ஆம் சாரி தீபு, மன்னிச்சிடுங்கப்பா” என்று வேண்டிக்கொண்டு நகர்ந்துவிட்டாள். திலீப் முழுதும் கரைந்தேவிட்டான்.
“மது இங்க வா” என்று போனவள் கையை பிடித்து பின்னுக்கு இழுத்தான்.
“என்னவாம் இப்போ மதுவுக்கு” என்றபடி அவள் பிகுவுடன் முகம் சிவந்து வந்தாள். அவளை இழுத்து குனியவைத்து முகத்தை இடது கையால் அணைத்து அவனும் முத்தமிட்டான். அவள் மேலும் சிவந்தாள்.
“ஏண்டீ உனக்கு குசும்புதானே... இங்க அம்மா வேலைக்காரங்கன்னு சுத்தி இருக்காங்க, அவங்களுக்கு நடுவே எனக்கு முத்தம் குடுத்து உசுப்பேத்தற இதை மாடியில செய்திருந்தா நடப்பதே வேற” என்றான் கண் அடித்து.
“தெரியுமே அதற்குதானே இங்கே அப்படி செய்தேன்” என்று கன்னம் சிவந்து கூறிவிட்டு சமையல் அறைக்குள் ஓடிவிட்டாள். அவனும் உள்ளார்ந்து சிரித்துக்கொண்டான்.

‘ம்ம்ம் இந்த ஊடல்ம்பாங்களே அதுவும் பின்னே வரும் கூடலும் கூட நல்லாத்தான் இருக்கு’ என்று சிரித்துக்கொண்டான். கண்ணனும் என்னவோ புரிந்தது போல இவனோடு சேர்ந்து சிரித்தான்.
“டேய் கண்ணா நீ அந்த மதுராபுரி கண்ணனேதான்..... உன்கிட்ட ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்டா..... நிறைய லீலைகள் நடத்தீட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி சிரிச்சுகிட்டு ஒக்காந்திருகே டா” என்று கொஞ்சிக்கொண்டான்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த மது அவனை வாங்கிக்கொண்டு எப்போதும் போல சிரித்த முகமாக திலீப்புக்கு விடை கொடுத்தாள்.

மணமாகி ஓராண்டு முடியும் தருவாயில், தங்களுக்கென ஒரு குழந்தை வேண்டும் என்று முடிவு எடுக்கும் நேரமும் வந்தது. மது குழம்பினாள். ஒரு புறம் அப்படி தனக்கென ஒன்று பிறந்தால் தான் கண்ணனிடம் காட்டும் அன்பிலும் அக்கரையிலும் குறை வந்துவிடுமோ என்ற பயம். மறுபுறம் தன்னையும் கண்ணனையும் தனதாக்கிக் கொண்ட திலீப்புக்கு அவனுக்கென ஒரு பிள்ளையை பரிசாக தர வேண்டாமா. வேறு எந்த விதத்தில் தன அன்பினை அவனுக்கு தக்க விதமாக புரிய வைக்க முடியும் என்ற தடுமாற்றம் என்று குழம்பினாள் மது.

குழம்பிவள் தன்னை அறிந்தாள், ‘தான் கண்ணனின் மீது கொண்ட பற்று என்றும் மாறாது, திலீப் சொல்வது போல கண்ணன்தான் தங்களுக்கு தலைப்பிள்ளை’ என்று தெளிந்ததும் மனதார தாய்மைக்கு தயாரானாள்.

பின்னோடு மது கற்பம் தரித்தாள் . திலீபனுக்கு கால் தரையில் பாவவில்லை. அந்த நேரம் அவள் முடிந்தும் முடியாமலும் திணறும்போது கண்ணனுக்கு தாயின் ஏக்கம் வராமல் அவனை அரவணைத்து தானே பார்த்துக்கொண்டான். கண்ணனுக்கு அப்போது இரண்டு முடிந்திருந்தது, அதனால் சமாளிக்க முடிந்தது.

பிள்ளை பிறக்க, “உனக்குதான் தம்பி பாப்பா” என்று கூறி வளர்த்தனர். அவனும் சின்னவன் தினேஷ் மேல் அளவு கடந்து பாசம் வைத்திருந்தான். பின்னோடு இரண்டு வருடங்களில் சுதாவும் பிறந்துவிட விசாலத்திற்கு நெஞ்சம் நிம்மதியில் விம்மியது. பேறக் குழந்தைகளுடன் ஆனந்தமாக வாழ்ந்துவிட்டே இயற்கையாக உயிர் நீத்தார் அவர்.

பத்து வயதில் கண்ணனுக்கு அவனின் பிறப்பு உண்மைகளை கூறினாலும் சுதாவுக்கும் தினேஷுக்கும் அதை தெரியவைக்கவில்லை. அது அவசியம் என்று அப்போது தோன்றி இருக்கவில்லை. அது தப்போ என்று இப்போது உறுத்தியது திலீப்பிற்கு.

இன்று:
தன் இருபத்தி ஆறாம் வயதில் இளம் வியாபார வல்லுனர்களின் மத்தியில் தன் பெயரும் வைக்கப்படும் நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொண்டிருந்தான் கிருஷ்.
ஆனால் தன் இருபத்தி நான்கு வயதிலும் இன்னமும் எம் பி யே படிக்கிறேன் வெளிநாட்டில் படிக்கப் போகிறேன் என்று பணத்தை வாரி இரைத்துக்கொண்டு படிப்பும் முடியாமல் ஊரை சுற்றிக்கொண்டு குஷாலாக இருந்து வந்தான் தினேஷ். அதனால் அவனுக்கு வேண்டாத சகவாசங்கள் பல இருந்தன.

ஒட்டுண்ணி ரகங்களும் பல ஒட்டிக்கொண்டு அவனை உருஞ்சிகொண்டிருந்தன. அதில் முக்கியமானோர் திவாகர் மற்றும் ராகேஷ். இருவரும் சாதா குடும்ப நிலையிலிருந்து வருபவர். படிப்பு ஏறவில்லை. வேலையும் பார்க்கவில்லை. ஈசியாக நண்பனின் செலவில் ஊரைச் சுற்றிக்கொண்டு அவனுக்கு ஆமாம் சாமி போட்டுக்கொண்டு சுளுவாக வாழ்ந்துகொண்டிருந்தனர் இருவரும்.

அதில்தான் திவாகர் தந்தையின் மூலம் கிருஷ் பற்றிய பிறப்பு ரகசியங்கள் எதேர்ச்சையாக வெளிப்பட அதை காரணமாக பெரிதுபடுத்தி தினேஷை ஏற்றி விட்டனர் இருவரும் . அவனும் நண்பர்களின் பேச்சைக் கேட்டு இங்கே வந்து ஆடிக்கொண்டிருந்தான்.

“ஏண்டா மச்சான் நாம நினைச்சா இந்த ஹோட்டலையும் எஸ்டேட்டையும் பார்த்துக்க முடியாதா.... உங்கப்பாவுக்கு வயசாயிடுச்சு வீட்டில முடங்கிக்கட்டும்..... கிருஷ் ஒண்ணும் உங்க அண்ணன் இல்லையே கேத்தி ரிசார்ட் மட்டும்தானே அவன் உழைப்பில் உருவானது அதுகூட உங்கப்பா பணம்தானாமே..... அதனால அவனை ஒதுங்கிக்க சொல்லி மிரட்டு.... அவன் தடை கல்லாக இருக்கறதால தான் டா உன் மதிப்பே வெளி வரலை..... இல்லேனா நீ என்னா ஆளு, உன் திறமை என்ன, ஆளுமை என்ன...” என்று ஏற்றிவிட தினேஷுக்கு ஆமாம் அதுதான் உண்மை என்று உரு ஏறிப்போனது.

‘எப்போதும் கிருஷ் வெற்றிகரமாக இருப்பதை சுட்டிக்காட்டி பெற்றோர் வேறு இம்சை செய்கின்றனர்.... அவனை அப்புறப்படுத்திவிட்டால், தானே எல்லா சொத்துக்கும் வாரிசாவோம்.... பிசினசை தானே நடத்துவதாக ஏற்றுக்கொண்டால் செலவைப் பற்றி கவலை இல்லாமல் வாரி விடலாம்.... கேட்பார் இருக்கப் போவதில்லை’ என்று மனக்கோட்டை கட்டினான்.

கொஞ்சம் மனதில் தயக்கம் இருந்தது.... ‘அண்ணா அல்லவா.... இதுநாள் வரை க்ரிஷ் அவனுக்கு நல்லதே சொல்லி நல்லதே செய்துள்ளானே’ என்று.... ஆனால் தன் சுய சந்தோஷம் முன் வந்ததும் அண்ணனின் மேல் இருந்த பாசமும் அன்பும் ஓடி ஒளிந்துகொண்டது.
தைரியப்படுத்திக்கொண்டு வாய்க்கு வந்ததை பேசிவிட்டான். அதன்படி க்ருஷும் வீட்டை விட்டு போயிருக்க தினேஷிற்கு உள்ளுக்குள் சந்தோஷம்.
முதல் படி வெற்றி என்று கூறிக்கொண்டு தன் நண்பர்களோடு கொண்டாடச் சென்றுவிட்டான். பெற்றோர் சில நாள் கோபமாக இருப்பார்கள் அதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் நினைத்ததை சாதித்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டினான்.

இதனிடையில் தந்தையை அழைத்து தான் ரிசார்டில் இருப்பதாக கூறினான். தாயிடமும் சுதவிடமும் இரண்டு நிம்டம் பேசினான். அது கொஞ்சமாக நிம்மதி தந்தது என்றாலும் மனசை கவலை அரிக்கதான் செய்தது.
க்ருஷ் இல்லாத வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் இன்றி தவித்தனர் பெற்றோர் மற்றும் சுதா.

தினேஷை கண்ட நேரத்தில் இழுத்து பிடித்து வைத்து நிஜத்தை அவனுக்கு புரியவைக்கும் எண்ணத்துடன் எல்லாம் கூறினார்கள் மதுவும் திலீப்பும்.

“இருக்கட்டுமே நான் சொன்னதுதானே உண்மை.... அவன் உங்களுக்குப் பிறக்கவில்லை.... ஸ்வீகாரம் எடுத்ததுக்கு வளர்த்தாச்சு படிக்கச் வைத்தாச்சு அவனுக்குன்னு தொழில் ஏற்படுத்திக் கொடுத்தாச்சு இன்னும் என்ன, போதும்..... எங்களை கவனியுங்கள் இனிமேல்... அதுதான் உங்கள் வேலை.... இப்போ சொல்றேன் கேட்டுக்குங்க, நானே பிசினசை நடத்தப் போகிறேன்..... வேணும்னா நீங்க வந்து உதவலாம்.... இல்லேனா நானே பார்த்துப்பேன்.... ஏன் என்னால முடியாதா... தெரியாதா.... சான்ஸ் கொடுத்தாதானே நிரூபிக்க முடியும்..... நான் சமாளிச்சுப்பேன்..... அவன் இந்த வீட்டுக்கு வரக் கூடாது தங்கக் கூடாது..... சொத்துகளை மாற்றி எழுதுங்க” என்று சட்டமாக பேசப் பேச மதுவுக்கு ஏறியது.

“போதும் வாய மூடு..... உனக்கென்ன யோக்யதை இருக்கு அவனப்பத்திப் பேச..... பிசினச நீ ஒண்டியா சமாளிக்கப்போறியா.... உன்னைப் போலவேதானே அவனையும் படிக்க வெச்சோம்.... அவன் தன் வயசுல எப்பிடி இருக்கான்.... நீ எப்பிடி இருக்கே.... ஒப்பிட்டு பேசறோம்னு மட்டும் பொத்துகிட்டு வருதே, நீ இதுவரை தோற்காம ஒரு வருடமானும் படிச்சு பாஸ் பண்ணி இருக்கியாடா..... பேச வந்துட்டான்..... “ என்று  கத்தி தீர்த்தாள்.

திலீபோ, “எங்களுக்கு அவன் வேணும், அவன்தான் எங்க மூத்த பிள்ளை..... அவன் இங்க வர முடியாது தங்க முடியாதுன்னா, நாங்க அவன்கிட்ட போயிடுவோம்..... சுதாவும் எங்களோட வருவா...... நீ தான் பெருமையா பேசினியே பிசினச சமாளிச்சுக்கறேன்... நான் நடத்தறேன் நிரூபிப்பேன்னு... சரி அப்படியே ஆகட்டும்.... நீ என்னமோ செய்..... இந்த வீட்டுல தனியாதான் இருப்பே..... உனக்கு சொத்துக்கள் இருக்கும்..... ஆனா நாங்க யாரும் இருக்க மாட்டோம்... சம்மதமா?” என்று கேட்டார் திலீப்.
கொஞ்சம் தயங்கி பின் துணிந்து “போங்களேன் எனக்கென்ன.... என்னைவிட அவன்தான் உசத்தின்னா போங்க.... திரும்பி என்கிட்டதான் வரணும்..... நான் செய்துப்பேன் தொழில...” என்றான் கெத்தாக.

அவனை அவன் வழியில் விட்டுதான் பிடிக்க வேண்டும் என்று பேசாமல் ஒத்துக்கொண்டனர் இருவரும்.
திலீப் ஆபிசிற்குச் சென்று அவரது பல நாள் செயலாளரிடமும் மேனேஜரிடமும் சுருக்கமாக விவரத்தைக் கூறி தினேஷ் பிசினசை பார்ப்பான் என்றாலும் பெரிய திருத்திட முடியாத தவறுகள் நடந்துவிடாமல் அவனை கண்காணிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவ்வப்போது அவருக்கு நிலைமை எப்படி என்று தகவல் தரும்படி வேண்டினார். பார்த்துக்கொள்ள சொல்லி வெளியேறினார்.

சுதாவுடன் இருவரும் கிளம்பி கேத்தி வந்தனர். பெற்றோரைக் கண்டதும் க்ரிஷுக்கு ஆனந்தம்.... ஆசையாக அளவளாவினான்..... சுதாவை கொஞ்சிக்கொண்டான்.... ஆனால் கோபம் கொண்டான்.

“என்னப்பா நீங்க, அவன்தான் என்னமோ சின்னப்பிள்ளை அவன் அடம் பிடிச்சான்னு அவனைத் தனியா விட்டுட்டு பிசினசையும் அவனிடமே கொடுத்துட்டு என்னப்பா.... இது பெரிய ரிஸ்க் இல்லையாப்பா..” என்றான்.
“எல்லாம் தெரிஞ்சுதான் வந்தேன் கண்ணா.... இரு பாப்போம்..... கொஞ்ச நாள் ஆடி பார்கட்டும்டா கண்ணா, அப்போ தெரியும்” என்றார்.

“நாங்க இங்க தங்கிக்க உனக்கொன்னும் ஆட்சேபனை இல்லையே?” என்று கேட்டார் புன்சிரிப்போடு
“அய்யோ அப்பா, என்னப்பா, இப்படி எல்லாம் பேசிகிட்டு” என்று தனது அடுத்து இருந்த காட்டேஜில் அவர்களுக்கு வசதி செய்து கொடுத்தான். அனிதா வந்து தானே முன் நின்று சகல உதவியும் செய்து கொடுத்துச் சென்றாள்.
திலீப் மட்டுமின்றி க்ருஷும் கூட அவ்வப்போது தகவல் தெரிந்து கொண்டனர். எங்கே எப்போது போய் சமாளிக்க வேண்டுமோ அப்போது கிருஷ் தினா அறியாமல் சென்று தொழில் முடங்காது காத்து வந்தான்.

அமைதியாக வாழ்ந்தபோதும் அங்கே தினேஷ் என்ன கூத்து நடத்துகிறானோ என்ற பெரும் பயம் திலீப்பின் மனதை படுத்தியது. கூடிய விரைவில் அந்த பயம் நியாயமே என்று தெரிய வந்தது.

ஒரு வாரம் வரை ஆபிசிற்கு சரியாக சென்று தினப்படி வேலைகளை பார்த்தான் தினேஷ். கூடவே திவாகரையும் ராகேஷையும் நம்பி சில பொறுப்புகளும் கொடுத்து வேலை பார்க்கச் செய்தான். அவர்களும் சில நாட்கள் கெத்தாக பெரிய கம்பனியின் முதலாளிகளில் போன்ற திமிருடன் வளைய வந்தனர். அதிகாரம் தூள் பறந்தது. ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. கூடவே ஏதோ வேலையும் நடந்தது. பின்னோடு வாரம் முடியும் முன்பே இவர்களின் சுய குணம் வெளிப்பட
“என்னடா மச்சான் ஒரே போர்.... காலையிலேர்ந்து மாலைவரை இங்கேயே ஆபிசில் உழலறோம்.... கமான் டா மாமு, போய் தண்ணி அடிச்சுட்டு கொஞ்சம் ஊரச்சுத்தீட்டு வருவோம்” என்று இருவரும் தினேஷையும் கெடுத்து கூட்டிச் சென்றனர்.

“இங்கே வேலை இருக்கே....” என்று அவன் இழுக்க
“ஏண்டா, இதை எல்லாம் முதலாளி நீதான் பார்க்கணும்னா, இவனுங்க எல்லாம் தண்டத்துக்கா துட்டு குடுத்து வெச்சிருக்கோம் வேலைக்கு... அவனுங்கள செய்ய சொல்லீட்டு வாடா, லெட்ஸ் என்ஜாய்” என்றனர்.
அவனும் அவ்வண்ணமே பொறுப்பை ஊழியர்களிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டான். அதனால் பெரிய கம்பனி டீல் ஒன்று தொங்கலில் ஆனது. அதன் முக்கியத்துவம் தினேஷ் அறிந்திருக்கவில்லை.





No comments:

Post a Comment