Thursday 11 July 2019

ANBIN VAASALILE -1


அன்பின் வாசலிலே...

அத்யாயம் ஒன்று
வந்தனா எழுந்திரு மாஎன்று அம்மாவின் குரல் கேட்டது. கூடவே தாயின் தேன் போன்ற குரலில் சுப்ரபாதம் முணுமுணுப்பும் கேட்டது. அதுதான் தினசரி வந்தனாவின் காலை நேர திருப்பள்ளி எழுச்சி. அதைக்கேட்டபடி புன்னகையுடன் எழுந்து தன் காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தாள்.
வாய் இன்னமும் முணுமுணுத்துக்கொண்டிருக்க வந்தனாவிற்கென காபியை கலந்தார் தாய் மங்களம்.

காபியின் மணம் மூக்கை எட்ட அதை அன்போடு ஆற்றி அவளிடம் நீட்டும்போது அதன் சத்தம் காதுகளை நிறைக்க நுரை ததும்பும் காபியின் தோற்றம் கண்ணை நிறைக்க அப்போதே பாதி காபியை சுவைத்ததுபோல  உணர்ந்தாள் வந்தனா
. அம்மாவை கட்டிக்கொண்டு இடதுகையால் காபியை வாங்கி ரசித்து சொட்டு சொட்டாக உறுஞ்சினாள்.
உன் காபிக்கும் சமையலின் கை மணத்துக்கும் ஈடே இல்லைமா என்றாள். எப்போதும் போல சிரித்தபடி அவர் தன் பூஜையைத் தொடர்ந்தார்.

உச்சிவகிட்டிலும் நெற்றியிலும் கும்குமம் விளங்க சற்றே நரைத்த தலையும் அழகிய நீண்ட கண்களும் மங்களத்திற்கு ஒரு தெய்வீக அழகைக் கொடுத்தது.

அவரது அந்த முக அழகை அப்படியே கொண்டிருந்தாள் வந்தனா. அவரைப்போன்ற சிவந்த நிறம் இல்லாமல் சற்றே மாநிறமாக இருந்தாள். உயரத்தில் தன் தந்தையைக் கொண்டிருந்தாள். ஒடிசலாக, சிற்றிடையுடன் அழகான தோற்றப் பொலிவும் கொண்டு காண்பவரை மீண்டும் திரும்பிக் காண வைக்கும் அதீத அழகு அவளுடையது. ஆனால் அதை ஒரு பொருட்டாக அவள் எப்போதுமே கருதியதில்லை.

அடர்த்தியான முடியை தோளுக்கு கீழிருந்து லேயர்சில் கத்தரித்து கீழே இடுப்பில் முடித்திருந்தாள்
. அது இயற்கையான நெளிவுடன் இடுப்பைத் தொட்டு லேசாக வளைந்து சுருண்டிருந்தது. அது அவள் முகத்திற்கு மேலும் அழகு சேர்த்தது.
நெற்றியில் சின்ன வட்டப்பொட்டு.... கண்களில் ஒற்றை கீத்து கண்மை.... லேசான பவுடர் பூச்சு... வேலைக்குச் செல்லும்போது லேசாக உதட்டு சாயம்  ஒற்றி எடுப்பாள். அதுவும் மிதமான நிறங்களே உபயோகிப்பாள். இயற்கையாகவே சிவந்த உதடுகளுக்கு அதுவும் கூட தேவை இல்லைதான். ஆயினும் அவள் பணி செய்வது பெரிய ஐந்து நக்ஷத்திர ஹோட்டலில் அல்லவா.

அம்மாவிற்கு காய் நறுக்கி, தேங்காய் துருவி கொடுத்துவிட்டு அரைமணி யோகா செய்து முடித்து வியர்வை ஆற நாளிதழுடன் அமர்ந்தாள். அதில் முக்கிய செய்திகளை புரட்டிவிட்டு, எழுந்து தன் டாபில் அன்றைய இமெயில் பார்த்துவிட்டு எழுந்து குளிக்கச் சென்றாள். குளித்து சந்தன வர்ணக் காஞ்சிக் காட்டன் புடவை உடுத்தி ஏற்ற ரவிக்கையுடன் லேசான ஒப்பனையில் தலை வாரி கொஞ்சமாக இருபக்கமும் முடிகற்றைகள் எடுத்து உச்சியில் கிளிப் போட்டு இறுக்கினாள்.
தன் கைபையுடன் டைனிங் டேபிளுக்கு வந்து காலை உணவை தன் பெற்றோருடன் உண்டுவிட்டு கூடவே அம்மா சமைத்துத் தயாராக வைத்திருந்த மதிய உணவை தனக்கும் தந்தைக்குமாக டப்பாவில் அடைத்து பாக் செய்து தனதை எடுத்துக்கொண்டாள்.
வரட்டுமா மா, பை டாட் என்று கூறி தன் கைநெடிக்கில் பறந்துவிட்டாள்.

வந்தனா ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட் மற்றும் எம் பி ஏ முடித்திருந்தாள். ஒரு உயர்தர ஐந்து நக்ஷத்திர ஹோட்டலில் மேனேஜர் - கெஸ்ட் ரிலேஷன்ஸ் என்ற பணியில் இருந்தாள். அந்த ஹோட்டலுக்கு வந்து தங்கும் உயர்தர மனிதர்களை பிரத்யேகமாக கவனித்து அங்கு  அவர்களின் அன்றாடத் தேவைகள் சரியாகச் செய்யப்பட்டனவா என்று கண்காணித்துக்கொள்வது அவள் பொறுப்பு. எந்த முக்கிய விருந்தினர் வந்தபோதும் வருபவர்களுக்கேற்ப அவர்கள் தேவைகள் ரசனைகள் ருசிகள் அறிந்து அவர்களுக்கு வேண்டுவன செய்து தர வேண்டும்.
பல பன்னாட்டு கம்பனிகளும் தூதரக ஆபிசர்களும் அயல்நாட்டு விருந்தினர்களும் சரளமாக வந்து தங்கும் ஹோட்டல் அது என்பதால், அவளுக்கு நித்தமும் அங்கே வேலை நெக்கு வாங்கும். அது அவள் விரும்பி ஏற்றிருந்த படிப்பும் வேலையும் கூட.

அத்யாயம் இரண்டு
அவசரமாகப் போய் கொண்டிருக்க, அங்கே சர்ரென்று வந்த ஒரு மேனாட்டு கார் ஒரு வயதான அம்மாளை இடித்து கீழே தள்ளிவிட்டு பறந்துவிட்டதைக் கண்டு கொதித்துப் போனாள். தன் வண்டியை ஓரமாக ஒரு கடை வாசலில் வைத்து பூட்டிவிட்டு அந்த பெண்மணியிடம் ஓடினாள். கூட்டம் சேர்ந்துவிட்டது, ஆனால் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். அவரது தலையில் காயம் பட்டு ரத்தம் கசியத் துடங்கி இருந்தது. சட்டென்று தன் கைக்குட்டையை வைத்து அதை அடக்கினாள்.

யாராச்சும் ஏதானும் வண்டிய நிறுத்துங்க, மருத்துவமனைக்கு கொண்டு போகணும்.... தலையில அடிபட்டிருக்கு என்று கூட்டத்தைப் பார்த்து கூற, ஓரிருவர் தவிர மற்றவர் அவளை ஏதோ ஜந்துவை பார்ப்பதுபோல பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டனர். அப்போது அங்கே வந்துகொண்டிருந்த மற்றொரு காரை கைகாட்டி நிறுத்தினாள் வழியில் மறைத்து நின்றபடி. அவன் வேறு வழி இல்லாமல் வண்டியை நிருத்தவேண்டியதாகியது.
என்ன இது, இப்படியா குறுக்கே மறிப்பது... எதுக்கு நிறுத்தினீங்க?” என்று எரிந்து விழுந்தான் அந்த காருக்குடையவன்.
சாரி சார், இந்த அம்மாவை ஒரு வண்டி இடித்துவிட்டு போயிடுச்சு... அவசரமா மருத்துவமனைக்குக் கொண்டு போகணும்..... ப்ளீஸ் சார், கொஞ்சம் உங்க காரில் கூட்டிப் போக முடியுமா?” என்று கெஞ்சினாள்.
நோ நோ ப்ளீடிங் ஆகுது... என் வண்டி எல்லாம் பாழாயிடும்.... அது மட்டும் இல்லாம நீங்க யாரோ என்னமோ.... பிறகு ஏதானும் வம்பு தும்புன்னு என்னால அலைய முடியாது என்றான் கறாராக.

சி, நீ இவ்வளவுதானா என்பது போல அற்ப புழுவாய் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு நீங்க எல்லாம் படிச்சவங்கதானே, அவசரத்துக்கு உயிருக்கு உதவணும்னு தோணலையா.... இதுதான் உங்களோட பண்பா.... நாளைக்கு உங்களுக்கே கூட இப்படி ஆகலாம், அப்போ வேற யாரவது இதப் போல உதவ மறுத்தா உங்க நிலை என்னாகும்னு யோசீங்க.... இதுவே இங்கே விழுந்து கிடப்பது உங்க தாயா இருந்தாலும் இப்படித்தான் சொல்வீங்களோ என்று அதிராமல் கத்தாமல் ஆனால் கடிந்த குரலில் கூறிவிட்டு அடுத்து வந்த ஆட்டோவை தட்டிக் கூப்பிட்டாள்.

டிரைவரும் அவளுமாக அந்த அம்மாளைத் தூக்க, “இருங்க இதுல ஏற்றுங்க.... சீக்கிரமா போய்டலாம் என்றான் இறங்கி அவசரமாக பின் கதவை திறந்து பிடித்துக்கொண்டு.
அவனை ஆச்சர்யமாகப் பார்த்தபடி டிரைவருக்கு நன்றி கூறி வண்டியில் ஏற்றினாள். அவன் கையில் ஒரு இருபது ரூபாய் நோட்டை கொடுக்க வேண்டாம்மா சின்ன உதவி, பாவம் இந்த அம்மா, நீங்க சீக்கிரம் போங்க என்று மறுத்துவிட்டு சென்றுவிட்டான் அவன்.

ச்சே அவனிக்கிருக்கும் பண்பு கூட எனக்கில்லையா, சரியாகத்தான் சொன்னாள் இந்தப் பெண்.... யாரோ என்னமோ..... ஆனால் கோபப்படாமல் அதிர்ந்து கத்தி கூச்சல் போடாமல் அமைதியான ஆனால் திண்ணமான குரலில் பேசினாளே.... இவள் என் தாயை எனக்கு இன்று மீண்டும் நினவு படுத்திவிட்டாள்.... அம்மா இப்படித்தானே கண்டிப்பார்.....
கத்தல் கூச்சல் இல்லாமல் உனக்கு நான் ஒண்ணும் சொல்ல வேண்டாம்..... நீ சின்னப் பையன் இல்லை கண்ணா... உனக்கே எல்லாம் தெரியும்.... ஆனாலும் இது சரி இல்லை என்பாள்.

இதை எல்லாம் நினைத்தபடி வண்டியை எவ்வளவு வேகமாக ஓட்ட முடியுமோ ஓட்டிச் சென்றான். பின் நோக்கு கண்ணாடியிலிருந்து அவளைக் கண்டான். அமைதியான ஆனால் அழகான கட்டி இழுக்கும் அழகு..... ‘ஹப்பா அந்தக் கண்கள்..... இன்னும் பல நாட்கள் என்னால் மறக்க முடியாத கண்கள் என்று எண்ணினான். அதற்குள் மருத்துவமனை வந்திருக்க அவனே இறங்கி கை கொடுத்து அந்த அம்மாளை வந்தனாவின் உதவியோடு இறக்கினான். அதற்குள் ஸ்ட்ரெட்சர் வந்திருக்க அதில் படுக்க வைத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

வந்தனா அப்போதுதான் அவன் உடையிலும் கார் சீட்டிலும் ஆங்காங்கு சில ரக்தத் துளிகள் கரை ஆகி இருந்ததை கவனித்தாள்.
மன்னிச்சுக்குங்க கறை ஆயிடுச்சுஎன்றாள்
அதுனால ஒண்ணும் இல்லை..... இது தோய்ச்சா போயிடும், கார் வாஷுக்குப் போனா சரி ஆயிடும்.... நீங்க உங்க அம்மாவை கவனீங்கஎன்றான்.
இது என் அம்மா இல்லை..... தெருவில வந்துகிட்டிருந்தாங்க என்றாள். அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.  யாருக்கோ உதவ இத்தனை கஷ்டங்கள் பட்டாளா..... என்னையும் வறுத்துவிட்டாளே என்று சிரித்துக்கொண்டான்.  அங்கே இருந்த முக்கிய டாக்டரிடம் கவனித்துக்கொள்ளக் கோறி வெளியே வந்து ஒரு தலை அசைப்புடன் கிளம்பி விட்டான்.
ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார் என்றாள்.
யு ஆர் வெல்கம் என்றபடி சென்றுவிட்டான்.

வந்தனா தன் மொபைலில் இருந்து ஹோட்டலுக்கு அழைத்து விவரம் கூறிவிட்டு சற்று தாமதம் ஆகும் என்று வேண்டினாள்.
சரி சீக்கிரமா வா வந்தனா,  சுப்ரஜா ஐ டி சொலுஷன்ஸ் கெஸ்ட் பத்தி பேச அவங்க எம் டி வராரு பன்னிரண்டு மணிக்கு என்றார் ஜி எம். “ஷ்யூர் சார் வந்துடுவேன் என்றாள்.
பின் அந்த அம்மாளின் பர்சை தேடியதில் முகவரியும் போன் நம்பரும்  இருக்கக் கண்டு போன் செய்தாள். அவளின் கணவர் எடுத்தார். வயதானவராயிற்றே என்று மெல்ல மெல்ல நிதானமாக விஷயத்தைக் கூறினாள். அதற்கே அவர் பதறி போய்
எங்கேமா, எந்த ஹாஸ்பிடல்?” என்றார்.
ஒன்றும் பயப்பட வேண்டாம் அங்கிள்.... சின்ன அடிதான்.... கட்டு போட்டுட்டாங்க..... சிக்ஷா மருத்துவமனைதான்..... நீங்க வரமுடியுமா நான் ஆபிசுக்கு போகணும்...” என்று வேண்டினாள்.
தோ கிளம்பீட்டேன்மா..... கொஞ்சம் அதுவரைக்கும் இருக்கியா?” என்றார்.
கண்டிப்பா சார் என்றாள்.
அங்கேயே அந்த மூதாட்டியிடம் அமர்ந்திருக்க பத்து நிமிடங்களில் அவர் வந்து சேர்ந்தார்.
என்னடி, பாத்துப்போகப்டாதா என்று கரிசனத்தோடு  கடிந்து கொண்டார்.
இல்லே நா,  நான் பாட்டுக்கு போயிண்டிருந்தேன் எவனோ கடன்காரன் வந்து இடிச்சுட்டு போய்டான்..... பாவம் இந்தக் குழந்தைதான் இன்னொரு வண்டியில ஏத்திண்டு வந்து இங்க சேர்த்தா.... சின்னக் காயம்தானாம்..... கட்டு போட்டிருக்கா.... ரெண்டு மணி நேரம் பாத்துட்டு அனுப்பிடுவாளாம்.... நீங்க பதறாதீங்கோ.... உங்களுக்கு அசலே பிரசர் இருக்கு என்றார் அவர் அன்பாக ஆதரவாக.

சரி நான் கிளம்பட்டுமா?” என்று வந்தனா விடை பெற்றாள்.
நீ நன்னா இருக்கணும் குழந்தை.... நீ யாரும்மா?” என்று அவளைப் பற்றின விவரங்களைக் கேட்டறிந்தார் அந்தப் பெரியவர். தங்களது விவரமும் கூறினார். கேட்டுக்கொண்டு இருவரிடமும் விடைப் பெற்று தன் வண்டியில் பறந்தாள்.
ஹோட்டல் உள்ளே சென்று புன்னகையுடன் எல்லோருக்கும் வணக்கம் வைத்துவிட்டு ஜி எம்மிடம் போய் நடந்தவற்றை சுருக்குமாகக் கூறி மன்னிப்பு கோறிவிட்டு தன் சீட்டில் அமர்ந்தாள்.

தன் கம்ப்யுடரை உயிர்ப்பித்து சுப்ரஜா பைலை திறந்தாள். அவர்களின் தேவைகள் முன்பே இமெயிலில் வந்தடந்துவிட்டன.... அதைப் படித்து ஆவன செய்துவிட்டாள்..... ஆயினும் அதன் எம் டி கு போதாமல் நேரே வந்து பார்வையிட்டு முடிவு எடுப்பதற்காக வருவதாக இருந்தது.
அவர்களுடன் பேசவேண்டிய குறிப்புகளை நோட் செய்துகொண்டு காத்திருந்த நேரத்தில் மிச்ச வேலைகளை செய்து கொண்டாள்.

அத்தியாயம் மூன்று
சிறிது நேரத்தில் அந்த எம் டி வந்துவிட்டதாகத் தகவல் வந்தது. கதவை தட்டியபடி உள்ளே நுழைந்தனர் அவ்விருவர். அவர்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள் வந்தனா. அவனும் கூட. ஆம் காலையில் உதவிய அந்தப் பெரிய மனிதன் தன் பி ஏ தினேஷுடன் அங்கு நின்றிருந்தான்.
குட் ஆப்டர்நூன் சார், ப்ளிஸ் கம் இன்என்று அழைத்தாள். “ப்ளிஸ் டேக் யுவர் சீட்என்றாள்.
நீங்க இங்க...” என்றான் தீபன்

இங்கே தீபனைப் பற்றி சில வரிகள். ‘சுப்ரஜா ஐ டி சொலுஷன்சின் எம் டி.... முறுக்கான இளைஞன்.... சின்ன வயதிலேயே வெற்றிகரமாக தன் தொழிலை நடத்தி வெற்றி கண்டிருந்தான்..... சுயமாகத் தானே கற்றுத் தேர்ந்து இந்தத் தொழிலை தன்னுடைய அறிவும் ஆற்றலும் கொண்டே அமைத்திருந்தான்..... முதலில் கடனுதவி எடுத்திருந்தாலும் மூன்று வருடங்களிலேயே அதை அடைத்தும்விட்டான்.

தனது பன்னிரெண்டாவது வயது வரை தன் தாயே சகலமுமாக வாழ்ந்தவன், அவர் திடீரென்று கான்சர் வந்து மாண்டு போக அந்த இழப்பிலிருந்து இன்னமும் மீளாமல் துவண்டிருப்பவன்.
தந்தை என்றுமே பணமும் பிசினசுமே மூச்சாக வாழ்பவர்..... அம்மாவின் அகால மரணத்தின்பின் அவரிடம் கிடைக்க வேண்டிய அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் தன்னைத் தானே தேற்றிக்கொள்ளவும் தெரியாமல் அலைபாய்ந்து அழுது துவண்டவன், தந்தையின் மீது வெறுப்பே கொண்டான்.

அவர் பிசினஸ் விஷயமாக இன்று லண்டன் நாளை ஜப்பான் மறு நாள் டெல்லி என்று பறந்து பறந்து வாழ்பவர்
. அவன் பட்ட வேதனை அவர் அறிந்திருக்கவில்லை. ‘வேண்டிய பணம் வசதி அவனை பார்த்துக்கொள்ள நிறைய வேலை ஆட்கள் வேறென்ன வேண்டும் என்று அவர் நினைத்தார்.
ஆனால் அதே நேரம் அந்த வயதில் தான் தனிமையினால் வாட மனமில்லாமல் ஒரு துணையை நாடினார்.

நிறைய பணக்காரப் பெண்களும் அவரைச் சுற்றி வந்தனர். அவரது பணத்திற்கும் வசதிக்கும் மயங்கி ஒரு மாதிரி பெண்களும் சுற்றி வந்தனர். ஆனால் அவரை சுண்டி இழுத்தது அமைதியும் அடக்கமுமான நிர்மலாதான். அவரது செக்ரட்டரியாகப் பதவியிலிருந்தவள், அவர் தன் மனைவி சுப்ரஜாவை இழந்த நேரத்தில் அவரை ஆதரவாக கவனித்துக்கொண்டாள். மிகச் சாதாரணமான மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்தவள்.

அவள் அவருக்கு ஆதரவு காட்டும்போது மனதில் எந்த ஆசையும் விகல்பமும் இல்லாமல் தான் சேவையாக நினைத்துச் செய்தாள். ஆனால் அவளின் அந்த பண்பே அவரை அவளிடம் நெருங்கிப் பழக வைத்தது. ஓராண்டு முடியும் முன்பே அவளிடம் பேசி ஒப்புக்கொள்ள வைத்து அவளது தாயிடம் பேசி ஒப்புதல் வாங்கி முறையாக மணந்துகொண்டார்.

உடனடியாக தீபனுக்கு அந்த விஷயம் தெரிவிக்கப்படவில்லை
. ‘அவன் எப்படி நடந்துகொள்வானோ ஏற்றுக்கொள்வானோ இல்லையோ என்ற பயம்.
நிர்மலாவையும் அவள் தாயையும் சென்னை  பெசன்ட் நகரில் தனியே ஒரு பங்களா வாங்கி அதில் குடி வைத்தார்.

அடையார் பங்களாவில் தனது மகனுக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது
... அது அவன் சொத்தாக இருக்க வேண்டும் என்று கருதினார்.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு அரசல் புரசலாக மற்ற மாணவர்கள் வேலைக்காரகள் பேசியதிலிருந்து தீபனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது நம்ப முடியாமல் தவித்தான் துவண்டான். அவனது அந்த ரெண்டுங்கெட்டான் வயதில் அது அவனுக்குப் பெரும் அவமானமாகத் தோன்றியது... அவரை நேரே கேட்க அவர் ஒத்துக்கொண்டார்.

சீ இவ்வளவு சீப்பா நீங்க? எங்கம்மா செத்த கொஞ்ச நாள்ளயே உங்களுக்கு ஒரு துணை தேவை பட்டுச்சா..... இந்த வயசுல ஒரு வைப்பாட்டியா... அப்போ அவ்வளோதானா எங்கம்மா மேல நீங்க வெச்ச அன்பு..... ஆமா உங்களுக்குத்தான் பிசினசும் பணமும் போதுமே..... எங்கம்மா போனா என்ன இருந்தா என்ன..... அவங்கள விடுங்க..... நானே உங்களுக்கு ஒரு பொருட்டு இல்லையே என்று பெரிய மனிதன் போல கத்தி தீர்த்தான்.

அப்படி இல்லை தீபன், உன் வயசுக்கு தகுந்தபடி பேசு...  நிர்மலாவை ஒரு துணைக்காகத்தான் நான் மணந்திருக்கேன்..... நீ சொல்ற மாதிரி அவ என் வைப்பாட்டி இல்லை..... நான் முறையா மணந்த என் மனைவி..... அவ உனக்கு சித்தி என்றார் கோபமாக.

சித்தியா, அப்படி எந்த உறவும் எனக்கு தேவை இல்லை..... எனக்கு எங்கம்மாவை மட்டும்தான் தெரியும்..... அவங்க மறைந்தாலும் இன்னமும் என்னோடுதான் இருக்காங்க..... அவங்களே தெய்வமா இருந்து என்னை பாத்துப்பாங்க.... நான் உங்களையோ உங்க ரெண்டாவது மனைவியையோ பார்க்க விரும்பலை..... சொந்தம் கொண்டாடவும் விரும்பலை என்று இரைந்தான்.
அவனை எப்படிச் சொல்லிப் புரியவைப்பது என்று அறியாது துவண்டு அமர்ந்துவிட்டார் ரகுபதி.

அந்த பிளவு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பகை என்ற அளவிற்குப் போய் நின்றது. தன் தாயின் பெயரில் இருக்கும் அந்த பங்களாவைத் தவிர வேறு எந்த ஒரு வசதியும் அவரிடம் இருந்து எதிர்பார்க்காமல் அவனே படித்தான்.... வெறியோடு படித்து எல்லாவற்றிலும் டிஸ்டிங்க்ஷன் வாங்கினான். ஸ்காலர்ஷிப்பில் படிப்பை முடித்தான். கம்ப்யுட்டரில் தேர்ந்தான். கடனுதவியும் கூட அவனுடைய சொந்த ஆற்றலின் பேரில் பெற்று வெற்றிகரமாக இதோ தன் கம்பனியை நடத்தி வருகிறான்.


3 comments: