Friday 19 July 2019

ANBIN VAASALILE - 9


வீட்டில் சின்ன பார்டி நடந்தது. சில தோழிகளை மட்டும் அழைத்து கேக் வெட்டி கொண்டாடினாள் தீபா. அவர்கள் சென்றபின் எல்லா பரிசையும் திறந்து பார்க்கும்போது இதையும் எடுத்து காண்பித்தாள்.
எல்லாத்தையும் விட பெஸ்ட் கிபிட் எது தெரியுமா?” என்று பெருமையோடு. அப்போது ரகுபதியும் கூட இருந்தார்.
நாம வாங்கித்தந்த பட்டுப்பாவடை நகையைவிட இதுதான் ஒசந்ததாபோச்சு நம்ம மகளுக்கு என்று கூறி சிரித்துக்கொண்டார் ரகுபதி.

வாட்சை உடனே கையில் கட்டிக்கொண்டு திருப்பி திருப்பி அழகு பார்த்துக்கொண்டாள்
. பேனாவை எடுத்து தன் பெயரை எழுதி பார்த்தாள். “பாத்தீங்களாப்பா இந்த பேனாவை என்று காண்பித்தாள்.
நல்லா இருக்கு கண்ணு என்றார் அவர். அவருக்கும் மனதுக்குள் ஒரு நிறைவு.
போகட்டும் எங்களை மன்னிக்காவிட்டாலும் தீபாவையாவது ஏற்றுக்கொண்டானே என்று.

அத்யாயம் பதினெட்டு
அடுத்த ஞாயிறு நாங்கள் ஒரு பர்சனல் விஷயமாக உங்கள வீட்டில் வந்து பார்க்க விரும்புகிறோம் என்று போன் செய்து கூறிவிட்டு சங்கரனும் மங்களமும் வந்திருந்தனர். என்னவென்று தெரியாவிடினும் வந்தவர்களை உபசரித்தனர். நிர்மலாவையும் ரகுபதி அருகே அமர வைத்து பேசினர் சங்கரனும் மங்களமும். தீபா விளையாட சென்றிருந்தாள்
தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.

எங்க மகள் வந்தனாவும் உங்க மகன் தீபனும் ஒருவரை ஒருவர் விரும்பறாங்க..... தீபனே வந்து நேர்ல பேசி எங்க ஒப்புதல்  வாங்கினாரு.... எங்களுக்கும் முழு சம்மதம் தான்...தீபன் உங்க மத்தில இறுக்கிற மனக்கசப்ப பத்தியும் சொன்னாரூ..... உங்களை நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் அழைக்க மாட்டார்ன்னும் சொன்னார்.... ஆனா நாங்க ஒத்துக்கலை..... எங்க சொந்தங்களுக்கு நாங்க பதில் சொல்லணும்னு சொல்லி நாங்களே உங்களை அழைப்போம்னு சொல்லீட்டேன்..... அதற்கு அரைமனதா ஒத்துகிட்டார்.... அதான் வந்திருக்கோம்

வர ஞாயிறு நிச்சயம் வெச்சிருக்கோம் எங்க வீட்டுல..... இதான் எங்க வீட்டு முகவரி..... இதான் எங்க பொண்ணு வந்தனா போட்டோ..... அவளையும் அழைத்து வந்திருக்கணும்.... அவ கொஞ்சம் தீபனுக்கு பயப்படறா.... அதான் நீங்கதான் நிச்சயதன்னிக்கிப் பார்க்கப் போறீங்களே என்றார் ரகுபதி.
நிம்மியும் ரகுபதியும் அயர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
ரொம்ப தாங்க்ஸ் மிஸ்டர் சங்கரன்..... உங்களுக்கானும் எங்களையும் அழைக்கணும்னு தோணிச்சே...... அவனுக்கு இன்னும்தான் மனக்கசப்பு போகலை என்றார்.

இப்போதான் மெல்ல மெல்லமா எங்க மக தீபா கிட்ட நெருங்கிப் பழக ஆரம்பிச்சிருக்கான்..... எங்களை மன்னிக்கலைனாலும் பரவாயில்லை..... அவளை ஏத்துகிட்டான்.... அதுவே போதும்
எங்களுக்கு உங்க சம்பந்தத்தில ரொம்ப சந்தோஷம்..... பெண் அழகா இருக்கா..... நல்ல வேலையில இருக்கானு சொல்றீங்க.... நாங்க கண்டிப்பா வருவோம்..... கலந்துப்போம்.... உங்களுக்காக, எங்க மருமகளுக்காக..... அவனுக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் வருவோம் என்றார்.
ரொம்ப சந்தோஷம் சம்பந்தி என்றார் சங்கரன்.

நிர்மலா காபி கொண்டு வந்து கொடுக்க
, பொது விஷயங்கள் பேசிக்கொண்டனர். சில நொடிகளில் தீபா உள்ளே வந்தாள்.
அங்கே தயங்கி நிற்க இங்க வா தீபா என்று அழைத்துத் தன் அருகில் அமர்த்திக்கொண்டார் ரகுபதி.
இதான் என் மக தீபாஎன்று அறிமுகபடுத்தினார்.
ஆமா ஜாடை அப்படியே இருக்கு குழந்தைக்கு என்றாள் மங்களம்.
அதான் மகன் உருகீட்டான் தெரியலையா என்று சிரித்தார் ரகுபதி.
சு என்று அவரை அடக்கினாள் நிம்மி.
நீ போடாமா உன் வேலை செய்துக்க என்றார் ரகுபதி.

அவள் மேலே சென்றுவிட, “அவளுக்கு இன்னும் உண்மையச் சொல்லை..... ஆனா தீபன் வந்து வாரத்திற்கு ஒருதரமானும் பார்த்துட்டு போறான் பள்ளியில வெச்சு..... போன வாரம் பிறந்த நாள் அன்னைக்குக் கூட வாட்ச் பென் னு  பரிசு வாங்கி குடுத்திருக்கான் என்று சிரித்துக்கொண்டனர்.
சரி கிளம்பறோம் அவசியம் தீபாவையும் கூட்டிகிட்டு வந்துடுங்க..... என்னிக்கிருந்தாலும் அவளுக்கு தெரியணும்தானே..... அவ மூலமா உங்க கிட்டே சகஜமா நடந்துப்பாரோ என்னமோ மாப்பிள்ள என்றாள் மங்களம்.
ஆகட்டும் என்றாள் நிம்மி.

வீட்டிற்குச் சென்று வந்தனாவிடம் அனைத்து விஷயங்களையும் கூறினார் சங்கரன். அவளுக்கு ஆச்சர்யமானது.
தீபாவை தீபு வாரம் ஒரு முறை சந்திக்கிறான.... என்னிடம் சொல்லவே இல்லியே.... பிறந்த நாளுக்கு பரிசு குடுத்தானாமே என்று வியந்தாள்.
இரு கள்ளா, இருக்கு உனக்கு என்று கருவி கொண்டாள்.
அடுத்து அவனை பார்க்கும்போது. வேண்டுமென்றே எனக்கு தீபாவை பார்க்கணும்போல இருக்கு தீபு என்றாள்.
இவள் வேண்டுமென்றே கேட்கிறாள்..... ஏதானும் தெரிய வந்திருக்குமோ என்று குழம்பினான்.
என்ன திடீர்னு அவ மேல பாசம்?” என்றான்.
இல்ல... என்ன இருந்தாலும் வருங்கால நாத்தனார் இல்லையா அதான் என்றாள் .
நாத்தனாருமாச்சு மூத்தனாருமாச்சு பேசாம இரு என்று அடக்கினான்.

நீங்க மட்டும் கண்ணே மணியே கற்பகமே னு கொஞ்சி பிறந்த நாள் பரிசெல்லாம் கொடுப்பீங்க... நாங்கப் பார்த்துப் பேசிப் பழகக் கூடாதாக்கும் என்றாள் கேலியாக.
அவன் திடுக்கிட்டான். “உனக்கெப்பிடி தெரிஞ்சுது...... நீ தீபாவை பார்த்தியா?” என்று கேட்டான்.
இல்லை தெரிய வந்துது என்று கூறி முடித்தாள்.
ஓ, சாரி வனி...... மறைக்கணும்னு மறைக்கலை..... நமக்கு நடுவே ரகசியங்கள் இருக்கக் கூடாதுதான்.... ஆனாலும் கூச்சமா இருந்துது டா..... ப்ளிஸ் புரிஞ்சுப்பே தானே என்று கொஞ்சினான்.
நான் புரிஞ்சுகிட்டேன் தீபு...... வேணும்னுதான் உங்கள சீண்டினேன்...... எனக்கு உங்க மனசின் தவிப்பு புரியுது..... அதேபோல நீங்களும் உங்க அப்பாவின் மனத் தவிப்பை புரிஞ்சுக்கணும்னு தான் கேட்டுக்கறேன் என்றாள்.
சரி சரி ஆரம்பிக்காதே என்று முற்றுப்புள்ளி வைத்தான்.

நாம சந்திக்கறதே என்னைக்கோ ஒரு நாள், அதுல இதுதான பேசத் தோணிச்சா என்று முரண்டினான்.
என்னிக்கோவா..... வாரத்தில மூணு நாளானும் பார்த்துப் பேசறோம்...... தினமும் நாலுதரம் போன்ல கொஞ்சிக்கறோம்...... பேசறதப் பாரு என்றாள் சிரித்தபடி.
பார்த்து பேசறோம் ஒத்துக்கறேன்.... ஆனா அதற்கு மேற்படி ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குதே என்றான் குழைந்தபடி.
என்ன கிடைக்கணும்..... எடு தடிய, நாலு போடறேன் என்றாள் குறும்பு மின்ன.
சொல்லுவேடீ நீ..... இதுவும் சொல்லுவே... அடிச்சாலும் அடிப்பே...... உன்கிட்ட ஜாக்ராதையாத் தான் இருக்கணும்என்றான் சிரித்தபடி.

அத்யாயம் பத்தொன்பது
அன்று நிச்சயம். அதற்காகவென, தானே வந்தனாவை கடைக்கு அழைத்துச் சென்று அவளுக்கு பிடித்தமானதாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லி பட்டுப் புடவை வாங்கினான் தீபன். ஆழ்ந்த பச்சையில் மஞ்சள் பார்டருடன் ஜரிகை மயில்கள் அணிவகுக்க புடவை அசத்தலாக இருந்தது. கூடவே நகை கடைக்கும் அழைத்துச் சென்றான்.

இதெல்லாம் வேண்டாம் தீபு.... எனக்கு நகை அணிவதே பிடிக்காதுஎன்று அடம் பிடித்தாள்.
சரி சரி வா என்று கூட்டிச் சென்று மோதிரம் அளவு எடுக்கச் சொன்னான். அவளை அங்கேயே அமர்த்தி தான் போய் அவள் இயல்பு போல சிம்பிளாக ஒரு அட்டிகையும் மாட்சிங் காதணிகளுமாக செலெக்ட் செய்தான், அதில் அங்கும் இங்குமாக பச்சை மரகதங்கள் பதிக்கப்பட்டிருந்தன.... டிசைன் பான்சியாக இருந்தது.
ப்ளவுஸ் தைத்து வந்திருக்க முதலில் கட்டிச் செல்லவென மஞ்சளில் அரக்கு பார்டர் கிரேப் சில்க் அணிந்தாள்.

தீபன் முழுக்கை வெண் பட்டு கலர் ஷர்டும் ஜரிகை வேஷ்டியும் அணிந்து வந்தான். அவன் சோபாவில் அமர்ந்திருக்க இவள் ஒளிந்திருந்து அவன் அறியாது அவனை பார்த்திருந்தாள்.
என்னடி பண்றே..... வேணும்னா நேராவே போய் பார்க்க வேண்டியதுதானே..... என்ன ஒளிஞ்சுகிட்டு, உனக்கு அறிமுகம் ஆன மாப்பிள்ளை தானே?” என்று அவளது பெரியம்மா பெண் கூட கிண்டல் செய்தாள்.
சு கமலா சும்மா இரு..... அதுல ஒரு த்ரில் என்றாள்.
அதுசரி என்றாள் அவள் சிரித்தபடி.

சங்கரன் தன் வகையில் முக்கிய சொந்தங்களையும் மங்களத்தின் அக்கா குடும்பத்தையும் அழைத்திருந்தார்
. இவர்கள் உள்ளூரிலேயே இருப்பதால் அதோடு இப்போது போதும் என்று நிறுத்திக்கொண்டனர். மற்றவரை திருமணத்திற்கு அழைக்கலாம் என்று.
தீபன் விவேக் மற்றும் தினேஷை கூட அழைத்து வந்திருந்தான். ராமைய்யாவும் அவர் மனைவியும் வந்திருந்தனர். அவர்களை கண்டு வணங்கி பரிச்சயம் செய்துகொண்டாள் வந்தனா.

சிறிது நேரத்தில் தீபாவுடன் ரகுபதியும் நிர்மலாவும் தாம்பூல தட்டு ஏந்தி வந்தனர். அவர்களை உபசாரமாக வரவேற்று மரியாதையோடு அமர்த்தி அறிமுகம் செய்தார் சங்கரன்.
அன்று காலை தீபாவை அமர்த்தி, எடுத்துச் சொன்னார் ரகுபதி.
தீபன் உன்னோட சொந்த அண்ணாதான் குட்டிமா.... அதோ உன் பெரியம்மா படம் மாட்டி இருக்கே டா.... அவங்களுகுக்ம் எனக்கும் பிறந்தவன்.... அவனுக்கு இன்னிக்கி கல்யாணம் நிச்சயம் பண்ண போறோம்.... அங்க நீ பக்குவமா நடந்துக்கணும்.... அவனிடம் ஏதானும் பேசணும்னா தனியா பக்கத்தில போய் மெல்ல பேசணும்.... எல்லோருக்கும் முன்னே அவனிடம் வேண்டாத கேள்விகள் எல்லாம் கேட்டு அவன அசிங்கபடுத்தக் கூடாது தீபாமா என்றார்.
சரிப்பா என்றாள்.

பின்
உங்களுக்கு முன்னாடியே தெரியும்தானே, பின்னே ஏன் என்கிட்டே சொல்லலை..... அண்ணன் ஏன் நம்ம கூட இல்லை தனியா இருக்குது?” என்று நூறு கேள்விகள் கேட்டுக் குடைந்தாள்.
அது எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் பிரச்சினை டா.... பர்சனல் அதான்.... அத விடு.... இப்போதான் சொல்லீட்டேனே டா என்றார்.
அண்ணனுக்கும் தெரியுமாப்பா நான் அவர் தங்கைன்னு?” என்றாள்.
இப்போ சமீபத்துல தான் தெரியும்.... ஆனா எனக்காக காமிச்சுக்கலை போல டா.... அதான் உனக்கு பரிசெல்லாம் குடுத்தானே என்றார்.
சரி சீக்கிரமா அங்க போலாம்பா.... அண்ணிய கூட எனக்கு தெரியும்பா.... அவங்க அன்னிக்கி என்னை கூட்டிகிட்டு வந்தப்போ கூடவே வந்தாங்க..... ரொம்ப அழகா இருப்பாங்க.... என்னை அணைச்சு சமாதானப்படுத்தினாங்க தெரியுமா என்று பீற்றினாள்.

இப்போது இங்கே வந்ததும் அமெரிக்கையாக தீபன் அருகில் வந்து அமர்ந்து அவன் கையை பிடித்துக்கொண்டாள். அவளைக் கண்டதும் பூவாய் மலர்ந்தது அவன் முகம்.
ஹேய் தீபாகுட்டி எப்பிடிடா இருக்கே?” என்றான்.
நீங்க என் நிஜமான அண்ணாவாமே.... ஏன் என்கிட்டே சொல்லலை.... நான் உங்க பேச்சு காய் என்றாள் மெல்லிய குரலில்.
அவன் முகம் சுருண்டது யாருடா சொன்னா?”என்றான்.
அப்பாதான் சொன்னாரு இன்னிக்கி காலையில...... ஏன் என்கிட்ட சொல்லலை அண்ணா?” என்றாள்.
சாரிடா, அதான் தெரிஞ்சுபோச்சே அப்பறம் என்ன.... காய் எல்லாம் விடாதே சரியா என்றான்.
அண்ணி எங்கேண்ணா?” என்று கேட்டாள்.
எனக்கென்ன தெரியும்... உங்க அண்ணி எங்க இருக்காளோ... இன்னும் கண்ணுலேயே படலை என்று அலுத்துக்கொண்டான்.
இரு அண்ணா நான் போய் பார்த்து அழைத்து வரேன் என்று அவன் நிறுத்தியும் கேட்காமல் உள்ளே புகுந்துவிட்டாள்.

விவேக்கிடமும் தினேஷிடமும் அவள் தன் தங்கை என்பதைச் சொன்னான்
... அவர்களுக்கு ஆச்சர்யம்..... விவேக்கிற்கு ஓரளவு விஷயம் தெரியும்தான் ஆனால் தங்கையைப் பற்றி அவனுக்கும் தெரிந்திருக்கவில்லை.
உள்ளே சென்ற தீபா அண்ணீ என்று அழைத்துக்கொண்டே வந்தனாவிடம் சென்றாள்.
ஹை குட்டி எப்பிடி இருக்கீங்க?” என்று அணைத்துக்கொண்டாள்.
நான் நல்லா இருக்கேன் ஆனா எனக்கு செம கோவம் உங்க மேலயும் அண்ணா மேலயும் என்றாள் முறைப்பாக.
ஏண்டா செல்லம்?” என்றாள்.
உங்களுக்குக் கூட தெரியும்தானே அண்ணீ.... எனக்கு மட்டும் யாரும் சொல்லலை.... தீபன் அண்ணா என் சொந்த அண்ணாதான்னு என்றாள்.

போகுது மா.... ஏதோ பெரியவங்க பிரச்சினை விடு.... இப்போதான் தெரிஞ்சுகிட்டியே.... எனக்கு நாத்தனாராசே என்று சீண்டினாள்.
ஆமா நான் உங்களுக்கு நாத்தனாராக்கும் பாத்து நடந்துக்குங்க என்றாள் பெரிய மனுஷி போல.
அங்கு எல்லோரும் சிரித்தனர். அவளுக்கு வெட்கமாகியது.
சரி சீக்கிரமா வெளியே வாங்க.... அண்ணா நீங்க வரலையேன்னு காத்துகிட்டு இருக்கார்.. அலுத்துகிட்டாரு என்றாள்.
இப்போது வெட்கப்படுவது வந்தனாவின் முறை ஆயிற்று.
பெண்ணை கூப்பிடுங்கோ என்று ஐயர் குரல் கேட்டது. அவளை கமலாவும் தீபாவுமாகவே அழைத்து வந்தனர். அவளையே கண்கொட்டாமல் பார்த்திருந்தான் தீபன்.
அண்ணா, அண்ணீ எப்படி?” என்றாள் தீபா அவனருகில் வந்து அமர்ந்து. “சூபர் என்றான்.

தனக்கென யாருமில்லாமல் தனியே இரு நண்பர்களோடு நிச்சயம் என்று வந்தது உள்ளே அவனுக்கு பெரும் துக்கத்தைக் கொடுத்தது. ஆனால் இப்போது இந்த சின்னக் குட்டி வந்து பெரிய மனுஷி போல பொறுப்பெடுத்துக்கொண்டு கலாட்டா செய்து கொண்டிருந்ததைக்கண்டு அவனுக்கும் மனசு நிறைந்தே இருந்தது.

நிர்மலாவை ஓரக்கண்ணால் பார்த்தான்
.... பாந்தமாக இருந்தார்..... அவரின் தோற்றம் அவனுக்குத் தன் அன்னையை நினவு படுத்தியது. சுப்ரஜாவும் இப்படித்தான் வைரத்தோடு மூக்குத்தி அணிந்து சற்றே நரைத்த தலை கொண்டையிட்டு பூச் சூடி இருப்பார்..... இவரும் அதேபோல இருக்கிறாரே என்று நினைத்தான்.....முகத்தை பார்த்தால் கெட்டவர் போலத் தோன்றவில்லையே என்ற எண்ணம் உதித்தது.... ஆனாலும் வெறுப்பாக பார்த்தான்.
தந்தையை ஒரு முறை எதேர்ச்சையாகத் திரும்பிப் பார்க்க அப்போது அவரும் கூட திரும்பி இவனைப் பார்க்க இருவர் கண்களும் சந்தித்துக்கொண்டன..... அவர் கண்களில் எல்லையில்லா பாசமும் ஏக்கமும் தெரிந்தது.... அவன் கண்களில் வெறுப்பும் கோபமும் இருந்தது..... அவன் உடனே முகம் திருப்பிக் கொண்டான்.

நிர்மலாவும் ரகுபதியும் எந்த சம்பிரதாயமும் விடாமல் தட்டு மாற்றிக்கொண்டு நிச்சயதாம்பூல சடங்குகளை செய்தார்கள்.... அதை ஒரு வித வெறுப்போடு பார்த்திருந்தான். புது புடவை மாற்றி வந்து அமர்ந்தாள் வந்தனா. அதே நேரம் இவனுக்கும் புதிய பாண்ட் ஷர்ட் கொடுத்து மாற்றிக்கொள்ள சொன்னார்கள். அவன் மாற்றிக்கொண்டு வந்து அமர்ந்தான்.

வந்தனா மிக அழகாக இருந்தாள்
. அவன் வாங்கி இருந்த நகை செட்டை தீபா கையில் கொடுத்து அணிவிக்கச் செய்தான். அவளுக்கு ஒரே பெருமை. பாந்தமாக செய்தாள். வந்தனா அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.... உதடு குவித்து காற்றில் முத்தமிட்டான்.... அவள் சிவந்து போய் தலை கவிழ்ந்தாள்.
மோதிரம் மாற்றிக் கொண்டனர். அண்ணீ அண்ணா என்று இருவரையும் சுற்றிச் சுற்றி வந்தாள் தீபா.

நிச்சயம் முடிந்து எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர். தீபாநான் அண்ணனுக்கும் அண்ணிக்கும் மத்தியில் என்று வந்து அமர்ந்தாள்.
ஹே லூசு ஏதானும் ஒருவர் பக்கம் ஒக்காரு.... நடுவில ஒக்காரக்கூடாது என்றார் நிர்மலா.
சரி என்று அவனருகில் அமர்ந்து கொண்டாள். “சாரி அண்ணீ என்று ஈஷல் வேறு.
சாப்பிட்டு முடித்து கிளம்பினர்.

என்னப்பா தீபன் எப்பிடி இருக்கே.... வீட்டுக்கு வாயேன்..... இன்னுமா நீ என்னை மன்னிக்கலை?” என்றார் ரகுபதி மனது கேளாமல். அவரைத் திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு அகன்றுவிட்டான் தீபன். அதைக்கண்டு பாவமாகியது வந்தனாவிற்கு.
“நீங்க கவலைப்படாதீங்க மாமா..... நான் சீக்கிரமே அவரை சரி பண்றேன் என்று கூறினாள்.


1 comment: