Sunday 21 July 2019

ANBIN VAASALILE - 11


ஏதானும் சாப்டியா அண்ணா என்று கேட்டாள் தீபா.
இன்னும் இல்லை, உங்க அண்ணீ கிளம்பறதுக்கு முன்னாடி ஜூஸ் கொடுத்துட்டு போனா என்றான்.

இப்போ ராத்திரியாச்சே சாப்பிட வேண்டாமா?” என்று கேட்டாள்.
நிர்மலா சட்டென்று உள்ளே சென்றாள். தன் கையால் தெளிவான பருப்பு ரசம் வைத்து நாக்கிற்கு உணக்கையாக காரம் எண்ணை இல்லாமல் கொஞ்சம் பருப்பு அரைத்த துவையலும் செய்து கிண்ணத்தில் சாதத்தை குழைய பிசைந்து கூட துவையலும் வைத்து எடுத்து வந்து கதவருகே நின்றாள்.
தீபா என்று அழைத்து கொடுத்தார்.

அவள் அதை வாங்கி அவனுக்கு அருகே அமர்ந்து மெல்ல ஊட்ட முற்பட்டாள்
. அவளுக்கு பழக்கம் இல்லை என்பதால் தடுமாறி சிந்தியது. அவள் தாயை பார்த்து விழிக்க, உடனே நிர்மலா சட்டென்று உள்ளே வந்தார். அவன் அருகில் நின்று மெல்ல வாய் வாயாக ஸ்பூனில் எடுத்து அவனுக்கு ஊடினாள்.
வேண்டாம் நானே சாப்பிட்டுக்குவேன் என்று பிடுங்காத குறையாக வாங்கப்போனான்.
வேண்டாம், உடம்பில் வலுவில்லை.... அவள் கொடுக்கட்டும், பேசாம சாப்பிடு..... உனக்குண்டான நர்சுனு நினைச்சுக்க என்றார் பின்னிருந்து ரகுபதி. அடங்கிப் போனான்.
அவர் ஊட்டிவிட அவன் உண்பதைக்கண்டு அவனுக்கும் அவர்களுக்கும் கண் நிறைந்து போனது.
அம்மா அம்மா என்று அரற்றியது மனம்.
அவன் கண்ணீரை தன் புடவை நுனியால் துடைத்து என்ன, அக்கா நினைப்பு வந்துடுச்சா?” என்று கேட்டார் அவரும் கண்ணில் நீர் நிறைய.
அவன் ஒன்றுமே பேசாமல் தலை குனிந்தான்.
அவங்களா நான் நிச்சியமா ஆக முடியாதுதான்..... ஆனாலும் நானும் உன் தாய்தான் தீபன்..... கொஞ்சம் முயற்சி செய்தா எங்களை மன்னிச்சு நீ ஏத்துக்கலாம்என்றார் மெதுவாக ஊட்டிக்கொண்டே. அவன் அப்போதும் பேசவில்லை ஆனால் சாப்பிட்டான்.
முடித்து அவன் வாய் துடைத்து என்ன மாத்திரை என்று கேட்டு எடுத்து கொடுத்து முழுங்க வைத்தாள்.
தீபா, பார்த்துக்க என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
தீபா தான் ஏதேதோ மெல்ல பேசியபடி இருந்தாள். அதுவே அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. அப்படியே தூக்கம் கண்ணை இழுக்க சரிந்தான். அவள் நிர்மலாவை அழைக்க அவள் வந்து தலையணையை சரி செய்து அவனை நீட்டி சரியாகப் படுக்க வைத்து போர்த்திவிட்டு விளக்கையும் அணைத்துவிட்டுச் சென்றாள்.

நடு இரவில் தீபன் சட்டென்று முழிக்க உடம்பு தூக்கிப் போட்டது.... குளிர் நடுக்கி எடுத்தது..... கம்பளியால் போர்த்தியும் அடங்கவில்லை. “அங்கிள் என்று அழைத்தான்.... அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை..... ‘இங்கேதானே படுக்கச் சொன்னேன் என்று கோபம் வந்தது. ‘நேற்று ஒரு குரலில் ஓடி வந்தாளே என் வனி என்று நினைத்தான். மீண்டும் தெம்பைத் திரட்டி குரல் கொடுத்தான். எழுந்துகொள்ள முயன்று எதையோ தட்டிவிட்டான். கீழே விழுந்து உருண்டது தண்ணீர் பாட்டில்.

என்ன என்னப்பா தீபன்?” என்று பதறி ஓடி வந்தனர் நிர்மலாவும் ரகுபதியும்.
இவர்கள் இங்கேயேவா இருக்கிறார்கள்?’ என்று வியந்தான்.
அவன் உடம்பு தூக்கிப் போடுவதைப் பார்த்து உடனே அவனை பிடித்து படுக்க வைத்து குளிர் பெட்டி மின் விசிறி எல்லாமும் அணைத்துவிட்டு, அவன் மீது பெரியதொரு கம்பளியை போட்டு போர்த்திவிட்டு, யுகலிப்டஸ் எண்ணையை எடுத்து வந்து அவன் காலில் அழுந்த தேய்த்தார் ரகுபதி.

வேண்டாம் விடுங்க என்று குழறினான்.
பேசாம படு சின்னு என்றார். பல பல வருடங்களுக்கு பின் அந்த வார்த்தை சொல்லி அழைக்கிறார் என்று புத்திக்குள் உரைத்தது. துவண்டு படுத்தான்.
நிர்மலா அதற்குள் சூடாக பானம் கரைத்துக்கொண்டு வந்து அவனை சாய்த்து பிடித்துக்கொண்டு புகட்டினார். வாய் வாயாக முழுங்கினான். அதுவும் கூட காலிலும்  சூடு ஏற கொஞ்சம் மூச்சு வந்தது. அப்படியே உறங்கிப் போனான்.
நான் இங்கேயே இருக்கேன் நீ போய் படு என்று நிம்மியை அனுப்பினார்.
ரகுபதி அங்கேயே சாய்வு நாற்காலியை போட்டுக்கொண்டு சாய்ந்தார். ராமய்யா வேண்டும் என்றே பின் தங்கினார். இந்த கவனிப்பு அவர்கள் ஒன்று சேர அவசியம் என்பது அவர் எண்ணம்.

அடுத்த நாள் காலை அவனுக்கு முழிப்பு வந்தபோது அருகே சாய்வு நாற்காலியில் ரகுபதி சாய்ந்து தன்னை கஷ்டபடுத்திக்கொண்டு உறங்குவதைக் கண்டான்.
பாவம் என்னாலதான் என்று தோன்றியது நிஜம். அதை உடனே மாற்றிக்கொண்டான்.
நான் வரச்சொன்னேனா.... இல்ல இங்கே இப்படி படுக்கச் சொன்னேனா என்று முரண்பாடானது மனம்.
நிர்மலா அதற்குள் குளித்து ஈரத் துண்டுடன் காபி எடுத்து வந்தாள். அவரை எழுப்பி தந்து விட்டு அவனை குடிக்கச் செய்தார்.  பேசாமல் குடித்தான். சாய்ந்து உட்கார்ந்தான். சிறிது நேரத்தில் ராமையா வந்து அவனுக்கு உடை மாற்றி, ஈர துண்டால் உடம்பு துடைத்துவிட்டார்.

அதிகாலையிலேயே எப்பிடி இருக்கு என் புருஷனுக்கு?” என்று மெசேஜ் வந்துவிட்டது வந்தனாவிடமிருந்து.
நல்லா இருக்கேன் இன்னிக்கி ஜுரம் இல்லை..... பெண்டாட்டி அருகில் இல்லாத குறை மட்டும்தான்என்று பதில் அனுப்பினான்.

டாக்டர் வந்து பார்த்தார். பரவாயில்லை குணமாகீட்டு வருது. இன்னொரு வைரல் அட்டாக் ஆகக் கூடாது. பாத்துக்குங்க. அடுத்த சில நாள் ரொம்ப எச்சரிக்கையா இருந்துக்குங்க.... அதே மெடிசின் எடுத்துக்குங்க போதும்.... என்றுவிட்டு சென்றார்.
இரவு குளிர் எடுத்தது பற்றிக் கூறினார் ரகுபதி.
சில சமயம் அப்படி இருக்கும்.... கவலை வேண்டாம்..... நிற்காம அப்படியே இருந்துச்சுன்னா உடனே கூப்பிடுங்கஎன்றார்.

அன்றும் அவர்கள் அங்கேயே இருந்தனர்.
நான் நல்லாத்தானே இருக்கேன்.... அவருக்கு வேலை இருக்குமே.... வேணும்னா போகச் சொல்லுங்க என்றான் ராமையாவைப் பார்த்து.
அது எங்களுக்கு தெரியும்.... மூடிகிட்டு படு சின்னு என்றார் ரகுபதி. அவன் முறைத்தான்.
என்ன முறைப்பு, அடிச்சு ஒதைச்சு வளர்த்திருக்கணும்....அப்போ இந்த மாதிரி நிலைமை வந்திருக்காது என்று முனகினார்.
ஐயோ, என்ன நேரத்துல என்ன பேசறதுன்னு தெரிய வேண்டாமா..... வயசாச்சு. போங்க அந்தண்டை என்று அனுப்பினாள் நிர்மலா.
அன்றும் கூட அதேபோல அவனை ஆதுரமாக பார்த்துக்கொண்டாள் நிர்மலா, கூட தீபா உதவினாள்.

நடுவில் ஒரு மணி நேரம் ஓடி வந்து விட்டாள் வந்தனா.
எனக்கு அங்கே இருப்பே கொள்ளலை தீபு.... நீங்க இங்கே எப்பிடி இருக்கீங்களோன்னு ஒரே கவலை.... இரவெல்லாம் தூங்கவே முடியலை என்றாள் கண் கலங்க. “அப்போதான் அங்கிள் சொன்னாரூ, மாமா அத்தை தீபா எல்லாம் இங்க வந்திருக்காங்க..... உங்கள கவனிச்சுக்கன்னு அப்போதான் நிம்மதியாச்சு என்றாள்.
அவனும் நேற்று நடந்தவற்றை மெல்ல அவளோடு பகிர்ந்து கொண்டான். கதைபோல கேட்டாள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

டீ அப்படி பார்க்காதேன்னு சொன்னேன் இல்ல..... அப்பறம் என்னைத் தப்பு சொல்லாதே.... எனக்கு இன்பெக்ஷன் வேற..... அதோடவே முத்தம் கொடுத்துடுவேன்.... ஆமா சொல்லீட்டேன் என்றான்.
இன்னும் உங்க வால்த்தனம் போகலியே என்று சிவந்தாள்.
பாவம் டீ நானு என்றான்.
ஆஹான் அதுக்கு என்ன இப்ப?” என்றாள்.
ஏதோ கொஞ்சம் கவனிக்கலாம்தானே என்றான் ஏக்கமாக.
நாம் என்ன தனியாவா இருக்கோம்..... என்ன இது அடம்..... தீபா வேற ரெண்டுங்கெட்டான் வயசு..... பேசாம சமத்தா படுங்க என்று அடக்கினாள்.
போடி என்று முரண்டி படுத்துக்கொண்டான்.
நான் கிளம்பட்டுமா.... ‘வெளி வேலை இருக்கு, தோ வந்துடறேன்னு சொல்லிட்டு உங்கள பார்க்க ஓடி வந்திருக்கேன்..... நல்லகாலம் அத்தை மாமா இருக்காங்க இங்கேயே என்றாள்.
போகணுமா?” என்றான்.
ஆமா டா செல்லம் என்றாள்.
சரி என்றான் மனசில்லாமல்.

அத்யாயம் இருபத்தி இரண்டு
அன்று மாலைக்குள் காய்ச்சல் சுத்தமாக விட்டுப்போனது. கொஞ்சம் ஓய்வாக வெளியே ஹாலில் வந்து அமர்ந்தான். தீபா பக்கத்திலேயே அமர்ந்துகொண்டு என்னமோ பேசிக்கொண்டிருந்தாள். அங்கே ரகுபதி டிவி பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

என்ன கொஞ்சம் தேவலையா இப்போ சின்னு?” என்று கேட்டார் இவனை பார்த்து.
ஆம் என்பது போல தலையை மட்டும் அசைத்தான்
எங்களோட அந்த வீட்டுக்கு வரியா?” என்று கேட்டார்.
மாட்டேன் என்று தலை இடம் வலமாக ஆட்டினான்.
வாண்ணா ப்ளிஸ்.... நாம் எல்லாம் ஒண்ணா ஜாலியா இருக்கலாம் அண்ணா என்று கெஞ்சினாள் தீபா.
உனக்கு அதேல்லாம் சொன்னாப் புரியாது, வேண்டாம் தீபாகுட்டி என்று அவளை அடக்கினான்.
சரி விட்டு பிடிப்போம் என்று நான் கிளம்பறேன் எனக்கு அவசர வேலை வந்திருக்கு.... உன் சித்தியும் தீபாவும் இங்கே இருப்பாங்க இன்னும் நாலு நாள்.... முரண்டு பண்ணாத..... உடம்பு திரும்பப் படுத்தக் கூடாதுன்னு டாக்டர் சொல்லீட்டு போயிருக்காரு  தெரியுமில்ல.... மருமகளாலையும் இங்கேயே இருந்து உன்னைத் தாங்க முடியாது..... நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க..... கல்யாணம் வேற நெருங்குது. ஒடம்பு குணமானதும் ஒழுங்கா நீ அங்க வந்து எங்களோட இரு, இல்லேன எங்களையானும் இங்க வரதுக்கு ஒத்துக்க..... ஊருக்காகவானும் நாம ஒண்ணா இருந்து கல்யாணத்தின்போது ஒற்றுமையா நடந்துக்கணும்

எங்க மனசுல கோடி ஆசையும் ஏக்கமும் இருந்தாலும், அது உன்னை இத்தனை நாளா பாதிக்கவே இல்லை.... நானும் விட்டு பிடிப்போம்னு இருந்துட்டேன்..... இனிமே அப்படி விட முடியாது..... எதோ ஒரு வழிக்கு வா, அவ்வளோதான் சொல்ல முடியும்.... நீ தோளுக்கு மேல வளர்ந்தப் பிள்ள..... எல்லாம் தெரிஞ்சவன்..... நான் செய்தது உலகத்தில இல்லாத தப்பு இல்லை தீபன்.... ஆனாலும் நான் என் தப்பை ஒத்துகிட்டு மன்னிப்பு கேட்டுகிட்டேன்..... நீ தான் இன்னும் எங்களை ஏத்துக்கலை..... யோசி உனக்கே புரியும் என்றுவிட்டு கிளம்பிவிட்டார்.

ஏன் தீபாகுட்டி, உங்கம்மாவும் போயிருக்கலாமே, அங்க அவருக்கு சாப்பாடு எல்லாம் கஷ்டம் ஆயிடுமே,,,,. எப்படி சமாளிப்பாரு?” என்றான் நிர்மலாவைப் பார்த்தபடி.
அங்க ஆள் இருக்கு.... அவர் பாத்துக்குவாரு... உன்னை இப்போ கவனிச்சுக்கறதுதான் அதவிட முக்கியம் என்றார் அவர்.
நாலு நாளாக ஆபிஸ் செல்லவில்லை. ‘விவேக் பாவம் எப்படி சமாளிக்கிறானோ என்று எண்ணி அன்று கொஞ்சம் தெம்பாக இருக்கவே போன் செய்து அவசர வேலை ஏதேனும் உள்ளதா என்றும் பிசினஸ் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டான். கொஞ்சம் இமெயில் பார்த்து பதிலளித்தான்.
போதும் தீபன்.... இப்போதான் உடம்பு குணமாகி இருக்கு.... ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே என்றார் நிர்மலா.

சொல்வது சரியே என்று மூடி வைத்தான்
. வந்தனா வந்து சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தாள். அந்த நேரம் தீபாவை வேறே வேலையாக உள்ளே அழைத்துக் கொண்டு விட்டாள் நிர்மலா.
என்னடி ஆளையே காணும், ஏங்கிப் போயிட்டேன்டிஎன்று கொஞ்சிக்கொண்டான்.
அதான் வேணுங்கற ஆளுங்க இருக்காங்களே உங்களை கவனிச்சுக்க என்று வேண்டுமென்றே சீண்டினாள்.
ஒதபடுவே வனி என்றான். அவள் கலகலவென சிரித்தாள். அவன் நெற்றியில் முடியை ஒதுக்கி குனிந்து கன்னத்தை வருடிவிட்டு கிளம்பினாள் அவனும் அவள் கை பிடித்து லேசாக இதழ் ஒற்றி எடுத்தான்.

இரு நாட்களில் அவன் பூரண நலம் பெற்று ஆபிஸ் போக ஆரம்பித்தான். நிர்மலா தீபாவுடன் வீடு திரும்பினாள்.
புறப்படும் முன் நான் சொல்றேனேன்னு கோபிக்காதே தீபன், நான் உங்க அம்மா இல்லைதான் ஆனாலும் எனக்கு நீ பிள்ளைதான்.... அவருக்கும் வயசு ஏறிகிட்டே போகுது.... உன் பிரிவை தாங்கும் சக்தி அவர்கிட்ட இல்லை.... நீ கொஞ்சம் எங்க மனச புரிஞ்சுகிட்டு ஒண்ணா வாழ ஒத்துக்கணும்..... என்மேல தான் குத்தம் எல்லாம்னு நீ நினைச்சா என்னை மன்னிச்சுடு பா என்று கரம் கூப்பினாள்.
ஐயோ என்ன இது என்றான் பதறிபோய்.
நான் வரேன் உடம்பப் பாத்துக்க..... இப்போதான் குணமாகி இருக்கு..... ரொம்ப அலஞ்சுக்காதே என்று கூறிவிட்டு ராமைய்யாவிடமும் கவனித்துகொள்ள சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். தீபா மனசில்லாமல் சென்றாள்.

எல்லோரும் போனதும் வீடு சூனியமானது தீபனுக்கு.’ ச்சே என்ன இது. இத்தனை இத்தனை வருடங்கள் இதை விடவும் சின்ன வயதிலிருந்து இப்படித் தனியே தானே வாழ்ந்தேன்.... இப்போது என்ன வந்தது எனக்கு..... தோ கூடிய சீக்கிரம் திருமணம் நடந்துவிட்டால் என் வனி வந்துவிடுவாளே அப்பறம் என்ன என்று நினைத்தான்.
ஆனாலும் அப்பா சித்தி தீபா நான் வனி என்று எல்லோரும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்தானே என்று தோன்றியது ஒரு ஓரத்தில். அந்த எண்ணத்தை உதறிக் கொண்டான்

வேலை மேல் கவனம் வைத்தான்
. பாவம் விவேக் ஒண்டியாக சமாளித்துத் திணறி போயிருந்தான். திருமணம் வேறு நெருங்கிகொண்டிருந்தது.... பத்திரிகை கொடுப்பது வீட்டை ஒழுங்கு படுத்தி விருந்தினர்களுக்கு ஏற்பாடுகள் செய்வதென அது ஒரு புறம் பயமுறுத்தியது.
என்னடா இது என்று அலுப்பாக இருந்தது. ‘எப்படி இருந்தேன் இப்படி ஆகிப் போனேனே என்று நொந்துகொண்டான்.
வந்தனாவிடம் புலம்பினான்.
அதுசரிதான்..... எல்லாம் தனியா மேனேஜ் பண்றது கஷ்டம் தானே தீபு..... நீங்க ம் னு ஒரு வார்த்தை சொன்னா அப்பா அம்மா தங்கைன்னு ஒரு குடும்பமே ரெடிமேடா கிடைக்குமே.... அவங்க வந்துட்டா பிறகு இதெல்லாம் கவலையே இல்லையே தீபுஎன்று வேப்பிலை அடித்தாள்.
அவன் மௌனமானான். ‘நானே குழம்பிக் கிடக்கிறேன் இவ வேற என்று பொருமினான்.

அத்யாயம் இருபத்தி மூன்று
இந்த குழப்பத்துடனேயே திருமண ஏற்பாடுகளைப் பார்த்தான் தீபன். சில நெருங்கிய சொந்தங்கள் ஊரிலிரூந்து வந்துவிட்டனர். பலருக்கும் இவர்கள் குடும்ப நிலவரம் தெரியும் என்பதால் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் சில வயதான சொந்தங்கள் அவனிடம் குற்றப் பத்திரிகை வாசித்தனர்.

வந்ததுமே என்னப்பா தீபன், இன்னுமா உனக்குப் பிடிவாதம்..... உன் கல்யாணம், வீடு நிறைக்க அம்மா அப்பா தங்கைன்னு அழைச்சு வெச்சுகிட்டு கலகலப்பா கல்யாணம் பண்ணிக்காம என்ன இது..... நல்லா இல்லியே என்று ஆரம்பித்தனர்.
அவன் எதிர்பார்த்ததுதான்.... “வருவாங்க, மண்டபத்துல பாத்துக்குங்க என்றான் பொதுப்படையாக.
அது தெரியுது, இங்க ஏன் இல்லை?” என்றார் அந்தப் பெரியவர். அவன் எதுவும் பதில் பேசாது அமர்ந்திருந்தான்.
என்னவோ, இத்தனை  வீம்பு ஆகாது என்றார் அவர்.

பெரியப்பாவோ இங்கே வராமல் நேரே ரகுபதி வீட்டில் போய் இறங்கினார்
.
என்ன அண்ணா அங்க போயிருக்கலாமே.... பெரியவங்களா அங்க இருந்து அவனுக்கு வேண்டியதச் செய்யலாமே அண்ணா..... நானும் அங்க இல்லை, நீங்களும் இங்க வந்துட்டீங்களே?” என்று ரகுபதி கேட்க,
அவன் கொழுப்புக்கு தனியா அவதி படட்டும்னு தான்..... நீ இருக்கே, தோ மருமக இருக்கு, தங்கச்சி தங்கச் சிலையாட்டமா இருக்குது. அதெல்லாம் வேணாம்னுதானே பிடிவாதம் பிடிச்சு தனியா ஒக்காந்திருக்கான் பழனி ஆண்டவன் மாதிரி..... அப்படியே தனியாவே கல்யாணமும் பண்ணிக்க வேண்டியதுதானே..... இப்போ மட்டும் சொந்தக்காரங்க நினவு வந்துச்சா, அப்போவும் நீங்க வேண்டாம் நாங்க வேணும்னா எப்பிடி..... அதப் புரிய வைக்கத்தான் நான் இங்க வந்து இறங்கினேன் என்றார் அவர்.

அசலே கோபக்காரர் என்பதால் ரகுபதி மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை
.
திருமண தினத்தன்று பலரும் பல தினுசாகப் பேசுவார்களே என்று கொஞ்சம் யோசனை வந்தது தீபனுக்கு, ஆயினும் இப்போது போய் இங்க வாருங்கள் ஒன்றாகக் கிளம்பலாம் என்று அழைக்க மனம் வரவில்லை. காரியம் ஆக வேண்டி கூப்பிடுகிறான் என்ற கெட்ட பெயர் வருமே என்று அஞ்சினான்.


2 comments: