Monday 22 July 2019

ANBIN VAASALILE - 12


இங்கிருந்து மற்ற சொந்தங்களுடன் இவனும் அங்கிருந்து அப்பாவும் மற்றவர்களும் தனித் தனியே மண்டபத்தில் வந்து இறங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அவனுக்கு மிகவும் பிடித்த சித்தப்பாதான் அந்த வீட்டிற்கும் இந்த வீட்டிற்கும் தூது பேசி எல்லாவற்றையும் தீர்மானித்து ப்ளான் செய்தார். கூடவே நின்று தைரியம் கூறினார். மண்டபத்தை அடைந்தனர்.

பின்னோடு ரகுபதியும் வந்து சேர மணமகனுக்கென்று ஒதுக்கப்பட்ட இரு பெரிய அறைகளில் எல்லோருமாக ஒன்றாகவே இருக்க வேண்டி வந்தது. ஆண்களுக்கு ஒன்று பெண்களுக்கு ஒன்றாக இரு அறைகளை பிரித்துக்கொண்டனர்.
இப்போ என்ன பண்ணுவாராம் தொரை?’ என்று சீண்டினார் பெரியப்பா.
அண்ணா பேசாம இருங்களேன்.... கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும் என்று கெஞ்சினார் ரகுபதி.
ஒற்ற வயது சொந்தங்களுடன் அரட்டை அடித்தபடி அவ்வபோது தந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டான் ஓரக்கண்ணால். அதில் ஆனந்தம், பிள்ளையின் கல்யாணம் என்ற பெருமிதம் தெரிந்தது.

தீபாவுக்கோ கேட்கவே வேண்டாம். துள்ளல் நடைபோட்டு ஆண்கள் ரூமுக்கும் பெண்கள் ரூமுக்கும் அலையாய் அலைந்தாள். பட்டுப்பாவாடை சட்டை அணிந்து குஞ்சலம் வைத்து பின்னிய நீண்ட பின்னலில் பூச்சூடி கால்களில் கொலுசு ஜல் ஜல் என சப்தமிட கை வளையல்கள் குலுங்க சின்னதொரு தேர் போல அவள் ஆடி ஓடி மகிழ்ந்தாள். அதைக்கண்டு ஆனந்தப்பட்டான் தீபன்.

நிர்மலா வீட்டின் முதிய சுமங்கலியாக குடும்பத்து மருமகளாக எல்லோரையும் கவனித்துக்கொண்டாள். அவர் செய்யும் ஒவ்வொரு வேலையையும் பார்க்கும்போது தன் தாயே நினைவுக்கு வந்தார் தீபனுக்கு. அவன் மனம் நிறையத்தான் செய்தது. ஆனால் காண்பிக்க தெரியாமல் தடுமாறினான் அந்த வளர்ந்தக் குழந்தை.

மாலை பெண்ணிற்கு பூ வைத்து சடங்கு செய்து இவனைவிட்டு மோதிரம் இட வைத்தனர். வந்தனா மெஜன்தாவில் மஞ்சள் கரையிட்ட பட்டில் அழகுற மிளிர்ந்தாள். மேடையில் வந்து அமரும்போதே ஓரக்கண்ணால் அவனை பார்த்தபடி வந்தாள். தீபா நாத்தனாராக்கும் என்று ஜம்பமாக சுற்றிக்கொண்டிருந்தாள். பெரியவர்கள் சிரித்துக்கொண்டனர்.
பொழுது விடிந்தால் திருமணம். இருவரையும் அவரவர் வீட்டினர் எழுப்பி குளிக்க செய்து பட்டுடுத்தி பொட்டு வைத்து தயார் செய்தனர்.

மேடையில் அவன் முதலில் வந்து அமர பெத்தவாளுக்கு பாத பூஜை செய்யணும் என்றார் புரோகிதர். அவனுக்கு திகைப்பானது. சரி என்று தலை அசைத்தபடி சித்தப்பாவை பார்த்தான். அவர் புரிந்து கொண்டு ரகுபதி நிர்மலாவை அழைத்து வந்து அமர்த்தினார்.
அவன் பணிவாகவே மனமுவந்து அவர்கள் பாதங்களை நீர் விட்டு கழுவி பூக்கள் போட்டு தண்ணீரை தன் தலையில் தெளித்துக் கொண்டான். அதைக் கண்ட ரகுபதிக்கும் நிர்மலாவிற்கும் கண்கள் பனித்து போயின.

புதுசு வாங்கி இருந்தா குடுங்கோ என்றார் புரோகிதர்.
அட வந்தனா புத்திசாலியா அன்னிக்கே சொல்லி வாங்கச் செய்தாளே..... இதற்குத்தானா,  நாந்தான் ஒண்ணுமே தெரியாம வளர்ந்துட்டேன் என்று தீபாவை அழைத்து தங்களது அறையில் கொண்டு வந்து வைத்திருந்த புதுத் துணி பைகளை எடுத்து வரச்செய்தான். அதை தாம்பூலத்தோடு வைத்து இருவரிடமும் தந்து காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றான். தங்களை மன்னித்தானோ ஏற்றுக்கொண்டானோ இல்லையோ இப்போது சபையில் அவன் எதையும் விட்டுக் கொடுக்காமல் செய்தது அவர்கள் மனதை நிரப்பியது. மனதார வாழ்த்தினர். ‘புதுத் துணி எடுத்துள்ளானே என்று வியந்து போயினர்.
தீபாவிடம் மட்டும் முன்பே அவளது பட்டுப் பாவாடை துணிகளை கொடுத்து தைத்து வைத்துக்கொள்ள ஏதுவாகத் தந்திருந்தான்.

பின்னோடு வந்தனா அழைத்து வரப்பட்டாள். மாலை மாற்றிக்கொண்டனர். இவனுக்கும் அவளுக்கும் சொந்தங்கள் உதவ ஒருவரை ஒருவர் ஏய்தபடி மாலை மாற்றும் சடங்கு நடந்தது. அவள் அழகிய சிவப்பு வண்ண பட்டில்  செல்ப்  ஜரிகை பார்டருடன் அமைந்த புடவையில் தேவதையாகத் திகழ்ந்தாள். தலை சாமானுடன் பூ ஜடை தைக்கபட்டு அசைந்தாட வந்து அமர்ந்தாள். அவளது மருதாணி இட்ட விரல்களை ஒருவித கிளர்ச்சியோடு பற்றிக்கொண்டான் தீபன். அவள் ஓரவிழி பார்வையில் உலகம் மறந்தான்.
முகூர்த்த நேரத்தில் அவன் அவளது அழகிய சங்கு கழுத்தில் தாலி கட்ட தீபா பின் தாலி முடிந்தாள்.

பெரியாவாகிட்ட ஜோடியா ஆசீர்வாதம் வங்கிக்குங்கோ என்றனர். முதலில் வந்தனா தீபனின் பெற்றோரிடம் சென்றாள், அவனோடு ஜோடியாக அவர்கள் காலில் விழுந்தாள்.... கண்கள் நீர் திரையிட ஆசீர்வதித்தனர்.....  எல்லோருக்கும் மனம் நிறைந்தது..... பின்னோடு வந்தனாவின் பெற்றோரிடமும் மற்ற சபை பெரியோரிடமும் ஆசி பெற்றனர்.
சங்கரன் கைகளை பற்றிக்கொண்டார் ரகுபதி சம்பந்தி ரொம்ப சந்தோஷம்..... உங்களாலதான் இந்த அளவானும் எம்பிள்ளை எங்களை பக்கத்தில சேரத்துகிட்டிருக்கான்..... இதப் பாத்தீங்களா புதுசெல்லாம் எடுத்திருக்கான் எங்களுக்காக என்று காண்பித்தார் தங்கள் உடையை. சங்கரன் புன்னகைத்துக்கொண்டார். “நம்ம கையில என்ன இருக்கு சம்பந்தி..... ஏதோ சின்னத்தனம்.... இருக்கற கொஞ்ச நஞ்ச வெறுப்பும் சீக்கிரம் மாறிடும்.... என் மக மாத்தீடுவா கவலைப்படாதீங்க என்றார்.

அன்று மாலை வரவேற்பு தடபுடலாக நடை பெற்றது. ரகுபதி , சங்கரன் மற்றும் தீபன் வந்தனாவின் ஆபிஸ் கும்பலே அரங்கம் வழிந்தது. திறந்தவெளி லான் என்பதால் மூச்சுமுட்டாமல் அத்தனை கும்பலையும் தாங்கியது.
எல்லோரும் ஒரு முகமாக ஜோடி பொருத்தத்தை சிலாகித்து பேச மங்களம் பயந்து போனாள். அவளும் நிர்மலாவுமாக ஆரத்தி கரைத்து எடுத்து வந்து அதன் மத்தியில் வெற்றிலையில் சூடம் ஏற்றி இருவருக்கும் திருஷ்டி கழித்தனர்.
அன்று இரவே வந்தனாவை தீபனுடன் அவன் வீட்டில் கொண்டு விட்டனர். கண்கள் நிறைந்து போக பிரியா விடை கொடுத்தனர் தங்களது ஒரே செல்ல மகளுக்கு சங்கரனும் மங்களமும்.

அத்தை மாமா, நீங்க எப்போ வேணும்னாலும் எங்களோடு வந்து தங்கலாம்..... அங்கேயே வந்து பர்மனன்டா தங்கினாலும் ரொம்பவே சந்தோஷம்... கலங்காதீங்க என்று அவர்களை தேற்றினான் தீபன்.
நான் உங்க மருமகன் இல்லை, மகன், அத மட்டும் நினைவில் வெய்யுங்க என்றான். உண்மைதான் என்று தலை அசைத்தனர்.

அத்யாயம் இருபத்தி நான்கு
அன்று முதலிரவு. அவளை அலங்கரித்த உறவு பெண்களும் மங்களமும் உள்ளே கொண்டு விட்டனர்.
அங்கே ஆவலோடு ஆயிரம் கண்ணாய் காத்திருந்தான் தீபன். புதிதாய் அவனை பார்ப்பதுபோல அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
என்னடி புதுசா வெக்கம்?” என்றான். அவள் ஒன்றும் பேசாமல் தலை குனிந்தபடி அமர்ந்தாள்.
பேசுடி செல்லம் என்றான். அப்போதும் பதில் இல்லை.
ஹே ஹனி என்று குழைந்தான். அருகில் வந்து அவள் கை பிடித்து அருகில் இழுத்தான். அவன் மீது சாய்த்துக்கொண்டான்.
வனி என்றான்
ம்ம் என்றாள்.
ஹப்பா எங்க ஊமையா ஆகிட்டியோன்னு பயந்துட்டேன் என்றான். அவள் அவன் சட்டை பித்தான்களை திருகிக் கொண்டு இருந்தாள். “அத ஏண்டீ பாவம் பிடுங்கற.... இருந்துட்டு போகட்டுமே என்றான் கேலியாக.
அவள் சட்டென்று கை எடுத்துவிட்டாள்.
அவள் உச்சி மீது முத்தமிட்டான். அவள் மேலும் குனிந்தாள்.
நீ இப்படியே வெக்க பட்டுகிட்டு இரு..... விடிஞ்சுடப் போகுது என்று அலுத்துக்கொண்டான்.
என்ன பண்ணணும்?” என்றாள் குரலே எழும்பாமல்.
அத நான் சொல்லித்தறணுமா?” என்றான் தாபத்தோடு.

அவன் முகம் பார்த்தவள் அவன் கண்களில் தெரிந்த அந்த தாபத்தைப் பார்த்து சிவந்து மீண்டும் குனிந்து கொண்டாள்
.
அவள் முகத்தில் ஒரு விரலால் கோலமிட்டபடி. அவள் நாணி சிலிர்த்தாள்.
அதன்பின் அங்கே வார்த்தைகளுக்கு வேலை இருக்கவில்லை.

பொழுது விடியும் நேரம் முழித்தாள். ஆறு என்றது கடிகாரம். அவனை விலக்கி சிவந்த முகத்துடன் தன்னை சீர் செய்துகொண்டு நகர்ந்து வந்து குளிக்கச் சென்றாள். பாத்ரூமில் தண்ணீர் விழும் சப்தம் கேட்டு தீபன் கண் விழித்தான். மூடிய கண்ணோடு அவளை பக்கத்தில் தேடியது அவன் கை.
அதுக்குள்ள முழிச்சு குளிக்கலைனா என்னடீ குடிமுழுகி போகுது?”   என்று அலுத்துக்கொண்டான் வெளியே வந்தவளிடம்.
அதுசரி விடிஞ்சே போயிடுச்சு..... வெளியே வீட்டுப் பெரியவங்க காத்திருப்பாங்க... இன்னும் சொந்தக்காரங்க வேற இருக்காங்களே அத்தான்..... அதுனால சமத்துப் பிள்ளையா நீங்களும் சீக்கிரமா எழுந்திருச்சு குளிச்சு கீழ வருவீங்களாம் என்றுவிட்டு தனது பட்டுப் புடவை கொசுவம் வைத்து பின் செய்தாள்.

வாடி என்றான் தாபத்துடன்.
ம்ஹூம் நான் குளிச்சாச்சு என்றாள் சிவந்தபடி.
போ என்று கோபித்துக்கொண்டு திரும்பிப் படுத்துக்கொண்டான்.
சரியான அடம் என்று சிரித்துக் கொண்டாள். வெளியே வந்து கீழே இறங்கினாள். நேரே சுவாமி அறைக்குச் சென்றாள்
ஸ்வாமிப் படங்கள் விளக்கு என்று நிறைய இருந்தாலும் பெரிதாக கவனிக்கப் படாமல் ஏனோ தானோ என்று சுத்தம் செய்யப்பட்டு மட்டும் இருந்தது. மனம் கேட்காமல் ஓரளவு ஒழுங்கு படுத்தி படங்களுக்கு பூ போட்டு கோலமிட்டு விளகேற்றினாள். கும்பிட்டு முடித்து அங்கிருந்து சமையல்கட்டை அடைந்தாள்.

ராமைய்யாவும் இன்னும் சில உறவு பெண்களும் அங்கே காலை காபி மற்றும் சிற்றுண்டி வேலைகளைப் பார்த்திருந்தனர்
. அவளும் சட்டென்று புடவையை தூக்கி சொருகிக் கொண்டு உள்ளே புகுந்து சட்டினிக்கு தேங்காயை துருவ ஆரம்பித்தாள். “நீங்க புது மருமக, நீங்க ஏன்மா இதெல்லாம் பண்ணிக்கிட்டு.... நான் பாத்துக்கறேன் என்றார் ராமைய்யா.
அதெல்லாம் ஒண்ணும் பரவாயில்லை அங்கிள் என்று சட்டினி அரைத்து எடுத்தாள். தாளித்து வைத்துவிட்டு தனக்கும் தீபனுக்குமாக காபி எடுத்துக்கொண்டு மேலே சென்றாள்.
பரவாயில்லை புது மருமக என்று பின்னே சில பெண்கள் பேசக்கேட்டு புன்னகைத்துக்கொண்டாள்.

காபி எடுத்துக்குங்க தீபன் என்றாள். அவனோ இழுத்துப் போர்த்திக்கொண்டு பதிலேதும் கூறாமல் கிடந்தான்.
ஆனாலும் அடம் பண்றீங்க..... சரி என்ன வேணும்?” என்று பக்கத்தில் சென்று அவனை தொட்டு எழுப்பப் போனாள்.
நீதாண்டீ வேணும் என்று அவளை கட்டிலில் சாய்த்து கூடவே தானும் அவள் மீது சாய்ந்தான் பின்னாலிருந்து தீபன்.
ஆஅ..” என்று கத்தினாள்.
அவன் அவசரமாக அவள் வாய் பொத்தினான்
என்னடி, நான் ஒண்ணுமே பண்ணலியே ஏன் அலறினே?” என்றான்.
நீங்களா!... அப்போ இது என்றாள் படுக்கையை காண்பித்து
அதுவும் நான்தான் என்று சிரித்தான்.
தலையணைகளை தான் போல அமைத்து போர்வையை அதன் மீது போர்த்தி இருந்தான்.
சி போ நான் பயந்தே போய்டேன் என்று முரண்டினாள்.
ஐயோ சாரிடி கோபிக்கற நேரமா இது என்று குழைந்தான். கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்து கொஞ்சினான். இதழில் கதை எழுதி முடித்தான்.
காபி ஆறிடும் என்றாள் குரலே எழும்பாமல். எழுந்து காபி குடித்தனர்.
நான் கீழே போறேன்.... நீங்களும் சீக்கிரம் வாங்க என்று கூறி இறங்கினாள்.

சமையல்கட்டை அடைந்து மேற்கொண்டு சிற்றுண்டிக்கு வேண்டியதை கவனித்து  கொஞ்சம் கேசரி செய்தாள்
. சொந்தக்காரர்களை அழைத்து தானே பரிமாறினாள். 
பலே ரொம்ப ருசியா இருக்கே ஜமாய்ச்சிட்டியே...” என்று மெச்சிக்கொண்டனர்.
பக்குவமாத்தான் செஞ்சிருக்கா புது மருமக என்று பெண்கள் பாராட்டிக்கொண்டனர்.
அதற்குள் தீபனும் கீழே இறங்கி வர அவர்கள் இருவரையும் ஜோடியாக அமர வைத்து தானே பரிமாறினார் ராமையா. அவருக்குத்தானே இதயம் கொள்ளா சந்தோஷம். ஆசையாக சாப்பிட்டான் தீபன்.

டீ கேசரி சூபர் என்றான் காதோடு. அவள் வெட்கத்தோடு தாங்க்ஸ் என்றாள்.
இந்தா என்று ஒரு வாய் கொடுக்க,
உஹூம் எல்லாரும் பார்க்கறாங்க என்று தடுமாறினாள்.
பேசாம வாயத் திற என்று மிரட்டினான்.
அவள் குருவி போன்ற வாயில் கேசரியை ஊட்டினான். அவளுக்கு இனித்தது என்று சொல்லவும் வேண்டுமா.
எனக்கு?” என்றான்.
அதானே பார்த்தேன்என்று சிரித்துக்கொண்டே நாணியபடி அவனுக்கு ஊட்டினாள் சுற்றும் முற்றும் பார்த்தபடி.
அன்று மாலைக்குள் சொந்தங்கள் அனைவரும் ஊருக்குக் கிளம்பிவிட வீடு அமைதியானது.

அடுத்த நாள் அவரிருவரும் தேன் நிலவுக்கு ஸ்விஸ் செல்வதாக இருந்தது. அவள் போன் செய்து இரு பக்க பெற்றோரிடமும் விடை பெற்றுக்கொண்டாள்.
ரகுபதியிடம் மாமா கவலைப்படாம இருங்க நான் ஊர்லிருந்து வந்ததும் அவரை சரி பண்ணீடறேன்.... சில மாதங்கள்ள உங்களையும் இங்கேயே அவரைவிட்டே கூப்பிட வெச்சிடுவேன் என்று வாக்கு கொடுத்தாள்.
என்னமோம்மா, அவன் இந்த வரைக்கும் சபையில் எங்கள மரியாதையா முன்னிறுத்தி செஞ்சதே எங்களுக்கு நிம்மதி..... நீ ரொம்ப பேசி உன் வாழ்க்கையை கெடுத்துக்காதேமா என்று கூறினார்.
சரீங்க மாமா நான் பாத்துக்கறேன் என்று பாக்கிங் முடித்தாள்.

சுவிஸ் குளிர்ந்து விரைத்தது
. எங்கு பார்த்தாலும் பனி மூட்டங்கள் வெள்ளை வெள்ளையாய் பஞ்சு பொதிகளாய் காணப்பட்டன. பனி பெய்து அனைத்தின் மீதும் போர்வை போல மூடி  இருந்தது. அழகாக இருந்தாலும் நிறைய வெளியே அலைய முடியாதபடி குளிர் விரட்டி அடித்தது. அது தீபனுக்கு வசதியாகப் போனது.

குளிருது தீபு என்று அவனிடமே மீண்டும் மீண்டும் ஒண்டிக்கொண்டாள் வந்தனா. அவனுக்கோ குஷி. அவளை இறுக்கக் கட்டி அணைத்தபடி திரிந்தான். வெகு விரைவில் இருட்டி விடுவதால் சீக்கிரமே அறைக்குத் திரும்பி விட வேண்டிய அவசியம் வேறு. அங்கேயே சூடான உணவை வரவழைத்து உண்டுவிட்டு காதல் கதைகள் பேசிக்கொண்டிருந்தனர். கொஞ்சலும் கூடலும் அவ்வபோது கொஞ்சம் ஊடலும் என்று நாட்கள் பறந்தன.
ஊருக்கு வந்து அவன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான்.
உனக்கு விருப்பம்னா நீ வேலைக்குப் போகலாம் வனி என்றிருந்தான்.

இல்லைங்க நான் பேசீட்டேன் என் பாஸ் கிட்ட
..... ப்ரீலான்ஸ் போல எப்போது தேவைபடுதோ அப்போது மட்டும் சில மணி நேரம் வந்து செய்து கொடுக்கிறேன்னு சொல்லி இருக்கேன்...... இங்க வீடு வீடாவா இருக்கு..... பெண்கள் புழங்காத வீடுன்னு அதுக்குதான் சொல்லுவாங்கபோல..... இந்த வீட்டையும் உங்களையும் சரி பண்ணனும்.... அப்பறம்தான் மீதி எல்லாம் என்றாள்.
என்னை என்னடி சரி பண்ணணும்?” என்றான் முறைத்தபடி.
நீங்கதானே, ரொம்ப சமத்தாச்சே எனக்கு தெரியுமே.... அடம் பிடிக்கும் முரட்டுக் குழந்தையும் நீங்களும் ஒண்ணு என்றாள் அவன் மூக்கைத் திருகியபடி.

அத்யாயம் இருபத்தி ஐந்து
தீபன் வேலைக்குச் சென்றிருக்க வந்தனா வீட்டை சரி பண்ணுவதில் இறங்கினாள். அத்தனை அழகிய தோட்டத்துடன் கூடிய மிக அழகிய பங்களா. ஆனால் சரியாக கவனிப்பாரின்றி அவனைப்போலவே அதுவும் முரடாக ஆகி இருந்தது.
முதலில் சமையல் அறை மற்றும் பூஜை அறை என்று தீர்மானித்தாள். மொத்த பூஜை சாமான்களையும் வெளியே எடுத்து கழுவி சுத்தம் செய்தாள். வெள்ளி பூஜை சாமான்களை கடையில் கொடுத்து புதுசு போல மெருகேற்றச் சொன்னாள். தனது பெரிய ஜோடி குத்துவிளக்குகளை இரு புறமும் கொண்டு வந்து வைத்து ஏற்றினாள். சுத்தமும் மெருகேற்றலும், பூக்களும் கோலமும் விளக்குமாக இப்போது பூஜை அறை தெய்வீகமாக ஒளிர்ந்தது. அகர்பத்தியும் சாம்பிராணியும் மணத்தது. அந்த வீட்டின் தன்மையையே மாற்றி அமைத்தது.

பின் சமையல் மற்றும் அதன் தொட்டடுத்து இருந்த சாமான் வைக்கும் ஸ்டோர் ரூம் சாமான்களை இழுத்து வெளியே போட்டாள். வேண்டிய வேண்டாத சாமான்களை ஒழித்து சுத்தம் செய்து மீண்டும் அடுக்கினாள். மிக அழகிய க்ராக்கரி செட் ஒன்று தூசு படிந்து பொலிவு இழந்து ஒரு மூலையில் இருக்கக் கண்டாள். அதை எடுத்து சுத்தம் செய்து டைனிங் ஹால் கண்ணாடி அலமாரியில் அழகாக அடுக்கினாள். சமையல் அறை கச்சிதமாக அமைந்தது இப்போது. ராமைய்யா பிரமித்துப் போனார்.


2 comments: