Sunday 14 April 2019

ULLAM RENDUM ONDRU - 1


உள்ளம் இரண்டும் ஒன்று

ஈசி சேரில் அமர்ந்தபடி டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தார் வெற்றிவேலன்.
அவரருகே வந்து அமர்ந்து வெற்றிலை மடித்து கொடுத்தாள் அவர் மனைவி. அறுபது தாண்டி இருந்தபோதும் திடகாத்திரமாக இருந்தார் வெற்றி. கண்களில் இன்னமும் குறும்பு தாண்டவமாடியது. மனைவியியைப் பார்க்கும்போது இன்றும் கண்ணில் ஒரு மின்னல் தோன்றும். அவள் மடித்துக்கொடுத்த வெற்றிலையை கையில் வாங்காமல் ஆ என்றார்.
நல்லாத்தான் இருக்கு, இன்னும் என்ன வாலிபம்னு நினைப்பாக்கும்..... பேரப்பிள்ளையை கொஞ்சிகிட்டு இருக்கோம் இப்போ போய் இப்படி வம்பு பண்ணிக்கிட்டு என்றாலும் அவளது முகம் மலர்ந்து நாணத்தில் சிவந்துபோயிருந்தது. அவர் கேட்டபடி வாயில் கொடுக்க அதை அவள் விரல் கடித்து வாங்கிக்கொண்டார்.

என்ன அத்தான் இது என்று மேலும் நாணினாள்.
அடியே நீ இப்படி சிவக்கணும்னுதான்... நீ கொடுத்த வெற்றிலையினால என் நாக்கு சிவக்குதோ இல்லையோ உன் கன்னம் சிவக்குது..... அதப் பார்க்கத்தான் என்று கண் சிமிட்டினார்.
போதுமே.... வேலையப் பாருங்க என்று எழுந்துகொண்டாள்.
எங்க ஓடறே, உட்காருடீ என்று அவள் கைபிடித்துப் போக விடாமல் அமர்த்தினார்.
என்ன இது, விடுங்க வேல கிடக்கு என்றாள் கையை விடுவித்தபடி.
எல்லாம் செய்யலாம் இரு என்று கூறி அமர்த்தினார். “இருக்கறது நாம ரெண்டே பேரு.... இதுல என்னமோ ஒரு விருந்துக்கே சமைக்கறாப்போல அமர்க்களம் பண்ணிக்கிட்டு சமையல்கட்ட கட்டிக்கிட்டு அழணுமாக்கும் என்று அலுத்துக் கொண்டார்.
அவர் முக சுணக்கம் கண்டு, “சரி சரி என்னனு சொல்லுங்க என்றாள் அருகே அமர்ந்து. அவள் கையைப் பிடித்து தன் மார்பின்மீது வைத்துக்கொண்டு பொதுவாக பேசிக்கொண்டிருந்தார் வெற்றி. அவளும் அதைக்கேட்டபடி அமர்ந்திருந்தாள்.

இதுதான் தாம்பத்திய ரகசியம் போலும்
. அந்த வயதில்தான் முக்கியமாக எல்லோருக்கும் ஒரு துணைத் தேவை அல்லவா.... வயதில் வருவது காதல்.... மணந்தபின் வருவது புரிதல், விட்டுக்கொடுத்தல்.... அதன்பின் வருவது அரவணைப்பு.... இவை எல்லாவற்றையும் தாண்டி வயது ஏறி வருவது பாசம். ஆம் பாசம்தான்.... ஒருவருக்கொருவர் தாயாக தோழியாக தோன்றும் பாசம்..... அவளுக்கு அவன் தந்தையுமாய் தோழனுமாய் தோன்றும் அன்பு.... அதுவும் காதல் தான். தாயாகி தாங்கினாலும் அதில் தாய்மையைவிட காதலாகி கசிந்துருகி அன்பே மேலோங்கி நிற்கும்.

அங்கே காமம் இல்லை களங்கம் இல்லை கலக்கம் இல்லை
.... வெறுமனே ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி நடந்தாலும், அமர்ந்து பேசினாலும் அதுவும் காதல்தான். ஒருவர் மற்றவர் தோளில் சாய்ந்து அமைதி கொண்டாலும் அதுவும் அன்பின் வெளிப்பாடுதான். அந்த வயதில் அதுதான் சொர்க்கம்.
இப்படியாக மனம் ஒன்றி வாழும் துணை கிடைத்தால் அது வாழ்வின் பெரும் வரம். அந்த இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து தேவைகள் அறிந்து கை கொடுத்து வாழ்ந்தால் அது சாதனை.
வெற்றிவேலன் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின.



1 comment:

  1. வயதான தம்பதிகளின் ஒருவர் மீது ஒருவர் அன்புடனும் பாசத்துடனும் பழகுவதை எளிமையான நடையில் எழுதி இருப்பது மனதை கவர்கிறது.சுவையான படைப்புகளை ஆசிரியர் திறம்பட அளிப்பார் என்கிற நம்பிக்கை ஏற்படுயறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete